Monday, November 24, 2008
Saturday, November 22, 2008
பித்தனின் கிறுக்கல்கள் – 31
உலகத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருந்த ‘வில்லன்களின் வில்லன்’ எம்.என்.நம்பியார் மறைந்து விட்டார். இவர் நடிக்காத 60, 70, 80 களில் வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நடிகர் திலகமும், மக்கள் திலகமும் நடித்த படங்களில் அவர்களைத் தாண்டி ஒரு நடிகர் ப்ரசித்தி பெறுவது என்பது கிஞ்சித்தும் யோசிக்கக்கூட முடியாத விஷயம். அதை சர்வ சாதாரணமாக செய்து காட்டியவர் இவர். தனக்கென ஒரு தனி பாணி அமைத்து, படத்தில் பல வில்லன்கள் இருந்தாலும், அவர்களிலிருந்து தன்னைத் தனித்து வெளிப் படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்தவர். எம்.ஜி.ஆருடன் இவர் செய்யும் சண்டைக்காட்சிகள் என்னைப் போன்ற பல ரசிகர்களை புலகாங்கிதமடையச் செய்துள்ளது. உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆருடன் இவர் செய்த சீன முறை சுமோ சண்டை இனி மீண்டும் ஒருவர் செய்ய முடியாது என்பது என் கருத்து. என் சிறு வயதில் நான் பார்த்த படத்தில் இவர் சாட்டையால் அடித்ததில் எம்.ஜி.ஆருக்கு வலித்ததோ இல்லையோ எனக்கு வலித்து நான் அழுதது நினைவிருக்கிறது. அசாத்திய வில்லன் நடிப்பு இடையே திடீரென நல்லவனாகவும் நடித்து (ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பின்பகுதி, தூறல் நின்னு போச்சு) நம்மை ஆச்சர்யப் பட வைத்தவர். எம்.ஜி.ஆர் தேர்தலுக்கு ப்ரசாரம் செய்யப் போகும் போது மக்கள் அவரை வழி “மறித்து நல்லா இரு ராசா” என்று வாழ்த்திய அதே நேரம் “இந்த நம்பியார் கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையா இரு ராசா, கெட்ட பய உன்னைய ஏதும் செய்துரப் போறான்” என்று வாஞ்சையோடு சொன்னது இவருடைய நடிப்புக் கிடைத்த மிகப் பெரிய பரிசு.
ஒரு நல்ல கலைஞன் எப்போது மற்ற கலைஞர்கள் போல நல்ல கதாபாத்திரங்கள் தனக்கு கிடைக்க வில்லையே என்று ஏங்குகிறானோ அப்போதுதான் முழுமையடைகிறான் என்பது என் கருத்து. ரஜனியின் தளபதி படத்தில் அம்ரிஷ் பூரியின் ‘கலிவர்தன்’ கதாபாத்திரம் தனக்கு கிடைக்கவில்லையே என்று சொல்லி அவர் அதன் முத்தாய்ப்பாக எனக்கு தலையில் இப்போது முடியே இல்லை மொட்டை போடும் செலவு கூட இல்லை இருந்தாலும் மணிரத்தினம் என்னை தேர்வு செய்ய வில்லையே என்று வருத்தப் பட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி என்ற இரு இமயங்களோடு நடித்தவருக்கு ரஜனி, மம்முட்டி இரு சிறு மடுக்களோடு நடிப்பதில் பெரிய சவால் இல்லை ஆயின் அந்த சிறிய பாத்திரம் இவரை பாதிக்கிறது என்று சொன்னால் இவருடைய கலையார்வத்தை கண்டு தலை வணங்கத்தான் வேண்டும்.
திரையில் இவர் ஒரு நயவஞ்சகன், பெண் பித்தன், திருடன், ஏமாற்றுப் பேர்வழி, கொள்ளைக்காரன், கொடுங்கோலன், ராஜத்துரோகி, பணத்தாசை பிடித்த பிசாசு, இரக்கமில்லாதவன். ஆனால் நிஜ வாழ்வில் இவர் ஒரு இனிமையான மனிதர், அல்லும் பகலும் ஐயப்பனின் நாமத்தை ஜெபித்த, 60-65 வருடங்களுக்கு மேலாக சபரிமலை (வருடத்திற்கு 4-5 முறை) சென்று வந்த பக்தர். புகை, மது, மாது என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தூய்மையானவர். நடிப்பது, எனது தவம், வாழ்க்கை, எனக்கு ஆண்டவன் இட்ட பிச்சை என்று வாழ்ந்த உத்தமர்.
1991-ல் நான் முதன் முதலாக சபரிமலைக்குச் சென்றபோது 18 படியை தழுவி, ஐய்யனை தரிசித்து விட்டு எங்கள் குடிலுக்கு சென்று ஓரிரு மணி நேரத்திற்குப் பிறகு வெளியில் ஒரே பரபரப்பு, என்ன என்று கேட்டதற்கு, குருசாமி வந்துவிட்டார் என்றார்கள். எனக்கு ஒரே திகைப்பு, எங்கள் குழுவின் குருசாமி எங்களோடுதான் மலையில் நடந்து வந்தார், எனக்கு ஒரு 100-200 பேர்களுக்கு முன்புதான் 18 படி கடந்து வந்தார், அப்படி இருக்க இவர்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே என்று எங்கள் குருசாமியின் மகனிடம் கேட்டதற்கு அவர் சொன்னார், என் தந்தை நம் குழுவிற்கு குருசாமி, ஆனால் நம்பியார் சாமிதான் நம் எல்லா ஐய்யப்பன்மார்களுக்கும் குருசாமி என்றார். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடுமபத்திற்கும், மற்றவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
எம்.என். நம்பியாரைப் போலவே தமிழ் சினிமாவில் ப்ரபலமான மற்றொரு நம்பியார் ஆர்.என். நம்பியார் இவர் ப்ரபல சண்டை பயிற்சியாளர், எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு இவர்தான் சண்டைப் பயிற்சி தந்தவர். இவர்தான் அண்மைக் காலத்தில் மறைந்த ப்ரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ‘விகரம்’ தர்மாவின் தந்தை என்பது மற்றொரு சிறப்பு.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்..... piththanp@gmail.com
Wednesday, November 19, 2008
குழந்தையின் பார்வையில் தமிழ் சங்க தீபாவளி
இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் இதை செய்யலாம் என்றிருக்கிறேன்.
தமிழ் சங்கத்தின் தீபாவளி மற்றும் கிருத்துமஸ் விழா: படங்கள்
(சில படங்கள் விடுபட்டிருக்கலாம்.அவை உங்களிடம் இருப்பின் எங்களுக்கு (richmondtamilsangam@gmail.com) அனுப்புங்கள். இதனுடன் சேர்த்துவிடுகிறோம்.)
Friday, November 14, 2008
சந்திராயன்-1 சாதனை!
இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மற்றொரு மைல்கல் சந்திராயன்-1 சென்ற மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது நினைவிருக்கலாம். அதிலிருந்து நம் தேசிய கொடியின் வர்ணம் பூசப்பட்ட "Moon Impact Probe" எனப்படும் இயந்திரம் இந்திய நேரப்படி இன்று இரவு 8:31 மணியளவில் நிலவைத்தொட்டுள்ளது!!. இந்திய தேசத்தின் கொடியின் வர்ணம் நிலவில் கால் பதித்த பெருமையான நாள்!! இதுவரை அமெரிக்கா, சோவியத் ரஷ்யா மற்றும் ஜப்பான் தங்கள் நாட்டு தேசியக்கொடிகளை நிலவில் நிறுவியுள்ளன! அதில் நம் பாரத தேசத்தின் கொடியும் சேர்ந்துள்ளது எல்லோருக்கும் மிக்க பெருமையான நிகழ்வாகும்!!
இது குழந்தைகள் தினத்தன்று நிகழ்வது மேலும் சிறப்பு!! வருங்கால அப்துல் கலாம்களுக்கு இது மிக்க உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும் என நான் நம்புகிறேன்.
மேலும் விபரங்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தினை காணவும்!
டாம் ஹாங்ஸ் அப்போலோ-13 திரைப்படத்தில் விண்வெளியில் மிதந்ததை பார்த்து அதைப்போல அனுபவிக்க நம்மில் பலரும் ஆசைப்பட்டிருப்போம். சில காலம் வரை இதை அனுபவிக்க ஆகும் விலையால் $5100 டாலர் (25000 ரூபாய்) மக்கள் எண்ணிப்பார்க்க கூட முடியாமல் இருந்தது. சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய விலையே! இதையே அமெரிக்காவில் drugstore.com என்ற தளத்தில் குறைவான விலைக்கு அறிவித்துள்ளனர்! உங்களுடன் மேலும் 9 பேர் சேர்ந்து பயணம் செய்ய மொத்தமாக சுமார் $35,000 டாலர் (10 பேருக்கு $35000, ஒருவருக்கு $3500) செலவழிக்க தயாராக இருந்தால், இந்த தளத்தில் அதற்கான பயணத்தை நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக முன்பதிவு செய்யலாம்!!
இந்த பயணத்தில், போயிங் நிறுவனம் அமைத்துள்ள G-FORCE ONE விமானத்தின் மூலம் சுமார் 24 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரம் அடி உயரத்திற்கு அழைத்து சென்று புவியீர்ப்பு விசையின்றி ("weightless fall / Parabola Flight") விமானம் சுமார் 10 மைல் கீழே செல்லும் போது உள்ளே இருப்பவர்கள் மிதப்பார்கள்! ஒரு மிதவை சுமார் ஒரு நிமிடமே நீடிக்கும்! இதே போல பல முறை திரும்ப செய்வார்கள்.
என்ன அடுத்த விண்வெளி பயணத்திற்கு தயாரா? அப்படியானால், நீங்கள் முதலில் அடுத்த செய்தியையும் படித்துவிடுங்கள்..
சுத்திகரிக்கப்பட்ட சிறுநீர்!
உங்களுக்கு விண்வெளியிலுள்ள நாசாவின் ஆராய்ச்சி ஆய்வு மையத்திற்கு சென்று வர வாய்ப்பு கொடுத்தால் இந்த தகவலை படித்து விட்டு முடிவு செய்யுங்கள். நாசா ஆராய்ச்சியாளர்கள் சிறுநீர் சுத்திகரிப்பு எந்திரத்தின் ஆராய்ச்சி முடிவிகளை வெளியிட்டுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட சிறுநீர் சுவையில் சாதரண நீர் போலவே உள்ளதாக தெரியவந்துள்ளது (சிறு Iodine சுவையை தவிர்த்து!!). இதன்படி, இன்று $250 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட சிறுநீர் சுத்திகரிப்பு எந்திரம் மற்ற உபகரணங்களுடன் சேர்த்து விண்வெளியில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பப் படும் என நாசா அறிவித்துள்ளது!
நாசாவின் 124வது விண்கல பயணத்தில், இந்த முறை இரண்டு படுகையறைகள், இந்த நிலையத்தின் முதல் ப்ரிஜ், புதிய உடற்பயிற்சி உபகரணங்கள், மற்றும் புதிய கழிப்பறை ஆகியன எடுத்துச்செல்லபடும் என தெரிவித்துள்ளனர்!! சுமார் 6 - 10 பேர் மாதக்கணக்கில் விண்வெளியிலுள்ள நாசாவின் ஆராய்ச்சி ஆய்வு மையத்தில் பணியாற்றுகின்றனர்.
2010 வது ஆண்டுக்குள் இன்னும் 10 முறை இது போல விண்கல பயணம் பல ஆராய்ச்சிகளை விண்ணில் உள்ள ஆய்வுக்கூடங்களுக்கு எடுத்துச் செல்லும்! அதன் பிறகு இந்த திட்டத்தை கைவிடப்போவதாக நாசா அறிவித்துள்ளது.
என்ன பயணத்திற்கு தயாரா?
Wednesday, November 12, 2008
ஜீமெயிலில் குரல் மற்றும் வீடியோ அரட்டை
நீங்கள் இதுவரை இதைப் பயன்படுத்தி இருக்காவிட்டால், உடனே இங்கே சென்று ஜென்மசாபல்யம் அடையுங்கள். சக்தி கூகுள், வீர கூகுள்!
Wednesday, November 05, 2008
படம் பாரு, படம் பாரு
என்ன, எவ்வளவு நேரமாச்சு கண்டுபிடிக்க.?
மூன்று வினாடிகளில் கண்டுபிடித்தால், நீங்கள் கில்லாடிதான். உங்கள் மேலாளரிடமோ வாழ்க்கைத்துணையிடமோ உங்களுக்கு இன்னும் நிறைய வேலை கொடுக்கச் சொல்லுங்கள். :-)
அதுக்கும் மேல ஆச்சுன்னாதான் கவலைக்கிடம். சீக்கிரமாக டாக்டரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
அடுத்த படத்தை ஆடாமல் அசங்காமல் பார்க்க வேண்டும். என்ன சரியா? ஆனால் முதலில் இங்கே கிளிக்கி பெரிதாக்கிக் கொள்ளுங்கள்....
அசங்கக்கூடாதுன்னு சொன்னேன். ஏன் இப்படி தலைகீழாகத் தொங்குகிறீர்கள்?
அடுத்த படம் புத்தம் புதுசு. என் நண்பர் ஒருவரின் உறவினர் அப்பலேச்சியன் மலைத்தொடரில் ஹைக்கிக் கொண்டிருக்கிறார் இப்போது. அவரிடம் இருந்து நேற்று வந்த புகைப்படம் இது...
விட்டால் தட்டு, ஸ்பூன் எல்லாம் கேட்கும் போலிருக்கிறது...
Monday, November 03, 2008
நியுயார்க் மராத்தனில் என் நண்பன்
அவன் சொன்னதைப் வைத்து மோசமாக இருக்கும் என்று பார்த்தால், சென்ற முறையைவிட வேகமாகவே ஓடியிருக்கிறான் - 4 மணி 40 நிமிடங்களில். சென்ற முறை 5 மணி 20 நிமிடங்கள். முதல் 25 கிமீ வேகமாகவே போயிருக்கிறான்.
கடைசியில்தான் நிறைய நேரம் எடுத்திருக்கிறான். ஆரம்பத்தில் ரொம்ப வேகமாக போயிருப்பான் என்று நினைக்கிறேன். Proud of you, buddy! நம்ம கல்லாப்பெட்டி அரவிந்தன் ஏதோ அரை மராத்தன் ஓடுகிறேன் பேர்வழி என்று பயிற்சிக்கு என்னையும் இழுக்கப் பார்க்கிறார். இதுவரை சாக்குப்போக்கு சொல்லி சமாளித்துவிட்டேன். நானும் ஓடிவிட்டால் அப்புறம் யார் என் முருங்கமரத்தைப் பார்த்துக் கொள்வது?
Sunday, November 02, 2008
பித்தனின் கிறுக்கல்கள் – 30
தனம் திரைப்பட விமர்சனம்
நண்பி ஒருவர் இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யச் சொன்னார். உடனே தலையில் கொம்பு முளைத்தது போல ஒரு உணர்வு தொற்றிக் கொண்டது. தெரிந்த கடைகளில் போன் போட்டு விசாரிக்க ஆரம்பித்தேன். வீட்டுல “ஏங்க ஒரு வாரமா சொல்லிகிட்டு இருக்கேன், புல் வெட்டனும்னு அதச் செய்ய துப்பில்லை, ஒரு தமிழ் படத்தை தேடிக்கிட்டு கடை கடையா அலையரீங்களே” ன்னு கடமைகளை “அன்புடன்” நினைவு படுத்த, அதையெல்லாம் கவனிக்கரவரங்களா நாம, கடமை முக்கியமில்லையா. எந்தக் கடைகளிலிலும் கிடைக்கவே இல்லைன்னு இருக்கும் போது நண்பர் ஒருவர் அந்தப் படமா, என்கிட்ட இருக்கு என்று சொல்ல ஓடிப் போய் வாங்கி வந்து இந்தப் படத்தை பார்த்தேன்.
முதலில் இந்தப் படம் வீட்டில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படமேயில்லை. கதையில் அங்கங்கே ஓட்டைகள் என்று எதுவும் சொல்ல முடியாது, ஓட்டைகளுக்கு நடுவே கதை என்று ஒன்று இருக்கிறதா என்று தேட வேண்டியிருக்கிறது.
படம் ஹைதராபாத்தில் போலீஸால் தனம் என்ற ஒரு தாசியைத் தேடுவதில் ஆரம்பிக்கிறது. தனம் ஒரு குற்றவாளி என்று போலீஸ் குற்றம் சாட்ட, அவர் குற்றவாளியில்லை என்று ஒரு கூட்டமே சொல்லி ப்ளாஷ்பாக்கில் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். இதற்கு மேல் இந்தப் படத்தின் கதையை நாசுக்காக சொல்ல என்னால் ஆகாது. தமிழ் பட கதாநாயகன் ரவுடியாக இருந்து ஒரு கூட்டத்திற்கே சாப்பாடு போடுவான் அதையே என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. இந்தப் படத்தில் கதாநாயகி தாசியாக இருந்து ஒரு கூட்டத்தையே காப்பாற்றுகிறார் ஆனால் அது என்ன விதமான லாஜிக் என்று எனக்குத் தெரியவில்லை.
திரைப் பட விமர்சனங்கள் எழுதும் போது நானாக விருப்பப் பட்டு பார்க்கும் படங்களைத்தான் விமர்சனம் செய்து வந்தேன், அந்தப் படங்களை நான் பார்க்க யாரும் என்னைத் தூண்டவில்லை, ஆனால் இந்தப் படம் கண்டிப்பாக எனது பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லாத ஒரு டப்பா படம்.
The Happening
மனோஜ் நைட் ஷ்யாமளனின் சமீபத்திய படம். நியூயார்க்கின் செண்ட்ரல் பார்க்கில் திடீரென எல்லோரும் தற்கொலை செய்து கொண்டு இறக்க, அதிலிருந்து தப்பிக்க பலர் ரெயில் ஏறி பிலடெல்பியா நோக்கி செல்ல வழியில் பலரும் இறக்க ஏன் அவர்கள் அப்படி செய்து கொள்கிறார்கள் என்று ஹீரோ கண்டு பிடிப்பதுதான் கதை. ஹீரோ மார்க் வாஹல்பெர்க். இவர் மிக மிக புத்திசாலி போல இந்தப் படத்தில் சித்தரிக்கப் படுகிறார். அது ஒரு மிகப் பெரிய டுபாகூர் தியரி. இவருக்கு மொத்தமே இரண்டு அல்லது மூன்று விதமான முகபாவங்கள்தான் வருகிறது. அதை மட்டுமே பார்ப்பது 10-15 நிமிடங்களுக்குப் பிறகு போர் அடித்து விடுகிறது. அது என்ன ஆக்டிங் எக்ஸ்ப்ரஷனா அல்லது கான்ஸ்டிபேஷனா என்று தெரியாத ஒரு அவஸ்தை நமக்கு. அடுத்து ஹீரோயினாக வருபவருக்கு இந்தப் படத்திற்கு பிறகு நடிக்க சந்தர்ப்பம் கிடைப்பது துர்லபம். தமிழ் சினிமாவில் கூட்டமாக வரும் 100 துணை நடிகைகளில் கட்டங்கடைசியாக இருப்பவர் கூட இவரை விட 1000 மடங்கு நன்றாக நடிப்பார். இது போல ஒரு சம்பவம் நடக்க சாத்தியமுண்டா, ஏன் இப்படி லாஜிக் இல்லாத திரைக்கதை என்று கேட்காமல் படத்தைப் பார்த்தால் படத்தை ரசிக்க முடியலாம்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
Thursday, October 30, 2008
அவசரத் தேவை - ரத்த வெள்ளை அணுக்கள் - ஹூஸ்டனில்...
மேல் விவரங்களுக்கு
http://www.lifeformanish.com/wbc.php