Wednesday, December 10, 2008

ராமசுப்பையர் நூற்றாண்டு நினைவு அஞ்சல்தலை வெளியீடு

தினமலர் நிறுவனரான டி.வி.ராமசுப்பையரின் நூற்றாண்டு நினைவு அஞ்சல்தலையை இந்திய அரசு வெளியிடுகிறது. வரும் 21ம் தேதி சென்னையில் கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் திரு ஆ. ராசா அவர்கள் வெளியிட, தமிழக முதல்வர் கலைஞர் திரு மு.கருணாநிதி பெற்றுக் கொண்டு பேருரையாற்றுவதுடன் இந்த அஞ்சல்தலை வெளியீட்டு விழா இனிதே நடக்கவிருக்கிறது.

ரிச்மண்ட் தமிழ் குடும்பத்தின் அங்கத்தினர்களான ராமசுப்பையரின் பேத்தி மல்லிகா மற்றும் நடராஜமூர்த்தி தம்பதியினருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.



அழைப்பிதழ் அனுப்பிய தினமலர் பிரசுரகர்த்தா டாக்டர் ரா. லஷ்மிபதி அவர்களுக்கு எமது நன்றி.

Tuesday, December 09, 2008

நடராஜ்னு பேரு வச்சா சும்மாவா?

அடுத்த தமிழ் சங்க கமிட்டில கலாச்சார டிபார்ட்மெண்ட் இந்த தடவ மாதிரியே ரொம்ப ஸ்ட்ராங். ஒரு சாம்பிள் பாக்கணுமா?



என்னய்யா ஏதோ ஏரிக்கரைல இந்த ஆட்டம் ஆடியிருக்கியே, ஏதாவது உபயோகமாச்சான்னு கேட்டேன். ஒண்ணும் பதில் வரல :-)

ரிச்மண்ட் மக்கா - இனிமே நடராஜ் கூட ஆடனும்னா இந்த ஸ்டெப்புல்லாம் போட்டு பழகி ’ஆடி’ஷன் காமிச்சாதான் யோசிப்பமே...

கைல இன்னும் நடராஜ் ஆடின ஆட்டம் வீடியோல்லாம் கொஞ்சம் இருக்கு. எல்லாத்தையும் இங்க போட்டா அப்பறம் சிலபஸ் அவுட்டாயிரும். அதான் போடல.

Monday, December 08, 2008

வலை வலம்!

ஒலி பரிமாற்றுச் சேவை (VOIP)



முந்தைய பதிவில் நாகு கூகிளில் இருந்து "Video / Voice" அரட்டையடிப்பது பற்றி எழுதியிருந்தார். இணையத்தின் பல நல்ல வசதிகளில் ஒன்று VOIP (Voice over Internet Protocol) எனப்படும் ஒலி பரிமாற்றுச் சேவை. பல நிறுவனங்கள் இது போன்ற சேவைகளை தற்போது வழங்கி வருகிறது. சில சேவைகளை பாவிக்க உங்களுக்கு விசேட உபகரணங்கள் (Broadband Internet, VOIP Router) தேவைப்படும். இதற்கு மாதச் சந்தா கட்டினால், சில நிறுவனங்கள் Router இலவசமாக வழங்குகிறன. சந்தா இல்லாமல், விசேட உபகரணங்கள் இல்லாமல் உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு (PC-to-phone) பேசவும் இப்போது வசதிகள் உள்ளன! அந்த வகையில் www.freeringer.biz என்ற இணையதளத்திலிருந்து சுமார் 30 நாடுகளுக்கு இலவசமாக உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு பேசலாம்! இதை பாவிக்க எந்த மென்பொருளையும் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை என தெரிவித்துள்ளனர்! (சோதித்ததில் இதற்கு "Adobe Flash Player" மட்டும் தேவைப்படும் என தெரியவந்தது.). இதை பாவிக்க உங்களிடம் Broadband இணைப்பு தேவைப்படும். இல்லாவிட்டால், நீங்கள் பேசி 2 நிமிடம் கழித்து எதிரே உள்ளவருக்கு போய்ச்சேரும். (இந்த நிறுவனத்திற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை).


பி.பி.சி இணைய வானொலி:

சிலருக்கு தமிழில் கட்டுரைகள் வாசிப்பது சற்று சிரமமாக இருக்கும். அதுவும் பல பக்கங்கள் கொண்ட கட்டுரைகள் வாசிப்பதற்கு பொறுமையும் அவசியம். அந்த சிரமங்கள் இல்லாமல் நல்ல விடயங்கள் "ஒலி" வடிவத்தில் இருந்தால் எவ்வளவு வசதி! BBC இணைய தளத்தினில் நம்மில் பலரும் அடிக்கடி உலவியிருப்போம். அதில் பல நல்ல "ஒலி" தொடர்கள் உள்ளன. அதிலிருந்து உங்களுக்காக சில இங்கே:


1. நெஞ்சம் மறப்பதில்லை

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள், சிரிக்கவைத்த சிந்தனையாளர்கள், சிந்திக்கவைத்த இயக்குநர்கள் என்று தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர். சம்பத்குமார் தயாரிப்பில். இங்கே கேட்கலாம்

2. தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
தமிழ் இசையின் வரலாறு கூறும் இந்தத் தொடர், தமிழ் இசையின் தொன்மை, அதன் பரிமாணங்கள், வளர்ச்சிப் போக்கு, அது எதிர்கொண்ட மாற்றங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது. இசைக் கலைஞர்கள், மற்றும் இசைத்துறை ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்களின் கருத்துக்களைத் தாங்கிவருகிறது இந்தப் பெட்டகத் தொடர். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இத்தொடரைத் தயாரித்து வழங்குவது BBC சென்னை நிருபர் த.நா.கோபாலன்

3. பாட்டொன்று கேட்டேன்
அக்காலத்து 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' முதல் இன்று உங்களை தாளமிடவைக்கும் 'மன்மத ராசா!' வரை தமிழ்த் திரையிசை நடந்துவந்த பாதையைப் படம்பிடிக்கும் வரலாற்றுத் தொடர், சம்பத்குமார் தயாரிப்பில்.


மேலும் சில சுட்டிகள்:

1. தமிழோசை: நேரடி ஒலிபரப்பு

2. செய்தியறிக்கை: (மறு-ஒலிபரப்பு - On-Demand)

3. தமிழ் பண்பலை:: (மறு-ஒலிபரப்பு - On-Demand)


உதவி: கணினியில் தமிழோசை கேட்பதற்கு வகைசெய்யும் ஒலிச் செயலியை பெறுவது எப்படி?


கூகிள் மொழி மாற்று செயலி:

நமது வலைபக்கத்தில் தமிழில் தட்டச்சு செய்ய உதவி பக்கம் இருப்பினும், சிலருக்கு அவற்றை பாவிக்க சற்று கடினமானதாக(!) இருக்கிறது என்று கூறியுள்ளனர். சிலர், "நான் ஆங்கிலத்தில் எழுதி தருகிறேன், நீங்களே தமிழுக்கு மற்றிக் கொள்ளுங்கள்" என்று பின்வாங்கிவிடுவதுண்டு! அவர்களுக்காகவே இந்த மொழி மாற்று செயலியை கூகிளாண்டவர் கொடுத்துள்ளார். ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை "பொனெடிக்" முறையில் தட்டச்சு செய்தால் அதை தமிழில் உடனே மாற்றி காட்டும்!! உதாரணத்திற்கு, "sangam" என்று தட்டச்சு செய்தால் அதை "சங்கம்" என மாற்றிடும்.

அதே போல தட்டச்சு செய்த வார்த்தையின் மேல் சொடுக்கினால், அதனை பல விதங்களில் காட்டும் (ஆனால், செயலியே சரியான எழுத்துக்களை தேர்ந்தெடுப்பதும், பிழையான வார்த்தையை சுட்டிக்காட்டிடவும் இன்னமும் வசதிகள் இல்லை!). நீங்கள் தட்டச்சு செய்தவற்றை ஈமெயில் அல்லது கோப்புகளில் வெட்டி ஒட்டிக் (Copy & Paste) கொள்ளலாம்! இதுவும் மிகச்சுலபமான முறையில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும் கருவி! ஆங்கில பிழை திருத்தி போன்ற வசதிகள் கொண்ட தமிழ் தட்டச்சு செயலிகள் இன்னமும் சில காலத்தில் வந்துவிடும். மேலும் விபரங்கள் மற்றும் உதவி பக்கத்தை இங்கே காணலாம்


சில நாட்களாக நாகு வலை வலம் பற்றி சொல்லாததால், நான் அறிந்த சில தகவல்களை இங்கே கொடுத்துள்ளேன்..

Sunday, December 07, 2008

பனித்துளிக்கு தேர் கொடுத்த வள்ளல்....

நேற்று ரிச்மண்டில் இந்த ஆண்டின் முதல் பனியாக ஒரு சின்ன பனித்தெளிப்பு இருந்தது. புல்தரை கூட முழுதாக மூடப்படாத அளவு குறைவான பனிச்சிதறல். குழந்தைகளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் சிறிதாக விழுந்த பனியால் பெரிய மனக்குறை. எங்கள் மாவட்டத்தில் (கவுண்டிக்கு தமிழில் வேறென்ன?) பள்ளிக்கூட தினங்களில் கொஞ்சம் பனி விழுந்தாலும் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடிவிடுவார்கள். சனிக்கிழமை இவ்வளவு குறைவாக விழுந்தால் என்ன ஆகும்...


அரைகுறையாக மூடப்பட்ட புல்தரை...

ஞாயிறு மதியம் வெளியே கிளம்பினோம். எப்பொழுதும் வேனில் போகலாம் எனும் என் மகன், காரில் போகலாம் என்றான். என்னடா என்றால், வெயில்பட்டு எல்லா பனியும் மாயமாய் மறைந்திருக்க வேன் மறைத்ததால் புல்தரையில் ஒரு சின்ன இடத்தில் மட்டும் பனி இருந்தது. வேன் எடுத்தால் அந்த பனியும் உருகிவிடுமாம்! அதனால் வேனை எடுக்க விடவில்லை. அவனால் காப்பாற்றப்பட்ட புல்தரையும், தேரும்...


பனித்துளிக்கு தேர் கொடுத்த வள்ளல்....

Monday, December 01, 2008

ரிச் மெலடிஸ் இன்னிசை இரவு

சென்ற சனிக்கிழமை மாலை ரிச்மண்டில் ஆர் சி லாங்கன் துவக்கப்பள்ளியில் ரிச் மெலடிஸ்(RichMelodies)குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. தயா என்று அழைக்கப்படும் பால் ஞானோதயனின் குழுவினர் அசத்தினார்கள். ரிச்மண்ட் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான அனைத்து பாடகர்களும்(தயா, ஜெயக்குமார், ரமேஷ், கலா, நாராயணன், அரவிந்தன், சிவாந்தி, அங்கிதா, சுதா, சுரேஷ், அஸ்வின், சூர்யா மற்றும் பலர்) அழகாகப் பாடி மகிழ்வித்தார்கள்.
நிகழ்ச்சியை ஜெயந்த் கீபோர்டில் வசீகரா பாடலுடன் துவக்கினான். ஆர்த்தி கிளாரினட்டில் 'ஒரு மாலை'யுடன் தொடர்ந்தாள். இருவரும் அற்புதமாக வாசித்தார்கள்.
கார்த்திகேயனும் அட்லாண்டாவில் இருந்து வந்த ஒரு பெண்மணியும் நிகழ்ச்சியை வழங்கினார்கள்.

நிறைய குழந்தைகளும், பெரியவர்களும் பிரமாதமாகப் பாடினார்கள். என் நினைவில் நிற்பது சூர்யா கணீர்க்குரலில் திருத்தமாக பாடிய 'உன்னை அறிந்தால்' பாட்டு. அஸ்வின் பாடிய ராப் கலந்த பொன்மகள் வந்தாள் ரிமிக்ஸும் அட்டகாசம். பெரியவர்கள் பாட்டு வரிசை மிக நீளம். யாரையாவது விட்டு விடப்போகிறேன் என்ற பயத்தால் அனைவரையும் விட்டுவிடுகிறேன் :-)

உணவிற்குப் பின் டிஜே வைத்து மக்களின் ஆட்டம் கூட சூப்பர். படங்கள் இங்கே....(முழுதாகப் பார்க்க இங்கே)

Wednesday, November 26, 2008

சுவடுகள்: அவளைப் போல (சிறுகதை), தமிழ்த்திரையுலகம் ஒரு பார்வை

சுவடுகள்:தமிழ் சங்கத்தின் தமிழ் கதை,கட்டுரை பதிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட கதை மற்றும் கட்டுரை மறுபதிப்பு (2004).

கதை: மீனா வீரப்பன்
கட்டுரை: ச.சத்தியவாகீஸ்வரன்

Tamil Prose 2004 - Richmond Tamil Sangam

Monday, November 24, 2008

படம் பாரு கடி கேளு - 21


சே, 2 லிட்டர் எண்ணை தடவி வந்தும் பரிசு கிடைக்கலியே!
அவங்களுக்கு மோட்டார் பைக் வேறு குடுத்திருக்காங்க

Saturday, November 22, 2008

பித்தனின் கிறுக்கல்கள் – 31

நம்பியார்
உலகத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருந்த ‘வில்லன்களின் வில்லன்’ எம்.என்.நம்பியார் மறைந்து விட்டார். இவர் நடிக்காத 60, 70, 80 களில் வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நடிகர் திலகமும், மக்கள் திலகமும் நடித்த படங்களில் அவர்களைத் தாண்டி ஒரு நடிகர் ப்ரசித்தி பெறுவது என்பது கிஞ்சித்தும் யோசிக்கக்கூட முடியாத விஷயம். அதை சர்வ சாதாரணமாக செய்து காட்டியவர் இவர். தனக்கென ஒரு தனி பாணி அமைத்து, படத்தில் பல வில்லன்கள் இருந்தாலும், அவர்களிலிருந்து தன்னைத் தனித்து வெளிப் படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்தவர். எம்.ஜி.ஆருடன் இவர் செய்யும் சண்டைக்காட்சிகள் என்னைப் போன்ற பல ரசிகர்களை புலகாங்கிதமடையச் செய்துள்ளது. உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆருடன் இவர் செய்த சீன முறை சுமோ சண்டை இனி மீண்டும் ஒருவர் செய்ய முடியாது என்பது என் கருத்து. என் சிறு வயதில் நான் பார்த்த படத்தில் இவர் சாட்டையால் அடித்ததில் எம்.ஜி.ஆருக்கு வலித்ததோ இல்லையோ எனக்கு வலித்து நான் அழுதது நினைவிருக்கிறது. அசாத்திய வில்லன் நடிப்பு இடையே திடீரென நல்லவனாகவும் நடித்து (ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பின்பகுதி, தூறல் நின்னு போச்சு) நம்மை ஆச்சர்யப் பட வைத்தவர். எம்.ஜி.ஆர் தேர்தலுக்கு ப்ரசாரம் செய்யப் போகும் போது மக்கள் அவரை வழி “மறித்து நல்லா இரு ராசா” என்று வாழ்த்திய அதே நேரம் “இந்த நம்பியார் கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையா இரு ராசா, கெட்ட பய உன்னைய ஏதும் செய்துரப் போறான்” என்று வாஞ்சையோடு சொன்னது இவருடைய நடிப்புக் கிடைத்த மிகப் பெரிய பரிசு.

ஒரு நல்ல கலைஞன் எப்போது மற்ற கலைஞர்கள் போல நல்ல கதாபாத்திரங்கள் தனக்கு கிடைக்க வில்லையே என்று ஏங்குகிறானோ அப்போதுதான் முழுமையடைகிறான் என்பது என் கருத்து. ரஜனியின் தளபதி படத்தில் அம்ரிஷ் பூரியின் ‘கலிவர்தன்’ கதாபாத்திரம் தனக்கு கிடைக்கவில்லையே என்று சொல்லி அவர் அதன் முத்தாய்ப்பாக எனக்கு தலையில் இப்போது முடியே இல்லை மொட்டை போடும் செலவு கூட இல்லை இருந்தாலும் மணிரத்தினம் என்னை தேர்வு செய்ய வில்லையே என்று வருத்தப் பட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி என்ற இரு இமயங்களோடு நடித்தவருக்கு ரஜனி, மம்முட்டி இரு சிறு மடுக்களோடு நடிப்பதில் பெரிய சவால் இல்லை ஆயின் அந்த சிறிய பாத்திரம் இவரை பாதிக்கிறது என்று சொன்னால் இவருடைய கலையார்வத்தை கண்டு தலை வணங்கத்தான் வேண்டும்.

திரையில் இவர் ஒரு நயவஞ்சகன், பெண் பித்தன், திருடன், ஏமாற்றுப் பேர்வழி, கொள்ளைக்காரன், கொடுங்கோலன், ராஜத்துரோகி, பணத்தாசை பிடித்த பிசாசு, இரக்கமில்லாதவன். ஆனால் நிஜ வாழ்வில் இவர் ஒரு இனிமையான மனிதர், அல்லும் பகலும் ஐயப்பனின் நாமத்தை ஜெபித்த, 60-65 வருடங்களுக்கு மேலாக சபரிமலை (வருடத்திற்கு 4-5 முறை) சென்று வந்த பக்தர். புகை, மது, மாது என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தூய்மையானவர். நடிப்பது, எனது தவம், வாழ்க்கை, எனக்கு ஆண்டவன் இட்ட பிச்சை என்று வாழ்ந்த உத்தமர்.

1991-ல் நான் முதன் முதலாக சபரிமலைக்குச் சென்றபோது 18 படியை தழுவி, ஐய்யனை தரிசித்து விட்டு எங்கள் குடிலுக்கு சென்று ஓரிரு மணி நேரத்திற்குப் பிறகு வெளியில் ஒரே பரபரப்பு, என்ன என்று கேட்டதற்கு, குருசாமி வந்துவிட்டார் என்றார்கள். எனக்கு ஒரே திகைப்பு, எங்கள் குழுவின் குருசாமி எங்களோடுதான் மலையில் நடந்து வந்தார், எனக்கு ஒரு 100-200 பேர்களுக்கு முன்புதான் 18 படி கடந்து வந்தார், அப்படி இருக்க இவர்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே என்று எங்கள் குருசாமியின் மகனிடம் கேட்டதற்கு அவர் சொன்னார், என் தந்தை நம் குழுவிற்கு குருசாமி, ஆனால் நம்பியார் சாமிதான் நம் எல்லா ஐய்யப்பன்மார்களுக்கும் குருசாமி என்றார். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடுமபத்திற்கும், மற்றவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

எம்.என். நம்பியாரைப் போலவே தமிழ் சினிமாவில் ப்ரபலமான மற்றொரு நம்பியார் ஆர்.என். நம்பியார் இவர் ப்ரபல சண்டை பயிற்சியாளர், எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு இவர்தான் சண்டைப் பயிற்சி தந்தவர். இவர்தான் அண்மைக் காலத்தில் மறைந்த ப்ரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ‘விகரம்’ தர்மாவின் தந்தை என்பது மற்றொரு சிறப்பு.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

Wednesday, November 19, 2008

குழந்தையின் பார்வையில் தமிழ் சங்க தீபாவளி

எங்கள் தமிழ் சங்க தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஒரு குழந்தையின் கையில் என் டிஜிட்டல் கேமிராவைக் கொடுத்து, என்ஸாய் என்றேன்.   விளைவு இதோ.... :-)
இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் இதை செய்யலாம் என்றிருக்கிறேன்.

தமிழ் சங்கத்தின் தீபாவளி மற்றும் கிருத்துமஸ் விழா: படங்கள்

ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் தீபாவளி மற்றும் கிருத்துமஸ் விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது அதிலிருந்து சில படங்கள்:



(சில படங்கள் விடுபட்டிருக்கலாம்.அவை உங்களிடம் இருப்பின் எங்களுக்கு (richmondtamilsangam@gmail.com) அனுப்புங்கள். இதனுடன் சேர்த்துவிடுகிறோம்.)