மொதோ தரம் முழிக்கையிலே மூச்சு கொஞ்சம் விட்டீங்க...
மூணாவதா பெத்தாலும் மொளைக்க வெச்சு ரசிச்சீக ...
காலெடுத்து வைக்கையிலே கரம் புடிச்சு நின்னீங்க...
மேலெடுத்து தூக்கி வாரி மேய்ச்சு என்ன வளர்த்தீக...
பயலுக்கு சுடு கஞ்சீனு பழைய சோத்த ருசிச்சீக...
பச்சை மொளகா போதுமுன்னு கடை பல்ல சிரிச்சீக....
காசுன்னு கேக்கும் முன்னே கைக்குள்ள ஆயிடுமே....
காய்ச்சல்ல கொதிக்கையிலே கட்டி புடிச்சா போயிடுமே...
முத்தமுன்னு கொடுத்ததில்ல மொத்தத்தையும் கொடுத்தீக...
பெத்த புள்ளைய படிக்க வெச்சு சொத்தெதுவும் சேர்க்கலையே...
ஒன்னாம் தேதி ஆகி போனது ரெண்டாம் நாளும் கூட மறந்து போகும்...
ஆனா ஒரு மாசமும் தவறாம உங்க சைக்கிள் முன்னாடி சக்தி ஸ்வீட்ஸ் பை ஆடும்....
பொங்கல் தீபாவளி வந்தா எத்தனை காசு கேட்டு அரிச்சிறுப்போம்....
எங்களுக்குன்னு எல்லாத்தையும் கொடுத்து புட்டு திரி பிரிச்சு சிரிச்சு நிப்பே....
மொதோ மொறையா உன் கருப்பு முடி நரைக்கையிலே
மொத்த சத்தியும் விட்டு போச்சு....
நரச்ச முடி இருந்த இடம் நாளடைவில கொட்டி போச்சு...
இரும்பு தேகம் கொஞ்சம் இப்போ இளகி தான் போயிடுச்சே...
கரும்பு உடச்ச கரம் ரெண்டும் நரம்பு மட்டும் காட்டிடுச்சே....
தள்ளாட நா நடந்தப்போ தாங்கி தான் நின்னீக..
தாங்கி தாங்கி நீ நடக்கும் காலமுன்னு நான் காண வந்ததும் ஏன்?...
கள்ளழகர் காட்ட சொமந்த வைர தோளுக்கு என்னாச்சு
காலம் என்னும் கயிறு இறுக்கி காய்ஞ்சு போன மண்ணாச்சு....
பண பாரம் கொறைக்க நான் உன்ன விட்டு வெகு தூரம் வந்தாலும்
என் மன ஆரம் என்னவோ உன் வட்ட முகம் மட்டும் சுத்துதேப்பா.....
உன் கூட ஊரு சுத்தி ரொம்பவும் தான் நாளாச்சு...
பன்னாட வயசு ஆகி இப்போ ரொம்ப பாழ் ஆச்சே....
வயித்தில மட்டும் தான் நீ சொமக்கல....
ஆனா உன் வயசு முட்டும் சொமந்தியே....
ஒழுங்கா நீ நடக்கையிலேயே நான் ஊரு வந்து சேரணுமே.....
நான் அப்பனாவே ஆனாலும் என் அப்பா போல மாறணுமே!!......