ஷாஜஹான் மொகலாய பேரரசன். தன் மனைவியின் நினைவாகப் பெரும் தொகையை செலவு செய்து பல ஆயிரக்கணக்கான கட்டிடக் கலைஞர்களையும் மற்றும் தொழிலாளர்களையும் கொண்டு பல ஆண்டு உழைப்பில் ஒரு கலைக்கூடத்தை தாஜ்மஹால் என்ற பெயரில் உருவாக்க முடிந்தது. சாதாரண மனிதன் மனைவியை இழந்தால்அவனுடையதுயரத்தை காலம்தான் ஆற்றமுடியும்.
சிலர் தன் துயரத்தை மறக்க ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவார்கள். மேலும் சிலர் மனைவியின் பெயரால் சில தருமகாரியங்களை செய்வார்கள். அவரவர்களுடைய பொருளாதார நிலைக்கு தக்கபடிஅந்த தரும காரியம் நடக்கும்.
சில அசாதாரண மனிதர்கள் தூயதொண்டுசெய்வதையே வாழ்க்கையாக மாற்றிக்கொள்கிறார்கள்.
திருச்சி திருவரங்கத்தில் ஒரு அதிசய மனிதர். அவர் பெயர் ராஜவேலு. வழக்கறிஞர். நல்லதமிழறிஞர். சிறந்த கவிஞர். நாடக நடிகர். ஆற்றல் மிக்க பேச்சாளர்.
அவருடைய மனைவி செண்பகவல்லி இறந்து போனபோது ராஜவேலு துயரத்தில் துடித்துப் போனார். ஆனால்அவருடைய தமிழார்வமும் நல்லறிவும் அவரை சிந்திக்கச் செய்தது. தன் துயரத்தைத் தீர்க்கும் வடிகாலாக இழந்த தன் மனைவியின் நினைவைப் போற்றும் வகையில் மனைவியின் பெயரால் செண்பகத் தமிழ் அரங்கு என்ற அமைப்பை உருவாக்கினார்.
தன் பெயரையும் ராசவேலு செண்பகவல்லி என்று மாற்றிக்கொண்டார். 1990-ம் ஆண்டு தொடங்கிய அந்த அரங்கு இன்று ஒரு பெரிய தமிழ் இயக்கமாக வளர்ந்திருக்கிறது. திருவரங்கம் காந்தி சாலையில் ஒரு தமிழ் கோயிலாக பலர் கண்ணுக்கு தெரிகிறது
.
தாஜ்மஹால் போன்ற கலைக்கூடம்தான் கட்டவேண்டுமா? இல்லை. இவரைப்போல் ஒரு இயக்கத்தையும் தொடங்கலாம்.
சென்ற இருபது ஆண்டு காலமாக இந்த அரங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று தமிழ் இலக்கிய விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது. முக்கியமாக அழுத்தமாக குறிப்பிடவேண்டியது தவறாமல் சனிக்கிழமையன்று கூட்டம் நடந்தே தீரும் என்பது. சரியாக மாலை ஆறு மணிக்கு கூட்டம் தொடங்கும். இந்த அரங்கம் தொடங்கிய நாள் முதல் தவறாமல் நடக்கும் கூட்டம் இப்பொழுது ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இன்று நடைபெறவிருக்கும் ஆயிரமாவது கூட்டம் சிறப்பான விழாவாக நடைபெறும். கடந்த பல ஆண்டுகளில் இந்த அரங்கத்தில் சிறிய பேச்சாளர் தொடங்கி தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் வரை அனைவரும் பேசியிருக்கிறார்கள். இந்த அரங்கில் பேசக் கிடைக்கும் வாய்ப்பை தமக்கு கிடைத்த பேறாக பல தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்கு இந்த செண்பகத் தமிழ் அரங்கு தமிழ் ஆர்வலர்களிடம் மதிப்பும் மரியாதையும் பெற்றிருக்கிறது. நீண்ட தூரம் பயணம் செய்து கூட்டத்தில் கலந்து கொள்ளும் பலரை நான் கண்டிருக்கிறேன்.
இந்த அரங்கில் சங்க இலக்கியம் தொடங்கி சிலப்பதிகாரம், மணிமேகலை, இடைக்கால பக்தி இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு பாரதி கவிதைகள் வரை சகல தலைப்புகளிலும் இலக்கிய உரை நிகழ்த்தப்படுகிறது.
அரசு உதவியுடன் பெரிய அளவில் செயல் படும் பல நிறுவனங்களும் அமைப்புகளும் தொடர்ந்து செயல்பட முடியாத இந்த காலத்தில் ஒரு தனி நபர் தன்னுடைய சொந்த முயற்சியில் இதைச்செய்ய முடிகிறது. என்று அறியும்போது நமக்கு வியப்புதான் ஏற்படும். வள்ளலார் வாழ்வையும் கருத்துகளையும் பரப்பும் தொண்டுபுரியும்தவத்திரு ஊரன்அடிகள், செந்தமிழ் அந்தணர் இலங்குமறனர், இயல் இலக்கண வித்தகர் தி.வே.கோபாலய்யர் போன்ற இலக்கிய அறிஞர்கள் மற்றும் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். பல தமிழறிஞர்களின் படைப்புகள் இங்கே விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பல தமிழறிஞர்களின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப் படுகின்றன.
தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டு வரலாறு, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்கள், அந்த கோயில்களில் உள்ள சிற்பங்களின் பெருமை, தலவரலாறு பற்றியும்சொற்பொழிவு நடை பெறுவதுண்டு.
சைவசமயம் வைணவ சமயம்,ஆகிய பல பிரிவுகளின் மெய்ஞான அடிப்படைகள் பற்றிய விளக்க கூட்டம் நடக்கும். கிறிஸ்தவ சமயம் இஸ்லாமிய சமய அடிப்படை கொள்கைகள் பற்றியும் ஒரு தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. ஷேக்ஸ்பியர் ,பெர்னார்ட் ஷா போன்ற ஆங்கில இலக்கிய ஆசிரியர்களின் நாடகங்களின் விளக்க சொற்பொழிவு நடந்தது இந்திய மொழிகளான வங்காளம், மராத்தி, ஹிந்தி ஆகிய பல மொழிகளின் வரலாறு, அந்த மொழிகளின் முக்கிய இலக்கிய படைப்புகள் பற்றியும் சில கூட்டங்களில் விளக்கமாக பேசப்பட்டன. ..அந்த மொழிகளில் புலமை படைத்த பலர் இந்த அரங்கில் பேசியிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் இலக்கியம் பற்றியும் இலக்கிய தொடர்பான இதர துறைகள் பற்றியும் விமர்சனங்களோடு கூடிய விளக்கக் கூட்டம் வாரம் தவறாமல் நடைபெறுகிறது.
திருச்சி நகரத்தில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கையோடு பார்க்கும் அமைப்பாக செண்பகத்தமிழ் அரங்கு வளர்ந்திருக்கிறது. பயன் கருதாது தொடர்ந்து நடத்தப்படும் இந்த அரங்கின் ஆயிரமாவது கூட்ட நிறைவு விழா 20.11.2010 காரி (சனி)க் கிழமை முற்பகல் 09.30 மணிமுதல் ஒரு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.
இடம்: எசு.என்.திருமண மாளிகை (காவிரிக்கரை அம்மா மண்டபம் அருகில்), திருவரங்கம், திருச்சிராப்பள்ளி. அதையொட்டி நடைபெறவிருக்கும் விழாவில்பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது.சிறப்பான முறையில்கூட்டம் நடைபெற முனைப்போடுவேலைகள்நடக்கிறது.
ஒருஆசிரியர்தன்னுடைய எம் .பில் பட்டப் படிப்பிற்காகசெண்பகத் தமிழ் அரங்குபற்றியஆய்வேடு தயாரித்து பல்கலைகழத்தில் சமர்ப்பித்திருக்கிறார். சமீபத்தில் பெங்களூர் தமிழ் சங்கம் திரு ராஜவேலுக்கு பாராட்டு தெரிவித்து அவரை கௌரவித்திருக்கிறது. அவர் சார்பாக அவருடைய குமரன்இளங்கோபெங்களூர் சென்றுபாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். திரு ராஜவேலுஏன்பெங்களூர் சென்று தானே நேரடியாக விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழலாம். இங்கேதான் ஒரு வேதனை தரும்செய்தியை குறிப்பிடவேண்டியிருக்கிறது.
திரு ராஜவேலுக்கு கடந்த பல வருடங்களாகக் கண்பார்வை சரியாக இல்லை. தன் வீட்டில் மட்டும் நடமாடும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையிலும் அவருடைய தமிழ்ப்பணி தொடர்கிறது.
இதுவரை நடைபெற்ற எல்லா சொற்பொழிவுகளையும் ஒலிநாடாவில்
பதிவு செய்திருக்கிறார். விழாவில் சில முக்கிய சொற்பொழிவுகள் அடங்கிய சிறப்புமலர் வெளியிடப்படவிருக்கிறது.
திரு ராஜவேலுவின் தன்னலம் கருதாத இந்த தொடர் முயற்சியில் பல அறிஞர்கள் உறுதுணையாக நிற்கின்றனர். காலம் சென்ற புலவர் சேது மாணிக்கம் அவர்கள் தன் வாழ்நாளில் அரங்கின் செயல்பாட்டுக்கு மிக்க உறுதுணையாக இருந்தார். நண்பர் தமிழன்பனும் நல்ல துணையாக நின்று செயல்படுகிறார். இந்த அரங்கின் சார்பாக ஒரு நூல்நிலையம் செயல்படுகிறது. இதுபோன்ற தனிநபர் முயற்சியை பார்க்கும்போது நமக்கு ஒரு தன்னம்பிக்கை வருகிறது. தமிழை வைத்து பிழைக்க முயற்சி செய்பவர்கள் மலிந்து கிடக்கும் தமிழ்நாட்டில் தமிழுக்காக வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்று அறியும்போது நாம் ஒரு வகையில் நிம்மதிஅடையலாம்.