Tuesday, November 07, 2006

நான் வாக்களித்த புராணம்

சில வாரங்களாக தினசரியிலும், தொலைக்காட்சியிலும் மாற்றி மாற்றி பிரசாரம் செய்துகொண்டிருந்தவர்கள் கம்மென்று ஆகி, முடிவுக்காக காத்திருக்கையில் நான் ஓட்டுப்போட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முற்பட்டேன். இந்தியாவில் இருந்தவரை ஒரு முறை கூட ஓட்டு போட்டது கிடையாது. ஆனால் அமெரிக்கன் ஆனவுடன் ஏனோ தெரியவில்லை இதுவரை 3 முறை ஓட்டுப்போட்டு விட்டேன். முதல் முறை ஜனாதிபதி தேர்தல், இரண்டாம் முறை ஆளுனர் தேர்தல், இன்று சட்டசபை உறுப்பினர்கள் (ஸெனேடர்/காங்கிரஸ்மன்) தேர்தல். நல்ல வேளை இன்று பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை. பள்ளிக்கு செல்லும் shuttle பேரூந்து பிடிக்க சாரத்தியம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காலையில் எழுந்து குளித்து, ஆடையுடுத்தி, என் மனைவி கட்டித்தந்த நாஸ்தாவையும், மதிய உணவையும் ஏந்திக்கோண்டு என் வாகனத்தில் புறப்பட்டேன்.

சென்றமுறை சென்ற பள்ளியில் தான் வாக்களிக்கவேண்டும். பள்ளியருகில் சென்று வலக்கைப்பக்கம் திரும்பும் சமிஞை விளக்கைப்போட்டு திரும்பலாம் என்று எண்ணும்போது ஒரு பெரிய கருப்பு "சவ்" வண்டி (S U V) ரிவர்ஸில் வெளியே வந்தது. ஓட்டுனர் கையை அசைத்து உள்ளே பார்க் செய்ய இடமில்லை என்று கூறிவிட்டுச்சென்றார். நானும் வேறு வழியின்றி எதிரில் உள்ள மளிகைக்கடை (Grocery Store) பார்க்கிங் லாட்டில் வண்டியை நிறுத்திவிட்டு சாலையைக்கடந்து பள்ளிக்குள் நடக்க ஆரம்பித்தேன். வழியில் இரண்டொரு கட்சிக்கார ஜால்ராக்கள் துண்டு பேப்பரை வைத்துக்கொண்டு கொடுக்கலாமா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்தார்கள். நான் பார்க்காதமாதிரி நைஸாக நழுவிவிட்டு பள்ளியினுள் சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் ஒரே கூட்டம். ஒரு இளம் பெண் நின்றுகொண்டு A-G முதல் வரிசை, H-L அடுத்த வரிசை, M-Z கடைசி வரிசை என்று சொல்லிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் இருந்த ஒருவரிடம் "அட நமக்கு மூன்று சாய்ஸ் இருக்கே" என்றேன். அவர் சிரித்துக்கொண்டே நைஸாக தன் வாக்காளர் அட்டையை (Voter Registration Card) பார்த்து தான் சரியான வரிசையில் நிற்கிறோமா என்று பார்த்துக்கொண்டார்.

கடைசிப்பெயர் (Last Name) படி வரிசையமைப்புக்கு பதில் கட்சிக்கு ஒரு வரிசை என்றாலும் ஏறக்குறைய 3 தான். அதே நம்மூரில் கட்சி படி வரிசை அமைத்தால் என்னவாகும் என்று நினைத்துப்பார்த்தேன். அதற்குள் வரிசை நகர ஆரம்பித்தது. உள்ளே ஒரு மேஜையில் 3 பேர் இருந்தார்கள். இடது பக்கம் ஒரு வயதான் பெரியவர். வலது பக்கம் ஒரு வயதான பெண்மணி. நடுவில் ஒரு இளம் பெண். பார்க்க இந்திய பெண் போல இருந்தாள். கல்லூரி மாணவி போலுமிருந்தாள். பெயரட்டை (Name Badge) அணிந்திருந்தாள். மிகவும் முயன்று என்ன பெயர் என்று படிக்க முயன்றேன். எழுத்து சிறியதாக இருந்ததால் சரியாகத்தெரியவில்லை. அருகில் சென்று படிக்க முடியவில்லை. மேலும் கூர்ந்து பார்த்தால் டேஞ்சர் என்று அதோடு நிறுத்திக்கொண்டேன். அதற்குள் அந்த முதியவர் என் வாக்காளர் அட்டையை வாங்கி, சோதித்து, பட்டியலில் இருந்த என் பெயரை பெருமிதத்துடன் கண்டுபிடித்துவிட்டார்.
"உங்க பெயரை எப்படி சொல்லலாம்?" என்றார். "மக்காக்கா இல்லை" என்று சொல்ல வாய் வந்தது. ஆனால் ஏடாகூடமாகிவிடும் என்று எண்ணி என் பெயரைச்சொன்னேன். பிறகு நடுவில் இருந்த அந்த சிட்டு கொடுத்த சீட்டை வாங்கிக்கொண்டு நகர்ந்தேன்.

இன்னொரு பெரியவர் வந்து என்னை வாக்களிக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று என் சீட்டை வாங்கிக்கொண்டு, ஒரு அட்டியை இயந்திரத்தில் சொருகி எடுத்து "நீ ஓட்டு போடலாம்" என்றார். முதல் முறை போட்டது போல் அட்டையில் ஓட்டை போடவேண்டுமோ என்று எண்ணி பயந்த எனக்கு பளிச்சென்று ஒரு screen கண்ணில் பட்டது. கையால் தொட்டு தொட்டு தேர்ந்தெடுத்து கடைசி பக்கம் வந்தேன். "நீ தேர்ந்தெடுத்தவர்கள் இவர்கள் - சரியா தப்பா என்று கேட்டது". "சரி" என்றேன். பிறகு கடைசியாக ஒரு பெரிய பொத்தானில் "வாக்களி" என்று மின்னியது. டக்கென்று அழுத்திவிட்டேன். "உன் வாக்கு பதிவாகிவிட்டது - நன்றி" என்றது இயந்திரம். சரியென்று சொல்லி நடையைக்கட்டினேன். வழியில் இன்னொரு பெரியவர் "நான் வாக்களித்தேன்" என்று பறைசாற்றூம் ஒட்டியை (Sticker) கொடுத்தார். அதை வாங்கி என் மேலுடையில் ஒட்டிக்கொண்டு அடுத்த தேர்தலுக்குள் பேசாம முன் லாடனை பிடித்து விடுவார்களோ என்று எண்ணிக்கொண்டே என் வண்டியைத்தேடிச்சென்றேன்.

1 comment:

  1. புராணம் நல்லா இருக்கு பரதேசியாரே. என் புராணமும் கிட்டத்தட்ட உங்க புராணம் மாதிரிதான். நானும் இந்தியாவிலே பொதுத்தேர்தலில் ஓட்டே போட்டதில்லை. கல்லூரி தேர்தல்களில் பிரச்சாரம், ரீகவுண்ட்னு ரொம்ப கலாட்டா பண்ணியிருக்கிறேன்.

    நான் ஓட்டுப் போட்ட பூத்தில் கும்பலே இல்லை. தமாஷ் என்னன்னா இந்த பூத் ஒரு சர்ச்'சில் இருந்தது. So much for separation of state and church. இந்த வர்ஜினியா தேர்தல் சுவாரசியமாய் போகிறது. 99% எண்ணிக்கை வந்தபிறகும் கால் பர்சண்ட் வித்தியாசம் இல்லை. ரீகவுண்ட், ஆப்சண்டி ஓட்டெல்லாம் எண்ணி கடைசியில் யாராவது 5 ஓட்டு வித்தியாசத்தில் வெல்லக் கூடும். எல்லாம் அனுமார் கருணை.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!