கோடைகாலத்திற்கு நிறைய பேர் இந்தியாவிற்கு போய்விட்டு வருவார்கள். போகும்போதும், வரும்போதும் நேர வித்யாசத்தினால் பல தொந்தரவுகள். இந்த ஜெட்-லேகிற்கு ஒரு நிவாரணம் கண்டுபிடிக்க அர்ஜெண்டைனாவில் சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு
சுவாரஸ்யமான முயற்சி செய்கிறார்கள். அதுசரி தலைவலி போய் 'திருகு'வலி வராதா என்று கேட்காதீர்கள். அதைப்போல இந்த செய்தியை வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று இந்த மருந்தைக் கேட்டால் நான் பொறுப்பில்லை.
மருத்துவர் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அமெரிக்காவில் ஒரு புது ஊருக்கு போனவுடன் ஒரு நல்ல டாக்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா? அதற்கு உதவுகிறார் பாரதி
இந்தப் பதிவில். பாரதி என்றால் முண்டாசுக்காரர் இல்லை. அவரது பதிவில் சில நல்ல வலைத்தளங்களை சுட்டியிருக்கிறார். அது மாதிரியான ஒரு தளம்தான்
ரெவல்யூஷன் ஹெல்த். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அமெரிக்காவில் வலைஉலாவிற்கு AOL மூலம் வித்திட்டு பட்டை கிளப்பிய
ஸ்டீவ் கேஸ்.உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தின் பல மூலைகளில் உள்ள நல்ல விஷயங்களைப் பார்க்க வேண்டுமா -
இந்த தளத்தில் பாருங்கள்.. எல்லா ஊருக்கும் போய் பாருங்கள். கஜுராஹோவிலேயே உட்கார்ந்து விட வேண்டாம்.(அங்கே இங்கே போய் 'அதே' இடத்துக்கு வரீங்களேன்னு பித்தன் குரல் விடுவது கேட்கிறது)
ஈபே கேள்விப்படாதவர்கள் இருக்கமுடியாது. இங்கிலாந்தில் வாழும் ஒரு இந்தியக் குடும்பம் ஒரு தலைகீழான ஈபே ஆரம்பித்திருக்கிறது.
ஹம்ராஸ் தளத்தில் ஒரு பொருளை ஜெயிக்க வேண்டுமென்றால், நீங்கள் எல்லாரைவிட குறைந்த விலைக்கு கேட்கவேண்டும். அது எப்படி என்கிறீர்களா? அந்த குறைந்த விலைக்கு நீங்கள் மட்டுமே கேட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு பொருளுக்கு இப்படி பேரம் நடந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்:
1.20 - பத்து பேர்
1.23 - இரண்டு பேர்
1.24 - ஒருவர்
1.28 - மூன்று பேர்
1.39 - ஒருவர்
ஜெயிப்பவர் 1.24க்கு கேட்டவர். அவர் ஒருவர் மட்டும்தான் குறைந்த விலைக்கு கேட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அஸ்மத் மோனகன் எனும் தாயும் அவரது மகள்கள் ஆம்பரின், ஹென்னா. இதைப் பற்றி விவரமாக
இங்கே படிக்கலாம்.பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது என்பார்கள். ஏன் என்று தெரியாது. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும். நான் இங்கே பேரைச் சொல்லாமல் ஊரைச் சொல்கிறேன். நம் வலைப்பதிவில் எழுதும் ஒரு நபரின் ஊரில் நடந்த சம்பவம் மிக சுவாரசியமானது. கவிச் சக்கரவர்த்திக்கு எந்த ஊரில் சமாதி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நாட்டரசன் கோட்டைக்காரர்கள் தவிர மற்றவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். முதலில் கவிச்சக்கரவர்த்தி யாரென்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான் ஆளாளுக்கு அரசர், பேரசரர் என்று பேர் வைத்துக்கொள்கிறார்கள். நான் சொல்லுவது கம்பரைப் பற்றி. ஆனானப்பட்ட கவிச்சக்கரவர்த்தியையே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் வெட்கித் தலைகுனிய வைத்தது நாட்டரசன் கோட்டையில். கர்வமடங்கிய கம்பர் மீதமுள்ள வாழ்நாட்களைக் கழித்தது அந்த ஊரில்தானாம். அந்த சுவாரசியமான கதையை
பிரபுவின் பதிவில் நீங்களே படித்துக் கொள்ளுங்கள். இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு Gods must be crazy யில் வரும் ஆதிவாசிதான் நினைவுக்கு வந்தான். அய்யய்யய்யய்யய்யய்.......
இப்படி ஒரு போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்
ரவிசங்கர்.
புரியவில்லையா?
தமிங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டாமென்கிறார். ஆங்கில அடிமை என்ற குற்றச்சாட்டுக்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த முறையில் தட்டச்சு செய்வது மிகவும் வேகமானது என்கிறார் ரவி. வேகமான முறை என்பதற்காகவே முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன். இந்த விசைப்பலகையை பார்த்தால்தான் கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது.

ஆனால் இந்த முறை ஆங்கில மோகத்தைக் குறைக்குமென்றால், தட்டச்சும் வேகத்தை அதிகமாக்குமென்றால் கண்டிப்பாக அனைவரும் முயலவேண்டும். நான் முயற்சி செய்து பார்க்கிறேன். இப்போதே வலைபதிய உட்காரும்போது 'கருத்து' கேட்க வேண்டியிருக்கிறது. இதில் இந்த விசைப்பலகையை முயன்றால், 'கருத்து' 'புராணமாக' மாறும் அறிகுறிகள் வலுக்கின்றன.
கடேசியாக நமது வர்ஜீனியா மாவட்டத்தில் மோசமாக காரோட்டுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அடுத்த முறை கன்னாபின்னாவென்று ஓட்டி மாமாவிடம் மாட்டினால் நீதிபதி தீட்டுவது மட்டுமல்லாமல் மூன்று வருடங்களுக்கு தண்டல் கட்டவேண்டும். முழு விவரங்கள்
இதோ.