உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வருகிற ஜூன் 22 தொடங்கி ஐந்து நாட்கள் கோயம்புத்தூர் நகரில் நடைபெறவிருக்கிறது . அதையொட்டி சில சிந்தனைகளை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது .
நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு அரசியல் சாயம் அதிகமாக பூசப்படும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது . ஏற்கனவே ஆளும் கட்சியின் சுவரொட்டிகளும் பிரசுரங்களும் தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் தெருக்களை அலங்கார (அலங்கோல)படுத்திக்கொண்டிருக்கி றது . மாநாடு சம்மந்தப்பட்ட எல்லா பிரசுரங்களிலும் தமிழ்நாட்டு அரசியலுக்கே உரித்தான தனி நபர் துதிபாடல் மேலோங்கி நிற்கிறது .ஜூன் மாதம் முதலமைச்சர் பிறந்த நாள் வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதையொட்டியே மாநாடு ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிலர் கூறுகிறார்கள் .
நமக்குள்ள கவலையெல்லாம் எந்த தனிநபருக்கு துதி உச்சஸ்தாதியில் பாடப்படுகிறது என்பதல்ல.
தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அதன் செம்மொழி அந்தஸ்துக்கும் கடந்த காலத்தில் குரல் கொடுத்த எல்லா தனி நபர்களும் இந்த மாநாட்டு நேரத்தில் நினைவு கொள்ளப்படுவர்களா என்பதுதான் .அவர்களுக்கு துதி பாட வேண்டியதில்லை . தமிழ் வளர்ச்சியில் அவர்களுடைய
பங்களிப்பு கறாரான முறையில் மதிப்பீடு செய்யப்படுமா அவர்கள் நினைவில் கொள்ளப்படுவர்களா என்பதுதான் நம்முடைய கேள்வி.
அப்படியானால் தமிழ் மொழியை முதல்முதலாக செம்மொழி என்ற வார்த்தையால் அலங்கரித்து தமிழ் தனித்து இயங்கும் வல்லமை பெற்ற மொழி என்று
கூறிய பரிதிமாற்கலைஞர் நினைவில் கொள்ளப்படவேண்டிய பலரில் ஒருவர். தமிழ்ப்பற்று காரணமாக சூரியநாராயண சாஸ்த்ரி என்ற தன் பெயரையே பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக்கொண்டவர் அவர். .தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி என்று கூட அவரை
குறிப்பிடலாம்.
இன்று தனித்தமிழ் இயக்கம் என்ற பெயரால் மொழி புராணங்களை அடிப்படையாகக்கொண்ட மூட நம்பிக்கைகளை மொழித்துறையில் திட்டமிட்டு வளர்த்துக்கொண்டிருக்கும் பகுத்தறிவுவாதிகளை ஒதுக்கிவிடலாம். ஆனால் ஒரு காலகட்டத்தில் தமிழின் பெருமையை அதன் நியாயமான இடத்தை உறுதி செய்ய தனித்தமிழ் இயக்கம் தேவைப்பட்டது. அந்த இயக்கம் மற்ற மொழிகளின் மீது வெறுப்[பை வளர்க்காமல் தமிழ் மொழியின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டியிருந்தது ஆனால் இன்று தனித்தமிழ் இயக்கம் வடமொழி எதிர்ப்பு கூட்டமாக சுருங்கிப்போய்விட்டது .மொழி வைதீகம் பேசுவதையும் மற்றமொழிகளை தீட்டு மொழியாக கருதி அந்த தீட்டு படாமல் தமிழை வளர்ப்பதாக பாசாங்கு செய்கிறது .தமிழ் மொழி வரலாற்றில் மற்ற மொழிகளின் பங்களிப்பை நிராகரிப்பது என்ற பாதையில் திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது. .
வேகமாக உலகமயமாக்கல் என்ற இன்றைய உலகச்சூழலில் தமிழ் மட்டுமல்ல , உலகத்தில் எந்த மொழியும் தனித்து இயங்க முடியாது என்பதுதான் உண்மை.
ஆனால் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழின் பெருமையை மீட்டு எடுக்க அத்தகைய இயக்கம் தேவைப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.
அன்றைய நிலையில் தமிழ் மொழியின் பெருமையை முழங்கியவர் பரிதிமாற்கலைஞர் பல தமிழ் நாடகங்களை எழுதி மேடை ஏற்றினார்..பல ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.
அன்று தமிழ் மொழி கல்லூரிகளில் பாடமொழியாகக்கூட இடம் பெறவில்லை. அந்த நிலையில் உயர்கல்வியின் ஒரு பகுதியாக தமிழ் மொழி கல்லூரி பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்று சொல்வதற்கு கூட 1920 களில்ஒரு சிலரே இருந்தனர் .
அந்த நிலையில் கல்லூரிகளில் தமிழுக்கு இடம் வேண்டும் என்று குரல் கொடுத்து பேசியபடியே தன் உயிரை கொடுத்தார் ஒருவர்.
அவர்தான் மாதவய்யா என்ற எழுத்தாளர். பத்மாவதி சரித்திரம் என்ற நாவலை எழுதியவர் என்ற செய்தி மட்டுமே மாதவைய்யவைப்பற்றி இன்றைய தலைமுறையினருக்கு
தெரியும்.. எழுத்து துறையில் ஈடுபடுவதற்கு முன் இவர் மத்ய அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்தார், அந்த பதவியை விட்டு விலகி பத்திரிகை துறையில் இறங்கினார்.சென்னை பல்கலை கழகத்தில் செனெட் உறுப்பினராக இருந்தார். .இவர் உணர்ச்சி மிக்க பேச்சாளர்.
கல்லூரி பாடத்திட்டத்தில் தமிழ்மொழிக்கு தகுதியான இடம் வேண்டும் என்று பல காரணங்களை கூறி செனெட் கூட்டத்தில் விளக்கமாக நீண்ட நேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
பேசிவிட்டு உட்கார்ந்தவுடன் அவருடைய உயிர் பிரிந்தது. ..இறக்கும்போது அவருடைய வயது 53.
உண்மையில் தமிழுக்காக உயிரை கொடுத்தார் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். .தமிழ் நாவல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படும்.மாதவையா பல நாவல்களை எழுதியிருக்கிறார் . தமிழ் மொழியில் முதல் சரித்திர நாவலான விஜயமார்தாண்டன் என்ற நாவலையும் இவர்தான் எழுதினார்.
ஷேக்ஸ்பியர் நாடகமான ஒதேல்லோவை தமிழில் மொழி பெயர்த்தார். .இவருடைய நாவல்கள் வெறும் பொழுதுபோக்குக்காக இல்லாமல் அன்று பேசப்பட்ட பல சமுகப்பிரசினகளை பற்றிய பல கருத்துக்களை விவாதிப்பதாக அமைந்திருந்தது.
தமிழ்நாட்டில் கல்வி வளர்சிக்காக பிரசாரம் மேற்கொண்டார். பால்ய விவாகத்தை எதிர்த்தும் விதவைப்பெண்கள் மறுமணத்தை ஆதரித்தும் தன்னுடைய பஞ்சாமிர்தம் என்ற பத்திரிகையில் எழுதினார்.பெண்கள் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.
தமிழ் மொழி ஆராய்ச்சியில் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் பல சாதனைகளை புரிந்த எஸ்.வையாபுரி பிள்ளை நினைவில் கொள்ளப்படவேண்டிய மற்றொரு தமிழ் அறிஞர் .
பிள்ளையவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு படித்துவிட்டு தமிழ் ஆராய்ச்சியை முழுமையான தொழிலாகவும் தொண்டாகவும் மேற்கொண்டார். இந்திய மொழிகளில் இதுவரை எந்த மொழிக்கும் கலைச்சொல் அகராதி தொகுக்கப்படவில்லை. இந்த நாட்டில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படும் இந்தி மொழிக்கும் அதுதான் கதி. ஆனால் தமிழ் மொழிக்கு கலைச்சொல் அகராதி தொகுத்து வெளியிட்ட பெருமை வையாபுரி பிள்ளைக்கு உண்டு. இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அவருடைய வயது 36. பத்தாண்டுகளில் அந்த பெரும் வேலையை செய்து முடித்தார்.
பன்மொழி அறிஞரான பிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியிருக்கிறார்.
தனித்தமிழ் இயக்கத்தவர்கள் முன் வைத்த பல கருத்துகளை நிராகரித்து விட்டு துணிவோடு தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள உறவு பற்றி விஞ்ஞான அடிப்படையிலான கண்ணோட்டத்தில் பல முடிவுகளை தெரிவித்தார். இதனால் குறுகிய நோக்கம் கொண்ட தமிழ் பற்றாளர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.
தமிழ்மொழியின் நீண்ட நெடும் வரலாற்று காலத்தில் கலந்த பிறமொழிச்சொற்களை பற்றி விளக்கியிருக்கிறார். பிறமொழிச் சொற்கள் ஒரு மொழியில் கலப்பதற் கான காரணங்களை விளக்கினார். .அவசியமானால் மற்ற மொழிகளிலிருந்து சொற்களை ஏற்றுக்கொள்ளும் முறை பற்றி தொல்காப்பியத்தை ஆதாரம் காட்டி விளக்கினார்.
கண்மூடித்தனமான பிறமொழி வெறுப்போடு கூடிய தமிழ்பற்று மொழியின் தேக்கத்தில் முடியும் என்று வாதிட்டார். தமிழ்பற்று என்ற பெயரில் தமிழ்நாட்டு இளைஞர்களை கிணற்று தவளைகளாக்கும்செயலிலிரு ந்து அவர்களை காக்க வேண்டும். என்றார் பிள்ளை.
இத்தகைய தமிழ் அறிஞர்களுடைய பங்களிப்பு பற்றி பரிசீலனை செய்யும் வாய்ப்பை உலகத்தமிழ் மாநாடு ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு செய்த நல்லறிஞர்கள் பட்டியல் மிகப்பெரியது..இங்கே உதாரணத்துக்கு மட்டுமே சில பெயர்களை குறிப்பிட்டேன். அவர்கள் அனைவரையும் நினைவில் கொள்ளும் நல்ல நேரமாக உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அமையும் என்று உளமார நம்புகிறோம்.
- மு .கோபாலகிருஷ்ணன்