Sunday, February 24, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 19

நடிகர்கள் கட்சி
நடிகர்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம். என்று பா.ம.க தலைவர் அதாவது மரம் வெட்டி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நடிகர்களையும், நடிகைகளையும் எந்த காரணத்தை கொண்டும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வதில்லை என்பது ஒரு முடிவு.

நடிகர்கள் தொடங்கியிருக்கும் கட்சியுடனோ அல்லது இனி நடிகர்கள் தொடங்கும் கட்சியுடனோ எந்த காரணத்தை கொண்டும் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்பது மற்றொரு முடிவு.அத்துடன் நடிகர்களின் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வேறு எந்த கட்சியுடனும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது இன்னொரு முடிவு.

முதல் முடிவு சரி அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொண்டால் அடுத்த எம்.ஜி.ஆராக வந்துவிட்டால், நம்ம கதை கந்தலாகிவிடும் என்று இவர் பயப்படுவதில் நியாயம் இருக்கிறது. இரண்டாவது முடிவும், மூன்றாவது முடிவும் தான் சூப்பர். இவரை விடமாட்டேன் என்று கெட்டியாக பிடித்திருக்கும், திருமாவளவன் சமீபத்தில் சில படங்களில் நடித்து (அல்லது வெறும வந்து போனாரோ என்னவோ, அதைப் பார்த்த துர்பாக்கியசாலிகள் சொன்னால்தான் தெரியும்) தானும் ஒரு நடிகன் என்று பறையறிவித்தாரே, அது பரவாயில்லையா? அல்லது அவரையும் கழட்டி விட்டு விடுவாரா? நடிகர்களை பட்டாளம் பட்டாளமாய் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும், தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளோடும் இனி கூட்டணி இல்லையா? இதுதான் இந்த புத்தாண்டில் நான் கேட்ட மிக நல்ல அரசியல் செய்தி, அவர் சொன்னது போல் செய்தார் என்றால் (அப்படி செய்யும் பழக்கம் இல்லாதவர் அவர்), பா.ம.க வுக்கு பெரிசாக சங்கு ஊதிவிடலாம், தமிழ் நாடு உருப்பட ஒரு வழி பிறக்கும்.

கழிசடை அரசாங்கம்
ஒரு அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு குஜராத் உதாரணம் என்றால், எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு தமிழகம் உதாரணம் என்றால் அது மிகையில்லை.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள அரிசியை பெண்கள் கடத்துகிறார்களாம், அதனால், மனம் வெந்து, நொந்து, உருகி உருகி ஒரு (அபத்தக்) கவிதையை முதல்வர் எழுதியிருக்கிறார். இது என்ன அரசாங்கமா, அல்லது வடிவேலு நடிக்கும், 23-ம் புலிகேசி படமா? ஒரு குற்றம் நடந்திருக்கிறது, அதைச் செய்பவர்கள் யார் என்று தெரிகிறது, அவர்களைப் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்து அடுத்து அதே தவறை யாரும் செய்ய அஞ்சும்படி செய்யாமால், ஒரு கவிதை எழுதி விட்டால், அவர் ஒரு தலைவர், முதல்வர், என்னய்யா அரசாங்கம் இது, இது போதாதென்று, பாரதி பெயரையும் கவிதையில் சேர்த்து எழுதிவிட்டார். ஏன் பாரதி சொன்னாரே, 'சீ சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' அது நினைவில் இல்லையா? ஒரு ஓட்டுப் பள்ளிக் கூடத்தில் தீவிபத்தில் குழந்தைகள் இறந்தால் - ஒரு கவிதை, ஒரு திருமணத்தில் தீ விபத்து அதில் பலர் இறந்தால் - ஒரு கவிதை, என்ன நடவடிக்கை என்று யாராவது கேட்டால் - 'வரியா வரியா நீயும் நானும் தீ குளிக்கலாம்' என்று பொது மக்கள் எதிரில் நிருபர்களை அநாகரீகமாக பேசலாம், இப்படி ஒரு முதல்வர், இவர் தலைமையில் ஒரு அரசாங்கம். இந்தக் கழிசடை அரசாங்கம் இனியும் தேவையா? சிந்தியுங்கள்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல்
எனக்கு அமெரிக்காவின் தேர்தல் சற்று ஆச்சர்யம் கலந்த குழப்பம்தான். வீட்டுக்கு வீடு போஸ்டர் ஒட்டவில்லை, வண்ண (வன்னமா? வண்ணமா? என்பதை RTS-ல் யாராவது தீர்மானிக்கட்டும், எனக்குத் தெரிந்ததை நான் எழுதி விட்டேன், இதுக்காக பின்னூட்டம் போட்டு என் தமிழ் அறிவை(?) அசிங்கப் படுத்தாதீங்க) வண்ண சுவர் விளம்பரம் இல்லை, இரவு 12 மணி வரை முச்சந்தியில் மைக் செட் கட்டி அவன் இப்படி, இவன் இப்படி என்று ஏக வசனத்தில் லட்ச்சார்ச்சனை இல்லை. இதெல்லாம் இல்லாமல் என்ன தேர்தல் இது. அதுவும் ஒரே கட்சியிலிருந்து பலர் ஒரே பதவிக்கு போட்டியிடுவார்களாம், அவர்கள் அருகருகே அமர்ந்து அடிச்சுக்காம பேசுவாங்களாம். அடப் பாவிகளா, இது அடுக்குமா, அவ்வளவு நல்லவங்களாடா நீங்கள்ளாம்!

இந்தப் ப்ரைமரி கூத்து நடந்த பிறகு யார் அடுத்த கட்சி வேட்பாளரோடு போட்டியிடலாம் என்று முடிவெடுப்பார்களாம். இந்தியாவில் கட்சித் தலைவர்தான் முதல்வர், அதே மாதிரி கட்சித் தலைவர்தான் பிரதமர். (தற்போதைய பிரதமரைத் தவிர, மேலும், இவர் எங்கே ஆட்சி செய்கிறார், வேறு ஒருவர் செய்யர ஆட்சியில் இவர் வெறும், வாய்தானே அசைக்கிறார்). இங்கு எவர் அதிகம் பிரபலமோ, எவர் அதிகம் கட்சிக்கு நிதி கொண்டுவந்தாரோ அவர் போட்டியிடுவாராம், அட போங்கப்பா, இதேல்லாம் நல்லாவா இருக்கு, கஷ்டப்பட்டு ஒருத்தர் கட்சியை ஆரம்பிப்பாராம், வேர ஒருத்தர் அதிபராகி விடுவாராம். அந்தக் கதையெல்லாம், எங்க ஊர்ல கிடையாது. சொந்தப் பிள்ளைக்கே பதவி கொடுக்காம, புதையல பூதம் காக்கரமாதிரி நாங்க பதவியைப் பிடிச்சிட்டு இருக்கோம், இங்க யாரோ ஒருத்தர் கிட்ட பதவியை கொடுப்பாங்களாம். ஆமாம், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த பலரும் Democratic கட்சியின் ஆதரவாளர்களாமே, அப்படியா? அது ஏன் என்று யாராவது பின்னூட்டமிட முடியுமா? அதோடு Democratic கட்சிக்கு தமிழாக்கம் என்ன என்றும் பின்னூட்டமிட்டால் நல்லது.


ஆத்திகமா, நாத்திகமா

ஆத்திகம் நாத்திகம் ரெண்டையும் பற்றிய குழப்பம் பலருக்கும் இருக்கும். சமீபத்தில் சன் டீவியில் சத்யராஜின் பேட்டியில் இதை விளக்கி தனது நாத்திகப் பற்றை விளக்கினார். அவர் சொல்கிறார், எப்போது ஒருவர் கடவுள் தந்த கண்ணை நம்பாமல் கண்ணுக்கு கண்ணாடி அணிகிறாரோ அப்போதே அவர் நாத்திகவாதியாகி விட்டார். எவர் கடவுளை நம்பாமல் டாக்டரை பார்க்க போகிறாரோ அவரும் நாத்திகவாதிதான் என்கிறார். அடுத்து எவர் காலையில் பல் துலக்குகிறாரோ அவரும், எவர் குளிக்கிறாரோ அவரும், எவர் உடை உடுத்துகிறாரோ அவரும், ஏன் உலகில் யாருமே ஆத்திகவாதிகள் இல்லை, எல்லோருமே நாத்திகவாதிகள்தான் என்று சொல்வார் என்று நினைக்கிறேன். இதற்கு அவர் பெரியார்தான் தனக்கு ஆசான் என்று கூறினார். கடவுள் சிலைகளைக் கும்பிட்டால், நாம் பழமைவாதிகள், மறைந்த மனிதர்களுக்கு வைக்கப் பட்டுள்ள சிலைகளை வணங்கினால், பகுத்தறிவு. கனவில் கடவுள் தோன்றியதாக புராணங்கள் சொன்னால், அது கட்டுக்கதை, கனவில் அண்ணா, பெரியார், இராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத் போன்றோர் வந்ததாகச் சொல்லி மக்களை முட்டாளாக்கினால், அது பகுத்தறிவு. சத்யராஜிடம் எனக்குப் பிடித்தது, அவருடைய கிண்டல், கேலி, ஆனால், இந்து மதத்தை மற்றும் தாக்கிக் கொண்டிருந்த பெரியாரின் சீடர் என்று சொல்லிக் கொள்ளும் அவர், தைரியமாக இப்படி எல்லா மதத்தினரையும் தாக்கி அனைவரும் நாத்திகர்தான் என்று சொன்னது ரொம்ப அதிகமாக இருந்தாலும், அவர் இப்படியே பேசி வருவது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

வெத்து அன்புமணியின் மற்றுமொரு வேண்டுகோள்
ஷாருக் கான், ஆமீர் கானைப் பார்த்து அவரிடமிருந்து படைப்பாளிகளின் முக்கியத்துவம், மற்றும் அருமைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

சினிமாவில் நடிகர்கள் புகை பிடித்தால் அது பார்கின்ற சிறுவர்களை பாதித்து அவர்கள் புகை பிடிப்பது அதிகரிக்கிறது, நடிகர்கள் குடிப்பது போன்ற காட்சியினால், சிறுவர்களை அது பாதித்து அவர்களும் குடிக்க ஆரம்பிக்கின்றனர். எனவே, ஷாருக் கானும், அமிதாப் பச்சனும், படங்களில் புகை பிடிக்கிற, மது அருந்துகிற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று மீண்டும் கூறியிருக்கிறார். அனைத்து அதிகாரங்களும் உள்ள அரசாங்கத்தால், சிகரெட், பீடி, புகையிலை எல்லாவற்றையும் தடை செய்ய முடிந்தாலும், செய்ய மாட்டார்கள் அது அவர்கள் பாக்கெட்டை நிரப்புவது தேவை, ஏன் குறைந்த பட்சம் சாராயத்தை தடை செய்யுங்களேன், அது முடியவில்லையே, தெருவுக்கு 2-3 டாஸ்மார்க் கடை வருகிறதே அது பரவாயில்லையா? ஆமாம், சினிமாவில் வரும் வன்முறையால் சிறுவர்கள் பாதிப்படையவில்லையா? காதல் காட்சி என்ற போர்வையில் வரும் கவர்ச்சியும், அநாகரீகங்களும், பரவாயில்லையா? வசனங்களால் வரும் பாதிப்பு பரவாயில்லையா? இதையெல்லாம் தடை செய்து விடலாமா? பிறகு என்ன கருமத்துக்கு படம் எடுப்பது என்று எல்லோரும் வேறு வேலை செய்யப் போயிட்டா, பல கோடி அரசாங்கத்துக்கு வரும் வரிப்பணம் போயிடுமே பரவாயில்லையா?

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

பித்தன்.
piththanp@gmail.com
பித்தனின் மற்ற கிறுக்கல்களை இங்கு படிக்கலாம்

6 comments:

  1. அய்யா பித்தரே! வண்ணம், வன்னம் பத்தி அப்பவே விளக்கியாச்சு. ஏற்கனவே தமிழ் மொழியில இருக்க வார்த்தைகளுக்கு வேற யாரும் புதுசா அங்கீகாரம் தரத் தேவையில்லை.

    கவிதை படிச்சதுக்கு நன்றி.

    ReplyDelete
  2. கவிநயா,

    வரவுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. நான் நமது சங்கத்தின் இணைய தளத்தில் எந்தப் பதிவையும் புறக்கணிப்பதில்லை. எனக்கு எழுத வராத கவிதையை யார் எழுதினாலும் எனக்கு சந்தோஷமே, So, உங்கள் பதிவை கண்டிப்பாக படித்துவிடுவேன்.

    நான் தமிழ் வார்த்தைகளின் அங்கீகாரம் பற்றி குறிப்பிடவில்லை. அதற்கு எனக்குத் தகுதியும் இல்லை. வன்னம்/வண்ணம் பற்றிய எனது கருத்தை வேறு ஒரு நாள் அளவளாவுவோம்.


    பித்தன்..

    ReplyDelete
  3. எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன் - எதுகை மோனைக்காக "வன்னம்"கிறது தமிழ் கவிதைகள்ல, பாடல்கள்ல அனுமதிக்கப்பட்ட ஒண்ணு. ஆனாலும் உரைநடையில "வண்ணம்"னு எழுதறதுதான் சரி. இதுதான் என்னுடைய புரிதல்.

    (கவலை வேண்டாம் மக்களே. இதுதான் வன்னம் பற்றிய என் கடைசிப் பதிவு! மன்னிச்சுக்கோங்க)

    ReplyDelete
  4. எனக்குத் தெரிந்தவரை டெமாக்ரசின்னா ஜனநாயகம், ரிபப்ளிக்னா குடியரசு. ஆனா கட்சி விஷயத்துல இந்த பெயர்களை பயன்படுத்தினால், எந்த கட்சியைப் பத்தி பேசறோம்னு புரியாது :-) ஜனநாயகக் கட்சிக்காரரை குடியரசுக் கட்சிக்காரர் கிண்டல் செய்தார்னு எழுதினால் மண்டைய பிச்சுக்க வேண்டியதுதான். வேணும்னா கழுதக் கட்சி, யான கட்சினு எழுதலாம்.

    ஏன் இந்தியர்கள் டெமாக்ரடிக் கட்சிக்கு ஆதரவுன்னு எனக்கு தெரியல. ஆனா இங்க வந்து கொஞ்சம் சில்லறை ஜாஸ்தி ஆனதும், பிஎம்டபிள்யு எல்லாம் வாங்கன உடனே வரி ஜாஸ்தியாகும்போது ரிபப்ளிகன் ஆயிடுவாங்க - அது தெரியும் :-)

    ReplyDelete
  5. நாகு,

    பின்னூட்டத்தில நிறைய விஷயம் நொண்டுதே,

    //பிஎம்டபிள்யு எல்லாம் வாங்கின உடனே வரி ஜாஸ்தியாகும்போது//

    அப்படீன்னா, என்ன அர்த்தம்? புலம் பெயர்ந்த இந்தியர்கள் நல்ல கார் வாங்கினா வரி அதிகமாயிடுமா? வாங்கலைன்னா வரி அதிகமாகாதா? என்ன லாஜிக் இது!

    அது சரி

    //ஏன் இந்தியர்கள் டெமாக்ரடிக் கட்சிக்கு ஆதரவுன்னு எனக்கு தெரியல. ஆனா இங்க வந்து கொஞ்சம் சில்லறை ஜாஸ்தி ஆனதும், பிஎம்டபிள்யு எல்லாம் வாங்கன உடனே வரி ஜாஸ்தியாகும்போது ரிபப்ளிகன் ஆயிடுவாங்க - அது தெரியும் :-)//

    வரி குறைக்கர ரிபப்ளிகன் கட்சிதான் நல்ல கட்சின்னு நீங்க சொல்றீங்க, மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கனும். (அதாவது இந்தப் பதிவை தமிழ் படிக்கத் தெரிந்த நல்லுலகைச் சார்ந்த வேறு யாராவது படித்து பின்னூட்டமிட்டால் பார்க்கனும்னு சொல்றேன்). ஹும் எல்லா விஷயத்தையும் இப்படி புட்டு புட்டு வைக்க வேண்டியிருக்கு.

    ஆமா, சந்தடி சாக்கில யார் பி.எம்.டபிள்யூ வாங்கினதை இப்படி போட்டு தாக்கிட்டீங்க?


    பித்தன்..

    ReplyDelete
  6. சில்லறை ஜாஸ்தி => வரி ஜாஸ்தி...
    சில்லறை ஜாஸ்தியோட விளைவு பிஎம்டப்யூப்பா...

    நான் யாரையும் குறிப்பாக சொல்லலை. சும்மா ஒரு பேச்சுக்காக சொன்னேன்னு சொன்னா நம்பவா போறீங்க? :-)

    இப்ப ரெண்டு கட்சியும் போற போக்க பாத்தா யாரும் வரிய குறைக்க மாட்டாங்க போலிருக்கு. செலவு பண்ற இடம்தான் வேற. யாருக்கு வரி குறைக்கிறாங்கன்னு இன்னொரு சண்டை. அங்கதான் சில்லறை ஜாஸ்தி -> ரிபப்ளிகன் கட்சி பக்கம் சாயறது என்னோட கருத்து. என்னைக் கேட்டால் எந்த கட்சியும் நல்ல கட்சி இல்லை. சிலதுல தப்பு, சிலதுல நல்லது அவ்வளவே....

    ஆனா - எங்க எல்லாம் படிச்சவங்க இருக்காங்களோ அங்க எல்லாம் டெமாக்ரடிக் கட்சிக்கு ஆதரவு அதிகமாம்! படிச்ச முட்டாளுங்களா, இல்ல விஷயம் தெரிஞ்சவங்களா? :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!