Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, October 27, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012 - தொடர்ச்சி

வரலாறு காணாத அளவுல மூமூமூமூமூனு பேர் பின்னூட்டம் போட்டு இருக்காங்க.  ஆனா எல்லாமே நல்லா இருக்கு சரி இன்னிக்கு வீட்டுல ஒன்னும் ஆணி புடுங்கர வேலை இல்லை, கொலுவை பத்திரமா எடுத்து வெக்கனும், சாண்டி புயல் வரதுக்கு முன்னாடி, பால் தண்ணி வாங்கி வெக்கனும் அவ்வளவுதான் சரி பதிலை ஒரு பதிவா போட்டுட்டா போச்சு, என்ன சொல்றீங்க.

மொதல்ல நாகு:

நீங்கள் போட்டிருக்கும் படம் ஜூப்பரோ ஜூப்பர். யானை தேய்ந்து கழுதை சைஸுக்கு வந்து விட்டது :-)

நான் இன்னும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் யாருக்கு ஓட்டுப் போட்டு பட்டை நாமம் சாத்திக் கொள்ளலாம் என்று. நீங்கள் சொல்வது போல ரிபப்ளிகனாக இருந்தால், தாலிபான்கள் ரேஞ்சுக்குப் போகும் முர்டாக்குகளை - மன்னிக்கவும் - மூடர்களைக் கண்டுகொள்ளாமல் ஓட்டு போட்டு விடலாம். டெமாக்ரட்டாக இருந்தால் பரப்பி நிரப்பும் சோஷலிஸ கொள்கைகளைக் கண்டு கொள்ளாமல் குத்தி விடலாம். நடுவில் மாட்டிக் கொண்டால்தான் குழப்பமே...

அந்தப் பக்கம் போனால் Atlas Shrugged. இந்தப் பக்கம் போனால் Grapes of Wrath. இவன் தேவையில்லாமல் ஈராக் சண்டை போட்டு செலவழித்தால், அவன் கழகக் கண்மணிகளே வெட்கப்படும் ரேஞ்சுக்கு பேசித் தள்ளுகிறான். கூட திவாலாகும் ஓட்டு வங்கி நிறுவனங்களுக்கு செலவு...

ஓட்டு போட வேண்டும். ஆனால் யாருக்குப் போடுவது? யாரு லெஸ்ஸர் ஈவில்? சுஜாதா சொன்னதுபோல யாரையும் பிடிக்காவிட்டால் யாருக்கு வயது கம்மியோ அவருக்கு போடலாமா? இல்லை யாருக்கு பேங்க் பேலன்ஸ் கம்மியோ, ஜாஸ்தியோ அவருக்கு போடலாம். 

யோசித்து விட்டு ஒரு முடிவுக்கும் வராவிட்டால் வயதுதான்... :-)

ஆமாம் - யானை கீழேவிழுந்தா தின்னாதா? புதுக்கதையா இருக்கே? பணக்கார கொழுத்த யானையோ?



நாகு உங்க ஓட்டு  சின்ன வயசுகாரருக்கா?  சரி சரி புரிஞ்சிடுச்சு.  அதே சுஜாதா சொன்ன இன்னொரு அருமையான வழி இதோ:

சுஜாதா:  "எனக்கும் சகுனத்துல நிறைய நம்பிக்கை உண்டு, ஆனா, நிறைய உப கண்டிஷன்ஸ் போட்டுப்பேன்.  வீட்டை விட்டு கிளம்பினா சிங்கிள் குடுமி மாமா வரக்கூடாதுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்கா, ஶ்ரீரங்கத்துல அதெல்லாம் தினமும் நடக்கும் அதனால டக்குன்னு ஒரு கிளைக் கண்டிஷன் போட்டுப்பேன்.  அவருக்கு  கைல 6 விரலிருக்கணும்னு, அப்படி ஒருத்தர் ஒருநாள் எதிரே வந்துட்டார், உடனே கண்டிஷன் 2, அவருக்கு மாறு கண் இருக்கனும்னு.  இப்படி கண்டிஷன்ஸ் போட்டு போட்டு என்னோட சகுனத்தடைகளை எல்லாம் அடிச்சு உடைச்சுடுவேன்"

அதுமாதிரி நீங்க நிறைய வெச்சுக்கலாம். ஆனா, நல்ல ஆட்சி தர வேண்டாம்னு தீர்மானம் பண்ணிக்கனும் அவ்வளவுதான்.

யானை காட்டில இருந்தா இப்படித்தான் இருக்கும்னு நானும் நிறைய படிச்சிருக்கேன்.  கீழ விழுந்தா எடுத்து சாப்பிடரது, கை நீட்டி காசு வாங்கிட்டு ஆசீர்வாதம் பண்றது, குனிஞ்சு பாகனை மேல ஏத்திக்கரத்து, ஒத்தைக் கால்ல நின்னு சர்க்கஸ் வேலை பண்றது எல்லாம் ஊர்ல நாட்ல இருக்கர யானைங்கதான்.

இதுக்கு ஒரு சின்ன கதை:  ஒரு சர்க்கஸ்ல யானை எல்லா வேலையையும் செஞ்சுதான், அப்போ முன் வரிசைல இருந்த 4 பசங்க ஒரு இந்தியன், ஒரு ரஷ்யன், ஒரு சீனாக்காரன், ஒரு அமெரிக்கன், அவங்களை கேட்டாங்களாம், இது எப்படி சாத்தியம்னு.  அதுக்கு இந்தியன் சொன்னானாம் யானை விநாயகர் மாதிரி அதனால அது நாம எதைக் கேட்டாலும் செய்யும்னு, சீனாக்காரன் சொன்னானாம், அதை சின்ன வயசுலயே அடிச்சு அடிச்சு சொல்லிக் கொடுத்துட்டாங்க அதனால அது பயத்துல இதை செய்யுதுன்னானாம்.  ரஷ்யன் சொன்னானாம்,  அது சர்க்கஸ் யானையோட குட்டி அதனால அதனோட ரத்தத்துல சர்க்கஸ் வேலை பண்ற ஜீன் இருக்குன்னானாம்.  அமெரிக்கன் பையன் சொன்னானாம், அந்த யானைக்கு தன்னோட பலம் தெரியலை அது தெரிஞ்சுதுன்னா, இப்படி கேவலமான வேலையெல்லாம் செய்யாதுன்னானாம்.

யானை டைனோசர் காலத்துல இருந்து மிஞ்சியிருக்கர ஒரு சில மிருகங்கள்ல ஒன்னு.  எவ்வளவு பெரிசா இருந்தாலும் தாவர பட்சிணி, அருமையா நீச்சல் பண்ணக்கூடிய மிருகம்.  இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

அடுத்து சுப்பு தாத்தா:
இந்த அமெரிக்கன் ப்ர்சிடென்ட் எலக்சனே ஒரு சிக்கல். 
எல்க்டொரல் வோட் அப்படின்னு ஒரு பக்கம் சொல்றாங்க.
அதற்கப்பறம் மக்களுடைய நேரடியாக வோட் எண் ணிக்கையும் சொல்றாங்க.
அதற்கப்புரம் அந்தந்த ஸ்டேட்டுக்கு எத்தனை எலக்டொரல் வோட்டோ
அத்தனையும் யார் வின் பண்ராகளோ அவுகளுக்கு போயிடுமாம். 

இது பற்றி எத்தனையோ வெப் சைட்டுக்கு போனாலும் சொல்ராங்க.
இந்த சிஸ்டத்திலேயே கோளாரு இருக்கு. ஆனா சரி பண்ண அலவ் பண்ண மாட்டாங்க.
ஏன்னா இந்த ஸிஸ்டம் தான் இப்போதைக்கு ரைட் தோணுது அப்படின்னு.

நீங்க இந்த பிரஸிடென்ட் சிஸ்டம் எலக்ஷன் பத்தி கொஞ்சம் விலா வாரியா 
சொல்லுங்களேன். நம்ம இந்தியா கொஞ்சம் பெட்டரா இருக்கோன்னு தோனுது.

சுப்பு தாத்தா. 
American election allows an option 
for the voter to says that I do not want to vote for either, as Indian Election rules allow?



அமெரிக்கன் எலெக்‌ஷன் பத்தி விலாவரியா எழுதினா என் விலா எலும்பை எடுத்துடுவாங்க.  ஆனா நான் இங்க இருந்த 14 வருஷங்கள்ல பார்த்த வரைக்கும், இது இந்தியாவோட தேர்தல் முறையை விட எவ்வளவோ மேல்.  அதுக்கு எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.  மொதல்ல யார் அதிபரா வருவார்ங்கரது தேர்தலுக்கு முன்னாடியே எல்லோருக்கும் தெளிவா தெரியும்.  நம்மூர் மாதிரி, சோனியாவா, மன்மோகனா, மோடியா, அத்வானியா இல்லை வேற யாராவதான்னு தெளிவில்லாம இருக்காது.  யாரோட பார்வை எப்படின்னு முழுசா தெரியலைன்னாலும் கொஞ்சமாவது தெரிய வரும்.  4 வருஷம் ஆண்டதுக்கு பிறகும், எப்படி நல்லா உளர முடியும்னு தெரிய வரும், ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடியே எப்படி வெறும் வாய்ல முழம் போட முடியும்னு தெரியவரும்.  

முக்கியமா, அதிபர் பெரிய ஆளா இருந்தாலும் திரை மறைவுல ரொம்ப பவர்ஃபுல் துணை அதிபர்ன்னு பலர் சொல்லி கேட்டிருக்கேன்.  சும்மா மீன் பிடிக்க போயிட்டு, கூட வந்த நண்பரைகூட மூஞ்சில சுட்டுட்டு ஒரு சின்ன தண்டனைகூட இல்லாம தைரியமா சுத்தலாம்.  அவ்வளவு பவர்.  அதிபரா இருந்தா பெரிய மேசை போட்டுகிட்டு தன் பொண்ணு வயசு இருக்கர பொண்ணுங்க கூட ஜாலியா இருக்கலாம்.  கேட்டா தைரியமா டி.வி முன்னாடி "ஆமா, அப்படித்தான், உங்களால முடிஞ்சத பாத்துக்கங்க"ன்னு சொல்லலாம்.  

இந்தியாவுல இருக்கர ரூல் 49-ஓ (49-O) அமெரிக்காவுல இருக்கரமாதிரி எனக்குத்  தெரியலை.  அது எவ்வளவு தூரம் சரின்னும் தெரியலை.  கண்டிப்பா ஒரு விவாதத்துக்குரிய விஷயம்தான்.  

மறுபடியும் நாகு (அல்லது அவரோட நண்பனோட அப்பா எழுதிய பின்னூட்டம்)


என் நண்பனின் தந்தையிடம் இருந்து மின்னஞ்சலில் வந்தது:

கதையிலே கழுதை வராமே யானை மட்டும் வந்திருப்பதாலும் தம் நிலையை நடுவில் வைத்துக் கொண்டாற்போல எழுதியிருப்பதாலும் நாசகார ரிபப்லிக்கானுக்கு வாக்குப் போடுவார் போலிருக்கிறது.
என் நிலை இதுதான்.
ஒபாமாவை நல்லது ஏதும் செய்ய விடாமல் எதிரிகள் தடுத்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இரான், லிபியா, சிரியா முதலிய இடங்களில் போருக்கு புறப்படுவார்கள். அமெரிக்காவின் ஒரு சதவீத மக்களுக்குத்தான் ஆதாயம்.
உலகின் மற்ற எல்லாருக்கும் நஷ்டம்தான். Neutrality or undecidedness is being perverse.
மொதல்ல அந்த அப்பாவுக்கு அமெரிகாவுல ஓட்டு இருக்கான்னு தெரியலை,  இப்ப சொல்லிடரேன்.  நான் இந்த விஷயத்துல கண்டிப்பா நடுநிலைமைதான்.  ஆனா அதே சமயம், கண்டிப்பா இப்போதைய அதிபருக்கு ஓட்டு போடரதா இல்லை.  ஒபாமா நல்லது ஏதும் செய்ய விடாமல் எதிரிகள் தடுத்தார்கள்ன்னு ஒரு நோபல் பரிசு ரேஞ்சுக்கு எதையோ இந்த அப்பா கண்டு பிடிச்சிருக்கார் அது என்னன்னு சொன்னா நல்லா இருக்கும்.  தமிழ் ரொம்ப அருமையான மொழி, அவர் 'ஏதும்' ன்னு சொன்னதுனால, அதை கொஞ்சம் கூர்மையா பார்த்தா, அவர் எதுவும் செய்யலைன்னு ஆகுது.  தமிழ்ல ஒரு முறை உண்டு, அதாவது ஒரு விஷயத்தை சொன்னா இன்னொரு விஷயம் புரியும்ன்னு அதுக்கு அருத்தா பத்தின்னு சொல்லுவாங்க.  நான் இப்போ காபி குடிக்கரது இல்லைன்னு சொன்னா இதுக்கு முன்னாடி வரைக்கும் காபி குடிச்சுண்டு இருந்தேன்னு அர்த்தம்.  'ஏதும்' செய்ய விடலைன்னா அவர் எதுவும் செய்யலைன்னு அர்த்தம்.  4 வருஷமா கைல வீடோ பவர் வெச்சுண்டு எதுவ்ம் செய்யாம இவர் இருக்கரதுக்கு திண்ணையை காலி பண்ணிட்டு போகட்டும்.

இந்தியா தீவிரவாதிகளுக்கு எதிரா வழக்கமா சொல்ற வீராவேச பேச்சைக்கூட இப்போ நிறுத்திட்டாங்க அதனால தீவிரவாத ப்ரச்சனை இந்தியாவுல நின்னு போச்சா?  2001-ல அமெரிக்காவுல நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியா இவங்க எடுத்த நடவடிக்கைக்கை அப்புறம் அப்படி ஒரு தாக்குதல் நடத்த மத்தவங்க யோசிக்கராங்கன்னா அதை செய்யாம, க்ளிண்டன் அதிபரா இருந்த போது சவுதி அரேபியாவுல அமெரிக்க கான்சுலேட்ல நடந்த தாக்குதல்ல ஒரு மண்ணும் செய்யாம, மான் கொம்பு கராத்தே போட்டுட்டு வந்ததுக்கு (அப்படின்னா என்னன்னு நாகு கிட்ட தனியா கேளுங்க) பதில்தான் 2001ல அமெரிக்காவுல நடந்த தாக்குதல்.  மஹாபாரதத்துல பீஷ்ம நீதின்னு ஒரு கட்டம் வரும் அதுல அவர் தர்மருக்கு சொல்ற உபதேசம், ஒரு ராஜாவா இருக்கரது ரொம்ப கஷ்டம், அவன் அவனோட படையை நல்லா தயார் நிலைல வெச்சுக்கணும், அதே சமயம் 'யாரோடும் பகை கொள்ளலன், எனில் போர் ஒடுங்கும் புகழொடுங்காது'ங்கரார்.  அதுபோல நாம பவர்ஃபுல்ன்னு மந்த நாட்டுக்குத் தெரியனும் அப்பதான் அவங்க நம்ம கிட்ட வம்புக்கு வர மாட்டாங்க.  

கடைசியா, அமெரிக்காவுல 1% மக்களுக்கு மட்டும் நல்லது உலகத்துல எல்லோருக்கும் நஷ்டம்தான்னு எதை சொல்றாருன்னு தெரியலை.  அது எப்படின்னு அவருக்கு மட்டும் தெரிஞ்சத (இல்லை எனக்கு மட்டும் தெரியாததை) அவர் சொன்னா நல்லா இருக்கும்.

முரளி இராமச்சந்திரன்.

Thursday, October 25, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012


2012 அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 12 நாள்ல நடக்கப்போறது.  சின்ன பசங்க ஒழுங்கா 9த் வீக் பரிச்சைக்கு படிக்கப் போங்க, பெருசுங்க மூஞ்சியை நல்லா தொடச்சு வெச்சுகிட்டா சூப்பரா ஒரு நாமம் போட கூட்டமா வந்து கிட்டு இருக்காங்க.

இதுவரைக்கும் 3 டிபேட்டை கேட்டிருப்பீங்க.  அதைத் தாண்டி இந்தக் கட்சி அந்தக் கட்சின்னு எல்லோரும் பேசி பேசி காதைக் கிழிச்சிருப்பாங்க.  இப்ப நாம செய்ய வேண்டியது எந்தக் கட்சியை தேர்ந்தெடுக்கரதுன்னு யோசிக்கனும்.  யாரைக் கேட்டாலும் யோசிக்க வேண்டியதே இல்லை, நீ ரிபப்ளிகன் ஆதரவாளர்ன்னா யானைக்கு ஓட்டு போடு, டெமாக்ரெட் ஆதரவாளர்ன்னா கழுதைக்கு ஓட்டு போடு இதுல யோசிக்க என்ன இருக்குன்னு சொல்வாங்க.

"நான் தீர்மானமா இருக்கேன் யாருக்கு ஓட்டு போடரதுன்னு" யாராவது சொன்னா நம்பாதீங்க.  எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டாலும், அடுத்த நாளே அமெரிக்காவுல தெருவுக்கு தெரு தேனும் பாலும் ஓடாது.  பால் டாங்கரும் தேன் லாரியும் மோதிக்கிட்டா வேணா ஓடலாம்.

"மாமி கொலூலூலூலூ......." ன்னு போனவாரம் ஒருத்தர் வீட்டுக்கு போன போது அங்க என்னை மாதிரி கொலுவுக்கு  வந்த ஃப்ரெண்ட், அந்த வீட்டு மாமி, மாமா, அவங்க பொண்ணு எல்லோரும் சேர்ந்து, நான் என்னமோ இந்த ஊர் அரசியல் விமர்சகர்ன்னு நினைச்சு கிட்டு என்னை கேள்வி மேல கேள்வி கேட்டாங்க.

நான் அவங்கள கேட்டது, கடந்த நாலு வருஷத்துல என்ன என்ன நல்லது நடந்தது (நடந்ததா?) ன்னு யோசிங்க.  இந்த ஆட்சிக்காரங்க சொன்னதை செஞ்சாங்களா,   அடுத்த நாலு வருஷம் அவங்க ஆண்டா நல்லதா இல்லையான்னு யோசிங்கன்னு கேட்டேன்.  அதுக்கு என்னா பேச்சு பேசராங்கப்பா!


இந்நாள் அதிபர் போர போக்குல அவனுக்கு 800 மில்லியன், இவனுக்கு 900 மில்லியன்னு கொடுத்து அதை வாங்கின அடுத்த வாரமோ இல்லை அடுத்த நாளோ அவங்க மஞ்ச கடுதாசி - ஐ.பி. கொடுத்துட்டு நம்மூர் பைனான்ஸ் கம்பெனிமாதிரி ஓஓஓஓஒடி  போயிட்டாங்க.  ஒருத்தன் கிட்ட ஒரு மில்லியன் இருந்தாலே அவன் பணக்காரன் (என்னை விடை ஒரு 10000 மடங்கு) அப்படி இருக்கரச்சே, எப்படி 800 மில்லியனும் 900 மில்லியனும் வாங்கிட்டு ஐ.பி கொடுக்கராங்க, இவங்களும் வழிச்சுகிட்டு அதை கேட்டுக்கராங்க.

அப்போ என் ஃப்ரெண்ட்டோட பொண்ணு ஒரு கேள்வி கேட்டா, "1928ல நடந்த போருளாதார சீரழிவு (அதாங்க க்ரேட் டிப்ரெஷன்) அதுக்கு மேலன்னு சொல்லனும்ன்னா இப்ப இருக்கரதுதான் அது 2008ல வெளியேறின அதிபர் கைங்கரியம் அதனால நீ என்ன இவரை பார்த்து இப்படி நாக்குமேல பல்லப் போட்டு கேள்வி கேக்கர"ன்னு காச்சி எடுத்துட்டா.  

நான் தெரியாமதான் கேக்கரேன் (அது சரி தெரிஞ்சா ஏன் கேக்கப் போறேன்) 1928 ல உலக மக்கள் தொகை எவ்வளவு, 2008-2012ல உலக மக்கள் தொகை எவ்வளவு.  அப்போ உலகத்துல பெரிய நாடுங்கன்னு சொன்னா, அமெரிக்கா, ப்ரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ப்ரிட்டன், சீனா.  அதுலயும் பாதி நாடுங்க ப்ரிட்டனோட ஆதிக்கதுல இருந்தது.  அப்போ நடந்த பொருளாதார வீழ்ச்சியே நமக்கு பெரிய பாதிப்பில்லை.  ஆனா, இன்னைக்கு இருக்கர இந்த வீழ்ச்சி சுதந்திர இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கனும் ஆனா, அது அப்படி ஒரு பெரிய வீழ்ச்சியை தரல.  அமெரிக்கா, யூரோப்ல அப்புறம் சில இடத்துல வீழ்ச்சியாயிருக்கு, இதுக்கு என்ன சொல்ல முடியும்.  அமெரிக்காவோட இந்த வீழ்ச்சிக்கு காரணம், 2004-2008 ல நடந்த அதிபரோட ஆட்சின்னா, 2008-2012 வரைக்கும் இருந்த இவர் எதையும் செய்ய முடியலைன்னா, எதுக்கு மாற்றம் கொண்டு வரேன்ன்னு எம்.ஜி.ஆர் மாதிரி "என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கையணைக்க"ன்னு பாட்டு பாடி 44 வது அதிபரா பதவிக்கு வந்து, 20 டிரிலியன் கடன் (இதுக்கு எவ்வளவு சைபர்ன்னு சத்தியமா எனக்குத் தெரியாது) ஏத்தி விட்டுட்டு இப்ப மாற்றத்தை விட்டுட்டு 'ஃபார்வேர்ட்' ன்னு ஒரு தாரக மந்திரத்தை ஆரம்பிச்சு கதை குத்திகிட்டு இருக்காரு.

இதுல என் ஃப்ரெண்ட் ஒருத்தர், நம்ம குழந்தைங்களுக்கு 5ம் வகுப்புல பாஸ் பண்ணினதும் அவங்களுக்கு இந்த அதிபர் கையெழுத்து போட்டு ஒரு சர்டிபிகேட் கொடுத்தாரே அத போன அதிபர் செஞ்சாரன்னு கேட்டார்.  அதனால இவரே அடுத்த 4 வருஷம் பதவில இருக்கனும்னுங்கரது அவரோட வாதம்.

நானும் தான், தமிழ் சங்கத்துல அதிபரா இருந்தப்போ குழந்தைங்களுக்கெல்லாம் கையெழுத்து போட்டு சர்டிபிகேட் கொடுத்தேன், அப்போ நிறைய குழந்தைங்க 'அங்கிள் கப்பு கிப்பு ஒன்னு கிடையாதா வெறும சர்டிபிகேட்தானா'ன்னு கேட்டாங்க . ஹூம் என் கையெழுத்துக்கு அவ்வளவுதான் மதிப்பு.

இந்தப் பக்கம் இவர் இப்படி காமெடி பண்ணிகிட்டிருந்தா அந்தப் பக்கம் ஒருத்தர் திரும்பத் திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி 20 டிரிலியன் கடன், 20 மில்லியன் வேலை போச்சு, பொருளாதாரம் சீரடையல, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமா போச்சு, எத்தனையோ மில்லியன் உணவு சீட்டு கொடுத்துகிட்டு இருக்கோம்.  இதெல்லாம் கேக்க நாதியில்லாம போச்சு. அது இது ன்னு வீட்டுல ரிடையர்ட் ஆகிட்டு பொளம்பிட்டிருக்கர ஒருத்தர் மாதிரி சொல்லிகிட்டிருக்காரு.  அவர் சொல்றதுல உண்மை இருந்தாலும், சும்மா சொல்லிகிட்டிருந்தா அதோட வீரியம் கொறஞ்சுடும்.

நீங்க யாருக்கு வேணும்னாலும் ஓட்டு போடுங்க.  ஆனா கண்டிப்பா ஓட்டு போடுங்க.  அப்புறம் இவங்களைப் பத்தியும், இவங்க ஆட்சியைப் பத்தியும் கத்தி பேசலாம்.

இன்னிக்கு துக்ளக்ல தலையங்கத்துல கேஜ்ரிவால் பரபரப்பா செய்துகிட்டு இருக்கரதைப் பத்தி சோ சொல்லிட்டு கடைசில இப்படி எழுதியிருக்காரு.

கடம் பிந்த்யாத்
படம் சிந்த்யாத்
ஏனகேன பிராகாரேண
பிரஸித்த புருஷோ பவ 

– என்பது ஒரு ஸம்ஸ்க்ருத சடையர் மொழி. 
அதாவது – 
பானையை உடை,
படத்தைக் கிழி,
ஏதோ ஒரு வழியில்
பிரபலமான மனிதனாகி விடு! 


இது இப்போதைய அதிபருக்கும் அடுத்து வர ஆசைப்படர அதிபருக்கும் சரியா பொருந்தும்.

கடைசியா ரெண்டு குட்டி கதைங்க :
1) ஒரு காட்டுல இருக்கர எல்லா மிருகங்களுக்கும் யானை தான் தலைவன்.  எப்படின்னா, ஒரு நாள் ஒரு சிங்கம், எல்லா மிருகங்கள் கிட்டேயும் போய், "ஏய், இந்தக் காட்டுக்கு யார் ராஜா?"ன்னு கேட்டுச்சான்.  எல்லா மிருகங்களும், "நீங்க தான் ராஜா!"ன்னு பவ்யமா சொல்லிச்சாம்.

இப்படி கேட்டு கேட்டு மிதப்பா வந்த சிங்கம் தனியா போய்கிட்டிருந்த யானையைப் பாத்து, "ஏய் இந்த காட்டுக்கு யார் ராஜா?"ன்னு கேட்டுச்சாம்.  யானை கவனிக்காத மாதிரி போயிட்டே இருந்துச்சாம்.  சிங்கத்துக்கு கோபம் வந்து யானை முன்னாடி வந்து திரும்பியும் கேட்டுச்சாம், யானை ஒன்னும் பதில் சொல்லாம, துதிக்கையால, சிங்கத்தோட வாலை பிடிச்சு தலைக்கு மேலை மூனு தடவை சுத்தி தூக்கி போட்டுச்சாம், தூரத்துல போய் விழுந்த சிங்கம் அங்கேயிருந்து சொல்லிச்சாம். "சே இது செவுட்டு யானை போல இருக்கு, பேச்சு பேச்சா இல்லாம அனவசியமா அடிக்குதுன்னு" சொல்லிட்டு ஓடி போச்சாம்.


2) காட்டுல இருக்கர எல்லா மிருகங்களுக்கும் உணவு போடரது யானைதான்னு குருஜி சொல்வார்.  எப்படின்னா, யானை உணவு தேடிண்டு போகும் போது, அங்க இங்க இருக்கர மரக்கிளையெல்லாம் பறிச்சு சாப்டுண்டே போகுமாம், அப்போ கீழ விழரத அது சாப்பிடாதாம், அதைச் சாப்பிட மான், வரிக்குதிரை, முயல், காட்டெருமைன்னு தாவர பட்சிணிகள்லாம் வருமாம், இதுங்க வரும்னு அதுங்கள சாப்பிட சிங்கம், புலி எல்லாம் வருமாம், இதுங்க சாப்பிட்டு மிச்சம் இருக்கரத சாப்பிட கழுதைப் புலி, நரி, ஓநாய் எல்லாம் வருமாம், இதுங்களும் சாப்பிட்டு வெக்கர மிச்சத்தை சாப்பிட கழுகு பருந்து எல்லாம் ஆகாசத்துல வட்டம் போடுமாம்.  இப்படி ஒரு காட்டுக்கே தினமும் உணவு போடரது யானை.

இந்த கதைகளுக்கும், யாருக்கு நீங்க ஓட்டு போடனும்ங்கரதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


முரளி இராமச்சந்திரன்.

Sunday, December 18, 2011

தமிழ்சங்கத்தின் விவாதக் குழுமம்


இந்தத் தலைப்பு சரியா! சரியில்லையா! ன்னு தமிழ் நல்லா தெரிஞ்ச நாகு, மெய்யப்பன், சீனிவாசன், வெங்கட் செட்டியார், சத்யா, நடராஜ மூர்த்தி மற்றும், மு.கோ போன்ற தமிழ் அறிஞர்கள் தீர்மானிக்கட்டும்.  

சொல்ல வந்த விஷயம் (விடயம் நு எழுதனுமோ!) இதுதான்.  தமிழ் சங்கதின் சார்பில் ஒரு குழுமமா சேர்ந்து சில விஷயங்களைப் பத்தி பேசலாம்னு முடிவு பண்ணி அக்டோபர் மாதம் 29ம் தேதி முதல் கூட்டம் போட்டு பேசினோம். வெறும கூட்டம் போட்டு பேசரதோட, பல நல்ல புத்தகங்களை கடனா வாங்கிட்டு போய் படிச்சுட்டு அடுத்த கூட்டம் நடக்கும் போது கொண்டு வந்து தரலாம்.  உங்க கிட்ட இருக்கர புத்தகங்களையும் இப்படி கொண்டு வந்து கொடுத்து நம்ப மக்களுக்கு படிக்கர ஆர்வத்தையும், படிக்கர விழிப்புணர்வையையும் கொண்டு வரலாம்.
 

சீனிவாசனின் தொடக்க உரைக்கு அப்புறம் தமிழ் சங்கத்தின் இந்த கூட்டங்கள் நல்லா போகுமா போகாதான்னு தெரிஞ்சுக்க நம்ம வெங்கட் செட்டியார் ‘சந்தேகம்’ ங்கர தலைப்பில் பேசினார்.  வெறும பேசினார்ன்னு சொல்லக் கூடாது, சந்தேகமே இல்லாம, நம்ம எல்லோருக்கும் சந்தேகம்ன்னா என்னன்னு கண்டிப்பா சந்தேகம் வர்ர மாதிரி பேசினார்.  இப்படி பட்டைய கிளப்பி வெங்கட் பேசினதும், சத்யா மாறிவரும் பல மாறுதல்களைப் பற்றிப் பேசி நாம இழந்தை பல விஷங்களைப் சொல்லி நம்மை மறுபடி நம்முடைய பால்ய காலத்துக்கு கொண்டு சென்றார்.  கடைசியா நான் ‘அரசியல்’ ங்கர தலைப்பில பொதுவா அரசியல்ன்னா என்ன, நம்மோட தினசரி வாழ்க்கையில அரசியல் எப்படி இயங்குதுன்னு பேச ஆரம்பிச்சு, 45 நிமிஷம் எல்லோரும் விவாதிச்சதுக்கு அப்புறம் வெறும அரசியல்ன்னா என்னங்கரதுல வந்து நின்னதோட கூட்டம் முடிவுக்கு வந்தது.  தமிழ்த்தாய் வாழ்த்தோட துவங்கிய கூட்டம் தேசிய கீதத்துடன் நிறைவுக்கு வந்தது. 

கடந்த சனிக்கிழமை (12.17.2011) சங்கத்தின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.  இந்த முறை க்ரெடிட் மதிப்பீட்டு எண் என்பது என்ன அதை எதற்காக பார்க்கிறார்கள் என்பது பற்றி நண்பர் ராஜ்குமார் விவரமாகச் சொன்னார்.  இதுபோல பல அரிய பெரிய விஷங்கள் இவரிடம் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள்தான். 

இவரை அடுத்து நண்பர் மெய்யப்பன் (தமிழ் சங்கத்தின் தமிழ் ஆசிரியர்) தமிழுக்கு யார் எதிரி என்று காரசாரமாக பேச வந்தவர் முதல் எதிரிகளாக நாகு, நான் மற்றும் சீனிவாசனை உதாரணமாகக் காட்டினார்.  இவர் சொல்ல வந்த கருத்து தமிழ் நசிந்து வருகிறது, நல்ல எழுத்தாளர்கள் பலர் இருந்தும், படைக்கவும், படைப்புகளைப் பதிப்பிக்கவும் ஆர்வம் இல்லாம இருக்காங்க, தமிழ் நாட்டு கோவில்கள்ள இங்கு தமிழிலும் அர்சனை செய்யப் படுங்கர போர்டை பார்த்தா வெக்கமா இருக்கு, தமிழ் கொஞ்சம் கொஞ்சமா நசிஞ்சு போயிட்டே இருக்குன்னு விலாவரியா பேசினார், இது பல நிஜ தமிழ் ஆர்வலர்களுக்கும்,  நம்ம பலருக்கும்  காலம் காலமாக இருக்கும் ஒரு ஆதங்கம்தான்.  ஆனா அதை இவர் சொன்ன விதம், இவருடைய கவலை, தமிழக அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுபோல் போலியாக இல்லாமல் ஹிருதயத்திலிருந்து வந்த ஒரு கவலைங்கரதை விளக்க வேண்டிய அவசியமில்லை.  இவர் பேச்சை குறுக்கிட்டு என்னை மாதிரி எல்லோரும் பேசினாலும், பேச்சு தங்கு தடையில்லாமல் நல்லா இருந்தது.   

ரஜனியோட டிசம்பர் 12 பிறந்த நாளை கொண்டாடர தமிழக மக்கள், தேசிய கவி பாரதியோட டிசம்பர் 11 பிறந்த நாளை கண்டுக்காம இருக்காங்களேன்னு ரொம்ப வருத்தப் பட்டார் மெய்யப்பன்.  ரஜனி பிறந்த நாள் ஒரு கமர்ஷியல் விஷயம், பாரதி  பிறந்த நாள் நம்மை போல பலருக்கு உணர்வு பூர்வமாண ஒன்னு, இதை பத்தி அதிகம் கவலைப் பட வேண்டியதில்லைங்கரது என்னோட கருத்து.  இதைத் தவிர அதிகமா பேசப் பட்ட விஷயம் ப்ளாக்ங்கர விஷயம் வந்ததும், ஒரு சென்சார்ஷிப் இல்லாமல் யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் எழுதலாம்ங்கரது.  நாகுவோட கவலை ஒற்றெழுத்து எப்படி எழுதரதுன்னு கூட ப்ளாகுல எழுதர நிறைய பேருக்குத் தெரியலை, ரவியுடைய கவலை, இப்படி தப்பு தப்பா பலர் எழுதரதுனால கூட பல படிச்சவங்க எழுதரதுல ஆர்வம் காட்டாம இருக்கலாம்.  எனக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.  தமிழை தப்பு தப்பா எழுதினா தப்பு இல்லை.  தப்பான கருத்தை சரின்னு எழுதினாதான் தப்பு.  (ஹீம் நாடகம், கதைன்னு எழுதும் போது எனக்கு இப்படி ஒரு ஃப்ளோ வரதே இல்லை)

ஒரு சின்ன சிற்றுண்டி இடைவெளி (அதாங்க ஸ்நேக்ஸ் ப்ரேக்) க்கு பிறகு மு.கோபாலகிருஷ்ணன், பேசினார்.  இவர் பேசியதை சுருக்கமா சொல்லனும்னா கூட ஒரு பெரிய கதை மாதிரி சொல்லனும்.  பல விஷயங்களை பளிச்ன்னு சொன்னார்.  மெய்யப்பன் கருத்துகள் பலதை ஆதரிச்சும் சிலதை எதிர்த்தும் பேசினார்.  அந்தக்கால அரசியலில் காமராஜர், முத்துராமலிங்க தேவர் ரெண்டு பேருக்கும் நடுவில இருந்த பல விஷங்களைச் சொன்னார்.  பெரியாரைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு, அவருடைய பல நல்ல எண்ணங்களை பத்தி சொல்லிட்டு அந்தப் பேச்சு அரசியலை நோக்கி போறதை தெரிஞ்சுகிட்டு அதை தவிர்த்துட்டு பேசினார்.  இவர் பேச்சு நல்ல பல கருத்துக்களோட இருந்தது.

எனக்கு இப்படிப் பட்ட கூட்டங்கள் பிடிக்கும், ஏன்னா அடுத்தவங்க கருத்து என்னன்னு தெரிய வரும் அது மட்டும் இல்லாமல், கருத்துப் பகிர்வுங்கரது அருமையான ஒரு விஷயம்.  பேசப் பேச பல விஷயங்களைப் பத்தி ஒரு தெளிவு வரும்.  ஆனா இப்படிப் பட்ட நல்ல கூட்டங்கள் தொடர்ந்து நடக்கரதுக்கு நம்மல மாதிரி பலருடைய ஒத்துழைப்பு அதி முக்கியம்.  பேச தயாரில்லையா,  வேண்டாம், ஆனா, வந்து பங்கெடுத்துக்கலாமே.  அதை செஞ்சா 10-15 இருக்கர இந்தக் கூட்டம், 40-50 ஏன் 100 பேர் கலந்துக்கர கூட்டமா மாறும். 

இன்னிக்கு நம்ம எல்லோருக்கும் இருக்கர ஒரு கவலை, நம்ம நாட்டின் அரசியல் நிலைமை மாறாதா, யார் எதைச் செஞ்சா இது மாறும், அன்னா ஹசாரே காப்பாத்துவாரா, மோடி காப்பாத்துவாரா, எப்படி நாம இதுல பங்கெடுத்துக்கரதுன்னு தினம் தினம் யோசிக்கரோம், அதே யோசனையோட, மாசம் ஒரு தடவை இப்படி கூட்டங்களுக்கு வந்தால், ஊர் கூடி யோசிச்சா ஒரு வழி பிறக்காமலா போகும்.

முரளி இராமச்சந்திரன்

Saturday, April 09, 2011

இந்தியாவிலும் வெடித்தது புரட்சி

(இணையத்தில் பல தளங்களில் காணப்படும்  இதை எழுதியவர் இவரோ... - ஜன்லோக்பால் பற்றி ஒரு அறிமுகத்துக்காக இங்கே.. என்னுடைய கருத்துக்கள் கீழே... சற்றுமுன்: கோரிக்கைகளை அரசு ஏற்றதால் உண்ணாவிரதம் முடித்தார் அன்னா )

இந்தியாவிலும் வெடித்தது புரட்சி – ஊழலுக்கு எதிராக – ஒன்று திரள்வோம் வாரீர் !


இந்தியாவிலும் வெடித்தது புரட்சி -  ஊழலுக்கு எதிராக -  ஒன்று திரள்வோம் வாரீர் !

ஊழலுக்கு எதிராக சமுதாய நல ஆர்வலர்
அன்னா ஹஜாரே (விவரங்கள்
கீழே)எழுப்பிய தீ  கொழுந்து விட்டு
எரிய ஆரம்பித்து விட்டது.

"முதல் சட்ட மசோதா பாராளுமன்றத்தில்
கொண்டு வரப்பட்டு 42 ஆண்டுகள் ஆகி விட்டன.
இது வரை 8 முறை மசோதாக்கள் கொண்டு
வந்தாகி விட்டது. ஆனால் ஒன்றும்
செயல்பாட்டிற்கு வரவில்லை. ஊழல் விஷம் போல்
பரவி விட்டது.எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்.

கடைசி எச்சரிக்கையாக இன்னும் ஒரு மாத
அவகாசம்  கொடுக்கிறோம்.
ஊழலுக்கு எதிரான "ஜன் லோக் பால்"மசோதாவை
மத்திய அரசாங்கம் உடனடியாக இயற்றாவிட்டால் –
ஏப்ரல் 5ஆம் தேதி முதல்,நான் சாகும் வரை
உண்ணாவிரத நோன்பு மேற்கொள்வேன்"
- என்கிற இவரது அறிவிப்பை முதலில்
துச்சமாக நினைத்த மத்திய அரசு இன்று
திகைத்து நிற்கிறது.

சட்டென்று செயலில் இறங்கி விட்டார் மனிதர் !
டில்லியில் இந்தியா கேட் அருகே நேற்று முதல்
உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஜாரே
மூட்டிய தீ  நாடெங்கும் பரபர வென்று பரவ
ஆரம்பித்து விட்டது.

காங்கிரஸ் அமைச்சர் வீரப்ப மொய்லி,
சட்டம் இயற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு.
வெளி மனிதர்கள் அந்த வேலையில்
ஈடுபடத் தேவை இல்லை என்று
கூறியதற்கு, அன்னா பொங்கி எழுந்து பதில்
கொடுத்தது பிரமாதம்.

"யாரய்யா வெளி மனிதர்?
இந்த நாட்டு மக்கள் தான் இந்த அரசாங்கத்தின்
எஜமானர்கள். நீ அவர்களின் ஊழியன்.
வேலைக்காரன். அவர்களாகப் பார்த்து தான்
உன்னை உள்ளே வைத்திருக்கிறார்கள்.
- வேலைக்காரர் எஜமானரைப்
பார்த்து வெளியே போ என்பதா ?
மக்கள் விரும்பும் வரை தான் நீ அங்கே
இருக்க முடியும். மக்கள் நினைத்தால்
உன்னை வெளி ஆள்  ஆக்க எத்தனை
நேரம் பிடிக்கும் " என்கிறார்.

இந்தியாவெங்கும் மக்கள்,குறிப்பாக இளைஞர்களும்
நடு வயதினரும், முக்கிய நகரங்களில் -
அன்னாவுக்கும், அவர் எழுப்பிய கோரிக்கைக்கும்
ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில்
இறங்க ஆரம்பித்து விட்டனர்.
ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில்,
எமெர்ஜென்சியின் போது கிளம்பிய எழுச்சியை
இப்போது தான் மீண்டும் காண முடிகிறது.
மக்களின் பங்கெடுப்போடும்,
பேராதரவோடும், ஒரு மகத்தான போர் -
ஊழலுக்கு எதிரான போர் -துவங்கியுள்ளது.
நம் மக்களை ஒருங்கிணைக்கவும்,
லஞ்ச ஊழலைஅடியோடு ஒழித்துக் கட்டவும் -
ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்கவும் -
அருமையான ஒரு வாய்ப்பு உருவாகி வருகிறது.

உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஜாரே
பேசும் பேச்சுக்கள் மக்களிடையே எழுச்சியை
உண்டு பண்ணுகின்றன.அவரது உரை
இந்தியில் இருப்பதால் தமிழ் மக்களை இன்னும்
சென்றடையவில்லை !
தமிழ் தொலைக்காட்சிகளோ வடிவேலு, குஷ்பு
பேச்சுக்களை காட்டுவதிலேயே குறியாக
இருக்கின்றன.

யார் இந்த அன்னா ஹஜாரே ?-
72 வயது காந்தீயவாதி.
மராட்டியர். மஹாராஷ்டிராவில் அற்புதமான
பல சமுதாயப் பணிகளில் ஈடுபட்டவர்.
நாம் அனைவரும் இன்று பயன்பெற்றுக்
கொண்டிருக்கும்  (RTI)
Right to Information
தகவல் பெறும் உரிமை -க்கான காரணகர்த்தா.
பத்மபூஷண் பதக்கம் பெற்ற பெருமைக்குரியவர்.

முக்கியமான விஷயம் -
இவர் ஒரு அரசியல்வாதி அல்ல.
எந்த கட்சியையும் சேர்ந்தவரும் அல்ல.
மரியாதைக்குரிய சமுதாய ஆர்வலர்.
"ஜன் லோக் பால்" என்றால் என்ன ?
(இந்தி பெயர் – பயமுறுத்துகின்றதோ ?)
ஊழலை நம் நாட்டிலிருந்து
வேரோடு அழிக்கவல்ல  அருமையான ஒரு
மாதிரி சட்ட வடிவம் தான் "ஜன் லோக் பால்"

இதன் சில முக்கிய அம்சங்கள் -
சமுதாய அக்கறையுள்ள சில முக்கிய மனிதர்கள்
(கிரண் பேடி, சந்தோஷ் ஹெக்டே,
பிரசாந்த் பூஷன் போன்ற இன்னும் சிலர் )
சேர்ந்து கலந்து ஆலோசித்து தயாரித்துள்ள -
ஊழலுக்கு எதிரான -சட்ட முன்வடிவம் இது.
மாநிலங்களிலும்(லோக் ஆயுக்தா),
மத்தியிலும்(லோக்பால்) செயல்பட தனித்தனி
அமைப்புகள்.

லஞ்சம்,ஊழல், மற்றும் குற்றச்செயல்களில்
ஈடுபடும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள்,
நீதிபதிகள், உயர்அதிகாரிகள்,(போலீசார் உட்பட) –
ஆகியோர் மீது -
பொதுமக்கள் யார் வேண்டுமானாலும்
இந்த அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம்.
புகார் கிடைத்த ஒரு வருடத்திற்குள் இது குறித்த
சகல விவரங்களும் தனிபட்ட அமைப்பால்
விசாரிக்கப்பட்டு, சாட்சியங்களும் ஆவணங்களும்
திரட்டப்படும்.

முதல் வருடம் முடிவடைவதற்குள் வழக்கு
பதிவு செய்யப்பட்டாக வேண்டும்.
அடுத்த ஒரு வருடம் முடிவதற்குள்ளாக
வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டாக
வேண்டும். எத்தகைய ஒரு வழக்கும் இரண்டு
வருடங்களுக்குள் முடிக்கக்ப்பட்டே ஆக வேண்டும் !
இதன் மூலம் – எத்தகைய உயர்ந்த பதவி வகிக்கும்
நபரானாலும் சரி – அவர் மீதான ஊழல் வழக்கு
இரண்டு வருடங்களுக்குள் முடிவடைந்து
தீர்ப்பு/தண்டனை  அளிக்கப்பட்டாக வேண்டும்.
குற்றவாளி நிச்சயமாக 2 ஆண்டுகளுக்குள்
சிறையில் தள்ளப்பட வேண்டும்.


லஞ்ச ஊழல் வழக்குகளில் – தண்டனையோடு
நின்று விடாமல் – சம்பந்தப்பட்ட தொகை முழுதும்
குற்றவாளியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட
வேண்டும்.

இந்த அமைப்புகள் எப்படி இயங்கும் என்று கேட்கலாம்.
தற்போதுள்ள, சிபிஐ, விஜிலன்ஸ் கமிஷன் போன்ற
அமைப்புகள் லோக்பாலுடன் இணைக்கப்பட்டு,
அவற்றின் அத்தனை செயல்பாடுகளும்,
சகல அதிகாரங்கள் கொண்ட
இந்த லோக்பால் அமைப்பின் கீழ் வந்து விடும்.
தேர்தல் கமிஷன் போல், சுப்ரீம் கோர்ட் போல் -
சுதந்திரமான அமைப்பாக இது இயங்கும்.

இந்த அமைப்பு எந்த விதத்திலும் மாநில அல்லது
மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,நடுநிலையான,
சமூகப் பொறுப்புள்ள, சமுதாய
நல அமைப்புகள்  -ஆகியவை சேர்ந்து
இதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த அமைப்பின் உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்தின் எந்தவிதத்
தலையீடும் இருக்கக்கூடாது.
இன்று உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்.
நாட்கள் செல்ல செல்ல மத்திய அரசுக்கு
இதன் உக்கிரம் உரைக்க ஆரம்பிக்கும்.

இந்த "தீ" – ஊழலை ஒழிக்க உண்டாக்கப்பட்டிருக்கும் – இந்த தீ பரவட்டும். வேகமாகப் பரவட்டும் .

----------------------------------------------------------------------------------------------------
மேலே இருப்பது மின்னஞ்சல் மூலமாக எனக்கு வந்தது.  நிறைய வலைப்பதிவுகளில் இதைப் பார்க்கலாம். இதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.

முதலாக - இந்த ஜன்லோக்பால் உறுப்பினர்களை யார் தேர்ந்தெடுப்பது? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரி - சமுதாய நல அமைப்புகள்? நாளையே நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அப்படி ஒரு போர்ட் மாட்டிக் கொள்ளாதா?  மறுபடியும் திருடனே திருடனை நியமிக்கும் கதை நடக்கும்...

ஒரு ஆண்டுக்குள் விசாரணை ஆரம்பித்து, அடுத்த ஆண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். நியாயமாக ஒழுங்காக நடக்க வேண்டிய ஒரு விஷயத்திற்கு சட்டம் கொண்டு வரவேண்டிய நிலையில் இருக்கிறது இந்தியா!

இருக்கும் அரசியல்வாதிகளை கொஞ்ச்ச்ச்ச்ச்ச்ச்சசசம்ம்ம்ம்  திருத்த எனக்கு இரண்டு யோசனைகள் தோன்றுகின்றன.  ஒன்று - பதவி உச்சவரம்பு.  அமெரிக்காவில் ஜனாதிபதி பதவி இரண்டு முறை மட்டும்தான் வகிக்கலாம்.  மாநில கவர்னர் பதவியும் இரண்டு முறை மட்டும்தான் என்று நினைக்கிறேன். அப்படி செய்தால், என் வாழ்நாள் முழுவதும் ஒருவர் முதல்வராக இருப்பது நடக்காது. அவ்வளவு புத்திசாலிகள் நிறைந்த மேற்கு வங்காளத்திலும், தமிழகத்திலும் ஜோதிபாசுவையும், கலைஞரையும் தவிர ஆளுவதற்கு யாருக்கும் தெரியாதா? இது எந்த அரசியல்வாதிக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அன்பழகனுக்கும்,  பன்னீர் செல்வத்திற்கும் மிகவும் பிடிக்கும் :-)

இரண்டாவது - அந்தந்த தொகுதியில் வசிக்கும் மக்கள்தான் அந்தந்த தொகுதியில் போட்டியிட வேண்டும். சிக்மகளூருக்கும் இந்திராவுக்கும், சீரங்கத்துக்கும் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் ரிஷிவந்தியத்துக்கும்  என்ன சம்மந்தம்? அந்தந்த ஊர் மக்களுக்குத்தானே அந்தந்த ஊர்களுக்கான தொகுதியில் நிற்க உரிமை இருக்கவேண்டும். அதுதானே ஜனநாயகத்தின் அடிப்படை?  அரசாங்கத்தில் மக்களின் பிரதிநிதி அந்தந்த மக்களிடையே இருந்துதானே வரவேண்டும்?? பண்ருட்டியில் பாட்னாவில் வாழும் ஒருவர் தேர்தலுக்கு நின்றால் கேலிக்கூத்தாகத்தானே இருக்கும்.

அப்படி செய்தால் ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் மற்றொரு ஜனநாயக மோசடியையும் தவிர்க்கலாம். எப்படியும் கொள்ளையடிக்கிறார்கள்.  கொள்ளையில் பங்கு அந்தந்த தொகுதியைச் சேர்ந்த கொள்ளையருக்கு போவதுதானே உண்மையான ஜனநாயகக் கொள்ளை?

ஆனால் இந்த இரண்டும் சட்டங்களாகும் வாய்ப்பு?  எந்தப் பூனை அதுவே தானாக மணியைக் கட்டிக் கொள்ளும்??

மத்திய அரசு அன்னா ஹஸாரேவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் அவர் உண்ணாவிரதத்தை முடித்தார் என்று சற்றுமுன் வந்த செய்திகள் கூறுகின்றன. பார்ப்போம் என்ன ஆகிறதென்று.







----------------------------------------

Friday, September 28, 2007

டெக்ஸாஸில் கள்ள ஓட்டு

நம்ம ஊர் அரசியல்வாதிகளாவது அடியாட்களை வைத்து பொதுத் தேர்தலில்தான் கள்ள ஓட்டு போடுகிறார்கள். இங்கே பாருங்கள் சட்டசபையிலேயே மக்களின் பிரதிநிதிகள் ஜமாய்க்கிறார்கள். சுழன்று சுழன்று வேலை செய்கிறார்கள். பாயும் புலிகளாக இருக்கிறார்கள் பாருங்களேன்!



பண்ணுவதையும் பண்ணிவிட்டு அதற்கு சால்ஜாப்பு வேறு. நம்ம ஊரில் இவ்வளவு டெக்னாலஜி வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. வந்தால் நம்ப ஆட்கள் ஸ்கோர் போர்டிலேயே மேட்டரை முடித்து விடுவார்கள் :-)

நமக்கே பதிவு எழுத விஷயம் கிடைக்க மாட்டென்கிறது. இதில் நம்ம கூட்டணி கட்சிகள் வேறு முந்திவிடுகின்றன. இனி பதியக்கூடிய மேட்டர் எல்லாம் பதிந்து விட்டுதான் மக்களை ஸ்பேம் பண்ண வேண்டும் :-)