Thursday, January 25, 2007

போலி ஜோலி

நபர் 1: அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?
நபர் 2: Physical checkup க்கு எவ்வளவு செலவாகும்னு
கேட்டா water wash பண்ணணும், joints க்கு grease போடணும்,
front-end align பண்ணணும்னு சொல்லி ஒரு மெகா லிஸ்ட் குடுக்கராரு.

நபர் 1: அது போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?
நபர் 2: ஸ்கானிங் பண்ண எவ்வளவு ஆகும்னு கேட்டா
ஒரு பக்கத்துக்கு 100 ரூ, double ஸைடுக்கு 150 ரூ,
கலருக்கு எக்ஸ்ட்ரா 100 ரூ அப்படீங்கறாரு

நர்ஸ் 1: ஆபரேஷன் பண்ண வந்திருக்கிறது போலி டாக்டர்னு
எப்படி சொல்றே?
நர்ஸ் 2: ஆபரேஷன் தியேட்டர்ல டேபிள்ல நின்னுக்கிட்டு "Fork and Knife"
குடுங்கன்னு கேக்கறாரு

Wednesday, January 17, 2007

பொங்கல் பட்டிமன்றம்

ஸான்ஃபிரான்ஸிஸ்கோவுக்கு போனாலும் ஸன் டிவி விடாதாம்! இப்போது பண்டிகை நாட்களில் எல்லாம் டிவி முன்னே பழிகிடப்பது பழக்கமாகிவிட்டது. யாரும் பட்டாசு வெடித்து, பொங்கல் பொங்கி, அடித்து பிடித்துக் கொண்டு ரஜினி படத்து க்யூவில் நிற்பதில்லை போலிருக்கிறது. என்னதான் வாழ்க்கையோ. (நீங்கள் லேப்டாப்பை கட்டிக்கிட்டு அழற மாதிரின்னு பின்னால ஒரு குரல்)

போகட்டும். பார்த்துவிட்டு சும்மா இருக்கிறார்களா? அதுதான் இல்லை. நாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்னு யூட்யூபில் போட்டுவிடுகிறார்கள். இதோ வருகிறார் பட்டறிவா, படிப்பறிவா என்று அலச சாலமன் பாப்பையா

யூட்யூபாவது சரி. நம்ப ஊரு அப்னா ட்யூப் இருக்கே - சிவ சிவா. அதில் பதிய 13 வயதுக்கு மேலே இருந்தால் போதுமாம். நம்ப ஊரு பசங்க ரொம்ப தேறிட்டாங்கன்னு இப்படியா?

Tuesday, January 16, 2007

கடுப்போ கடுப்ஸ் - 2

ரசிகர் 1: வயலின் வித்வான் ஏன் கடுப்பா இருக்காரு?
ரசிகர் 2: வித்வானை அறிமுகப்படுத்தும்போது அவர் பெயரான "கோட்டக்குருச்சி குமரேசன்" என்பதை "கொட்டாங்குச்சி குமரேசன்" ன்னு சொல்லிட்டாங்களாம்.

ரசிகர் 1: அந்த பாகவதர் ஏன் தலையில ஹெல்மெட்டோட பயந்துக்கிட்டே பாடறாரு?
ரசிகர் 2: போன கச்சேரியில கடம் வாசிக்கறவரு தூக்கிப்போட்ட கடம்
பாகவதர் தலையில விழுந்திடுச்சாம் அதான்.

ரசிகர் 1: ஜலதரங்க வித்வான் ஏன் கடுப்பா இருக்காரு?
ரசிகர் 2: சபா செகரட்ரி கடைசி நிமிஷத்துல இந்த ஆடிட்டோரியத்தில்
water shortage , தண்ணி இல்லாம ஜலதரங்கம் வாசிச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கன்னு சொல்லிட்டாராம்

ரசிகர் 1: கச்சேரியில் தம்புரா போடறது பாகவதரோட தம்பின்னு எப்படி சொல்றீங்க?
ரசிகர் 2: பாகவதர் அவரை அறிமுகப்படுத்தும்போது "தம்பி ரா" ன்னு கூப்பிட்டாரே

Thursday, January 11, 2007

கடுப்போ கடுப்ஸ் - 1

இது ஒரு புதிய முயற்சி. சுயமாக சிந்தித்து நானே உருவாக்கிய சிலவற்றை தொகுத்து "கடுப்போ கடுப்ஸ்" என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளேன். "மாதாந்திர லொள்ளு" களைப்போல் "மாதாந்திர கடுப்போ கடுப்ஸ்" அல்லது "வாராந்திர கடுப்போ கடுப்ஸ்" என்று பதிவு செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். நான் பதிவு செய்யும் இவை அனைத்தும் IIA (International Imagination Association) மார்க் பதித்த சொந்த கற்பனையே. எவரும் (முக்கியமாக இசைக்கலைஞர்களும் நடனக்கலைஞர்களும்) தவறாக எடுத்துக்கொள்ள(கொல்ல) மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மற்றொரு முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன். கூடிய விரைவில் அதையும் பதிவிடுகிறேன்.

கடுப்போ கடுப்ஸ் - 1

ரசிகர் 1: அந்த மிருதங்க வித்வான் ஏன் கடுப்பா இருக்காரு?
ரசிகர் 2: மிருதங்கத்துல வைக்க குடுத்த உப்புமாவுல வெங்காயம்
போடலையாம் அதான்

ரசிகர் 1: புல்லாங்குழல் வித்வான் ஏன் ரொம்ப கடுப்பா இருக்காரு?
ரசிகர் 2: Program break ல யாரோ விஷமக்காரங்க அவர் புல்லாங்குழல்கள் எல்லாத்துலேயும் எக்ஸ்ட்ராவா ஒரு ஓட்டை போட்டுட்டாங்களாம்

ரசிகர் 1: அந்த டான்ஸர் ஏன் கடுப்பா இருக்காங்க?
ரசிகர் 2: அவங்க டான்ஸ் ப்ரோக்ராமை TV ல "ஒளி" பரப்புவோம்னு
சொல்லிட்டு ரேடியோவில "ஒலி" பரப்பிட்டாங்களாம்

Monday, January 08, 2007

கல்விக்கு உதவி

ஏழைப்பெண் மஹாலட்சுமிக்கு உதவுவதில் செந்தழல் ரவி வெற்றி கண்டுள்ளார். அந்த விஷயத்தில் நாமும் வலைவரைப்படத்தில் ஏறியிருக்கிறோம்(அதாங்க - putting us on the map)

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_20.html

ரவியின் மற்ற முயற்சிகளுக்கு நம் வாழ்த்துக்கள்.

கல்விக்கு உதவுவதில் நான் சமீபத்தில் கேள்விப்பட்ட நிறுவனம் சிறப்பாக பணியாற்றுகிறது. ஜான் வுட் மைக்ரோசாஃப்ட்டிலிருந்து விலகி ரூம் டு ரீட் ஆரம்பித்த கதை யை அவருடைய புத்தகத்தில் சுவையாக எழுதியிருக்கிறார். அடுத்த முறை நீங்கள் ஏதாவது நன்கொடையளிக்க நினைத்தால் இந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும்.

Sunday, January 07, 2007

கதை வளர்ந்த கதை

இப்ப இந்த கத வளந்த கதய பாப்போம்.

இப்படி ஆரம்பிச்சுது:


கூட்டாங்கதை
(கதையை முடித்து பிறகு பெயர் வைக்கலாம்)

"ஏதோ எழுதனும்னு சொன்னியே?", என்றாள் சங்கரி.

அடுத்தது சேர்ந்தது:

"ம்.. என்னை மட்டும் எங்கப்பன் படிக்க வெச்சிருந்தான்னா உங்கிட்ட இப்படி பேப்பரேந்தி பேனாவேந்தி நிக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. என்னை பள்ளிக்கு அனுப்பினானா இல்ல பாடம் தான் சொல்லித்தந்தானா? சிறுசா இருக்கரப்போவே கண்ணாலத்த வேற பண்ணி வெச்சான்." என்று பொருமித்தள்ளினாள் சௌந்தரி.
"ஏன் ஒனக்கு என்ன கொறச்சல்? உன் மச்சான் தான் உன்னை கண்ணுல வெச்சு பாத்துக்கறானே!" என்றாள் சங்கரி.

பெண்களின் பேச்சு அடுத்தது இப்படி போனது:

"ஆமா. நீதான் மெச்சிக்கணும் என் மச்சானை. அப்படி வெச்சு பாத்துக்கிட்டா, நா ஏன் இங்க வந்து நிக்கறேன் எங்கப்பனுக்கு மனு எழுத?"
"அப்படி என்ன ஆச்சு இன்னிக்கு, இப்படி அலுத்துக்கற நீ", என்று தோண்டிப் பார்த்தாள் சங்கரி.

அடுத்த கட்டம் சுவாரஸ்யம். கதை ஒரு கதையிலிருந்து வெளியே வந்தது.

பேனா அதற்கு மேல் நகர மறுக்கிறது."சே, என்னத்த கதை எழுதி, என்னத்தப் பண்றது?" அலுப்பாக இருக்கிறது, கதையரசனுக்கு. பெயரைப் பார், கதையரசன் - நாலு வார்த்தை தொடர்ந்து எழுத வக்கில்லை; கதையரசனாம் கதையரசன். தனக்குத்தானே கடிந்து கொண்ட வண்ணம் பேனாவை வைத்து விட்டு, இரண்டு கைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொள்கிறார்.

"என்னங்க, வீட்ல குந்துமணி அரிசி இல்ல. காசு குடுங்க போய் வாங்கியாந்திர்றேன்; புள்ளக ரெண்டும் பள்ளிக்கொடத்துல இருந்து வந்தோன்ன பசிக்குதுங்கும்", அவருடைய சதகர்மிணி காப்பி டம்ளரை அவர் முன் நீட்டிய வண்ணம் "இல்லா"ள் பாட்டு இசைக்கிறாள். "இவ ஒருத்தி", அலுத்துக் கொண்ட வண்ணம் சட்டைப் பையைத் துழாவி அதில் இருந்த கடைசி பத்து ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டுகிறார், "இந்தா, கொஞ்சம் அடக்கியே வாசி. இதுதான் கடைசி", என்றபடி. அவருக்கே தெரியவில்லை அவர் பணத்தைச் சொல்கிறாரா அல்லது குன்றிவிட்ட தன் கற்பனையின் வளத்தைச் சொல்கிறாரா என்று. இந்தக் கதையை எழுதி நாளைக்குள் அனுப்பினால்தான் அது வாரப் பத்திரிகைக்குப் பிரசுரத்துக்கு முன் போய்ச் சேரும்; கொஞ்சமாவது ஏதாவது கிடைக்கும்.

"காப்பிய அங்க வச்சிட்டுப் போ. இன்னங் கொஞ்ச நேரத்துக்கு என்னைத் தொந்திரவு பண்ணாதே", அவளை அனுப்பி விட்டுக் கண்களை மூடிக் கதையைத் தேடியவர் தன்னையறியாமல் தூங்கிப் போகிறார்.


அடுத்த திருப்பம், கதையை இந்த நாட்டுக்கு கடத்திக்கொண்டு போய்விட்டார்கள்:

அந்த நேரத்தில் மிக வேகமாக வந்த கழியொலி விமானம் சராமாரியாக குண்டுகளைப் பொழிந்தது. கதையரசனின் நித்திரை எங்கு போனதென்று தெரியவில்லை. எழுந்து தன் மனைவியைத் தேடிப் பிடித்துுடன் பதுங்கு குழியை நோக்கி ஓடினார். அப்போது அவரது தர்மபத்தினி "நமக்கு எப்ப தான் விடிவு காலம் வரப்போகுதோ தெரியது, பேசாம நாங்களும் அண்ணனுடன் இந்தியாவிற்கு போவோமா" என்று கேட்டாள். "போடி பைத்தியக்காரி, சாவு எங்கிருந்தாலும் வந்தே தீரும், முதலில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணும்."

சிறிது நேரத்தின் பின் அந்த உயிர் கொல்லி விமானம் தன் வேலையை முடித்து விட்டுச்சென்றது. கதையரசன் தன் கதையில் ஆழ்ந்துவிட, அவர் மனைவி வானதி பிள்ளளகளை அழைத்து வர பாடசாலை சென்றாள்.

பாடசாலை செல்லும் போது கேட்ட தகவல்களினால் வானதி மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிறாள். எப்படியாவது தன் கணவனை சம்மதிக்கவைத்து இந்தியா கூட்டிச்செல்லும் தீர்மானத்துடன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறாள்.

வீட்டில் வானதிக்கு ஒர் அதிசயம் காத்திருந்தது. அவள் அண்ணன் வரதன்

ஈழத்தில் கதை முடியும் என்று பார்த்தாஅல் அதுதான் இல்லை. இன்னொரு முறை குண்டுவீச்சு நடந்தால், நம் கதாபாத்திரங்கள் என்ன ஆவது.


அவள் அண்ணன் வரதன் எட்டு அத்தம் (வருடம்) கழித்து லண்டனிலிருந்து வருகை தந்திருந்தார். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.. ஆனந்தக்கண்ணீர்..

"பிள்ளைகளை கூட்டி வராதது எமக்கும் வருத்தம் தான். ஆனால் நான் ஒரு நற்செய்தியுடன் வந்துள்ளேன்." என்ற வரதன் தனது கைப்பையை திறந்து பழுப்பு லிகிதம் ஒன்றை எடுத்து கதையரசனிடம் கொடுத்தார். அதை படித்ததும் கதையரசன் முகத்தில் தெளிவு வந்ததது.

முகத்தில் கேள்வி குறியுடன் இருந்த வானதிக்கு வரதன் லிகிதத்தின் விடயத்தை விளம்பினார்.

"உங்க எல்லோரையும் லண்டனுக்கு எம்முடன் கூட்டிப்போக விசா ஆவணம் மற்றும் விமான பயண சீட்டுடன் வரனும் என இத்துணை அத்தம் காத்திருந்தேன்.."

பிள்ளைகள் மாமா வாங்கி வந்த பரிசுகளை பார்த்ததும் மிக உற்சாகத்துடன் ஓடினர். பல வருடங்கள் கழித்து ஆனந்தம் அவ்வீட்டில் தெரிந்தது.. லண்டனிற்கு விசா கிடைத்த சந்தோஷத்தை வார்த்தைகளில் வர்ணித்திடமுடியாது.

சிறிது நாட்களின் பின் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாளும் வந்தது. பல இனிமையான கனவுகளைச் சுமந்து கொண்டு கதையரசன் குடும்பத்தினர் லண்டன் பயணமாயினர். ஹீத்ரூ விமான நிலையத்தில் அவர்களுக்கு வரதன் குடும்பத்தினரிடமிருந்து அமோக வரவேற்பு. வரதன் வீடு செல்லும் வழியில் "அக்கரைச்சீமை அழகினிலே மன ஆடக்கண்டேனே" என்ற பாடல் அவரது காருக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

லண்டன் சென்ற புதிதில் கதையரசன் குடும்பத்தினரின் வாழ்க்கை தேனினும் இனிமையாக தித்தித்துக்கொண்டிருந்தது. அவர்களது லண்டன் வாழ் பல உறவினர்கள் வந்து சேமநலம் விசாரித்துச் சென்றனர்.


அதோடு விட்டார்களா? கதையை ஆரம்பித்தவர் விடாக்கண்டன் போலிருக்கிறது:

கதையரசனுக்கு தமிழ் படியளக்க ஆரம்பித்தது. ஆமாம், அவரின் புலமையைக் கேள்விப்பட்டு பிபிசி தமிழோசை நிறுவனத்தார் அவரை வேலைக்கு எடுத்துக் கொண்டனர்.

"நேத்தும் குடிச்சிட்டு வந்து ஒரே கலாட்டா. இன்னக்கி இன்னும் வேலக்கி போவாம தூங்குது", என்றாள் சௌந்தரி.

அவர் விடாக்கண்டன் என்றால், அடுத்தவர் கொடாக்கண்டன்:

இலங்கையில் விட்ட கதையை கதையரசன் எழுத ஆரம்பித்தார். அப்போது அவர் மகள் லதா "அப்பா, எனக்கு ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக் கற்பதற்கு அதிகமாக 100 பவுண்ட் தேவைப்படுகுது, உங்களுக்கு தரமுடியுமா" என்று கேட்டாள். தனது பொருளாதார நிலைமையை எண்ணி கலங்கிய கதையரசன் "இன்னும் ஒரு கிழமையில் கட்டி விடுகிறேன் என்று உனது பள்ளிக்கூடத்தில் சொல்லமுடியுமா?" என்று கேட்டார். கேட்டுப்பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டே ஐரோப்பாவின் வரலாற்றை படிக்க ஆரம்பித்தாள் லதா. தனது குடும்பப்பிரச்சினைகளை அசை போட்டபடியே மீண்டும் கதையில் மூழ்கிப்போனார் கதையரசன். "நீ உன் மச்சானுக்கு நல்லா இடம் கொடுத்திட்டாய் செளந்தரி" என்றாள் சங்கரி. என்னைக் குறை சொல்லாட்டி உனக்கு தூக்கமே வராதே, நான் கலியாணம் கட்டி படுற பாடு அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்,

இப்படியாக கதை முடித்தேன் யான் என்று சொல்லலாம் ஏன்று பார்த்தால், கதை கமாவில் முடிந்திருக்கிறதே. கமாவில் முடிந்த கதை என்று பெயரிடலாம்.

Friday, January 05, 2007

கவிதை வளர்ந்த கதை

கத கேளு, கத கேளு, கூட்டாங்கவித வளந்த கத கேளு...

முதல்ல ஒருத்தர், தலைப்பு போட்டாரு.

கூட்டாங்கவிதை

அடுத்தது ஒரு புண்ணியவான் ஆரம்பிச்சாரு..



சந்தனக் கன்னியவள், அவள்
சாயலில் சகுந்தலை, அவள்
சிரிப்பில் சிதரும் நன்முத்துக்கள், அவளின்
சீரிய எண்ணங்களை


வண்டி ஷ்டார்ட் ஆன சூட்டுல இன்னொருத்தரு கொஞ்சம் சேத்தாரு....

சந்தனக் கன்னியவள், அவள்
சாயலில் சகுந்தலை, அவள்
சிரிப்பில் சிதறும் நன்முத்துக்கள், அவளின்
சீரிய எண்ணங்கள், அவள்
குரலோ கண்ணனின் வேணுகானம்


உடனே, புண்ணியவானுக்கு கொஞ்சம் கோபம் வந்தது. "இன்னாயா எய்தற நீ. நா ச,சா,சி,சீ எய்தலாம்னு பாத்தா, நீ நடுவுல கொரலு உட்ற"னு ஒரு கொரலு வுட்டாரு. உடனே நம்ப ஷ்டார்டிங் ட்ரபுள் பார்ட்டிக்கு ஒரு வேகம் வந்துச்சு. ஓ இது சிங்கார வேலன் மேட்டரான்னு ஒரு புடி புடிச்சாரு...

சந்தனக் கன்னியவள், அவள்
சாயலில் சகுந்தலை, அவள்
சிரிப்பில் சிதறும் நன்முத்துக்கள், அவளின்
சீரிய எண்ணங்கள், அவள்
சுட்டித்தனத்தில் கோகுலக் கிருஷ்ணன், அவள்
சூ(ப்பர் கட்டை?), அவள்
செருப்படி கொடுத்ததைவிட
சேமம் விசாரித்தவர்களே அதிகம்
சைக்கிளில் போனாலும்
சொக்காய் போட்டாலும்
சோக்காகத்தான் இருப்பாள், இப்படி உளறுவதால் என்
சௌக்கியத்தைப் பற்றி இப்போது கவலை


இதப்பாத்துட்டு இன்னொருத்தருக்கு ரொம்ப வேகம் வந்துருச்சு. உடனே செந்தமிழ்ல இப்படி சேத்தாரு:

sollathaan


பாத்தாரு, புண்ணியவான். இனிமே உட்டா ரொம்ப வெவகாரமா போயிடும்னு எல்லா குசும்பையும் காலி பண்ணிட்டு, இப்படி கெளப்பிட்டாரு:


சந்தனக் கன்னி, அவள்
சாயலில் சகுந்தலை, அவள்
சிரிப்பில் சிதறும் நன்முத்துக்கள், அவளின்
சீரிய எண்ணங்கள், எவர்க்கும்
சுகந்தத்தைத் தரும், அவளைச்
சூழும் எக்கூட்டத்திலும் சுடராக ஜொலிப்பாள்,
செம்மை அவள் நிறத்தோடு குணமும், அவள்
சேர்ந்தே நாமிருப்போமென்ற,
சைத்தாங்களைக்கூட,
சொற்ப கணமும் சேதப்படுதாமல், தன்
சோகத்தையும் சுகங்களாகக் கொண்டு, தன்
சௌக்கியத்தை மட்டும் தேடும் நம்மை வாழ வைக்கும்
இயற்கை என்னும் 'இளையக் கன்னி'




எப்படி கவித? (சொம்மா கூட 'ஏங்குகிறாள் துணையை எண்ணி'னுலாம் சேக்கப்படாது). ரெண்டாவது கூட்டாங்கவித கொஞ்சம் ஸீரியஸா பூட்ச்சு. நெறய பேரு சூப்பரா எய்திகிறாங்க அதுல.

அடுத்தது கத வளந்த கத....


Monday, January 01, 2007

ஜனவரி மாத லொள்ளு மொழிகள்

பாலிலிருந்து பால்கோவா செய்யமுடியும்
ஆனால் ரசத்திலிருந்து ரசகுல்லா செய்யமுடியுமா?

"Tea cup" ல் Tea இருக்கும்
ஆனால் "World cup" ல் World இருக்குமா?

Tuesday, December 26, 2006

வலைவலம்

எந்தரோ ப்ளாகிகளு அந்தரிகி மா வந்தனமு

வலைப்பதிவு எழுதுவோர் எல்லாரும் வெட்டியல்ல. சமீபத்தில் வலைப்பதிவர்கள்(ப்ளாகிகள்) சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள். செய்கிறார்கள். தேசிகன் என்பவரின் பதிவில் பார்த்த சிறுவன் ஆதித்யா இப்போது பிட்ஸ்பர்க் குழந்தை மருத்துவகத்தில் இருக்கிறான். அவன் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதில் வலைப்பதிவர்களின் பங்கு பெரிது. ஆதித்யா வேலூர் CMCயில் இருந்தபோது அங்கு சிகிச்சை பெற்று வந்த என் நண்பன் சொன்னான் - அந்த வார்டு முழுவதும் ஆதித்யா போல நிறைய குழந்தைகள். அங்கு போவதற்கே கஷ்டமாக இருந்தது.

இப்போது பிட்ஸ்பர்கில் இருக்கும் ஆதித்யாவுக்கு ஒரு பொம்மைகடை வைக்கும் அளவுக்கு பொம்மைகள் வந்து குவிந்திருக்கின்றன என்கிறார்கள் அவன் பெற்றோர்கள்.

ஆதித்யாவுக்கு நீங்களும் உதவலாம். விவரங்கள் இதோ.

Residents of USA and US citizens who would like to contribute thro US$ Check can draw it payable to "Children's Hospital of Pittsburgh" and mail it to the address mentioned below. Please make sure you write "For Aditya Kumar - Visit # 1022726762" in the memo part of the check.

Nandita & Mahesh
5701 Governors Pond Circle
Alexandria, VA 22310
(703) 960-6615

After mailing the check, please send the check details to kumarsang@gmail.com , ravi2604@gmail.com and nandita999@yahoo.com




ஆதித்யா போன்ற புற்றுநோயாளிகளுக்கு உதவ இந்தியாவில் ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பிற்கு அவ்வப்போது நிதி உதவி செய்தால் உங்களுக்கு எல்லா நலங்களும் வந்து சேரும்.

இனி வலைப்பதிவர்களின் இன்னொரு முயற்சியை பார்ப்போம்.

ஏழைப்பெண் மகாலட்சுமியின் தடைப்பட்ட கல்விக்கு
உதவ முயல்கிறார் செந்தழல் ரவி என்ற பெயரில் பெங்களூரில் இருந்து எழுதும் ரவி. திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெயர் ஆர்.மகாலட்சுமி..தந்தையார் பெயர் ராமன்..படித்தது எம்.எஸ்.ஸி / காந்திகிராமம் கல்லூரியில்...எம்.எஸ்.ஸி அப்ளைடு பயாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவரது மதிப்பெண் ( 1978 / 2750 ). இப்போது பி.எட்: ஆர்.வி.எஸ் எஞ்சினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது பணம் கட்டமுடியாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

தந்தையார் கடைகளில் எண்ணையை வாங்கி வீடுவீடாக விற்கும் பணியை செய்து சொற்ப வருமானம் பெறுகிறார்...ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்..தம்பி படிக்காததால் ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைசெய்கிறார்...தங்கை ஐ.டி.ஐ படிக்கிறாராம்... இவள் முன்னுக்கு வந்தால்தான் குடும்பம் வாழமுடியும் என்னும் நிலை....மிகுந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது கல்விக்கண் திறந்தால் வாழுமே ஒரு குடும்பம்...

மேலே விவரங்களுக்கு செந்தழல் ரவியின் பதிவை படியுங்கள். அவரது பள்ளிக்கூட நண்பன் எழிலரசன் பற்றி தெரிந்தாலும் அவருக்கு தெரிவிக்கவும்.

வலைவலம் வராமலே இந்த பதிவு நீண்டுவிட்டது. ஆகவே - RTP (ராகம் தானம் பல்லவி) பற்றி கேட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு வருந்தி வருந்தி விக்கிபசங்க சொல்லியதை நான் மறுபடியும் எழுதப் போவதில்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

ப்ளாகிகளே - சற்றே மௌனம் கலைந்து உங்கள் லொள்ளையும், எதிரொலியையும், பித்து மொழிகளையும் நமக்கு அருளவும்.

தடயம் - அத்தியாயம் - 3.

தடயம் மர்மத்தொடரின் மூன்றாவது அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக்கவும்:

http://kalaichcholai.blogspot.com/2006/12/3.html

- முரளி.