Saturday, February 26, 2022

கமா, சோம்பல் மற்றும் பக்கோடா

 

வாடா செல்வம், நேத்திக்கே உங்கிட்ட பேசணும்னு நெனச்சேன், முடியாம போய்டுச்சு. உட்கார், ஒரு காபி போட்டுட்டு வர்றேன் குடிச்சுட்டே பேசலாம்.

வேலையெல்லாம் எப்படி போகுது?

ம்.. கொஞ்சம் கடியாத்தான் போகுது. எதையாவது உடைச்சிடறானுக; அப்புறம் நாம விடிய விடிய உட்காந்து சரிசெய்ய வேண்டி இருக்கு. ப்ச்., அதுக்குத்தானே சம்பளம் குடுக்கறாங்கன்னு ஒன்னும் பேசறதில்லை. புகார் படிக்க ஆரம்பிக்கும் போதே முற்றுப்புள்ளி வெச்சிடறது. எதுக்கு வம்பு.

காபி நல்லாயிருக்கு.

அடுத்த முறை வரும்போது கொஞ்சம் வெங்காய பக்கோடா போடு; இல்லாட்டி நான் போட்டு எடுத்து வர்றேன். வெறும் காபி குடிக்கறத்துக்கு அது இன்னும் நல்லாயிருக்கும்.

உனக்கு இல்லாமலா? கண்டிப்பா. இன்னிக்கு கொஞ்சம் சோம்பலா இருக்கு, அடுத்த முறை போண்டா போட்டு வைக்கிறேன்.
அது கிடக்கட்டும், முற்றுப்புள்ளின்னதும் நினைவுக்கு வருது, தமிழில் நிறுத்தக்குறிகள் எனும் punctuations போன நூற்றாண்டு வரை இல்லைன்னு சொன்னாயாமே? உண்மையாவாடா?

ஆமா.
அச்சு இயந்திரங்கள் வந்து, நாம புத்தகங்கள் அச்சிடும் போது கூட நிறுத்தக் குறிகள் தமிழில் புழக்கத்தில் கிடையாது. ஐரோப்பிய மொழிகள் அறிமுகம் ஆன போது, நமக்கு punctuations புதுசா இருந்திருக்கு. அவர்களுக்கே அது அப்போது ஒரு மாதிரி புதுசுதான். நாமளும் சும்மா இருக்காம உரைநடையில் பயன்படுத்திப் பார்த்த போது, அட இதுகூட வசதியாத்தானே இருக்குன்னு கபால்ன்னு பிடிச்சிகிட்டோம்.

ஆங்கில punctuation பற்றி ஒரு interesting ஆன trivia சொல்லவா?

ம், சொல்லு கேட்போம்.

வரிசையா பட்டியல் இடும்போது நடுவில் கமா போடறோம் இல்லையா? கடைசிச் சொல்லுக்கு முன் and என்று எழுதி கடைசிப் பட்டியல் பொருளை எழுதி முடிச்சிடறோம்.
அதாவது,
Fri, Sat and Sun. என்று.

கொஞ்ச காலம் முன் வரை கூட andக்கு முன் ஒரு கமா இருந்திருக்கிறது. Fri, Sat, and Sun. என்று.
அதான் and இருக்கே வெட்டியா எதுக்கு கமா - அச்சு செலவை மிச்சம் பிடிக்கலாம் என்று தூக்கிட்டானுக.

ஓ வாவ்!

சரி சோம்பேறி. நான் கிளம்பறேன்.

டேய் இருடா. சோம்பல் போய்டுச்சு. பக்கோடா போட்டுத் தர்றேன் சாப்டுகிட்டே இன்னும் கொஞ்ம் நேரம் பேசிட்டு இருக்கலாம்.

சரி, செய். சோம்பல் இல்லா மன்னவனுக்கு அவன் ஆட்கள் அளந்த நிலமெல்லாம் சொந்தமாகும்னு வள்ளுவரே சொல்லியிருக்கார். சோம்பலை வென்ற உன்னால் கொஞ்சம் வெங்காய பக்கோடா சொந்தமாகாதா என்ன. நீ ஆரம்பி, நான் முடிக்கிறேன் - சாப்பிட்டு.

இப்போ சொன்னியே அந்தக் குறளையும் அதற்கான விளக்கத்தையும் இந்த வெங்காயத்தை வெட்டிட்டே சொல்லு, நான் மாவு கரைக்கிறேன்.

மடியிலா மன்னவன் எய்தும் அடி, அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

அதாவது,
சோம்பல் இல்லாத மன்னவன் அடையும் எல்லை என்பது, அவன் ஆட்கள் - surveyors-ன்னு வெச்சுக்கோயேன்; அளந்த எல்லா நிலமும் உள் அடங்கியது என்கிறார்.

இப்போதைக்கு நீ சுடும் பக்கோடாவின் கலோரிகளை அளக்கிறேன், அளவாக உண்கிறேன்.

பக்கோடாவும் நல்லாயிருக்கு. ஒரு டப்பால 4 போட்டுக் கொடு அப்புறமா கொஞ்சம் சாப்பிடறேன்.

நேரமாச்சு, கிளம்பறேன். அடுத்த வாரம் வர்றேன். Bye.

---

மடி = சோம்பல்
மடியிலா = சோம்பல் இல்லாத
மன்னவன் எய்தும் அடி = மன்னவன் எய்தும் எல்லை
அளந்தான் = Surveyor
தாயது = சொத்து
எல்லாம் ஒருங்கு = எல்லாம் சேர்ந்து
---

மடியிலா மன்னவன் எய்தும் அடி,  அளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு

சோம்பல் இல்லா மன்னவன் எய்தும் எல்லை, நில அளவர்கள் -surveyors அளந்த தாயம் எல்லாம் உள் அடங்கியது.


---

 

#குறளும்_பொருளும்

Sunday, February 13, 2022

நீங்க படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு நான் தலைமை ஆசிரியர், தம்பிகளா!

 
கண்மணி, அன்போட காதலன் நான் எழுதும் கடிதம்..
கண்மணியே காதல் என்பது..
கண்மணி நீ வர காத்திருந்தேன்..
கண்மணிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது..
கண்மணி ஓ காதல் கண்மணி..

என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட ஒரு ஏழெட்டு கண்மணி பாட்டாவது சொல்லிடுவோம். திரைப்பாடல்கள் மட்டுமல்ல தினப்படி வாழ்க்கையிலும் "கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்குவேன்", "கண்ணுக்கு கண்ணானவள்" என்று கண்மணி எனும் பாவையைப் பற்றிப் பேசாதவர் இல்லை, பாடாத புலவர்கள் இல்லை, காதலர்களும் இருந்ததில்லை; இருப்பதில்லை.

மனிதர்களோ, விலங்கு, பறவை மற்ற உயிரினங்களோ, எல்லாவற்றுக்கும் கண்ணும் அதன் பார்வைக்குக் காரணமான பாவையும் (கண்மணி)யும் எவ்வளவு இன்றியமையாதது என அறிந்திருப்பதால் காதலன்/காதலியை அந்தக் கண்மணி போன்றவர் என்று சொல்லி மகிழ்கிறோம்.

மேலே சொன்னமாதிரியான திரைப்பாடல் ஆசிரியர்கள், புலவர்கள், எல்லோரும் காதலன்/காதலியை அவ்வளவு சிறந்த கண்மணிக்கு ஒப்பாக வைத்து கிறங்கிப் போய் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

நம்மாளு வள்ளுவர் அவர்களைப் பார்த்து, தம்பிகளா சின்னப் பசங்க எல்லாம் ஓரமா போய் விளையாடுங்க என்கிறார் ஒரே ஒரு குறள் மூலமாக.

காதலன் தன் காதலியை நினைத்து தன் கண்மணியிடம் பேசுவது போல ஒரு குறள்.

"யய்யா கண்மணி, நீ மிக உயர்ந்த, மிக மிக மதிப்பு மிக்க உறுப்புதான். இல்லைங்கல. ஆனா பாரு, என் காதலி உன்னைவிட உயர்ந்தவள். அந்த அழகு நெற்றியாளை என் கண்ணுக்குள் வைத்து அவள் வழியாக உலகைப் பார்க்கப் போகிறேன்; நீ கொஞ்சம் இடத்தைக் காலி பண்ணு" என்கிறார்.

படிப்பதை நிறுத்திவிட்டு இக்காட்சியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நம் உடலின் உறுப்புகளில் மிக உயர்ந்ததான கண்மணியை விட உயர்ந்தவளாம் காதலி. கண்மணி இருக்கும் இடத்தில் அவளை வைத்து காண்பவை எல்லாம் அவளாகவே காண விரும்புகிறானாம். அதனால் தன் சொந்தக் கண்மணியை இடத்தைக் காலி செய், போ என்கிறானாம்.

யோவ் வள்ளுவரே, காதல் மன்னன்யா நீர். பின்றய்யா என்று சொல்ல வைக்கும் குறள்.

கருமணியின் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

கருமணியின் = கண்ணின்
பாவாய் = Pupil
நீ = நீ
போதாயாம் = போய்விடேன்
வீழும் = நான் மயங்கிப் போய் காதலில் வீழ்ந்து கிடக்கும்
திரு + நுதற்கு = அழகு + நெற்றி கொண்டவளுக்கு

இப்படிப் படிக்கலாம்:
"கண்ணின் பாவையே நீ போய்விடேன் - என்னைக் காதலில் வீழ்த்திய அழகு நெற்றியாள் இங்கு வருகிறாள்; அவளுக்கு நீ இருப்பதால் இடமில்லாமல் இருக்கிறது"

இதில் ஒரு இரட்டுற மொழிதல் (Double meaning) வேறு - நல்ல விதமாகத்தான் :)

பாவை என்ற சொல்லுக்கு பெண் என்ற பொருளும் உண்டு. இவன் கண்ணுக்குள் இருக்கும் பாவையை போகக் சொல்லிட்டு மனதுக்குள் இருக்கும் பாவையை (காதலியை) அங்கே வைக்கப் போகிறானாம்.

கவிதையில் அழகு, மாபெரும் கற்பனை, செய்யுள் வடிவம் மாறாமல் தளை தட்டாமல் எழுதிய ஒன்றரை அடி அதிசயம். 
ஐயனே, உம்மை நவில் தோறும் அதிசயிக்கிறோம். 
 

Thursday, September 23, 2021

உணவு

சனிக்கிழமைசோம்பெறிதனம் அதிகம் இருக்கவேமதிய சாப்பாடு வெளியே போய் சாப்பிடலாம்னு தீர்மானம்பண்ணிட்டு சில்லரை வீட்டு வேலைகளை செய்து முடித்தேன்

மெதுவாக தயாராகிஎந்த கடைக்கு செல்லலாம் என்ற சர்ச்சையை எப்படியோ சுமுகமாக சமாளித்துஒத்துதீர்ப்பான கடைக்குள் நுழைந்தோம்


நல்ல கூட்டம்கடையின் கதவிலேயே வரிசை நெருக்கமாக நின்றதுஎப்படியும் வெறொரு கடைக்குசென்றாலும் தாமதம் ஆக வாய்ப்பு இருந்ததால் வரிசையில் தீர்மானமாக நின்றாகிவிட்டது


ஆமை வேகத்தில் வரிசை நகர்வதக்குள் நானும் என் பிள்ளையும் பல தெரிந்த விளையாட்டுகளை  விளையாடிமுடித்து சில புதிய விளையாட்டுகளை கண்டுபிடிக்க தயாராகும் தருவாயில் எங்கள் வாய்ப்பு வந்தது.


என் பிள்ளை முதலில் அவளுக்கு தேவயான உணவு வகைகளை பட்டியலிருந்து சொல்லி முடித்தாள்அப்போதுதான் கவனித்தேன்வேலை செய்யும் பெண்ணைஒவ்வொரு அசைவும் அவள் வேலைக்கு புதிதென்பதை மெல்லதெரிவித்து


அடுத்து நான் என்பதை கூட உணராமல் அவளின் மேலான என் ஆராய்ச்சியில் இருக்கஎன் பிள்ளை என்னைஉலுக்கினாள்அம்மா உன் வாய்ப்பு என்றாள்


மெதுவாக நகர்ந்து அவள் அருகில் சென்று எனக்கு தேவையானதை தெளிவாக சொன்னேன்கேட்டு முடித்துஅவள் செயல்பட்டுக் கொண்டே அருகில் இருந்த ஊழியரிடம் என்னுடைய ஆர்டரை திரும்ப சென்னாள்


அவளுக்கு நான் ஆர்டர் செய்த பொருளை செய்யத் தெரியவில்லை என்பதை உணர்வதற்கு முன் சக ஊழியர்அந்த உணவை குப்பையில் எறிந்திருந்தார்நான் ஒரு நிமிடம் ச்தம்பித்து அசையாமல் நின்றேன்


சக ஊழியர் இப்போ என்னை பார்த்துமன்னிக்கணும் அவள் நடுவில் cheese போடுவதற்கு பதிலாக வலது பக்கம்தொடங்கிவிட்டாள் அதான்உங்கள் உணவு இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடும் என்று அடுத்த ஆர்டரில்மூழ்கினாள் ஆனால் நான் அந்த குப்பையில் போன உணவிலேயே இருந்தேன்அந்த பெண்ணின் முகமும்மாறியிருந்தது


ஒரு நொடியில் கேடே இல்லாத தின்பண்டம் குப்பையில்மனதில் நெருடலுடன் கடந்து பணம் கொடுத்துசாப்பாட்டை வாங்கி சாப்பிட்டும் ஆனதுஆனாலும் தைத்து கொண்டே இருந்தது


வண்டியில் ஏறி ப்ரீவே எடுக்க சிக்னலில் நிற்க ஒரு ஏழை குடும்பம்ஒரு சிறிய பொட்டலத்தை பங்குபோட்டுகொண்டிருந்தது


இருப்பவனுக்கு அலட்சியம்இல்லாதவனுக்கு பொக்கிஷம் 

Friday, April 02, 2021

சூடா


அப்பாடா வெள்ளிக்கிழமை (ஆனா, வர்றதும் தெரியல போறதும் தெரியலன்னு உங்களுக்கு தோணிச்சா, எனக்கும் தான்), இரவு உணவு முடிந்து, ஒரு படமும் பார்த்து முடிச்சாசு, நம்ம வடிவேலு சார் நடையில் (Vadivel Sir Style - lite) ஒரு சின்ன பசி. சிந்தனை உணவில் சுற்றி உருளைக்கிழங்கில் நின்றது.

சூடா சாதம், அதுல இரண்டு சொட்டு நெய், சூடா சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல் - நாக்கில் எச்சில் ஊறியது. யார் செஞ்சு தர்றது? சரி விடு. பேசாம, வண்டிய எடுத்துட்டு McD போய் ஒரு பிரெஞ்சு ஃப்ரைஸ் வாங்கிட்டு வரலாம்னு பார்த்தா, சமயம் தாண்டிடுச்சு. 

அதுக்குள்ள மனசு சுட சுட புஸ் புஸ் பூரி (சபோலா Saffalo எண்ணெய் விளம்பரத்தில் வர மாதிரி), மஞ்சள் கிழங்கு மாசாலாவோட சாப்டா எப்படி இருக்கும்கிற ஆலோசனைக்கு தாவி இருந்தது. "கடுப்பேத்துறார் மை லார்ட்", என்ன செய்ய? mind voice கேக்குது. 

டாக்கோ பெல் போய் சூடா பியஸ்டா Fiesta கிழங்கு வாங்கி sour cream வச்சு சாப்டா, செம்மயா இருக்குமே. "Taco Bell - Closed now" சொல்லியது கூகிள். அடுத்து Waffle House போய், சூடா Hashbrown, கொஞ்சம் வெங்காயம், காளான், மிளகாய் போட்டு முறுகலா வாங்கலாம்னா, பக்கத்துல கூட இல்லைன்னு கூகிள் ஆண்டவர் தகவல் சொன்னார்.

கடுப்பில் சமையலறையில் நுழைந்தேன் (கண்டிப்பா சமைக்க இல்லை), என்ன சரக்கு (Pantry la தாங்க) உள்ளது என்று தேடினேன், கையில் ஒரு பெரிய சிப்ஸ் பாக்கேட் சிக்கியது. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை. மிளகாய் தூள் எடுத்தேன், சிப்ஸ்ஸில் தூவினேன், சூடானா (காரமான) உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெடி. கடைசியில் ஆனேன் (couch potato) சோம்பேறியாக ..... வார இறுதியிலும். 





Saturday, March 27, 2021

மிகப் பெருமைக்குரிய இந்தியச் சமையலறை - ஒரு பார்வை (The Great Indian Kitchen)

நேற்று The Great Indian Kitchen திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பதிவிட்டு வெகு நாட்கள் ஆகி விட்டன. இதை ஒரு வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கிறேன். இந்தப் படத்தில் காட்சி அமைப்புகளே முக்கியம், இறுதிக் காட்சி எப்படி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உண்டாவது உண்மை, அதனால் நான் அதை விவரிக்கப் போவதில்லை.

கதை சாராம்சம்: ஒரு படித்த பெண், பழைய ஆச்சாரங்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கப் படுகிறாள். ஒவ்வொரு நிமிடமும் அவள் சமையலறையில் அல்லாடுவது படத்தின் முக்கியக் கரு. வித விதமான உணவு வகைகளைச் சமைப்பது மட்டுமல்ல, பாத்திரங்களை நாள் முழுவதும் கழுவுவது, அளவு கடந்த வீட்டு வேலைகள் செய்யும் பரிதாபத்திற்குரிய மருமகள் மற்றும் கொஞ்சம் கூட ஒரு இரக்கம் இல்லாமல் உணவுக் கழிவுகளை விட்டு விட்டுக் கை கழுவிச் செல்லும் குடும்பத் தலைவர்களை இந்தப் படம் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.

மென்மையான குணாதிசயம் உள்ளவராகக் காட்டியிருக்கும் மாமனார்தான் அதிகப் பட்சமான அட்டூழியங்களைச் செய்கிறார். மிக்ஸி, வாஷிங் மெசின் ஆகியவற்றைத் தன் சாமர்த்தியமான பேச்சில் ஒதுக்கி வைத்துக் கருணையே இல்லாமல் மருமகள் தலையில் வேலைகளைக் குவிக்கிறார். ஓட்டலில் நாகரீகமாக நடக்கும் கணவன், வீட்டில் அதைச் செயல்படுத்த மறுக்கும்போது, அதைக் கேட்கும் மனைவியிடம், அப்படித்தான் இருப்பேன், நீ என்ன கேட்பது என்று கொக்கரிக்கிறார். கணவரும் மாமனாரும் மருமகள் வேலைக்குப் போவதைச் சாதுர்யமாகத் தடுக்கிறார்கள்.

அதே கண்ணியவான்கள், மருமகள் மாத விடாயில் இருக்கும் போது, அவளை ஒதுக்கி வைத்து வேலைக்காரி சாப்பாட்டில் கூச்சமில்லாமல் உண்கிறார்கள். (Hypocrites - கபடதாரிகள்?). அப்போது அங்கு இருக்கும் மாமனாரின் சகோதரி, அவளின் படுக்கையைப் பிடுங்கி தரையில் படுக்கச் சொல்லி, குடும்பப் பெண்களின் சீரழிந்த வாழ்க்கைக்கு, ஆண்கள் மட்டும் காரணமல்ல என்று உணர்த்தி, படம் பார்க்கும் ஆண்களின் வயிற்றில் பால் வார்க்கிறார். 

உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருக்கும் நாயகிக்கு, பொங்கி எழும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கணவன் மற்றும் மாமனார் அய்யப்பன் மாலையின் போர்வையில், அவர்களின் அட்டகாசங்கள் அதிகமாகி, நாயகி கொதித்தெழுந்து நீதி நாடுகிறாள்.

நாயகி அளவுக்கு தீர்மானங்களை எடுக்கும் தைரியமோ, சுதந்திரமோ,  சூழ்நிலைகளோ 99.99 சதவீதம் பெண்களுக்கு உண்டாகப் போவதில்லை. ஆனால் படத்தைப் பார்க்கும் நமக்கு, நம்மை சரிபடுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அந்தக் காலத்தில் நினைவிருக்கிறது. பொறுப்பற்ற உறவினர்கள் வீட்டுக்கு வந்து பல நாட்கள் தங்கி இருந்து உண்டு விட்டுப் போவார்கள். வேலை முழுவதும் அன்னையர்க்கு. அதற்கு நன்றியோ பலனோ கிடையாது. விருந்தோம்பல் என்ற போர்வையில், நம் குடும்பப் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் கணக்கே கிடையாது. இதில் மாமனார், மாமியார், நாத்தனார் கொடுமைகள் தனி. இது எதுவுமே நடப்பது அறியாமல் இருக்கும் பொறுப்பற்ற கணவர்கள் பாதி, தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத பெரும்பான்மையான கையாலாகாத கும்பல், பிறகு இப்படித்தான் இருப்போம் என்று ஆணாதிக்கம் பிடித்த கயவர் கூட்டம். பெண்களும் மருமகள் ஸ்தானத்திலிருந்து நாத்தனாராகவோ, மாமியாராகவோ மாறும் போது, யான் பெற்ற கொடுமைகள் மற்ற மருமகள்கள் பெறட்டும் என்ற ஒரு கீழ்த்தரமான எண்ணம்.

இவர்கள் பெரும்பாலும் மாறப் போவதில்லை. அடுத்த முறை உங்கள் தட்டுக்களைக் கழுவாமல் மேசையில் இடும்போதோ, வேலை முடிந்து ஓய்வெடுக்கும் மனைவியிடமோ தாயாரிடமோ தேனீர் கேட்கும் போதோ, தயவு செய்து ஒருமுறை யோசியுங்கள் 



 

Monday, February 01, 2021

 

பித்தனின் கிறுக்கல்கள் - 52

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

2019 மார்ச் 3ம் தேதிக்கு பிறகு 697 நாட்களுக்குப் பிறகு மீண்டும்  வலைப்பூவில் சந்திக்கின்றோம். 

சில சமீபத்திய சம்பவங்கள், அதன் தாக்கங்கள், இந்திய மற்றும் அமெரிக்க அரசியல் அநாகரீகங்கள், ஆஸ்த்ரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை, சமீபத்தில் நாம் ரசித்த  நிழற்படங்கள், நிகழ்வுகள் போன்ற எம்மை பாதித்த சில விஷயங்களைப் பற்றி வழக்கம் போல இங்கு கிறுக்கலாம் என இருக்கிறோம். வழக்கம் போல் நாம் எழுதியதை படித்தோ/படிக்காமலேயோ திட்டலாம் என இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தைரியமாகத் திட்டலாம்.  இல்லை, நீ கிறுக்கியதை முழுவதும் படிப்பேன் படித்த பிறகும் எங்களுக்கு என் மீது கொலைவெறி எதுவும் இருக்காது என்று இறுமாப்போடு இருப்பவர்களுக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் .

அமெரிக்க தேர்தல் .

இந்திய வேளான் விவசாயிகள் சட்டம்

திரைப்படங்கள்

பதிவை முழுவதும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Saturday, October 05, 2019

கடன் தா Vs கொடு

இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?

வேறுபாடு இருந்தா என்ன,  இல்லாட்டா என்ன? கேட்ட கடன் கிடைச்சா போதும். சரிதானே?

ஆனா, இந்தச் சொற்களுக்குள் ஒரு சின்ன வேறுபாடு இருக்கு.  என்னன்னு பார்த்திடுவோம்.

சூட்டோட சூடா முதல்ல கொஞ்சம் இலக்கணம் படிச்சிடலாம்;  கடனுக்கு அப்பால வருவோம்.

கொடு, தா, ஈ எனும் கிட்டதட்ட ஒரே பொருள் கொடுக்கும் மூன்று சொற்களிடையே ஒரு மெல்லிய வேறுபாடு காட்டுகிறார் தொல்காப்பியர்.

மூன்றும் ஒரே செயலைக் குறிப்பதுதான் என்று முதலிலேயே(1) சொல்லிடறார்.
'ஆனா பாருங்க..' அப்படின்னு ஒரு * போட்டு அடுத்த மூன்று தனித்தனி வரிகளில் வேறுபாட்டை விளக்கறார். (2,3,4)

* ஈ என்னும் சொல்லை இழிந்த நிலையில் இருப்பவன் அவனுக்கும் உயர் நிலையில் இருப்பவனிடம் சொல்லிக் கேட்பது. (ஈ என இரத்தல் இழிந்தன்று -  புறநானூறு)
* தா என்னும் சொல்லை சரிக்கு சரியாக இருப்பவரிடம் சொல்லிக் கேட்பது.
* கொடு என்ற சொல்லை உயர்ந்த நிலையில் இருக்கும் போது அவ்வளவு உயர் நிலையில் இல்லாதவரிடம் கேட்பது. 

கொடு என்றாலே வளைதல் என்று முன்பு ஒரு முறை பார்த்தோம் (கொடுவாள், கொடுக்காப்புளி, கொடுக்கு என வளைந்ததற்கு எல்லாம் அதன் பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்தவையே). உயர்ந்த இடத்தில் இருந்து வழங்குபவரது கைகள் வளைந்து இருப்பதால் அது 'கொடு'ப்பது என்று சொல்வது உண்டு.

இப்போ, கடனுக்கு வருவோம்.

கடன் கேட்பதே கொஞ்சம் நெளிஞ்சுக்கிட்டு கேட்பதுதான். இருந்தாலும் நம்ம நண்பர்களிடம் ஒரு சிறு கை மாற்று, கேட்கிறோம் என்று வையுங்கள்.
"உன் கைபேசியைத் தா, வீட்டுக்கு ஒரு கால் பண்ணிட்டு தர்றேன், என்னுதுல பேட்டரி போய்டுச்சு" எனும் போது இருவரில் யாரும் உயர்/தாழ் நிலையில் இல்லை. எனவே, கொஞ்சம் உரிமையோடு தா என கேட்கிறோம்.

இதே, நீங்கள் ஒருவருக்கு பணம் கடன் கொடுத்திருக்கிறீர்கள் என வைப்போம். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது "ஏம்பா, அடுத்த வாரம் குடுத்திடறதா சொன்னியே, ஞாயிற்றுக் கிழமை வீட்லதான் இருப்பேன், பணம் கொண்டு வந்து கொடு" என சற்றே உயர் நிலையில் இருந்து கேட்பது.

வேறுபாடு தெரியுதில்ல?

முதல் வகையான ஈ என்பது கெஞ்சிக் கேட்பது - இரப்பது. 
நீதிபதியிடம் குற்றவாளி, "இனி திருட மாட்டேன், தயவு செஞ்சு மன்னிச்சு விட்டுடுங்க" எனக் கெஞ்சுதல் - ஈ என இரத்தல் வகை. இழிந்த நிலையில் இருப்போன் கெஞ்சுவது. அவனுக்குக் கருணையோடு கொடுப்பது - ஈவது.

எனவே,
தன் நிலையில் இருந்து இறங்கி, இரந்து கேட்பவருக்கு வழங்குவது - ஈவது.
சரி நிகராய் இருப்பவருக்கு வழங்குவது - தருவது
உயர் நிலையில் நாம் இருந்து வழங்குவது - கொடுப்பது.

பேச்சு வழக்கில் தா, கொடு என்பதற்குள் இருக்கும் வேறுபாட்டை நாம பெரிசா கண்டுக்கலைன்னாலும் இப்படி ஒன்னு இருக்குன்னு தெரிந்து வைத்துக்கொள்வதில் தப்பு இல்லைதானே.

இதுதான் அந்தத் தொல்காப்பிய வரிகள்:
ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய. 1

அவற்றுள்,
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 2
தா என் கிளவி ஒப்போன் கூற்றே. 3
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 4

இதே கட்டுரை கொஞ்சம் கிளுகிளு வடிவில் இங்கே: முத்தம் குடு  Vs  முத்தம் தா


---------------
#ஞாயிறு போற்றுதும்.   

Saturday, September 28, 2019

இரட்டைக் காப்பியர்கள்

அப்பாவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். முதல் முறையாக அவரைச் சந்திக்கிறேன். அவர் இளங்கோ என்றும் சில பல ஆண்டுகளுக்கு முன் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்ததாகவும் அப்போது நண்பர்கள் ஆனதாகவும் சொன்னார்கள். அறிமுகப் படலத்திற்குப் பின் கொஞ்சம் சரளமாக பேசிக் கொண்டிருந்தோம்.

தமிழர் பண்பாட்டின் படி கொஞ்ச நேரத்தில் அரசியல் பேசத் தொடங்கினோம்.

அவரோட தந்தையார், ​அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் தமிழ் இரண்டிலும் கவரப்பட்ட அன்றைய டிபிகல் தமிழக இளைஞர் என்றும், எப்படி இன்றைய தமிழகம் அண்ணாவால் வடிவு பெற்றது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆர்வமாகத்தான் போய்க் கொண்டிருந்தது, அல்லது அப்படித் தோன்றியது.

என் அப்பா பேச்சை மாற்ற நினைத்து, "உங்க அண்ணன் எப்படி இருக்கார்" என்றார்.

"செங்குட்டுவன் நல்லா இருக்கானுங்க, ரிட்டையர் ஆனப்புறம் கேரளால மகள் வீட்டுக்குப் பக்கத்துலயே வீடு வாங்கிட்டு போய்ட்டார். ஒரே மகள், பக்கத்திலேயே இருக்கலாம்னு அங்க போய்ட்டார்".

என் முகத்தைப் படித்தவராக அப்பா சொன்னார், "இவரும் இவர் அண்ணனும் இரட்டையர்கள், அவர் பெயர் செங்குட்டுவன்".

செங்குட்டுவன் - இளங்கோ.

அட!

இளங்கோ கிளம்பும் போது அவர் அண்ணன் செங்குட்டுவனின் மகளுடைய பெயர் என்ன என்று கேட்டேன். சொன்னார்.

"மணிமேகலை"

_________


உண்மையில் இது சில வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. மானே தேனே சேர்த்தது மட்டும் என் பங்கு.



*******