Sunday, October 17, 2010

கொலு 2010

கடந்த சில ஆண்டுகளாக கொலு சுற்றுலா போக முடியவில்லை. இந்த ஆண்டுதான் எந்த சாரண முகாமும் போகாமல் ஊரில் இருந்ததால், சுண்டல் வேட்டைக்கு கிளம்பினேன். ஆரம்பித்தது பார்கவி-கணேஷ் தம்பதியினர் வீட்டில்.கொலு என்றால் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற மனப்பான்மை ஒன்று நிலவுகிறது. அதற்காக கொலுவுக்கு நிஜமாக வேலை செய்தவர்களை வைத்து படம் பிடிக்கவேண்டும் என்று ஒரு திட்டம். அதனால் நம் நண்பர் ஆனைமுகனை நிற்க வைத்து ஒரு படம். என்ன பெருமையாக நிற்கிறார் பாருங்க...


கணேஷை மட்டும் ஏன் என்று அவர் மகனுடன்...
 பச்சை யந்திரன் தனியாக... இந்த கொலுவில் எனக்கு மிகவும் பிடித்த பொம்மை கருடனின் தோள்களில் அமர்ந்திருக்கும் மஹாவிஷ்ணு.
 இந்த திருமண காட்சியும் அருமை.
 நம் ஊரில் கிரிக்கெட் விளையாடும் பிள்ளையார், டென்னிஸ் ஆடும் பிள்ளையார் பொம்ம்மை பார்த்திருப்பீர்கள். இவர்கள் வீட்டில் சீனத்து பிள்ளையார் பொம்ம்மைகள் பார்த்தேன். இந்தப் படங்களில் தேடாதீர்கள். படம் பிடிக்கவில்லை :-)


 அடுத்ததாக திருவாசகம் மீனா சங்கரன் வீட்டு கொலு. உடல் சரியில்லாவிட்டாலும் அழகாக சிரிக்கும் அவர்கள் மகளுடன் மீனா.

 ரிச்மண்டில் இதுவரை காணாத கிரிக்கெட் மைதான அமைப்பு. ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்திய அணி. ஆனால் மட்டையை காலுக்குப் பின்னால் ஒளித்து வைத்து விளையாடி பார்த்ததில்லை.


 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தது தூணைப் பிளந்து வெளியே வரும் நரசிம்மர். பிளந்திருக்கும் தூணைப் பார்த்தால் எனக்கு என்னவோ நினைவுக்கு வருவது பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளச்செங்கூர் வாய் நாரைதான் :-)
 மேல்தட்டில் கஜேந்திர மோட்சமும் உண்டு.

 அடுத்ததாக சித்ரா-ரவி வீட்டு கொலு. வேறு எந்த வீட்டிலும் பார்க்காத காட்சி இங்கே - வேஷ்டியில் ரவி!

 கொலு பொம்மைகள் அழகா, இந்தப் பெண்கள் அழகா...
 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தவை அஷ்டலஷ்மிகளும் பிள்ளையார் வாத்தியக் கோஷ்டியும்.




 அடுத்த வீடும் சித்ரா-ரவி வீடுதான் :-) ஒரு சிறிய அழகான கொலு!
இந்த கொலுவி எனக்குப் பிடித்தது கொலுவின் முன்னே சித்ரா வரைந்திருந்த பெருமாள் ரங்கோலி.



 அடுததது லாவண்யா ராம்கி வீட்டு கொலு.






 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தது பால்குடத்தைக் கவிழ்க்கும் கண்ணன். மற்றவர்களைக் கவர்ந்தது ஒளிரும் நீலமயில்கள்.
 அடுத்ததாக மாலதி என்கின்ற சாவித்ரி - முரளி  வீட்டு பிரம்மாண்டமான கொலு.




 நான் வீட்டுக்குள் நுழையும்போது ஓடிக்கொண்டிருந்த ரயில்.

 இந்தக் கொலுவில் எனக்குப் பிடித்தது மரத்தால் செய்த யானை அம்பாரி.
 கடைசியாக பவானி-கண்ணன் வீட்டுக் கொலு.


 இந்தக் கொலுவில் எனக்குப் பிடித்தது தசாவதார பொம்மைகள்.

இவ்வளவு கொலு படம் காட்டிவிட்டு, பாட்டில்லாவிட்டால் எப்படி? கடைசியாக ஒரு பாட்டு...

இவ்வளவு பொம்மைகள் பார்த்துவிட்டு எனக்கு ஊர் ஞாபகம் வந்துவிட்டது. உங்களுக்கெல்லாம் இப்போது பண்ருட்டியென்றால் பலாப்பழம்தான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் பொம்மைகளுக்கு பெயர் போனது பண்ருட்டி. முத்தையர் பள்ளியில் படிக்கும்போது சுற்றுவட்டார வீதிகளில் நிறைய பொம்மைகள் செய்து வெளியே காயவைத்திருப்பார்கள். சப்பாணி செட்டி தெரு முழுக்க பொம்மைகள் நிற்கும். தெருவில் ஜாதிப்பெயர்கள் நீங்கி பொம்மைகளும் அகன்று இப்போது வெறும் சப்பாணி ஆகிவிட்டது அந்தத் தெரு.

பல வீடுகள் இந்தப் பட்டியலில் நீங்கிவிட்டன. இந்த வாரம் பிள்ளையாண்டான்களுக்கு சாரதித்துவம் செய்ததால் சில வீடுகளுக்கு என்னால் போகமுடியவில்லை. போனவள் காமிரா கொண்டுபோகவில்லை. அதனால் விட்டுப்போன கொலுக்களுக்காக பொறுத்துக் கொள்ளுங்கள்.


Wednesday, October 06, 2010

ஒரு பாக்யராஜ் ரசிகனின் கதை

"கன்னி பருவத்திலே" என்னோட நண்பன் கனகராஜ் "தாவணி கனவுகள்" கண்டு கொண்டு இருந்த சில பொண்ணுங்க கிட்டே "டார்லிங் டார்லிங் டார்லிங்" சொல்லி, அவங்களை முதல்ல "வீட்ல விசேஷங்க"-ன்னு சொல்ல வச்சு பிறகு "ஆராரோ ஆரிராரோ" பாட வைக்கலாம்னு ஆசைப்பட்டு பல தடவ "வேட்டிய மடிச்சு கட்டி"க்கிட்டு போயிருந்தாலும், எப்போதும் அவனுக்கு முதல்ல கிடக்கிற பதில் "விடியும் வரை காத்திரு", அப்புறம் "இன்று போய் நாளை வா". 

காலேஜில NSS கேம்ப்-ன் கடைசி “அந்த 7 நாட்களில்” கனக்ஸ் யாரு கிட்டயோ  காதல்ல “புதிய வார்ப்புகள்” உருவாக்க முயற்சி  பண்ணி அதுக்கு அவங்க குடுத்த  டோஸ்-ல அவனோட  ஜொள்ளு “தூறல் நின்னு போச்சு".  கொஞ்சம் "பொய் சாட்சி" செட்டப் பண்ணியும் பிரயோஜனம் இல்ல.  இதுல நொந்து போன கனக்ஸ் "சுவரில்லா  சித்திரங்கள்" எப்படி போடறது,  "ஒரு கை ஓசை" -ல எவ்வளவு நாள்தான் ஓட்டறது,  நமக்கு "சுந்தர காண்டம் " சரிப்படாதுன்னு முடிவுக்கு வந்துட்டான். அத எல்லாம் நெனச்சு அப்பப்போ "மௌன கீதங்கள்" பாடுவான். 

"ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி"- யை "முந்தானை முடிச்சு" பண்ணின பிறகு "இது நம்ம ஆளு"ன்னு பேசாம சௌதியில "ராசுக்குட்டி" போல இருக்கான் "எங்க சின்ன ராசா". அங்கே "சின்ன வீடு" தேடி  "பாமா ருக்மணி" வீட்டுக்கு போனா "அவசர போலீஸ் 100 " கூப்பிட்டு உள்ளே தள்ளிருவாங்கல்லே. கல்யாணத்தப்போ என்னதான் "பவனு பவுனுதான்" எல்லாம் வேண்டாம்னு சொன்னாலும் அவன் ஒரு "ஞான பழம்"னு யாரும் நெனச்சிராதீங்க.

Saturday, October 02, 2010

பித்தனின் கிறுக்கல்கள் – 39

சாமியார் உஷார்:
சில காலங்களுக்கு முன்பு செல்வம் சித்தர் என்ற டுபாக்கூர் சாமியாரைப் பற்றி கிறுக்கியது நினைவிருக்கலாம்

சமீபத்தில் இவரைப் பற்றி எனது நண்பன் சொல்லி இவர் மீண்டும் வெளியே தலைகாட்ட ஆரம்பித்து விட்டாரே இப்போ என்ன செய்வாய் என்று கிண்டலடிக்க, இந்தியாவை விட்டு இங்கு புலம் பெயர்ந்து நான்கு கால் ப்ராணியை விட கேவலமாக நடத்தப் பட்டும் (வீட்டில் இல்லை, அலுவலகத்தில்) இங்கு விடாப்பிடியாக வாழும் எம்மைப் பார்த்து இப்படி சொல்லிவிட்டானே என்று கவலைப் படலாமா என்று யோசிக்கலாமா என்று பூவா தலையா போட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கலாம் என்று இருக்கும் போது, கை வசம் ஒரு டாலர் செப்புக் காசு (அது செப்பா இல்லை வேறு ஏதாவதா, நாகு பதில் ப்ளீஸ்) இல்லாததால் தள்ளிப் போட்டு விட்டேன். அப்பா! எப்படியெல்லாம் ஜல்லியடிக்க வேண்டியிருக்கிறது.

..................

முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

Friday, September 24, 2010

எந்திரன் திரைப்படம்: ரிச்மண்ட்'ல் - Enthiran Premiere Show in Richmond!!!

Enthiran Movie will be Screened in Richmond!!

ரிச்மண்ட் தமிழ் சங்கம் எந்திரன் திரைப்படத்தை ரிச்மண்ட்'ல் திரையிடவுள்ளது!!








Tickets will be available online on 09/25/10 at  
Fandango.com  or Carmike.com or 

You can purchase At the Box Office.





For Other Details Contact: 804-502-8771 Or 804-502-8068 Or 804-303-6416

Wednesday, September 08, 2010

பித்தனின் கிறுக்கல்கள் - 38

பல மாதங்களுக்குப் பிறகு கிறுக்கத் துவங்குவதால் சமீபத்தில் நடந்த சில தமாஷ்களைப் பற்றி எழுதி இந்தப் பதிவை சற்று லைட்டாக வைக்கலாம் என்றிருக்கிறேன்.

டமாஸ் நெ.1:

உலகச் செம்மொழி மாநாடு:

இது ஒரு கால விரயம் என்றும், பண விரயம் என்றும் பலர் எழுதி குவித்துவிட்டார்கள். இந்த மாநாட்டினால் என்ன பயன் என்று எதற்காக இப்படி எல்லோரும் அடித்துக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இதில் அவரை கூப்பிடவில்லை, இவரைக் கூப்பிடவில்லை, அவருக்கு மரியாதை செய்யவில்லை, இவருக்கு மரியாதை செய்யவில்லை என்று புகார்கள் வேறு வந்து கொண்டேயிருக்கிறது. நடந்தது ஒரு அதிகார மமதையில் இருக்கும் ஒரு கழகத்தலைவரின் சுயதம்பட்டத்திற்காக நடத்தப் பட்ட கூத்து. பக்க வாத்தியமாக பல விதூஷகர்களை வைத்து நட்த்தப்பட்ட ஒரு டமாஸ், இதில் காரண காரியத்தை தேடுவதுதான் முதல் கால விரயம். இந்த டமாஸ்களையும் மீறி ஒரு சில நல்ல தமிழ் ஆய்வுகளும், சில கருத்தரங்கங்களும் நடந்தது என்றும் தெரியவருகிறது. இவைகள் இப்படி ஒரு டமாஸுக்காக காத்திருக்காமல் வருடந்தோரும் நடந்து வருகிறது என்பதும் சில வலைப் பதிவிலிருந்து தெரியவருகிறது.

முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Wednesday, June 23, 2010

வாழ்க தமிழ்!

இன்று செம்மொழி மாநாடு ஆரம்பம்
ஏதாவது செய்ய வேண்டுமே?
உறங்கிய சிங்கம்  (சொல்லவே இல்லை...)  சிலிர்த்து எழுந்தது..
நாமும் பங்களிக்க வேண்டாமா?
கவிதையா? கட்டுரையா? கதையா
என்ன செய்யலாம்?
வரலாற்று நிகழ்வில் நம் பதிவு - நல்ல வாய்ப்பு..
நழுவ விடலாமா?
கவிதையா? கட்டுரையா? கதையா
முடிவு செய்வதற்குள் மாநாடு தொடங்கி.... முதல் நாள் முடிந்தது!
கருவை முடிவு செய்து... கருத்தாக்கம் செய்துவிடலாம்
அவசரம் வேண்டாம் - இன்னும் மூன்று நாட்கள் உள்ளன...
எப்படியும் எழுதிவிடுவேன்
அதுவரை...
மகிழ்ச்சி தொடரட்டும்!
சோகம் வேண்டாம் !!

(சென்னையிலிருந்து என் அண்ணன் முகுந்தன் எழுதியது)

Monday, June 07, 2010

வீண் வழக்குகள், வெட்டி செலவுகள்

சென்ற 27-5-2010 தினமலர் பத்திரிகையில் ஒரு செய்தி அதன் சாரம் இதுதான்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் கருட வாகனம் புறப்படும் தினத்தன்று கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள்(ஒரு தென்கலை வைணவ ஆச்சாரியார்) சன்னதியில் கருட வாகனத்தை நிறுத்தி அவருக்கு (மணவாள மாமுனிக்கு ) சடாரி மரியாதை நடைபெறுகிறது. இந்த வழக்கம் நீண்ட நாட்களாக அமுலில் உள்ளது.
இந்த சடாரி மரியாதை மனவாள மாமுனிக்கு செய்யக்கூடாது, அது வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு விரோதமானது என்று கூறி காஞ்சிபுர நீதிமன்றத்தில் வடகலை பிரிவை சேர்ந்த சீனிவாசராகவன் என்பவர் 1991-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார்.
காஞ்சிபுர நீதிமன்றம் வழக்கை விசாரித்துவிட்டு அவருடைய மனுவை தள்ளுபடி செய்தது. . அவரும் வடகலை வைஷ்ணவ சம்பிரதாய சபை என்ற அமைப்பும் சேர்ந்து காஞ்சிபுர நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மேல்முறையீடு செய்தனர். உயர்நீதி மன்றமும் இவர்களுடைய மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உடனே அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தனர்.

19 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியிருக்கிறது. .மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது மட்டும் அல்லாமல் கீழ் நீதிமன்றத்து தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு கூறியிருக்கிறது.

மணவாள மாமுனிக்கு சடாரி மரியாதை செய்யும் வழக்கம் சரியானதே என்றும் அது எந்த வகையிலும் வைணவ சம்பிரதாயத்துக்கு எதிரானது அல்ல என்றும் உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பில் கூறியிருக்கிறது. மேலும் வழக்காடியவர்களின் குறுகிய நோக்கத்தையும் தீர்ப்பில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

மணவாளமாமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியர் 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தென்கலை வைணவ பிரிவின் முக்கிய ஆசாரியர்களில் ஒருவர்.

இன்றும் வைணவர்கள் தினசரி துதிக்கும் நித்யானுசந்தானம் என்ற நூலில் உள்ள உபதேச ரத்னமாலை என்ற பாசுரங்களையும் திருவாய்மொழி நூற்றந்தாதி முதலிய பாசுரங்களையும் இவர்தான் இயற்றினார், யதிராஜவிம்சதி என்ற வடமொழி நூலையும் இவர் இயற்றியிருக்கிறார். சில தொகுத்து வெளியிட்டிருக்கிறார். சில முக்கிய வடமொழி நூல்களுக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார்.

சில கால இல்வாழ்க்கைக்கு பிறகு துறவறம் பூண்ட மணவாளமாமுனிகள் பல திருக்கோயில்களை புதிப்பித்து ,சமயப்பிரசாரம் செய்து வாழ்ந்து எழுபதாவது வயதில் அமரர் ஆனார். தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள அழ்வார்த்திருனகரியில் பிறந்த மணவாள மாமுனிகள் ஆந்திராவில் திருப்பதிக்கு வடக்கே சென்று நான்கு வைணவ மடங்களை தோற்றுவித்தார். தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பல சமூகத்தினர் வைணவத்தை தழுவ வழி செய்தார்.

இவர் போன்ற பல ஆசாரியர்களுக்கு திருவிழா நாட்களில் சடாரி மரியாதை செய்யும் முறை பல வைணவ தலங்களில் வழக்கில் உள்ளது.
வைணவ ஒரு பிரிவினர் குறிப்பிட்ட ஆச்சாரியார் மாற்று பிரிவை சேர்ந்தவர் என்பதற்காக அந்த முறையை எதிர்த்து 19 ஆண்டு காலம் வழக்காடியுள்ளதை பார்க்கும்போது நாம் என்ன நினைப்பது? இந்த வழக்கில் எவ்வளவு பேருடைய பணமும் காலமும் விரயமாகி இருக்கிறது என்று எண்ணி பார்த்தால் வியப்பாக இருக்கும்.

பொதுவாக இத்தகைய விஷயங்களில் நீதிமன்றங்களுக்கு செல்பவர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். பலர் ஒய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகள். பலர் வழக்கறிஞர்கள். டாக்டர்கள். மற்ற பல துறைகளில் உள்ள பணக்காரர்கள். இவர்களுக்குத்தான் இது போன்ற மத விஷயங்களில் நேரத்தை செலவிடவும் சிறு வேற்றுமையை கூட பெரிது படுத்தி அதை பூதாகாரமாக ஆக்கி ஊரை இரண்டுபடுத்தி விளையாட நேரம் உண்டு. இவர்களில் பலர் இதைத்தான் ஆன்மீகம் என்று நம்புகிறார்கள்.

இந்த விவகாரங்களில் காஞ்சிபுரம் பேர் போன ஊர். கோயில் யானைக்கு எந்த நாமம் போடுவது, எந்த சன்னதியில் எந்த பிரிவினருக்கு முதல் தீர்த்த மரியாதை போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் கடந்த காலத்தில் நீதிமன்றம் போய்தான் தீர்வு காணப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது போன்ற சில வழக்குகள் லண்டனில் உள்ள பிரிவிகௌன்சில் வரை சென்றதுண்டு.
இந்த சம்பிரதாய முறைகள் பற்றி காலும் தெரியாமல் தலையும் தெரியாமல் வெள்ளைக்கார நீதிபதி கொடுத்த தீர்ப்பை சொல்லி தர்மம் ஜெயித்தது என்று தனக்கு தானே மகிழ்ந்து போனார்கள். இவர்களெல்லாம் வெள்ளைக்கார துரைமார்களுக்கு அடிமை சேவகம் செய்யவே அவதாரம் எடுத்தவர்கள். இவர்களிடம் அகப்பட்டுக்கொண்டு வைணவம் விழி பிதுங்கிக்கொடிருக்கிறது.

வைணவ சமயத்தின் இரு பிரிவுகளுக்கு காரணமான தத்துவம் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. இவர்களில் பலர் முரட்டு பக்தர்கள், ஆனால் ஞான சூன்யங்கள். .வெறும் அடையாளத்தையும் குறியீடுகளையும் வைத்து சண்டையிடும் படித்த பேதைகள். தான் என்ற அகம்பாவம் இவர்களிடம் பல உருவங்களில் மதமாக சாதியாக, சாதிப்பிரிவாக வடிவெடுத்து இருக்கிறது.

இந்த படித்த மேதைகள் பத்து பேர் எங்காவது கூடினால் ஒரே வீடிக்கைதான் . அன்றைய ஹிந்து நாளிதழில் என்ன செய்தி வந்திருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தங்களுக்கு தெரிந்த அரசியல் பேசுவார்கள், அரசியல்வாதிகளை எல்லாம் திட்டித் தீர்ப்பார்கள், காலம் கெட்டுப் போச்சு என்று அங்கலாய்த்து கொள்வார்கள். ஆங்கிலம் கலந்த தமிழில் யார் உயர்ந்த குரலில் பேசுகிறாரோ அவரே வாதத்தில் வெற்றி பெற்றதாக நினைத்து மகிழ்ந்து போவார்.

எங்கு பார்த்தாலும் வளர்ந்து விட்ட வன்முறையைப்பற்றி சொல்லி எல்லாவற்றுக்கும் ஒசாமா பின் லேடன் தான் காரணம் என்பார்கள், உண்மையில் இவர்கள் ஒவ்வொரிடமும் ஒரு பின்லேடன் ஒளிந்து கொண்டிருக்கிறான்.

மற்ற மதத்தாரை அழிப்பதற்கு துப்பாக்கி ஏந்தும் துணிவு பின்லேடனுக்கு இருக்கிறது. இவர்களுக்கு அந்த துணிவு இல்லை, இதுதான் வித்தியாசம்.

இவர்களெல்லாம் எப்படியாவது தொலையட்டும், இது விஷயமாக நமக்கு தோன்றும் ஒரு முக்கிய கேள்வி இதுதான். இந்த குப்பை வழக்கில் தீர்ப்பு கொடுக்க 19 ஆண்டு கால அவகாசம் தேவையா? எத்தனையோ வழக்குகளை அனுமதிக்கும் போதே தள்ளுபடி செய்யும்போது இந்த வழக்கு எப்படி உச்சநீதி மன்றம் வரை அனுமதிக்கப்பட்டது?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பொன்னான நேரத்தை இந்த குப்பை வழக்குகளில் செலவிட வேண்டிய அவசியம் என்ன?அவர்களுக்கு வேறு உருப்படியான வேலை இல்லையா என்று கேட்க தோன்றுகிறது

உச்ச நீதிமன்றத்திலும் பல மாநில உயர்நீதிமன்றங்களிலும் பலஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. 20 வருடங்களுக்கு மேலாக தீர்ப்பு ஆகாமல் நிலுவையில் உள்ள வழக்குகளே உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பதாக பத்திரிகை செய்தி வருகிறது.

இது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு நினைவுக்கு வருகிறது. டெல்லியில் திலக்நகர் பகுதியில் உபகார் என்ற சினிமா தியட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் இறந்து போனார்கள். இறந்தவர்களில் பலர் இளம் தம்பதியினர், மற்றும் குழந்தைகள். .
அந்த அரங்கத்தின் மின்சார சாதனங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணை அறிக்கை கூறியது.

உண்மை என்னவென்றால் டெல்லி மின்சார வாரியம் இந்த அரங்கின் மின்சார அமைப்பு முறையை சோதனை செய்து விட்டு திருப்திகரமாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளது. அதனால் தியேட்டரில் படம திரையிடப்படுவதை தடை செய்து மின்சாரவாரியம் உத்திரவு போட்டது. .வாரியத்தின் உத்திரவை எதிர்த்து தியேட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வாரியத்தின் உத்திரவுக்கு இடைக்கால தடையும் தியேட்டர் நிர்வாகம் பெற்றது. வழக்கு தொடர்ந்தது. 13 ஆண்டு காலமாக வழக்கு நிலுவையில் இருந்தது.

ஒரு நாள் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 50 உயிர்களை பலி கொண்டது. .

13 ஆண்டு காலமாக ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் இடைக்கால தடை உத்திரவை மறுபரிசீலனை செய்யக்கூட நேரம் ஒதுக்கவில்லை. இதன் விளைவாக 50 உயிர்கள் பலியாக நீதிமன்றத்தின் தாமதம் காரணமாக அமைந்தது.

JUSTICE DELAYED IS JUSTICE DENIED என்பது மட்டுமல்ல. தாமதமான நீதிமன்ற நடவடிக்கைகள் உயிர் பலியில் முடியும் என்பதற்கு இந்த வழக்கு நல்ல உதாரணம். தாமதத்தால் ஏற்படும் விபரீதங்கள் பல சமயங்களில் தெரியாமல் போய்விடுகிறது.

இப்படி பல வழக்குகள் தாமதம் ஆவதற்கு காரணம் நேரடியாக குப்பையில் சேர்க்கப்படவேண்டிய பல சாதிவெறி மனுக்களுக்கு மரியாதை கொடுத்து அதை வழக்கு ஆவணமாக மாற்றி அதன் மீது வருடக்கணக்கில்
விவாதங்களை அனுமதித்துக் கொண்டிருப்பதுதான் என்று கூறலாம்.

- மு.கோபாலகிருஷ்ணன்

Sunday, May 30, 2010

தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடல்

செம்மொழி மாநாட்டுக்காக ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த பாடல்:




பாடல் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த மாதிரி தமிழ்பாடலுக்கு ஆங்கிலப் பாணியில் இசையமைத்து ஒவ்வொரு கையிலும் இரண்டு, மூன்று விரல்களை நீட்டிக்கொண்டு பாடினால், தமிழே மறந்துவிடும் போலிருக்கிறது.  மீசைக்காரரே  சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்று சொல்லியிருக்கிறார், நீ என்னடா மடிசஞ்சி என்கிறீர்களா? அதுவும் சரிதான். இது மாதிரி எல்லாம் விரல் நீட்டிக்கொண்டு பாடுவார்கள் என்று தெரிந்திருந்தால், மீசைக்காரர் சேரநாட்டிளம் பெண்களுடன் நிப்பாட்டியிருப்பார் :-) அவர் சொன்னதுக்காத்தானோ கர்நாடக சங்கீதத்தில் சுந்தரத் தெலுங்கை இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

அதெல்லாம் போகட்டும்... செம்மொழி என்றால் என்ன? :-)

மாநாட்டு தீம் சாங்'காம். தீம் சாங்குக்கு செம்மொழித் தமிழில் என்ன? கடைசியில் கலைஞரைக் காண்பிக்காமல் இருந்தால், விட்டிருப்பார்களா? :-)

ஒரு தமிழ் பில்ட்- அப்புக்காக சுடிதாரைத் தவிர்த்திருக்கக்கூடாதா?  (முரளிக்கு தமிழ் நுணுக்கமான மொழின்னு பின்னூட்டம் போட ஒரு பிட் இங்கே. மற்றவர்களுக்கு புரிகிறதோ?)

தாவணியில் போனால், கம்ப்யூட்டர் கம்பெனியில் உள்ளே விடுவார்களோ?? 

Tuesday, May 25, 2010

மீனாவுடன் மிக்சர் - 21 {நல்ல செய்தியா? கிலோ என்ன விலை?}

வர வர காலையில் எழுந்து செய்திகளை பார்க்கவே பயம்மா இருக்கு. படுக்கையிலிருந்து எந்தப் பக்கமா எழுந்தாலும், முக்கியமா என் முகத்தை முதல் வேலையா காலையில் கண்ணாடியில் பாக்கறதை ஞாபகமா தவிர்த்தாலும் கூட தலைப்பு செய்திகள்ல ஏனோ ஒரு நல்ல விஷயம் கூட பார்க்க முடியறதில்லை.

பூகம்பம், சுனாமின்னு இயற்க்கை ஒரு பக்கம் ஆக்ரோஷ தாண்டவம் ஆடினா, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்னு சின்ன குழந்தைகளிலேர்ந்து பெரியவங்களோட மனசு வரை விஸ்வரூபமா ஆக்ரமிச்சிருந்த ஒரு மனிதன் திடீர்னு உஜாலா விளம்பரத்துல போட்டியிடும் எதிர் கம்பெனியின் துணி போல சாயம் வெளுத்து தான் ஒரு சராசரி மனிதனுக்கும் கீழ் தான்னு சர்வநிச்சயமா நிரூபிக்கிறார். மனசு வெறுத்து போய் அடுத்த சேனல் மாத்தினா மத வெறி கொண்ட தீவிரவாதிகள் நாலு பேர் தாங்க செய்யற அராஜகத்தை மார் தட்டி உலகத்துக்கு அறிவிக்கிறாங்க. கிளிக், கிளிக், ரிமோட் வஞ்சனை இல்லாமல் தன் பாட்டுக்கு தினந்தோறும் கெட்ட சேதிகளை நம் பக்கமா சும்மா அள்ளி தெளிக்குது.

சரி, செய்திகளும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்னு பொழுது போக்குக்கு டிவியில் வர்ற தமிழ் சீரியல்களை சந்தோஷமா பார்ப்போம்னு ஒரு எண்ணத்துல உக்காந்தீங்கன்னா, மனிதன் இயல்பில் நல்லவன் தான் அப்படீங்கற உங்க எண்ணத்தில் ஒரு லாரி மண் விழறது நிச்சயம். அவ்வளவு வில்லத்தனம் இந்த தமிழ் சீரியல் கதாபாத்திரங்களுக்கு. தான் நல்லா இருப்பது அவங்க வாழ்க்கையோட குறிக்கோள் இல்லை. சுத்தி உள்ளவங்க நல்லா இல்லாம இருந்தா போதும், அதுவே அவங்க பிறந்த பயனை அனுபவிச்ச மாதிரி. வீட்டு மருமகள் அழ அழ பெருக்கெடுக்குற சந்தோஷத்தில் அவங்க திக்கு முக்காடி வயத்துல பால் வார்த்து ஈ கூட மொய்க்க விட்டிடுவாங்க. அவ்வளவு தீசத்தனம்!

சுபீட்சமா நாலு விஷயம் இனி காதில் விழும் ங்கர ஆசை நிராசையாகி காந்தித் தாத்தாவின் குரங்குகள் மாதிரி இனி கண்ணையும், காதையும் இழுத்து பொத்த வேண்டியது தான்னு பலரைப் போல நீங்களும் நினைக்க தொடங்கியிருந்தீங்கன்னா நிச்சயமா மேற்கொண்டு படிங்க. எனக்கு தெரிஞ்ச ஒரு உண்மைக் கதையை உங்களுக்கு இப்ப சொல்லறேன்.

இன்ஜினியரிங் காலேஜ்ல ஒண்ணா படிச்சு முடிச்சு வெளியேறிய ஒரு பத்து நண்பர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழியே பிரிஞ்சு போய் வாழ்க்கையை ஆரம்பிச்சு இன்னிக்கு ஒரு பதினெட்டு வருஷம் ஆச்சு. (ஏதுடா சமீபத்துல வந்த ஆமீர் கான் படத்து கதை மாதிரி தெரியுதேன்னு யோசனை பண்ணறவங்களுக்கு நான் சொல்ல விரும்பரதெல்லாம் 'வைட்டீஸ் ப்ளீஸ்'.)

ஒரு சராசரி மனிதனோட வாழ்க்கையில கல்யாணத்துக்கு பின்னாடி நடக்கற எல்லாமே - குழந்தைகள், அவங்களுக்கான சேமிப்பு திட்டங்கள், பேங்க் புண்ணியத்தில் வாங்கற அழகான வீடு, குழந்தைகளை பாட்டு, கராத்தே வகுப்புகளுக்கு அழைத்து போய் வர நல்ல ஒரு கார் - இவங்க எல்லோர் வாழ்க்கையிலும் நடந்தது.

காலேஜை விட்டு வெளிய வந்து பிசியா அவங்கவங்க ஒவ்வொரு பக்கம் சம்சார சுழல்ல சிக்கி சுத்திகிட்டிருந்த போதும் விடாம யாஹூ மற்றும் கூகிளாண்டவர் புண்ணியத்துல பதினெட்டு வருஷமா தங்கள் நட்பை விடாமல் அடவு காத்து வராங்க இந்த நண்பர் குழு. வருஷத்துக்கு ஒரு முறை இவங்கள்ல ஏழு, எட்டு பேராவது தத்தம் குடும்பங்களோட தீபாவளியை ஒட்டி சந்தித்து லூட்டி அடிப்பது இப்போ ஒரு வழக்கமா ஆயிட்டுதுன்னே சொல்லலாம்.

மூணு வருஷங்களுக்கு முன்னாடி இவங்களிலே ஒருத்தருக்கு ரத்த புற்று நோய்ன்னு செய்தி வந்த போது ஆடிப் போய் இந்த குழு உட்கார்ந்தது கண் சிமிட்டும் நேரம் தான். நெஞ்சை அழுத்திய சோகத்தை சமாளித்து நிமிர்ந்தவங்க நண்பனுக்கு எப்படி உதவலாம்னு அதில் தீவிர யோசனைல இறங்கினாங்க. வைத்திய செலவுக்கு பணம் திரட்ட வேண்டிய அவசியம் புரிஞ்ச போது அவங்கவங்க சேமிப்பிலேர்ந்து ஒரு பெருந்தொகையை நண்பனுக்காக ஒதுக்கியதோடு இல்லாம இந்த நண்பர் குழு தெரிந்தவங்க தெரியாதவங்கன்னு ஒருத்தரை விடாம எல்லோர் கிட்டயும் உதவிக்கு கையேந்தினாங்க. அதை விட முக்கியமா மனைவிமார்களோடு சேர்ந்து எல்லோரும் எலும்பு மஞ்சை தானம் செய்ய தாங்க பதிவு செய்துகிட்டதோட தெரிந்தவங்க எல்லோரையும் பதிவு செய்ய தூண்டினாங்க. இதெல்லாம் என்ன பெரிய விஷயம்னு நீங்க கேட்டீங்கன்னா ரொம்ப கரெக்ட். இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை தான். ஏன்னா பல வருஷங்களாக பழகியிருக்கும் ஒரு நண்பனுக்கு துன்பம்னா இது போல உதவி யாரா இருந்தாலும் செய்வாங்க தானே?

நான் சொல்ல வந்த விஷயமே வேற. இந்த நண்பர் குழுவில் ஒரு நாலு பேர் எங்க ஊரை சேர்ந்தவங்க. இவங்க தங்கள் நண்பனுக்கு உதவி தேவைன்னு ஊர்ல கேட்டாங்களோ இல்லையோ, முகம் அறியா அந்நியர்களான ரிச்மன்ட்வாசிகள் பலர் பிரியத்தோடு முன்வந்து நிதி உதவி செய்ததோடு எலும்பு மஞ்சை தானம் (bone marrow donation) செய்யவும் உடனடியா அவங்கவங்க குடும்பங்களோட வந்து பதிவு செய்துகிட்டாங்க. நோயுற்று படுத்திருந்தவருக்கு இவங்கல்லாம் யாரு? எதனால அவருக்கு இவங்க உதவினாங்க? கட்டபொம்மன் பாஷையில 'மாமனா மச்சானா?' முகம் அறியா ஒருவரிடம் ஏனிந்த வாஞ்சை?

மூணு வருஷம் நோயோடு கடுமையா போராடி வெற்றி பெற்று இன்று தன் குடும்பத்தோடு நல்ல படியாக வாழும் அந்த நண்பரின் வாழ்க்கை மனித நேயத்துக்கும், நமக்கெல்லாம் உள்ளோடிருக்கும் கருணைக்கும், மனிதாபிமானத்துக்கும் ஒரு சான்றிதழ்னு நான் நினைக்கிறேன்.

'தங்கம்', 'தென்றல்' சீரியல்லாம் பார்த்து அடுத்த முறை பிழிய பிழிய அழும் போது இந்த கதையை மறக்காம நினைச்சுக்கங்க.

-மீனா சங்கரன்