உலகம், மக்கள் நலம் நாடிய மாபெரும் மன்னர்களை மட்டுமல்ல, வழிநெடுகிலும் கொடுங்கோலர்களையும் கண்டே வந்து கொண்டிருக்கிறது.
தம்
குடிமக்கள் இயல்பாகச் சந்திந்த பிணி- மூப்பு-சாவு எனும் துன்பங்களைத் தம்
இளம் வயதில் கண்டு, குழம்பிப் போய், பதவியைத் துறந்து, துன்பத்தில் இருந்து
விடுதலைக்கான விடைதேடச் சென்றார் புத்த பிரான். வசதியான அரண்மனை வாழ்வை,
அழகிய குடும்பத்தைப் பிரிந்து ஏன் என் குடிமக்கள் துன்பப்படுகிறார்கள்? ஏன்
என்னால் மன்னனாக எதும் செய்ய இயலவில்லை? இதற்கு விடை கண்டே தீர வேண்டும்
என தன்னைத்தானே வருத்தி, நீண்ட தேடலுக்குப் பின் மெய் அறிந்தார். மனித
வாழ்வே மகத்தானது, வெற்று ஆசைகள் அதனைக் குலைத்துப் போடுகிறது, ஆசையே
துன்பத்திற்குக் காரணம் என போதித்து மக்களை சிந்திக்கத் தூண்டினார்.
உலகம்
அவரையும் பார்த்தது, அவரைத் தொடர்ந்த அசோகர் போன்ற கருணையாளர்களையும்
ஆட்சியாளர்களாகக் கண்டது. மனித உயிர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களும்
உன்னதமானவையே என்று அறிவித்து மனித வரலாற்றில் விலங்குகளுக்கும்
மருத்துவமனைகளை அமைத்த மென்மனம் கொண்ட மனிதர் அவர்.
புத்தர், அசோகர்
போன்றோரை மட்டுமல்ல, ஆசையே உருவாகக் கொண்ட ஆட்சியாளர்களும் வந்த வண்ணமே
இருக்கிறார்கள். அவர்கள் கையில் சிக்கிய செங்கோல் வளைந்து கொடுங்கோலாக மாறி
மக்களை வதைக்கும் சூழல்களும் வரலாறு பார்த்துதான் வருகிறது. தமிழில்
"கொடு" என்ற சொல்லுக்கு "வளைதல்" என்று ஒரு பொருள் உண்டு. கடமை தவறி,
அறவழியில் இருந்து வளைந்து போன செங்கோல், வளைந்தகோல் = கொடு+கோல் =
கொடுங்கோல் என்றாகிறது.
கோல் என்பது ஆட்சி - குச்சி அல்ல.
நிற்க. தலைப்புக்கு வருவோம்.
ஐயன்
வள்ளுவர் இக்கொடுங்கோலர்களை நோக்கி அரசியல் எனும் இயலில் "கொடுங்கோன்மை"
என ஒரு முழு அதிகாரம் ஒதுக்கி எச்சரித்துத் தள்ளுகிறார்.
அந்த பத்து
குறட்பாக்களில் ஒன்று இயலாமையில் கண்ணீர் சிந்தும் குடிமக்களைக்
குறிக்கிறது. ஆட்சியாளர் பெரும் வலிமையோடு அதிகாரத்தில் அமர்ந்து
இருப்பவராக இருக்கலாம். எதிர்க் குரல்கள் ஓசையின்றி அமைதியாக்கப்படலாம்.
குடிமக்கள் எதுவும் செய்ய முடியாத இயலாமைச் சூழலில் தள்ளப்பட்டிருக்கலாம்.
ஆனால், அந்தக் குடிமக்கள் ஆற்ற முடியாத துன்பத்தில் சிந்தும் கண்ணீர்,
சிறுகச் சிறுகவேனும் ஆட்சியாளரின் வலிமை, அதிகாரம், செல்வாக்கு என எல்லா
செல்வத்தையும் தேய்த்து அழிக்கும் கருவியாகிவிடும் என
எச்சரிக்கை ஒலிக்கும் குறள்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
அல்லல்பட்டு = துன்பப்பட்டு
ஆற்றாது = தாள முடியாமல்
அழுத கண்ணீர் அன்றே = அழுத கண்ணீர் அல்லவோ
செய்வத்தை = ஆட்சி, அதிகாரம் எனும் செல்வத்தை
தேய்க்கும் = சிறுகச் சிறுக அழிக்கும்
படை = கருவி
எந்த
ஆட்சியாளரும் எவ்வளவு வலிமையானவராகத் தோற்றமளித்தாலும், குடிமக்கள்
கண்ணீர் சிந்தும்படி ஆண்டால் அவரது எல்லா செல்வமும் தேய்ந்து அழிந்து
போகும் என எந்த நாட்டுக்கும், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் படியாக
ஒலிக்கும் எச்சரிக்கை மணிக் குறள்.