Friday, August 31, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 14

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/08/60-60.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

Monday, August 27, 2007

நம்ப ஊர் பதிவுகள் - நம்ம ஊர் வலைவலம்

என்னடா இது, இந்த ரிச்மண்டுக்கு வந்த சோதனை? இதில் எழுதிக்கொண்டு இருந்த மக்களைக் காணவில்லை. கோடை விடுமுறையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் போலிருக்கிறது. பித்தனாவது பரவாயில்லை. தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டு நம்முடன் கூட்டணி வைத்திருக்கிறார். இந்த சதங்கா இருக்கிறாரே - சத்தம் போடாமல் தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார். தமிழ்மணத்தில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். என்னய்யா தனியாக மைக் பிடித்து விட்டீர் என்றேன். கொள்கை அடிப்படையில் தனியாக போய்விட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் 'இஞ்சி' தின்ற குரங்கு மாதிரி ஆகிவிட்டேன். அவ்வப்போது நான் ரொம்ப அழுதால், ஒரு இஞ்சி, மன்னிக்கவும், ஒரு பதிவு இங்கே போடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். வாரத்துக்கு ஒருமுறை புலம்புவதாக உத்தேசம்.

தமிழ்மணத்தின் பூங்கா வலை இதழில் சதங்காவின் யானைக்கவிதை வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

பரதேசியாரும் காணோம். சென்னைக்கு போய்விட்டு வந்து இன்னும் பரதேசி மனநிலைக்கு வரவில்லையோ என்று நினைத்துக் கூப்பிட்டேன். தலைக்கு மேல் வேலையாம். அவர்தான் இந்த பதிவை ரொம்ப நாள் ஆக்சிஜன் கொடுத்து காப்பாற்றி வந்தார். இன்னும் ஒரு வாரம் பார்த்துவிட்டு கூப்பிட்டு "தமிழ் சங்கப் பதிவுக்கோர் குறை நேர்ந்தால் உனக்கன்றி எனக்கில்லை" என்று பாடப்போகிறேன்.

காணாமல் போன தேனப்பனை பிடித்துக் கொடுக்கும் நபருக்கு ஒரு குறிஞ்சிப்பூ பரிசு கொடுக்கப்படும். அவர் கதையை அடுத்த பதினோரு வருஷத்துக்கு கேட்கக்கூடாது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

நம் ஊரில் தனிக்கட்சி நடத்தும் மற்ற சிலரைப் பார்ப்போம். நம் தமிழ் சங்க வெப் மாஸ்டர் கதையைப் பாருங்கள். தனிமரம் காடான கதையாய் ஒரே ஆளாய் பல பேரில் கூட்டணி நடத்துகிறார். அவருடைய புகைப்படங்கள் மிகவும் அருமையானவை. ஜெயகாந்தன் என்றால் சும்மாவா?

எங்க ஊரு பாட்டுக்காரன் பதிவைப் பாருங்கள். தமிழ் சங்க கல்லாப்பெட்டிக்காரர் அரவிந்தின் பாடல்கள் அருமையாக இருக்கின்றன. அரவிந்தன் மட்டும் எழுதினால், அவர் வீட்டில் சும்மா இருப்பார்களா? முப்பது நாளில் முப்பது பதிவுகள் என்று ஒரு சாதனை செய்திருக்கிறார் சுபத்ரா. அவருடைய பதிவு இதோ. ஆனால் கல்லாப்பெட்டி ரொம்ப மோசம். அவர் படிக்கும் பதிவுகள் என்ற வரிசையில் மனைவியின் பதிவை கடைசியில் குறிப்பிடுகிறார்(ஏதோ நம்மால் ஆன கைங்கரியம் :-)

எல்லோர் பதிவையும் சொல்லிவிட்டு இந்த பதிவைச் சொல்லாவிட்டால் எனக்கே புவ்வா கிடைக்காது :-) அப்படியே நம் புத்திர சிகாமணிகள் பதிவுகளும் இங்கே (ஒன்றா, இரண்டா) இருக்கின்றன.

அட மறந்தே விட்டேன். ரிச்மண்டில் அனைவரையும் எழுத வைக்க மூல காரணமே கவிநயாதான். அவருடைய வலைத்தளத்தில் புதிதாக ஏதும் காணவில்லை. அன்புடன் ஜோதியில் கலந்திருக்கிறார் போல. அவர்தான் இயலிலும் நாட்டியத்திலும் கலக்குகிறார் என்றால் அவர் மகன் எனம்மா இசையை விட்டு வைத்தீர்கள் என்ற தோரணையில் மேற்கத்திய இசையில் கலக்குகிறான். எனக்கு ஒரே ஆச்சரியம் அரவிந்த் கேட்கும் மேற்கத்திய இசை எல்லாம் எனக்குப் பிடித்த கிளாஸிக் ராக்! அவனது இசையிலும் அதன் தாக்கம் தெரிகிறது. மேலும் தொடர்ந்து இசையில் சாதனை புரிய என் வாழ்த்துக்கள்.

எனக்குத் தெரிந்த ரிச்மண்ட் பதிவுகள் இவ்வளவுதான். உங்களுக்கு தெரிந்த ரிச்மண்ட்காரர்களின் பதிவுகளையும், வலைத்தளங்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Tuesday, August 21, 2007

அதிர வைக்கும் கூகுள்

எங்கும் வியாபித்திருக்கும் எம்பெருமான் கூகுளை விட்டுவைப்பாரா? கூகுள் 60வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்களுக்கு சில மென்பொருள்களை வழங்கியிருக்கிறது.

தமிழில் தேட வசதியாக ஒரு விட்ஜெட் அளித்திருக்கிறார்கள். அதில் உதாரண தேடுசொல் அதிர வைக்கிறது. வாழ்க கூகுள். தமிழில் தேடுவதற்கு மிக எளிய முறையில் வசதி இருக்கிறது இந்த விட்ஜெட்டில். இந்த விட்ஜெட் வலது பக்கத்தில் சேர்க்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். அதுவரை கீழே தமிழில் அடித்துவிட்டு, வலப்பக்கத்தில் வெட்டி ஒட்டி இந்தப் பதிவில் தேடலாம்.



மேலே தமிழைத் தடவித் தடவி அடித்து என்ன ஆகிறது என்று பாருங்கள். தேடல் பக்கம் முழுவதும் தமிழில்!

நிரல் துண்டை உடனே அனுப்பிய நம் வெப்மாஸ்டர் ஜெயகாந்தனுக்கு ஒரு 'ஓ'

Tuesday, August 07, 2007

கிராமத்து தேநீர்க் கடை



பின்னிய கீற்றுக் கொட்டகையில்
மண்ணில் முளைத்த மரத்தூண்கள்

திண்ணை இருக்குது இருபுறம்
அதில் ஒட்டியிருக்குது விளம்பரம்

திட்டம் போட்ட கூட்டமில்லை
கட்டை மேசை மாநாடு

விடியல் கருக்கும் வேளையிலே
மாமன் மச்சான் உறவுகள்

புழுதி பரப்பும் பேருந்தில்
பருத்த செய்தித்தாள் வர

ஆளுக் கொன்றாய் பிரித்தெடுத்து ...

அருந்தத் தேநீர் சிலநேரம்
அரசியல் அலசப் பலநேரம்.

Sunday, July 29, 2007

பிடிவாதம்

அரண்டு புரண்டு அழுது சாதிப்பது குழந்தையின் பிடிவாதம்
படிப்பதைவிட வேறெதாவது செய்வது பிள்ளையின் பிடிவாதம்
பரிட்சைக்கு படி படி என்று பாட்டு பாடுவது தந்தையின் பிடிவாதம்
சாப்பிடு சாப்பிடு என்று சமைத்து தொந்தரவு செய்வது தாயின் பிடிவாதம்
கணனியில் பொழுதைக் கழிப்பேன் கடைக்கு வரமாட்டேன் என்று கணவனின் பிடிவாதம்
கோடி கொடுத்தாலும் கொல்லையில் புல் வெட்ட மாட்டேன் என்று மனைவியின் பிடிவாதம்
படத்துக்கு போகலாம் என்றால் சாக்கு சொல்வது நண்பனின் பிடிவாதம்
தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று தோழியின் பிடிவாதம்
காதலுக்கு பச்சைகொடி காட்டும்வரை கவிதைமழை பொழிவது காதலனின் பிடிவாதம்
கல்யாணம் செய்தால் காதலனுடந்தான் என்று காதலியின் பிடிவாதம்
பட்டு சட்டை போடவில்லையா என் பேராண்டி என்று தாத்தாவின் பிடிவாதம்
பொன்சங்கிலி பூட்டவில்லையா என் பேத்தி என்று பாட்டியின் பிடிவாதம்
மருமகள் சொல்வதை கேட்கவேண்டுமா என்று மாமியாரின் பிடிவாதம்
மாப்பிள்ளைக்கு தன் கையால் கூட பரிமாறவேண்டுமென்று மாமானாரின் பிடிவாதம்

பிடிவாதம், பிடிவாதம், பிடிவாதம் உலகில் இன்னும் பல பிடிவாதம்

Wednesday, July 25, 2007

மரங்கள்

சிறுவயதிலிருந்தே மரங்களின் மேல் ஒரு பாசம். தொடக்கப்பள்ளியின் மைதானம் ஒரு மாந்தோப்பு. அதற்கு குத்தகைதாரர், காவலாளி எல்லாம் சோவை என்றழைக்கப்பட்ட பெயருக்கேத்த மாதிரி ஒரு பெண்மணி. அவளுக்கு பயந்து கைக்கெட்டிய மாங்காய்களைக்கூட பறிக்கமாட்டோம். மாமரங்களின் நிழலில் நிறைய வகுப்புகள் நடக்கும்.

அடுத்த பள்ளியில் நிறைய தூங்குமூஞ்சி மரங்களும், வேப்பமரங்களும் ஒரு பெரிய ஆலமரமும். தூங்குமூஞ்சிமரத்தின் காய்ந்துபோன காய்களை வைத்து கத்திச்சண்டை போடுவோம். அந்த மரத்தடியில் உட்கார்ந்தால் தூக்கம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் ஒரே ஒரு டீச்சர்தான் தூங்குவார்கள். அவங்க பெயரே தூங்குமூஞ்சி டீச்சர். (ஆசிரியர்களின் பட்டப்பெயர் வைத்து நிறைய பதிவு எழுதலாம்). வேப்பமரம் எனக்குப் பிடித்த மரங்களில் ஒன்று. தூரத்தில் இருந்து பார்த்தால் மற்ற மரங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான வெளிர்ப் பச்சையில் பந்து பந்தாக தெரியும். நிறைய வேப்பம்பழங்களையும் துளிர்இலைகளையும் தின்றிருக்கிறேன் பள்ளிநாட்களில். ராஜபுதனத்து வறண்ட பிரதேசத்திலும் எங்கள் கல்லூரி ஒரு பாலைவனச்சோலையாக இருந்ததற்கும் காரணம் வேப்பமரங்கள்தாம். பள்ளியில் நாங்கள் நட்டுவைத்த சில அலங்காரக் கொன்னை மரங்கள் இன்று பெரிதாக வளர்ந்து பிரேயர் க்ரௌண்டிற்கு நிழல் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி.

வீட்டுப் பின்னாலிருந்த ஒரு வீட்டில் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களில் ஒன்று பார்க்க கம்பீரமாக ராஜதோரணையுடன் இருக்கும். தென்னைக்கென்ன ராஜ தோரணை என்றெல்லாம் கேட்காதீர்கள். சுற்றி கொஞ்சம் குட்டையான தென்னைகளுக்கு நடுவே உயரமாக அந்த தென்னைகளுக்கெல்லாம் ராஜா மாதிரி நிற்கும். வீட்டருகில் விளையாடும் மைதானத்தில் பூவரச மரங்களும், புளிய மரங்களும், புளியமரத்தைப்போலவே தோன்றும் வாதநாராயண மரங்களும் இருக்கும். வாதநாராயண மரத்தை ரொம்ப நாள் வாழ்நார் மரம் என்றுதான் தெரியும்.
பூவரச மர இலைகளை சுருட்டி பீப்பீ ஊதுவான் மாரிமுத்து. எனக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் காற்றுதான் வரும். மாரியை பார்த்து பொறாமையாக இருக்கும். இன்னொரு வீட்டில் இருந்த கொய்யா மரத்தில் மணிக்கணக்காக விளையாடுவோம். கொய்யாமரத்தின் கிளைகள் வலுவானவை. மெல்லிய கிளைகள் கூட எங்கள் கனத்தைத் தாங்கும்.
இளம் புளியங்காய்களையும் புளியங்கொழுந்துகளையும் ஞாபகத்துக்கு கொண்டுவர வேண்டாம்.

அமெரிக்கா வந்த பிறகு எனக்கு என்ன குறை என்றால், இங்கு நிறைய மரங்களின் இலைகள் முழுவதாகவே இல்லை. மேபிள் மரங்களும், ஓக் மரங்களும்தான் இங்கு நிறைய. அவற்றின் இலைகள் முழுமையாகவே இல்லை. ஒரு பூவரச இலைப்போலவோ ஆல, அரச இலை போலவோ முழுமையில்லை. அதனாலேயே எனக்கு அரச இலையை போல தோன்றும் ப்ராட்ஃபோர்ட் பியர் மரத்தைப் பிடிக்கும்.
அது சரி. முழுமையாக இல்லாமலே இலையுதிர்காலத்தில் இவ்வளவு இலை அள்ளும் வேலை. முழுதாக இருந்தால் என்னாவது என்கிறீர்களா?


இந்த ஊர் மரங்களிலும் சில வித்தியாசமான இலைகள் கொண்டவை இருக்கின்றன. ட்யூலிப் பாப்லரின் இலை சீராக கத்திரிகோல் கொண்டு வெட்டியது போலிருக்கும்.


ஒரே மரத்தில் மூன்று விதமான இலைகள் கொண்ட மரம் ஸாஸ்ஸஃப்ராஸ் மரம். இதைப்பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இதுவரை கண்ணில் படவில்லை.


சென்ற வருடம் சென்ற நியுயார்க் மிருகக்காட்சிசாலையில் நம்ப ஊர் தட்பவெப்பநிலையில் ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதில் ஒரு பெரிய வேப்பமரம்! நைஸாக ஒரு வேப்பிலையை பிய்த்து தின்றுகூட பார்த்தேன் உறுதிப்படுத்திக்கொள்ள. கண்ணில் நீர் கலங்கிவிட்டது. அதிலிருந்து எனக்கு இங்கே ரிச்மண்டில் வேப்பமரம் வளர்க்க வேண்டும் என்று ஒரு ஆசையில் ஆரம்பித்து வெறியாகியது. வலையில் மேய்ந்து பார்த்ததில் தெரிந்தது, அமெரிக்காவில் தென் ஃப்ளோரிடாவில் மட்டும்தான் வேப்பமரம் வெளியே வளர்க்கமுடியுமாம். அந்த ஆசையில் மண். அப்புறம் வீட்டுக்கு உள்ளே வளர்த்தால் என்ன என்று ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பித்தேன். இங்கே ஃளோரிடாவில் டாம்பா நகருக்கு அருகே ஒரு வேப்பம்பண்ணையே வைத்திருக்கிறார்கள். வேப்ப மரங்களை எப்படி வளர்ப்பது என்று சொல்லித் தருகிறார்கள். உங்களுக்கு வளர்க்க முடியாவிட்டால், அவர்களிடமிருந்து வேப்பங்குச்சி முதல் கொண்டு வேப்ப எண்ணெய், வேப்பங்கன்று எல்லாம் வாங்கலாம். வேப்பங்கொட்டைக்கு முப்பது நாள்தான் ஆயுளாம். அதைப் படித்ததிலிருந்து கோடையில் ஊருக்குப் போகும் சிலரிடம் மரத்திலிருந்து பறித்த வேப்பங்கொட்டை கொண்டு வாருங்களென்றேன். சிலர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்கள். சிலர் ஒரு மாதிரி பார்த்தார்கள். ஆனால் இன்னும் சிலர் கொண்டுவந்து கொடுத்து அவர்களும் வளர்த்து வருகிறார்கள். போன வருடம் ஆரம்பித்தது, குளிர்காலத்தில் உள்ளே வைத்திருந்து நிறைய போய் இப்போது ஒரு நான்கைந்து பிழைத்திருக்கின்றன. படம் போட்டால் நீங்கள் கண் போட்டு விடுவீர்கள் என்பதால் போடவில்லை. படத்தில் பார்த்தாலும் தெரியாது. அவ்வளவு சிறிசு. நம்ம ஊர் மரங்கள் பட்டியல் பார்க்கவேண்டுமா? இதோ!

ரிச்மண்டில் சில வருடங்களுக்கு முன்னால் சூறாவளி வீசியதில் நிறைய மரங்கள் விழுந்தன. அப்போது பார்த்தால் பெரிய பெரிய ஓக் மரங்களுக்கும் ஆணிவேரே இல்லை. கொஞ்சம் பரந்துவிரிந்த வேர்கொத்துதான் இருந்தது. ஒருசில வகைமரங்களுக்கு ஆணிவேர் கிடையாதாம். அதுதான் காற்றில் சுலபமாக விழுந்துவிட்டன. அப்படி விழுந்த மரத்தை தூக்கி நட்டுவைத்து என்னை ஆச்சரியப்படுத்தினார் நம் சேகர் வீரப்பன்.

Tuesday, July 24, 2007

வாழ்த்துச் சொல்ல வாங்க

ஒரு ரோட்டுல நடந்து போனா, நம்ம கண்ணுக்குக் என்ன தெரியும் ? ரோட்டுல போர நாலு பேரு தெரியும், அங்க ஓடிக்கிட்டிருக்கிற நாய் தெரியும். ஒரு ஓரமா பூச்செடி இருந்தா, ஓ பூச்செடி இருக்கா என்று ஒரு 'ஓ' வோடு நம் பார்வையோட்டம் நின்று கொள்ளும்.

எதுக்கு இத்தன built-up னு கேக்கறீங்களா ... மேலும் படிங்க !

நம் தமிழ் வலைப் பதிவர்கள் சமீபத்தில் ஒரு புகைப்படப் போட்டி நடத்தினார்கள். நாம் சாதாரணமாய்ப் பார்க்கும் ஒரு பூச்செடியை, அதைவிட, தனியாய் ஒரு பூவை, அதனுள் இருக்கும் details-ஐ macro உத்தியோடு நம்ம 'வெப் மாஸ்டர்' ஜெயகாந்தன் அவர்கள் க்ளிக்கி, அதற்கு மூன்றாம் பரிசும் வாங்கியிருக்காரு. மேலும் விபரங்களுக்கு இந்தச் சுட்டியை அழுத்துங்கள்.


கொசுறு: நாமலும் போட்டியில பங்கேத்துக்கிட்டோம்ல. ஜெய்-க்கு பரிசு கிடைக்கனும்னுட்டு சாதாரணமா ரெண்டு படம் அனுப்பிச்சோம். ஹி.ஹி. விழுந்தாலும் மண் ஒட்டுமா நமக்கெல்லாம் ;-) மேல்க்கண்ட் சுட்டியில், இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு போட்டிருக்கற படத்துல ரெண்டாவது 'போகஹண்டாஸ் ஏரி' நம்மதுங்க.

ஜெய்யின் பதிவிற்குச் சென்று உங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

அவரின் பரிசு பெற்ற படம்

Monday, July 23, 2007

Apurva Pande's fund-raiser for St.Jude's Hospital

Apurva Pande, a rising sophomore at Henrico High School, is inviting everyone to participate in the Swim-For-Life Marathon on Sunday August 5, 2007 at the Shady Grove YMCA, Glen Allen, VA. Here is the personal invitation from her seeking your participation.

You can learn more about sponsorship details here.

I encourage everyone to participate and contribute to this noble cause.

Sunday, July 22, 2007

கோடை பிக்னிக் 2007

ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் கோடை பிக்னிக் ஹென்ரைகோ கௌண்டியிலுள்ள டோரி பார்க்கில் நடைபெற்றது. பெரியவர்கள், சிறுவர்கள் அனைவரும் கிரிக்கெட், உறியடி, கயிற்றிழு(அதாங்க டக் ஆஃப் வார்) போட்டிகளில் கலந்து கொண்டு களித்தார்கள்.

இவற்றில் சில படங்களை இங்கே காணலாம். இதில் சில வீடியோக்களும் இருக்கின்றன.