Saturday, March 28, 2015

சாமியார் படுத்திய பாடு                    
   இப்பொழுதெல்லாம் இந்த நாட்டில் சாமியார் ஆவது அவ்வளவு சுலபம்  அல்ல..அதுவும் பெரிய சாமியாராக வேண்டுமானால் பல முக்கிய தகுதிகள் வேண்டும் மற்ற தகுதிகளைப் பற்றி கவலையில்லை.. முக்கியமாக குறைந்த பட்ச தகுதியாக ஒரு கொலை வழக்கிலாவது சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.
  கு/ற்றம் நிரூபிக்கப்பட்டதா என்பதெல்லாம் பிரச்னை அல்ல..கோர்ட்டில் போய் கொலைக் குற்றவாளியாக கூண்டில் நிற்க வேண்டும் மன்னிக்கவும் சகல மரியாதைகளோடு உட்கார வேண்டும் அப்பொழுதுதான் அவரை பெரிய சாமியாராக அருள்வாக்குச் சித்தராக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்
துரதிருஷ்ட வசமாகக் கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சாமியார் களி தின்ன ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை .மக்களூம் பக்த கோடிகளூம் விடுதலை நாளில் சிறைவாசலில் காத்திருந்து சாமியாரை மேளதாளத்துடன் ஆசிரமத்துக்கு அழைத்துப் போவார்கள்..கவலையே வேண்டாம்.  ஆசிரமத்துச் சொத்துக்களுக்கு எதுவும் ஆகாது. சொத்துக்க:ளை பக்த கோடிகள் ஜாக்கிரதையாகக் காப்பாற்றுவார்கள்
   அப்படித்தான் .ஒரு பெரிய சாமியார் சமீபத்தில் தன்னைத் தேடி வந்த இரண்டு மாநில போலிஸுக்கு தண்ணீ காட்டியிருக்கிறார் .சும்மாவா சொன்னார்கள். இந்தியா ஞானிகளூம் சித்தர்களூம் வாழும் புண்ணிய பூமி என்று?. .
    ஹரியானா மாநிலத்தில் பார்வாலா என்ற இடத்தில் 12 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் கட்டிக் கொண்டு ஏராளமான மக்களுக்கு பல வருடங்களாக அருள் பாலித்துக் கொண்டிருக்கும் சாமியாரை பிடிக்கச் சென்ற போலிசு புலிகள் பட்ட பாட்டை சொல்லி முடியாது .கடைசியில் இந்திய துனை ராணுவமும் .அண்டை மாநிலமான பஞ்சாபிலிருந்து போலிசும் உதவிக்கு வந்துதான் காரியம் ஒரு வகையாக முடிந்தது..
அவ்வளவு பெரிய படை வந்தும் சாமியாரைப் பிடிக்க 5 நாள் ஆகிவிட்டது அதற்காக 3 மாநில சர்க்காருக்கும் ஆன செலவுத் தொகையைக் கேட்டால் மூச்சு முட்டும் .அந்த சாமியாரையும் அவர் கூட்டாளிகளையும் பிடிக்க மொத்தச் செலவு 26 கோடி ரூபாய்
    ராம்பால் என்ற பெயர் கொண்ட அந்த நவீன சாமியார் வாழ்ந்த ஆசிரமத்தைப் பார்த்து மகாராஜாக்களே பொறாமைப்படுவார்களாம்.
ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால் அந்த சாமியார் இனிமேல் அந்த ஆசிரமத்துக்கு திரும்பி வர மாட்டார் என்கிறார்கள்
காரணம் அவர் மேல் அவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம்
.. கதை இப்படி போகிறது.
        ராம்பால் என்ற இந்த சாமியார் பல ஆண்டுகளாக ஒரு ஆசிரமத்தை அமைத்து நடத்தி வருகிறார். ஏராளமான பக்தர்கள் அவரிடம் வந்து போகிறர்கள் அந்த ஆசிரமத்தில் 2006 ம் ஆண்டு ஒரு கொலை நடந்தது அந்த கொலை வழக்கில் சாமியார் முதல் குற்றவாளி விசாரிக்க 2006 முதல் இதுவரை நீதிபதி 43 சம்மன்களை அனுப்பியும் பயனில்லை  உங்களுக்கு பெங்களுரு தனி நீதிமன்றத்து வழக்கு நினைவுக்கு வரலாம் சாமியார் தெய்வத்தின் அவதாரமாகியபடியால் சாதாரண மனிதர்களூடைய சம்மனுக்குக் கட்டுப்பட்டு கோர்ட் வாசலுக்குப் போக  தயாராக இல்லை.கடைசியாக அந்த நீதிபதிக்கும் சொரணை வந்தது..கடைசியாக பிடிவாரண்ட் பிறப்பித்தார் அவர்.. .வாரண்டுடன் சத்யலோகத்துக்கு  (சாமியாரின் ஆசிரமத்துக்கு இதுதான் பெயர்.) போன போலிஸுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது
சாமியாரை கோர்ட்டுக்குக் கொண்டு போக வெறும் போலிஸ்காரர்கள்  மட்டும் போதாது என்று புரிந்து கொண்டார்கள் அப்புறம் அங்கே நடந்ததெல்லாம் இந்த மண்ணில் மட்டுமே நடக்கும் மகிமை நிறைந்த சம்பவங்கள்.
     12 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோட்டையே கட்டியிருக்கிறார் ராம்பால் சாமியார்..பல ஆயிரம் பக்த கோடிகள் பெரியவர்கள் இளைஞர்கள்,பெண்கள், குழந்தைகள் இப்படி ஒரு பட்டாளமே உள்ளே இருக்கிறது சாமியாரை நெருங்கவே விடவில்லை அந்த பக்த கோடிகள் .ஏறக்குறைய 25000பேர் உள்ளே இருப்பதாக போலிசுக்கு தகவல் கிடைத்தது .போலிஸ் உள்ளே போக முயன்றால் உள்ளிருந்து பெட்ரோல் குண்டுகளூம் கற்களூம் சரமாரியாக போலிஸை நோக்கி வருகிறது துப்பாக்கி குண்டுகளூம் வரத் தொடங்கின..
   நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த போலிஸ் அதிகாரிகள் பக்கத்து மாநிலமான பஞ்சாபிலிருந்தும்  போலிஸ்  படையை வரவழைத்தனர்.அதிரடியாக உள்ளே நுழையவும் உள்ளே இருப்பதாகச் சொல்லப்பட்ட பெண்கள் குழந்தைகள் ஆகியோருக்கு எந்த சேதமும் நேராமல் காக்கவும் மத்ய அரசாங்கத்தின் துரித நடவடிக்கைப் படையும் வரவழைக்கப் பட்டது   ..
     கோட்டைக்குள் (ஆசிரமத்துக்குள் என்றும் படிக்கலாம்.)நுழைவத/ற்கு முன் உள்ளே செல்லும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.குடிநீர் வசதியும் துண்டிக்கப்பட்டது.
   உள்ளே இருக்கும் சாமியாருடைய குண்டர் படை குழந்தைகளையும் பெண்களையும் முன்னால் நிறுத்தி அவர்கள் பின்னே இருந்து பெட்ரோல் குண்டுகளையும் கையெறி குண்டுகளையும் வீசத் தொடங்கினார்கள். துப்பாக்கிச் சூடும் தொடர்ந்தது. போலிஸ் தரப்பில் துப்பாகிச் சூடு நடத்த முடியாத இக்கட்டான நிலை..முன் வரிசையில் பெண்களும் குழந்தைகளூம் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.. கொஞசம் மொஞசமாக போலிஸ் படை முன்னேறி கோட்டையை சுற்றி வளைத்தனர் இந்த வேலையை முடிக்க நான்கு நாள் ஆகிவிட்டது. ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் உட்பட ஆறு பேர் மரணமடைந்தனர்.காவல் துறையைச் சேர்ந்த சிலருக்கு குண்டு காயம் இப்படி குறைந்த பட்ச உயிர்ச் சேதத்தோடு ஆசிரமத்தை போலிஸ் கைப்பற்றியது..
    இலங்கையில் எல்.டி டி. யினர் இப்படித்தான் பெண்களை முன்னே நிறுத்தி பின்னே இருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவார்களாம் ..ஆசிரமத்திலி ந்து 25000 பேரையும் வெளீயேற்றி அவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டு சாமியாரை கைது செய்தார்கள் இப்படி இரண்டு மாநில போலிசுக்கும் மத்ய அரசாஙத்தின் துணை ராணுவப்படைக்கும் தன் கைவரிசையை காட்டிய சாமியார் ராம்பாலுடைய ஆசிரமம் பற்றிய விவரங்கள் படிப்பவர்களை அதிர வைக்கிறது.
  சாமியாரின் ஆசிரமம் ஐந்து மாடிக் கட்டிடம் லிப்ட் வசதிகளூடன் கூடிய அந்த கட்டிடத்தில் 28 விசாலமான அறைகள்,பல ஆயிரக்கணக்கில் மெத்தைகள்.படுக்கைகான கட்டில்கள்.
  சாமியாரும் அவருடைய நெருக்கமான சிஷ்யர்களும்  தங்குவதற்கு .சி.
வசதி செய்யப்பட்ட தனி அறைகள். இப்படியாக அங்கே ஒரு அரண்மனையே உருவாக்கப்பட்டிருந்ததைக் கண்டு போலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள் .சாமியாருக்கு மிக நெருக்கமான பல பெண்களூம் அங்கே இருந்தார்கள் அவர்களையும் கைது  செய்து போலிஸ் விசாரித்து வருகிறது. ….சாமியார் குளிக்க தனி நீச்சல் குளம் 25 மீட்டர் நீளைத்தில் அமைந்த அந்த நீச்சல் குளம் இருக்கும் இடம் முழுவதும் .சி.வசதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.
   சாமியாருடைய அரண்மனையில் ஒரு ஆசிரமத்தில் கிடைக்கக்கூடாத பல பொருட்களூம் கிடைத்திருப்பதாக செய்தி.. பெண்கள் அணீயும் உள்ளாடைகள் பெண்களின் கர்ப்பத்தை சோதிக்கும் கருவிகள் உட்பட பல அயிட்டங்கள். கிடைத்திருப்பதாக செய்திகள் வருகிறது. அங்கே ஒரு ஆயுதக் கிடங்கே  இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது நாட்டுத்துப்பாக்கிகள், நவீன ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பெட்ரோல் குண்டுகள் உருட்டுக்கட்டைகள் மிளகாய்ப் பொடி இதர வகையறாக்கள்.  சாமியாரைப் பற்றி பல விஷய்ங்களை போலிஸ் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருக்கிறது
சாமியார் தினமும் தன் பக்தர்களுக்கு தர்சனம் கொடுப்பார்..குண்டு துளைக்காத ஒரு கூண்டில் நின்று பிரச்சாரம் செய்வாராம் தன்னை கடவுளின் அவதாரமென்று கூறி தன் பக்தர்களை நம்ப வைத்திருக்கிறார். எல்லாம் முடிந்த பிறகு அவருக்கு குடம் குடமாக பால் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.அந்த பாலை தேக்கி வைத்து எடுத்து அதைக் கொண்டு பாயசம் செய்வார்கள் அந்த பாயசம்தான் பிரசாதமாக பக்தகோடிகளூக்கு வழங்கப்படும் இவை எல்லாம் அந்த ஆசிரமத்தில் பல நாட்களாகத் தங்கியிருந்த பக்தர்கள் சொன்ன செய்திகள்.
   இந்த சத்யலோகத்தை தவிர சாமியாருக்கு ஹரியானாவில் மற்றொரு பகுதியில் 50 ஏக்கர் நிலத்தில் ஒரு ஆசிரமம் இருக்கிறது. மத்யப் பிரதேசத்தில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு ஆசிரமம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
    ஆக மொத்தம் ராம்பால் சாமியாருக்கு 1000 கோடி ரூபாய்க்கு
சொத்து இருப்பதாக பொறுப்புள்ள பத்திரிகைச் செய்தி கூறுகிறது.
   பால் அபிஷேகத்தை தினமும் அனுபவித்துக் கொண்டிருந்த ராம்பால் சாமியார் இப்பொழுது ஜெயிலில் களி தின்று கொண்டிருக்கிறார்.
எது எப்படி ஆனால் என்ன? மாட்டும் வரையில் சாமியார்கள் பாடு யோகம் தான்.. இப்போதைக்கு  பக்த கோடிகள் தங்களுடைய ஆன்ம திருப்திக்கு வேறு சாமியாரைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான். கிடைக்காமலா போகும் ஞானிகளூம் சித்தர்களூம் நிறைந்த ஞானபூமி ஆயிற்றே நம் நாடு.
 .                                              - மு.கோபாலகிருஷ்ணன்

5 comments:

 1. ஒரு தமிழன்Saturday, March 28, 2015 6:32:00 PM

  //இலங்கையில் எல்.டி டி.இ யினர் இப்படித்தான் பெண்களை முன்னே நிறுத்தி பின்னே இருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவார்களாம்

  சர்க்கரைப் பொங்கலில் கிடக்கும் கூழாங்கல்.
  மொத்த சுவையையும் குலைத்து விட்டது.

  ReplyDelete
 2. இந்தக்காலத்தில் சாமியார்கள் கோடிக்கணக்கில்தான் புரள்கிறார்கள். அதுவும் சில சாமியார்கள் பேசுவதையும் நடந்து கொள்வதையும் பார்த்தால் எப்படித்தான் அவர்கள் பக்தர்களை ஈர்க்கிறார்கள் என்று புரியவில்லை.

  எத்தனை பிகே படம் வந்தாலும் நம் ஊரை திருத்த முடியாது.

  அதுவும் சாமியார் மடம் எதற்கு இத்தனை ஆயுதங்களையும், சொத்துக்களையும் சேர்க்க வேண்டும். எமர்ஜென்ஸி காலத்தில் ஏதோவொரு ஆசிரமத்தில் இப்படி நடந்த மாதிரி ஞாபகம். ஆனந்த மார்க்கிகள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. முதலில் மு.கோ அவர்களுக்கு நல்ல பதிவு, ஆனா சட்டுன்னு முடிச்சிட்ட மாதிரி இருக்கு. பல கபட நாடக வேடதாரிகளைப் பத்தி எழுதியிருக்கலாம்.

  இவ்வளவு செஞ்ச பிறகும் அந்த ஆள் ஒரு சந்யாசின்னு எப்படி நம்பராங்கன்றது நாகுவைப் போல எனக்கும் ஒரு பெரிய கேள்விதான்.

  ஒரு தமிழனின் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை, புலிகள் அப்படி யார் பின்னும் நிற்காமல் சண்டை போட்டார்கள்னு சொல்ல வராரா? இல்லை அவங்களைப் பத்தி இந்தப் பதிவுல சொல்லக்கூடாதுன்னு சொல்ல வராரா?

  மொத்ததுல நல்ல பதிவு, ஒரு சிறிய கண் திறப்புக்கான பதிவு.

  முரளி.

  ReplyDelete
 4. மு.கோ. அவர்களிடம் இருந்து மின்னஞ்சலில் வந்த பதில்:

  2009 ம் ஆண்டு ஈழத்தமிழர் பகுதிகளில் போர் உச்சகட்டத்தில்
  நட்ந்து கொண்டிருந்த போது பத்திரிகைகளில் வந்த செய்தியைத் தான்
  நான் ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டேன்
  பத்திரிகைச் செய்தியின் நம்பகத் தன்மை பற்றி ஒருதமிழன் மாறுபட்ட கருத்து கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை
  பல ஆண்டுகளாகஈழத் தமிழர் போராட்டத்தை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வரும் நான் அந்தச் செய்தியை முழுமையாக நம்புகிறேன்
  எந்த பகுதி மக்களூக்காகப் போராடுவதாக விடுதலைப் புலிகள் கூறிக் கொண்டார்களோ அந்தப் பகுதி மக்களையே அவர்கள் நம்பவில்லை தொடக்க காலத்தில் பல்வேறு கருத்துப்போக்குகள் கொண்டவர்களுடன் கூட்டுத் தலைமையில் செயல்பட்ட ஈழத்தமிழர் போராட்டம் காலப் போக்கில் திசைமாறியது.
  மாற்றுக் கருத்து கொண்டவர்களை கொடூரமான முறையில் துடைதெறிந்து விட்டு ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதியாக விடுதலைப்புலிகள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்த சிறு குழுவில் கூட மாற்றுக் கருத்து அநுமதிக்கப்படவில்லை. மாத்தைய்யாவுக்கு ஏற்பட்ட கதி எல்லோருக்கும் தெரியும் அவர்களை நம்பி பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமிர்தலிங்கத்தையும் சிவசிதம்பரத்தையும் சவப்பெட்டியில் திரும்ப அனுப்பிவைத்தனர் சகபோராளிகளான சீறி சபாரத்தினமும் உமாகாந்தும் பத்மநாபாவும்
  துடிக்கத் துடிக்க பொதுவிடங்களில் கொல்லப்பட்டனர்.சர்வதேசப் புகழ் பெற்ற சட்டவல்லுனர் திருச்செல்வமும் அவர்களூடைய குண்டுகளுக்கு இரையானார்.
  சிங்கள ராணுவத்தின் குண்டுகளூக்கு பலியான எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணீக்கையில் தமிழர்கள் விடுதலைப்புலிகளின் குண்டுக்கு பலியானார்கள்
  தவறான தலைமையின் மீது நம்பிக்கை வைத்த ஈழத்தமிழர்கள்
  மீது நாம் அநுதாபப்படலாம்.. தங்களை நம்பிய மக்களையும் அழித்து தங்களையும் அழித்துக் கொண்ட பாஸிஸ்டுகள் விடுதலைப்புலிகள்
  விடுதலைப்புலிகளீன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஒரு கெட்ட கனவாக நீண்டநாள் நம் நினைவில் இருக்கும் இரண்டு தலைமுறை மக்களை இழந்த ஈழத்தமிழ்ச் சமூகத்தின் மறுவாழ்வுக்கு ஒரு தமிழன் மட்டுமல்ல,ஒவ்வொரு தமிழனும் உதவியாக வேண்டும் என்பதுதான் என் கருத்து..
  மு.கோபாலகிருஷ்ணன்

  ReplyDelete
 5. மு.கோ.

  "ஒரு தமிழன்" தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள உங்களது இந்த விளக்கம் உதவுமா தெரியாது.
  மிகச் சரியான விளக்கம்.

  நீங்கள் குறிப்பிட்டுள்ள எதையும் எவரும் மறுக்க முடியாது.

  நம் தமிழகத்தின் சாபக்கேடு, எதற்கு ஏன் என்ற கேள்விகள் இல்லாமல் அரசியல்வாதிகள் சொல்வது எல்லாம் நிஜமென்று நம்பும் கூட்டம் இருக்கிறவரை விடுதலைப் புலிகள் ஒரு தியாகிகளே.

  விளக்கத்துகு மிக்க நன்றி.

  முரளி இராமச்சந்திரன்

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!