பண்ருட்டியில் எங்கள் வீட்டைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் எழுதியதில் இருந்து ஒரு யோசனை. நண்பர்களைப் பற்றி எழுதினால் என்ன? தேவதைகள் என்ற தலைப்பில் ஒரு ஶ்ரீரங்கத்துக்காரர் எழுதிவிட்டார். அங்கு கோவில்கள் அதிகம் என்பதால் இருக்கலாம். எனக்கு பண்ருட்டியில் பலா, முந்திரியைத் தாண்டி வேறு என்ன தோன்றப் போகிறது. "பண்ருட்டி பலாச்சுளைகள்" என்கிற தலைப்பில் பண்ருட்டி நண்பர்களைக் குறித்து தொடரப் போகிறேன்!
குலாம்!
இந்தப் பெயரைக் கேட்டாலே என் நண்பர்கள் அனைவர்கள் முகத்திலும் ஒரு புன்சிரிப்பாவது வராமல் இருக்காது. அந்த அளவுக்கு அனைவருக்கும் நண்பன், சிரிக்க வைப்பவன். எப்போதும் முகத்தில் சிரிப்புதான். வகுப்பின் கோமாளி! அவனை கோபமாகவோ, வருத்தமாகவோ பார்த்ததாக நினைவே இல்லை.
எல்லா ஆசிரியர்களையும் வம்புக்கிழுப்பான். சட்டையின் மேல் பித்தான்கள் போட்டிருக்கவேண்டும் என்று வலியுறுத்திய ஒரு ஆசிரியர் பித்தான்களை திறந்து போட்டிருக்கும் மாணவர்களை அடித்து பித்தான்களை போடச் சொல்லுவார். அவரே இவனை அருகில் அழைத்து பித்தான்களை போட்டுவிட்டிருக்கிறார். ஆங்கில வழியில் படித்துவிட்டு வந்த மாணவர்கள் தமிழ் பாடம் வராமல் ததிங்கணத்தோம் போடுவது சகஜம். ஆனால் இவன் ஒன்பதாம் வகுப்பில் ஆசிரியரிடம் ஏழாவது எட்டாவது வகுப்பிற்குமேல் தமிழ் பாடம் தேவையில்லை என்று ஒரு நாள் வாதம் செய்தான். எங்களுக்குத்தான் தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமே இனிமேல் எதற்கு என்று. ஆசிரியரும் ஏதேதோ சொல்லிப் பார்த்தார். கடைசியில் உனக்கு தமிழ் நன்றாகத் தெரியும்தானே. ஞமலி என்றால் என்ன என்று கேட்டார். இவன் தெரியாது சார், அப்படி என்றால் என்ன என்றான். நாய் என்றார். இவன் - நான் நாய் என்று சொல்லிவிட்டுப் போகிறேன், எதற்கு ஞமலி, கிமலி எல்லாம் என்றான். வகுப்பே அதிர்ந்தது. ஆசிரியருக்கு என்ன சொல்வதே என்று தெரியவில்லை.
ஒன்பதாவது படிக்கும்போது ஒரு நாள் ஆங்கில ஆசிரியரை ரொம்பவே சீண்டிவிட்டான். கோபம் வந்து வேப்ப மரத்தில் ஒரு குச்சியை ஒடித்து இவனை போட்டு விளாசி விட்டார். இவனுக்கு நீண்ட காது - புத்தர் காதன் என்று ஒரு பெயர்கூட உண்டு - அதை பிடித்து இழுத்து அடித்ததால், காதே கொஞ்சம் பிய்ந்தமாதிரி ரத்தம் வேறு. பையை எடுத்துக் கொண்டு உங்களை பாத்துக்கறேன் சார் என்று சவால்விட்டு கிளம்பி போய்விட்டான். ஆசிரியர் சினம் தணிந்து உட்கார்ந்தார். குலாம் என்ன பண்ணப் போகிறானோ என்று கொஞ்சம் பயந்துவிட்டார். பையன்கள் வேறு - சார், அவனுக்கு பனங்காட்டுத் தெருவில் நிறைய நண்பர்கள் உண்டு என்று அவர் பீதியை இன்னும் கொஞ்சம் கிளப்பிவிட்டார்கள். "வீரர்கள்" நிறைந்த தெரு, அவன் வீட்டருகில் இருக்கும் பனங்காட்டுத் தெரு. அவர் அமைதியாக பாடம் நடத்தத் தொடங்கினாலும், புத்தகத்தை பிடித்திருந்த கை நடுங்கிக் கொண்டிருந்தது. நாங்களெல்லாம் என்ன ஆகப் போகிறதோ என்று காத்திருந்தோம். மதிய உணவு இடைவேளைப் பிறகு அழகாக மாப்பிள்ளை மாதிரி முகம் கழுவி பவுடர் எல்லாம் போட்டுக்கொண்டு வந்தான். எங்கடா போனே என்று கேட்டோம். நான் வீட்டுக்குப் போய் ஒரு தூக்கம் போட்டு, மதியம் சாப்பிட்டு வந்தேன் என்று சிரித்தான். சும்மா உதார் விட்டிருக்கிறான்.
பத்தாவது படிக்கும்போது தமிழ் ஆசிரியரை படாத பாடு படுத்தினான். இவனை ஏதோ கேள்வி கேட்டு இவன் பதில் தப்பாகச் சொன்னான். இவன் அருகில் வரலாம் என்று இருக்கையில் இருந்து ஆசிரியர் எழுந்தார். கிட்ட வராதீங்க சார், வந்தா அடிப்பீங்க என்றான். இல்லடா, நான் வந்து நீசொன்னதை திருத்தி சொல்லித் தறேன் என்றார். அதற்கு குலாமின் பதில்: அங்கிருந்தே திருத்துங்க சார்! மேஜை மேல் ஏறி தாவித் தாவி அடிக்கு தப்புவதெல்லாம் சகஜமாக நடக்கும். பத்தாவது பரீட்சையில் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்தான். ஒவ்வொரு நாளும் வரும் கண்காணிப்பாளரிடம் எங்களுக்கு இந்தப் பாடம் நடத்த ஆசிரியரே இல்லை, அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்று தயங்காமல் ரீல் விடுவான். கொஞ்சம் சம்மதம் மாதிரி தெரிந்த அன்றெல்லாம் அவ்வளவுதான் - அப்படியே என் பதில்களை ஜெராக்ஸ் எடுத்தான். ஒரே சிரிப்பும், கும்மாளமும். பத்தாவது பரீட்சை மாதிரியே இருந்ததில்லை இவன் செய்த கலாட்டாவினால்.
பள்ளியில் இவ்வளவு வால்தனம் பண்ணுகிறவனை அவர்கள் கடையில் பார்த்தால் நம்பவே முடியாது. அண்ணனுக்கு பயந்தவன். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் அப்பாவி போல் பவ்யமாக உட்கார்ந்திருப்பான். மாலையில் மளிகை பாக்கி வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப் போவான். எதாவது ஒரு சினிமாவில் நுழைந்து கொஞ்சம் நேரம் படம் பார்ப்பான். "அலைகள் ஓய்வதில்லை" ஓடும்போது இது தினம் நடந்தது. எங்கள் வீட்டுப் பக்கம் வசூலிக்க வந்தால் எங்கள் வீட்டுக்கு வருவான். என்னவோ என் ஒரு அண்ணன் மேல் அதீத பாசம். அவனை அடித்துக் கொண்டோ கிள்ளிக்கொண்டேதான் இருப்பான். அண்ணனும் பொறுத்துக் கொள்வான். இவனை கோபித்து அடிக்கக்கூட மனம் வராது. செய்வதை எல்லாம் சிரித்துக் கொண்டே செய்பவன். இவன் அடிக்கும் லூட்டியைப் பார்த்து ரொம்பவே அதிர்பவர் எங்கள் அப்பாதான். ஏனென்றால் அவனை அவர்கள் கடையில் எப்படி இருப்பான் என்று பார்த்தவர்.
இவன் பயன்படுத்தும் சில பல சொற்றொடர்கள் என் நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம். இன்றும் பள்ளி நண்பர்களுடன் பேசினால், குலாமின் சொற்கள் இல்லாமல் பேச்சு முடியாது.
அப்படி இருந்த குலாம் எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி கொடுத்தான். "குலாம் போயிட்டாண்டா" என்று சிங்கப்பூரில் இருந்து அழைத்து ரஃபி அழுதுகொண்டே சொன்னதை என்றும் மறக்க முடியாது.