Monday, January 01, 2018

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு - சில எண்ணங்கள்


ரஜினிகாந்த் அறிவிப்பின் சாராம்சமும் நம் எண்ணங்களும்   • அரசியலும் அரசியல்வாதிகளும் சுயநலமாகி விட்டதாகவும் அக்கறையின்மையின் உச்சக்கட்டமாகி விட்டதாகவும் மாற்றம் கண்டிப்பாகத் தேவையாகி விட்டதாகவும் கூறுகிறார் - அரசியல்வாதிகள் எப்போது பொது நலம் கருதி இருந்தார்கள்? மாற்றம் தேவை என்று நாம் நினைக்க ஆரம்பித்து அதிக நாட்கள் ஆகி விட்டன. ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் செயலின்மையும் ரஜினிகாந்திற்கு இப்போது ஒரு முகாந்திரம் கொடுத்திருக்கிறது. அதுவே அவரது அரசியல் பிரவேசத்தின் ஆர்வத்திற்கு மூல காரணமாக நாம் கருதுகிறோம். 
  • 1996-ல் பதவி என்னிடம் இருந்தது, உதறிவிட்டேன் என்கிறார் - சற்று ஆர்வக் கோளாறான கருத்து. ஒரு கட்சி அமைக்கும் வாய்ப்பு அவரிடம் இருந்தது, ஒரு வேளை ஜெயித்திருக்கலாம் என்பதே அதிகப்படியான உண்மை 
  • ஆன்மிக அரசியல் - ரஜினிகாந்த் பகவத் கீதையை வைத்து ஆரம்பித்ததாலும், ஆன்மிகம் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியதாலும், பல பிஜேபி மற்றும் இந்து மதம் சார்ந்த ஆர்வலர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் அவரது பொதுவானஆதரவு குறையும் ஒரு அபாயம் உண்டாகி உள்ளது.
  • கட்சியின் ஆரம்பம் - கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டிஇட  மூன்று வருடங்களுக்கு மேல் இருப்பதாகவும் அது வரை கட்சி உருவாகி பலப்படுத்தும் முயற்சி உண்டாகும் என்கிறார். அவருடைய அடுத்த கட்டத் தலைவர்கள் யாரும் இது வரை இல்லை. அதிக கெட்ட பெயர் இல்லாத மற்றும் ஓரளவுக்கு வயது மீதம் உள்ள சில அரசியல் புள்ளிகளை வைத்து அவர் தொடங்கலாம். ஆனால், NTR போல் அதிரடி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத ஒரு காலத்திற்கு நாம் வந்து விட்டோம் என்று அவர் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் 1000தொண்டர்களும் 10 கோடியும் இல்லாமல் எந்தத் தொகுதியிலும் போட்டிஇட  முடியாது என்பது தெள்ளத் தெளிவு. பணம் இருக்கலாம், அல்லது திரட்டலாம், ஆனால் மாற்றம் வந்தே தீர வேண்டும் என்ற ஒரு கடுமையான அலை இல்லாத பட்சத்தில், தனியாக நின்றால் ஒரு சில தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் வாய்ப்பை நாம் கணிக்கவில்லை 
  • காவலர்கள் - அவர் கட்சித் தொண்டர்கள் அநீதியைத் தட்டிக் கேட்கும் காவலர்களாக இருக்க வேண்டும் என்கிறார். ஷங்கரின் அடுத்த படத்திற்கு நல்ல கதையாக அமையலாம், அல்லது ஊக்குவிக்கும் முயற்சி என்று கருதுவோம். பண பலமும் குண்டர் படையும் உள்ள பெரிய கட்சிகளோடு திரை அரங்கில் விசில் அடிக்கும் எளிய ரசிகர்கள் மோதும் ஒரு சூழ்நிலையை நாம் திரைப்படங்கள் தவிர எங்கும் பார்க்க முடியும் என்று தோணவில்லை  
தலைமையே இல்லாமல் தறிகெட்டு நடக்கும் ஒரு ஆட்சியின் நடுவில், வெறும் பணத்தை மட்டுமே வைத்து ஒரு சுயேட்சை வேட்பாளர் இடைத்தேர்தலில் வென்றிருக்கும் காலகட்டத்தில்,  ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு மக்களுக்கு ஒரு டானிக் ஆகும். அவருக்கு ஒட்டு போடுகிறோமோ இல்லையோ, எல்லாக் கட்சிகளின் தரத்தை ஆராய்ந்து ஒரு முடிவெடுக்க வேண்டிய ஒரு ஆர்வத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். 

அவரின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத் தக்கது. அவரால் முடியா விட்டாலும், வேறு ஒரு நல்ல முடிவையாவது மக்கள் எடுக்கும் ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கி இருக்கிறார். 

வாதங்களும் ஊகங்களும் மட்டுமே நம்மால் முடியும். மக்கள் என்ன செய்வார்கள் என்பது அவர் நம்பும் ஆண்டவனுக்கே வெளிச்சம் 


Saturday, December 23, 2017

கர்நாடக சங்கீத ஸ்வரங்களின் மேற்கத்திய ஒப்பீடு

இந்தப் பதிவு கர்நாடக சங்கீத விற்பன்னர்களுக்காக அல்ல. கீபோர்டுகளை உபயோகித்து கர்நாடக சங்கீதம் அடிப்படையிலான இந்திய மொழிப் பாடல்களை வாசிக்க ஆர்வம் உள்ள நண்பர்களை நோக்கி எழுதப்பட்டது. கீபோர்டு பற்றி குறைந்த பட்ச அறிவு அவசியம். (மிடில் C மற்றும் octave குறித்த அறிமுகம் )

முதலில் "ஏழு ஸ்வாரங்களுக்குள் எத்தனை பாடல்" என்று கேட்டு விட்டு கீபோர்டைப் பார்த்தால் 12 கீ உள்ளதே என்று உடனே குழப்பம்.

சில விபரங்களைப் பார்ப்போம்

கர்நாடக சங்கீத ஸ்வரங்கள் (7)

Keyboard (12 keys )முதலில் நாம் அறிய வேண்டிய விபரம் கர்நாடக சங்கீதத்தில் 7 ஸ்வரங்கள் இருந்தாலும் அவற்றில் பல ஸ்வரங்களுக்கு சிறிய மாறுபாடுகள் உண்டு. அவை 7 ஸ்வரங்களை 72 விதமான வகைகளாகப் பிரிக்கலாம் என்பது புரிய வரும்


கீழ்கண்ட பிரிவில்  அதில் உள்ள வேறுபாடுகள் உள்ளன.  மேலும் விபரங்களுக்கு https://ccrma.stanford.edu/~arvindh/cmt/the_12_notes.htmlரி1 ரி2 ரி3

க1 க2 க3

ம1 ம2

ப 

த1 த2 த3

நி1 நி2 நி3

அலைவரிசைப் படி

ரி2 = க1
ரி3 = க2
த2 = நி1
த3 = நி2


விதி முறைகள்


ரி1 உடன் நாம் க1 க2 க3 ஏதாவது ஒன்றை இணைக்கலாம்.

ரி2 உடன் நாம் க2 க3 ஏதாவது ஒன்றை இணைக்கலாம்.

ரி3 உடன் நாம் க3 மட்டுமே  இணைக்கலாம்.

மேற்கண்ட கோட்பாடுகள் படி, ரி மற்றும்  க மாத்திரம் 6 விதமான முறைகளில் இணையலாம்


அதே கோட்பாடுகள்  த வுக்கும் நி யுக்கும் - 6 விதமான முறைகளில் இணையலாம்

ம1 அல்லது ம2 - 2 வாய்ப்புகள்

இதைக் கணித முறையில் பெருக்கிப்  பார்த்தால்  - 2 x 6 x 6 = 72

ஒரு உதாரணம் பார்ப்போம் - எல்லாரும் அறிந்த ஒரு ராகம் கல்யாணி - அதன் இலக்கணம் ச ரி2 க3 ம2 த2 நி3. . மேற்கத்திய keyboard - இல்  இவ்வாறு இருக்கும்.இது போல மொத்தம் 72 முதன்மை ராகங்கள் உள்ளன. இவை மேளகர்த்தா ராகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. மற்ற எல்லா ராகங்களும் இவற்றின்  குழந்தை ராகங்களாகும்.

இப்போது ஒரு மேற்கத்திய கீபோர்டில் இவற்றை எப்படி வாசிப்பது என்று பார்ப்போம்.

அதற்க்கு முதல் படி நாம் அறிய வேண்டியது சுருதி அல்லது Pitch மற்றும் அலைவரிசை (frequency )

மேற்கத்திய கீபோர்டில் உள்ள Middle C என்ற key 261.6 ghz அலைவரிசையில் உள்ளது. அதன் அடுத்துள்ள C# 261.6 * 1.059 =  277ghz  அலைவரிசையில் உள்ளது. இப்படியே போனால் அடுத்த C  (next octave ) 523 ghz அலைவரிசையில் உள்ளது. இது Middle C போல இரு மடங்காகும்

ஒவ்வொரு நபருக்கும் சுருதி மாறுபடலாம். ஆண்கள் பெரும்பாலும் 261ghz (Middle C அருகில் ) அலைவரிசையின் அருகிலும் பெண்கள் பெரும்பாலும் 391ghz (Middle G  அருகில்) இருப்பார்கள். ஒவ்வொரு நபரும் கீழ் ப முதல் மேல் ப வரை சிரமமின்றிப் பாட வேண்டும், அதைப் பொறுத்து அவரவர் முடிவு செய்யப் படுகிறது.

ஒவ்வொருவர் கீபோர்டில் எங்கு ஒத்துப் போகிறதோ அதைப் பொறுத்து மற்ற ஸ்வரங்கள் முடிவாகிறன

எளிமைக்காக ஒருவரது மிடில் C என்று வைத்துக்கொள்வோம்

அதன்படி

C - ச
C# - ரி1
D -  ரி2, க1
D# - ரி3, க2
E - க3
F - ம1
F# - ம2
G - ப
G# - த1
A - த2, நி1
A# - த3, நி2
B - த3
C - மேல் ச


ஒருவரது ச மிடில் G  என்று வைத்துக்கொள்வோம்

G  - ச
G# - ரி1
A -  ரி2, க1
A# - ரி3, க2
B - க3
C - ம1
C# - ம2
D - ப
D# - த1
E - த2, நி1
F - த3, நி2
F# - த3
G - மேல் ச

ஒவ்வொரு பாடலும் அதன் இயற்கைக்குத் தக்க மாறுபடலாம். சில பாடல்களில் ச Middle C ஆக இருக்கலாம், சில பாடல்களில் ச  Middle D ஆகவோ Middle E ஆகவோ (அல்லது மற்ற எந்த note ம் ) இருக்கலாம்.

அதை போல பாடல் எந்த சுருதியில் இருந்தாலும் நாம் குறைத்தோ கூட்டியோ பாடினால் பாடல் தவறாகத் தெரியாது, அசலில் இருந்து மாறுபடலாம், ஆனால் தவறில்லை. இதைத் தெரிந்து கொள்வது அவசியம். சரியான சுருதியில் பாடினால் பாடலின் மேன்மை குறையின்றி வெளிப்படும். அதே சமயம் முழுப்பாடலையும் அதே சுருதியில் பாட வேண்டும், இல்லையென்றால் குறைகள் உடனே வெளிப்படும்

இப்போது நாம் ஒரு உதாரணப் பாடலை எடுத்துக் கொள்வோம். இளையராஜாவிற்கு மிகவும் பிடித்த ஜனனி ஜனனி

எளிமைக்காக பாடலின் கமகங்களை விட்டுவிடுகிறேன்   - (கமகம் என்பது ஸ்வரங்களின் அசைவு, தேர்ந்த பாடகர்களால் மட்டுமே அவற்றை நன்றாகப் பாட முடியும் )

இந்த பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்தது.  எளிமைக்காக நாம் ச = Middle C

ராக இலக்கணம் - ச ரி2 க3 ம2 த2 நி3 ச - எளிமைக்காக கீழே ச ரி க ம ப த நி ச என்றால் அழைப்போம்.

(Keyboard notes without suffix are in middle octave  like CDEFGAB, lower is B3 etc, higher is C5 etc)

janani   janani    jagam  nee  agam nee
நி நி ச   ச ச ச    சநி       ரி     சச   ச
B3B3c  C C C   CB3 .    D .   CC .  C


 jaga   kaarani nee paripoorani nee
 மம     ப  மக   ரி     சநிரி     சச  ச
 F#F#  G  F#E D .   CBD .   CC C

jaga kaarani nee paripoorani nee
நிநி  ச   நிநி  த    பப  ம   கக   ரி
BB . C5 BB .A .  GG F#  EE . D

janani   janani    jagam  nee  agam nee
நி நி ச   ச ச ச    சநி       ரி     சச   ச
B3B3c  C C C   CB3 .    D .   CC .  C

இந்தப் பாடலையே D சுருதியில் பாட வேண்டும் என்றால், சிறிய மாற்றங்களே. எல்லா key களும் 2 முறை முன் போகவும் உதாரணம் C -> D , E -> F# ...


janani   janani    jagam  nee  agam nee
நி நி ச   ச ச ச    சநி       ரி     சச   ச
C#C#D  D D D   DC# .   E .   DD . D


 jaga   kaarani nee paripoorani nee
 மம     ப  மக      ரி     சநிரி     சச  ச 
 G#G# A  G#F# E .   DC#E .  DD D

jaga   kaarani     nee paripoorani nee
நிநி    ச   நிநி      த    பப  ம   கக       ரி 
C#C# D5 C#C# .B .  AA G#  F#F# . E

janani   janani    jagam  nee  agam nee
நி நி ச   ச ச ச    சநி       ரி     சச   ச
C#C#D  D D D   DC# .   E .   DD . D

இந்த முறையைப் பயன் படுத்தி பல்வேறு கர்நாடக பற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதம் அடிப்படையிலான தமிழ் மற்றும் பற்று மொழிப் பாடல்களை எளிதாக வாசிக்கலாம்

பயிற்சி செய்ய வேண்டும் என்றால் பின்வரும் பாட்டை முயற்சி செய்யவும்

பனி விழும் மலர் வனம் , ராகம் சல நாட்டை

இலக்கணம் - ச ரி3 க3 ம1 ப த3 நி3 ச சந்தேகங்களுக்கு அணுகவும் - ச.சத்தியவாகீஸ்வரன் - vagees@gmail.com @vagees


Monday, December 18, 2017

மழலை மலர்க்கொத்து

இது என் மழலை மலர்க்கொத்து

அன்பால் ஆர்வத்தால்
அரவணைப்பால் ஆவலால்
என் ஞாயிற்று கிழமையை
மகிழ்விக்கும் என் மழலை மலர்க்கொத்து

புன்னகையால் பொலிவால்
கேள்விகளால் குறும்பால்
புத்துணர்வை தரும் என் மழலை மலர்க்கொத்து

இனிமையாய் இயல்பாய்
இன்பமாய்
அத்தையென்றும் ஆன்டியென்றும்
ஆசிரியையென்றும்
பொலிவூட்டும் என் மழலை மலர்க்கொத்து

சிரிப்பால் பண்பால்
மட்டுமின்றி
என் தாய்மொழியான தமிழ்மொழிக்கு
உங்கள் மழலைச் சொற்களால்
பெருமை சேர்க்கும் என் மழலை மலர்க்கொத்து

ஆயிரம் வணக்கங்களுடன்
சமர்ப்பிக்கிறேன்
- சுனிதா சந்திரமோகன்

(நம் தமிழ்ப் பள்ளியில் எழுத்தறிவிக்கும் ஆசிரியை சுனிதா தம் வகுப்பு மாணவர்களுக்காக எழுதியது)

Thursday, November 30, 2017

அருண் பக்கங்கள் - ரசனை


விடிவுக்கு முடிவில்லாமல் சுத்தும் பூமி...
ஆரஞ்சு நிறத்தில் வெளிச்சமான வானம்...
உடையும் முன் பெரிதாகும் குமிழி...
உயிர் இல்லாவிடினும் பறக்க துடிக்கும் இறகு...
கண் பார்வை முழுவதிலும் கடல்...
கைகளை கட்ட வைக்கும் குளிர்...
இரைச்சலான அருவி...
இளஞ்சூடான வெள்ளை பனி...

கமல புராணம் - உரை ரிச்மண்ட் மக்கள்


“கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்.  நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது”  - கமலஹாசர் டிவிட்டரில்....


நாகேந்திரனார் உரை:

கடவுள் கிடையாது. ஆனால் சாதி உண்டு. கடவுளை நம்பறவன் என் சாதி.


முரளியார் உரை:

கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். 

கோயில்ல கை வெச்சுகினா அவ்வளவுதான் என் கைல நாஸ்த்தி ஆயிடுவ

நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி.

நான் சாமியை நம்பரன்னா இல்லியான்னு செக் செய்ய தாவல

நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல.

நீ நம்பிகினா உன்னை கண்டுக்காம போயிகினே இருக்கரது சாமி கெடையாது, அது இந்த பால்டீக்ஸ் ஆளுங்க செய்ரது


பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.

நம்பர ஆளுங்க நெற்ய டைப்ஸ் கீது, அதுங்க எல்லாம் என் ஜனம்தான்

ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது

அத்தொட்டு இந்த ஜாதி பேசிகினா அது என்னாண்ட ஆவாது,  சாமிக்கும் ஆவாது சொல்டன்.


உள்ளூர்காரர் உரை:


//கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்.  நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. 
என் கடவுள் நம்பிக்கை கோவில் கொள்ளையரை காப்பாற்றாது.

//நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல.
உன்னைக் கைவிட்டது நீ தேர்ந்தெடுத்த ஆள்வோர் செயல். நீ நம்பும் செயல்படாத ஆண்டவன் அல்ல.

//பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.
எல்லா வகை பக்தர்களும் என் உறவினர்.

//ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது
ஆனால் எல்லோரையும் உறவினார்ன்னு சொல்வதை சாதி ஒத்துக்காது. நாமும் சாதியை ஒத்துக்கொள்ளக் கூடாது.

Wednesday, November 22, 2017

அருண் பக்கங்கள் - ஜாதகங்கள்


வெளி வரும் நேரம் யாரும் கணிக்காமல் பிறந்தோம் ஆயினும் ஜாதகம் உருவாக்கினர் ....
மனிதனை மதம் என்ற நீரினால் குளிப்பாட்டினர்...
கல் என்ற வாயினில் கட்டாய கடவுளை திணித்தனர்...
இன்னொருவரின் விருப்பத்தில் நம் பெயரை அழைத்தனர்..

வளரும் பொழுதுகளில் நம் வார பலனை வாசித்தனர்....
வாங்கிய வேலையும் கூட குருவின் பெயர்ச்சியே என நம்ப வைத்தனர் ...
வண்டிக்கும் கூட பூசைகள் தவறவில்லை.....

இப்பொழுது வாழ்க்கையின் முக்கிய தேர்வு
வகை வகையாய் பலகாரங்களுடன் சேர்த்து வரிசையாக நிராகரிக்கப்படுகின்றனர் என் நண்பர்கள்

மணப்பொருத்தம் என்ற ஒரே வார்த்தையினால்....

அருண் பக்கங்கள் - இந்திய விடுதலை...


நாட்டுக்குன்னு நாகரிகத்தை ஐந்து திணைகள் ஆக்கி...
திட்டமிட்டு திணைக்கொரு தொழில் என பெயரிட்டு..
தொல்ல வராம இருக்க தொழிலுக்கொரு கடவுளை உருவாக்கி...
பட்ட சாராயம் காய்ச்சி படச்சவனுக்கும் படச்சுபுட்டு
நட்ட நடு நெத்தி மட்டும் விட்டு புட்டு மொத்தமா பட்டை அடிச்ச
என் பாட்டன் வழிபட்ட வழிபாடு சத்தமே இல்லாம
மொத்தமா மாறி போச்சு...

கண்மசி கவிதைகளை கண்ணியர்களே சிந்துனப்போ
மண் ஏறி வந்த பய மசியம் என்ன தான் செஞ்சானோ...
உள்ள மொழி மறந்து வெளிநாட்டு மோகம் தின்ன
உட்கார்ந்து ராஜ்ஜியம் பாருன்னு மேற்கால பிரபுவ
ஒட்டகம் கூடாரம் நொழைஞ்ச கதை ஆட்டம் உள்ள தான் சேர்த்தாங்க....

பொருள் விக்க வர்றேன்னு இருள கூட்டிகிட்டு வந்த பயலுக
அருளோட இருந்த நாட்ட அங்க அங்க துண்டாடுன சண்டாளனுங்க...

மொதல்ல மொழியறுத்தான்....முக்கியமா அறிவழிச்சான்
வெள்ள தோல கொஞ்சம் கட்டி மெல்ல நம்ம நாடு புடிச்சான்....

தர்மம்னு வளர்ந்த மண்ணுல தாறுமாறா ஆசை வெதச்சான்...
மொத்த ஊரையும் ஏப்பம் போட்டு கப்பமுன்னு கட்ட வெச்சான்...
ரத்தம் சுண்டுன எலும்பையும் நாய் வாய் விடாம உறிஞ்சத போல்
உலக போர்ல அடி வாங்கி உனக்கு தான் விடுதலைன்னு கொக்கரிச்சான்....

போற நன்னாரி பொத்திகிட்டு போயிருக்கலாம்...
சுரண்டுனது பத்தாது வளர விட கூடாதுன்னு....
மதம்னு ஒரு பெரிய மலையையே மண்ணுக்குள்ள வெதச்சு புட்டான்...
அதுக்கு மேல நான் என்ன சொல்ல அதான் நிதமும் பாக்குறீங்களே...

அப்புடியே ஒரு மதத்தான் ஆனாலும் கூடவே வளந்த சாதி கொஞ்சமும் வளர விடலையே..
அவசரத்துக்கு ரத்தம் வாங்கும் பொழுது மட்டும் ஞாபகம் வராத சாதி...

நூறு கோடி சேர்ந்து இருக்கோம்னு தான் பேரு..
வட மொழி பேசுறது தெற்குல பெரிய தப்பது....
தண்ணி கேட்குற தமிழன சுத்தி மாநிலம் துப்புது...

ஹிந்தி தெரியாதவன் இந்தியாவோட இடுப்புக்கு மேல போக முடியாது....
தெரியாம போயிட்டாலும் தெரு தெருவா சுத்த வேண்டியது தான்....

தங்கத்துல இருந்த வணிகத்தை தெளிவா ஆயிலுக்கு மாத்தி புட்டான்...
நோட்டடிக்கிற மெஷின் இருந்தும் நொண்டி மட்டும் தான் அடிக்கிறோம்..

எங்குட்டோ இருந்து வந்த கணினி இப்போ நம்மளை காக்குதுங்க....
எதிர்காலத்துல எல்லாரும் ஆயில்ல தான் ஆயுள்னு சொன்ன எங்க அண்ணாச்சி போக நம்ம...

திருக்குறளையும் கற்பனை காப்பியம்னு இன்னும் கொஞ்ச வருசத்துல சொல்லி புட்டா
ஒட்டு மொத்த பிரச்னையும் ஒரேயடியா முடிஞ்சுது
நம்ம பேரன் ஆப்பிள் ல படிப்பான் ஐரோப்பால இருந்து பிரிஞ்சது தான் இந்தியாவாம்லன்னு...

எனக்கென்னப்பா பஞ்சாயத்து....எங்கப்பன் ஆயி ஆசைக்கு ஒரு வீடு....
என் பொஞ்சாதி பிள்ளைங்களுக்காக ஒரு வீடு அப்புறம் சின்ன காரு...
வகை தொகை தெரியாம தின்ன தொப்பை வயிறையே மறச்சு கெடக்க...
சந்தனம் குங்குமம் வித தெருக்கள்ள இப்போ நெறஞ்சு கடக்க சாராயத குடிச்சு புட்டு
குப்புற தெனம் படுத்து குதூகலமா செல்ல நோண்டுனா
வருசத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும் கேப் விடாம வர்ற மெசேஜ் தான்
தொப்புள் கொடிய பெசையுதப்பா......

அது ஆசையோட என் நண்பர்கள் அனுப்புற விடுதலை திருநாள் வாழ்த்துக்கள் மாப்ளன்ற
பல்லாயிரம் வீரம் விவேகம் நுண்ணறிவு மண்ணோடு போன கண்ணீர் கதை பொதிந்த ஒரு வரி சின்ன கவிதை.....

அருண் பக்கங்கள் - கடவுள்


வாழ்க்கையின் வருத்தத்தை போக்குவதற்கான நிவாரணி நீ என்கிறார்கள்...
இன்ப துன்பம் இல்லாவிடில் வாழ்க்கை ஏது?

மகிழ்வான தருணங்கள் உன்னால் அதனால் நன்றி தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள்...
நன்றி கேட்டுக்கொள்ள எங்கிருக்கிறாய் நீ இந்த அறிவியல் உலகில்?

கல்லிலும் கட்டையிலும் கம்பளங்களிலும் நீ என்கிறார்கள்....
அதனை உண்டாக்கும் என் கைகளில் இருந்து தான் நீ அதற்குள் சென்றாயோ?

அதிகம் பேசாதே அகராதி என் அறிவே உன்னிடமிருந்து என்கிறார்கள்...
நாகரீகம் வளராது சண்டையில் மடிந்த உலகத்தை ஒற்றுமையாக்க உபயோகிக்கப்பட்ட பயம் அல்லவா நீ?

ஒரு முறை மட்டுமே வாழப்போகும் இந்த பூலோக வாழ்க்கையிலேயே பலருக்கு நிம்மதி இல்லை....
வான அறிவியல் கண்டறியாத அந்த மற்ற லோகங்களும் வேண்டுமா?

நினைத்தது நடவாவிடில் பக்தி குறைந்து விட்டது இன்னும் ஏற்றுங்கள் என்கிறார்கள்...
இறை நாட்டம் என்பது எப்போது சமையல் குறிப்பானது?

காண கண்கள் தேவை இல்லை....உணர மனம் வேண்டும் என்கிறார்கள்...
அதற்கு கண்ணை மட்டும் மூடினால் போதுமே...கதவுக்கு வெளியில் ஏன் காக்க வேண்டும்?

நாளும் கிழமையும் தவறாது உன் அலுவலகம் வந்து வருகை பதிவேடு தந்தவனும்
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமும் உன்னை போற்றி துதித்தவனும்
நாணிய வாழ்க்கை வாழ்ந்து அழிபவனுக்கும் மூச்சு என்னோவோ ஒரே போல் தானே வெளியேறுகிறது
நான் பார்த்த வரையில்?!

அதிலும் கொடுமை உனக்காக அடித்து செத்தவர்களுக்கும் கூட சேர்த்து தான்...

இன்று இப்படி நாளை வேறு என்ற இயற்கையின் எதார்த்தம் புரியாதவர்களும்
தன்னால் நடந்தது என்பதை செருக்கில்லாமல் உணர தெரியாதவர்களும்
மீண்டும் முயலலாம் என்ற  தன்நம்பிக்கை இல்லாதவர்களும் சேர்ந்து உருவாக்கிய உருவகமே...

இது செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு மனிதன் எழுதிய உண்மையின் உரைகல்
சற்றே உரசிய கல்.....இது பலநூறு வருடங்களுக்கு பிந்தைய சந்ததிகளுக்கு
ஏனெனில் பூமி முழுவதும் நீ ஏற்கனவே பரவி விட்டாய்....

அருண் பக்கங்கள் - ஒரு கிராமத்து மென்பொறியாளன்

காலேஜ் வாழ்கையில கண்ணடிச்சப்போ தெரியல....
அவ கண்ணாடி அழுததுல காரணம் கொஞ்சம் வெளங்கிச்சு...
வேலை வெட்டி தேடும்போது வெவரம் ஏதும் பத்தல..
வாங்குன வேலைய பார்க்கையிலே வெட்டியாவே இருந்து இருக்கலாம்னு தோணுது ..

எங்க வீட்டு பொறியாலன்னு என்னைய படிக்க வெச்சாங்க..
மங்கலாக நானும் படிச்சு மதுரைல இருந்து கெளம்புனேன்.....
பட்டைய போட்டு படிச்சுகிட்டு போனாலும் நெட்டையா ஒருத்தன் வந்து உனக்கு இங்க வேலை இல்லேம்பான்...

போட்ட சட்டையும் தாகத்துல ஒரு நாளைக்கு தாங்காது...
குட்டையில கூட தண்ணீ இங்க தேங்காது.....
சென்னைன்னு அது பேரு இருந்தாலும் தொன்னையில தான் சோறு திங்கணும்....

வேண்டி வேண்டி வேலை தேட போனாலும் ஆண்டி கோலம் தான் திரும்பும் போது அதிகம்....
அந்த ஆண்டிய என் ஆத்தா அதிகமா வேண்டுனதுனாலவோ என்னவோ கடைசில ஒரு வேலைய கொடுத்தான்...
கழுத்து காலர் மேல மாட்டு கயிற கொடுத்தான்.....

செக்கு மாடு வட்டம் கூட ஆரம் மாறும்.....
பத்து வருஷம் ஆனாலும் பட்டன் மட்டும் தான்....

பக்கத்துல பொண்ணாச்சேன்னு பயத்தோட நான் இருப்பேன்..
கக்கத்துல நெருப்பெடுத்து கல கலன்னு அவ பொகைக்கிரா.....

சத்தியமா புரியலப்பா சனி ஞாயிறு என்ன பண்ணணு...
குப்புறவே படுத்து கெடப்பேன் ஹோட்டல் சாப்பாடு வேணாமுன்னு...
சத்தம் இல்லாம மாமி வீட்டு சட்டி வாசம் கொடுக்கையில
சுத்தம் பண்ணாத தொண்டை சங்கு லேசா ஊதும்....

எந்த பக்கம் போனாலும் எவனோ ஒருத்தன் குடிக்கிறான் ...
எமகாதகனா பார்த்து தான் எல்லாருக்கும் மேனேஜர் ஒருத்தன் இருக்கிறான்...
நொட்ட சொல்லி நொட்ட சொல்லியே நோக வைச்சாலும்..
பார்ட்டின்னு ஒன்னு வெச்சா பல்லுல மொகம் காட்டுறான்...

நட்டு வச்ச செடி கூட நல்ல பெரிய மரம் ஆயாச்சு
பொட்டு பணம் சேரலையே என் வீட்டு பொட்டியில
நாளைக்குன்னு ஒரு நாள் விடியும்னு நம்பிக்கைல தூங்குனாலும்
காலர் மேல கட்டுன கயிற மட்டும் கடைசி வர கழட்ட
தைரியம் இன்னைக்கும் இல்ல.....

கடைசியா ஒண்ணு மட்டும் புரியுது.....
இதுக்கு எங்கப்பன் கையில புடிச்ச மாட்டு கயிறே மேல  தான்டோய்....

அருண் பக்கங்கள் - நட்பு


அறியாத வயதினில் அவன் எறிந்த கல்லின் கரையாத காய தழும்பு நட்பு....
.
அரைக்கால் டிராயரை அவிழ்த்து விளையாட்டு காட்டினாலும்
 அழும் நீரினில் முகம் சுருங்குவதும்
கரை ஏறி கண்மாய் ஏறி நுரை பொங்க நீச்சலடித்ததும்
மழையின் கூதல் போக்க மண் பூசி விட்டதும்
பட்டாசு வெடிக்க காசில்லாத பொழுதுகளில் பாலிதின் பைகளிலே தீபாவளி காட்டியதும் நட்பு.....

தோற்றுப்போன தேர்வுகளின் முடிவுகளை நீர்த்து போக செய்யும்
நீயும் என் பக்கம் தான் நிற்கிறாய் என்ற எண்ணம்...
படிப்பதற்காக கூடிய பல இரவுகளில் நாம் படக்கதைகள் பேசியது தான் அதிகம்....

எவனோ ஒருவன் மணக்கும் பெண்ணிற்காக என் நண்பனுடன் சேர்ந்து நானும் வாங்கிய அடி
இன்னும் சிரிக்க வைக்கிறது என் இதழ்களை.......

பார்த்த பொழுதுகளில் எல்லாம் பரவசமாக பாட்டில்களை தேர்ந்து எடுத்தாலும்
என் பாதி நோயையையும்  பகிர்ந்து கொண்டவன் என் நண்பன் ......

சில நேரங்களில் சிரிக்க விட்டு, பல நேரங்களில் அழ வைக்கும் காதல் நோய்க்கான கடவுளின் மருந்து நட்பு...
எதற்காக பேசுகின்றான் என்ற எண்ணம் துளியும் எழாமல் எனக்காக நீ ஆட்டிய தலை அதன் பெருமை சொல்லும்....

திருமண சந்தையில் எடை போகும் நாட்களிலும் விடை பெற போகும் வேதனை நொடிகளிலும்
விளையாட்டாய் எனை பார்த்து நீ உரைப்பாய் ."விடுடா எல்லாமே வாழ்க்கைல வர தானே செய்யும்"....

சொட்டு சொட்டாய் சேர்த்து வைத்த நட்புதனை பட்டு நூல் முள்ளாய் கிழித்து எரிந்தது காலம்...
எட்டு வைத்து நாம் முன்னேறும் எல்லா பொழுதுகளிலும் விட்டு விட்டே செல்கின்றோம் சில நட்புகளை....

உன் துக்கத்தினை உறவுகள் இரு மடங்காக்கும்....
உன் மனைவியின் உடல் நலம் உன்னை யோசிக்க வைக்கும்...
தள்ளாத வயதினில் தாய் தந்தையிடமும் பகிர முடியாமல் நிற்கையிலே
தோளுக்கு பின் கேட்கும் ஒரு குரல் உன் உயிர் காக்கும் "என்ன ஆச்சு மாப்ள?"...........

உதிரத்தில் உறவு கொண்டாட முடியாத இந்த அதிசயத்தை சேர்த்து வைக்கும் தெருமுனை தேநீர் கடைகளுக்கு நன்றி........