ரஜினிகாந்த் அறிவிப்பின் சாராம்சமும் நம் எண்ணங்களும்
- அரசியலும் அரசியல்வாதிகளும் சுயநலமாகி விட்டதாகவும் அக்கறையின்மையின் உச்சக்கட்டமாகி விட்டதாகவும் மாற்றம் கண்டிப்பாகத் தேவையாகி விட்டதாகவும் கூறுகிறார் - அரசியல்வாதிகள் எப்போது பொது நலம் கருதி இருந்தார்கள்? மாற்றம் தேவை என்று நாம் நினைக்க ஆரம்பித்து அதிக நாட்கள் ஆகி விட்டன. ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் செயலின்மையும் ரஜினிகாந்திற்கு இப்போது ஒரு முகாந்திரம் கொடுத்திருக்கிறது. அதுவே அவரது அரசியல் பிரவேசத்தின் ஆர்வத்திற்கு மூல காரணமாக நாம் கருதுகிறோம்.
- 1996-ல் பதவி என்னிடம் இருந்தது, உதறிவிட்டேன் என்கிறார் - சற்று ஆர்வக் கோளாறான கருத்து. ஒரு கட்சி அமைக்கும் வாய்ப்பு அவரிடம் இருந்தது, ஒரு வேளை ஜெயித்திருக்கலாம் என்பதே அதிகப்படியான உண்மை
- ஆன்மிக அரசியல் - ரஜினிகாந்த் பகவத் கீதையை வைத்து ஆரம்பித்ததாலும், ஆன்மிகம் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியதாலும், பல பிஜேபி மற்றும் இந்து மதம் சார்ந்த ஆர்வலர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் அவரது பொதுவானஆதரவு குறையும் ஒரு அபாயம் உண்டாகி உள்ளது.
- கட்சியின் ஆரம்பம் - கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டிஇட மூன்று வருடங்களுக்கு மேல் இருப்பதாகவும் அது வரை கட்சி உருவாகி பலப்படுத்தும் முயற்சி உண்டாகும் என்கிறார். அவருடைய அடுத்த கட்டத் தலைவர்கள் யாரும் இது வரை இல்லை. அதிக கெட்ட பெயர் இல்லாத மற்றும் ஓரளவுக்கு வயது மீதம் உள்ள சில அரசியல் புள்ளிகளை வைத்து அவர் தொடங்கலாம். ஆனால், NTR போல் அதிரடி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத ஒரு காலத்திற்கு நாம் வந்து விட்டோம் என்று அவர் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் 1000தொண்டர்களும் 10 கோடியும் இல்லாமல் எந்தத் தொகுதியிலும் போட்டிஇட முடியாது என்பது தெள்ளத் தெளிவு. பணம் இருக்கலாம், அல்லது திரட்டலாம், ஆனால் மாற்றம் வந்தே தீர வேண்டும் என்ற ஒரு கடுமையான அலை இல்லாத பட்சத்தில், தனியாக நின்றால் ஒரு சில தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் வாய்ப்பை நாம் கணிக்கவில்லை
- காவலர்கள் - அவர் கட்சித் தொண்டர்கள் அநீதியைத் தட்டிக் கேட்கும் காவலர்களாக இருக்க வேண்டும் என்கிறார். ஷங்கரின் அடுத்த படத்திற்கு நல்ல கதையாக அமையலாம், அல்லது ஊக்குவிக்கும் முயற்சி என்று கருதுவோம். பண பலமும் குண்டர் படையும் உள்ள பெரிய கட்சிகளோடு திரை அரங்கில் விசில் அடிக்கும் எளிய ரசிகர்கள் மோதும் ஒரு சூழ்நிலையை நாம் திரைப்படங்கள் தவிர எங்கும் பார்க்க முடியும் என்று தோணவில்லை
தலைமையே இல்லாமல் தறிகெட்டு நடக்கும் ஒரு ஆட்சியின் நடுவில், வெறும் பணத்தை மட்டுமே வைத்து ஒரு சுயேட்சை வேட்பாளர் இடைத்தேர்தலில் வென்றிருக்கும் காலகட்டத்தில், ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு மக்களுக்கு ஒரு டானிக் ஆகும். அவருக்கு ஒட்டு போடுகிறோமோ இல்லையோ, எல்லாக் கட்சிகளின் தரத்தை ஆராய்ந்து ஒரு முடிவெடுக்க வேண்டிய ஒரு ஆர்வத்தை அவர் உருவாக்கி இருக்கிறார்.
அவரின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத் தக்கது. அவரால் முடியா விட்டாலும், வேறு ஒரு நல்ல முடிவையாவது மக்கள் எடுக்கும் ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கி இருக்கிறார்.
வாதங்களும் ஊகங்களும் மட்டுமே நம்மால் முடியும். மக்கள் என்ன செய்வார்கள் என்பது அவர் நம்பும் ஆண்டவனுக்கே வெளிச்சம்