Sunday, November 02, 2008

பித்தனின் கிறுக்கல்கள் – 30

தனம் திரைப்பட விமர்சனம்
நண்பி ஒருவர் இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யச் சொன்னார். உடனே தலையில் கொம்பு முளைத்தது போல ஒரு உணர்வு தொற்றிக் கொண்டது. தெரிந்த கடைகளில் போன் போட்டு விசாரிக்க ஆரம்பித்தேன். வீட்டுல “ஏங்க ஒரு வாரமா சொல்லிகிட்டு இருக்கேன், புல் வெட்டனும்னு அதச் செய்ய துப்பில்லை, ஒரு தமிழ் படத்தை தேடிக்கிட்டு கடை கடையா அலையரீங்களே” ன்னு கடமைகளை “அன்புடன்” நினைவு படுத்த, அதையெல்லாம் கவனிக்கரவரங்களா நாம, கடமை முக்கியமில்லையா. எந்தக் கடைகளிலிலும் கிடைக்கவே இல்லைன்னு இருக்கும் போது நண்பர் ஒருவர் அந்தப் படமா, என்கிட்ட இருக்கு என்று சொல்ல ஓடிப் போய் வாங்கி வந்து இந்தப் படத்தை பார்த்தேன்.

முதலில் இந்தப் படம் வீட்டில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படமேயில்லை. கதையில் அங்கங்கே ஓட்டைகள் என்று எதுவும் சொல்ல முடியாது, ஓட்டைகளுக்கு நடுவே கதை என்று ஒன்று இருக்கிறதா என்று தேட வேண்டியிருக்கிறது.

படம் ஹைதராபாத்தில் போலீஸால் தனம் என்ற ஒரு தாசியைத் தேடுவதில் ஆரம்பிக்கிறது. தனம் ஒரு குற்றவாளி என்று போலீஸ் குற்றம் சாட்ட, அவர் குற்றவாளியில்லை என்று ஒரு கூட்டமே சொல்லி ப்ளாஷ்பாக்கில் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். இதற்கு மேல் இந்தப் படத்தின் கதையை நாசுக்காக சொல்ல என்னால் ஆகாது. தமிழ் பட கதாநாயகன் ரவுடியாக இருந்து ஒரு கூட்டத்திற்கே சாப்பாடு போடுவான் அதையே என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. இந்தப் படத்தில் கதாநாயகி தாசியாக இருந்து ஒரு கூட்டத்தையே காப்பாற்றுகிறார் ஆனால் அது என்ன விதமான லாஜிக் என்று எனக்குத் தெரியவில்லை.

திரைப் பட விமர்சனங்கள் எழுதும் போது நானாக விருப்பப் பட்டு பார்க்கும் படங்களைத்தான் விமர்சனம் செய்து வந்தேன், அந்தப் படங்களை நான் பார்க்க யாரும் என்னைத் தூண்டவில்லை, ஆனால் இந்தப் படம் கண்டிப்பாக எனது பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லாத ஒரு டப்பா படம்.

The Happening
மனோஜ் நைட் ஷ்யாமளனின் சமீபத்திய படம். நியூயார்க்கின் செண்ட்ரல் பார்க்கில் திடீரென எல்லோரும் தற்கொலை செய்து கொண்டு இறக்க, அதிலிருந்து தப்பிக்க பலர் ரெயில் ஏறி பிலடெல்பியா நோக்கி செல்ல வழியில் பலரும் இறக்க ஏன் அவர்கள் அப்படி செய்து கொள்கிறார்கள் என்று ஹீரோ கண்டு பிடிப்பதுதான் கதை. ஹீரோ மார்க் வாஹல்பெர்க். இவர் மிக மிக புத்திசாலி போல இந்தப் படத்தில் சித்தரிக்கப் படுகிறார். அது ஒரு மிகப் பெரிய டுபாகூர் தியரி. இவருக்கு மொத்தமே இரண்டு அல்லது மூன்று விதமான முகபாவங்கள்தான் வருகிறது. அதை மட்டுமே பார்ப்பது 10-15 நிமிடங்களுக்குப் பிறகு போர் அடித்து விடுகிறது. அது என்ன ஆக்டிங் எக்ஸ்ப்ரஷனா அல்லது கான்ஸ்டிபேஷனா என்று தெரியாத ஒரு அவஸ்தை நமக்கு. அடுத்து ஹீரோயினாக வருபவருக்கு இந்தப் படத்திற்கு பிறகு நடிக்க சந்தர்ப்பம் கிடைப்பது துர்லபம். தமிழ் சினிமாவில் கூட்டமாக வரும் 100 துணை நடிகைகளில் கட்டங்கடைசியாக இருப்பவர் கூட இவரை விட 1000 மடங்கு நன்றாக நடிப்பார். இது போல ஒரு சம்பவம் நடக்க சாத்தியமுண்டா, ஏன் இப்படி லாஜிக் இல்லாத திரைக்கதை என்று கேட்காமல் படத்தைப் பார்த்தால் படத்தை ரசிக்க முடியலாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

8 comments:

 1. ஹா ஹா. நண்பி சொன்னார் என்று ஓடினீரா? இந்த ரீதியில் போனால் - ஜிம் பெலூஷி ஒரு டிவி சீரியலில் ஒரு பெண் சொன்னார் என்று ஸ்காட்லாந்தின் புராதன உடையான கில்ட் (அரைப்பாவாடை மாதிரி இருக்கும்) மாட்டிக் கொண்டு நிற்பார் - அந்த மாதிரி ஆபிஸில் லுங்கியில் அசத்தலாக நிற்காமல் இருந்தால் சரி.

  ஷ்யாமளனின் படங்களுக்கு வீட்டில் ஒரே எதிர்ப்பு. பாண்டிச்சேரியில் பிறந்த ஆள் என்று சொல்லியும்....
  அந்த வேற்றுகிரக வாசிகள் படத்திலிருந்து எனக்கும் ஷ்யாமளன் படங்கள் பார்க்க ஆசை போய்விட்டது.

  ReplyDelete
 2. ஐயா பித்தரே - ஃபான்ட் சைஸைக் 85%க்கு குறைக்காதேயும். நான் எனக்குத்தான் கண்பார்வை குறைகிறது என்று பயந்துவிட்டேன். இந்தப் பதிவை 100%க்கு மாற்றிவிட்டேன்.

  ReplyDelete
 3. நாட்டில் எவ்வளவோ படங்கள் இருக்க இந்த படம் உங்க நண்பியை கவர்ந்தது ஏனோ!! இத பாக்க உங்க வூட்டுக்காரம்மா எப்படி விட்டாங்க! (பட விமர்சனம் படித்ததுதான் - இத பாத்து விமர்சனம் எழுதர அளவுக்கு "சிறந்த" படமில்லை!) (அடுத்து "புதிய" நாயகன் ஜெ.கே.ரித்திஷ் பட விமர்சனம் ப்ளீஸ்..))

  ReplyDelete
 4. Thanks for the review, What I saw in this film was the superstitious beliefs...
  Every one has their own point of view Mr.Jayakanthan and thanks for your comments

  ReplyDelete
 5. நாகு,
  ஒரு படம் பார்க்க சற்று மெனகெட்டது என்ன அவ்வளவு தவறா? நான் லுங்கியுடன் ஆஃபீஸ் போனால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாலே சகிக்கவில்லை. இப்படி ஒரு டேஸ்ட்டா உங்களுக்கு.

  ஃபான்டை Normal சைஸ் செய்தால் ரொம்ப பெரியதாக வெள்ளெழுத்து காரர்கள் படிக்கிற சைஸ்ஸில் இருந்ததால் சைஸ்ஸை small என்று போட்டிருந்தேன். அடுத்த முறை normal சைஸ்ஸில் பதிவிடுகிறேன்.  பித்தன்.

  ReplyDelete
 6. ஜெயகாந்தன்,

  எனது நண்பியின் பார்வையில் குற்றம்காண முடியவில்லை. அவர் எனது விமர்சனம் எப்போதும் நடுநிலையில் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக என்னிடம் இந்தப் படத்தை விமர்சிக்கச் சொல்லியிருக்கலாம் அல்லது கதாநாயகியின் கணவன் தவறு செய்தான் என்று தெரிந்ததும் எதிர்த்து நிற்கும் பாங்கு பிடித்திருக்கலாம் அல்லது அவளுடைய கணவனின் குடும்பம் நம்பும் பழமைவாதக் கருத்துக்கள் தவறு என்று பட்டு என் விமர்சனத்தில் அதை சாடுவேன் என்று எதிர் பார்த்திருக்கலாம், எது எப்படி இருந்தாலும் சரி ஜெ.கே. ரித்திஷ் ஒரு உலக மகா நடிகர். அவர் நடந்தால் நடிப்பு, சண்டையில் வெடி வெடிப்பு, மொத்தத்தில் அவர் வருகை தமிழ் திரை உலகிற்கு சிறப்பு. போதுமா. இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா? இந்தாள் படத்தை எல்லாம் பார்க்க கூடிய திட மனது என்னிடமில்லை. அதனால் பார்க்காமலேயே எழுதி விட்டேன்.

  பித்தன்.

  ReplyDelete
 7. நீர்வைமகள்,

  நாகு மற்றும் ஜெயகாந்தனின் பின்னூட்டத்திற்கு பதில் எழுதி வைத்திருந்தேன், பின்னூட்டமிடுவதில் சில சிக்கல்கள் இருப்பதை நாகு அவர்களிடம் திங்கள் கிழமை தெரிவித்திருந்த்தேன், அவர் அதை சரி செய்தபிறகு எனது பின்னூட்டத்தை வெளியிடுவதில் சற்று கால தாமதமாகிவிட்டது. Superstitious beliefs என்று இந்தப் படத்தில் சொல்வது எதுவும் இன்றைய படித்த சமுதாயத்தில் இருப்பதாகச் சொல்வது சுத்த அபத்தம் அதுவும் சாஸ்திரம் சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ள ஒரு ஆசாரமான வைணவக் குடும்பம் நம்புவதாகச் சொல்வது மிகப் பெரிய கேலிக்கூத்து. இப்படி இருப்பதாகச் சொல்லி வேறு எந்த மதத்தையோ அல்லது ஜாதிப் பிரிவினரையோ சொன்னால் (சொல்வது என்ன, சொல்லலாம் என்று நினைத்தாலும் கூட போதும்), வெட்டி பொலி போட்டு விடுவார்கள் என்பது இந்தப் படத்தை எடுத்த, கதை எழுதியவர்களுக்குத் தெரியும், அதனால் நம்மேல் ஒரு காக்கை எச்சம் இட்டால் எப்படி துடைத்து விட்டு செல்கிறோமோ அது போல எந்த சமூகம் யார் தன்னைத் தாக்கினாலும் எதிர்க்காமல் போகிறதோ அதை சாடுவதில் இவர்களுக்கு ஒரு அலாதி இன்பம். எந்தப் பெண் தன் குழந்தையை பறித்தது தவறு என்று எதிர்கிறாளோ, அவள்தான் எந்தச் சமூகம் தன்னை வாசலில் கிடக்கும் மிதி அடி போல தன்னை உபயோகிக்கிறதோ அதை எதிர்க்காமல் சும்மாயிருப்பாளாம். என்ன கதையோ?

  பித்தன்.

  ReplyDelete
 8. Thnaks for the comments
  I just wanted to know your point of view...Thanks

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!