Monday, February 05, 2007

கதை கேளு கதை கேளு

ஞாயிறன்று ரிச்மண்ட் வெள்ளித்திரையில் நான் கண்ட ஒரு தமிழ்த்திரைப்படத்தைப்பற்றி எழுதலாமென்று முற்பட்டேன். என்னடா நான் பட விமர்சனம் செய்யும் அளவுக்கு தமிழ் சினிமாவின் நிலை மாறிவிட்டதே என்று ஓரிருவர் பல்லைக்கடிப்பது கேட்கிறது. என்ன செய்வது? தமிழ்சங்க பிளாக் சில மாதங்களாக மிகவும் மந்தமாக இருக்கிறது. ஏதோ நம்மால் முடிந்த கைங்கர்யம். ஞாயிறன்று தலைக்கு மேல் வேலை இருந்தது. நிஜமாகவே நானும் என் மகனும் முடி வெட்டிக்கொண்டு பல வாரங்கள் ஆகின்றன. படம் பார்க்கப்போய் இந்த வாரக்கடைசியும் கோவிந்தா.எது எப்படியிருந்தாலும், ---ஏ போனாலும் தமிழ் பண்பாட்டைக்காப்பாற்றவேண்டும், நமது நண்பர் அரங்கேற்றும் படத்தைப்பார்க்கவேண்டும் என்ற கடமை உணர்வுடன் சென்றேன்.

அடடா, படத்தின் பெயரை சொல்லவில்லையோ? நமது இளைய தளபதி நடித்த "போக்கிரி" தான் அந்தப்படம். நம்ம "க்ரேட் டான்ஸர்" பிரபுதேவா இயக்கிய படம் என்பதை சொல்லவேண்டும். வழக்கமான தமிழ் படம் போல் இல்லாமல் ஒரு சில காட்சிகளும், வசனங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. முழு பட விமர்சனம் செய்ய இயலாது. அதனால் ஆங்காங்கே கோடிட்டுக்காட்டுகிறேன். மீதியை download செய்யாமல் DVD நம் பேட்டையில் ரிலீஸ் ஆன பிறகு பார்த்துக்கொள்ளவும்.

திருப்பதி, ஆதி, பரமசிவன், ஜாம்பவான், சிவகாசி என்று பக்திப்பெயர்களை வைத்துவிட்டு ஹீரோ வில்லன்களை பின்னியெடுக்கும் படங்களைப்பார்த்தநமக்கு "போக்கிரி" என்று சரியாக பெயர் வைத்து இது சண்டைப்படம் தான் என்று அப்பட்டமாக சொன்னது மிகவும் நல்லது. படத்தின் முதல் காட்சியே ஒரு underground parking lot ல் ஆரம்பமாகிறது. ஒரு பெண் "டக் புக்" என்ற செருப்பு சத்தத்துடன் காருக்கு சென்று ஏறுகிறாள்.என்னடா நமது ஜேஸன் ஸ்டாதம் நடித்த "ட்ரான்ஸ்போர்ட்டர்" போல ஆரம்பிக்கிறதே என்று எண்ணும் போது தடாலென்று ஒரு கொலையுண்ட ரத்தம் தோய்ந்த உடல் அந்தப்பெண்ணின் காரின் மேல் விழுந்து windshield ல் சரிகிறது. கொலையைப்பார்த்த அந்தப்பெண்ணும் பணால்.

புதிய போலீஸ் கமிஷனராக பதவியேற்கிறார் மொய்தீன் கான் (நமது 'விருமாண்டி' புகழ் மாவீரன் நெப்போலியன்).

இண்டர்நேஷனல் தாதா அலி பாய் (பிரகாஷ் ராஜ்).
அவர் கூட்டத்தைச்சேர்ந்தவர்கள் பட்டியல் - தனக்குப்போட்டி வந்துவிட்தே என்று அஞ்சும் ஒருவன்,
"நீ எப்போ கிடைப்பாய்", "நான் உன்னை வேட்டையாடுவது எப்போ" என்று "ஜொள்ளு" விட்டுக்கொண்டு அலையும் ஒரு "ஜேம்ஸ் பாண்டி" ரேஞ்சுக்கு வரும் ஒரு பார்ட்டி,
மொட்டை தலை ஆனந்தராஜ்,
பான் பீடா சவைத்து தன் ஆபீஸிலேயே துப்பும் "ஜொள்ளு" இன்ஸ்பெக்டர் (பெயர் ஏதோ **திவாரி என்று படித்த ஞாபகம் - அவர் நடிப்பு புதிதாக உள்ளது).
இவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்யும் அட்டூழியங்களைக்காட்டுகிரார்கள்.
இவர்களையெல்லாம் பின்னியெடுக்கும் "போக்கிரி"யாக வருகிறார் விஜய்.
இவரை காதலிப்பதா வேண்டாமா என்று குழம்பி காதலிக்கும் "அசின்". தலையில் சுமோ wrestler போன்ற கொண்டையுடன், விதவிதமான குங்பூ, கராத்தே, சுமோ காஸ்ட்யூமில் வந்து கூத்தடிக்கும் "சோடா பாடி" வடிவேலு. ஒரு காட்சியில் ஒரு ஆள் டீ குடித்துக்கொண்டிருக்கிறார். அவர் அருகில் வடிவேலு சென்று 'படார்' என்று -சு விட, saucer லிருந்து டீ பறக்கும் காட்சி பிரமாதம்.
அசின் தம்பியாக வரும் ஒரு "கொழுக் மொழுக்" அசினிடம் வம்பு செய்ய வரும் வில்லன்களை விஜயிடம் cell phone ல் பேசி லாவகமாக இருக்கும் இடத்தைத்தெரிவிக்கும் இடம் ஜோர். Cell phone களால் விளையும் பயன்களில் தலைசிறந்தது இது.

விஜய் போடும் ஸ்டண்ட்கள், பேசும் வசனங்கள், காமெடி காட்சிகள் புது விதமாக இருந்தது.

நான் ரசித்த சில காட்சிகள்:

1. ஒரு கும்பல் விஜயை துரத்திச்சென்று ஒரு warehouse க்கு செல்கிறது. கும்பலின் தலைவன் ஷட்டரை பூட்டி சாவியை எறிந்து விடுகிறான். பிறகு சண்டை. விஜய் எல்லோரையும் பின்னியெடுத்துவிட்டு கடைசியில் தலைவன் பக்கம் பார்க்கும் போது அவன் சுத்தியலால் ஷட்டரின் பூட்டை உடைத்து வெளியேறப்பார்க்கிறான். அப்போது விஜய் "சாவியை எறியாம இருந்திருக்கலாமில்லே?" என்று சொல்வது ஜோர்

2. விஜய் பிரகாஷ்ராஜை முதலில் சந்திக்கும் போது வரும் வசனங்கள்: பிரகாஷ்ராஜ்: உன்னை பார்த்தா ரௌடி மாதிரியே தெரியலியே - பக்கத்து வீட்டுப்பையன் மாதிரி இருக்கே
விஜய்: ஏன் உங்களைப்பார்த்தா கூட தான் எதிர்த்த வீட்டு மாமா மாதிரி இருக்கு

3. படம் முடிவில் விஜய் விடும் ஒரு குத்தினால் சில வினாடிகள் பிரகாஷ்ராஜின் காது மந்தமாகிவிடுகிறது. அப்போது எந்தவித சத்தமும் இல்லாமல் காட்சி சில வினாடிகள் நிசப்தமாக இருக்கிறது.

4. பிரகாஷ்ராஜை தூங்கவிடாமல் துன்புறுத்தும் போலீஸ் லாக்கப் காட்சி

மணி சர்மாவின் இசையில் சில பாடல்கள் நன்றாக உள்ளன. குறிப்பாக "வசந்த முல்லை", "மாம்பழமாம் மாம்பழம்", "ஆடுங்கடா என்னைச்சுத்தி".

ஆக மொத்தம் சமீபத்தில் பார்த்த சில நல்ல படங்களில் "போக்கிரி" ஐயும் சேர்த்துக்கொள்ளலாம் (புது விதமாக இருப்பதால்)

Saturday, February 03, 2007

வலைவலம்

Mac வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
windows update செய்தே நோவார்.



முதற்கண் நன்றி நவில வேண்டும்.

இந்த பதிவை உயிருடன் வைத்திருக்கும் பரதேசியாரே! உமக்கு ஆயிரம் பொற்... கும்பிடு...

நம் வலைப்பதிவு பிரபலமாகிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். சமீபத்தில் பரதேசியாரின் லொள்ளையும், கடுப்ஸையும் தமிழ்ப்பதிவுலக பிரபலங்களான துளசியும் பெங்களூர் செந்தழல் ரவியும் படித்து ரசித்திருக்கிறார்கள். துளசியக்கா நியூசிலாந்தில் தமிழ் வளர்க்கிறார்கள். அவரின் எவரிடே மனிதர்கள் தொடர் படிக்க வேண்டிய ஒன்று. செந்தழல் ரவி சென்ற ஆண்டு நட்சத்திர வலைப்பதிவர் பரிசு வாங்கியவர். சென்ற மாதத்தில் நம் பதிவுக்கு இங்கிருந்தெல்லாம் வருகை தந்திருக்கிறார்கள். வலது கோடியில் துளசி எட்டிப் பார்ப்பது தெரிகிறதா?




அதெல்லாம் சரி - நம் ஊரில் யார் படிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?

இதோ வந்து விட்டது தமிழில் யாஹூ. சினிமா, ஆரோக்கியம், ஆன்மீகம் என்று விகடன் கல்கி பாணியில் போகிறது. இதை பார்த்தவுடன், எம்பெருமான் கூகுளாண்டவர் ஞாபகம் வந்தது. அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தால், இந்தியப் பக்கத்தோடு நிற்கிறார். தமிழில் தேடலாம் இந்த தளத்தில். பழக்க தோஷத்தில் தமிழில் தேடினால், கிடைத்தது நானே! ஹி... ஹி...

அதெல்லாம் கிடக்கட்டும். இந்த கலாட்டாவைப் பாருங்கள். பண்ருட்டிக்காரர்களுக்கு கல்யாணத்தில் என்ன குறை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் காலை டிபனுக்கு இட்லி இல்லைபென்றால் பெண்வீட்டுக்காரர்களாய் இருந்தாலும் பொங்கியெழுந்து விடுவோம். கடலூர்காரர்களுக்கு எச்சரிக்கை.

சென்னையில் புத்தகக் கண்காட்சி மிக கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இப்போது நிறைய ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடக்கின்றன. நல்ல கும்பலும் வருகிறது. மக்கள் புத்தகங்களும் நிறைய வாங்குகிறார்கள். வாஸ்து, ஆன்மீகம் மற்றும் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் நிறைய விற்பதாக ஒரு நண்பனின் தகப்பனார் சொன்னார். துளசி கோபால் ரொம்பவே பாராட்டியிருக்கிறார். தமிழ் இனி அழியாது என்று. அவருக்கு அந்த சந்தேகம் ஏன் வந்தது என்று தெரியவில்லை. இத்தனை பேர் தமிழில் எழுதும்போது, நியூஸிலாந்தில் தமிழ் சொல்லிக் கொடுக்கும்போது, அது ஏன் அழிகிறது? கிழக்குப் பதிப்பகத்தை நடத்தும் பத்ரியின் பதிவிலும் ஒவ்வொரு நாளைப்பற்றியும் படிக்கலாம். நான் கடந்த ஆண்டுகளில் இரண்டு முறை நெய்வேலியில் இந்த புத்தகக் காட்சி போயிருக்கிறேன். புத்தகக் கடைகளுடன் மின்சாரத்தில் இயங்கும் பலவிதமா ராட்டினங்கள்(rides) எல்லாம் சேர்ந்து ஒரே அமர்க்களம்.ஒரு ராட்டினத்தில் உட்கார்ந்து ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து பார்த்தால் இன்னும் சுற்றிக் கொண்டிருந்தது. எங்க வீட்டு கரண்டா, உங்க வீட்டு கரண்டா?

சமீபத்தில் ஐரோப்பாவில் விஞ்ஞானிகள் கூடி உலகம் வெப்பமடைவதற்கு மனிதன்தான் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். எனக்கு ஒரே ஆச்சரியம். அதற்கு டைனோசார்கள்தான் காரணம் என்று இத்தனை நாள் நம்பிக் கொண்டிருந்தேன். டப்யு இது குறித்து என்ன நினைக்கிறார் என்று யாராவது கேட்டுச் சொன்னால் நல்லது.

'டூர் டி பிரான்ஸை' இவ்வளவு நாள் தன் ஹேண்டில்பாரில் வைத்திருந்த லேன்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்க் புற்றுநோய் வந்து பிழைத்தவர் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். இப்போது புற்றுநோயை குணமாக்கும் ஆராய்ச்சிக்கு வாஷிங்டனில் முக்கியத்துவம் கொடுப்பதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார் லேன்ஸ். என்ன செய்யப்போகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை(எனக்கு). ஆனால் நம்மால் முடிந்த, பெயர் பதிவை செய்வோம். லிவ் ஸ்ட்ராங். Go Lance!(அதை தமிழில் எழுதினால் ஏனோ நன்றாக இல்லை)

விக்கி பசங்களின் பதிவும் அறிவை வளர்ப்பதில் அக்கறை கொண்டவர்கள் படிக்க வேண்டியது. நான் அந்த பக்கம் எல்லாம் போவதில்லை. நயன்தாரா சிம்பு விவகாரம் என்னாயிற்று என்று தெரிந்தாலே போதும். ஜென்ம சாபல்யம் அடைவேன்.

இந்தியாவில் காதலர்(வேலைண்டின்) தினம் இப்போதெல்லாம் கோலாகலமாக நடக்கிறது. இந்த சிவசேனையும் தமிழர் மரபுக்காவலர்களும் இந்த ஆண்டு என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். எனக்கு கல்லூரி முடிக்கும் தறுவாயில்தான் அப்படி ஒரு தினம் இருக்கிறது என்று லேசாக தெரிந்தது. முதலில் யார் அந்த வேலண்ணன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்பென்ஸர் பிளாஸாவில் நடந்த போட்டிகளைப் பற்றி விகடனில் படித்து பெருமூச்சு விட்டுக் கொண்டேன். இப்படியெல்லாம் ஏன் நமக்கு நடக்கவில்லை என்று!

சரி இதெல்லாம் போகட்டும். பதினேழாம் தேதி மதியம் மூன்று மணிக்கு ஹிந்து மையத்துக்கு பொங்கல் விழா காண வந்து விடுங்கள். சென்ற முறை ஜால்ரா சரியாக அடிக்காததால், இந்த முறை அதற்குக்கூட யாரும் என்னைக் கூப்பிடவில்லை.

காணவில்லை: பித்தன், முரளி, ரமேஷ், எதிரொலி, தருமி, அஜாதசத்ரு, கவிநயா. கண்டுபிடித்து இப்பதிவுக்கு அழைத்து வருவோர்க்கு ஒரு பதிவு இனாம். அப்படியே இந்த இடது பக்கத்தில் அணிவகுக்கும் அமைதிப் படையினருக்கும் ஒரு சலாம். ஏனிந்த மௌனம் ஏனோ, ஏழை எமக்கருள?

Thursday, February 01, 2007

பிப்ரவரி மாத லொள்ளு மொழிகள்

என்ன தான் எட்டு பட்டிக்கும் எஜமானா இருந்தாலும்
முடி வெட்டிக்க தலை குனிஞ்சு தான் ஆகணும்

பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க
ஆனா இட்லி தோசைக்கு லீவு குடுப்பாங்களா?

Tuesday, January 30, 2007

கடுப்போ கடுப்ஸ் - 3

நர்ஸ் 1: டாக்டர் ஏன் கடுப்பா இருக்காரு?
நர்ஸ் 2: யாரோ ஒரு ஆள் போன் பண்ணி "pant-shirt" ல எல்லாம்
தையல் பிரிச்சு அடிக்க எவ்வளவு ஆகும் கேட்டானாம்

நர்ஸ் 1: டாக்டர் ஏன் கடுப்பா இருக்காரு?
நர்ஸ் 2: யாரோ ஒரு பேஷண்ட் கை வலின்னு வந்தாராம்.
செக்கப் பண்ண கையை நீட்டுங்கன்னு டாக்டர் சொன்னா
"இன்னி வரைக்கும் நான் யார் கிட்டேயும் கையை நீட்டினது இல்லே
அதுனால முடியாது" அப்படீன்னு அடம் பிடிக்கிறாராம்

Thursday, January 25, 2007

போலி ஜோலி

நபர் 1: அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?
நபர் 2: Physical checkup க்கு எவ்வளவு செலவாகும்னு
கேட்டா water wash பண்ணணும், joints க்கு grease போடணும்,
front-end align பண்ணணும்னு சொல்லி ஒரு மெகா லிஸ்ட் குடுக்கராரு.

நபர் 1: அது போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?
நபர் 2: ஸ்கானிங் பண்ண எவ்வளவு ஆகும்னு கேட்டா
ஒரு பக்கத்துக்கு 100 ரூ, double ஸைடுக்கு 150 ரூ,
கலருக்கு எக்ஸ்ட்ரா 100 ரூ அப்படீங்கறாரு

நர்ஸ் 1: ஆபரேஷன் பண்ண வந்திருக்கிறது போலி டாக்டர்னு
எப்படி சொல்றே?
நர்ஸ் 2: ஆபரேஷன் தியேட்டர்ல டேபிள்ல நின்னுக்கிட்டு "Fork and Knife"
குடுங்கன்னு கேக்கறாரு

Wednesday, January 17, 2007

பொங்கல் பட்டிமன்றம்

ஸான்ஃபிரான்ஸிஸ்கோவுக்கு போனாலும் ஸன் டிவி விடாதாம்! இப்போது பண்டிகை நாட்களில் எல்லாம் டிவி முன்னே பழிகிடப்பது பழக்கமாகிவிட்டது. யாரும் பட்டாசு வெடித்து, பொங்கல் பொங்கி, அடித்து பிடித்துக் கொண்டு ரஜினி படத்து க்யூவில் நிற்பதில்லை போலிருக்கிறது. என்னதான் வாழ்க்கையோ. (நீங்கள் லேப்டாப்பை கட்டிக்கிட்டு அழற மாதிரின்னு பின்னால ஒரு குரல்)

போகட்டும். பார்த்துவிட்டு சும்மா இருக்கிறார்களா? அதுதான் இல்லை. நாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்னு யூட்யூபில் போட்டுவிடுகிறார்கள். இதோ வருகிறார் பட்டறிவா, படிப்பறிவா என்று அலச சாலமன் பாப்பையா

யூட்யூபாவது சரி. நம்ப ஊரு அப்னா ட்யூப் இருக்கே - சிவ சிவா. அதில் பதிய 13 வயதுக்கு மேலே இருந்தால் போதுமாம். நம்ப ஊரு பசங்க ரொம்ப தேறிட்டாங்கன்னு இப்படியா?

Tuesday, January 16, 2007

கடுப்போ கடுப்ஸ் - 2

ரசிகர் 1: வயலின் வித்வான் ஏன் கடுப்பா இருக்காரு?
ரசிகர் 2: வித்வானை அறிமுகப்படுத்தும்போது அவர் பெயரான "கோட்டக்குருச்சி குமரேசன்" என்பதை "கொட்டாங்குச்சி குமரேசன்" ன்னு சொல்லிட்டாங்களாம்.

ரசிகர் 1: அந்த பாகவதர் ஏன் தலையில ஹெல்மெட்டோட பயந்துக்கிட்டே பாடறாரு?
ரசிகர் 2: போன கச்சேரியில கடம் வாசிக்கறவரு தூக்கிப்போட்ட கடம்
பாகவதர் தலையில விழுந்திடுச்சாம் அதான்.

ரசிகர் 1: ஜலதரங்க வித்வான் ஏன் கடுப்பா இருக்காரு?
ரசிகர் 2: சபா செகரட்ரி கடைசி நிமிஷத்துல இந்த ஆடிட்டோரியத்தில்
water shortage , தண்ணி இல்லாம ஜலதரங்கம் வாசிச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கன்னு சொல்லிட்டாராம்

ரசிகர் 1: கச்சேரியில் தம்புரா போடறது பாகவதரோட தம்பின்னு எப்படி சொல்றீங்க?
ரசிகர் 2: பாகவதர் அவரை அறிமுகப்படுத்தும்போது "தம்பி ரா" ன்னு கூப்பிட்டாரே

Thursday, January 11, 2007

கடுப்போ கடுப்ஸ் - 1

இது ஒரு புதிய முயற்சி. சுயமாக சிந்தித்து நானே உருவாக்கிய சிலவற்றை தொகுத்து "கடுப்போ கடுப்ஸ்" என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளேன். "மாதாந்திர லொள்ளு" களைப்போல் "மாதாந்திர கடுப்போ கடுப்ஸ்" அல்லது "வாராந்திர கடுப்போ கடுப்ஸ்" என்று பதிவு செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். நான் பதிவு செய்யும் இவை அனைத்தும் IIA (International Imagination Association) மார்க் பதித்த சொந்த கற்பனையே. எவரும் (முக்கியமாக இசைக்கலைஞர்களும் நடனக்கலைஞர்களும்) தவறாக எடுத்துக்கொள்ள(கொல்ல) மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மற்றொரு முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன். கூடிய விரைவில் அதையும் பதிவிடுகிறேன்.

கடுப்போ கடுப்ஸ் - 1

ரசிகர் 1: அந்த மிருதங்க வித்வான் ஏன் கடுப்பா இருக்காரு?
ரசிகர் 2: மிருதங்கத்துல வைக்க குடுத்த உப்புமாவுல வெங்காயம்
போடலையாம் அதான்

ரசிகர் 1: புல்லாங்குழல் வித்வான் ஏன் ரொம்ப கடுப்பா இருக்காரு?
ரசிகர் 2: Program break ல யாரோ விஷமக்காரங்க அவர் புல்லாங்குழல்கள் எல்லாத்துலேயும் எக்ஸ்ட்ராவா ஒரு ஓட்டை போட்டுட்டாங்களாம்

ரசிகர் 1: அந்த டான்ஸர் ஏன் கடுப்பா இருக்காங்க?
ரசிகர் 2: அவங்க டான்ஸ் ப்ரோக்ராமை TV ல "ஒளி" பரப்புவோம்னு
சொல்லிட்டு ரேடியோவில "ஒலி" பரப்பிட்டாங்களாம்

Monday, January 08, 2007

கல்விக்கு உதவி

ஏழைப்பெண் மஹாலட்சுமிக்கு உதவுவதில் செந்தழல் ரவி வெற்றி கண்டுள்ளார். அந்த விஷயத்தில் நாமும் வலைவரைப்படத்தில் ஏறியிருக்கிறோம்(அதாங்க - putting us on the map)

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_20.html

ரவியின் மற்ற முயற்சிகளுக்கு நம் வாழ்த்துக்கள்.

கல்விக்கு உதவுவதில் நான் சமீபத்தில் கேள்விப்பட்ட நிறுவனம் சிறப்பாக பணியாற்றுகிறது. ஜான் வுட் மைக்ரோசாஃப்ட்டிலிருந்து விலகி ரூம் டு ரீட் ஆரம்பித்த கதை யை அவருடைய புத்தகத்தில் சுவையாக எழுதியிருக்கிறார். அடுத்த முறை நீங்கள் ஏதாவது நன்கொடையளிக்க நினைத்தால் இந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும்.

Sunday, January 07, 2007

கதை வளர்ந்த கதை

இப்ப இந்த கத வளந்த கதய பாப்போம்.

இப்படி ஆரம்பிச்சுது:


கூட்டாங்கதை
(கதையை முடித்து பிறகு பெயர் வைக்கலாம்)

"ஏதோ எழுதனும்னு சொன்னியே?", என்றாள் சங்கரி.

அடுத்தது சேர்ந்தது:

"ம்.. என்னை மட்டும் எங்கப்பன் படிக்க வெச்சிருந்தான்னா உங்கிட்ட இப்படி பேப்பரேந்தி பேனாவேந்தி நிக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. என்னை பள்ளிக்கு அனுப்பினானா இல்ல பாடம் தான் சொல்லித்தந்தானா? சிறுசா இருக்கரப்போவே கண்ணாலத்த வேற பண்ணி வெச்சான்." என்று பொருமித்தள்ளினாள் சௌந்தரி.
"ஏன் ஒனக்கு என்ன கொறச்சல்? உன் மச்சான் தான் உன்னை கண்ணுல வெச்சு பாத்துக்கறானே!" என்றாள் சங்கரி.

பெண்களின் பேச்சு அடுத்தது இப்படி போனது:

"ஆமா. நீதான் மெச்சிக்கணும் என் மச்சானை. அப்படி வெச்சு பாத்துக்கிட்டா, நா ஏன் இங்க வந்து நிக்கறேன் எங்கப்பனுக்கு மனு எழுத?"
"அப்படி என்ன ஆச்சு இன்னிக்கு, இப்படி அலுத்துக்கற நீ", என்று தோண்டிப் பார்த்தாள் சங்கரி.

அடுத்த கட்டம் சுவாரஸ்யம். கதை ஒரு கதையிலிருந்து வெளியே வந்தது.

பேனா அதற்கு மேல் நகர மறுக்கிறது."சே, என்னத்த கதை எழுதி, என்னத்தப் பண்றது?" அலுப்பாக இருக்கிறது, கதையரசனுக்கு. பெயரைப் பார், கதையரசன் - நாலு வார்த்தை தொடர்ந்து எழுத வக்கில்லை; கதையரசனாம் கதையரசன். தனக்குத்தானே கடிந்து கொண்ட வண்ணம் பேனாவை வைத்து விட்டு, இரண்டு கைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொள்கிறார்.

"என்னங்க, வீட்ல குந்துமணி அரிசி இல்ல. காசு குடுங்க போய் வாங்கியாந்திர்றேன்; புள்ளக ரெண்டும் பள்ளிக்கொடத்துல இருந்து வந்தோன்ன பசிக்குதுங்கும்", அவருடைய சதகர்மிணி காப்பி டம்ளரை அவர் முன் நீட்டிய வண்ணம் "இல்லா"ள் பாட்டு இசைக்கிறாள். "இவ ஒருத்தி", அலுத்துக் கொண்ட வண்ணம் சட்டைப் பையைத் துழாவி அதில் இருந்த கடைசி பத்து ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டுகிறார், "இந்தா, கொஞ்சம் அடக்கியே வாசி. இதுதான் கடைசி", என்றபடி. அவருக்கே தெரியவில்லை அவர் பணத்தைச் சொல்கிறாரா அல்லது குன்றிவிட்ட தன் கற்பனையின் வளத்தைச் சொல்கிறாரா என்று. இந்தக் கதையை எழுதி நாளைக்குள் அனுப்பினால்தான் அது வாரப் பத்திரிகைக்குப் பிரசுரத்துக்கு முன் போய்ச் சேரும்; கொஞ்சமாவது ஏதாவது கிடைக்கும்.

"காப்பிய அங்க வச்சிட்டுப் போ. இன்னங் கொஞ்ச நேரத்துக்கு என்னைத் தொந்திரவு பண்ணாதே", அவளை அனுப்பி விட்டுக் கண்களை மூடிக் கதையைத் தேடியவர் தன்னையறியாமல் தூங்கிப் போகிறார்.


அடுத்த திருப்பம், கதையை இந்த நாட்டுக்கு கடத்திக்கொண்டு போய்விட்டார்கள்:

அந்த நேரத்தில் மிக வேகமாக வந்த கழியொலி விமானம் சராமாரியாக குண்டுகளைப் பொழிந்தது. கதையரசனின் நித்திரை எங்கு போனதென்று தெரியவில்லை. எழுந்து தன் மனைவியைத் தேடிப் பிடித்துுடன் பதுங்கு குழியை நோக்கி ஓடினார். அப்போது அவரது தர்மபத்தினி "நமக்கு எப்ப தான் விடிவு காலம் வரப்போகுதோ தெரியது, பேசாம நாங்களும் அண்ணனுடன் இந்தியாவிற்கு போவோமா" என்று கேட்டாள். "போடி பைத்தியக்காரி, சாவு எங்கிருந்தாலும் வந்தே தீரும், முதலில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணும்."

சிறிது நேரத்தின் பின் அந்த உயிர் கொல்லி விமானம் தன் வேலையை முடித்து விட்டுச்சென்றது. கதையரசன் தன் கதையில் ஆழ்ந்துவிட, அவர் மனைவி வானதி பிள்ளளகளை அழைத்து வர பாடசாலை சென்றாள்.

பாடசாலை செல்லும் போது கேட்ட தகவல்களினால் வானதி மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிறாள். எப்படியாவது தன் கணவனை சம்மதிக்கவைத்து இந்தியா கூட்டிச்செல்லும் தீர்மானத்துடன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறாள்.

வீட்டில் வானதிக்கு ஒர் அதிசயம் காத்திருந்தது. அவள் அண்ணன் வரதன்

ஈழத்தில் கதை முடியும் என்று பார்த்தாஅல் அதுதான் இல்லை. இன்னொரு முறை குண்டுவீச்சு நடந்தால், நம் கதாபாத்திரங்கள் என்ன ஆவது.


அவள் அண்ணன் வரதன் எட்டு அத்தம் (வருடம்) கழித்து லண்டனிலிருந்து வருகை தந்திருந்தார். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.. ஆனந்தக்கண்ணீர்..

"பிள்ளைகளை கூட்டி வராதது எமக்கும் வருத்தம் தான். ஆனால் நான் ஒரு நற்செய்தியுடன் வந்துள்ளேன்." என்ற வரதன் தனது கைப்பையை திறந்து பழுப்பு லிகிதம் ஒன்றை எடுத்து கதையரசனிடம் கொடுத்தார். அதை படித்ததும் கதையரசன் முகத்தில் தெளிவு வந்ததது.

முகத்தில் கேள்வி குறியுடன் இருந்த வானதிக்கு வரதன் லிகிதத்தின் விடயத்தை விளம்பினார்.

"உங்க எல்லோரையும் லண்டனுக்கு எம்முடன் கூட்டிப்போக விசா ஆவணம் மற்றும் விமான பயண சீட்டுடன் வரனும் என இத்துணை அத்தம் காத்திருந்தேன்.."

பிள்ளைகள் மாமா வாங்கி வந்த பரிசுகளை பார்த்ததும் மிக உற்சாகத்துடன் ஓடினர். பல வருடங்கள் கழித்து ஆனந்தம் அவ்வீட்டில் தெரிந்தது.. லண்டனிற்கு விசா கிடைத்த சந்தோஷத்தை வார்த்தைகளில் வர்ணித்திடமுடியாது.

சிறிது நாட்களின் பின் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாளும் வந்தது. பல இனிமையான கனவுகளைச் சுமந்து கொண்டு கதையரசன் குடும்பத்தினர் லண்டன் பயணமாயினர். ஹீத்ரூ விமான நிலையத்தில் அவர்களுக்கு வரதன் குடும்பத்தினரிடமிருந்து அமோக வரவேற்பு. வரதன் வீடு செல்லும் வழியில் "அக்கரைச்சீமை அழகினிலே மன ஆடக்கண்டேனே" என்ற பாடல் அவரது காருக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

லண்டன் சென்ற புதிதில் கதையரசன் குடும்பத்தினரின் வாழ்க்கை தேனினும் இனிமையாக தித்தித்துக்கொண்டிருந்தது. அவர்களது லண்டன் வாழ் பல உறவினர்கள் வந்து சேமநலம் விசாரித்துச் சென்றனர்.


அதோடு விட்டார்களா? கதையை ஆரம்பித்தவர் விடாக்கண்டன் போலிருக்கிறது:

கதையரசனுக்கு தமிழ் படியளக்க ஆரம்பித்தது. ஆமாம், அவரின் புலமையைக் கேள்விப்பட்டு பிபிசி தமிழோசை நிறுவனத்தார் அவரை வேலைக்கு எடுத்துக் கொண்டனர்.

"நேத்தும் குடிச்சிட்டு வந்து ஒரே கலாட்டா. இன்னக்கி இன்னும் வேலக்கி போவாம தூங்குது", என்றாள் சௌந்தரி.

அவர் விடாக்கண்டன் என்றால், அடுத்தவர் கொடாக்கண்டன்:

இலங்கையில் விட்ட கதையை கதையரசன் எழுத ஆரம்பித்தார். அப்போது அவர் மகள் லதா "அப்பா, எனக்கு ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக் கற்பதற்கு அதிகமாக 100 பவுண்ட் தேவைப்படுகுது, உங்களுக்கு தரமுடியுமா" என்று கேட்டாள். தனது பொருளாதார நிலைமையை எண்ணி கலங்கிய கதையரசன் "இன்னும் ஒரு கிழமையில் கட்டி விடுகிறேன் என்று உனது பள்ளிக்கூடத்தில் சொல்லமுடியுமா?" என்று கேட்டார். கேட்டுப்பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டே ஐரோப்பாவின் வரலாற்றை படிக்க ஆரம்பித்தாள் லதா. தனது குடும்பப்பிரச்சினைகளை அசை போட்டபடியே மீண்டும் கதையில் மூழ்கிப்போனார் கதையரசன். "நீ உன் மச்சானுக்கு நல்லா இடம் கொடுத்திட்டாய் செளந்தரி" என்றாள் சங்கரி. என்னைக் குறை சொல்லாட்டி உனக்கு தூக்கமே வராதே, நான் கலியாணம் கட்டி படுற பாடு அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்,

இப்படியாக கதை முடித்தேன் யான் என்று சொல்லலாம் ஏன்று பார்த்தால், கதை கமாவில் முடிந்திருக்கிறதே. கமாவில் முடிந்த கதை என்று பெயரிடலாம்.