Friday, April 27, 2007

தமிழ் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு இசைவிழா!

ரிச்மண்ட் தமிழ் சங்கம் இந்த தமிழ் புத்தாண்டை ஒரு இசைவிழாவாக கொண்டாடுகிறது. சிறுவர், சிறுமியர் தீந்தமிழில் பாரதியார் பாடல்களையும் மற்ற சில பாடல்களையும் பாடவிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மூத்தோர்களின் திரையிசையும் அரங்கேறவிருக்கிறது.

மற்ற விவரங்கள் இங்கே தமிழில். In English here.

இரண்டு பாடல்கள் சிறிது கேட்க வேண்டுமா? இதோ...





Wednesday, April 25, 2007

திருவாசகம்

"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்". இது நம்மில் பலருக்கும் தெரிந்த வாசகம்.

அதை சிம்பொனி இசையோடு மிக அற்புதமாய் வெளியிட்டார் இளையராஜா என்பதும் எல்லோருக்கும் தெரியும். நான்கு வருட உழைப்பு. 250 இசைக் கலைஞர்களைக் கொண்டு 2 வாரங்களில் முடித்த இசைப் பதிவு.

எல்லோருக்கும் தெரிஞ்சதையே சொல்லிகிட்டிருந்தா எப்படி-னு கேக்கறீங்களா ? சரி விசயத்துக்கு வரேன் ...

சமீபத்தில இசைத் திருவாசகத்தைப் பற்றி பணியிடத்தில், சக அமெரிக்கர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் பேச ஆரம்பிச்சது, அந்த CD-ல English Translation-ம் இருக்கு-னு. அவருக்கு கொஞ்சம் இசை பற்றி தெரியும். Bass-u, Treble-u னு நம்மல ட்ரபிள் பன்ன ஆரம்பிச்சிட்டாரு. நாம தான் ஞானசூனியமாச்சே. இந்தா புடிங்க-னு ராஜாவோட CD-ய கொடுத்து அப்போதைக்குத் தப்பிச்சிக்கிட்டேன்.

அவர் அதை கொஞ்ச நாட்கள் வரை கேக்கவே இல்லை. கேக்கலைனாலும் பரவாயில்லை, CD-ய திருப்பிக் கொடுங்க-னு சொல்ற நெலைமை. திடீர்னு ஒரு நாள் headphone மாட்டி கேக்க ஆரம்பிச்சார். சற்று நேரத்தில், நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை என்றார். அவருக்கு எங்கே தெரியும் நம்ம ராஜாவைப் பத்தி. அத பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு அமெரிக்கர், எங்கே உங்க headphone கொடுங்க-னு வாங்கிக் கேக்க ஆரம்பிச்சார்.

கொஞ்ச நேரத்தில, கண்மூடி, விரல் சொடுக்கி, தோள்களை அசைத்து ... நாம சொல்றோமே 'மெய்மறந்து', அந்த நிலைக்கு ரெண்டே நொடியில போய்ட்டாரு.

அவர் கேட்கின்ற முதல் இந்திய இசை என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லத் தேவையில்லை தமிழும் தெரியாது.

"Awesome, நான் இத இன்னிக்கு வீட்டுக்கு எடுத்திட்டு போறேன். நாளைக்குத் திருப்பித் தர்ரேனே" என்றார் கெஞ்சலாக.

"ஏன்னா என் கணவர் ஒரு பள்ளியில் இசை ஆசிரியர். கண்டிப்பா இந்த இசை அவருக்கு புடிக்கும் அதான்" என்றார். சரி என்றேன்.

மறுநாள் வழக்கம் போல வேலைக்கு வந்த போது, CD எனது தட்டச்சுப் பலகையின் அருகில் இருந்தது. என்னைக் கண்டவுடன் அருகில் வந்தார் அந்த அம்மையார். "நான் சொன்ன மாதிரியே என் கணவர் மிகவும் ரசிச்சார். சில கேள்விகள் கேக்கலாமா" என்றார்.

மீண்டும், இசை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றேன் அப்பாவியாக. இல்லை பொதுவான கேள்விகள் தான் என்று ஆரம்பித்தார்.

"பல நாடுகளின் ஏராளமான இசைகளை என் கணவர் கேட்டிருக்கார். முக்கியமானவற்றை சேகரித்தும் வைக்கிறார். அப்படி ஐநூறுக்கும் மேல் CD-க்கள் சேகரித்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு இசையை இது வரை அவர் கேட்டதேயில்லை. அவரு கேட்ட கேள்விகளைத் தான் நான் உங்கிட்ட கேக்கறேன்" என்றார். அவரின் கேள்விகள் "இந்த CDயின் composer யாரு, notes-லாம் எழுதினது யாரு, notes கெடைக்குமா ?". இசை பற்றி கேக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இசை பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார்.

இளையராஜாவைப் பற்றி ஒரு intro கொடுத்தும், அவர் அசந்து போன அழகைச் சொல்ல வார்த்தையில்லை. இதைத் தவிர "no kidding, he was a street musician ?!!!!"

என்ன தான் பல முறை (மெய்மறந்து) கேட்டிருந்தாலும் இவரு சொன்னதுக்கப்புறம், 'பொல்லா வினையேன் நின் பெருஞ்சீர்' என்ற இரண்டாவது track-ல, மடை திறந்த வெள்ளமென கசியற வயலின்களோட இசை, அப்பப்பா ... தேகமெல்லாம் அப்படி ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது உண்மை.

கேட்டுக் கொண்டிருக்கும் போதே மற்றொருவர் வந்து, "if you don't mind, I borrow the CD" என்று, சுழன்று கொண்டிருந்த CD-யை எடுத்துச் சென்றுவிட்டார்.

ராஜா சார் நீங்க அமெரிக்காவுலயும் திருவாசகம் CD வெளியிடறதா ரொம்ப நாள் முன்னாடி செய்தி படிச்சேன். அப்படிப் பன்னலையா ?

என்னோட CD சுத்திக்கிட்டே இருக்கு. எப்போ என் கைக்கு வருமோ ? இக்கட்டுரையின் முதல் வாக்கியத்தை இங்கே நினைத்தால் பயமாக இருக்கிறது. அதுவும் இசை கலந்த திருவாசகம்.

-----

பிழை இருப்பின் வழக்கம் போலத் தெரியப்படுத்தவும். உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டம் இடுங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா.

Tuesday, April 24, 2007

அன்பு

வறண்ட நிலத்தின் மேல்
வான் பொழியும் பூச்சொரியல்
கனத்த மனதிற்கு
மருந்திடும் மென் மயிலிறகு
துன்பத்தின் சாயலையும்
துரத்தி விடும் தேவதை
இன்பத்தை வரவழைத்து
இதம் தரும் இன்னிசை
சுட்டெரிக்கும் வெயிலினிலே
சுகந் தரும் ஆலமரம்
அலைக்கழியும் மனதிற்கு
அமைதி தரும் நந்தவனம்

அன்பு –
அது ஒரு அதிசயம்
அன்பு ஒரு அக்ஷய பாத்திரம்
எடுக்க எடுக்க நிறையும்
கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!

--கவிநயா

Sunday, April 22, 2007

பனி

வாராயோ என்றிருந்து வந்துவிட்டாய் நாள்கடந்து
பாராயோ என்னும்படி பாந்தமுடன் -- சீராக
இரவிலே புல்தரைப் போர்வையா யெங்கும்
பரவி விழுந்தாய் பனி

வெண் தொப்பி வாகனங்கள் விரையும்
வெண் தண்டவாளத் தார்ச்சாலை -- கண்படும்
வெண் பஞ்சுப் புல்தரை உச்சிமர
வெண் கிளைகளாய்ப் பனி

துள்ளி யோடுஞ் சிறார் கைநிறைய
அள்ளி யெடுத் தெறிய -- முள்ளைத்
தள்ளி விரையும் மாந்தர்மேல் விழும்
புள்ளி புள்ளியாய்ப் பனி

குஷியாகக் குழந்தைகளும் களமிறங்கிக் கவனமாய்
வீசியடித்த வெண் குவியல் -- பேசியே
பூசிமுடித்த பனிமனிதன் சூரியன் வரவாலே
கசிந்தோடிக் கரைந்த பனி

மீண்டும் எப்போது வருவாயோ சற்று
நீண்ட நாட்கள் உறைவாயோ -- என்றேங்கியே
உன்வரவு காணக் கண்விழித்துக் காத்திருப்பது
சின்னஞ் சிறாரின் பணி

-----

வெண்பா எழுதும் ஆசை என்னையும் தொற்றிக்கொண்டது, அதன் விளைவாய் எழுதியது, சற்று காலதாமதாய் வெளியிடுகிறேன். நிறையோ, குறையோ உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா

மனசு

வானம் போல விரிஞ்சிருக்கும்
வண்டு போலச் சுத்தி வரும்
கானங் கேட்டுக் கனிஞ்சிருக்கும்
கனவுக் குள்ள கத படிக்கும்

வெள் ளந்திப் புள்ள போல
சொல்லுக் கேக்க வாடிப் போகும்
மறுகி உருகி மாஞ்சு போகும்
மாத்துத் தேடி ஏங்கிப் போகும்

அன்பக் கண்டா அசந்து போகும்
ஆவல் மீற ஆட்டம் போடும்
காட்டு மல்லிப் பூவப் போல
காடும் மேடும் வாசம் வீசும்

--கவிநயா

'அன்புடன்' குழுமம் - கவிதைப் போட்டி - தேதி நீட்டிப்பு

வணக்கம் நண்பர்களே.கவிதைப் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்த அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.


காட்சிக்கவிதைக்கு மட்டும் ஏப்ரல் 30, 2007 நள்ளிரவு 12 மணி வரை கால அவகாசம் தர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிலரின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க, இதற்கான தொழில்நுட்பக் காரணத்தால் இதற்கு மட்டும் அவகாசம் அளிக்கப்படுகிறது.எனவே காட்சிக்கவிதைக்கும் நீங்கள் 4 படைப்புகள் வரை அனுப்பலாம்.

இந்தப் பிரிவிலும் பங்கேற்க இது ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி காட்சிக்கவிதை படைக்க ஊக்கப்படுத்தவும். கவிதைப் போட்டி அறிவிப்பை இங்கே காணலாம்:
http://priyan4u.blogspot.com/2007/03/2.html
http://groups.google.com/group/anbudan/web

Saturday, April 21, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 10

காலம் கலிகாலம்
நீதித்துறை எல்லை தாண்டக் கூடாது
நாடாளுமன்றம், அரசின் நிர்வாக செயல்பாடுகளில் நீதிமன்றங்கள் குறுக்கிடக் கூடாது. தனது எல்லையிலிருந்து நீதித்துறை விலகக் கூடாது என ஒருவர் எச்சரித்துள்ளார். டெல்லியில், மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அவர் - அரசியல் சட்டத்தின் முக்கியத் தூண்களாக நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை உள்ளன. இதில் ஒரு அமைப்பு இன்னொன்றின் செயல்பாடுகளில் தலையிடுவது சரியாக இருக்காது. ஒவ்வொரு அமைப்புக்கும் சில எல்லைகள் உள்ளன, கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றிலிருந்து மீறி நடக்க யாரும் முயற்சிக்கக் கூடாது. குறிப்பாக நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் குறுக்கிட நீதித்துறை முயலக் கூடாது. நீதித்துறை தனது எல்லையைத் தாண்டி போகக் கூடாது. அரசியல் சட்டத்தை மதித்து அதை நிறைவேற்ற வேண்டிய முக்கியக் கடமை நீதித்துறைக்கு உள்ளது. மூன்று அமைப்புகளும் தங்களது எல்லையை மீறி நடந்து கொண்டால் அது மக்களுக்கு விரோதமானதாக மாறி விடும். ஒன்றுக்கொன்று நல்லிணக்கத்துடன், தங்களது அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
இப்படி சொன்னது தமிழ்நாட்டில் நீதிபதிகளை மிரட்டும் மாநில அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ, அவருடைய கருத்தை ஆதரிக்கும் தமிழக முதல்வரோ இல்லை. இப்படி பேசியிருப்பது இந்தியாவில் அதிகம் படிததவர், இந்திய வங்கிகளுக்கெல்லாம் தாயகமான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரும், இந்தியாவின் தற்போதைய பிரதமருமான டாக்டர். மன்மோகன் சிங்.'
இது நம்ம ஆளு' என்ற பாக்யராஜின் படத்தில் சங்கீதம் நன்கு தெரிந்த!!! ஷோபனாவிற்கும், அது சிகப்பா கருப்பா என்றுகூடத் தெரியாத பாக்யராஜுக்கும் நடக்கும் போட்டியில் பாக்யராஜ் வெற்றி பெற்றவுடன், போட்டியின் தலைவர் (ஷோபனாவின் தாத்தா) சொல்லும் ஒரு வசனம்:
'பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் எனறு சொல்வார்கள், இங்கு நாரோடு சேர்ந்த பூவும் நாறிவிட்டது' என்று. பிரதமர் இப்படி பேசியதை சூர்ய தொலைக்காடசியில் பார்த்தவுடன், அதுதான் ஞாபகத்திற்கு வந்தது.
இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதே மேடையில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் தலையிட நீதித்துறைக்கு அதிகாரம் உண்டு என்று வலியுறுத்திப் பேசி, நீதித்துறைக்கு சுந்திரமாக செயல்படும் அதிகாரம் உள்ளது. அதேபோல நாடாளுமன்றம், சட்டமன்றங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்யும் அதிகாரமும் நீதித்துறைக்கு உண்டு. நீதித்துறை எடுக்கும் சில நடவடிக்கைகள், நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. இது இயற்கையானது என்று சரியான பதிலடி தந்துள்ளார், ஆனால், மன்மோகன் சிங் போன்றவர்களே இப்படி பேச ஆரம்பித்திருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
எளியோரை வலியோர் வாட்டப் போகின்றனர்
இதை எப்படி இந்திய குடி மக்களாகிய நாம் தாங்கிக் கொள்ளப் போகிறோம்? இதை தவிர்க்க இந்திய அரசு ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை. நம் நாடு இன்று இருக்கும் நிலையில் இது தேவையா? இதனால் ஏற்பட இருக்கும் விளைவுகளை நம் நாடு தாங்குமா?
திருவள்ளுவர் நட்பியல் - பகைமாட்சியில் இப்படி பாடுகிறார்.
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
மெலியோரை விடுத்து வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும். இப்படி சொன்ன வள்ளுவர் வலியறிதல் அதிகாரத்தில் இப்படி பாடுகிறார்.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
அதாவது, செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாரருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபடவேண்டும். தோல்வி நிச்சயம், இழப்பு நிச்சயம் என்று கண்கூடாக தெரிந்த பிறகு இப்படி ஒரு பெரிய தற்கொலைக்கு இந்திய அரசு எப்படி ஒப்புக் கொண்டது? இதன் காரணமாக நம் நாட்டு வெட்டி ஆபீசர்களுக்கு அடுத்த வேலை வந்து விட்டது. மாரியம்மன் கோயில் தீ மிதிக்க வேண்டும், மண் சோறு சாப்பிட வேண்டும், அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும், அப்புறம் நாம் தோற்று விட்டால், தோற்ற வீரர்கள்(?) வீட்டை இடிக்க மண் வெட்டி, கடப்பாறை வாங்க வேண்டும், எவ்வளவு பணச்செலவு, கால விரயம்.
அட போங்கப்பா இவன் இப்படி ஒரு விஷயமும் சொல்லாம ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்கரானேன்னு திட்டரதுக்கு முன்னாடி சொல்லிடறேன். இந்திய கிரிகெட் அணி நம்மை விட பலம் வாய்ந்த, தென் ஆப்ரிக்காவையே தோற்கடித்த வங்கதேச அணியுடன் 3 ஒரு நாள் ஆட்டங்களும், 2 - 5 நாட்கள் ஆட்டங்களும் ஆட அடுத்த மாதம் அவர்கள் நாட்டிற்கு போகிறார்கள். அதைப் பற்றிதான் கவலைப் பட்டு எழுதி விட்டேன். தயவு செய்து கோபிக்காமல் எல்லோரும் உங்கள் வீட்டில், நீங்கள் வணங்கும் சாமிக்கு ஒரு ரூபாய் (அ) டாலர் முடிந்து வைக்கவும். எந்த சாமி அருள் தரும் என்று தெரியாததால், எந்த சாமியையும் விட்டுடாதீங்க.
இந்த வள்ளுவரை நினைத்தால் ரொம்ப கோபம் கோபமா வருது, நட்பியல் - பகைமாட்சியில் இப்படியும் பாடியுள்ளார்.
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
போர்முறை கற்றறியாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.
இது இந்திய அணிக்குன்னு அவர் பாடினதா நீங்க நெனச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை. அது சரி, நாம அதெல்லாம் எங்க படிக்கப் போறோம், அப்படி படிச்சாலும், அதை சீரியசா எடுத்துக்க போறோமான்னு நீங்க கேக்கரது காதுல விழுது, என்ன, இன்னும் ஒரு 10-15 தலைமுறைக்கு இந்தியா, பெர்மூடாவை உலகக் கோப்பை 2007-ல பின்னி, பெடலெடுத்து, பிரிச்சு மேஞ்சதையே சொல்லிட்டிருப்போமில்ல.
கடைசீயா இந்திய நன் மக்களுக்கு ஒரு சின்ன அறிவுரை, கடப்பாறை நல்லதா வாங்குங்க, டோனி வீடு நல்லா ஸ்ட்ராங்கா இருக்காம், அவரு இந்தத் தொடர்ல எல்லா நாளும் விளையாடப் போறாராம்.
-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்

Thursday, April 19, 2007

போராட்டம்

உன்னை மாதிரி அனைவரும் நினைத்தால்
உலகம் அன்றே அழிந்திருக்கும்

விருப்போ வெறுப்போ இவ் வுலகில்
சேர்ந்திருக்கத் தவறி விட்டாய்

உன்னைத் தாழ்த்திக் கொண்ட தனால்
தன்னந் தனியனாகி நின்றாய்

உன்னைத் தாழ்வாய் நினைத் ததாலே
உதிர்த்தாய் முப்பதிர்க்கு மேலுயிரை

தனிமை கொண்டது உன் குற்றம்
வஞ்சகம் வளர்த்ததும் உன்குற்றம்

வஞ்சகம் வளர்த்துக் கொண்டவனே பிறர்
நெஞ்சம் குமுறுவதைக் கேட்ப்பாயா ?

பள்ளியில் உன்னை ஒதுக்கினால் பயந்து (?!)
பதுங்கி வளர்ந்ததும் உன்குற்றம்

வாழ்வின் முதல் விதி போராட்டமே
வாழத் தவறிய சிறியவனே

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
எங்கள் கவிஞன் பாடியது

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
என்றும் அவன்வரி சொல்லியது

பார்த்ததில்லையா சோமாலியா போன்ற நாடுகளை
பசிக்கும் நீருக்கும் அலைவதை

அங்கும் சிரிப்பு இருக்கிறது மேலும்
அவர்கள் வாழ்வும் நிலைக்கிறது

போராட்டமே வாழ்வன்று அதன் விளைவாய்
நிச்சயம் கிடைக்கும் வாழ்வொன்று

எவரது வாழ்வும் போரட்டமே பின்பு
எஞ்சி நிலைப்பது ஆனந்தமே

போராடி வெல்பவன் மனிதனடா அதையன்றி
ஏங்கிக் கொள்பவன் கோழையடா.

Wednesday, April 18, 2007

வெர்ஜீனியா டெக் சம்பவத்தில் உயிரிழந்தோருக்காக பிரார்த்தனைகள்

வெர்ஜீனியா டெக் சம்பவத்தில் உயிரிழந்தோருக்காக.....அவர்தம் ஆத்மா சாந்தியடையவும், அவர் குடும்பத்தோர் இந்தத் துயரத்தை எதிர்கொள்ளத் தேவையான மனதைரியத்தை இறைவன் அவர்களுக்கு அளிக்கவும்...


கண்களிலே கனவுகளுடன்
கல்லூரியில் கால்வைத்தாய்
ஏதோஓர் கொடுமைக்கு
எதனாலோ பலியானாய்

உயிர்விலகும் நேரத்தில்
உன்மனதின் நினைவெதுவோ
உன்வாழ்வின் லட்சியங்கள்
(உன்)உயிருடனே புதைந்தனவோ

அன்பூற்றி உனைவளர்த்த
அன்னை என்செய்வாளோ
அரவணைத்துப் போற்றிய
உன்தந்தை என்செய்வானோ

தருமங்கள் நியாயங்கள்
புரியாத மாயங்கள்
ஏதேதோ கேள்விகள்
விடைதெரியா வினோதங்கள்

மிதமிஞ்சிய அன்பாலே
இறைவன் உன்னைச்
சேர்த்துக் கொண்டான்
என்றே நம்பிடுவோம்
நம்பித் தொழுதிடுவோம்


பிரார்த்தனைகளுடன்...
கவிநயா.

Tuesday, April 17, 2007

வெறி

நன்னண்பர் கூட்டம்வேண்டும்
நாலுபேரைத் தெரியவேண்டும்

நயம்பட விவாதிக்க
நல்லவார்த்தை பேசவேண்டும்

ஏதுமின்றித் திரிந்ததாலே
ஏந்தினாயோ துப்பாக்கி

பட்டுப் பட்டென்று
சுட்டு வீழ்த்தினாய்

ஆம்புலன்ஸ் சத்தத்தையும்
அலறல்கள் மீறியதே

பயிலும் உலகையே
பீதியில் ஆழ்த்தினாய்

உள்ளிருக்கும் எல்லோரையும்
மரணபயம் தொற்றியதே

மடிந்தாய் ஒருவழியாய்
மறுபடியும் வராதே

வந்தாலும்,

நன்னண்பர் கூட்டம்வளர்
நாலுபேரைத் தெரிந்துகொள்

நயம்பட விவாதிக்க
நல்லவார்த்தை கற்றுக்கொள்

ஏதுமின்றித் திரியாததால்
ஏந்தவேண்டாம் துப்பாக்கி ...