Friday, April 02, 2021

சூடா


அப்பாடா வெள்ளிக்கிழமை (ஆனா, வர்றதும் தெரியல போறதும் தெரியலன்னு உங்களுக்கு தோணிச்சா, எனக்கும் தான்), இரவு உணவு முடிந்து, ஒரு படமும் பார்த்து முடிச்சாசு, நம்ம வடிவேலு சார் நடையில் (Vadivel Sir Style - lite) ஒரு சின்ன பசி. சிந்தனை உணவில் சுற்றி உருளைக்கிழங்கில் நின்றது.

சூடா சாதம், அதுல இரண்டு சொட்டு நெய், சூடா சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல் - நாக்கில் எச்சில் ஊறியது. யார் செஞ்சு தர்றது? சரி விடு. பேசாம, வண்டிய எடுத்துட்டு McD போய் ஒரு பிரெஞ்சு ஃப்ரைஸ் வாங்கிட்டு வரலாம்னு பார்த்தா, சமயம் தாண்டிடுச்சு. 

அதுக்குள்ள மனசு சுட சுட புஸ் புஸ் பூரி (சபோலா Saffalo எண்ணெய் விளம்பரத்தில் வர மாதிரி), மஞ்சள் கிழங்கு மாசாலாவோட சாப்டா எப்படி இருக்கும்கிற ஆலோசனைக்கு தாவி இருந்தது. "கடுப்பேத்துறார் மை லார்ட்", என்ன செய்ய? mind voice கேக்குது. 

டாக்கோ பெல் போய் சூடா பியஸ்டா Fiesta கிழங்கு வாங்கி sour cream வச்சு சாப்டா, செம்மயா இருக்குமே. "Taco Bell - Closed now" சொல்லியது கூகிள். அடுத்து Waffle House போய், சூடா Hashbrown, கொஞ்சம் வெங்காயம், காளான், மிளகாய் போட்டு முறுகலா வாங்கலாம்னா, பக்கத்துல கூட இல்லைன்னு கூகிள் ஆண்டவர் தகவல் சொன்னார்.

கடுப்பில் சமையலறையில் நுழைந்தேன் (கண்டிப்பா சமைக்க இல்லை), என்ன சரக்கு (Pantry la தாங்க) உள்ளது என்று தேடினேன், கையில் ஒரு பெரிய சிப்ஸ் பாக்கேட் சிக்கியது. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை. மிளகாய் தூள் எடுத்தேன், சிப்ஸ்ஸில் தூவினேன், சூடானா (காரமான) உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெடி. கடைசியில் ஆனேன் (couch potato) சோம்பேறியாக ..... வார இறுதியிலும். 





Saturday, March 27, 2021

மிகப் பெருமைக்குரிய இந்தியச் சமையலறை - ஒரு பார்வை (The Great Indian Kitchen)

நேற்று The Great Indian Kitchen திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பதிவிட்டு வெகு நாட்கள் ஆகி விட்டன. இதை ஒரு வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கிறேன். இந்தப் படத்தில் காட்சி அமைப்புகளே முக்கியம், இறுதிக் காட்சி எப்படி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உண்டாவது உண்மை, அதனால் நான் அதை விவரிக்கப் போவதில்லை.

கதை சாராம்சம்: ஒரு படித்த பெண், பழைய ஆச்சாரங்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கப் படுகிறாள். ஒவ்வொரு நிமிடமும் அவள் சமையலறையில் அல்லாடுவது படத்தின் முக்கியக் கரு. வித விதமான உணவு வகைகளைச் சமைப்பது மட்டுமல்ல, பாத்திரங்களை நாள் முழுவதும் கழுவுவது, அளவு கடந்த வீட்டு வேலைகள் செய்யும் பரிதாபத்திற்குரிய மருமகள் மற்றும் கொஞ்சம் கூட ஒரு இரக்கம் இல்லாமல் உணவுக் கழிவுகளை விட்டு விட்டுக் கை கழுவிச் செல்லும் குடும்பத் தலைவர்களை இந்தப் படம் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.

மென்மையான குணாதிசயம் உள்ளவராகக் காட்டியிருக்கும் மாமனார்தான் அதிகப் பட்சமான அட்டூழியங்களைச் செய்கிறார். மிக்ஸி, வாஷிங் மெசின் ஆகியவற்றைத் தன் சாமர்த்தியமான பேச்சில் ஒதுக்கி வைத்துக் கருணையே இல்லாமல் மருமகள் தலையில் வேலைகளைக் குவிக்கிறார். ஓட்டலில் நாகரீகமாக நடக்கும் கணவன், வீட்டில் அதைச் செயல்படுத்த மறுக்கும்போது, அதைக் கேட்கும் மனைவியிடம், அப்படித்தான் இருப்பேன், நீ என்ன கேட்பது என்று கொக்கரிக்கிறார். கணவரும் மாமனாரும் மருமகள் வேலைக்குப் போவதைச் சாதுர்யமாகத் தடுக்கிறார்கள்.

அதே கண்ணியவான்கள், மருமகள் மாத விடாயில் இருக்கும் போது, அவளை ஒதுக்கி வைத்து வேலைக்காரி சாப்பாட்டில் கூச்சமில்லாமல் உண்கிறார்கள். (Hypocrites - கபடதாரிகள்?). அப்போது அங்கு இருக்கும் மாமனாரின் சகோதரி, அவளின் படுக்கையைப் பிடுங்கி தரையில் படுக்கச் சொல்லி, குடும்பப் பெண்களின் சீரழிந்த வாழ்க்கைக்கு, ஆண்கள் மட்டும் காரணமல்ல என்று உணர்த்தி, படம் பார்க்கும் ஆண்களின் வயிற்றில் பால் வார்க்கிறார். 

உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருக்கும் நாயகிக்கு, பொங்கி எழும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கணவன் மற்றும் மாமனார் அய்யப்பன் மாலையின் போர்வையில், அவர்களின் அட்டகாசங்கள் அதிகமாகி, நாயகி கொதித்தெழுந்து நீதி நாடுகிறாள்.

நாயகி அளவுக்கு தீர்மானங்களை எடுக்கும் தைரியமோ, சுதந்திரமோ,  சூழ்நிலைகளோ 99.99 சதவீதம் பெண்களுக்கு உண்டாகப் போவதில்லை. ஆனால் படத்தைப் பார்க்கும் நமக்கு, நம்மை சரிபடுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அந்தக் காலத்தில் நினைவிருக்கிறது. பொறுப்பற்ற உறவினர்கள் வீட்டுக்கு வந்து பல நாட்கள் தங்கி இருந்து உண்டு விட்டுப் போவார்கள். வேலை முழுவதும் அன்னையர்க்கு. அதற்கு நன்றியோ பலனோ கிடையாது. விருந்தோம்பல் என்ற போர்வையில், நம் குடும்பப் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் கணக்கே கிடையாது. இதில் மாமனார், மாமியார், நாத்தனார் கொடுமைகள் தனி. இது எதுவுமே நடப்பது அறியாமல் இருக்கும் பொறுப்பற்ற கணவர்கள் பாதி, தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத பெரும்பான்மையான கையாலாகாத கும்பல், பிறகு இப்படித்தான் இருப்போம் என்று ஆணாதிக்கம் பிடித்த கயவர் கூட்டம். பெண்களும் மருமகள் ஸ்தானத்திலிருந்து நாத்தனாராகவோ, மாமியாராகவோ மாறும் போது, யான் பெற்ற கொடுமைகள் மற்ற மருமகள்கள் பெறட்டும் என்ற ஒரு கீழ்த்தரமான எண்ணம்.

இவர்கள் பெரும்பாலும் மாறப் போவதில்லை. அடுத்த முறை உங்கள் தட்டுக்களைக் கழுவாமல் மேசையில் இடும்போதோ, வேலை முடிந்து ஓய்வெடுக்கும் மனைவியிடமோ தாயாரிடமோ தேனீர் கேட்கும் போதோ, தயவு செய்து ஒருமுறை யோசியுங்கள் 



 

Monday, February 01, 2021

 

பித்தனின் கிறுக்கல்கள் - 52

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

2019 மார்ச் 3ம் தேதிக்கு பிறகு 697 நாட்களுக்குப் பிறகு மீண்டும்  வலைப்பூவில் சந்திக்கின்றோம். 

சில சமீபத்திய சம்பவங்கள், அதன் தாக்கங்கள், இந்திய மற்றும் அமெரிக்க அரசியல் அநாகரீகங்கள், ஆஸ்த்ரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை, சமீபத்தில் நாம் ரசித்த  நிழற்படங்கள், நிகழ்வுகள் போன்ற எம்மை பாதித்த சில விஷயங்களைப் பற்றி வழக்கம் போல இங்கு கிறுக்கலாம் என இருக்கிறோம். வழக்கம் போல் நாம் எழுதியதை படித்தோ/படிக்காமலேயோ திட்டலாம் என இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தைரியமாகத் திட்டலாம்.  இல்லை, நீ கிறுக்கியதை முழுவதும் படிப்பேன் படித்த பிறகும் எங்களுக்கு என் மீது கொலைவெறி எதுவும் இருக்காது என்று இறுமாப்போடு இருப்பவர்களுக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் .

அமெரிக்க தேர்தல் .

இந்திய வேளான் விவசாயிகள் சட்டம்

திரைப்படங்கள்

பதிவை முழுவதும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Saturday, October 05, 2019

கடன் தா Vs கொடு

இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?

வேறுபாடு இருந்தா என்ன,  இல்லாட்டா என்ன? கேட்ட கடன் கிடைச்சா போதும். சரிதானே?

ஆனா, இந்தச் சொற்களுக்குள் ஒரு சின்ன வேறுபாடு இருக்கு.  என்னன்னு பார்த்திடுவோம்.

சூட்டோட சூடா முதல்ல கொஞ்சம் இலக்கணம் படிச்சிடலாம்;  கடனுக்கு அப்பால வருவோம்.

கொடு, தா, ஈ எனும் கிட்டதட்ட ஒரே பொருள் கொடுக்கும் மூன்று சொற்களிடையே ஒரு மெல்லிய வேறுபாடு காட்டுகிறார் தொல்காப்பியர்.

மூன்றும் ஒரே செயலைக் குறிப்பதுதான் என்று முதலிலேயே(1) சொல்லிடறார்.
'ஆனா பாருங்க..' அப்படின்னு ஒரு * போட்டு அடுத்த மூன்று தனித்தனி வரிகளில் வேறுபாட்டை விளக்கறார். (2,3,4)

* ஈ என்னும் சொல்லை இழிந்த நிலையில் இருப்பவன் அவனுக்கும் உயர் நிலையில் இருப்பவனிடம் சொல்லிக் கேட்பது. (ஈ என இரத்தல் இழிந்தன்று -  புறநானூறு)
* தா என்னும் சொல்லை சரிக்கு சரியாக இருப்பவரிடம் சொல்லிக் கேட்பது.
* கொடு என்ற சொல்லை உயர்ந்த நிலையில் இருக்கும் போது அவ்வளவு உயர் நிலையில் இல்லாதவரிடம் கேட்பது. 

கொடு என்றாலே வளைதல் என்று முன்பு ஒரு முறை பார்த்தோம் (கொடுவாள், கொடுக்காப்புளி, கொடுக்கு என வளைந்ததற்கு எல்லாம் அதன் பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்தவையே). உயர்ந்த இடத்தில் இருந்து வழங்குபவரது கைகள் வளைந்து இருப்பதால் அது 'கொடு'ப்பது என்று சொல்வது உண்டு.

இப்போ, கடனுக்கு வருவோம்.

கடன் கேட்பதே கொஞ்சம் நெளிஞ்சுக்கிட்டு கேட்பதுதான். இருந்தாலும் நம்ம நண்பர்களிடம் ஒரு சிறு கை மாற்று, கேட்கிறோம் என்று வையுங்கள்.
"உன் கைபேசியைத் தா, வீட்டுக்கு ஒரு கால் பண்ணிட்டு தர்றேன், என்னுதுல பேட்டரி போய்டுச்சு" எனும் போது இருவரில் யாரும் உயர்/தாழ் நிலையில் இல்லை. எனவே, கொஞ்சம் உரிமையோடு தா என கேட்கிறோம்.

இதே, நீங்கள் ஒருவருக்கு பணம் கடன் கொடுத்திருக்கிறீர்கள் என வைப்போம். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது "ஏம்பா, அடுத்த வாரம் குடுத்திடறதா சொன்னியே, ஞாயிற்றுக் கிழமை வீட்லதான் இருப்பேன், பணம் கொண்டு வந்து கொடு" என சற்றே உயர் நிலையில் இருந்து கேட்பது.

வேறுபாடு தெரியுதில்ல?

முதல் வகையான ஈ என்பது கெஞ்சிக் கேட்பது - இரப்பது. 
நீதிபதியிடம் குற்றவாளி, "இனி திருட மாட்டேன், தயவு செஞ்சு மன்னிச்சு விட்டுடுங்க" எனக் கெஞ்சுதல் - ஈ என இரத்தல் வகை. இழிந்த நிலையில் இருப்போன் கெஞ்சுவது. அவனுக்குக் கருணையோடு கொடுப்பது - ஈவது.

எனவே,
தன் நிலையில் இருந்து இறங்கி, இரந்து கேட்பவருக்கு வழங்குவது - ஈவது.
சரி நிகராய் இருப்பவருக்கு வழங்குவது - தருவது
உயர் நிலையில் நாம் இருந்து வழங்குவது - கொடுப்பது.

பேச்சு வழக்கில் தா, கொடு என்பதற்குள் இருக்கும் வேறுபாட்டை நாம பெரிசா கண்டுக்கலைன்னாலும் இப்படி ஒன்னு இருக்குன்னு தெரிந்து வைத்துக்கொள்வதில் தப்பு இல்லைதானே.

இதுதான் அந்தத் தொல்காப்பிய வரிகள்:
ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய. 1

அவற்றுள்,
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 2
தா என் கிளவி ஒப்போன் கூற்றே. 3
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 4

இதே கட்டுரை கொஞ்சம் கிளுகிளு வடிவில் இங்கே: முத்தம் குடு  Vs  முத்தம் தா


---------------
#ஞாயிறு போற்றுதும்.   

Saturday, September 28, 2019

இரட்டைக் காப்பியர்கள்

அப்பாவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். முதல் முறையாக அவரைச் சந்திக்கிறேன். அவர் இளங்கோ என்றும் சில பல ஆண்டுகளுக்கு முன் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்ததாகவும் அப்போது நண்பர்கள் ஆனதாகவும் சொன்னார்கள். அறிமுகப் படலத்திற்குப் பின் கொஞ்சம் சரளமாக பேசிக் கொண்டிருந்தோம்.

தமிழர் பண்பாட்டின் படி கொஞ்ச நேரத்தில் அரசியல் பேசத் தொடங்கினோம்.

அவரோட தந்தையார், ​அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் தமிழ் இரண்டிலும் கவரப்பட்ட அன்றைய டிபிகல் தமிழக இளைஞர் என்றும், எப்படி இன்றைய தமிழகம் அண்ணாவால் வடிவு பெற்றது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆர்வமாகத்தான் போய்க் கொண்டிருந்தது, அல்லது அப்படித் தோன்றியது.

என் அப்பா பேச்சை மாற்ற நினைத்து, "உங்க அண்ணன் எப்படி இருக்கார்" என்றார்.

"செங்குட்டுவன் நல்லா இருக்கானுங்க, ரிட்டையர் ஆனப்புறம் கேரளால மகள் வீட்டுக்குப் பக்கத்துலயே வீடு வாங்கிட்டு போய்ட்டார். ஒரே மகள், பக்கத்திலேயே இருக்கலாம்னு அங்க போய்ட்டார்".

என் முகத்தைப் படித்தவராக அப்பா சொன்னார், "இவரும் இவர் அண்ணனும் இரட்டையர்கள், அவர் பெயர் செங்குட்டுவன்".

செங்குட்டுவன் - இளங்கோ.

அட!

இளங்கோ கிளம்பும் போது அவர் அண்ணன் செங்குட்டுவனின் மகளுடைய பெயர் என்ன என்று கேட்டேன். சொன்னார்.

"மணிமேகலை"

_________


உண்மையில் இது சில வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. மானே தேனே சேர்த்தது மட்டும் என் பங்கு.



*******
 

Friday, September 13, 2019

கர கர மொறு மொறு - 2

வணக்கம் நண்பர்களே

 9  ஆம் எண் ஆனது எட்டு திசைகளையும் அதனுடனான ஆக்க சக்தியும் சேர்ந்தது என எண்ணினார் நம் முன்னோர்கள். அதனோடு சேர்த்து அந்த கால கட்டத்தில் இரண்டாம் இலக்கத்திற்கான பூஜ்ஜியம் கண்டறியாமல் இருந்தது கூட காரணமாக இருந்து இருக்கலாம் என்கிறது அறிவியல்

அதாவது 0  சேர்த்தால் தான் 10  என்ற அடுத்த இலக்கம் கூட வந்து இருக்க கூடுமல்லவா

என்னவாக இருந்தாலும் ஒன்பது கோள்களையும் ஒன்பது விதமான சக்தியாக பாவித்து அதனை கடவுளாக அனைத்து ஆலயங்களிலும் அமைத்து விட்டு அதனூடாக விதியையும் சொல்ல தவற வில்லை அவர்கள்...

விதி --- மூலவர் மற்றும் உற்சவர் போல அனைத்து கடவுளரையும் சேவித்து விட்டு பின்னர் அமர்ந்து பிரசாதம் உண்டு ஆலயத்தை விட்டு வெளியேறும் வேளையில் தான் நவ கிரகங்களையும் ஒரு முறை சுற்றி விட்டு வெளியேறுதல் என்பது

அதாது நான் எல்லாத்தையும் பெரிய சாமிட்ட சொல்லிட்டேன் ... நீங்க அதுல பக்க விளைவு எதையும் உண்டாக்காம இருந்தா போதும் என்பது போல....

இதனால் தான் நவகிரகங்களின் திசைகளும் ஒவ்வொரு பக்கமாக இருப்பதையும் மையத்தில் சூரியன் இருப்பதையும் காணலாம்...

அனால் இது கால போக்கில்...ஒரு ஒரு கிரகத்திற்கும் ஒரு சுற்று என்றும் மொத்தமாக மூணு சுற்றும் என்றும் மருகி போண்டது..இதில் சனி கிழமைகளில்  ஒன்பது கூட சுற்றுவார்கள் பலர். ...

இது மற்றோன்றையும் நிரூபிக்கிறது .. அது நமது பண்டைய ஆன்மீகமும் அறிவியலும் கொண்ட பிணைப்பை....அதனால் தான் உயரமான அரண்மனை போன்ற கோபுரங்களும் அதன் மேல் பொருத்தப்பட்ட கலசங்களின் கூர்மையான முனைகளும்...

சரி இருவர் அமர்ந்து பேசி கொண்டு இருக்கையில் ஒருவர் விடும்  கொட்டாவி ஏன் மற்றொருவருக்கு உடனே தொற்றி கொள்கிறது என்பதற்கான நெடுநாள் என்னுடைய புரிதல் பொய் ஆனது ... மூளை oxygen  பற்றாக்குறையை சரி செய்ய எடுக்கும் காற்றினால் அடுத்தவருக்கும் oxygen பற்றாக்குறை சரி செய்ய அவரது மூளை இடும் கட்டளை தான் அடுத்தவருக்கு உடனே வரும் கொட்டாவி என்பது என்னுடைய பண்டைய புரிதல்

அனால் அது அறிவியல் உண்மை இல்லை..... ஏனெனில் நீங்கள் ஒருவருடன் போன்இல் பேசும் போதும் நீங்கள் கொட்டாவி விட்டால் அடுத்தவர் கொட்டாவி விடுவார்....

ஏனெனில் மூளையில் இருக்கும் mirror  நியூரான் ...

அதன் செயல் ஆனது அடுத்தவரிடமிருந்து சில செயல்களை இமிடேட் செய்யும் நோக்கத்துடன் படைக்கப்பட்டது...சிறு குழந்தைகள் எவ்வாறு சில செயல்களை அவர்களது சுற்றத்தை பார்த்து பழகுகின்றனரோ அது போல.....

பேய்கள் கண்களுக்கு புலப்படாது என்பது உண்மையா இல்லையா??..

அடுத்த வாரத்தில் பார்க்கலாம்...5  நாட்கள் காத்திருக்கவும்...

Tuesday, June 11, 2019

அவர் அப்படித்தான்

ஒவ்வொரு முறை அவரை ஊடகமோ மற்றவர்களோ காயும் போதும் இப்படித்தான் நினைத்துக் கொள்கிறேன்.

"என் நெருங்கிய நண்பன் தவறிச் செய்த தவறுகளுக்காக எப்படி ஒரு போதும் அவனை விட்டுக் கொடுக்க மாட்டேனோ அப்படித்தான் இவரையும்"

உண்மைதான். அப்படித்தான். அவரும் அப்படித்தான். விரும்பினால் என் பேச்சைக் கேளுங்கள் இல்லாவிட்டால் நகருங்கள் என்றே இருந்தார் /கிறார் /ப்பார்.

நெய்யில் வறுத்த முந்திரி போட்ட பாயாசத்தை புதுப் பொண்டாட்டி கொடுப்பது போல சிலதும், வெறும் வற மொளகாயும் அரைச்ச செலவும் சேர்த்து செஞ்சது இது, கண்ணு என்று ஊருக்கு போயிருக்கும் போது அம்மா ஊற்றும் கோழிக் குழம்பு போல சிலதுமாக மனதுடனேயே எப்போதும் நெருக்கமாக இருக்கும் அவரை எப்படி, யாரிடம் விட்டுக் கொடுக்கப் போகிறோம்? ஒருக்காலும் முடியாது.

அவரது பொருந்தாத பேச்செல்லாம் கொலுசு போட்ட குட்டிக் காலுடன் செல்லமகள் மார்பினில் உதைப்பது போலத்தான். எப்புடி ஒதைக்குது பாரேன் எனும் உங்கள் அக்கறையை, "உதை வாங்கும்" அப்பன்கள் கண்டு கொள்வதே இல்லை - அவரைப் போலவே.

எனவே நண்பர்களே, நண்பர் போன்றோரே, மற்றவர்களே, அவரை வைய்யும் முன் இதை அறிந்து கொள்ளுங்கள்: அவர் உங்கள் ஏச்சுகளை கண்டு கொள்வதில்லை என்ற காண்டு உங்களுக்கு இருப்பது தெரியும், அதை விட பெரிய காண்டு,  நாங்களும் கூட அப்படியே என்பதனை அறிந்து அடைக.

கண்டுகொள்ளாதது எப்படி மனதை நோகடிக்கும்? அவர் மேற்கோள் காட்டிய குறள் சொல்லுவது போலத்தான் (யாதனின்...)

கூடுதலாக, அவர் உங்கள் வசையொழிய வாழ்வாங்கு வாழ்கிறார், அவரை வைவோரும் அவர் இசைபடவே நல்வாழ்வு வாழ்வீராக. ​
அவரும் அதைத்தான் விரும்புவார்.

ஏனெனில், அவர் அப்படித்தான்.

Sunday, May 05, 2019

கடிலக்கரையினிலே... புரூக் பாண்ட்

சென்ற வாரம் கடைக்கு போயிருந்தபோது ஒரு புதிய தேநீர் பொட்டல வகையைப் பார்த்தேன். நமக்கு புதியது. அதில் தேநீர் போட்டு அருந்தினால் அப்படியே நம்ம ஊர் டீக்கடை அனுபவம் வருகிறது. அதைவிட விசேஷம் அதன் வாசம்.  டப்பாவை திறந்து முகர்ந்தால்...... ஜிவ்வ்வ்வ்வ்வ்வென்று அடுத்த கணம் பண்ருட்டியில் என் அப்பாவின் டிப்போ!

என் அப்பா புரூக்பாண்ட் கம்பெனியின் பண்ருட்டி சேல்ஸ்மேன். ஊரில் அவர் பெயர் சொன்னால்கூட நிறைய பேருக்கு தெரியாது. புரூக்பாண்ட்காரர்தான்! மெட்ராஸ் ரோட்டில் ரயில்வே கேட்டுக்கு அருகில் இருந்தது அப்பாவின் டிப்போ. டிப்போவில் எங்கு பார்த்தாலும் பெட்டி பெட்டியாக டீயும் காபியும் இருக்கும். ஆனால் எண்ணிக்கை அதிகமானதாலோ என்னவோ டீ வாசம்தான் ஓங்கி இருக்கும். உள்ளே நுழைந்தாலே டீ வாசம்தான் மூக்கைத் துளைக்கும்....

அப்பாவின் இருக்கைக்கு மேலே ஒரு மின் விசிறி. கொஞ்சம் கவனித்தால்தான் தெரியும். அது ஒரு மேசை மின் விசிறி! உஷா ப்ராண்ட். சாதாரண மின்விசிறி கூட போட இடமில்லாததால், அப்பா மேசை மின்விசிறியையே ஒரு பலகை அடித்து மாட்டியிருந்தார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோது அந்த மின்விசிறியையும் கழட்டிக் கொண்டுவந்து விட்டார் - அவனுங்க எங்க குடுத்தாங்க. நான் என் ஃபேனைத்தான் போட்டேன்.  அதனுடைய கனத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அப்பா - இதுக்கு நேர் கீழ எப்படி இவ்வளவு நாள் தைரியமா உக்காந்த? டேய் அது ஷாப்ஜான் மாட்டினதுடா. அவ்ள சீக்கிரம் விழுந்துடுமா? ஒரு தடவை இப்படித்தான் டீ டிஸ்டிரிபியூட் செய்யும்போது ஆத்துல தண்ணி நிறைய வந்துடுச்சி. ஷாப்ஜான் என்னை தோளில் தூக்கிட்டு போனான், தெரியுமா? அந்தக் காலத்து லாயல்டி இரண்டு பக்கமும் அதிகம். ஷாப்ஜான் அப்போதே புதுவைக்கு வேலை மாறி சென்று புரூக்பாண்ட் வேன் டிரைவராக முன்னேறியிருந்தார். எப்போதாவது அப்பாவைப் பார்க்க வருவார். ராமரின் முன்னே அனுமன் மாதிரி அவ்வளவு பயபக்தியுடன் நிற்பார்.

அப்பாவின் டிப்போ என் துவக்கப்பள்ளியிலிருந்து வரும் வழியில் இருந்தது. பள்ளி விட்டு வரும்போது நண்பர்கள் சில சமயம் நச்சரிப்பார்கள் - டேய் அட்டை போடனும் பிரௌன் பேப்பர் வாங்கி குடுடா....  டீ பொட்டலங்கள் வரும் பெட்டியில் உள்ளே ஒரு பழுப்பு நிறத்தில் மிகவும் கனமான காகிதம் இருக்கும். பாட புத்தகங்களுக்கும், நோட்டுப் புத்தகங்களுக்கும் அட்டை போட மிகவும் வசதியானது. அதை அட்டையாக போட்டால்  எடை கூடிவிடும் அவ்வளவு கனம். புத்தகங்கள் புல்லட் ஃப்ரூப் ரேஞ்சுக்கு பாதுகாப்பாக இருக்கும். சில ஆசிரியர்கள் படுத்துவார்கள். கட்டுரை நோட்டுகளுக்கு கடையில் வாங்கிய பிரௌன் பேப்பர்தான் போட வேண்டுமென்பார்கள். இந்த அட்டையை என் அண்ணன் அன்னிய செலாவணி அளவுக்கு பண்டமாற்றுக்கு பயன்படுத்துவான். இதற்கு ஒரு அட்டை, அதற்கு இரண்டு அட்டை என்று அப்பாவுக்கு தெரியாமல் ஒரு கள்ளச் சந்தையையே உருவாக்கியிருந்தான். அந்த அட்டை மீது அப்பாவுக்கும் அபார நம்பிக்கை. அந்த அட்டையை மடித்துத் தைத்து ஒரு போட்டோ ஆல்பமே செய்திருந்தார், போட்டோ எல்லாம் பாதுகாப்பாக இருக்கும் என்று. ஆனால் நாளாக நாளாக அந்த அட்டையின் நடுவே இருக்கும் தார் நிறத்தில் இருக்கும் கோந்து ஊறி வெளியே வரும். அப்பாவின் பழைய போட்டோக்களில் எல்லாம் அந்த சாயம் ஏறி வீணாகியிருக்கிறது.

அப்பா மாதாந்திர விற்பனை டார்கெட் முறியடிப்பதில் மன்னன். டிவிஷனிலேயே நாந்தான் நிறைய தடவை டார்கெட் பீட் செய்திருக்கிறேன் என்று பெருமையாக சொல்லுவார். இருக்கும் அதே ஊர் சுற்றுவட்டாரங்களில் எப்படி  மேலும் மேலும் அதிகமாக விற்க முடிகிறது என்பது எங்களுக்கு பெரும் புதிர். பலமுறை இவருடைய ஸ்டாக்கை தீர்த்துவிட்டு பக்கத்து ஊர் டிப்போக்களில் இருந்து தருவிப்பார்.

புரூக்பாண்ட் சின்னம் பொறித்த டைகள் (ties) இரண்டை பொக்கிஷமாக வைத்திருந்தார்.  விற்பனை மன்னராக இருந்ததால் நிறைய பரிசுகள் அடுக்கு டிபன் கேரியர் போன்ற பரிசுகள்.  25 ஆண்டுகள் புரூக்பாண்ட் சேவைக்காக ஒரு கனமான் வெள்ளித்தட்டு, தம்ள்ர் எல்லாம் காத்ரேஜ் பீரோவின் லாக்கரில் இருக்கும். அந்த இரண்டு டைகளுடன். புரூக்பாண்டே உலகமாக வாழ்ந்தவர். அந்தக்காலத்தில் பான் என்று ஒரு  காபி வந்ததாம்.. அந்த காபி ஒரு நல்ல தரமான ப்ளாஸ்டிக் டப்பாவில் வரும். வீட்டில் நிறைய பருப்பு பாத்திரங்கள் அந்த பான் டப்பாவில்தான். இந்த ஆண்டு ஊருக்குப் போயிருந்தபோதும் பார்த்தேன். இன்னும் சில டப்பாக்கள் இருக்கின்றன.  புரூ காபியின் மணம் சொல்லவே தேவையில்லை.  இங்கே நான்கூட புரூவில் இருந்து மாறிவிட்டேன். ஆனால் நம் முன்னாள் சங்கத் தலைவர் சத்தியவாகீஸ்வரன் போன்ற புரூ பக்தர்கள் நிறைய இருக்கிறார்கள்.  சத்யா வீட்டிற்கு எப்போது போனாலும் புரூ போட்டு அழகாக ஆற்றிக் கொடுப்பார்.
அப்போது புரூக்பாண்டின் எதிரி லிப்டன்! லிப்டன் சேல்ஸ்மேன் பாப்பையாவும் அப்பாவும் நண்பர்கள்தான். நாங்கள் என்னவோ இருவரும் எதிரிகள் போல பேசிக்கொள்வோம். அந்த வீட்டு பிள்ளைகளைப் பார்த்தால் முறைத்துக் கொண்டு போவோம்.

கிரீன் லேபில், ரெட் லேபில், த்ரீ ரோஸஸ் என்று பல. கிரீன்லேபில் விலை குறைந்தது என நினைவு. டீக்கடைகளில் எல்லாம் அதுதான் இருக்கும். எனக்கு த்ரீ ரோஸஸ் பிராண்ட் வெளிவந்ததுகூட நினைவு இருக்கிறது. அதற்கப்புறம் வென்னீரில் தோய்க்கும் பொட்டலங்களும் வந்தது. அப்பா அதை ச்ற்றும் பிடிக்காமல்தான் விற்பனை செய்ய முயன்றார். யாரும் அதை நம்பவில்லை. சும்மா வென்னீர்ல இத போட்டா போதுமா சார்? அவ்ள ஸ்ட்ராங்கா வருமா?? போன்ற கேள்விகள் நிறைய…  இலவசமாகக்கூட கொடுத்துப் பார்த்தார்கள். கி.ரா. அந்தக் காலத்தில் மக்களை கருப்பட்டி காபியில் இருந்து மாற்ற எவ்வளவு ததிங்கினத்தோம் போட வேண்டியிருந்தது என்று ஒருமுறை எழுதியிருந்தார்.

அப்பா டீ எப்படி போட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தண்ணீர் கொதிக்கவைத்து அதை பாத்திரத்தில் வைத்திருக்கும் டீயில் சேர்க்க வேண்டும். டீயை நேராக கொதிக்க விடக்கூடாது. பிறகு வடிகட்டி அதில் பால் சேர்க்க வேண்டும். பின்னாளில் அண்ணன் வீட்டில் சில நாட்கள் இருந்துவிட்டு வந்தபோது என்னடா உன் அண்ணி பால், டீ எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கொதிக்கவச்சி குடுக்கறா என்று ஆதங்கத்துடன் சொன்னார். இப்போ எல்லாம் அப்படித்தாம்பா, யாருக்கு நேரம் இருக்கு என்று சமாதானப்படுத்தினேன்.  அமெரிக்கா வந்திருந்தபோது வெளியே காபி வாங்கினோம். என்னடா டிகாக்‌ஷன் மட்டும் கொடுக்கிறான் என்றார் அப்பா. நாம்தான் எல்லாம் கலக்கிக்கனும்பா என்று சர்க்கரை, பால் சேர்த்து கலந்து கொடுத்தேன். அப்பறம் இவனுங்க எதுக்கு இருக்கிறானுங்க என்றார். நல்லகேள்விதான்.

பின்னாளில் அப்பாவின் விற்பனையில் சம்பந்தமே இல்லாமல் ஸ்விஷ் ப்ளேட் சேர்க்கப்பட்டது. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தது என் அண்ணன் மட்டுமே. புது பிராண்ட் என்பதால் வண்ண வண்ண போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் எல்லாம் அவன் கள்ளச் சந்தையை மேம்படுத்தின.

பின்னாளில் அப்பா ஓய்வு பெற சில ஆண்டுகளே இருந்த போது ஒரு கீழ்நிலை பணியாளர் பிரச்சினையால் டிப்போவை மூடி அப்பாவுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து விட்டார்கள். கம்பெனியின் லாயல்டி அவ்வளவுதான். அப்பா மலை போல நம்பியிருந்த யூனியனும் அந்த சமயத்தில் கைவிட்டு விட்டது.

இப்போது அந்த டிப்போ சேல்ஸ்மேன் மூலமான நேரடி விற்பனைமுறையே மாறி ஏஜென்சிகள் வந்து விட்டன. அந்தக் காலத்தில் புரூக்பாண்ட் சொந்த டீ எஸ்டேட்டுகளில்  வளர்ப்பதில் இருந்து விற்பனைவரை எல்லாமே செய்து கொண்டிருந்தது. இப்போது அந்த நிறுவனமே இல்லை என்று நினைக்கிறேன். ஒரு சகாப்தமே முடிந்த மாதிரி இருக்கிறது. அப்பாவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இந்தியாவில் இப்போது ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம், புரூக்பாண்ட் லிப்டன் இரண்டையுமே விற்கிறது. ஒரு காலத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாதது அது. இன்னும் சில நாட்களில் ஆப்பிள் கைபேசிகளும் சாம்சங் கைபேசிகளும் ஒரே நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டால் எப்படி இருக்கும்!!??