Wednesday, October 04, 2006

கொலு பாக்க வாங்க - 2




இது எங்க வீட்டு கொலு.




கொலுவை அறிமுகப் படுத்தும் மஹிமாவிற்கு இந்த கொலுவில் ரொம்பப் பிடித்தது பாடுவதும், பார்கில் விளையாடுவதும்.
-முரளி.


கொலு பாக்க வாங்க - 1



இது சந்திரிகா சத்யநாரயணன் வீட்டு கொலு. சிறிய, ஆனால் செழிப்பான கொலு. ஜன்னலில் இருக்கும் செட்டியார் குடும்பம் கொலுவை மேற்பார்வை செய்வது நல்ல அழகு.
-முரளி.

55 வார்த்தைகளில் ஒரு சிறு கதை எழுத முடியுமா?

முடியும். என்கிறார் நம்ம ஊர் சுஜாதா மாமா(தாத்தான்னே சொல்லலாம்). அவர் சொல்லும் சான்று Steve Moss தொகுத்துள்ள 'The World's Shortest Stories ' என்ற புத்தகம். நீங்களும் முயற்சி செய்து பாருங்க, அப்பரமா நான் எழுதிய ரெண்டு கதைகளை இங்கே publish பண்றேன்.

- முரளி.

Monday, October 02, 2006

காந்தி கோவில்

குஷ்பு கோவில் எங்குள்ளது என்று கேட்டால் "டக்" என்று பதில் வருகிறது. ஆனால் காந்தி கோவில் எங்குள்ளது என்று கேட்டால் "எந்த காந்தி?" என்று தான் பதில் வருகிறதே ஏன்? நேரம்யா நேரம்.



ஆனால் இந்திய தேசப்பிதா காந்தியடிகளுக்கு கோவில் கட்டி கும்பிடுகிறார்கள். எங்கே என்று கேட்கிறீர்களா? இதோ இதைப்படியுங்கள்...

Sunday, October 01, 2006

அக்டோபர் மாத லொள்ளு மொழி(கள்)

ஆடத்தெரியாதவள் மேடை குறையென்றாள்
ஆடத்தெரிந்தவள் ஆடை(யை) குறையென்றாள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் அழகு மேக்கப்பில் தெரியும்

Saturday, September 30, 2006

எங்க ஊரு கொலு!

எங்க ஊருப்பக்கம் நடந்த கொலுவெல்லாம் பாக்கறீங்களா? வாங்க, முதல்ல மனாஸஸ் பக்கம் போகலாம்.















ரொம்ப நாள் ரிச்மண்டில் வசித்துவிட்டு இப்போது மனாஸஸில் இருக்கும் லஷ்மி கிருஷ்ணசாமியின் கொலு எப்பவுமே அமர்க்களமாக இருக்கும். இந்த முறையும் ஒன்பது படிகளுடன் கலக்கியிருந்தார்கள் லஷ்மியும், பிருந்தாவும்.














ரிச்மண்டுக்கு புதிதாக குடி வந்திருக்கிறார்கள் மீனா, சங்கரன் தம்பதியினர். புது ஊர், புது பள்ளிக்கூடம், வந்தவுடன் சென்னைப் பயணம் போன்ற களேபரங்களுக்கு இடையே தவறாமல் சிறிதாக ஒரு அழகான கொலு!

மறக்காமல் ஒரு பூங்காவும் உண்டு. சார்லட்ஸ்வில்லில் வசிக்கும் ப்ரியா, மணி மகாதேவன் குடும்பத்தினரின் கொலுவும் கொள்ளை அழகு.

இந்தக் கொலுவில் என்னை மிகவும் கவர்ந்தது தள்ளுவண்டி

காய்கறிக்காரி! என் மேலான பாதிக்கு பிடித்ததோ, காய்கறிக்காரியின் சுமாரான பாதி.(புரியலைன்னா ஆங்கிலத்துக்கு முழிபெயருங்க)

இன்னொரு சிறப்பம்சம் தசாவதாரங்களின் மேற்பார்வையில் அவர்களது மகனுடைய 'பயானிக்கில்'களின் அணிவகுப்பு.

"இந்த கொலு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா". அப்படின்னு நா கூவனும்னு பாக்கறேன். அதுக்கு தோதுவா எனக்கு உங்க வீட்டு கொலு படங்களை அனுப்புங்க(nagu இருக்கும் yahoo புள்ளி காம் - ஸ்பேமோதனை மேல் ஸ்பேமோதனை, போதுமடா ஸ்பாமி!).

Friday, September 29, 2006

ரிச்மண்ட் பழமொழிகள்

ஊரார் கணவரை ஊட்டி வளர்த்தால்
தன்கணவன் தொந்தி தானே வளரும்.

மேற்குக்கோடி கணிதம்:

ரோபியஸ் ரோட்டிலிருந்து ப்ராட் ஸ்ட்ரீட்டுக்கு இருக்கும் தூரத்தைவிட
ப்ராட் ஸ்ட்ரீட்டிலிருந்து ரோபியஸ் ரோட்டுக்கு இருக்கும் தூரம் மிக அதிகம்.
(புரியாதவர்கள் பழமொழி அருளிய 'அப்பனைப் பாடும் வாயால் பாடப்படாத'வரைக் கேட்கவும்)

டயட்மொழி: உப்பில்லாப் பண்டம் தொப்பையிலே.
(அ)டயட்மொழி: சப்பில்லாப் பண்டம் குப்பையிலே. (பரதேசியின் பின்னூட்டம்)

பங்குசந்தையில் போட்டாலும் அளந்து போடு

Monday, September 25, 2006

எங்கேயோ படித்த ஜோக்ஸ்

பேஷண்ட்: என்னால வாயை திறக்க முடியலே டாக்டர்
டாக்டர்: சரி சரி, உங்க மனைவியை கொஞ்சம் வெளியே வெயிட் பண்ண சொல்றேன்

டாக்டர்: இந்த ENT தொழிலையே விட்டுவிடலாம்னு தோணுது
நண்பர்: என்னாச்சு டாக்டர்?
டாக்டர்: பின்ன என்னங்க - துக்கம் தொண்டைய அடைக்குது. மாத்திரை ஏதானும் குடுங்கன்னு கேட்கிறான் ஒருத்தன்

பேஷண்ட்: டாக்டர் எனக்கு கால் வலி
டாக்டர்: அப்பவும் முழு பீஸ் (fees) தான்

நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் என்னவாகும்?
ட்ராபிக் ஜாம் (Traffic jam) ஆகும்

நபர் 1: அந்த ஆளு ஆனாலும் ரொம்ப முன் ஜாக்கிரதையான பேர்வழி. டிரைவர் கிட்ட மெதுவா போ மெதுவா போன்னு படுத்தறாரு
நபர் 2: ஏன் அதுனால என்ன? நல்லது தானே?
நபர் 1: டிரைவர் நடந்து போயிட்டிருக்காரு சார்
நபர் 2: ஓ!

பிச்சைக்காரன்: ஐயா! தர்மராஜா ஏதாச்சும் பணம் போடுய்யா
நபர்: யோவ் உன்னைப்பார்த்தா பிச்சைக்காரன் மாதிரி தெரியலியே
பிச்சைக்காரன்: அதுனால என்னங்க? இப்போ நான் உங்களை தர்மராஜான்னு சொல்லலியா?

இன்னும் வரும்..................

Friday, September 22, 2006

நவராத்திரி கொலு

"கொலு வைக்கறது எப்படி? "
"இது தெரியாதா என்ன? பொம்மைகளை கொலுப்படியில் அடுக்கி வைக்கணும்."

தங்கவேலுவின் 'அதான் எனக்குத் தெரியுமே' மாதிரி இருக்குல்ல? பிறந்த நாட்டை விட்டு வந்து கொலு வைப்பது எப்படி என்று மலைப்பவர்கள், நியுஸிலாந்தில் கொலு
வைத்து கொண்டாடும் துளசி கோபால் அவர்களின் உத்திகளைப் பாருங்கள். துளசியின் சென்ற வருஷத்து கொலு விவரத்தையும் படித்துப் பாருங்கள்.

துபாயில் கொலு வைத்து கொண்டாடுகிறது பினாத்தல் சுரேஷின் குடும்பம். "கொலுவிற்கு முன்னேற்பாடாக ஊரிலிருந்து பொம்மையே கொண்டு வராத காரணத்தால், இங்கேயே கிடைத்த சைனா பொம்மைகளை வைத்து மூன்று படி ஒப்பேற்றி இருக்கிறோம்." எந்த பொம்மை வைத்தால் என்ன? பொம்மைகள் பக்கத்தில் பெண்குழந்தைகள் பட்டு பாவாடை சட்டை போட்டு நிற்கும் அழகே அழகு.

தமிழோவியம்.காம் நடத்திய கொலுப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார், நியுஜெர்ஸியைச் சேர்ந்த டாக்டர் சுஜாதா. அந்த
நியுஜெர்ஸி கொலுவின் விவரம் இதோ.

பத்மஸ்ரி ஆத்துல வச்சிருக்கும் இன்னொரு கொலு விவரம் இங்கே. எந்த ஊர் என்று தெரியவில்லை.

நடமாடும் கொலு பற்றி எழுதும் எம்.கே. குமாரின் நினைவலைகள்! "எல்லோர் வீட்டிலும் இருக்கும் கொலுப்பொம்மைகள் என்ன செய்யும் சொல்லுங்கள்? அப்படியே அசையாமல் உக்காந்திருக்கும் இல்லையா? ஆனால் அவ்வீட்டில் ஒரு கொலு என்னவெல்லாம் செய்தது தெரியுமா? கவிதை மாதிரி சிரிக்குது.. அழகா அடி மேல அடி வெச்சி நடக்குது.. சுண்டல் தருது எனக்கு."

இலங்கை யாழ்ப்பாணத்தில் கொலு வைப்பதை விவரிக்கிறார் சந்திரலேகா. இலங்கையில் தொடங்கி கொலு வைப்பதின் முக்கியத்தையும் இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் நடக்கும் கொலுப் பண்டிகைகளையும் விவரித்து விட்டு யாழ்ப்பாணத்தில் தன் கொலு பிரயாணத்தை முடிக்கிறார் சந்திரலேகா.


சீரங்கம் கோவில் நவராத்திரி பற்றி சுவையாக விவரிக்கிறார் "சின்ன வயதில் நாரயணன் (என்னைவிட 5 வயது பெரியவன்) தாயார் கோவில் கொலு பற்றிச் சொல்லியிருக்கிறான், "ஐய, உங்காத்து கொலுவெல்லாம் ஒரு கொலுவா? சும்மா உங்காத்து உயரத்துக்கு தானே வெக்கறீங்க, தாயார் கோவில்ல வெப்பாங்க பாரு கொலு, ஐயோ! கோவில் எவ்வளவு உயரமோ, அவ்ளோ உயரம் வெப்பாங்க! எவ்வளவு படின்னு எண்ணிப் பாக்கவே முடியாது! நான் ஒவ்வொரு தடவையும் எண்ணப்பாப்பேன்; நடுவுல விட்டுப் போயிடும் (என்று கையை உதறுவான்). அப்புறம் யானை சூப்பரா நொண்டி அடிக்கும்.. 'ரெங்கா'ன்னு மூணுதடவை கத்தும்.."

ஜப்பானிய கொலுவான ஹினா மட்சுரியைப் பற்றி விவரிக்கிறார் ஜெயந்தி சங்கர்.

கொலு பற்றி கூகுளில் தேடினதில் கிடைத்தவை இவை.
இணையத்தில் தேடிக் கிடைத்தவற்றை வைத்துப் பார்த்தால் எனக்குத் தோன்றுவது...... இந்தியாவில் யாரும் கொலு வைப்பது போலத் தெரியவில்லையே!

கடைசி வரியைப் படித்துவிட்டு, பரதேசியார் என்னைக் காய்ச்சிவிட்டார் ஒரு மின்னஞ்சலில். சென்னையில் நடந்த கொலுக்கள் பற்றியும், மைலாப்பூர் டைம்ஸ்(?) நடத்திய கொலுப் போட்டியும் அமர்க்களம். இந்த தளத்தில் சென்ற இரண்டு ஆண்டுகள் நடந்த கொலுப் படங்கள் இருக்கின்றன. ரிச்மண்ட் வாசிகளே - சுண்டல் எல்லாம் செரிக்கும்முன் படங்களை அனுப்புங்கள்.

Sunday, September 17, 2006

உயிருள்ள சொற்றொடர்கள்

Sept 16, 2006
நடராஜமூர்த்தி சுப்ரமணியம்

உயிருள்ள சொற்றொடர்கள் - 'தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம்'

நம் இலக்கியங்கள், பாடல்கள், ஏன் சினிமாவில் கூட வரும் சில சொற்றொடர்கள் நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விடுகின்றன. கதைப்போக்கும், கதாபாத்திரங்கள் அச்சொற்களைப் பயன்படுத்திய நோக்கமும், அதன் விளைவுகளும், அந்தச் சொற்றொடருக்கு ஒரு உயிரையே அளித்து விடுகின்றன. உதாரணங்களாக, 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்', 'எடுக்கவோ, கோர்க்கவோ', 'சபாஷ், சரியான போட்டி' இவைகளைச் சொல்லலாம். இந்த வகையில் வருவது தான், சேக்கிழாரின் பெரிய புராணத்தில் கூறப்படும் 'தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம்'. அதன் விளக்கம் இதோ.

சிவனடியார்களில் சிறந்த 63 நாயன்மார்களின் சரிதம் பெரிய புராணம். அவர்களில் ஒருவர் திருநீலகண்ட நாயனார். மண் பாண்டங்கள் செய்து விற்று வாழ்க்கை நடத்தி வந்த அவர், சிவபெருமானிடத்திலும், சிவனடியார்களிடத்திலும் மிகுந்த அன்பு கொண்டு தொண்டு செய்து வந்தார். சிவனிடத்தில் இருந்த பற்றினால் எந்த ஒரு காரியம் செய்தாலும், 'திருநீலகண்டம்' என்று கூறிக்கொண்டே செய்வது அவர் வழக்கம். இதனாலேயே திருநீலகண்ட நாயனார் எனப் பெயரும் பெற்றார்.

நல்ல குணங்கள் நிறைவாகப் பெற்ற அவரிடத்தில் ஒரு குறை இருந்தது. தன் மனைவி அல்லாத மற்ற மாந்தர்களிடம் பழக்கம் கொண்டிருந்தார் (இன்பத் துறையில் எளியராய் - சேக்கிழார்). இத்தனைக்கும் அவர் மனைவி குணத்திலும் அழகிலும் மிகச் சிறந்தவர் (உருவில் திருவை ஒத்தார் - சேக்கிழார்). கணவரின் செய்கையால் மனம் நொந்த அவர், திருநீலகண்டரைத் தன்னைத் தொட அனுமதிக்கவேயில்லை. அவர்கள் வாழ்க்கை இவ்வாறு நடந்து வந்தது.

ஒரு நாள், இயற்கை வேகத்தால் உந்தப்பட்டு, திருநீலகண்டர் மனைவியைத் தொட முயன்றார். தூர விலகிய அவர் மனைவி, அது மட்டுமல்லாமல் 'தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம்' என்று கூறினார். இதற்கு 'திருநீலகண்டர் மீது ஆணை, எம்மைத் தொடாதீர்' என்று பொருள். அவர் சொல்ல நினைத்ததோ, 'என்னைத் தொடாதீர்' என்று. சொன்னதோ 'எம்மைத் தொடாதீர்' என்று நடைமுறை வழக்கப்படி பன்மையில் (நம்ம கிட்டே விளையாடாதே என்பது போல்). இது திருநீலகண்டருக்கு 'எம்மைத் தொடாதீர்' என்று பன்மையில் உரைத்ததாகத் தோன்றியது. 'திருநீலகண்டர் மீது ஆணை, என்னைப் போல் எந்த ஒரு மாதரையும் தொடாதீர்' என்ரு கூறியதாக அவர் பொருள் கொண்டார். அது இறைவனின் திருவிளையாடல் தான். சிவபெருமான் மீது ஆணையிட்டுக் கூறப்பட்ட இவ்வாக்கியத்திற்குக் கட்டுப்பட்ட அவர் 'இந்தக் கணம் முதல் உன்னை மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணையும் தொட மாட்டேன்' என்று உறுதி செய்து அதன் படியே வாழ்ந்தார். அவர் குணத்திலிருந்த மாசு நீங்கியது.

சிவபெருமானே ஒரு சிவனடியார் உருக்கொண்டு வந்து அவ்விருவர்களையும் மீண்டும் சேர்ந்து வாழ வகை செய்து அருளியது, திருநீலகண்டரின் அதன் பின் வரும் வரலாறு.

---------