Sunday, May 05, 2019

கடிலக்கரையினிலே... புரூக் பாண்ட்

சென்ற வாரம் கடைக்கு போயிருந்தபோது ஒரு புதிய தேநீர் பொட்டல வகையைப் பார்த்தேன். நமக்கு புதியது. அதில் தேநீர் போட்டு அருந்தினால் அப்படியே நம்ம ஊர் டீக்கடை அனுபவம் வருகிறது. அதைவிட விசேஷம் அதன் வாசம்.  டப்பாவை திறந்து முகர்ந்தால்...... ஜிவ்வ்வ்வ்வ்வ்வென்று அடுத்த கணம் பண்ருட்டியில் என் அப்பாவின் டிப்போ!

என் அப்பா புரூக்பாண்ட் கம்பெனியின் பண்ருட்டி சேல்ஸ்மேன். ஊரில் அவர் பெயர் சொன்னால்கூட நிறைய பேருக்கு தெரியாது. புரூக்பாண்ட்காரர்தான்! மெட்ராஸ் ரோட்டில் ரயில்வே கேட்டுக்கு அருகில் இருந்தது அப்பாவின் டிப்போ. டிப்போவில் எங்கு பார்த்தாலும் பெட்டி பெட்டியாக டீயும் காபியும் இருக்கும். ஆனால் எண்ணிக்கை அதிகமானதாலோ என்னவோ டீ வாசம்தான் ஓங்கி இருக்கும். உள்ளே நுழைந்தாலே டீ வாசம்தான் மூக்கைத் துளைக்கும்....

அப்பாவின் இருக்கைக்கு மேலே ஒரு மின் விசிறி. கொஞ்சம் கவனித்தால்தான் தெரியும். அது ஒரு மேசை மின் விசிறி! உஷா ப்ராண்ட். சாதாரண மின்விசிறி கூட போட இடமில்லாததால், அப்பா மேசை மின்விசிறியையே ஒரு பலகை அடித்து மாட்டியிருந்தார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோது அந்த மின்விசிறியையும் கழட்டிக் கொண்டுவந்து விட்டார் - அவனுங்க எங்க குடுத்தாங்க. நான் என் ஃபேனைத்தான் போட்டேன்.  அதனுடைய கனத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அப்பா - இதுக்கு நேர் கீழ எப்படி இவ்வளவு நாள் தைரியமா உக்காந்த? டேய் அது ஷாப்ஜான் மாட்டினதுடா. அவ்ள சீக்கிரம் விழுந்துடுமா? ஒரு தடவை இப்படித்தான் டீ டிஸ்டிரிபியூட் செய்யும்போது ஆத்துல தண்ணி நிறைய வந்துடுச்சி. ஷாப்ஜான் என்னை தோளில் தூக்கிட்டு போனான், தெரியுமா? அந்தக் காலத்து லாயல்டி இரண்டு பக்கமும் அதிகம். ஷாப்ஜான் அப்போதே புதுவைக்கு வேலை மாறி சென்று புரூக்பாண்ட் வேன் டிரைவராக முன்னேறியிருந்தார். எப்போதாவது அப்பாவைப் பார்க்க வருவார். ராமரின் முன்னே அனுமன் மாதிரி அவ்வளவு பயபக்தியுடன் நிற்பார்.

அப்பாவின் டிப்போ என் துவக்கப்பள்ளியிலிருந்து வரும் வழியில் இருந்தது. பள்ளி விட்டு வரும்போது நண்பர்கள் சில சமயம் நச்சரிப்பார்கள் - டேய் அட்டை போடனும் பிரௌன் பேப்பர் வாங்கி குடுடா....  டீ பொட்டலங்கள் வரும் பெட்டியில் உள்ளே ஒரு பழுப்பு நிறத்தில் மிகவும் கனமான காகிதம் இருக்கும். பாட புத்தகங்களுக்கும், நோட்டுப் புத்தகங்களுக்கும் அட்டை போட மிகவும் வசதியானது. அதை அட்டையாக போட்டால்  எடை கூடிவிடும் அவ்வளவு கனம். புத்தகங்கள் புல்லட் ஃப்ரூப் ரேஞ்சுக்கு பாதுகாப்பாக இருக்கும். சில ஆசிரியர்கள் படுத்துவார்கள். கட்டுரை நோட்டுகளுக்கு கடையில் வாங்கிய பிரௌன் பேப்பர்தான் போட வேண்டுமென்பார்கள். இந்த அட்டையை என் அண்ணன் அன்னிய செலாவணி அளவுக்கு பண்டமாற்றுக்கு பயன்படுத்துவான். இதற்கு ஒரு அட்டை, அதற்கு இரண்டு அட்டை என்று அப்பாவுக்கு தெரியாமல் ஒரு கள்ளச் சந்தையையே உருவாக்கியிருந்தான். அந்த அட்டை மீது அப்பாவுக்கும் அபார நம்பிக்கை. அந்த அட்டையை மடித்துத் தைத்து ஒரு போட்டோ ஆல்பமே செய்திருந்தார், போட்டோ எல்லாம் பாதுகாப்பாக இருக்கும் என்று. ஆனால் நாளாக நாளாக அந்த அட்டையின் நடுவே இருக்கும் தார் நிறத்தில் இருக்கும் கோந்து ஊறி வெளியே வரும். அப்பாவின் பழைய போட்டோக்களில் எல்லாம் அந்த சாயம் ஏறி வீணாகியிருக்கிறது.

அப்பா மாதாந்திர விற்பனை டார்கெட் முறியடிப்பதில் மன்னன். டிவிஷனிலேயே நாந்தான் நிறைய தடவை டார்கெட் பீட் செய்திருக்கிறேன் என்று பெருமையாக சொல்லுவார். இருக்கும் அதே ஊர் சுற்றுவட்டாரங்களில் எப்படி  மேலும் மேலும் அதிகமாக விற்க முடிகிறது என்பது எங்களுக்கு பெரும் புதிர். பலமுறை இவருடைய ஸ்டாக்கை தீர்த்துவிட்டு பக்கத்து ஊர் டிப்போக்களில் இருந்து தருவிப்பார்.

புரூக்பாண்ட் சின்னம் பொறித்த டைகள் (ties) இரண்டை பொக்கிஷமாக வைத்திருந்தார்.  விற்பனை மன்னராக இருந்ததால் நிறைய பரிசுகள் அடுக்கு டிபன் கேரியர் போன்ற பரிசுகள்.  25 ஆண்டுகள் புரூக்பாண்ட் சேவைக்காக ஒரு கனமான் வெள்ளித்தட்டு, தம்ள்ர் எல்லாம் காத்ரேஜ் பீரோவின் லாக்கரில் இருக்கும். அந்த இரண்டு டைகளுடன். புரூக்பாண்டே உலகமாக வாழ்ந்தவர். அந்தக்காலத்தில் பான் என்று ஒரு  காபி வந்ததாம்.. அந்த காபி ஒரு நல்ல தரமான ப்ளாஸ்டிக் டப்பாவில் வரும். வீட்டில் நிறைய பருப்பு பாத்திரங்கள் அந்த பான் டப்பாவில்தான். இந்த ஆண்டு ஊருக்குப் போயிருந்தபோதும் பார்த்தேன். இன்னும் சில டப்பாக்கள் இருக்கின்றன.  புரூ காபியின் மணம் சொல்லவே தேவையில்லை.  இங்கே நான்கூட புரூவில் இருந்து மாறிவிட்டேன். ஆனால் நம் முன்னாள் சங்கத் தலைவர் சத்தியவாகீஸ்வரன் போன்ற புரூ பக்தர்கள் நிறைய இருக்கிறார்கள்.  சத்யா வீட்டிற்கு எப்போது போனாலும் புரூ போட்டு அழகாக ஆற்றிக் கொடுப்பார்.
அப்போது புரூக்பாண்டின் எதிரி லிப்டன்! லிப்டன் சேல்ஸ்மேன் பாப்பையாவும் அப்பாவும் நண்பர்கள்தான். நாங்கள் என்னவோ இருவரும் எதிரிகள் போல பேசிக்கொள்வோம். அந்த வீட்டு பிள்ளைகளைப் பார்த்தால் முறைத்துக் கொண்டு போவோம்.

கிரீன் லேபில், ரெட் லேபில், த்ரீ ரோஸஸ் என்று பல. கிரீன்லேபில் விலை குறைந்தது என நினைவு. டீக்கடைகளில் எல்லாம் அதுதான் இருக்கும். எனக்கு த்ரீ ரோஸஸ் பிராண்ட் வெளிவந்ததுகூட நினைவு இருக்கிறது. அதற்கப்புறம் வென்னீரில் தோய்க்கும் பொட்டலங்களும் வந்தது. அப்பா அதை ச்ற்றும் பிடிக்காமல்தான் விற்பனை செய்ய முயன்றார். யாரும் அதை நம்பவில்லை. சும்மா வென்னீர்ல இத போட்டா போதுமா சார்? அவ்ள ஸ்ட்ராங்கா வருமா?? போன்ற கேள்விகள் நிறைய…  இலவசமாகக்கூட கொடுத்துப் பார்த்தார்கள். கி.ரா. அந்தக் காலத்தில் மக்களை கருப்பட்டி காபியில் இருந்து மாற்ற எவ்வளவு ததிங்கினத்தோம் போட வேண்டியிருந்தது என்று ஒருமுறை எழுதியிருந்தார்.

அப்பா டீ எப்படி போட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தண்ணீர் கொதிக்கவைத்து அதை பாத்திரத்தில் வைத்திருக்கும் டீயில் சேர்க்க வேண்டும். டீயை நேராக கொதிக்க விடக்கூடாது. பிறகு வடிகட்டி அதில் பால் சேர்க்க வேண்டும். பின்னாளில் அண்ணன் வீட்டில் சில நாட்கள் இருந்துவிட்டு வந்தபோது என்னடா உன் அண்ணி பால், டீ எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கொதிக்கவச்சி குடுக்கறா என்று ஆதங்கத்துடன் சொன்னார். இப்போ எல்லாம் அப்படித்தாம்பா, யாருக்கு நேரம் இருக்கு என்று சமாதானப்படுத்தினேன்.  அமெரிக்கா வந்திருந்தபோது வெளியே காபி வாங்கினோம். என்னடா டிகாக்‌ஷன் மட்டும் கொடுக்கிறான் என்றார் அப்பா. நாம்தான் எல்லாம் கலக்கிக்கனும்பா என்று சர்க்கரை, பால் சேர்த்து கலந்து கொடுத்தேன். அப்பறம் இவனுங்க எதுக்கு இருக்கிறானுங்க என்றார். நல்லகேள்விதான்.

பின்னாளில் அப்பாவின் விற்பனையில் சம்பந்தமே இல்லாமல் ஸ்விஷ் ப்ளேட் சேர்க்கப்பட்டது. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தது என் அண்ணன் மட்டுமே. புது பிராண்ட் என்பதால் வண்ண வண்ண போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் எல்லாம் அவன் கள்ளச் சந்தையை மேம்படுத்தின.

பின்னாளில் அப்பா ஓய்வு பெற சில ஆண்டுகளே இருந்த போது ஒரு கீழ்நிலை பணியாளர் பிரச்சினையால் டிப்போவை மூடி அப்பாவுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து விட்டார்கள். கம்பெனியின் லாயல்டி அவ்வளவுதான். அப்பா மலை போல நம்பியிருந்த யூனியனும் அந்த சமயத்தில் கைவிட்டு விட்டது.

இப்போது அந்த டிப்போ சேல்ஸ்மேன் மூலமான நேரடி விற்பனைமுறையே மாறி ஏஜென்சிகள் வந்து விட்டன. அந்தக் காலத்தில் புரூக்பாண்ட் சொந்த டீ எஸ்டேட்டுகளில்  வளர்ப்பதில் இருந்து விற்பனைவரை எல்லாமே செய்து கொண்டிருந்தது. இப்போது அந்த நிறுவனமே இல்லை என்று நினைக்கிறேன். ஒரு சகாப்தமே முடிந்த மாதிரி இருக்கிறது. அப்பாவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இந்தியாவில் இப்போது ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம், புரூக்பாண்ட் லிப்டன் இரண்டையுமே விற்கிறது. ஒரு காலத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாதது அது. இன்னும் சில நாட்களில் ஆப்பிள் கைபேசிகளும் சாம்சங் கைபேசிகளும் ஒரே நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டால் எப்படி இருக்கும்!!??

Tuesday, March 12, 2019

அருண் பக்கங்கள் - நம்பகமும் நாலு பருவங்களும்


எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் காதலி.....
எந்த பக்கம் கடவுள் இல்லை என சொல் அங்கு நீட்டுகிறேன் என்றான்
காதலன்.....

எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் மனைவி....
காகிதத்தில் இருப்பதெல்லாம் கடவுளாக்கும்?  சலித்து கொண்டான் கணவன்....

எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் அம்மா....
அந்த நாட்காட்டி கிழிய ஆரம்பிச்சுருச்சு. எப்படி ஓட்டலாம் என பசை தேட சென்றார் அப்பா....

எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் பாட்டி....
ஆங் ஆமா இங்க இருக்காரா
எல்லாரையும் காப்பாத்துப்பா முருகா என்றார் தாத்தா.....


Sunday, March 03, 2019

பித்தனின் கிறுக்கல்கள் - 51

பித்தனின் கிறுக்கல்கள் - 51


அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

ஏறக்குறைய 3 வருடங்களுக்குப் பிறகு வலைப்பூவில் மீண்டும் சந்திக்கின்றோம்.

சில சமீபத்திய சம்பவங்கள், அதன் தாக்கங்கள், இந்திய மற்றும் அமெரிக்க அரசியல் அநாகரீகங்கள், வேண்டும் மோடி - மீண்டும் மோடி ப்ரச்சாரம், சமீபத்தில் நாம் ரசித்த  நிழற்படங்கள், நிகழ்வுகள் போன்ற எம்மை பாதித்த சில விஷயங்களைப் பற்றி இங்கு கிறுக்கலாம் என இருக்கிறோம்.  வழக்கம் போல் நாம் எழுதியதை படிக்காமலேயே திட்டலாம் என இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தைரியமாகத் திட்டலாம்.  இல்லை, நீ கிறுக்கியதை முழுவதும் படிப்பேன் என்று இறுமாப்போடு இருப்பவர்களுக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.


வேண்டும் மோடி, மீண்டும் மோடி:
எதுகை மோனையுடன் சொல்லப்பட்ட வாசகம். .......

மோடியின் குறைகள்:

புல்வாமா தாக்குதல்:

அபிநந்தன் :

மற்றும் பல..... 

பதிவை முழுவதும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Thursday, February 14, 2019

காதல்

கண்டதே காரணமாய் 
காந்தம் போல் ஈர்க்கும் காதல் 
கவர்ந்து நம்மை கொண்டதும் 
கற்றவராயினும் உளறல் தரும் 
கற்பனை அற்றவராயினும் கவி தரும்
காட்டுமிராண்டிக்கும் கனிவு தரும்
சிடுமூஞ்சியாயினும் சிரிப்பு தரும்
துறவியாயினும் துரத்தும் ஆசை தரும்
பரம ஏழைக்கும் பார் ஆளும் கனவு தரும்
நாத்திகரையும் உள்ளத்து உணர்வுகளை நம்பவைக்கும்
தறுதலைகளுக்கும் பொறுப்பு தந்து 
தலைவன் தலைவி ஆக்கும்  
காதல் மண்ணில் தோன்றிய காலம் முதல்
மனித குலத்தின் கதை இதுவே

-Feb 13, 2012

Saturday, February 09, 2019

வள்ளுவர் எல்லாரையும் கறி துண்ண வேணாம் ​​என்றாரா?


எந்த உசுரையும் கொல்லாதீங்கடா, கொன்னு தின்னு உங்க உடம்பை வளர்க்காதீங்கடா, உன் உசுரே போகுதுன்னாலும் இன்னொரு உசுர கொல்லக் கூடாதுடா

என்றெல்லாம் சொன்னார்தான்.

கேள்வி என்னனா, எங்கே இதெல்லாம் சொல்லிருக்கார் என்பதுதான்.

துறவற இயலில் சொல்லி இருக்கார்.

ஆம், உலக வாழ்வைத் துறந்து துறவறம் பூண்டவர் எப்படி இருக்கணும் எனும் பகுதியில் இதெல்லாம் சொல்கிறார்.

புலால் மறுத்தல் துறவறவியலில் ஒரு அதிகாரம்.
அதே இயலில் நிலையாமை, மெய்யுணர்தல், அவா அறுத்தல் என *துறவு தொடர்பான * செய்யுள்கள் உள்ளன.

காமத்துப்பாலில் டிசைன் டிசைனாக, காதலிப்பது பற்றியும் கலவி கொள்வது பற்றியும் உண்டு. அதுக்காக துறவறத்தில் உள்ளோரும் பூந்து வெளாடுங்கடா/டீ என்று சொன்னார் என்றா எடுத்துக் கொள்ள முடியும்?

அந்தந்த இயல்களில் அதனதன் பொருள் ஒட்டி (relevance) பொருள் கொள்ள வேண்டும்.

துறவறத்தில் உள்ளவனைப் பார்த்து,
அடேய்.. உழவு, விருந்தோம்பல், குற்றம் கடிதல் என எல்லாமே உனக்கும்தான்டா எனக் கொத்து பரோட்டா போட்டால் தகுமா? அவருக்கு அருளுடைமை, தவம், கொல்லாமை, நிலையாமை என்பன பொருந்தும், பொருத்தம்.

போலவே, இல்லறத்தில் உள்ளோர்க்கு இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, பிறனில் விழையாமை என இல்லற இயல் செய்யுட்களையும்,

மண வாழ்விலும், அதற்கு முன்பும் காதல் கொள்வோருக்கு குறிப்பறிதல், புணர்ச்சி மகிழ்தல், ​ஊடல் வகை என *அந்தந்தந்த* பருவத்தினருக்கு ஏற்றவாறும் குறளைப் பொருள் கொள்ள வேண்டும்.

மன்னனுக்குச் சொன்னதை உழவனுக்கும், ஒற்றனுக்குச் சொன்னதை அமைச்சனுக்கும் எடுத்து பொருத்தமா இல்லையே என்பது எப்படி சிரிப்போ, அப்படியேதான் துறவிக்குச் சொன்னதை, 'என்னடா வள்ளுவரு கறி துண்ண வேணாங்கறாரு' என்று எடுத்துக் கொண்டாலும்.

எந்தச் சூழலில் எது வேண்டும், எது கூடாது என்று சொல்கிறார்.

ஆக ,
ஐயையோ கறி சோறு வேணாம்ங்கறாரே நான் எப்படி குறள் வழி வாழ்வேன் என்று பதறுமுன் கள்ளுண்ணாமையை ஏன் நட்பியலில் வைத்திருக்கிறார் என யோசித்துப் பாருங்கள்.

சூது, தீ நட்பு, பேதைமை (லூசுத்தனம்), உட்பகை என நட்புக்கு வேட்டு வைக்கும் பலதையும் தொட்டுச் செல்கிறார், சொல்கிறார்.

நட்பியலில்தான் கள்ளுண்ணாமை, மருந்து அதிகாரங்களும் வருது.

'மருந்து' அதிகாரத்தில பத்தில் ஆறு குறள்கள் உண்பதைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார்.

நிறைய திங்காதே, கண்ணா பின்னான்னு கண்டதையும் திங்காதே, ஏற்கனவே சாப்பிட்டது செரிச்சப்புறமா சாப்பிடு என்று நண்பர்களோடு இருக்கையில் எங்கெல்லாம் தவறுவோமோ அதையெல்லாம் குறிப்பிட்டு எச்சரிக்கிறார்.

​இத விளக்கும் போது, அப்படின்னா கள்ளாமை கூடத்தான் துறவற இயலில் வருது, இல்லறவாசிங்க திருடலாமா ​​என்று எந்த அறிவாளியாவது கேட்டால், திருடித்தான் பாரேன் செங்கோன்மை படிச்சுட்டு மன்னன் (சட்டம்) காத்திருக்கான்-ன்னு சொல்லுங்க.

அதெல்லாம் முடியாது வள்ளுவர் சொன்ன ஒவ்வொரு குறளையும் 'அப்படியே' தனித்தனியா எடுத்துதான் பொருள் கொள்வேன் என்று சொல்பவர்களிடம்,
தாராளமாக புலாலை மறுங்கள், அருளுணவாக மரக்கறி உணவையே எப்போதும் உண்ணுங்கள் அது உங்கள் விருப்பம், உரிமை என்று சொல்வோம்.

ஆனா அதுக்கும் முன்னாடி, அதே துறவற இயலில் இருக்கும் வாய்மை அதிகாரத்தில் 'தன்நெஞ்சு அறிவது பொய்யற்க' என்று சொன்னதற்கேற்ப எந்தச் சூழலிலும் பொய் சொல்லாமலும், அங்கேயே கள்ளுண்ணாமை என்று ஒரு முழு அதிகாரம் எழுதி வெச்சுஇருக்காரே அதற்கேற்ப சரக்கை கனவிலும் எண்ணாமலும் வாழத் துவங்கிட்டு புலாலையும் மறுங்கள். வள்ளுவர் இன்னும் மகிழ்வார் என்று சொல்வோம்.

ஆங்..
இன்னொன்னு.
கறியை துறவுக்கு முன்பே மறுப்பதோ ஏற்பதோ அவரவர் உரிமை, வள்ளுவர் எல்லோரையும் மறுக்கச் சொல்லலை என்பதே நம் விளக்கம்.

முடிவாக,
குறளை அணுகயில், ​எந்தச் சூழலுக்கான பொருளில் சொல்லியிருக்கார் எனப் பார்த்தால், ஒற்றைக் குறளை/அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேவையற்ற பதற்றம், குழப்பம் அடைவதைத் தவிர்க்கலாம்.


​எனவே,
குறள் வழி நடப்போம்;
​​ஆனா, பிரியாணி குண்டானை ​மொதல்ல கழுவிட்டு கடமையாற்றுவோமாக.========

* ​நண்பர்கள் 'புலால் மறுத்தல்' பற்றி இலக்கியக் குழுவில் பேசத் தொடங்கியதின் தொடர்ச்சியாக எழுதியது.

#​ஞாயிறு போற்றுதும்

Wednesday, January 30, 2019

சில சமூக விதிகள்


இப்படி நடந்துகிட்டா எல்லோருக்கும் நல்லது எனும் பொது விதிகள் சில:


1. உங்கள் தொலைபேசி அழைப்பை அடுத்த முனையில் ஏற்காத போது, இரு முறைக்கு மேல் அடுத்தடுத்து அழைக்காதீர்கள். அவர்கள் ஏதேனும் அவசர வேலையில் இருக்கலாம். கலவரப்படுத்தாதீர்.

2. உணவைத் தவறுதலாக எவரும் சிந்தி விட்டால் முறைக்காதீர்கள். தவறுகள் இயல்பு. மேசை / முள் கரண்டியைப் பயன் படுத்தத் தடுமாறினால் ஏளனப் பார்வை பார்க்காதீர்கள். நாம மட்டும் கற்றுக் கொண்டா பிறந்தோம்?

3. அடக்க முடியாமல் தும்மல், இருமல், ஏப்பம் (மேலேயோ/கீழேயோ) எவருக்கும் வந்து விட்டால் லார்டு லபக்கு தாசாட்டம் சிரிக்கக் கூடாது. அடக்க முடியாம தடுமாறிட்டாங்க, எவருக்கும் நடக்கக்கூடிய இயற்கையான நிகழ்வு -ன்னு கண்டும் காணது விட்டு விடுங்கள்.

4. பொதுக் கழிப்பிடங்களில் ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அறைக்கு பக்கத்து அறையை முடிந்த வரை தவிருங்கள். இருவருக்கும் நிம்மதி கெடாது.

5. வாங்கிய கடனை, கொடுத்தவர் கேட்கும் முன் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அது மிகச் சிறிய தொகையாகவோ, பேனா, குடை போன்ற எளிய பொருளாகவோ இருந்தாலும் சரி. உங்கள் நாணயம் அந்தக் கடனை, பொருளை விட மதிப்பானது. அதற்கு இழப்பு வராமல் பார்த்துக் கொள்ளணும்.

6. ஏதாவது கொண்டாட்டத்துக்காக நண்பர் சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் போது, "மாட்னியா" -ன்னு அந்த உணவு விடுதியிலேயே விலை உயர்ந்ததை வாங்காதீர்கள். முடிந்தால் நண்பரையே உங்களுக்கும் சேர்த்துத் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். அவரே நல்லதா வாங்கித் தருவார்.

7. நெளிய வைக்கும் கேள்விகளை கேட்கவே கேட்காதீர். "நீ இன்னும் மணம் முடிக்கலியா", "இன்னும் குழந்தை வெச்சுக்கலையா", "ஏன் இன்னும் வீடு வாங்காம இருக்க".
உண்மையாச் சொல்லுங்க, இந்தக் கேள்வியெல்லாம் தேவையா? உங்களைக் கண்டாலே அடுத்த முறை ஓடிடமாட்டார் உங்க நண்பர்?

8. உங்களுக்குப் பின் வர்றவங்க மூஞ்சில அடிக்காம கதவை அவர்களுக்காக திறந்து பிடியுங்கள். அவர்கள் முகம் தப்பிப்பது மட்டுமல்ல புன்னகையும் கூட வரும்.

9. சேர்ந்து போகும் வாடகை வண்டிக்கு நண்பர் வாடகை கொடுத்தால் மறுமுறை சேர்ந்து போகும் போது மறக்காமல் நீங்கள் வாடகை கொடுங்கள்.

10. மற்றவர்களின் அரசியல் பார்வை/ நிலைப்பாட்டையும் மதியுங்கள். தங்கள் அளவில் எல்லோரும் சரியே.

11. மிகத் தேவை என்றால் ஒழிய, இரவில் நேரம் கழித்து யாருக்கும் தொலைபேசி அழைப்பு வேண்டாம்.

12. குறுக்கே பேசாதீர். சொல்லி முடிக்கட்டும்.

13. கிண்டல் செய்வது எல்லோர் மகிழ்ச்சிக்காகவும்தான். நம் கிண்டல் பேச்சு எவரையும் காயப்படுத்தக்கூடாது.

14. உதவி செய்தவர்களுக்கு, உடனே நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

15. பாராட்டும் போது, பலர் முன்னால் தாராளமாக பாராட்டுங்கள். குறைகளைத் தனிமையில் சுட்டிக் காட்டுங்கள்.

16. உடல் எடையைப் பற்றி கேட்கவே கேட்காதீர்கள். எடைக் குறைப்பு பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்றால் அவர்களாகவே கேட்பார்கள்.

17. நீண்ட தூரப் பயணம் புறப்படும் போது குளித்து, பல்துலக்கி பின்னர் கிளம்புங்கள். பக்கத்துல உட்காருபவர் நண்பர் ஆகலைன்னாலும் எதிரி ஆகாமல் இருப்பார்.

18. தொலைபேசியில இருக்கும் ஒரு புகைப்படத்தை உங்களிடம் காண்பித்தால் அதை மட்டும் பாருங்கள். முன், பின் நகர்த்தி அடுத்த படத்தை பார்த்து நீங்களோ / நண்பரோ "பகீர்" ஆகக் கூடாதுல்ல?

19. உடன் பணிபுரிபவர், மருத்துவரை பார்க்கப் போறேன் -ன்னு சொன்னா, "ஏதாவது உதவி வேணும்னா சொல்லு" அப்படிங்கறதோட நிறுத்திக்குங்க. "என்னாச்சு, எதுக்கு, எந்த மருத்துவமனைக்கு போற, எங்க பாட்டிக்கு ஒரு நாளு இப்படித்தான் " -ன்னு எதுவும் தேவையில்லை. தேவைன்னா அவரே சொல்வார்/கேட்பார்.

20. எளிய மனிதர்களிடமும் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். அலுவலகக் காவலாளிக்கு புன்னகையோட பதில் வணக்கம் வெக்கறதுக்காக சம்பள உயர்வு கிடைக்காதுதான்; ஆனா நம்முடைய நாளை இன்னும் கொஞ்சம் நல்ல மனநிலையோட துவக்கலாம், முடிக்கலாம்.

21. நம்மிடம், நம் கண்களைப் பார்த்து ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது நாம் கைபேசியை நோண்டுவதற்குப் பெயர்: திமிர், ஆணவம், ஏளனம், லூசுத்தனம், அல்லது இது எல்லாம் சேர்த்து.

22. உங்களிடம் வந்து கேட்காதவரை அறிவுரை சொல்லாதீர்.

23. Headphoneல பாட்டு கேட்டுகிட்டு இருக்கறவங்கள உலுப்பி கேள்வி கேட்காதீர். ஒன்னு, பதில் வராது அல்லது சரியான பதில் வராது.

24. நீண்ட நாள் கழிச்சு சந்திக்கும் போது படால்ன்னு வயசு, சம்பளம் போன்றவற்றை கேட்காதீர்.

25. தொலைபேசி உரையாடல் என்பது இருவருக்கு இடையேதான். தொலைபேசி இல்லாமலே பக்கத்து ஊர்க்காரருக்கு கேட்பது போல பெருங் குரல் பேச்சு வேண்டாம்.

26. ஏதாவது சாப்பிடக் கொடுக்கும் போது வேண்டாம் எனில் முதல்லயே சொல்லிடுங்க. முகர்ந்து பார்த்துட்டோ, நாக்குல கொஞ்சம் வெச்சுப் பார்த்துட்டோ வேண்டாம் என்பது அவமானப்படுத்துவது போல.

27. தங்கள் உடலில் உள்ள தொந்தரவைப் பற்றி பேசினால் உடனே, "எனக்கும் இது மாதிரி தான்" என உங்க கதையை ஆரம்பிக்காதீர்கள்.

28. உடலில் மாற்றங்கள் (முடி உதிர்வு, உடல் எடை கூடி/குறைந்து, முகப்பரு போல மாற்றங்கள்) ஏற்பட்ட ஒருவரை பார்க்கும் போது அதைப் பற்றி பேசாதீர்கள். என்ன ஆகி இருக்குன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும், நீங்க விளக்க வேண்டிய தேவை இருக்காது. அது பற்றி உங்களிடம் பேசணும்னா அவர்களே பேசுவார்கள், அதுவரை அதைப் பற்றி பேசாதீர்.

29. மற்றவர் குழந்தையை முத்தமிடாதீர்.

30. வாட்சப், முகநூல், கீச்சு என எங்கே வாய்ப்பு கிடைத்தாலும் சண்டைக்கு போகாதீர்.

~~~~~~~~~~

* இங்கு "அவர்" என்பது ஆண், பெண் என இரு பாலருக்கும் பொருந்தும்.

* இது கைபேசியில் ஒரு ஆங்கிலச் செய்தியாக வந்தது. நண்பன் கேட்டுக் கொண்டதற்காக, நடுநடுவே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு மொழிபெயர்த்தது.

~~~~~~~~~~~

கர கர மொறு மொறு - 1Now  Lets talk about 9

3  மற்றும் 6   எண்கள் மற்ற எண்களை கட்டுப்படுத்துகின்றன என்பது பலருக்கு தெரிந்து இருந்தாலும் (அதாவது செல்கள் இரட்டிப்பாகும் கூற்றின் படி 1,2,4,8,16,32,64,128 இந்த அனைத்து எண்களின் வகுபடும் எண்ணின் மீதி எப்படி பார்த்தாலும் 3 அல்லது 6 மூலமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் .

ஆனால் இந்த இரண்டு எண்களையும் தன் வசத்தில் வைத்திருப்பது என்னவோ 9  ஆம் எண்தான்.

சின்ன வயசுல நம்மெல்லாம் 9 ஆம் வகுப்பு வாய்ப்பாட கூட இந்த மாறி
மனனம் பண்ணி இருப்போம்

1 * 9 = 09
2 * 9 = 18
3 * 9 = 27
4 * 9 = 36
5 * 9 = 45
6 * 9 = 54
7 * 9 = 63
8 * 9 = 72
9 * 9 = 81
10 *9 = 90

அதாவது வலது பக்கம் பெருக்கு தொகையானது மேலிருந்து கீழ் நோக்கி வர வர 1  லிருந்து கூடியும் அதன் இரண்டாம் இலக்க எண்ணானது கீழிருந்து மேல் நோக்கியும் அதிகரிக்கும்.

இதே போல் எந்த ஒரு என்னுடனும் 9 ஐ கூட்டி அதை ஒற்றை இலக்க எண்ணாக மாற்றும் போது அது அதே எண்ணாகவே வரும்

9 + 4  = 13 => 1 + 3  = 4

விஷயம் அதுவல்ல......

ஏன் எத்தனையோ எண்கள் இருக்கையில் நம் முன்னோர் நவ கிரகங்களை உருவாக்கி வழிபட வைத்தனர்

நவ = 9

காத்திருங்கள் அடுத்த பகுதி வரையில்..... :)

Monday, December 17, 2018

ஓணான்


நான் நிம்மதியாக
வேலியிலேயே இருந்து விட்டு போகிறேன்.
ஏன் என்னை எடுத்து
வேட்டியில் விட்டுக் கொள்ளத் துடிக்கிறீர்கள்?

Saturday, October 06, 2018

இதுல உனக்கு என்ன பெரும?

//பள்ளியில் 30 குறள், மதிப்பெண்னுக்காக படிச்சவனை திருக்குறள் தெரிந்த கணக்கில் வைப்பது 👌🏽
என்னடா சொல்ற? பள்ளியில் குறள் படித்தவனெல்லாம் மதிப்பெண்ணுக்காக படித்தான் என்றால், வேதம் படிச்சவன் எல்லாம் ராக்கெட் விடவா படித்தான்? இவனாவது தினப்படி வாழ்வில் அவ்வப்போது சரியான பொருளில் இரண்டொரு குறள்கள் பயன்படுத்துகிறான். அந்த 1000 கோடி பேரும் மதச் சடங்குகளில் ஒப்பிக்கத்தானே படித்தார்கள்? அவர்களுக்குள் பொருளுணர்ந்து அவ்வப்போது சிலபல செய்யுள்களை சொல்லிக்கொள்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இரண்டும் ஒன்றுதானே? திருக்குறள் தெரிந்தவர்கள் வெறும் மதிப்பெண்ணுக்காக படித்தார்கள்; அதனால் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாதே!

//பரமசிவன், பார்வதி, சரஸ்வதின்னு சொல்லாம, பரம்பொருள்ன்னு சொன்னதை வைத்திருங்திருக்கலாம். 
பரம்பொருள் வரியை நீக்காது விட்டு வைக்க வேண்டுமென்றால் "சிதைந்து, வழக்கொழிந்த ஆரியம்" என்பதையும் வைக்கணும். இல்லையா? அதுக்கொரு சட்டம் இதுக்கு வேறயா?

//உனக்கு எனக்கும் தமிழ் பிடிக்கும் என்பதால் மற்ற மொழி பற்றி அவதூறு பேசுவது சரியல்ல.
அவதூறு ஏதுமில்லை. உண்மையைச் சொல்வது அவதூறு என்றால், பேதை, பெருந்தன்மையற்றவர் என்பதை எல்லாம் எந்தக் கணக்கில் வைக்க?

//உலகலாவிய கற்றவர்களுள் அதிகம் ஆராயாப்படும் படைப்புகள் அதிகம்(தமிழை விடவும்) கொண்டது சமஸ்கிருதம்.  
"தமிழை விடவும்". 
எந்த அடிப்படையில்? உன் ஒப்பீட்டுத் தரவு என்ன? கற்பனைகள், ஆசைகள் எல்லாம் செல்லாது. சமற்கிருதத்தின் மீது நடக்கும் ஆராய்ச்சிகள் எல்லாம் மொகஞ்சதாரோ, கீழடி, டைனோசர் எலும்புகள் போன்றவற்றின் மீது நடக்கும் புதைபொருள் ஆராய்ச்சி போலத்தான். சிலப்பதிகாரம் முதல் இன்றைய காவல் கோட்டம் வரை குண்டு குண்டு புத்தகங்களாக எழுதிப் படிக்கிறோமே, அந்த "சமற்கிருதம் கற்றவர்களை" இப்போ அப்படி ஒன்னு எழுதச் சொல்லேன் பார்ப்போம். எழுதவும் ஆளில்லை; படிக்கவும் ஆளில்லை. என்றோ இருந்ததை தோண்டித் துருவி செய்யும் ஆராய்ச்சி புதைபொருள் ஆய்வு போலத்தான்.

//நாம் பிறந்த நாட்டில் தோன்றிய மொழி எனும் பெருமை எனக்குண்டு.
இதுல உனக்கு என்ன பெருமை? 47ல் Radcliffe கோடு போடுகையில் கொஞ்சம் இந்தப் பக்கம் வலிச்சு போட்டிருந்தார்னா இன்றைய "நாம் பிறந்த நாட்டின்" சில பகுதிகள் "டுஷ்மன் டேஷ்" ஆகி இருக்கும். அந்தப்பக்கம் வளைச்சு இழுத்து இருந்தார்ன்னா, லாகூர் "மேரா பாரத் மகான்" பகுதி ஆகி இருக்கும். அவுரங்கசீப் காலத்தில் இன்றைய சில ஈரானியப் பகுதிகள் வரை ஆக்ரா/தில்லி ஆட்சியின் கீழ்தான் இருந்தது. அரபி, பெர்சியன், உருது மொழிகளுக்கும் நீ பெருமைப் பட வேண்டி இருக்கும். அதனால, "நான் பிறந்த நாட்டில் தோன்றிய மொழி" ன்னு ஓவர் செண்டிமெண்ட் ஆகாதே. யாதும் ஊரே, எல்லா மொழிகளும் மனித சாதனைகளே என்று இரு. எல்லைக் கோடுகள் எல்லாம் நாமாக கற்பனையாக போட்டுக் கொண்டவை.
உனக்கு சமற்கிருதம் எழுதவோ படிக்கவோ பேசவோ தெரியாது. உனக்கு மத/கடவுள் நம்பிக்கை இல்லை என்றும்  சொல்கிறாய். ஆக, மதச் சடங்கு மொழியான சமற்கிருதத்துடன் உனக்கு எந்த விதத்திலும் தொடர்போ அம்மொழியால்  உனக்கு பயனோ இல்லை. தொடர்பில்லாத ஒன்றில் நீ பெருமைப் பட என்ன இருக்கிறது? நீ பெருமைப் பட வேண்டியது தமிழில் பேசி, எழுதி, சண்டை போட்டு தமிழின் நீட்சிக்கு பங்களிப்பதற்கு. "நாம் பிறந்த" என்ற பெருமை இங்கே சரி, உண்மை.
மற்றபடி, யாதும் ஊரே, யாரவரும் கேளிர்; வழக்கொழிந்த மொழிகள் உட்பட எல்லா மொழிகளும் மனிதர்கள் கூட்டாக அடைந்த உன்னதங்களே என்று பெருந்தன்மையாக இருப்பதே சரி.

மனசிலாயோ.

* இனி அடிச்சு கேட்டாக் கூட இத்தலைப்பில் பதில் பேசமாட்டேன்னு ஒருத்தருக்கு சூடம் அடிச்சு உறுதி கொடுக்காத குறையாகச் சொன்னேன். அவர் சிரிப்பது கேட்குது.Friday, September 28, 2018

மறதிகடந்த மாதம் துபாயில் வசிக்கும் என் கல்லூரித் தோழன் ராஜேஷ் ரிச்மண்ட் வந்திருந்தான். ரிச்மண்ட் நண்பர்கள் பலர் அவன் குறித்து அறிந்திருப்பீர்கள். இங்கே ஒரு நாள் தங்கி மற்ற தோழர்களை சந்தித்துவிட்டு வாஷிங்டன் வழியாக ஊர் திரும்ப இருந்தான். அவனுக்கு வாஷிங்டன் நகரத்தை சுற்றிக் காண்பித்துவிட்டு வழியனுப்பி வைக்கலாம் என்று கிளம்பினேன்.

போய்க்கொண்டிருக்கும்போது வாஷிங்டன் அருகில் வசிக்கும் நண்பன் ராஜாஜியின் தந்தையை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வந்தது. அதுவும் விமானநிலையம் அருகில் இருக்கும் மருத்துவமனை. ராஜாஜியும் ராஜேஷும் சந்தித்து கால் நூற்றாண்டு ஆகியிருந்தது. கடைசியாக இருவரும் சந்தித்தது ராஜாஜியின் திருமணத்தில்தான். அந்த திருமணத்துக்குக்கூட நானும், ராஜேஷும்தான் பெங்களுரில் இருந்து சென்னை சென்றிருந்தோம். ராஜாஜி மருத்துவமனை பார்க்கிங் லாட்டில் காத்துக் கொண்டிருந்தான். அவனுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு  உள்ளே சென்றோம். அப்பா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன். அவருடைய ஞாபக சக்தி மிகவும் குறைந்திருப்பதாகவும், இரவு நர்ஸ்கள் கூட அப்பா கத்தி சண்டை போட இருந்ததாகவும் ராஜாஜி கதை விட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம் கற்பனைவளம் கொஞ்சம் அதிகம்.

ராஜாஜியின் அப்பா அறைக்குப் போனோம். அவரைப் பார்த்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆயிற்று. மிகவும் மெலிந்திருந்தார். அறையில் நுழைந்ததும் என்னையும் ராஜேஷையும் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார் அவர். எப்படி இருக்கிறீர்கள் மாமா என்றேன். உன்னைப் பார்த்ததும் எனக்கு பலம் இரண்டு மடங்காகிவிட்டது என்றார் மாமா மகிழ்ச்சியுடன். ராஜேஷை பெயர் சொல்லி அழைக்கிறாரே என்று ராஜாஜியிடம் விசாரித்தேன். நீங்கள் இருவரும் வருகிறீர்கள் என்று சொல்லியிருந்தேன். மற்றபடி அவருக்கு அவனை நினைவில்லை என்றான் ராஜாஜி.

உனக்கு ரெண்டு பசங்கதானே ராஜேஷ், என்றார் மாமா. என்னடா என்றேன் ராஜாஜியிடம். அது எல்லாம் சும்மா அடிச்சி விடறார்டா என்றான்.

கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று கோபாலகிருஷ்ணன் எப்படி இருக்கிறார் என்று கேட்டார் மாமா. ராஜாஜிக்கு ஒன்றும் புரியவில்லை. நானும் கொஞ்சம் யோசித்தேன், யாரை சொல்கிறார் என்று. நாங்கள் முழிப்பதைப் பார்த்து அவரே சொன்னார். அந்த காலத்து நினைவுகளை எல்லாம் எவ்வளவு அழகாக எழுதுகிறார், சமீபத்தில் ஏதாவது எழுதினாரா என்றார் மாமா. ஆடிப் போய் விட்டேன். கண்கலங்கி விட்டது எனக்கு.

சேதி என்னவென்றால், ரிச்மண்ட் வலைப்பதிவில் திரு. மு. கோபாலகிருஷ்ணன் எழுதும்போதெல்லாம் அவற்றை நான் மின்னஞ்சலில் மாமாவுக்கு அனுப்பி வந்தேன். இவருக்கு கடைசியாக அவற்றை அனுப்பி நான்கைந்து ஆண்டுகள் ஆகியும் நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். இவருக்கு மட்டும் அல்ல. தமிழார்வம் கொண்ட என் கல்லூரித் தோழர்கள் தந்தைகள் சிலருக்கும் அனுப்புவது என் வழக்கம். மு.கோ. அவர்கள் அண்மையில் சற்று உடல்நலம் குன்றியிருந்ததாலும், ஓரிரு புத்தகங்கள் எழுதுவதில் மும்முரமாக இருந்ததாலும் அவர் நம் பதிவுக்கு எழுதுவது குறைந்திருந்ததை சொன்னேன். முடியும்போது எழுதச் சொல்லு என்றார் மாமா.

மு.கோ. அவர்களே – யார் படிக்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டே இருப்பீர்களே? பாருங்கள் உங்கள் எழுத்தை ரசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். என்ன ஒன்று – யாரும் பின்னூட்டம் இடுவதில்லை, நேரில் பார்க்கும்போதுதான் விசாரிக்கிறார்கள். ஆகவே முடியும்போதெல்லாம் எழுதுங்கள். அந்த காலத்து அரசியலும், வாழ்க்கை அனுபவங்களும், அந்தப் பார்வையில் இந்த காலத்து அரசியல், அனுபவங்களை அலச உங்களால்தான் முடியும்.
-->