Sunday, April 11, 2010

அரிது, அரிது...

எச்சரிக்கை: இந்தப் பதிவை சொஞ்சம் மெல்லிய இதயம் படைத்தவர்கள் தவிர்ப்பது அவர்களின் இதயத்திற்கு நல்லது. கொஞ்சம் கடினமாகவோ கனமாகவோ ஆகலாம்.  இந்தப் பதிவு கொஞ்சம் நீளமாகப் போகலாம். குறுக்குவழி இங்கே...

இன்று மாலை எங்கள் வீட்டருகில் நடந்து சுற்றிக் கொண்டிருந்தோம். சாலையில் நான் ஒரு இலை போல கிடந்த ஒரு வஸ்துவை மிதிக்க இருந்தேன். புது மாதிரியாக இருந்ததால் குனிந்து பார்த்தேன்.எச்சரிக்கையைத் தவிர்த்த மெ.இ.ப. - படத்திற்காக என்னைத் திட்ட வேண்டாம்.



அற்பாயுசில் மரணித்த ஒரு பறவைக்குஞ்சு. அருகில் ஒரு தடயமும் இல்லை.  தொடர்ந்து நடந்தோம். அனைவர் மனதிலும் அந்தப் பறவைக்குஞ்சுதான். எப்படி இது நடந்திருக்கும் என்று யோசித்தோம். பல யூகங்கள்.

பறவைக்குடும்பம் கூடு மாற்றி போகும்போது இந்தக் குஞ்சை கீழே தவறவிட்டிருக்கலாம். பறவையினங்கள் சின்னக்குஞ்சை வைத்துக் கொண்டு ஜாகை மாற்றுவது கேள்விப்பட்டதாயில்லை.

வேறு ஒரு பெரிய பறவை முட்டையைத் திருடியோ அல்லது குஞ்சைத் திருடியோ போகும்போது கீழே தவற விட்டிருக்கலாம். ஆனால் பக்கத்தில் உடைந்த முட்டையோ எதுவோ இல்லை. பருந்து போன்ற பறவை இந்தக் குஞ்சைக் கவர்ந்து தன் குஞ்சுகளுக்கு ஊட்டப் போகும்வழியில் தாய்ப்பறவையுடன் சண்டையில் கீழே போட்டிருக்கலாம்.

இந்தக்குஞ்சு பக்கத்து மரங்களில் எங்கேயோ இருந்த கூட்டில் இருந்து வெளியேற முயன்று கீழே விழுந்திருக்கலாம். சற்று நகர்ந்து சாலையில் வந்து சூட்டில் செத்திருக்கலாம்.

இப்படியெல்லாம் பேச்சு போனது.  அப்போது பசங்களிடம் அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது பற்றி ஒரு சொற்பொழிவாற்றினேன். பேச்சை மாற்றுவதற்காக என் பெரிய மகன் சொன்னான். என்ன ஆயிற்றோ என்னவோ, அந்தக் குஞ்சு இப்போது இறைவனிடம் சேர்ந்து ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதனால் அதைப்பற்றி இனிமேல் கவலைப்பட வேண்டாம் என்றான். உடனே சிறியவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. சொர்க்கத்திலும் அது குஞ்சாக இருக்குமா பெரியதாக இருக்குமா?  என் பதில்: வயதெல்லாம் உயிருடன் இருக்கும் போதுதான். செத்த பிறகு வயதெல்லாம் இல்லை. எல்லா ஆத்மாவும் சமம்தான்.(நமக்குதான் செத்த பிறகு என்ன நடக்கும் என்பது தெள்ளத்தெளிவாயிற்றே?).

பெரியவன் நக்கல் ஆரம்பமாயிற்று. அப்படியா? விபத்தில் நசுங்கி செத்தவர்களின் ஆத்மா பாதி நசுங்கி இருக்கும் என்று நினைத்தேன் என்றான். நசுங்கல் எல்லாம் உடலுக்குத்தானடா.நசுங்கிய உடல் எல்லாம். அதைத்தான் புதைத்தோ எரித்தோ விடுகிறோமே. மேலே போவது எல்லாம் ஆத்மாதான் என்றேன். மரணத்திற்கு பிறகு நடப்பது என்ன என்று யாருக்குத் தெரியும், எப்படித் தெரியும் என்றான் சிறியவன். பெரியவன் சொன்னான் ஒரு ஒளி மாதிரியோ என்னவோ தெரியலாம். யாராவது எழுதி வைத்து விட்டு செத்திருந்தால் நன்றாக இருக்கும் என்றான். ஆனால் ஒரு வாக்கியத்தை பாதியில் விட்டுவிட்டு இறந்துவிட்டால், படிப்பவர்கள் இன்னும் மண்டையை உடைத்துக் கொள்வார்கள் என்று பல பாதி வாக்கியங்கள் கற்பனையில் மூழ்கினான்.

அரிது, அரிதுக்கு திரும்ப வந்தேன். பாருங்கடா. மனிதராய்ப் பிறப்பது ரொம்ப கடினம். அதுவும் ஊனமில்லாமல் பிறப்பது இன்னமும் கடினம் என்றேன். அதனால் மனித உயிர் என்பது ஒரு அபூர்வமான வரம். அதை உதாசீனம் செய்யாமல் அனுபவிக்க வேண்டும் என்றேன். அப்படியா, எங்கே தினம் ஓட்டம், சைக்கிள் என்று லெக்சர் அடிக்கப் போகிறாயோ என்று பார்த்தேன் என்றான் பெரியவன்.

வீடு வந்து சேர்ந்தோம். போங்கடா என்று கணினியில் உட்கார்ந்தேன். இட்லிவடை ரொம்ப நாளுக்குப் பிறகு முனிக்கு கடிதம் எழுதியிருப்பதை படித்தேன். சிதம்பரம் கழுத்து சுளுக்குமளவுக்கு திருப்பி மின்னலை(அது யார்?) சைட் அடிக்கும் படம் இருந்தது. அதற்கு மேலே ஹெல்ப் என்று ஆங்கிலத்தில் ஒரு சுட்டி.  சும்மா கிளிக்கி அதிர்ந்தேன். கண்கள் கலங்கின. அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது.

ஒரு பிழையும் இல்லாமல் அரிதாகப் பிறந்த ஒரு சுட்டிப் பிறப்பின் நிலை. அதுவும் பண்ருட்டி அருகில் கச்சராப்பாளையத்தில்.  சுமன் என்ற சுரேந்தர் ஒரு குச்சியை எடுத்து அதிக மின்சக்தி செல்லும் கம்பியைத் தட்டியிருக்கிறான். அவ்வளவுதான். கை, கால்கள் பொசுங்கிவிட்டன.  இதற்கு மேல் நீங்களே கதிரின் பதிவில் படித்துக் கொள்ளுங்கள்.  படிப்பதோடு நின்று விட வேண்டாம் கட்டாயம் உதவ வேண்டும்.

கைகால் பொசுங்கியும் அவன் புன்னகை பொசுங்கவில்லை.  இனியும் அந்தப் புன்னகை பொசுங்காமல் இருப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.


உதவி செய்ய விவரங்கள்:
முகவரி :
P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kacharapalayam post
kallakurichi tk
villuppuram dt

 
விவரங்கள், சந்தேகங்கள், தகவல்களுக்கு - கதிரின் தொலைப்பேசி: 9791460680 


பணம் அனுப்ப:

Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan

இந்தியன் வங்கி தளத்திலிருந்து கதிர் எடுத்த விவரங்கள் கீழே

Name : KACHARAPALAYAM
IFSC - CODE : IDIB000K001
MICR - CODE : 606019007
CIRCLE : CUDDALORE
Address : 10 - F, Gomuhi Dam Road
Kacharapalayam
Vadakkanandal Post

PIN : 606207
District : VILLUPURAM
State : TAMIL NADU
Phone : 4151234234

Email : kacharapalayam@indianbank.co.in

அமெரிக்காவில் இருப்பவர்கள் வரிச்சலுகையுடன் நன்கொடை அனுப்பலாம். உங்கள் காசோலையை  கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
Channels of Glory
404 E Laurelwood Dr
Bloomington, IN 47401
 
காசோலையை 'Channels of Glory' பெயருக்கு அனுப்பவும். காசோலையில் குறிப்பு எழுதுமிடத்தில் 'Towards Suman, Kacharapalayam, India" என்று எழுத மறக்காதீர்கள். பிறகு கதிருக்கு Channels of Glory க்கு அனுப்பிய தொகை என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிடுங்கள். அவருடைய எண்: +91-9791460680

என் பதிவுலக நண்பர் செந்தழல் ரவி அவருடைய பதிவில் சொன்னது:

சிறுவனுக்கு உதவுங்கள்

கதிர் பதிவை அப்படியே கொடுத்துள்ளேன். உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள். முடிந்தால் அந்த சிறுவனை போய் பார்த்து ஆறுதலாக பேசிவிட்டு வாருங்களேன்..!!! நானாக இருந்தால் அதைத்தான் செய்திருப்பேன்...!!

ரவி சொன்னதும்தான் உறைக்கிறது. அந்தக் குஞ்சை சாலையிலிருந்து அகற்றி புதைத்திருக்கலாமோ?

Thursday, April 08, 2010

மீனாவுடன் மிக்சர் - 20 {வா வா வசந்தமே}

அப்பாடா! ஒரு வழியா வசந்த காலம் ஆஜர். கடந்த ஆறு மாசமா வெளியே வராதான்னு ஊர்ல எல்லாரும் ஏக்கமா எட்டி பாத்துகிட்டு இருந்த சூரியன் இப்போ தான் மனமிரங்கி பரம விசிறிகளான எங்களுக்கு காட்சி தர முன் வந்திருக்கான். வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பிக்கற நேரம் இது.

நாலு மாசமா அலட்சியப்படுத்தினதில் தெருவுல எல்லார் வீட்டு தோட்டமும் எங்க வீட்டு தோட்டத்தோட போட்டி போட்டுக்கிட்டு 'நீ மோசமா, நான் மோசமா'ன்னு பல்லிளிச்சது போன வாரம் வரைக்கும் தான். நேத்து காலையில் எதேச்சையா ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தா என்ன ஒரு ஆச்சர்யம்! ஹாரி பாட்டர் மந்திரக்கோல் ஆட்டி 'ஜீபூம்பா' ன்னு சொன்னா மாதிரி எங்க வீட்டை தவிர எல்லார் வீட்டு வாசலிலும் வண்ண பூச்செடிங்க அழகழகா பூத்து என்னைய பார்த்து 'உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே' ன்னு அழகு காட்டுது. எங்க வீட்டு கிட்டே வரும் போது மந்திரக்கோலுக்கு சார்ஜ் போயிருக்குமோ? Stock market shares வாங்கி போடற எண்ணம் இருக்குறவங்களுக்கு இது நல்ல தருணம். Lowes மற்றும் Home Depot கம்பனிங்க பூச்செடி வித்தே Wallstreet ட்டை வலுவாக்கராங்கன்னு கேள்விப்பட்டேன்.

வயசில் சின்னவங்க, பெரியவங்கன்னு வித்யாசம் பாராட்டாம எல்லோர் முட்டியையும் ஒரே மாதிரி பதம் பார்த்துகிட்டு இருந்த குளிர் காலத்தை அடிச்சு விரட்டிட்டு ஒயிலா வசந்த காலம் எட்டிப் பார்க்கும் போது இந்த மாதிரி உற்சாகமா பூந்தோட்டமோ இல்லை காய்கறித் தோட்டமோ மக்கள் போடறது நாம எல்லாரும் நடைமுறைல பாக்கற ஒரு விஷயம் தான்.

ஆனா எங்க ஊர் மக்கள் வசந்தம் வந்ததும் தோட்ட வேலையை விட உற்சாகமா இன்னொரு விஷயம் செய்வாங்க. அது தான் உடல்பயிற்சி. சூரியன் சாயல்ல வட்டமா ஒரு பெரிய ஸ்டிக்கர் பொட்டை பார்த்தா கூட போதும், ஏதோ பூச்சாண்டி குச்சி எடுத்துகிட்டு துரத்தரா மாதிரி தெருவில் இறங்கி ஓட ஆரம்பிச்சிடுவாங்க. விடிகார்த்தால காப்பி டீ கூட குடிக்காம ஜட்டியை விட கொஞ்சம் பெருசா ஒரு நிஜார் மாட்டிகிட்டு தலை தெறிக்க ஓடற சில மக்களை நிறுத்தி விசாரிச்சதுல இதுக்கு ரெண்டு முக்கிய காரணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். ஒண்ணு புத்துணர்ச்சி. மற்றது உடல் எடை குறைப்பு.

இவங்க ஓட்டமா ஓடி கொட்டற வியர்வையை ட்யூப் போட்டு பக்கெட்டில் பிடிச்சா நாலு ரோஜா பூ செடிக்கு ஒரு வாரம் தண்ணி விடலாம். இதுல எங்கேர்ந்து புத்துணர்வு வரும்னு எனக்கு புரியலை. ஹமாம் சோப்பு விளம்பர அறிவுரையை கடைபிடிச்சா தானா புத்துணர்வு வந்திட்டு போறது. இதுக்கு போய் தலை தெறிக்க ஒடுவானேன்? எங்க குடும்பத்தில் புத்துணர்ச்சி பெற நாங்க நம்பகமான ஒரு formula கண்டு பிடிச்சு வச்சிருக்கோம். ஒரு கப் பில்டர் காப்பி + ஒரு தட்டு 'ஜானகி' பிராண்ட் தேன்குழல் = புத்துணர்ச்சி. இதை patent பண்ணலாமான்னு கூட ஒரு யோசனை இருக்கு. பார்ப்போம். God is great.

உடல் எடை குறைப்பை பத்தி நான் இன்னிக்கு அதிகம் ஒண்ணும் சொல்லரத்துக்கு இல்லை. ஏன்னா அது ஒரு சோகக் கதை.(மேல சொன்ன பார்முலாவை படிச்சீங்க தானே?) அது மட்டும் இல்லை. அடுத்த மாதம் நடக்க இருக்கும் தமிழ்புது வருஷ கலை நிகழ்ச்சிகளிலே 'stand up comedy' பண்ணறேன்னு முந்திரிக்கொட்டை மாதிரி நான் கையை வேற தூக்கிட்டேன். என்னோட இந்த சோகக்கதையை பத்தி அங்கே பேச நாலு பாய்ன்ட் எடுத்து வச்சிருக்கேன். அதை எல்லாத்தையும் இங்க போட்டு ஓடைச்சிட்டேன்னா அப்புறம் மேடைல ஏறி ''வந்தே மாதரம்' ன்னு உரக்க சொல்லிட்டு அழுகின தக்காளி மழையில் நனைய ரெடியாக வேண்டியது தான். சொதப்பினா ஊர் மக்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்திட மாட்டாங்களா?

சரி அதை விடுங்க. வசந்த காலம் வந்தாலே பொதுவா எல்லா வீட்டுத் தலைவிகளுக்கும் ஒரு வினோதமான உந்துதல் வரும். பத்து வருஷ coma விலேர்ந்து திடீர்னு கண்ணை திறந்து 'அடடா இப்படி குப்பைத்தொட்டிக்குள்ள போய் வாழரோமே' ன்னு உணர்ந்தவங்க மாதிரி வசந்த காலம் வந்து பளிச்சினு வெய்யில் அடிச்ச உடனே வீட்டை சுத்தம் செய்யறதில் இறங்கிடுவாங்க. சுத்தம் பண்ணறேன்னு சொல்லி வீட்டில் உள்ள எல்லா அலமாரி சாமான்களையும் இழுத்து வெளியே போடறது இந்த சீசனுக்கே உண்டான ஒரு விசேஷம்.

அது மட்டும் இல்லை. வீட்டுத் தலைவிகளோட தானதர்ம உணர்வுகள் தலை தூக்கி நிற்கற நேரம் வசந்த காலம் தான். கணவர், குழந்தைகளோட உடம்பில் போட்டிருக்கிற துணிகளை மட்டும் விட்டு வச்சிட்டு மிச்ச எல்லாத்தையும் மூட்டை கட்டி 'salvation army' இல்லைனா 'goodwill' கடைங்களுக்கு தானம் செஞ்சுடுவாங்க. ரெண்டு வாரம் முன்னாடி வாங்கின புத்தம் புது துணிமணி எல்லாம் கூட இந்த மூட்டைக்குள்ள தான் இருக்கும். எல்லாத்தையும் எடுத்து தானம் பண்ணிட்டு Macy's கடைல spring sale ன்னு அடுத்த வருஷம் தானம் பண்ண வேண்டிய துணி மணி மற்றும் இதர சாமான்களை வாங்கரதுல பிசியாயிடுவாங்க. எனக்கு எப்படித் தெரியும்ன்னு கேக்கறீங்களா? நேத்து தான் நான் பத்து மூட்டை சாமான்களை தானம் செஞ்சேன். என் கணவரோட சட்டை வைக்கும் அலமாரி நான் துடைச்ச துடைப்பில வைரம் மாதிரி மின்னரதுன்னா பாருங்களேன்! கொடை வள்ளல் கர்ணனோட தங்கச்சின்னு என் கணவர் (பெருமையா ???) சொன்னது என் காதுல நல்லாவே விழுந்தது.

Kohl's கடைலேர்ந்து 20% off வசந்த கால தள்ளுபடி கூபான் இன்னிக்கு தான் வந்திருக்கு. இதுவே நவராத்திரி காலமா இருந்ததுன்னா குங்குமச்சிமிழ் எடுத்துகிட்டு கொலுவுக்கு கூப்பிட Kohl's கடைக்கு போயிடுவேன். ஏன்னா நம்ம மக்கள் எல்லாம் கூபான் பிடிச்சிகிட்டு அங்கே தானே இப்போ இருப்பாங்க?

-மீனா சங்கரன்

Tuesday, March 16, 2010

மீனாவுடன் மிக்சர் - 19 {முன் நெத்தி வழுக்கையாகாமல் பீ.எச்.டீ. பட்டம் வாங்குவது எப்படி?}

டாக்டர் பட்டம் வாங்கணும்னு கொஞ்ச நாளாவே ஒரு நப்பாசை எனக்கு. டாக்டர் மீனா அப்படீன்னு சொல்லிக்க ஒரு கெட்டப்பா இருக்குமேன்னு பாக்கறேன். அதுக்காக பத்து வருஷம் கஷ்டப்பட்டு முன் நெத்தி வழுக்கையாற வரைக்கும் படிச்சு டாக்டர் பட்டம் வாங்குன்னு சிரமமான அறிவுரையெல்லாம் எனக்கு குடுக்காதீங்க. நடக்கற விஷயமா ஏதாவது பேசுவோம். சுலபமா டாக்டர் பட்டம் வாங்க ரெண்டு வழி தான் இருக்கு.

தமிழ்நாட்டு ஆளும்கட்சியில எம்.எல்.ஏவா சேர்ந்து ஏதாவது புது தனியார் பல்கலைகழகம் திறக்கும் போது போய் ரிப்பன் வெட்டி குடுத்தாக்க அவங்களே ஒரு ஜிலு ஜிலு பொன்னாடை போர்த்தி டாக்டர் பட்டமும் குடுத்திடுவாங்க. இது ஒரு வழி. ஆனா அரசியல் எனக்கு சரி வராது. ஏன்னா கட்சில சேர்ந்த உடனேயே எல்லோரும் மரியாதை காரணமா 'அம்மா மீனா' அல்லது 'மீனாம்மா'ன்னு பவ்யமா கூப்பிட ஆரம்பிப்பாங்க. அதெல்லாம் வயசை அனாவசியமா கூட்டி காமிக்கும். எனக்கு தேவையா சொல்லுங்க?

ரெண்டாவது வழி தினப்படி நாம பிரமாதமா செய்யற ஒரு விஷயத்தையே எடுத்து அதுல பீ.எச்.டீ குடுப்பாங்களான்னு ஆராயணும். எப்படியும் செய்யற ஒரு வேலைக்கு பட்டம் குடுத்தாங்கன்னா எவ்வளவு சுலபம்? இந்த வழி தான் சரின்னு எனக்குப்பட என்னோட தினசரி வேலைகளை அலச ஆரம்பித்தேன். உலகத்துல எந்த ஒரு பல்கலைகழகமும் பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது, வீடு சுத்தம் செய்வதுக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அவசியம் குடுக்க வேண்டிய சில துறைகள் தான் இவைன்னு மனப்பூர்வமா நான் நம்பறேன். செய்து பார்த்தா தானே தெரியும் அந்த கஷ்டம்? கணக்கும், இலக்கியமும், விஞ்ஞானமும் ஒரு வீட்டு தலைவியோட வேலைகளோடு போட்டியிட முடியுமா? ஆனா டாக்டர் பட்டம் இதுல கொடுப்பாங்கன்னு நம்பறது நடப்புக்கு ஒத்து வராத முட்டாள்தனம்.

சரி வீட்டு வேலை இல்லாத, ஆனா தினமும் நான் செய்யற ஒரு விஷயம் என்னன்னு யோசனை பண்ணின போது தான் மண்டைக்குள்ள பளிச்சுன்னு ஒரு பல்ப் எரிஞ்சுது. அத்தி பூத்தா மாதிரி எப்பவாவது தான் எரியும் இந்த பல்ப் ஆனா எரிஞ்சா பிரகாசமா எரியும். தெனமும் கண் முழிச்சிருக்குற நேரத்துல பாதி நேரம் இதை தான் செய்யறேன். கடந்த ரெண்டு வருஷமா அரும்பாடு பட்டு இந்த துறையோட நெளிவு சுளிவுகளை எல்லாம் முழுசாக கத்து தேற முயற்சி செய்து வர்றேன். என்னை விட இந்த ஒரு கலையை எங்க ஊரில் இன்னும் பலர் பல வருஷங்களா ரொம்ப அருமையா செய்யறாங்க. அப்படி என்ன பெரிய கலைன்னு கேக்கறீங்களா?

கையில் நசுங்கின அலுமினியப் பாத்திரம், உடம்பில் கசங்கி கந்தலான துணி - இவை இல்லாமலேயே பிச்சை எடுப்பது. என்ன? இந்த கலையை பத்தி கேள்விப்பட்டதில்லையா நீங்க? கவலை டபேல். விலாவாரியா நான் சொல்லேறேன் கேளுங்க.

ஊரில் ஒரு புது கோவில் கட்ட திட்டமா? நிதி வசூல் செய்யாமல் கோவில் கட்ட முடியாதா? நம்ம அபிமானக் கடவுள் (அபிமான நடிகர்னு சொல்லி தான் இது வரை கேள்விப்பட்டிருப்பீங்க) சந்நிதி கொண்டு வர என்ன வேணா செய்ய தயாரா இருக்கோமா? எங்க பிச்சை தொழில் அப்படி தான் ஆரம்பிச்சது. அப்புறம் இந்திய கலாச்சாரத்தை வளர்க்க அருமையான கர்னாடக இசை கலைஞர்களை அழைத்து ஊரில் நிகழ்ச்சிகள் போட முடிவு எடுக்கப்பட்ட போது ஒரு சின்ன விஷயம் இடிச்சது. கஜானா காலி, வேறென்ன புதுசா? மறுபடியும் தூக்கினோமே கண்ணுக்கு தெரியாத அந்த அலுமினிய பாத்திரத்தை. இதையெல்லாம் தாண்டினா குழந்தைங்களோட பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டியாகணும். பள்ளிக்கூடத்துக்கு பாப்கார்ன் வித்து வித்து (பாதி பாப்கார்னை நாங்களே தின்னு தின்னு) வாய்ல எப்பவுமே உப்பு கரிக்கரா மாதிரி ஒரு பீலிங்.

முதல்ல நீங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, இந்த பிச்சைக் கலையை சிறப்பா செய்து வர்ற நாங்க எல்லோருமே சில பல கௌரவமான பிச்சை டெக்னிக்குகளை கையாளுவதில் வல்லவர்கள்னு. அனாவசியமா யாரும் எங்களை தெருவோரமா நின்னு போற வர வண்டிகளை நிறுத்தி 'அய்யா, அம்மா...பார்த்து கொஞ்சம் போடுங்க'ன்னு தலையை சொரியும் கும்பல்னு நினைச்சுடக் கூடாது பாருங்க. அப்படி என்ன பெரிய டெக்னிக்? தட்டை தூக்கிண்டு தெருவுல சுத்துவதுக்கு பதில் மாத்தி மாத்தி போன் மேல போன் போட்டு மக்கள் கழுத்தை அறுக்கறது தான். "கோவிலுக்கு அம்பது டாலர் தான் தர முடியுமா? அதுக்கென்ன நோ ப்ராப்ளம்ஸ். ஆனா கர்நாடக இசை வளர்க்கும் குழுவுக்கு மட்டும் ஒரு நூறு டாலர் குடுத்துடுங்க சரியா? உங்க வீட்டு பக்கமா இன்னிக்குஎனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நானே வந்து உங்ககிட்ட காசோலை வாங்கிக்கவா?" சிரிச்சு சிரிச்சே பணத்தை உருவிட மாட்டோம் நாங்க!

ஊர் மக்களை நினைச்சா சில சமயம் பாவமா கூட இருக்கு. எந்த பக்கம் திரும்பினாலும் அவங்க பேன்ட் பாக்கெட்ல கை விட்டு பர்ஸ் எடுக்க ஒருத்தர் ரெடியா இருக்கோம். என்ன தான் செய்வாங்க அவங்களும். அன்னிக்கு கூட தெரிஞ்சவங்களா தெரியுதேன்னு கை தூக்கி நான் ஹலோ சொல்லறதுக்குள்ள ஒரு குடும்பம் பயந்து போய் பின்னங்கால் பிடரில இடிக்க திரும்பி ஓடிட்டாங்க.

என் தமக்கை ஆங்கில இலக்கியத்துல பீ.எச்.டீ முடித்து டாக்டர் பட்டம் எடுத்தவள்னு இங்க ரொம்ப பெருமையோடு உங்ககிட்ட சொல்லிக்கிறேன். எங்க குடும்பத்தோட முதல் டாக்டர் அவள் தான். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு மேல் படிப்பை தொடர்ந்து எம்.பில் மற்றும் பீ.எச்.டீ எடுத்து எங்களுக்கெல்லாம் சொல்லொணா பெருமை சேர்த்தவள் அவள். எங்க குடும்பத்தோட டாக்டர் கோட்டா அவ தயவுல முடிஞ்சு போச்சு. ரொம்ப திறமைசாலி என் தமக்கை. முன் நெத்தி வழுக்கை ஆகாமலேயே பீ.எச்.டீ பட்டம் வாங்கிட்டான்னா பாருங்களேன்! பெரிய எதிர்ப்பார்ப்புக்கள் எதுவும் என்னிடம் இல்லாததால தான் குறுக்கு வழியில் சுலபமா பிச்சை எடுத்தே பீ.எச்.டீ எடுக்க முடியுமான்னு இன்னிக்கு நான் ஒரு ஆழ்ந்த சிந்தனைல இருக்கேன்.

எங்க ஊர் பக்கம் வர்றதா இருந்தீங்கன்னா, அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 16 ஆம் தேதி மாண்டலின் சகோதரர்கள் (ஸ்ரீநிவாஸ் மற்றும் ராஜேஷ்) கச்சேரிக்கு கண்டிப்பா வந்துட்டு போங்க. டிக்கட் விலை தலா இருபதே டாலர் தான். மேலும் விவரங்களுக்கு இங்கு சொடக்கவும் - www.richmondrasikas.org.

அப்புறம் எங்க ஊர் கோவில் கட்டி முடிச்சப்புரமா எப்படி இருக்கும்னு பார்க்க ஆசைப்பட்டீங்கன்னா இங்கே சொடக்குங்க - http://www.hinducenterofvirginia.org. நீங்களா ஆசைப்பட்டு இந்த கோவிலின் விரிவுபடுத்தும் பணிக்கு நிதி உதவி செய்ய விரும்பினீங்கன்னா நான் உங்களை தடுக்கவே மாட்டேன். உங்க சவுகரியம் எப்படியோ பார்த்து செய்யுங்க (பாத்து மேல போட்டு குடுப்பான்னு யாரோ எங்கயோ சொல்லி கேட்ட மாதிரி இல்லை??).

எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கும்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?


-மீனா சங்கரன்

Friday, March 12, 2010

ஐ-பேட்/ஐ-போன் :

பல வருடங்களுக்கு முன் ஐ-பாட் வந்த போது ரொம்ப நாள் பொறுத்திருந்து அதை வாங்கினேன். வாங்கிய பின் தான் தெரிந்தது, அதன் முழு பயனும் பெற மேலும் பல உபகரணங்கள் தேவை என்று! சரி யானை வாங்கிய பின் சங்கிலி வாங்காமல் எப்படி என்று சில பல டாலர் செலவு செய்து, பாதுகாக்க ஒரு நல்ல case, வண்டியில் சார்ஜ் செய்ய ஒரு கருவி, FM Transmitter, டிவி-ல் அதன் விடியோ பார்க்க ஒரு 'டாக் ஸ்டேஷன்' என பலவற்றை வாங்கினேன். சில மாதங்கள் கழித்து ஐ-டச் / ஐ-போன் என அருமையாக இரு புதிய உபகரணங்கள் வந்தன! சரி நம்ம நோக்கியா போன் பழசாகிவிட்டதே ஐ-போன் வாங்கினால் ஐ-பாட் ஆகவும், போன் ஆகவும் உபயோகபடுத்தலாம் என எண்ணி அதையும் வாங்கினேன். விஷயம் என்னவென்றால் முன்பு வாங்கிய எந்த உபகரணங்களும் இதனுடன் பொருத்தமில்லாதவை என்று கூறிவிட்டார்கள். அதைவிட கொடுமை, இப்போது வரும் புதிய ஐ-போன் பழைய ஐ-போன் உபகரணங்களுடன் பொருத்தமில்லாதவை என்பதுவே! ஆனாலும் இவை அனைத்தும் பெரும் புரட்சிகரமான எலக்ட்ரானிக் பொருட்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சரி தலைப்பிற்கு சம்மந்தம் இல்லாத என் புலம்பல்களை விட்டுவிட்டு விசயத்திற்கு வருவோம். நீங்கள் பல் துலக்கும் முன் ட்விட்டர்ரை படிப்பவரா அல்லது கற்குகைக்குள் வாழாதவராயின், ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள "ஐ-பேட்" (i-Pad) பற்றிய செய்திகள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்! அதை பற்றி ஒரு சிறு அலசல் இது. சரி, புதிய ஐ-பேட் என்ன தான் செய்யும் என்று பார்க்கலாம். சென்ற வருடம் நெட்புக் எனப்படும் சிறிய லேப்டாப் வகை கணினிகள் பிரபலமாக துவங்கின. ஆனாலும் அவற்றில் நல்ல வீடியோ கார்டு இல்லாதது , வேகம் குறைவானவை, DVD-Drive இல்லை என பல குறைகள். அவற்றை இந்த புதிய ஐ-பேட் சில வகையில் நிவர்த்தி செய்யும் என குறிப்பிட்டுள்ளனர் (DVD-Drive தவிர). ஐ-பேட் சுமார் பத்து அங்குல நீள/அகலம், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய A4 வகை Processor உடன் ஐ-போனில் உள்ள operating சிஸ்டம் மீதே இயங்குகிறது! ஐ-போன் போல டச் ஸ்க்ரீன் (1024x768) பாவனை, GPS, இணைய தொடர்பு வசதி (Wi-Fi / 3G), ஸ்க்ரீனிலேயே கிபோர்ட் (அல்லது External Keyboard இணைப்பு வசதி), 10 மணி நேர பாட்டரி வசதி, ஐ-போனின் மென்பொருட்கள் பாவிக்கும் வசதி என அதிர வைத்துள்ளார்கள். மேலும் இ-புக் எனப்படும் பிரபலமாக விற்கும் மின்-புத்தகங்கள் இதில் மிக அழகான வடிவில் படிக்கலாம். சில புத்தகங்களை இது தானே ஒலிவடிவில் படிக்கும்!! நம்ம தமிழ் புத்தகங்களை கண்டிப்பாக படிக்காது! ஒரு பெரிய குறை அடோபே நிறுவனத்தின் பிளாஷ் எனப்படும் செயலி இதில் வேலை செய்யாது. பல தளங்கள் இந்த வகை வீடியோ டெக்னாலஜியை உபயோகபடுத்துகிறார்கள்! அனாலும் ஆப்பிள் இதை இன்னமும் மொபைல் உபகரணங்களிலிருந்து தள்ளியே வைத்துள்ளது! இந்த ஐ-பேட் $499 விலையில் ஆரம்பித்து $829 வரை விற்கிறார்கள்! ஏப்ரல் 3 அன்று தான் கையில் கிடைக்கும் என்றாலும், இன்று முதல் அவற்றை முன் பதிவு செய்யலாம் : http://www.apple.com/ipad/pre-order/

அடுத்து இதுபோல ஐ-போன் மற்றும் ஐ-பேட் முதலியவற்றில் தமிழ் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை என்று ஒரு பெரிய குறை உண்டு. சென்ற பதிவில் நாகு ஔவையார் எழுதிய ஆத்திசூடி மற்றும் பலவற்றை சிரமமில்லாமல் ஐ-போனில் படிக்க ஒரு நல்ல இலவச மென்பொருளை பற்றி எழுதியிருந்தார் (http://blog.richmondtamilsangam.org/2010/03/blog-post.html). அதுபோல திருக்குறள் மென்பொருளை (ஐ-போன்/ஐ-டச் மட்டும் ) தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்: (http://itunes.apple.com/us/app/thirukural-book/id333267284?mt=8)

அதுபோல மற்றொரு மென்பொருள் - செல்லினம். இதிலும் இலவசமாக பல நல்ல (தமிழ்) செய்தி தளங்கள் மற்றும் ப்ளாக் முதலியவற்றை ஒரே இடத்தில் சரியான வடிவத்தில் தமிழ் எழுத்துகளை படிக்கலாம்! இந்த மென்பொருளை பெற (ஐ-போன்/ஐ-டச் மட்டும் ) : http://itunes.apple.com/my/app/sellinam/id337936766?mt=8

2005ஆம் ஆண்டு பொங்கல் தினம், சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8-ன்ஆதரவில் முதன் முறையாக பொதுப் பயனுக்காக இந்தச் செயலிவெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து மேடையிலேயே பாடிய கவிதை, "நேற்றுவரை ​மூன்று தமிழ், இன்று முதல் நான்கு தமிழ் இதோ கைத்தொலைபேசியில் கணினித் தமிழ்"! உடனே செல்பேசியில் செல்லினத்தின் வழி தமிழில் கோர்க்கப்பட்டு, வானொலி நிலையத்திற்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பபட்டது!

Tuesday, March 09, 2010

ஐபோனில் அறம் செயும் தேவராஜன்

ஐபோனில் தமிழ் சரியாகத் தெரியாது என்ற குறை எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. அதே குறை எனக்குத் தெரிந்த பலருக்கும் உண்டு. ஆனால் அதற்காக ஒன்றும் செய்யவில்லை. நாம்தான் முருங்கையில் வீற்றிருக்கும் வேதாளம் ஆச்சே?

அந்த குறையைத் தீர்க்க வந்திருக்கிறார் தேவராஜன். ஐபோனில் ஆத்திச்சூடி காண்பிக்கிறார் இந்த அரக்கோண ஆப்பிள் வித்தகர்! ஒரு அற்புதமான ஐபோன் மென்பொருளைத் தயாரித்து அதை இலவசமாக வேறு வெளியிட்டிருக்கிறார் தேவராஜன்.

நீங்களே அவர் தளத்தில் மேலும் படித்துக் கொள்ளுங்கள். படிப்பது மட்டுமில்லாமல் உங்கள் ஐபோனிலோ,ஐபாட் டச்சிலோ இந்த மென்பொருளை நிறுவி பயனடையுங்கள்.

தேவராஜன் - சொல்ல வேறு வார்த்தையில்லை. தலை வணங்குகிறேன்!

Thursday, March 04, 2010

மீனாவுடன் மிக்சர் - 18 {நாற்காலியில் எனக்கு ஒரு கர்சீப் போடறீங்களா?}

உலகத்திலேயே கஷ்டமான சில வேலைகள் என்னென்னன்னு என்னை நீங்க கேட்டீங்கன்னா, இப்படித் தான் நான் பட்டியலிடுவேன்-:

* ரத்த அழுத்த வியாதியை வளர்த்துக்காமல் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லுவது.
* மசால் வடையை ஒதுக்கி விட்டு மேரி பிஸ்கட்டோடு டீ குடிப்பது.
* உஸ்மான் ரோட்டுக்கு போய் நல்லி கடைக்குள் நுழையாமல் வருவது.
* ஜொள்ளோழுகாமல் சாம்பார் வடையை பத்தி நினைப்பது.
* தாய் நாட்டை விட்டு வெளியேறி அயல் நாட்டில் வாழும் இந்திய மக்களுக்கிடையே சமுதாய உணர்வை வளர்க்கும்னு எதிர்பார்த்து தமிழ் சங்கம் போன்ற சமூக சங்கங்களை நிறுவி அதை கெட்ட பெயர் எடுக்காமல் நடத்துவது.

மரீனா பீச்ல நம்ம காந்தி சிலைக்கு பக்கத்துல இடம் கிடைச்சா வாங்கி போடலாம்னு ஒரு திட்டம் வச்சுருக்கேன். முதலமைச்சரோட கிருபை இருந்தா நடக்க வாய்ப்பிருக்கு. எதுக்கா? பல நாட்டு இண்டு இடுக்குகளிலே எல்லாம் பூந்து 'ஹலோ.......நாங்க இங்கயும் வந்துட்டோமே, இப்ப என்ன பண்ணுவீங்க?' ன்னு வில்லத்தனமான வெற்றி சிரிப்போடு சமூக சங்கங்களை நிறுவி நடத்தறாங்களே community volunteers, அவங்களுக்கெல்லாம் சிலை எழுப்ப தான்.

எதனால சிலருக்கு இப்படி ஒரு ஆசை? எங்கிருந்து இவங்களுக்கு வருது இந்த உந்துதல்? மாசா மாசம் குடும்பத்துக்கு படி அளக்குற கொட்டாவி விடும் உத்தியோகத்தையும் கஷ்டப்பட்டு செஞ்சுகிட்டு, வீட்டில் எந்நேரமும் விஸ்வரூபம் எடுத்து குஞ்சம்மாவா பிலிம் காட்டி கொண்டு, குழந்தைகளுக்கு முழு நேர (சம்பளம், பேட்டா இல்லாத அநியாயத்தை பத்தி இன்னொரு பதிவில் எழுதறேன்) டிரைவராவும் வேலை செய்துகிட்டு ஏன் இவங்களுக்கு இப்படி சமூகத்துக்கு குப்பை கொட்ட ஆசை? முக்கியமா எந்த கடை வைட்டமின் மாத்திரை சாப்பிடறாங்க இவங்கெல்லாம்? என்னடா இவ கேள்வி மேல கேள்வியா அடுக்கறாளேன்னு பாக்கறீங்களா? தருமி சிவன் கிட்ட சொன்னது போல எனக்கு கேள்வி மட்டும் தாங்க கேட்க வரும். ஹி ஹி.........

பல நாட்களா ஒய்வு கொடுத்து பாதுக்காத்து வச்சதுல நம்ம மூளை இன்னிக்கு வேலை செய்ய தயார்னு ஒரு இருமாப்புல இந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க ரெண்டு கப் ஹார்லிக்ஸ் கலந்துண்டு உக்காந்தேன். அஞ்சே நிமிஷம் தான். அப்படியே சோர்ந்து போயிட்டேன். உருப்படியா ஒரு விடையும் கிடைக்கலை. ஹார்லிக்ஸ் மேல இருந்த நம்பிக்கையே போயிடுத்துன்னா பாருங்களேன்!

சரி போறது, நமக்கு தான் விடை கண்டுபிடிக்க துப்பில்லை, ஊர் மக்கள் அபிப்பிராயம் என்னன்னு பார்ப்போம்னு காது கொடுத்து கேட்டதுல இதை தெரிஞ்சுகிட்டேன். பதவி ஆசை மற்றும் புகழ் ஆசை தான் இவங்களோட முக்கியமான உந்துதல்ன்னு சிலர் நம்பறாங்க.

இருக்குமோ? நாற்காலி மேலே ஆசைப்பட்டு தான் இந்த மக்களெல்லாம் இப்படி சங்கத் தலைவர், செயலர், காசாளர், உறுப்பினர் அதிகாரி, நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக மற்றும் விளையாட்டு தொடர்பு இப்படிப்பட்ட வேலைகளுக்கு எல்லாம் கை தூக்கராங்களோ? இந்த வேலைக்கு பணம் கூரையை பிச்சுகிட்டு கொட்டுமா? தினமலர் பத்திரிகை முதல் பக்கத்தில் இவங்க (நிர்வாக குழுவின்) போட்டோ வருமா? சன் டிவியில் இவங்களை நேர்முக பேட்டி எடுப்பாங்களோ? இவங்க நடத்தும் கலாசார நிகழ்ச்சிகளை ஊர் மக்கள் வானளாவ புகழ்வாங்களா? மற்றுமொரு பெரிய கேள்விக்கணைக்கு மன்னிக்கவும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் 'ஆமாம்'ன்னு நீங்க சொல்லறீங்களா? சமூக சேவை செய்ய முன் வர்றவங்களோட முக்கிய காரணங்கள் பதவி மற்றும் புகழ் ஆசை தான்னு நீங்க இன்னும் நம்பிநீங்கன்னா அடுத்த தேர்தல்ல எனக்கு ஒரு நாற்காலியில் கர்சீப் போட்டு வைங்களேன் ப்ளீஸ்? என் முகமும் தான் பத்திரிகையில் ஒரு தடவை வரட்டுமே!

வருஷத்தில் மூணு அல்லது நாலு முறை எங்க ஊர் தமிழ் சங்கம் அருமையான கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவாங்க. இதுக்கு ரிச்மன்ட் ஊர் பெண்கள் சார்பாக நான் நிர்வாக குழுவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவிக்கிறேன். ஏன்னா நாங்க அப்புறம் எங்கே போய் எங்களோட புது புடவையை எல்லாம் கட்டி நாலு பேருக்கு காமிக்கறது?

போன மாசம் நடத்தின நிகழ்ச்சி எப்பவும் போல் கலக்கலாக இருந்தது. எத்தனை குழந்தைகள் பங்கேற்றாங்க தெரியுமா? நாட்டியம், நாடகம், பாட்டுன்னு ரொம்ப அருமையா இருந்தது நிகழ்ச்சி. நடுவில் நான் தான் கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன். தமிழ் dictionary கொண்டு போக மறந்துட்டேனா, பாத்தா குட்டி பசங்கல்லாம் சுத்த தமிழ்ல பேசி வயத்தில் கொஞ்சம் புளி கலக்கினாங்க. என் பள்ளி நாட்களோட செய்யுள் புத்தகங்களை தூசு தட்ட நேரம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். டிவி தொகுப்பாளர்கள் நல்ல தமிழ் பேச பயிற்சி எடுக்க டீச்சர் தேடறாங்கன்னு கேள்விப்பட்டீங்கன்னா எங்க ஊர் பசங்களுக்கு ஒரு போன் போட சொல்லுங்க.

இப்படி ஒரு மூணு மணி நேர நிகழ்ச்சி நல்லபடியா நடக்கணும்னா குறைஞ்சது ஒரு மூணு மாசமாவது தமிழ் சங்க நிர்வாக குழு அதுக்கு அசராமல் உழைக்கணும். எத்தனை எத்தனை வேலை! ஹால் எடுத்து, மைக் செட்டப் செய்து நிகழ்ச்சிக்கு நடுவில் மக்கள் சாப்பிட டீ, பலகாரம் ஏற்ப்பாடு செய்து.... இது போல இன்னும் பல பல வேலைகள். இந்த உழைப்புக்கு ஒரு குட்டி கல்யாணமே பண்ணிடலாம். ஆனால் இதில் வருத்தம் என்னன்னா சக மக்களுக்காக, அவர்கள் கண்டு களிக்க என்று இந்த குழு இவ்வளவு உழைத்தும் அவர்களுக்கு கிடைப்பது பெரும்பாலும் ஒரு முழ நீள குத்தப் பத்திரிகை தான். சமோசாவில் உப்பு தூக்கல், டீயில் சர்க்கரை குறைச்சல், பெரியவங்க நிகழ்ச்சி ரொம்ப குறைவு - இது போல குற்றங்களை அடுக்கும் ஊர் மக்களுக்கு எங்க சங்கத் தலைவர் நிகழ்ச்சிக்கு நடுவே "இது எங்க சங்கம் இல்லை, உங்க சங்கம்." ன்னு அழகாக சொன்னார். நாமெல்லாம் வெளியாட்களாய் நின்னு குத்தம் சொல்லாமல், எல்லோரும் சேர்ந்து பங்கேற்றால் தான் நம்ம ஒரு சங்கம்னு சொல்லி கொள்ளரதுல பெருமைப்பட முடியும்னு நான் நினைக்கிறேன்.

நிர்வாக குழுவுக்கு மட்டுமில்லாமல், அத்தனை குழந்தைகளையும் வாரத்தில் பல முறை practice க்கு சளைக்காமல் காரோட்டி அழைத்துப் போன பெற்றோர்களுக்கும் ரிச்மன்ட் தமிழ் சமுதாயம் சார்பில் நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன்.

-மீனா சங்கரன்

Monday, February 22, 2010

மீனாவுடன் மிக்சர் - 17 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - ஐந்தாவது பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கூப்பர்டினோவில் உள்ள செந்தில், மைதிலி தம்பதியினரின் வீடு

மைதிலி: வலது கால் எடுத்து வச்சு உள்ள வா குஞ்சம்மா.

செந்தில்: ஏன் ஆர்த்தி கரைச்சு உள்ள கூப்பிடலையா? அந்த குறை எதுக்கு உனக்கு? அதையும் பண்ணிடேன். நான் வேணும்னா 'கௌரி கல்யாணம் வைபோகமே' பாடவா?

குஞ்சம்மா: யக்கா, வூட்டு வாசல்ல வச்சு அய்யாவ பாட்டெல்லாம் பாட சொல்லாதே. அவரு பேசினாவே செங்கலை சொரண்டரா மாதிரி இருக்கு. பாடினா நான் ரொம்ப டென்சன் ஆயிருவேன்.

மைதிலி: சும்மாவா உங்க பிரெண்ட்ஸ் உங்கள 'லொள்ளாதிபதி' ன்னு கூப்பிடறாங்க? இப்போ அனாவசியமா லொள்ளு பண்ணி குஞ்சம்மாவை டென்சன் பண்ணாதீங்க சொல்லிட்டேன். நீ வா உள்ள போகலாம் குஞ்சம்மா.

செந்தில்: வீட்டுக்கு அதிபதி தான் கனவாப் போச்சு. சரி தான் ஒரு இத்துனூண்டு அவுட் அவுசுக்காவது அதிபதியாகலாம்னா அதுக்கும் வழியில்லை. லொள்ளாதிபதியா நான் இருக்கறதுல உனக்கு என்னம்மா பிரச்சனை? சரி சரி உள்ள போவோம் வாங்க.
--------------

(பத்து நாட்களுக்கு பின்)

செந்தில்: மைதிலி, நான் சொல்றேனேன்னு நீ தப்பா நெனைக்காதே. பத்து வருஷமா ஜிம்முக்கு போயும் இளைக்காதவள் என் மனைவின்னு நான் கூப்பர்டிநோவுக்கே உன்னை பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தேன். நம்ம ஊரு படத்துல கிராமத்து தேவதைன்னு உக்கிரமான ஒரு அம்மன் சிலையை காமிப்பாங்களே, அது மாதிரி எப்படி கம்பீரமா இருப்ப நீ! இப்ப என்னடான்னா காதும் கண்ணும் பஞ்சடைச்சு போய் இப்படி ஆயிட்டியேம்மா!

மைதிலி: நீங்க வேற வெறுப்பேத்தாதீங்க. இந்த குஞ்சம்மாவுக்கு என்னிக்கு ஜெட் லாக் போய் என்னிக்கு வேலை செய்ய போறாளோ தெரியலையே? கல்யாணமாகி இந்த பதினஞ்சு வருஷத்துல உங்களுக்கு கூட நான் இவ்வளவு சிசுரிஷை செஞ்ச நியாபகமில்லைங்க.

செந்தில்: (மெதுவாக) செஞ்சிருந்தாத்தானே நியாபகம் வர்றதுக்கு.

மைதிலி: என்னது?

செந்தில்: அது ஒண்ணுமில்லை. குஞ்சம்மா எள்ளுன்னா நீ எண்ணையா நிக்கறையே அதை நினைச்சு நான் பெருமைப்படறேன்.

மைதிலி: (கோபமாக) கிண்டலா உங்களுக்கு?

செந்தில்: சரி சரி கோவிச்சுக்காதே. இவளுக்கு நீ வேலை செய்யவா வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கான்கார்ட் கோவில் முருகனை அப்படி வேரோடு பிடுங்கின? இது சரி வராது மைதிலி. நேத்து என்ன ஆச்சுன்னு சொன்னேனா? ஆபீஸ்லேந்து வீட்டுக்கு வந்தா நீ இல்லை, கடைக்கு போயிட்ட. எனக்கு ஒரே தலை வலி. சரி தான் குஞ்சம்மாவை கெஞ்சி ஒரு கப் காப்பி போட்டு தர சொல்லுவோம்னு தேடினா எங்க இருந்தா சொல்லு பார்ப்போம்?

மைதிலி: எங்க?

செந்தில்: பக்கத்து வீட்டுல Mars லேந்து புதுசா போன வாரம் குடி வந்திருக்காங்களே MRS8462 குடும்பம் அவங்க வீட்டு பிள்ளைக்கு தலை முடி வெட்ட உதவி பண்ண இவ போயிட்டா.

மைதிலி: இவளுக்கு தலை முடியெல்லாம் வெட்ட தெரியுமா?

செந்தில்: இவகிட்ட கத்தரிய குடுத்தால் கதை கந்தல் தான். இவ ஒண்ணும் முடியெல்லாம் வெட்டலை. அந்த வீட்டு பிள்ளைக்கு ரெண்டு தலை இருக்கே. ஒரு தலையை யாராவது அசைக்காம பிடிச்சா தான் இன்னொரு தலையில் முடி வெட்ட முடியுமாம். நம்ம வீட்டு மதர் தெரிஸா தன் பிடி உடும்பு பிடின்னு பெருமையா சொல்லிட்டு அங்க போய் உக்காந்து அரட்டை அரங்கம் நடத்திகிட்டு இருந்தா. நான் போய் அவங்க கதவை தட்டி 'குஞ்சம்மா எனக்கு காப்பி போட்டு தரியா'ன்னு கேட்டதுக்கு அவங்க பிரிஜ்ஜை தொறந்து ஒரு தம்ளர் ஜூஸ் விட்டு கொடுத்து 'காப்பியெல்லாம் வேணாம், ஒடம்புக்கு இது தான் குளிர்ச்சி' ன்னு கூசாம சொல்லறா.

மைதிலி: இவளை எப்படி வேலை செய்ய வெக்கறதுன்னு எனக்கு தெரியலையே! ராத்திரி சமையலுக்கு இவ கொஞ்சம் காய் வெட்டி தந்து பாத்திரம் அலம்பி போட்டா நல்லா இருக்கும் ஆனா இந்த பூனைக்கு யார் மணி கட்டறது?

-தொடரும்

-------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 1
கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 2
கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 3
கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 4

Friday, February 05, 2010

பித்தனின் கிறுக்கல்கள் – 37

ஐயா பிச்சை, அம்மா பிச்சை பிச்சையோ பிச்சை

பிச்சை எடுப்பவர்கள்கூட இப்படி கூழைக்கும்பிடு போடுவார்களா என்பது தெரியவில்லை. பிச்சை எடுப்பவர்களுக்கும் கொஞ்சம் கூச்சம் என்பது இருக்கும் என்று நினைக்கிறேன். பாரதி தனது ஒரு பாடலில்

பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று பாடுகிறார் அதிலிருந்து பிச்சை எடுப்பது எவ்வளவு கேவலமானது என்பது தெரிகிறது. ஆனால் இது தமிழக முதல்வரின் ‘ஜால்ரா’ கவிஞர் வாலிக்கு தெரியாது என்பது ஆச்சர்யமில்லை, ஆனால், கமல், ரஜனி போன்றவர்களுக்கும் தெரியவில்லை என்பது மிகப் பெரிய ஆச்சர்யம். நாளை சென்னையில் நடக்க இருக்கும் ஒரு பெரிய பாராட்டு விழாவில் முதல்வரை பாராட்டி திரையுலகைச் சார்ந்தோர் அடிக்கப் போகும் ஜால்ராவில் வாலியின் பாடலை கமல் ரஜனி இருவரும் மேலும் பல நடிகர்களுடன் சேர்ந்து ஒரு துதிப் பாடலைப் பாட இருக்கிறார்கள். வழக்கம் போல சூப்பர் டூப்பர் துதி வார்த்தைகளோடு இருக்கும் இந்தப் திராபைப் பாடலை எழுதியிருப்பவர் வாலி. ஹூம், இதைப் பார்த்தால், இத்தனை வருடங்கள் எப்படி இவர்களால் தமிழர்களை ஏமாற்ற முடிகிறது என்பது தெரியவில்லை. ஒன்று தமிழர்கள் ஆட்டு மந்தை மாட்டு மந்தை போல ஆகியிருக்க வேண்டும், அல்லது, ‘நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன, மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரி’ என்று இருக்கும் மனப்போக்கு வந்திருக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடாத நடிக நடிகர்களுக்கு சங்கத்திலிருந்து மிரட்டல் வேறு வந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்தால், முதல்வரின் வேலை ரொம்ப ஜாலி போல இருக்கிறது. எத்தனை ப்ரச்சனை இருந்தாலும் தேவைப்படும் போதெல்லாம், இப்படி ஒரு விழா, அதில் பல கவர்ச்சி நடனங்கள், பல ஆயிரம் பேர்களின் கால விரயம் என்று சற்றும் பொறுப்பில்லாத்தனம் தான் தெரிகிறது.

கந்தபுராணத்தில் முருகன் வயோதிகராக வள்ளியை சுற்றிச் சுற்றி வந்து தொல்லை செய்யும் போது, வள்ளி சொல்கிறார், ‘எத்துக்கு மூத்தீர்’ என்று. என்னைவிட அதிகம் தமிழ் படித்த முதல்வருக்கு இது தெரியவில்லை என்பது ஆச்சர்யமில்லை. முன்பெல்லாம் காவல்துறை யாராவது ரெகார்ட் டான்ஸ் பார்த்தாலோ அதை ஏற்பாடு செய்தாலோ உடனே கைது செய்வார்கள் ‘அக்னி நட்சத்திரம்’ படத்திலும் இது ஒரு காட்சியாக வரும். இன்று அதே செயலை, பல ஆயிரம் வெட்டி தமிழர்கள் சேர்ந்து, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்து ஓரிரு பெண்களுக்கு பதில் 20-25 நடிகைகள் குறைவான உடையில் குத்தாட்டம் போட்டாலும் போலீஸும் சரி சட்டமும் சரி ஒன்றும் செய்யப் போவதில்லை. மக்களும் மண்புழுக்களைப் போல இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மீண்டும் மீண்டும் இதே கழிசடை கட்சிக்கு எப்படி ஓட்டு போடுகிறார்கள் என்பது புரியவில்லை.

அபத்த விளம்பரங்கள்

இந்தியத் தொலைக்காட்சிகளில் தாங்க முடியாத அளவுக்கு எரிச்சலூட்டும் விளம்பரங்கள் (இதை சன் டீவியில் புதுப் படம் போடுகிறோம் என்று ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்து இழுத்து அறிவிப்பு செய்வாரே ஒருவர் அவருடைய கட்டைக் குரலில் படியுங்கள்) சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் பல சானல்கள் (சன், கலைஞர், ஜெயா, பேர் வெச்சது, பேர் வெக்காதது) வருகிறது என்று சொல்ல போய் கொஞ்ச நேரம் பார்த்ததில் பலப் பல அபத்த விளம்பரங்கள் இருப்பது தெரிந்தது.

விவல் சோப்.

இந்த விளம்பரம் அபத்தம் என்பதைத் தாண்டி பெரிய எரிச்சல் என்பது என் கருத்து. முதல் எரிச்சல் இந்த சோப்பு கம்பெனி ஆதரவு தரும் நிகழ்ச்சிகளில் இதனுடைய விளம்பரம் ஒவ்வொரு விளம்பர இடைவெளியிலும் ஒரு முறை வந்தால் பரவாயில்லை 3-4 முறை என்றால் ஒரேயடியாக குமட்டுகிறது. இரண்டாவது எரிச்சல் இதில் நடிகை திரிஷாவும் வந்து இஷ்டம் போல அட்வைஸ்களை அள்ளி விடுகிறார். மூன்றாவது எரிச்சல் இதில் வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பட்டப் பெயர். குண்டு மல்லிகா, குட்டை கோமளா, பளிச் பானு, நெட்டை மேகலா, டல் திவ்யா. இதில் பளிச் பானு யாருன்னு தெரிஞ்சிருக்கும் தெரியலைனா நீங்க தமிழ்நாட்டில் ஒரு வருடம் இருக்க வேண்டியது அவசியம். நான்காவது எரிச்சல் இவர்கள் எல்லோரும் மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகளாம். குண்டு மல்லிகா என்றவுடன் வகுப்பே கன்னத்தை உப்பிக் கொண்டு, கைகளை விரித்து ஒரு பெரிய யானை நடப்பது போல நடக்கிறார்கள், குட்டை மல்லிகா என்றவுடன் ஒருவர் குனிந்த படி ஒரு பெண்ணிடம் தனது உயரத்தை சரி பார்த்த படி நடக்கிறார், இந்த அபத்தங்களை வெத்து மகளீர் சங்கங்கள் பார்த்துவிட்டு என்ன பண்றாங்கன்னு தெரியலை. இந்த சோப் கம்பெனி மேல ஒரு கேஸ் போட்டா நல்லா காசு பார்க்கலாம். நான் சங்கை ஊதி விட்டேன்.

அலைவ் காபி

ஒரு குடும்பப் பெண்மணி காபி என்று ஒரு டபரா டம்ளரில் சுடு தண்ணீர் தருகிறார் பின்னனியில் ‘சுடு தண்ணி சுடு தண்ணி ஆஹா, பில்டர் காபின்னு சொல்லி குடிப்போம் சுடுதண்ணீ’ என்று பாடல் ஓடுகிறது. அடுத்த காட்சியில் 4-5 மாமிகள் காபி சாப்பிடுவது போல பாவனை காட்ட பின்னனியில் அதே பாட்டு. மூன்றாவது காட்சியில் ஒரு தொலைக்காட்சி நடிகை காபி சாப்பிட உட்கார பின்னனியில் ‘உங்கள் பில்டர் காபியும் சுடுதண்ணிதானா?” என்று ஒருவர் கேட்க நடிகை கேமிராவைப் பார்த்து பேந்த பேந்த விழிக்கிறார். உடன் அலைவ் காபி பவுடரை வாங்கும் படி ஒருவர் சொல்கிறார். அதுவும் ஒரு காபி பவுடர்தான் அது மட்டும் எப்படி ஒசத்தி என்று கேட்பவர்களுக்காக, ‘தனித் தனியாக வறுக்கப் பட்ட காபி கொட்டையிலிருந்து தயாரிக்கப் பட்ட காபி பவுடர்’ என்று ஒருவர் பின்னனியில் விளக்குகிறார். எப்படி ஒவ்வொரு காபி கொட்டையையும் தனித் தனியாக வறுக்க முடியும் என்பது தெரியவில்லை.

இதற்கு மேல் தாங்காமல் நான் விடு ஜூட்.

தமிழ்திரைப்படங்கள்

சமீபத்தில் நான் பார்த்த சில தமிழ்படங்கள் பற்றிய சிறு விமர்சனம்.

வேட்டைக்காரன்

புரட்சித் தலைவர் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு, திருப்பாச்சி படத்தின் இரண்டாம் பாகம் போல இல்லாத ஒரு கதையோடு களம் இறங்கியிருக்கிறார்கள். ஒரு நண்பர் ஒரு ப்ளாகில் ‘விஜய் நீ அடிச்சா கூட தாங்கிடுவோம், நடிச்சாத்தான் தாங்க முடியலை’ என்று எழுதியிருந்ததாகச் சொன்னார். அது 100 சதவீதம் தவறு. விஜய் நடிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை இந்த படத்தில் என்றில்லை இதுவரை எந்தப் படத்திலும் அவர் நடிக்க முயற்சிக்கவே இல்லை. நடிகர் திலகத்துடன் நடித்த படத்திலேயே அப்படித்தான் என்றால் மற்றப் படங்கள் எம்மாத்திரம் . நாயகி அனுஷ்கா, பாவம் ரொம்ப ஏஏஏழை உடையில், நடிப்பில். விஜய் படங்களுக்கு வசனம் எழுதுவது ரொம்ப ஈசி.

“ஏய்’

“ஏய்”

“ஹூம்”

“என்னடா ஹூம்’

“போடா”

“நீ போடா”

“வாடாஆஆஆ வாஆஆஆஆஆஆஆஆஆ”

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் ஷாயாஜி ஷிண்டே, டெல்லி கணேஷ் மற்றும் சலீம் கவுஸ் மூவரும் ஊறுகாய் போல பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இந்தப் படம் பார்ப்பது கண்டிப்பாக பெரிய தலைவலிதான்.

இதில் விஜய்க்கு சமீபத்தில் டாக்டர் பட்டம் வேறு கொடுத்திருக்கிறார்கள். இவரது அடுத்தப் படம் ‘சுறா’. அதை கேள்விப் பட்டதிலிருந்து மீன்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்வதாக ஒரு வேடிக்கை மின்னஞ்சல் வளைதளத்தில் உலா வருவது உங்களுக்குத் தெரியுமா?

ஆதவன்

வடிவேலு பின்னி பெடலெடுத்திருக்கும் படம். நமக்கே சற்று சந்தேகம் வருகிறது இது வடிவேலுவின் படமா அல்லது சூர்யாவின் படமா என்று. சூர்யாவும் வேடத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். நயன்தாரா வழக்கம் போல வெத்து, இவர் என்றில்லை ஏறக்குறைய மற்ற அனைவருமே அப்படித்தான். அடியாளாக வருகிற ஆனந்த் பாபு (மறைந்த நடிகர் நாகேஷின் மகன்), கொஞ்சி கொஞ்சி பேசி அது இந்தக் காலத்திலும் நம் அனைவருக்கும் பிடிக்கும் என்று கழுத்தறுக்கிற சரோஜா தேவி, முன்னால் இயக்குனர் மனோபாலா என்று ஒரு கூட்டமே அலைகிறது. அருமையான நடிகர்கள் ஷாயாஜி ஷிண்டே மற்றும் மறைந்த மலையாள நடிகர் முரளி இருவரையும் ரொம்பவே வீணாக்கியிருக்கிறார்கள். ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

நாடோடிகள்

சுப்ரமணியபுரம் இயக்குனர் தயாரிப்பாளர் சசிக்குமாரின் படம். என்ன கதை சொல்ல வருகிறார்கள் என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். இதில் ஒரு குத்தாட்ட பாட்டுக்கு சசிக்குமாரும் ஆடி படுத்தியிருக்கிறார். ஓசியில் கிடைத்தால் பார்க்கலாம்.

சர்வம்

காதலி அருகாமையில் இருந்தால் காதில் இளையராஜவின் பின்னனி இசை கேட்பதாக ஜல்லியடிக்கும் பாத்திரத்தில் ஆர்யாவும் அவருடைய காதலியாக த்ரிஷாவும் நடிக்கும் படம். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கும் சமயத்தில் படக்கென்று த்ரிஷா இறந்து விட கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல பல உப கதைகளை உலவ விட்டிருக்கிறார்கள். ஒருமுறை பார்க்கலாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்