Tuesday, March 15, 2011
வம்பு
அன்பு என்று சொல்லி
பண்பை சொல்ல அது வம்பாய் மாறி
என் என்பு எங்கு என்று
கேட்கும் அளவுக்கு கம்பு பேசியது என்றால்
அது வம்பா? இல்லை என் தெம்பா?
நண்பா நீ என்னை நம்பு.
நான் தூக்க சொல்ல வில்லை சொம்பு.
வம்பாய் நீயும் மறுக்காமல்
தமிழ் மன்றத்தில் இடு ஒரு வெண்பா.
சிலம்பின் வம்பு காப்பியம்
சினத்தின் வம்பு நெற்றிக்கண்
பழத்தின் வம்பு திருவிளையாடல்
நம்மின் வம்பு நாளைய ....
அது இந்த தமிழ் மன்றம் சொல்லட்டும்
வா நாம் வம்பு பேசலாம். அது பயனுள்ளதாக இருக்கட்டும்.
வேதாந்தி
Monday, March 14, 2011
பஹாமாஸ் விஜயம் - 3
சாப்பாடு பரிமாறும் சிப்பந்திகளின் தலைவர் நம்ம மும்பையை சேர்ந்த ஒருவர். எங்களை ரொம்ப நல்லா பார்த்துகிட்டார், ஆனா அப்பப்ப வந்து சின்னதா ஜல்லி அடிச்சுட்டு போயிடுவார்.
ராத்திரி ரூமுக்கு வந்தா கப்பலின் ஆட்டம் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம்ன்னா சாதாரண ஆட்டந்தான், ஆனா அதோட எஃபெக்ட் கேப்டன் பிரபாகரன் படத்தில ரம்யா க்ருஷ்ணன் போட்ட கெட்ட ஆட்டத்தை விட கேவலமா ஒரு ஆட்டம் என் காதுக்குள் போட்டு எப்படா இது நிக்கும்னு தோணித்து. இப்படி இருக்கும்னு பல பேர் சொன்னதால, கப்பல் ஏற்றதுக்கு முன்னாடியே, காதுக்கு பின்புறம் தடவ ஒரு தைலம், கைல போட்டுக்க க்ரிப், உள்ளுக்கு சாப்பிட மருந்துன்னு ஒரு சின்ன மெடிகல் ஷாப்பே கைல இருந்தது. அதையெல்லாம் போட்டுகிட்டு ரூமை விட்டு வெளியில வந்ததும் என்னவோ பெரிய போருக்கு போற மாதிரி ஒரு பில்டப் கிடைச்சுது. இதுலயும் ஒரு ஆச்சர்யமான விஷயம், மஹிமாவுக்கும் மாதுரிக்கும் ஒரு சின்ன ஆட்டமும் இல்லாம சாதாரணமா விளையாடிகிட்டு இருந்தாங்க, அது எப்படின்னு தெரியலை.
இப்படியாக பலப் பல எதிர்பார்புகளோட துவங்கிய எங்கள் கப்பல் பயணத்தின் முதல் நாள் சின்ன ஆட்டம் பாட்டங்களோட முடிய மறுநாள் காலை கோகோகே பீச்சு போவதாகப் ப்ளான் (எனக்கு தெரிஞ்சு க கா கி கீ கு கூ கெ கே தானேன்னு ப்ளேடு போடாதீங்க) இது ராயல் கரீபியன் கப்பல் கம்பெனியின் சொந்த தீவு.
செவ்வாய் விடிய காலையில் அந்த தீவின் அருகில் நங்கூரம் போட்டு கப்பலை ஆடாமல் அசையாமல் நிறுந்தி விட்டு, “ஹும் வாங்க வாங்க”ன்னு மிரட்டாத குறையா கூப்பிட்டு போனாங்க. நாம எப்படி பட்ட ஆளு, சாதாரணமாவே ப்ரேக் ஃபாஸ்ட்ன்னு ஒன்னு வெச்சா பொளந்து கட்ற கூட்டம், இப்படி பலப் பல வகைகளை வெச்சு வேணும்னா சாப்பிடுன்னு சொன்னதுக்கு அப்புறம் சாபிடலைன்னா அவங்க மனசு கஷ்டப்படுமில்லையா அதனால அந்த வெரைட்டியான ப்ரேக் ஃபாஸ்ட்டை ஒரு காட்டு காட்டிட்டு பொறுமையா விடிய காலைல தீவுக்கு போனவங்க எல்லாம் கப்பலுக்குத் திரும்ப வர ஆரம்பிக்கும் போது நாங்க சாவகாசமாக தீவுக்கு புறப்பட்டு போனோம்.
நாங்க போயிட்டு வந்த கப்பல்
தீவுல ஸ்நார்கலிங் என்ற ஒரு பயிற்சிக்கு பணம் கட்டியிருந்தோம். நான் பெரிய பருப்பு மாதிரி, ‘எவ்வளவு ஆழம் இருக்கும்”ன்னு கேட்டதும் ஒரு சிப்பந்தி “அது ஒன்னும் பெரிசில்ல ஒரு அடில இருந்து 4 அடிவரைக்கும் ஒரு பகுதி, உனக்கு தோதா ஒரு 15 ல இருந்து 35 அடி வரைக்கும் இன்னோரு பகுதி”ன்னு என் நீச்சல் திறமையை அவன் கொடுத்த ஸ்விம் ட்ரெஸ்சை நான் போட்டுகிட்டு நின்ன ஸ்டைல பார்த்தே கண்டுபிடிச்சிட்டான். அவனை அமெரிக்காவின் துப்பறியும் சாம்புன்னு அறிவிக்கலாம்னா அவனுக்கு பாவம் தமிழ் தெரியாதேன்னு விட்டுட்டேன். மகா ஜனங்களே காசு நிறைய இருந்தா இப்படி ஸ்நார்கலிங்குகெல்லாம் பணம் கட்டாம என்கிட்ட கொடுங்க உங்க பெண்/பையன் கல்யாணத்துக்கு குடும்பத்தோட வந்து வயிறார சாப்பிட்டுட்டு, வாய் நிறைய வாழ்த்திட்டு, ஒரு சின்ன சோப்பு டப்பா பரிசா கொடுக்கறேன்.
சரி பணத்தை கட்டிட்டோமேன்னு ஸ்நார்கலிங் போகலாம்னு தண்ணில இறங்கினா, கச்சா முச்சான்னு காலெல்லாம் கல்லு கல்லா குத்துது, சரி நம்ம ரேஞ்சுக்கு இதுலெல்லாம் போகமுடியாதுன்னு வெளில வரலாம்னா, நம்ம வீட்டுக்காரம்மா, “ஏங்க கொடுத்த காசுக்கு ஒரு தடவை நல்லா தண்ணில நனைஞ்சுட்டாவது வாங்க, இப்படி வெறும வந்தா அக்கம் பக்கத்துல பார்த்தா நம்மள பத்தி தப்பா நினைப்பாங்க” ன்னு அன்பாக எடுத்து சொன்னதும், சரி நம்மள வெச்சு இன்னிக்கு காமெடி பண்ணரதுன்னு முடிவு பண்னிட்டாங்கன்னு தெரிஞ்சுது. நானும் குட்டைல ஊறின ஒரு ஜந்து மாதிரி எவ்வளவு நேரம்தான் இருக்கரது, சின்ன சின்ன வாண்டுங்கள்லாம் சூப்பரா நீச்சல் அடிக்கும் போது, நமக்கு அது தெரியாதுன்னு அவங்களுக்குத் தெரியரதுக்கு எவ்வளவு நேரம் ஆகும், சொல்லுங்க. நாம பள்ளிக்கூடத்தில வெளில முட்டி போட்டு கிட்டு இருக்கர அழகைப் பாத்து டீச்சரே “ஹூம் போனா போகுது நாளைக்கு ஒழுங்கா பாடம் படிச்சிட்டு வந்திடுன்னு” சொல்ல வெச்சவங்களாச்சே, ஒரு 30 நிமிஷத்துக்கு அப்புறம் எங்க வீட்டில “ஏங்க இப்படியே தண்ணில இருந்தா உடம்புக்கு ஏதாவது வந்திடப் போகுது, போதும் வந்திடுங்க”ன்னு சொல்ற வரைக்கும் தண்ணிலயே இருந்து மைக்கேல் பெல்ஃப்ஸ், பதக்கம் வாங்கிட்டு வந்த ஸ்டைல் தோக்கரமாதிரி வந்தம்ல.
அந்தத்தீவு ஆனா அநியாயத்துக்கு அமைதியா இருக்குங்க. அங்கு கடை போட்டிருந்த பல பேர எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சா, அவங்க எல்லாம் கப்பல்ல வேலை செய்யரவங்க. இது கப்பல் கம்பெனியோட சொந்தத் தீவு அதனால கப்பல்ல மக்களை கொண்டுவரும்போது, கடைக்கு வேலைக்கும் ஆட்களையும் கொண்டு வந்துடராங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா, இது எப்படி இருக்கு.
இங்க ஒரு க்ளாஸ் பாட்டம் ட்ரிப்ன்னு ஒன்னு இருக்கு கண்டிப்பா போய் பாருங்க, தண்ணி ஸ்படிகம் மாதிரி இருக்க, அதுல இருக்கர மீன்களை பாக்கரது அழகோ அழகு. அப்பப்ப சுறா – பயப்படாதீங்க நம்ம நடிகர் விஜய் இல்லை, நிஜ சுறாமீன், டால்ஃபின், கடல் பசு எல்லாம் பாக்கலாம். இந்தத் தீவுல நம்ம குழந்தைகளை கொஞ்சம் காபந்து பண்ணி கூட்டிகிட்டு போய், கூட்டிகிட்டு வரணும். அங்கங்க சில பல இளஞ்சோடிகள் ரொம்ப ‘அன்யோன்யமா’ இருப்பாங்க, அவ்வளவா நல்லது இல்லை சொல்லிட்டேன்.
ஆஹா ஆனந்தமா இருக்கேன்னு அங்கங்க கட்டித் தொங்க விட்டிருக்கர தூளியில கொஞ்சம் படுத்தா அட அட அந்த சுகமே தனிங்க. தூளின்னா என்னவா? அதாங்க ஹம்மாக். என்னங்க இது தமிழ் பாடத்துக்கு விளக்கமா கோனார் நோட்ஸ் கேக்கர இஸ்கூல் பசங்க மாதிரி கேள்வி கேக்கரீங்க.
ஆமா கதையை எங்க விட்டேன், ஆங் தூளில படுத்துகிட்டு ஒரு சின்ன தீவுல காத்து வாங்கிகிட்டு இருந்தேன், பட்டுன்னு எங்க வீட்டுகாரம்மா வந்து “என்னங்க இன்னிக்கு ஃபார்மல் நைட் அதனால கப்பலுக்கு போய் நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டுதான் சாப்பிட போகனும் ஞாபகம் வெச்சுக்கங்க”ன்னு சொல்லி ஃப்யூஸை பிடிங்கிட்டாங்க. ஃபார்மல் ட்ரெஸ் போட்டுகிட்டு போய் சாப்பிடனும்னா கோட்டு டை போட்டு, கல்யாண ரிசப்ஷன் போல அலங்காரம் பண்ணிகிட்டு போகனும்னு அர்த்தம். எந்த மடையன் இப்படி ஒரு ஏற்பாடு பண்ணினானோ அவனை கொஞ்சம் தனியா கவனிக்கனும். சும்மா சொகுசு கப்பல் ஏறி பஹாமாஸ் பாத்தமா, போக வர கப்பல்ல சுத்தி சுத்தி வந்தமா, தேவைப்பட்ட போதெல்லாம் சாப்பாடு அறைக்கு போய் கிடைச்சதையெல்லாம் சாப்பிட்டமா, நல்லா நாலு அஞ்சு பவுண்டு எடையை ஏத்தினமான்னு இல்லாத, இப்படி கோட்டு டைய்ன்னு படுத்தராங்க. நாங்க போன கப்பல் பரவாயில்லையாம், என் மனைவிக்கு தெரிஞ்ச ஒருத்தர் இது மாதிரி ஒரு கப்பல்ல போகனும்னு எடையை குறைச்சுட்டுப் போனாங்களாம், அப்படி ஒரு கண்டிஷன் இருந்த்தாம் அவங்க கப்பல்ல.
ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லாம விட்டுட்டேன். கப்பல்ல அங்கங்கே காமிராவும் கையுமா 4-5 ஆட்கள் அலைவாங்க இங்கன நில்லுங்க அங்கன நில்லுங்கன ஒரு படம் எடுக்கறேன்னு அலப்பரை பண்ணி படம் எடுப்பானுவ, அங்கங்க நம்மூர் கிராமத்து திருவிழால இருக்கரமாதிரி படுதா கட்டி நடுவில நம்ம எல்லோரையும் நிக்க வெச்சு படம் பிடிப்பானுவ. இவனுங்க தொல்லை இல்லாத ஒரே இடம் உங்க ரூம் மட்டும்தான். ஒவ்வொரு படமும் $19.95+ வரி, எப்படியும் ஒரு 200$ இதுல தண்டமா போயிடும தயாரா இருங்க.
நாகு, நான் அந்த சீனப் பெண் பேசியதை எழுதியதை நீங்க நிஜம்னு நம்பளைன்னு நினைக்கிறேன். உண்மையைச் சொல்லனும்னா, அந்தப் பெண்ணுக்கும் எங்களுக்கும், பிறகு எங்களுக்கும் வெயிட்டர் ஜார்ஜ்ஜுக்கும் நடந்த உரையாடலை ஒரு சின்ன காமெடி நாடகமாகவே போடலாம். ஆனால், அந்தப் பெண் மற்றும் ஜார்ஜ் போன்ற பல சீன நாட்டினர்களை அந்தக் கப்பல்ல பார்த்தேன், அவங்களோட அந்த தைரியம் நிஜமாகவே பாரட்டப் படவேண்டியதுதான். அங்கு வெயிட்டராக இருக்கும் பல இந்தியர்களையும், தமிழர்களையும் பார்த்தேன் அவர்களும் ஏறக்குறைய இவர்களைப் போலத்தான், ஆனால் ஆங்கிலம் கொஞ்சம் சுமாராகப் பேசுகிறார்கள் அவ்வளவுதான். நாகு பின்னூட்டத்தில் சொன்னது போல் 6 மாதத்திற்கு ஒரு முறை இந்தியா போகலாம். மற்ற நாள் எல்லாம் கப்பலிலேயே இருக்கிறார்கள். எப்படின்னு தெரியலை.
இந்தப் பதிவின் ஆரம்பத்தில டவலில் செய்து மாட்டியிருக்கிறது குரங்கு பொம்மை. இதை எப்படி செய்யரதுன்னு ஃப்ரீயா க்ளாஸ் எடுத்தாங்க, ஆனா அதை செய்யர வேகத்துல ஒரு மண்ணும் ஞாபகத்துல இல்லை.
சரி அடுத்த பதிவில் நசாவு, பஹாமாஸ் விஜயம் பத்தி பார்க்கலாம். அதுக்கு முன்னாடி கப்பல்ல இருந்து நாங்க பார்த்த சூரிய அஸ்தமனம் பார்த்திட்டு போங்க. நான் தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி ஒன்னும் சொல்லலைங்க, நீங்கள் படித்துக் கொண்டிருப்பது எங்களோட பஹாமாஸ் விஜயம் பத்திதாங்க. நம்புங்க.
Thursday, March 10, 2011
சிரிப்பு
செந்தில் அழுதால் கவுண்டமணியுடன் சினிமா ரசிக்கிறது.
சில நேரம் நாம் அழ அழ சிரிக்க வைக்கிறார் ஆனந்த கண்ணீர் என்று
பிறர் அழ நாம் சிரிப்பதில் எத்தனை சந்தோசம் - இது காமெடி
பிறந்த குழந்தை அழுதால் தாய் சிரிக்கிறாள் சுகப்பிரசவம் என்று
குழந்தை அடித்து தாய் அழுதால் மழலை சிரிக்கிறது பாசாங்கு என்று
இதிலும் தான் எத்தனை சந்தோசம் - இது தாய்மை உணர்வு
குடிகாரன் சிரித்தால் குடும்பம் அழுகிறது
குடும்பஸ்தன் அழுதால் ஊரே சிரிக்கிறது
ஏழை அழ பணக்கரான் சிரிக்கிறான்
பணக்காரன் அழுதால் உலகம் சிரிக்கிறது
இதனை என்னவென்று சொல்ல --
பிறர் சிரித்து நாம் சிரித்தால் அது சிறப்பு
பிறர் அழ நாம் சிரித்தால் அது வெறுப்பு
குடும்பம் சிரிக்க நீ அழுதால் அது உழைப்பு
உலகம் சிறக்க நீ சிரித்தால் அது பொறுப்பு
உன் தாய் சிரிக்க நீ சிறந்தால் அதுவே உன் பிறப்பு.
வேதாந்தி
நிலவின் வண்ணம்
நாளில் நீ இல்லை என்று கவிநயா
சொன்னதால் உன் நிறம் வெண்மையோ?
நாகு வானவில்லும் இல்லை என்றதால் நீ கருமையோ ?
அறிவியல் அறிங்கனோ உன்னில் பல வண்ணம் என்பார்
அருகில் சென்றவரோ நீ மஞ்சள் என்பார்
தொலைவில் நின்றவரோ நீ சாம்பல் என்பர்
இலக்கியமோ நீ களங்கம் என்று
குறை கூறியதால் நீ கரு வெண்மையோ
நிலவே உன் வண்ணம் தான் என்னவோ?
உன் வண்ணம் பார்க்கத் தானோ
என் தாய் உன்னை அருகில் அழைத்து
எனக்கு அமுதும் ஊட்டினாளோ
கவிஞரும் காதலரும் விரும்பும் உன்னை
ஓவியனும் மழலையும் விரும்பும் உன்னை
இந்த தமிழ் மன்றம் மறந்ததேனோ ?
கணினியில் பார்த்தால் உன் வர்ணம் தான் எத்தனை
அறிவியலும் உன் உலோக ஆடையால் தான்
உன் உடலும் சிலிர்ப்பதாக சொல்லுகிறதே
உன்னில் என்ன தான் உள்ளது?
நிலவே உன் வண்ணம் தான் என்னவோ
உள்ளத்தின் வண்ணம் தான் உன் வண்ணமோ
அதனால் தானோ என்னவோ உன்னை வெள்ளை என்கிறார் ?
நீ குறைந்தாலும் மறைந்தாலும் வளர்ந்தாலும்
உன் வண்ண எழில் காண எத்தனை குஷி
உன்னில் வண்ணம் தேடும் என்னை
உரைகல்லில் இடாமல் உன் வண்ணம் தன்னை
எனக்கு மட்டும் உரைப்பாயோ ?
நிலவே உன் வண்ணம் தான் என்னவோ ?
வேதாந்தி
Thursday, March 03, 2011
பஹாமாஸ் விஜயம் - 2
க்ரூய்ஸ் கப்பலில் நுழையரதுக்கு பல வழிமுறைகள் போட்டு, பல வசதிகளைச் செய்து வா வா என்று எதிர் கொண்டழைக்க சில ஆட்களைப் போட்டு நம்மள சும்மா திணரடிக்கராங்க. துறைமுகத்திலேயே கார் நிறுத்துமிடமும், அதற்கு முன்னாடியே நமது பெட்டி படுக்கைகளை வாங்கி வைத்துக் கொள்ளவும் வசதி செய்திருக்கிறார்கள். அவர்களிடம் எல்லா சாமான் செட்டையும் கொடுத்துட்டு ஹாயாக கையை வீசிகிட்டு உள்ளே போகலாம். அடுத்த நாட்டுக்குச் போவதாக இருந்தால் மறக்காமல் பாஸ்போர்ட்டை கையிலேயே வெச்சுக்கங்க. இல்லை போகவே முடியாது, ஜாக்கிரதை. கொஞ்சம் தின்பண்டம் ஏன்னா, எப்போ, எந்த குழந்தை, எப்படி, எதுக்கு கத்துமோ தெரியாது கப்புன்னு வாயில அடைச்சு ஒரு கப் தண்ணி ஊத்தி அடக்கிடலாம், தேவையான மருந்துகள், காமெரா, லேப்டாப் கம்ப்யூட்டர் இதை லக்கேஜ்ஜோடு அனுப்பினால் அது கையில் வந்து சேர்ந்து ஒழுங்காக வேலை செய்யுதான்னு தெரியர வரைக்கும் ஒரு மாதிரி அவஸ்தையா இருக்கும்.
நம்ம போர்டிங் பாஸ் கொடுக்கர இடம் ஏர்போர்டை ஞாபகப் படுத்தும் அதே சமயம், எந்த மாதிரி டிக்கெட் வாங்கியிருக்கீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி சீக்கிரமாகவோ அல்லது லேட்டாகவோ உங்களை செக்கின் பண்ணுவார்கள். குழந்தைகளுக்கு முதலில் ஒரு கைப் பட்டை போட்டு இதுங்க ரெண்டும் உங்க கூட வருதாங்கர ரேஞ்ஜில கேள்வி கேட்டுட்டு, அப்புறம்தான் “O they are so cute” ன்னு ஒரு மொக்கையை போட்டுட்டு, முக்கியமான விஷயத்துக்கு வருவார்கள். அது வேற ஒன்னும் இல்லைங்க கப்பல் உள்ளே திங்கர சோறு, காபி, டீ, எலுமிச்சை தண்ண்ண்ணீ ஜூஸைத் தாண்டி எதைச் சாப்பிட்டாலும் அதாவது மஹா ஜனங்களே இந்த லாகிரி வஸ்துகள் எதைச் சாப்பிட்டாலும் வேறு எதை வாங்கினாலும், போட்டு தாளிக்கரதுக்கு அப்பப்ப க்ரெடிட் கார்டை நீட்டு தேய் தேய்ன்னு தேய்க்க வேண்டாம், அதை செக்கின் பண்ணும் போதே வாங்கி ஒரே ஒரு முறை தேய்த்து விட்டு (அப்பாடி என்ன சவுகர்யம் இல்லை) அத நம்ம ரூம் கார்டோடு கோர்த்து விட்டுடுவாங்க. அப்படின்னா, ரூம் கார்ட் தொலைஞ்சு போனாலோ, கொஞ்ச நேரம் காணாம போனாலோ, அடி வயித்தில கரைக்கிர புளில சூப்பரா ஒரு கப்பல் கும்பலுக்கே சாம்பார் வெக்கலாம் ஜாக்கிரதை. நாங்க கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா பரம்பரை, குழந்தைகள் கார்டில் அதைக் கோக்கவேண்டாம்னு சொல்லிட்டு, அது மட்டும் இல்லை குழந்தைகள் நாங்க இல்லாம எதுவும் வாங்க முடியாதுன்னும் சேர்க்கச் சொல்லிட்டோம். சரி, சரி, உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது. வீட்டுக்காரம்மா கார்டை அப்படி கண்ட்ரோல் பண்ண முடியுமான்னு நான் கேக்கலை, அவங்க பக்கத்திலேயே இருக்கரச்சே எப்படி அதெல்லாம் ஒரு சாத்வீகமான மனுஷன் கேக்க முடியும்ன்னு உங்களுக்குத் தோண வேண்டாம். மொதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கங்க, கேள்வி கேக்கரது ரொம்ப ஈசி, கேள்விகளுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.
ஒருவழியாக இதெல்லாம் கடந்து கப்பல் உள்ளே வந்தா முதல் மரியாதைல ராதா படகுல இருந்து இறங்கினதும் இழுத்து கிட்டு இருக்கும் சிவாஜி படக்குன்னு ஒரு பட்சி கொத்தினமாதிரி வெடக்குன்னு காலை உதறுவாரே அது போல ஏதாவது இருக்கும்ன்னு நினைச்சா ஒரு மண்ணும் இல்லை. ஒரு வரவேற்பாளி மாயாஜால படத்துல வர்ர மாதிரி திடீர்ன்னு தோன்றி (என்ன, டொய்ய்ய்ங் ன்னு ஒரு பேக்ரவுண்ட் ம்யூசிக்தான் இல்லை) ஒரு சூப்பர் அன்னாசி பழ ஜுஸ் கப்பை கொடுத்து குடிக்கிறியான்னு கேட்டு “நல்லா இருக்குமா”ன்னு கேக்க வாயெடுக்கரதுக்குள்ள நம்ம ரூம் கார்டை வாங்கி ஒரு தேய் தேச்சு 8 டாலர் ஆச்சுன்னு சொல்லிட்டாங்கப்பு. அப்பால நாம எப்பேர்பட்ட ராஜ பரம்பரை, ஒரே ஒரு கப்பு போதும், நிறைய பேர் வராங்க எல்லாருக்கும் வேணுமில்லையான்னு பெருந்தனமையா அவங்ககிட்ட நடந்துகிட்டு விடு ஜீட்.
இப்படியாக படாத பாடு பட்டு சொகுசு கப்பலேறிய ஒரு தமிழன் என்ற பெயரை வேறுயாரும் எடுத்துக்கரதுக்குள்ள எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்.
காலை 11 மணிக்கு கப்பலுக்குள்ள வந்தா சட்டுபுட்டுன்னு நாலு எடத்த பார்த்தமா, நம்ம ரூமுக்கு வந்தமா, சின்னதா ஒரு த்யானம் செய்தமான்னு இல்லாத குறைக்கு, மதியம் 1 மணிக்குத்தான் ரூமுக்குள்ள போக முடியும்ன்னு சொல்லி வெளியிலேயே நிறுத்திட்டாங்க. “ஏண்டா என்னடா ஆச்சு உங்களுக்கு இவ்ளோ நேரம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு” ன்னு கேட்டே விட்டேன்.
அதுக்கு “கப்பலை நல்லா சுத்திப் பாருங்க, ராவிக்கு ஜூப்பர் ஷோ இருக்கு எங்க ஏதுன்னு தெரிஞ்சுக்க வேணாமா”ன்னு அன்பா சொல்லிட்டு போய்கிட்டே இருந்தானுங்க. இவனுங்களுக்கு எங்கள பத்தி அவ்வளவா தெரியாது, இவங்களோட மிட்நைட் ஷோ எதுக்கும் போகாம நாம ஏன் வரலைன்னு இவனுங்க வருத்தப் பட வெக்கனும்னு மனசுக்குள்ளேயே கறுவிக்கிட்டோம்.
நாங்க போன கப்பல் 10 தளம் கொண்டது. எங்க ரூமும் 10வது தளத்திலதான். 11வது தளத்தில் நீச்சல் குளமும், கப்பலின் முன் பக்கம் 12வது தளத்தில் சாப்பாடும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கப்பலில் எங்களைப் போல பயணித்த 3000 பேருக்கு 850 சிப்பந்திகள்ன்னா பாத்துக்கங்க. சும்மா சொல்லக்கூடாது, கப்பலுக்குள்ளே ஒரு சின்ன நகரமே இருக்குங்க. பெரிய சூதாட்ட விடுதி, 3 சாப்பாடு ஹோட்டல், சின்ன மால், 2 ஸ்பெஷல் ‘தண்ணி’ கிடங்கு, ஒரு பெரிய இரண்டடுக்கு ஆடிட்டோரியம், குழந்தைகள், சிறுவர் சிறுமிகளை கண்காணித்துக் கொள்ள இடம், லைப்ரரி, முடிதிருத்தும் இடம், கூடைப் பந்தாட இடம், டேபிள் டென்னிஸ் ஆட இடம் என்று அசத்தோ அசத்துன்னு அசத்ராங்க. கொஞ்சம் அசந்து மறந்து எங்கெயாவது நின்னா போச்சு ஒன்னு “என்னங்க ஏதாச்சும் வேணுமா, ஏதாச்சும் தெரியனுமா, என்னைய கேளுங்க நான் சொல்றேன்” னு வந்துடரானுங்க, இல்லை “ஏதாச்சும் சாப்பிடரீங்களா, கொண்டுவரட்டுமா”ன்னு கேக்கராங்க. இப்படியெல்லாம் நம்மள கவனிச்சா நாம திரும்பத் திரும்ப கப்பல் பயணத்துக்கு வருவோம்னு எந்தப் பயபுள்ளையோ போட்டு கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்.
ஒருவழியா ரூமுக்கு நம்மள அனுப்பி அதப் பார்த்தா கொஞ்சம் மலைப்பாத்தான் இருந்துச்சு. காசுக்கேத்த தோசைன்னு சும்மாவா சொன்னாங்க.
ஒரு கிங் சைஸ் பெட்
அவளுடைய வேலை சூப்பர் ஈசி.
அவள்: (முகமெல்லாம் பல்லாக) “ஓ, லெமனெட் வெரி குட்”
ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, ஆங்கிலம் சுத்தமா தெரியாம, இவங்க எல்லாம் என்ன தைரியத்தில அமெரிக்காவுக்கு வேலைக்கு வராங்கன்னு தெரியலை, நம்ம அப்பா அம்மா வராங்களேன்னு சொன்னா அவங்க இங்க வேலைக்கு வரலை (நம்ம வீட்டுல குழந்தைகளை பாத்துக்கர வேலைக்கு வராங்கன்னு சொல்லி சிண்டு முடியாதீங்க சொல்லிட்டேன்). நம்மளோட இருக்கரதுக்குத்தான் வராங்க அதனால அவங்களுக்கு நல்லா ஆங்கிலம் பேச வரலைன்னா பரவாயில்லை. இவங்க எல்லாம் இப்படி வரதுக்கு அவங்க வருமானமும், அவங்களோட சர்வைவல் எண்ணமும்தான்னு நினைக்கிறேன். அந்த பெண்ணுடன் நடந்த டைலாக்கை கொஞ்சம் காமெடிக்காக இங்க போட்டாலும், அந்தப் பெண்ணையும் ஜார்ஜையும் நினைச்சா பாவமாவும் இருக்கு, பாராட்டவும் தோணுது.
அடுத்தப் பதிவில கோகோகே பீச்சுக்கு கூட்டிகிட்டு போய் சுத்தி காமிக்கறேன்.
-முரளி இராமச்சந்திரன்.
Tuesday, March 01, 2011
பஹாமாஸ் விஜயம் - 1
ரிச்மண்ட்டில் சிலரிடம் பேசியபோது “அதுவா, அது ஒன்னும் காசு அதிகமான விஷயம் இல்லை, ஒரு 800$ல் எல்லோரும் போயிட்டு வந்துடலாம், சும்மா சூப்பரா இருக்கும்” என்று அவர்கள் பங்கிற்கு கொஞ்சம் விசிறிவிட்டார்கள். தீ கணன்று கணன்று எரிந்து, எந்த க்ரூய்ஸ் நல்லது, எதில் என்ன கிடைக்கிறது, நம் ப்ளானுக்கு எந்த க்ரூய்ஸ் ஒத்து வரும், என்றெல்லாம் பார்த்து பிறகு ஒன்றை முடிவு பண்ணினோம். அதுவரை இது கொஞ்சம் விலை அதிகமான ஒரு சமாச்சாரம் என்பது டிக்கெட் விலையை பார்க்கும் வரை உறைக்கவில்லை. பார்த்ததும் திடீர்ன்னு ஒரு பக்கெட் பச்சை தண்ணியை தலைமேல ஊத்தினா மாதிரி ஆயிடுச்சு. இதுக்குள்ள என் பெண்கள் ரெண்டு பேரும் அவங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லோருக்கும் இப்படி க்ரூயிஸ் போகப் போவதாக சொல்லிட்டதாக சொல்லவும், சரி நாமதான் முன் வெச்ச காலை பின் வெக்க மாட்டோமேன்னு எங்களை சமாதானம் செய்து கொண்டுடோம் (வேற வழி). அதிலேயும் பால்கனி இருக்கனும், ரெண்டு கிங் பெட் இருக்கனும், அது இருக்கனும், இது இருக்கனும்னு வீட்டில எல்லோரும் பலப் பல கண்டிஷன்ஸ் போட்டு அதெல்லாம் இருக்கரமாதிரி ஒரு நல்ல சுப மூஹூர்த்த தினத்தில் டிக்கெட் புக் பண்ணினோம்.
என்னய்யா ஒரு ப்ரயாணத்திற்கு டிக்கெட் வாங்கிட்டு இப்படி அலுத்துகரான் இவன்னு சீப்பா நினைக்காதீங்க. டிக்கெட் வாங்கினதும்தான் தெரிஞ்சது பஹாமாஸ்ல சுத்தரதுக்கு தோதா நல்ல அரைநிஜார் இல்லை, அது இல்லை இது இல்லைன்னு சொல்லி ஒரு டப்பா சினிமால தனுஷ் பாடின மாதிரி ‘துண்ட காணோம் துணிய காணோம், தூங்கும் போது துட்ட காணோம்”ங்கர கதையா செலவுமேல செலவு செய்து ஒரு வழியா ப்ரயாணத்துக்கு தயாரானோம். இதர செலவுகளை கணக்கு பண்ணினா, ஆனை அரை காசு, அங்குசம் ஆறு காசுங்கர கதையானது ஒரு தனிப் பதிவே போடக்கூடிய சமாச்சாரம்.
நல்ல வேலையா இங்கிருந்து ஃப்ளோரிடாவில் கேப் கானவரல்ங்கர இடத்துக்கு எங்களோட வேனிலேயே போகலாம்னு முடிவு செய்தோம். இந்த இடத்தில இருந்துதான் அமெரிக்க விண்வெளி ராக்கெட்கள் செலுத்தப் படுகிறது. இவர்களுக்கும் நமக்கும் (இந்தியாவிற்கும்) என்ன வித்தியாசம்ன்னா இவங்க விண்வெளி ராக்கெட்கள் எப்போதாவது வெடிக்கிறது, நம்மூரில் எப்போதாவது வெடிக்காமல் விண்வெளிக்கு போகிறது. இதிலிருந்து தெரியும் உண்மை, இந்தியாவில்தான் நல்ல வெடிக்கும் ராக்கெட்டுகள் இருக்கிறது, பின்ன என்னங்க எத்தனை வருஷமா நாம தீபாவளிக்கு வெடிக்கர ராக்கெட், பூவாண ராக்கெட்ன்னு விட்டுகிட்டு இருக்கோம். இவ்ளோ செலவு பண்ணி ஒரு ராக்கெட் வெடிக்காம சும்மா மேல போனா, பாக்கரவன்லாம் என்ன கேணையங்களா.
எல்லா ஏற்பாடுகளும் செய்யரதுக்கு முன்னாடி, என் மனைவியும் குழந்தைகளும் ஒரு கவுண்ட் டவுன் காலெண்டர் தயாரித்து தினம் ஒரு நாளை அடித்து அடித்து அவங்க பங்கிற்கு எதிர்பார்ப்பை அதிகப் படுத்திக் கொண்டே வந்தார்கள். இதுக்கு நடுவில நானும் கோபால் பல்பொடி விக்கரவன் மாதிரி வாரா வாரம் ஊர் ஊரா போய் வாரக் கடைசியில் வீட்டிற்கு வந்ததும் முதலில் அந்த காலெண்டரைப் பார்த்து இன்னும் எத்தனை நாள் இருக்கு என்று என் பங்கிற்கு கொஞ்சம் ப்ரெஷர் ஏத்தி விட்டேன்.
இதற்கு நடுவில் நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேலை ஒரு வாரம் முன்னாடியே முடிந்துவிட என்னை ப்ரயாணம் போக இருந்த வாரம் தலைநகரத்தில் வேலை செய்ய சொல்லி அனுப்பிவிட்டார்கள். வேலை ஒன்னும் பெரிசில்லை பிடிங்கின ஆணிகள் சரியா வந்து சேர்ந்ததா, ஆணி கணக்கு சரியா இருக்கா, சேதாரம் எவ்வளவு, செய்கூலி எவ்வளவுன்னு கணக்கு போட்டு கணக்கு போட்டு எல்லாம் சரியா இருக்கா, இல்லைன்னா என்ன ஆச்சுன்னு கதை விட்டு காதுல பூசுத்தர வேலை. காலைல 8:30க்கு ஆஃபீஸ் உள்ள போனா ஹோட்டலுக்கு திரும்பி போக இரவு 10-10:30 ஆகிடும். இதுக்கு நடுவில அந்த வாரம் பனி மழை பொழியப் போகுதுன்னு சொல்லப்பட வீட்டுல எல்லாரும் கவலைப்பட ஆரம்பித்தார்கள் - அது என்ன எதுக்கெடுத்தாலும் எல்லாரும் சொல்றாங்க, சொன்னாங்க ன்னு எல்லாரும் சொல்றாப்பல நீயும் எல்லாரும்னு சொல்ல வரேன்னு நீங்களும் சொல்லாதீங்க, அப்புறம் யார் அந்த எல்லாரும்னு, எல்லாரும் கேக்கர மாதிரி நானும் கேட்பேன். மேல என்ன எழுதினேன்னு எனக்கே புரியலை உங்களுக்கும் புரியலைன்னா கவலைப் படாதீங்க. அடுத்து படிங்க.
என்ன சொல்லிகிட்டு இருந்தேன், வீட்டுல கவலைப் பட ஆரம்பிச்சாங்கன்னுதானே, கரெக்ட், ஆனா அவங்க கவலைப் பட்டது நான் எப்படி தலைநகரத்தில இருந்து கொட்டர பனில வீடுவருவேன்னு இல்லை, எப்படி ப்ரச்சனை இல்லாம கப்பல்ல போகப் போறோம்ன்னு. என்ன, எல்லா வீட்டிலயும் இதே கதைதானா. சரி சரி அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம். ஒருவழியா ஒரு 8 மணிநேரம் ப்ரயாணம் செய்து தலைநகரத்தில இருந்து ஃப்ளோரிடா போக இருந்த தினத்திற்கு முன் தினம் வீடு வந்து சேர்ந்தேன். மட மட வென்று எல்லா ஏற்பாடுகளும் செய்து மறுதினம் மதியம் கிளம்பி மேளதாளங்கள் எதுவும் இல்லாமல், நான் எப்போது ஊருக்கு போனாலும் வீடு வரை வந்து கண்டிப்பாக இவன் ஊருக்கு போகிறானா, குறைந்த பட்சம் 10 நாளாவது இவன் தொல்லை இல்லாமல் இருக்கலாமா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் என் ‘ஆத்மார்த்த’ நண்பர்களும் வழியனுப்பாமல் ஃப்ளோரிடா நோக்கி எங்களது ரதத்தை செலுத்தினோம்.
மறுதினம் மதியம் சொகுசு கப்பல் கிளம்பர போர்ட்டுக்கு பக்கத்திலேயே ஒரு நல்ல தங்கும் இடம் போய் சேர்ந்தோம்.
பக்கத்தில் இருந்த பீச்சில் காலார நடக்கும் போது ஒரு ஸ்டிங் ரே கிடக்க, அதை தொட்டால் ‘கதை கந்தலாயிடும்’ என்று மனைவியும் குழந்தைகளும் பயப்பட, அதி பயங்கர தைரியசாலியான நான் அவர்களுக்காக என் தைரியத்தை மறைத்துக் கொண்டு ஒரு புகைப் படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். ஒரு சின்ன நடுக்கம் கூட இல்லாமல் எப்படி துல்லியமாக படமெடுத்திருக்கிறேன், என்னை பார்த்து பயம் பயந்து ஓடிடும்.
மீதி அடுத்த பதிவில்.
முரளி இராமச்சந்திரன்.
Thursday, February 24, 2011
பஹாமாஸ் பயணம்
தெரியாதா, எனக்கும் தெரியாது, ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் சமீபத்தில் க்ரூஸ் அதாங்க சொகுசு சுற்றுலா (தப்பா படிச்சுட்டு "என்னாது, சொகுசு சுந்தரியா"ன்னு கேக்கக் கூடாது) பஹாமாஸ் போய் வந்த கதை நாளைக்கு வெளியிடப் போறேன்".
நாகு: "நாளைக்கா!"
முரளி: "உடனே நாளைக்குன்னா நாளைக்கா, ம்ம்ம்ம் நாளான்னிக்கு, ஹும்ம்ம் அதுக்கு மக்கா நாள்ன்னு வெச்சுக்கங்க எழுதி ஒரு ரெண்டு பதிவு, போட்டு வாங்கிடலாம்னு இருக்கேன். உடனே ஊருக்கு போகனும், ஆஃபீஸ்ல ஆணி புடுங்கணும், தமிழ் சங்க விழாவில தட்டி தட்டி கைவலிக்குது, விசிலடிச்சு வாய் வலிக்குது, சாப்பிட்டு சாப்பிட்டு வயிறு வலிக்குதுன்னு சொல்லாம, மருவாதையா படிங்க, ரசிங்க, பின்னூட்டமிடுங்க சரியா".
-முரளி இராமச்சந்திரன்.
Wednesday, February 23, 2011
தமிழ் தாத்தா உ .வே. சா. - வறுமையிலும் செம்மை (பகுதி 2)
மகன் சாமிநாதய்யரின் வற்புறுத்தல் காரணமாக தந்தையார் தன் மகனை தமிழ் படிக்க அனுமதித்தாரே தவிர அவருக்கும் அதில் பூரண சம்மதம் இல்லை. ஆங்கில படிப்பு படிக்க வைத்து அரசாங்க உத்தியோகத்துக்கு மகனை அனுப்பினால் குடும்பம் வயிறாரச் சாப்பிடலாம் என்று எண்ணினார். அந்த நிலையில்தான் தன் மகனை அரை மனதோடு தமிழ் படிக்க அனுமதித்தார்.
ஐயரின் தந்தையார் வேங்கடசுப்பையர் பலருடைய உதவியில் வாழ்ந்து கொண்டிருந்தார். நிலையான வருமானம் இல்லை. குடும்பத்துக் கடனை அடைக்க என்றோ தானமாக வந்த நிலத்தை ஈடு வைத்துத்தான் அவருடைய சீமந்த கல்யாணம் நடந்தது. அந்த கடன் ரூபாய் 500 ரூபாயை வட்டியுடன் சேர்த்து 730 ரூபாயாக பல வருடங்களுக்கு பிறகு சாமிநாதய்யர்தான் அடைத்தார். அந்த அளவுக்கு கைக்கும் வாய்க்குமாகத்தான் அவருடைய பெற்றோர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
ஆகையால் ஆர்வம் காரணமாக தமிழ்க்கல்வி தொடங்கினாலும் அதற்காக அதிக செலவு செய்ய வழியில்லை . ஐயருடைய தந்தையாருக்கு நன்கு தெரிந்த சடகோபய்யங்கார் தமிழ் கற்பிக்க முன்வந்தார். அரியலூர் சடகோபய்யங்கார் நல்ல தமிழறிஞர். பல நாடகங்களை எழுதியிருக்கிறார். அவருடைய குடும்பத்தில் பல முன்னோர்களும் தமிழையும் வடமொழியையும் நன்கு கற்றவர்கள். அவர் எழுதிய சிவராத்திரி மகாத்மியம் என்ற நாடகம் அந்த நாட்களில் பல முறை மேடை ஏற்றப்பட்டது. . வைணவரனாலும் சமய சமரச நோக்கம் கொண்டவர்.
சாமிநாதய்யர் சில வருடங்கள் சடகோப ஐயங்காரிடம் தமிழ் கற்றார். ஐயரின் ஆர்வத்தையும் எளிதில் படித்தறியும் ஞானத்தையும் கண்டு வியந்து அவரை மேலும் பெரிய தமிழறிஞர்களிடம் சென்று தமிழ் கற்க கூறினார். அவர். அவருடைய முயற்சியில் அன்று பிரபலமாக இருந்த தமிழ் அறிஞரான திரிசரபுர மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் அனுப்பி வைத்தார்.
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி கற்பது என்பது அன்றைய நிலையில் ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றதற்கு சமம் என்று கூறுவார்கள் அந்த பெருமை சாமிநாதய்யருக்கு கிடைத்தது. ஐயர் பிள்ளையவர்களுடன் தங்கி இருந்து பாடம் கற்க வேண்டும் என்று ஏற்பாடாகி இருந்தது.
பிள்ளையவர்கள் அடிக்கடி திருவாவடுதுறை ஆதினத்து மடங்களுக்கு செல்வார். சென்ற இடத்தில் பல நாள் தங்குவார் சாமிநாதய்யரும் அவருடன் சென்று தங்கி பாடம் கேட்பார்.
எல்லா பாடங்களும் சுவடிகளைக்கொண்டுதான். பிள்ளை அவர்களுக்கு பல புராணங்கள் மனப்பாடமாகத் தெரியும், அவரே இருபது தலபுராணங்களை இயற்றியிருக்கிறார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் வறுமையில் வாழ்ந்தவர்தான். சைவமடங்கள் கொடுத்த பொருளுதவியைக் கொண்டுதான் அவர் வாழ்ந்தார்.
பல மாதங்கள் பிள்ளை மாயவரத்தில் தங்கி இருந்தார். சாமிநாதய்யரும் அவரோடு தங்கி தமிழ் படித்து வந்தார். அன்றைய குல ஆச்சாரப்படிசாமிநாதய்யருக்கு பிராமணர் ஒருவர் வீட்டிலிருந்து உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பாத்துரை என்ற அந்த பிராமணருக்கு மடத்திலிருந்து அரிசி முதலிய பொருட்களை கொடுக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் என்ன காரணத்திலோ மடத்திலிருந்து அரிசி மற்ற மளிகைப் பொருட்கள் அப்பாத்துரை ஐயர் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு ஐயர் பிள்ளையவர்களுடன் வேறு ஊருக்கு புறப்படவேன்டியதாயிற்று. தான் உணவு சாப்பிட்ட வீட்டிற்கு எந்த கைம்மாறும் செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு அவரை உறுத்தியது. அப்பாத்துரை ஐயரை நேரில் பார்த்து மடம் கொடுக்க ஒப்புக்கொண்ட அரிசி மற்ற மளிகைப்பொருளை பெற்றுத் தருவது பற்றி பேசினார். சாமிநாதய்யர் தான் ஊருக்கு செல்வதற்கு முன் எதுவும் நடக்கப்போவதில்லை என்று உணர்ந்தார்.அந்த நாட்களில் உள்ளாடை அணிவதற்காக ஆண்கள் இடையைச் சுற்றி அணியும் ஒரு கயிறு. பிராமணசிறுவர்களுக்கு உபநயன நாளில் வெள்ளியால் செய்த இந்த கயிற்றை மாமன் சீராகக் கொடுப்பது வழக்கம். தன் இடையில் கட்டியிருந்த வெள்ளி அரைஞான் கயிற்றை கழற்றி அப்பாத்துரை ஐயரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு தனக்கு சில மாதம் உணவு அளித்ததற்கு மாறாக அதை விற்று பணத்தை எடுத்தக் கொள்ளும்படி வேண்டினார்.
ஆனால் அப்பாத்துரை ஐயர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். "எனக்கு அந்த அளவுக்கு பணம் முக்கியம் இல்லை. நீ ஊருக்குப் போய் உன் தமிழ்ப் படிப்பை தொடர்ந்து படித்து முன்னேறினால் போதும்", என்று பெரிய மனதோடு வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். பிற்காலத்தில் அப்பாத்துரை ஐயர் குடும்பத்திற்கு ஐயர் சில உதவிகளை நன்றியுணர்வோடு செய்தார்.
கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் பொறுப்பை ஏற்ற பிறகு நேரம் கிடைத்தபோதெல்லாம் சுவடிகளை தேடி பல ஊர்களுக்கு போனார். சுவடி தேடி அவர் செய்த பயணத்தில் அவருடைய கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லலாம்.
பழங்காலத்தில் புலவர்கள் வாழ்ந்த சிற்றூர்கள், ஜமீன்தார்கள் இல்லங்கள், இப்படியாக பல ஊர்களுக்கு போனார். மருத்துவம் செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள், புலவர்களின் சந்ததியினர், இப்படி பலதரப்பட்ட மக்களை சந்தித்தார். பலர் செய்த உதவியைக் கொண்டு பல ஆயிரக்கணக்கான சுவடிகளைச் சேகரித்தார்.
மருத்துவம், சோதிடம் தொடர்பு உடைய நூல்கள் உள்ளிட்ட பல்துறை சார்ந்த சுவடிகள் அவருக்கு கிடைத்தன. தலபுராணம், சமயம் சார்ந்த பல நூல்கள், இலக்கியங்கள் ஆகியவை அதிகமாகக் கிடைத்தன. சீவகசிந்தாமணி என்ற சமண சமய இலக்கியத்தை இருபது இடங்களிலிருந்து கிடைத்த பல பிரதிகளை ஒப்பிட்டு அச்சில் ஏற்றி புத்தகமாக வெளியிட்டார்.
அந்த நாட்களில் பெரிய புத்தகத்தை அச்சிட்டு வெளியிட தகுந்த அச்சகங்கள் சென்னையில்தான் இருந்தன.ஆகையால் புத்தகம் அச்சாகும் வேலையை கவனிக்கவும் புருப் படித்து திருத்தி கொடுக்கவும் ஐயர் அடிக்கடி கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வர வேண்டியதாயிற்று. சீவகசிந்தாமணி என்ற நூலை அச்சிட பல தமிழன்பர்களின் உதவியை நாடினார். சில பேரிடமிருந்து மட்டுமே உதவி கிடைத்தது. ஒரு கட்டத்தில் அச்சாகி பிரஸ்ஸில் இருந்த புத்தகத்தை எடுக்கவேண்டியிருந்தது. அச்சகத்துக்கு அச்சுக்கூலி கொடுக்க சாமிநாத அய்யரிடம் பணம் இல்லை. இதுபோன்ற நேரங்களில் அவர் கடன் வாங்கி சமாளிப்பது வழக்கம். ஏற்கனவே கடன் சுமை அதிகமாகிவிட்டது.. அச்சுக்கூலியைக்கொடுத்து புத்தகத்தை எடுத்து வெளியிட அவருக்கு வேறு வழி தெரியவில்லை. ஆழ்ந்த யோசனைக்கு பிறகு தனக்கு பாண்டித்துரை தேவர் கௌரவிக்கும் வகையில் போர்த்திய பொன்னாடை பற்றிய நினைவு வந்தது.
விலை உயர்ந்த பொன்னாடை அது. அந்த பொன்னாடையை எடுத்துக்கொண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்த சுப்ரமணிய தேசிகரிடம் காட்டி இது என்ன விலைக்கு போகும் என்று கேட்டார். அதிர்ச்சி அடைந்த தேசிகர் ஏன் இதை விற்கப் போகிறீர்களா?இது தேவர் போர்த்திய பொன்னாடை அல்லவா என்று கேட்டார். எனக்கு வேறு வழி தெரியவில்லை அச்சகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து வெளியிட வேண்டும் என்று ஐயர் கூறினார். நீங்கள் இதை விற்ற செய்தி தேவருக்கு தெரிந்தால் அவர் மிகுந்த வேதனை படுவார் என்று கூறினார் ஆதீனகர்த்தா. அந்த பொன்னாடையை விற்கவிடாமல் தடுத்து ஆதீனகர்த்தா தானே வாங்கி வைத்துக் கொண்டார். தற்காலிகமாக அய்யருக்கு பண உதவி செய்து நூல் வெளியிட ஏற்பாடு செய்தார்.
இப்படி பல சோதனைகளுக்குமிடையே தான் அய்யர் தமிழ் நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்த பழந்தமிழ் நூல்களை அச்சில் ஏற்றி புத்தகமாக வெளிக்கொணர்ந்தார்,. .மிகப்பிற்காலத்தில்தான் சாமிநாதய்யருடைய பணிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம்.
வெளிநாட்டில் வாழ்ந்த சில தமிழறிஞர்கள் அய்யரின் அரிய பணியை பாராட்டினார்கள். ஜூலியஸ் வின்சோன் என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஐயர் பதிப்பித்த நூல்களைப் படித்துவிட்டு அவருக்கு ஒரு நீண்ட பாராட்டு கடிதம் எழுதினார். திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ஜி..யு. போப் அவர்களும் அய்யரைத் தொடர்பு கொண்டு பாராட்டு கடிதம் எழுதினார்.
சாமிநாதய்யருடைய பணியின் சிறப்பையும் அந்த பணியை நிறைவேற்றுவதில் அவர் சந்தித்த சோதனைகளையும் பற்றி பாரதியார் நன்கு அறிந்திருந்தார். அய்யருடைய தமிழ்ப்பணியின் பெருமையை வெள்ளையர் அரசாங்கம் உணர்ந்து அவருக்கு டாக்டர் பட்டமும் மற்ற சில விருதுகளும் வழங்கியது. ஆனால் அவர் எப்பொழுதும் நிதி நெருக்கடியில் இருந்ததையும் பாரதியார் அறிந்திருந்தார். சாமிநாதய்யருடைய பெருமையை பாரதியார் இப்படி பாடினார்.
சாமிநாதய்யருடைய புகழ் வளர்ந்ததில் அதிசயம் ஏதும் இல்லை. சூரியனுக்கு ஒளிஇருப்பது அதன் இயற்கை. தேவர்கள் அமரத்வம் பெற்றது இயல்பானதுதான், இதில் அதிசயப்பட எதுவும்.இல்லை. அதுபோலவே சாமிநாதய்யருக்கு புகழ் வளர்வதும் இயல்பானதுதான் என்று பாரதியார் பாடினார். தமிழறியாத அன்னியரான வெள்ளையரே இப்படி ஐயரை புகழ்ந்தார்கள் என்றால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர் காலத்தில் ஐயர் வாழ்ந்திருந்தால் அவருடைய பெருமை எப்படி இருந்திருக்கும் என்று பாரதி கேட்கிறார்.
மேலும் ஐயருக்கு ஆறுதல் கூறுவதுபோல அடுத்த கவிதையில் கூறுகிறார். பணம் இல்லையே, பலவகை சுகங்களை அனுபவிக்கும் இனிய வாழ்க்கை அமையவில்லையே என்று கவலை வேண்டாம் ஐயரே. உங்களுக்கு ஒரு பெருமை உண்டு. பொதியமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் கொடுத்த தமிழ் மொழி உள்ளவரை புலவர்கள் வாய் உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும். உங்களுக்கு இறப்பு என்பதே இல்லை.என்று பாரதியார் பாடுகிறார். இப்பொழுது பாரதியார் பாட்டை பார்ப்போம்.
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்று மனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றி துலங்குவாயே.
Monday, February 21, 2011
நாளின் நிறம்
பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.
கதிரவ னுடனே பிறந்த போதும்
கறுப்பில் முழுகிக் கிடக்கும் சில நாள்-
முகிலின் நடுவே பிறந்து வந்து
மழையாய்க் கண்ணீர் பொழியும் சில நாள்-
கீழை வானச் சிவப்பில் குளித்து
தகதக தகவென ஜொலிக்கும் சில நாள்-
பசுமை எழிலில் தானும் தோய்ந்து
புன்னகை மிளிர வலம்வரும் சில நாள்-
நீல வானைக் கையில் ஏந்தி
நேசக் கரத்தை நீட்டும் சில நாள்-
அமைதி யென்னும் விளக்கைக் கொண்டு
ஆனந்த ஒளியை ஊட்டும் சில நாள்-
ஒவ்வொரு நொடியும் பின்னிப் பிணைந்து
இணைந்தே நடக்கப் பிடிக்கும் சில நாள்-
முழுக்க முழுக்கத் தவிர்த்துத் தனியே
துவண்டு கிடக்க, கடக்கும் சிலநாள்-
பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.
வளரும் அன்பில் நிறங்கள் மாறும்
நாள் ஒவ்வொன்றிலும் நலமே சேரும்.
--கவிநயா
பி.கு. நாகு ரொம்ப வருத்தப்பட்டாரேன்னு, இப்போதான் எழுதிய கவிதை இங்கே... சுடச் சுட... :)
Sunday, February 20, 2011
குற்றுயிரும் குலையுயிருமாய்...
நேற்று சும்மா முயற்சி செய்து பார்க்கலாம் என்று நம் வலைப்பதிவில் வலது பக்கம் 'அந்த நாள் ஞாபகம்' என்று ஒரு பகுதியைச் சேர்த்தேன். அந்தப் பகுதியில் நம் பதிவுகளில் இருந்து சீட்டு குலுக்கல் முறையில் (randomக்கு தமிழில் என்ன) ஒரு ஐந்து பதிவுகளைப் பொறுக்கி காண்பிக்கப்படும். ஏன் என் பதிவு தெரியவில்லை என்று என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். அந்த ராண்டம் பகவானிடம் முறையிடுங்கள். பல பழைய பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஹூம்... ஆஹா ஓஹோ என்று இருந்த பதிவு இப்படி கேட்பாரற்று கிடக்கிறது என்று வருத்தமாக இருந்தது. என்ன செய்ய? எழுதிக்கொண்டிருந்த ஒரு சிலரும் தனிக்கட்சி பிடித்துப் போய்விட்டார்கள். எழுதுங்கள், எழுதுங்கள் என்று நான் தொந்திரவு செய்வதால் நீர்வைமகள் பார்க்குமிடங்களில் எல்லாம் ஓடி ஒளிகிறார். ஏதோ அந்த கோபாலகிருஷ்ணர் தயவிலும், மீனா, முரளி தயவிலும் கொஞ்சம் உயிர் காட்டுகிறது. பரதேசியை வேண்டுமென்றே விட்டிருக்கிறேன். என்ன செய்கிறார் என்று பார்க்கலாம் :-)
படிப்பவர்களும் தங்களுக்கு முடிந்த மொழிகளில் - ஆங்கிலமோ, உருதுவோ, அரபியோ, ஹிந்தியோ - பின்னூட்டம் இட்டால் - எழுதுபவர்களுக்கும் எழுதுபவர்களைத் தேடும் எனக்கும் கொஞ்சம் தெம்பாயிருக்கும். அதுவும் மு.கோ.விடம் தென்னிந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் கோபால் பல்பொடிக்கு அடுத்ததாக பாவிப்பது நம் பதிவுத்தளம்தான் என்று ஜல்லியடித்து வைத்திருக்கிறேன். அனலிடிக்ஸ் கிராபிக்ஸ் காட்டு என்று அவர் கேட்காமலிருக்கும்வரை அந்த பஜனை நடக்கும். ஆனாலும் மனிதர் கலக்குகிறார். தமிழ் இசை, இலக்கிய உலகின் நடமாடும் சைக்ளோபிடியாவாக இருக்கிறார் அவர்.
கல்கியின் பொன்னியின் செல்வன் இணையத்தில் இன்னும் பிரபலமாக இருக்கிறது. சில புண்ணியவான்கள் அந்த புத்தகத்தை இந்த காலக் கருவிகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். உங்கள் ஆப்பிள் கருவிகளில் நிறுவிக் கொள்ள இந்த தளத்தில் பாருங்கள். ஆன்ராய்ட் கைப்பேசியில் வேண்டுமானால் இக்கட சூடு. படங்களும் உண்டா என்று நொட்டைக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. படங்கள் புத்தக வடிவிலேயே இல்லை. வேண்டுமானால் திருச்சி நெல்லித் தோப்பில் பாருங்கள். யாராவது கல்கியில் வந்த தொடரை பைண்ட் பண்ணி வைத்திருக்கலாம். முக்கியமான விஷயம். இந்தக் கதை ஆரம்பிப்பது நான் வளர்ந்த திருமுனைப்பாடி நாட்டினில். அதுவும் ஊழல் ஓங்கி வளர்ந்த வீராண ஏரிக்கரையில் :-)
ஆப்பிள் கருவிகளில் திருக்குறள், ஆத்திச்சூடி எல்லாம் கிடைக்கிறது. நம் பதிவுகள் போல படிக்கத்தான் ஆளில்லை. :-)