உலகம் எங்கும் என்றும் மாறாத மனித உணர்வுகளுள் ஒன்று பிரிவுத்துயர். இன்று
என்னதான் தொலைத்தொடர்புகள் வளர்ந்துவிட்ட போதிலும் அன்புக்குரியவர் அருகில்
இல்லை என்ற துயரம் எல்லோருக்கும் நேர்வது.
காலையில் வேலைக்குப்
போகும் போது செல்ல மகள்/ன் முகம் வாடிப்போவது முதற்கொண்டு நிரந்தரமாக
இறப்பு பிரித்துக் கொண்டு போகும் போது ஏற்படும் துயரம் வரை நாம்
சந்திக்கும் பிரிவுகள் வலிமிகுந்ததே.
இறுதிப் பிரிவு ஒரு வகை
வலியெனில் தற்காலிக பிரிவுகள் இன்னொரு வகை. எதிர்பார்த்து நடக்கும்
பிரிவுகளான நண்பர்கள் படிப்பு காரணமாக, அல்லது பெற்றோருடன் வேறு ஊருக்கு
மாற்றலாகிப்போவது என இளவயது பிரிவுகள்; பின் நடுவயதில் மகள்/ன் கல்லூரி,
மணம், பணிநிமித்தம் காரணமாக வீட்டைவிட்டு கிளம்பும் போது ஏற்படும்
பிரிவுகள் என பிரிவு எப்போதும் கண்ணீர் நிரம்பியது. யோசித்துப் பார்த்தால்
மருத்துவமனைகளை விட பேருந்து, தொடர்வண்டி, வானூர்தி நிலையங்கள் காணும்
கண்ணீர் மிக அதிகம்.
அது கிடக்கட்டும். காதல் ஏற்படுத்தும் பிரிவுத் துயர் பற்றி பார்ப்போம். அது சற்று சிறப்புற்றதுதான். காதல்
துணையின் பிரிவு தவிக்கவிடும். வெளியில் யாரிடமும் சொல்லி ஆறுதல் தேட கூட
முடியாது. தோழியோ தோழனோ இருப்பின் அவரிடம் மட்டும் சொல்லிப் புலம்பலாம்.
இன்றைய தொலைத்தொடர்புக் கருவிகள் இல்லாத முற்கால காதலர்களை நினைத்துப்
பாருங்கள். தென்றலையும் மேகத்தையும் தூதுவிட்டுக் கொண்டு காத்திருப்பதைத்
தவிர வேறு வழியில்லை.
அப்படியான ஒரு பெண், பிரிவின் வலி தாளாது தவிக்கும் ஒரு காட்சியை திருக்குறளில் அமைத்திருக்கிறார் ஐயன்.
திருக்குறளை
நாடக வடிவமாகவும் பார்க்கலாம், ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு காட்சியாகவே
எழுதப்பட்டிருகிறது - அதிலும் குறிப்பாக காமத்துப்பால் நாடகக்
காட்சிகளேதான் என்பார்கள். அந்தப் கோணத்தைப் (perspective) பற்றி இன்னொரு
நாளில் பேசுவோம். இன்று பிரிவுத்துயர் கொண்டு வாடிப்போய் இருக்கும் தலைவி
தன் தோழியிடம் பேசுவது/புலம்புவது போன்ற ஒரு அதிகாரம் படர்மெலிந்திரங்கல்
[படர் மெலிந்து இரங்கல்]. இதில் இருந்து ஒரு குறளையும் அதன் அசத்தும்
கற்பனையும் பார்க்கலாம்.
காட்சி இதுதான்:
பயல் இவளை வீட்டில்
விட்டுவிட்டு பணி நிமித்தமாகவோ, வேறு காரணமாகவோ எங்கேயோ போய் இருக்கிறான்.
போனவன் பற்றி தகவல் ஏதுமில்லை. அம்மிணி பசலை நோய் கொண்டு வழி மேல்
விழிகொண்டு காத்திருக்கிறாள். சில பல நாட்களும் போய்விட்டது.
புலம்புகிறாள். கண்ணீர் சிந்துகிறாள்.
ஏதேதோ சொல்லிப்
புலம்புகிறாள். தவிக்க விட்டுட்டு போயிருக்கானே, வரட்டும் பெரிய சண்டை
போடுகிறேன் என்கிறாள். உடனேயே, அய்யோ நட்போடு இருக்கும் போதே இவ்வளவு
துன்பம் தருகிறானே பகையாகிப் போனால் சமாளிக்கவே முடியாதே என்றும் சொல்லிக்
கொள்கிறாள்.
தான் இப்படி அவனை நினைத்து வருந்துவது யாருக்கும்
தெரியாமல் இருக்கும்படி நடந்துகொள்ளலாம் என்றால் இந்தக் காதல் நோய் மறைக்க
மறைக்க ஊற்று போல் பெருகுதே, நீ சம்பாதித்து கிழித்தவரை போதும், என்னப்
பார்க்க வாடா என்று தூது விடலாம் என்றாலும் என் நாணம் தடுக்கிறது. நாணமும்
காதலும் மாறிமாறி வந்து எதும் செய்ய விடாது பாடாய்ப் படுத்துகிறது. அவன்
இருக்கும் இடத்திற்கு என் மனம் போவது போல் என் உடலும் போக முடிந்தால்
இப்படி கண்ணீர் வெள்ளத்தில் மிதக்க மாட்டேனே என்று அழுகிறாள்.
அந்த அதிகாரதில் வரும் ஒரு குறள்:
கொடியார் கொடுமையின் தாம்கொடியது இந்நாள்
நெடிய கழியும் இரா
கொடியார் = தன்னைத் தவிக்க விட்டு போயிருக்கும் காதலனைச் சொல்கிறாள். தனிமைக் கொடுமையில் தள்ளிய கொடுமைக்காரன்.
கொடுமையின் = அவன் ஏற்படுத்தியிருக்கும் கொடுமையை விட
தாம் கொடிது = இவை கொடுமையாக இருக்கிறது
நெடிய கழியும் இரா = நீண்டு, நெடியதாக மெதுவாகக் கழியும் இரவுகள்.
இப்படிப் படிக்கலாம்:
இப்போதெல்லாம் நெடிய கழியும் இரவுகள் அந்தக் கொடுமைக்காரன் செய்யும் கொடுமையை விட கொடிதாக இருக்கிறது.
இப்போது
அவன் அருகில் இல்லாத நாட்களில் உறக்கம் இன்றி இரவுகள் நீண்டு போகிறது.
இதுவே பெரும் கொடுமையாக இருக்கிறது - எவ்வளவு துன்பம் என்றால் அந்தக்
கொடுமைக்காரன் ஏற்படுத்தியிருக்கும் கொடுமையைக் காட்டிலும் பெரிதாக
இருக்கிறது.
கொடுமைக்காரா என்று அவனுக்கு ஒரு திட்டு, அவன் அருகில்
இல்லாதது கொடுமையாக இருக்கு என்ற புலம்பல், அவன் நினைவால் நீண்டு போகும்
உறக்கமற்ற இரவு மேற்சொன்ன கொடுமையை விட, துன்பமாக இருக்கிறது என்ற
குற்றச்சாட்டு - எல்லாம் ஏழே சொற்களில்.
தளை தட்டாது, வெண்பா வடிவம் கெடாது, அழகுணர்ச்சி போகாது படிப்பவரை வாய்பிளக்கச் செய்யும் ஐயனின் மொழியாளுமை.
அதிகாரம் முழுதும் படிக்கையில் அப்பெண்ணின் மீது பரிதாபம் மட்டுமல்ல நமக்கே கண்ணீர் முட்டும்படி எழுதியிருக்கிறார்.
உண்மையில், தோண்டத் தோண்ட வியப்பூறும் மணற்கேணி திருக்குறள்தான்.