Monday, August 21, 2006

இலக்கியப் போட்டி 2006

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி! ரிச்மண்ட் நகரவாசிகளின் தமிழ் புலமையை காண்பிக்க இன்னொரு சந்தர்ப்பம் இதோ வருகிறது, தமிழ் சங்கத்தின்

இலக்கியப் போட்டி 2006


பத்து வயதுக்குட்பட்ட இளையர்களுக்கு ஒரு போட்டியும், அதற்கும் மூத்த இளையர்களுக்கு(11-20) ஒரு போட்டியும், இருபது வயதை தாண்டியவர்களுக்கு ஒரு போட்டியும் நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு வயதுக்குரிய போட்டியிலும் இரண்டு விதமான படைப்புகள் சமர்ப்பிக்கலாம்: கவிதை, கதை அல்லது கட்டுரை(கவிதையில் சேர்க்கமுடியாத படைப்புகள்)

இளையர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். தமிழ் படைப்புகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்(தமிழ் சங்கம் நடத்தற போட்டியில அது கூட இல்லாட்டி எப்படி?). மூத்தவர்கள் மட்டும் தமிழிலேதான் எழுத வேண்டும். அப்படியும் பிடிவாதமாக ஆங்கிலத்தில் எழுதும் மூத்தவர்கள் தங்கள் படைப்புடன் தங்கள் பதின்ம(teen) வயதை நிருபிக்கும்வண்ணம் பிறந்தநாள் சான்றிதழ் இணைக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.

தமிழில் எழுதுபவர்கள் யுனிகோடு எழுத்துருவை உபயோகித்தால் வசதியாக இருக்கும்.தமிழில் தட்டச்சு செய்வது குறித்து இந்த வலைத்தளத்தில் கற்கலாம்(http://buhari.googlepages.com/anbudan.html#UnicodeTamil)

தமிழில் எழுத முடியாதவர்கள் அவர்களின் படைப்பின் பிம்பத்தை(scanned image)அனுப்பலாம். அல்லது பிரதியை நிர்வாகக் குழுவினரிடம் கொடுக்கலாம்.

உங்கள் படைப்புகள் எங்களுக்கு ரிச்மண்ட் நேரப்படி 2006 செப்டம்பர் 30 இரவு 12 க்குள் வந்து சேர வேண்டும். ஒவ்வொரு பிரிவில் முதல் இடம் பெறும் கவிதை மற்றும் கதைக்கு ஆயிரம் பொற்..... ஹி.. ஹி... மன்னிக்கவும். நிர்வாகக்குழுவில் ஜனநாயகம் வலுத்துவிட்டதால், இன்னும் பரிசு குறித்து சர்ச்சை நடந்து கொண்டு இருக்கிறது.

நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அவை உங்கள் சொந்தப் படைப்புகளாக இருக்கவேண்டும். மண்டபத்தில் யாரோ எழுதி வாங்கிக்கொண்டு வரலாம். எங்களுக்கு தெரியாமலிருக்க வேண்டும். அவ்வளவே.

உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் மூலம்
rts_lit@googlegroups.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தவறாமல் படைப்பாளியின் பெயர், வயது, மின்னஞ்சல் முகவரிகளை குறிப்பிடவும்.

சரியா?

அன்புடன்

ரிச்மண்ட் தமிழ் சங்கம்

பி.கு: உங்கள் படைப்புத் திறனை உதைத்து ஆரம்பிக்க(அதாங்க கிக் ஸ்டார்ட்) இந்த தளத்தைப் பார்க்கவும். http://richmondtamilsangam.blogspot.com



How to write in Tamil: http://buhari.googlepages.com/anbudan.html#UnicodeTamil

To convert Tscii/Tab files to unicode: http://www.suratha.com/atamil.htm

To write Tamil without installing any software: http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm (click on Thaminglish and type away!)

Sunday, August 20, 2006

லொள்ளு மொழிகள்

1. ஆலும் வேலும் பல்லுக்குறுதி
மாலும் ஸேலும் பெண்ணுக்குறுதி

2. கண்டதும் காதல் கட்டியதும் மோதல்

3. பார்த்தால் பசி தீரும் பசித்தால் பார் தேறுமா?

4. கடலோரக்கவிதைகள் காற்றில் பறந்ததால் கடலீரக்கவிதைகள்

5. அண்ணலும் நோக்கியா அவளும் நோக்கியா
வேறென்ன பாக்கியா?
போறாங்க ஹாப்பியா

6. தமிழுக்கு அமுதென்று பெயர் வைத்ததனால் தானோ தமிழை சிலர் கடித்துக் குதறுகிறார்கள்?

7. தாவணிக்கனவுகள் வளர்ந்ததால் புடவைக்கனவுகள் ஆயின

8. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல பாட்டுக்கு ஓ போடு

9. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்
நல்ல சூட்டுக்கு ஒரு டை போதும்

10. சின்ன மீனைப்போட்டு பெரிய மீனைப்பிடிக்கலாம்
ஆனால் பெரிய மீனைப்போட்டு சின்ன மீனைப்பிடிக்க முடியாது

11. குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப்போச்சு
அரசியல்வாதி பேச்சு தேர்தல் முடிஞ்சாப்போச்சு

12. கண்ணைக்கட்டி காட்டில் விடலாம்
ஆனால் காட்டைக்கட்டி கண்ணில் விடமுடியாது

13. அந்திமழை பொழிகிறது
தொந்தி வரை நனைகிறது


14. ஈ மெயில் எழுதி வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் ஸ்டாம்பு ஒட்டியே சாவார்

15. கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் - முன்பு
கள் ஆனாலும் கணவன் •புல் ஆனாலும் புருஷன் - பின்பு

16. “மௌஸ்” அமுக்கி வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் “மவுசு” இல்லாமல் சாவார்

ஒரு குடாக்கின் புலம்பல்

நான் பூபாளம் பாடும்போது நீ நீலாம்பரி பாடுகிறாய்
நான் சீரியல் சாப்பிடும்போது நீ ஸீரியல் பார்க்கிறாய்
நான் அலுவலகம் கிளம்பும்போது நீ அவுட்டிங் கிளம்புகிறாய்
நான் உணவருந்தும்போது நீ நித்திரையில் ஆழ்கிறாய்
நான் வீடு திரும்பும்போது நீ இருப்பதில்லையே
உனக்கும் எனக்கும் தான் என்ன பொருத்தம்!
நீ மனைவி நான் உன் கணவன்
நீ இருப்பதோ இந்தியாவில் நான் இருப்பதோ அமெரிக்காவில்
உனக்கோ வெகேஷன் எனக்கோ டென்ஷன்

Tuesday, August 15, 2006

வருக! வருக!!

அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் உள்ள ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் வலைப்பதிவுக்கு உங்களை வரவேற்கிறோம். இங்கு ரிச்மண்டின் தமிழ் சங்கத்து விழாக்கள் மற்றும் போட்டிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிச்மண்ட்வாழ் தமிழ் சங்கத்தினர் தங்கள் கதை, கவிதை போன்ற தமிழ் படைப்புகளை இந்த வலைப்பதிவில் காண விழைந்தால், யுனிகோடில் எழுதி எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். எங்கள் மின்னஞ்சல் முகவரி: richmondtamilsangam@yahoo.com
சிறார்கள் ஆங்கிலத்திலும் எழுதி எங்களுக்கு அனுப்பலாம்.

Welcome to Richmond Tamil Sangam's blog. You can read about Richmond Tamil Sangam activities here. If Richmond Tamil Sangam members would like to publish their writings in this blog site, please email us your work to richmondtamilsangam@yahoo.com. We prefer Tamil articles in unicode. We also welcome articles in English from kids.