Sunday, February 05, 2012

அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சாமி

அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சாமி

படித்தவர், பண்டிதர், பொருளாதார வல்லுநர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசியராக இருந்தவர். IIT டெல்லியில் பொருளாதாரப் பேராசிரியர். கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ என்று குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த சந்திர சேகரின் மந்திரி சபையில் அமைச்சர். இவரது நல்ல பக்கம் இவையே. இவை அனைத்தும் சிறந்த சாதனைகள் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.

ஆனால், இவரைப் பற்றிக் கேட்டல் உடன் ஞாபகம் வருவது, கலங்கிய குட்டையில் மீன் பிடித்துக் குளிர் காயும் இவரது தான் தோன்றித் தனமான செயல்பாடுகள் தான்.

2G வழக்கில் ராஜாவைக் கைது செய்யும் வரை இவர் புத்திசாலி. அதில் இவரது பங்கை மறுக்க முடியாது. ஆனால் சிதம்பரத்தைக் கைது செய்ய வைக்க முயன்று இன்று முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு இருக்கிறார். ஆனால் வெட்கப் பட மாட்டார், இன்னும் ஏதாவது குழப்பங்களை எங்காவது செய்து கொண்டு காலத்தை ஒட்டி விடுவார் இந்த புத்தியுள்ள மடையர்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் அவரைப் பகைத்துக்கொண்டு நீதி மன்றத்தின் முன்பு சேரிப் பெண்களின் ஆபாச நடனத்தில் அவமானப் பட்டவர். முகத்தில் அமிலம் வீசியது ஜெயலலிதாவின் உத்தரவில்தான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய சந்திர லேகாவுடன் சேர்ந்து கோமாளிக் கட்சி ஒன்றை ஆரம்பித்து கொஞ்ச நாள் ஓட்டினார். கருணாநிதியோடு மேடையில் ஏறி விட்டு அவர் ஒரு சிறந்த தலைவர் என்று கூச்சம் இல்லாமல் பாராட்டினார்.

பின்பு அதே ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு சோனியா காந்தியின் உதவியோடு வாஜ்பாயின் ஆட்சியைக் கவிழ்த்து நாரதர் கலக்கம் செய்தார்.

ராமதாஸ் போன்றவர்கள் கட்சி மாறினாலோ, ஆட்சியைக் கவிழ்த்தாலோ நாம் கண்டு கொள்ளப் போவதில்லை. ஆனால் புத்திசாலி என்ற போர்வையில் யாருக்கும் பிரயோஜனம் இல்லாத வெறும் குழப்ப அரசியலில் ஈடு பட்டு கோமாளிகளாகச் சுற்றிக் கொண்டிருக்கும் இவரைப் போல புத்திசாலி முட்டாள்கள்தான் நம் நாட்டின் சாபக் கேடு.

13 comments:

  1. சுப்பிரமணியசாமியின் கோமாளித்தனங்கள் பல இருந்தாலும், சிதம்பரத்தை சிக்கவைத்ததில் தோல்வி என்று நான் சொல்லமாட்டேன்.

    பாலசந்தர் படத்தில் ராஜேஷ் சொல்லுவாரே - அந்தக் கொலை நான் சொல்லி நடக்கவில்லை, எனக்குத் தெரிந்து நடந்தது - அதுபோலத்தான் கோர்ட் உளறியிருக்கிறது.

    அமைச்சரவையில் ஒரு அமைச்சர் வானளாவிய ஊழல் செய்தார் என்று கோர்ட் சொல்லியிருக்கும்போது, பிரதமரும், நிதியமைச்சர் பேரிலும் தவறில்லை என்று காங்கிரஸார் சப்பைக்கட்டு கட்டுவதை அவர்களே நம்புவார்களா?

    இது எல்லாம் சரி... அந்த 2ஜி ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்து மீண்டும் ஏலமிடவேண்டும் என்று தீர்ப்பு. ரத்து செய்தால் முதலில் யாருக்கெல்லாம் கொடுத்தார்களோ, அவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, அந்த 2ஜி சேவைகளை முடக்கிவிட்டு திரும்ப ஆரம்பிப்பது நடக்கிற காரியமா? லஞ்சம் கொடுத்தவர்கள் என்ன செய்வார்கள் இப்போது?

    ReplyDelete
  2. நாகு, என்னுடைய அறிவின்மையை மன்னிக்கவும், அரசாட்சியில் நிதி அமைச்சரின் பங்கு நிதி அறிக்கை சம்பந்தப்பட்டதும், திட்டமிடலும் என்றே நினைக்கிறேன். ஒரு தொலை தொடர்பு அமைச்சர் நிதி அமைச்சருக்கு இணையான பதவில்யில் இங்குள்ளார். எல்லாத் துறைகளுக்கும் நிதி அனுமதிக்கும் நிதி அமைச்சர் எப்படி எல்லாத் துறையிலும் வல்லுனராக இருக்க முடியும்? எனக்குப் புரியவில்லை. இந்த ஊழலில் ராஜினாமா செய்ய வேண்டிய தார்மீக உரிமை பிரதமருக்கு உள்ளது. ஒரு வேளை நிதி அமைச்சருக்கும் இருக்கலாம். ஆனால் இந்தக் குற்றத்தில் சேர்த்து உள்ளே தள்ளும் அளவுக்கு இவர்களுக்குப் பங்கு இருக்க வாய்ப்பில்லை என்பது சிதம்பரம் மற்றும் மன்மோகனின் கடந்த கால ஊழல் இல்லாத வரலாறே சாட்சி. இந்தக் கூற்றுப் படி பார்த்தால்,ஒவ்வொரு தாசில்தாரின் தவறுக்கும் மாவட்ட ஆட்சியாளரையும், மந்திரிகளின் தவறுக்கு முதலமைச்சரையும் உள்ளே தள்ளலாம். ஒவ்வொரு காபினட் அமைச்சரின் துறையிலும் நடக்கும் ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் சரி பார்த்து ஒப்புதல் அளிக்குமாறு பிரதமரையும் நிதி அமைச்சரையும் எதிர் பார்த்தால், பின்பு அவர்களது வேலையை யார் பார்ப்பார்கள்? மன்மோகன் சிங் ஒன்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் அல்ல, நூறு பேரை நேரடியாக மேய்க்க.

    ReplyDelete
  3. உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்பொழுது பல வேளைகளில்
    தோல்வி ஏற்படுவது இயற்கையே.

    அவர் ஜெயிக்கையிலே அவரைப் பாராட்டுவதும் அவர் தோற்றுவிடின்
    அவரை இகழ்வதும் பண்பா என எனக்குத் தெரியவில்லை.

    அவர் தனது பணியை தொடர்ந்து செய்கிறார். தொடர்ந்து செய்வார்.
    அவருக்கு எது நியாயம், தர்மம் என்று தோன்றுகிறதோ அதை செய்வார்.

    அவர் இருக்கும் மன உறுதி, மன திடம், தன்னை ஒரு கோமாளி என்று பல பேர்
    வர்ணித்தபோதிலும் தான் எதை சரி என்று நினைக்கிறாரோ அந்த வழியில் தொடர்ந்து செய்லபடும் ஸ்டெட்ஃபாஸ்டட் நேசர் உங்களிடமோ என்னிடமோ இல்லையே !!!

    ஒன்று சொல்கிறேன். இந்த சாமியினால் தான் இந்திய மண்ணின் மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்திற்கு
    வந்தது. அதில் யாரார் எப்பப்ப சம்பந்தம் என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

    சிலர் சட்ட நுணுக்கங்களின் உதவியால் தப்பி விடலாம். நியாயம் என்பது அவரவருக்கு ஒரு மனச்சாட்சி
    என்று இருந்தால் அவரவருக்கே தெரியும். தர்மம் என்பது கடைசி. யாராக இருந்தாலும் தவறு செய்தவருக்கு
    தரும தேவதையின் தீர்ப்பு கிடைக்கத்தான் செய்யும்.

    அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.

    சிதம்பரம் தவறு செய்து இருக்கலாம். செய்யாமலும் இருக்கலாம். இப்பொழுதைக்கு, சுவாமி கொடுத்த‌
    விளக்கங்களின் அடிப்படையின் அவரது இன்வால்வ்மென்ட் இல்லையென்று தோன்றுகிறது என்பது தான்
    நீதி மன்ற தீர்ப்பு.

    இருக்கட்டும். எனது பின்னூட்டம் இதற்கும் மேலே.

    சட்டம் என்பது ஒரு கழுதை. அந்த சட்டத்தின் அடிப்படையிலேதான் நீதிமன்றங்களின் தீர்ப்புக்ள் அமைகின்றன.
    பல நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், பல குற்றம் புரிந்தவர்கள் விடுவிக்கப்படுவதையும் கண்கூடாக காண்கிறோம்.
    இதற்கு காரணம் சட்டத்தின் ஓட்டைகள். லூப் ஹோல்ஸ்.

    ஆகவே, நீதிமன்றத்தில் தோற்றவரை கோமாளி என்று தயவு செய்து சொல்லாதீர்கள். பல நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் உயர் நீதிமன்றங்களில் மாற்றப்படுகின்றன. அப்படியானால், முதல் கோர்ட்டில் தீர்ப்பு
    வழங்கியவரை என்ன சொல்வீர்கள் ?

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. நண்பர் சுப்பு, பின்னூடத்திற்கு நன்றி, இந்தக் கட்டுரையில் என்னுடைய கருத்து, சுப்பிரமணியன் சாமி சூழ்நிலைக்கு மாறும் ஒரு பச்சோந்தியும் ஒரு இரட்டை வேடக்காரரும் என்பதே தவிர, அவரது இந்தக் குறிப்பிட்ட முயற்சியில் குறைபாடைக் காணவில்லை. முன்பு ஜெயலலிதாவின் மீது வழக்குகள் தொடர்ந்து அவருக்கு மண்டைக் குடைச்சல் கொடுத்தார். (கருணாநிதி அதில் குளிர் காய்ந்தார்). பின்பு ஜெயலலிதாவுடன் சேர்ந்து சோனியா உதவியுடன் BJP யைக் கவிழ்த்தார். இப்போது அவர் பின்னணியில் BJP உள்ளதாக வதந்திகள். 2G வழக்கில் உண்மையை வெளிப்படுத்துவது இவரது உண்மையான குறிக்கோள் அல்ல என்பது இவரது முன்றைய சரித்திரத்தில் இருந்து எனக்குத் தோன்றுவது.

    ReplyDelete
  5. நிதியமைச்சர் அனைத்து துறைகளிலும் தேர்ந்தெடுக்கும் முறைகளை நிர்ணயிக்கமுடியாது. ஆனால் ஒரு ஆடிட்டர் ஒரு கம்பெனியின் கணக்கு வழக்குகளை சரிபார்ப்பது போலத்தான் நிதியமைச்சகம் மேற்பார்வை பார்க்கவேண்டும்.

    கோர்ட் சொல்லியிருப்பது - 2008ல் 2001ன் விலைக்கு ஆமாம் போட்டது தவிர இவருக்கு ஊழலில் பங்கில்லை... அதுவே பெரிய டுபாக்கூர்தானே.

    ஒரு அரசு இவ்வளவு பெரிய ஊழலை செய்திருப்பதை வெளிக்கொணர்ந்தவர் சுப்ரமணிய சுவாமி. அவர் அடிக்கும் கூத்து எனக்கும் பிடிக்காதுதான். எப்போதும் பிரபலங்களை தாக்கி பெயர் வாங்கப் பார்க்கிறார் என்று நானும் நினைப்பேன். அவரின் பல கோமாளித்தனங்களை இந்தத் தருணத்தில் நினைவு கூர்வது என்னைக் கேட்டால் அனாவசியம்.

    எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்... :-)

    ReplyDelete
  6. தங்களது பின்னூட்ட பதிலைக் கவனித்தேன்.
    ஒருவர் என்ன சொன்னாலும், செய்தாலும் அவரது பழைய கால‌ பின்ன்ணியின் அடிப்படையிலேதான்
    அவரது செயல்களை பார்க்கவேண்டும் என்ற கருத்தில், மன்னிக்கவேண்டும், எனக்கு
    உடன்பாடு இல்லை.

    நீங்கள் சொல்லியவாறு இரட்டை வேடம் என்று நீங்கள் வர்ணிப்பது எல்லாமே அரசியல்வாதிகள்
    எனச் சொல்லித் திரியும் நபர்களில் பலர் செய்வதுதான். யார் இந்த இரட்டை வேடம் போடவில்லை ?
    அந்த நாள் முதல், அதாவது இந்திய மண்ணுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் முதல், இன்று வரை,
    மக்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லிவிட்டு அவர்களை நம்பவைத்து அவர்களிடமிருந்து
    அதிகாரத்தைப் பெற்று அவர்களையே கொள்ளை அடிக்கும் பல அரசியல்வாதிகள் உங்களுக்கு
    இரட்டை வேடதாரிகளாகத் தோன்றவில்லையே !! ஆச்சரியம் தான் !!

    இந்திய மண்ணுக்கு பல ஆயிரம் மைல் தொலைவுக்கு அப்பால் இருந்து இந்திய நிலையை எடை
    போடாதீர்கள். ஒழுங்கான ரோடுகள், தண்ணீர், சுகாதார வசதிகளுக்காக வருடந்தோரும் அரசு எத்துணை
    பணம் செலவழிக்கிறது !! மழை ஒரு சென்டிமீட்டர் அளவு பெய்தபோதிலும் ரோடுகள் சாக்கடைகள் ஆகி,
    சிக் குனியா, டெங், போன்ற வியாதிகள் பரவுகின்றனவே. ரோடுகள் போடும் செலவினங்கள், அவற்றிற்கான‌
    ஒதுக்கப்படும் தொகை ஒழுங்காகத்தான், செலவழிக்கப்படுகின்றனவா ? இந்த ரோடு போடும்
    கான்ட்ராக்டுகளை எடுப்பவர்கள் யார் ?

    ஒரு பத்திரம் ரிஜிஸ்டர் செய்ய, ஒரு கார் லைசன்ஸ் வாங்கக்கூட அன்பளிப்பு என்று கொடுத்தபின்னே தான்
    ஏதும் நடக்கிறது.
    இந்தியாவில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு காரியம் நடக்கிறது என்றால், இங்கு ஓடும் பஸ்களில் டிக்கட்டுகள்
    அதே விலைக்கே தரப்படுகின்றன.
    இந்தியாவில், நிர்வாகத்தின் பல நிலைகளில் லஞ்சம் தலை விரித்தாடுகின்றது. இன்றைய நாளிதளில்
    இஸ்ரோ நிறுவன் த்தலைவர் செய்யப்பட்டதாகச் சொல்ல்லும் ஊழல் வெளிச்சமாகிறது.

    தலை முதல் கால் வரை ஊழல் நிறைந்திருக்கிறது.
    இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே கூட இரட்டை வேடதாரி என்று
    அவர் செயல்களால் பாதிக்கபட இருக்கும் அரசியல்வாதிகள் கூச்சலிட்டார்கள். அவர் அந்த அளவுக்கு
    தனது போராட்டத்தை எடுத்துச் சென்றிராவிடின், லோக் பால் சட்டம் இந்த அளவுக்கு கூட மக்களவையில்
    வந்திருக்காது. மேலவையில் அதை நிறைவேற்ற இயலவில்லையே !! யார் யார் இரட்டை வேடம்
    போடுகிறார்கள் ? ஊன்றிப்பாருங்கள்.

    ஆக், நான் சொல்லுவதெல்லாம் ஒன்று தான்.

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதன்
    மெய்ப்பொருள் காண்பதறிவு.

    எனும் வள்ளுவனின் வாக்குக்கேற்ப, ஒருவர் என்ன சொல்கிறார் என அப்ஜெக்டிவ ஆக‌
    காய்தல், உவத்தல் இன்றி நோக்க நாம் கற்றுக்கொள்வோம்.


    இறுதியில் ஒரு வார்த்தை. இது என் உபரி கருத்து
    ரிச்மென்ட் தமிழ்ச்சங்கம் என்ற பெயரிலே இருக்கும் வலைப்பதிவிலே தமிழ் இலக்கியங்களைப் பற்றி,
    தமிழர் வாழ்வு நெறி தமிழ்ப்புலவர்கள் காட்டும் வழி இவைகளைப்பற்றி நான் எதிர்பார்க்கிறேன்.
    இந்த ஊழல் அரசியலைப்பற்றி எழுதித்தான் தீர வேண்டும் என்றால், வலையின் தலைப்பை
    ரிச்மென்ட் அரட்டை அரங்கம் என்று மாற்றி விடுங்கள். .

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சூரி அல்லது சுப்பு தாத்தா,
      வருகைக்கு நன்றி. உங்க கருத்துல பலதும் எனக்கு பிடிச்சிருந்தாலும், தமிழ் சங்க ப்ளாக்குன்னா அதுல தமிழ் இலக்கியம், தமிழர் வாழ்வு இதெல்லாம் பத்திதான் பேசனும், எழுதனும்னா, திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், ஏன் பெரியாரின் தி.க இதெல்லாம் திராவிடர்களுக்கு (அப்படின்னு ஒரு கும்பல் இருந்ததா வெச்சுண்டாலும்) அவங்களுக்கு என்ன பண்ணிடிச்சு. பாட்டாளி மக்கள் கட்சி பாட்டாளிக்களுக்கு என்ன பண்ணிடிச்சு அப்படின்னு நான் கேக்க ஆரம்பிச்சா இங்க கிறுக்கர ஒருத்தருக்கு நான் பாயிண்ட் எடுத்துக் கொடுக்கறேன்னு, நண்பர் நாகு சொல்லிடுவார். அதனால நோ அரசியல், ஓகே.

      இந்த ப்ளாக்கைப் பாக்க வந்தது வந்துட்டீங்க, எங்க சத்யாவோட பதிவு பலது இருக்கு படிச்சுப் பாருங்க, சதங்கா, கவிநயா கவிதைகள் படிங்க, தமிழ் கொஞ்சும் இவங்க கவிதைல. நாகு, ஜெயகாந்தன், பரதேசி, பித்தன்னு ஒவ்வொருத்தரும் அவங்க பாணில கலக்கியிருக்காங்க. எங்க சங்கத்து ப்ளாக்ல இதுதான் கிடைக்கும்னு ஒரு சின்ன வட்டத்துல நாங்க எழுதாம, எதைப் பத்திவேணாலும் நாங்க எழுதுவோம்னு உங்களுக்குப் புரியும். மனுஷனுக்கு தினம் ஒரே விதமா சாப்பிடவா பிடிக்குது, ஒரு நாள் குழம்பு ரசம் உருளைகிழங்கு கறின்னா, இன்னொரு நாள் அவியல் அப்பளம்னு அடிச்சு நொறுக்கரதில்லையா (நாகு, சும்மா, ஏன் இந்த கொலைவெறின்னு பின்னூட்டம் போடாமா வேற ஏதாவது சொல்லுங்க) அதுமாதிரிதான் எங்க ப்ளாகும்.

      முரளி.

      Delete
  7. சுப்புத் தாத்தா,

    உங்கள் வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்துக்கும் நன்றி.

    நீங்கள் சொல்வது போல யார்தான் இரட்டை வேடம் போடவில்லை? ஒரு சில கட்சிகளைத் தவிர இந்தியாவில் கொள்கை சார்ந்த கட்சிகள் ஏதும் இல்லை. பா.ஜ.க.வுக்கும், இ.காங்கிரஸுக்கும் கொள்கையில் வித்தியாசம் பெரிதாக ஏதும் இல்லை. இந்த நிலையில் அனைவரும் பச்சோந்தி அரசியல் செய்ய வேண்டியதுதான்.

    தமிழ் இலக்கியங்களைப் பற்றி மட்டும்தான் எழுதவேண்டும் என்று உங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால் தமிழ், தமிழர் வாழ்க்கை, நாடு இவற்றை பாதிக்கும் செய்திகள் குறித்து எழுதும் இதுமாதிரி பதிவுகளை நான் வரவேற்கிறேன்.

    நீங்கள் ரிச்மண்ட் குடும்பங்களை சேர்ந்தவராய் இருப்பின், எங்கள் வலைப்பூவில் எழுத விருப்பமா?

    அன்புடன்,

    நாகு.

    ReplyDelete
    Replies
    1. நாகு, சுப்புதாத்தா, ரிச்மண்ட் குடும்பத்தைச் சேராதவராக இருந்தாலும் எழுதலாமே....

      முரளி

      Delete
  8. சத்யா,
    என்னத்தைச் சொல்றது, சுப்ரமணிய சாமியை நீங்க தாக்கரமாதிரி இல்லை இந்தப் பதிவு. அவரோட கேஸ் தோத்ததுல அவர விட ரொம்ப பாதிக்கப் பட்டிருப்பது நீங்கதான் போல இருக்கு.

    அவர் கேஸ் போடாம இருந்திருந்தா அவ்வளவு பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்திருக்காதுன்னு சூரி (அ) சுப்பு தாத்தா சரியாதான் சொல்லிருக்கார்.

    சந்திரசேகர் பத்தியும் தப்பாதான் சொல்லியிருக்கீங்க, அவருக்கு இருந்த தைரியம் வாஜ்பாய்க்குகூட இல்லை, பத்மநாபா கொலை நடந்ததும் டக்குன்னு தமிழகத்துல கவர்னர் ஆட்சியைக் கொண்டு வந்தது அவரோட தைரியம்தான், அதுலேயும் அவருடைய கவர்ன்மெண்ட்டுக்கு மெஜாரிடியும் இல்லை. அவருடைய கவர்ன்மெண்டுக்கு ஆதரவு ராஜீவ் காந்தி, அவர் எப்படி அவரோட ஆதரவ வாபஸ் வாங்கினாருன்னு தெரியுமா? அது கவுண்டமணி செந்தில் காமெடியை விட டாப்பு.

    சரி உங்க கருத்து என்ன, சாமி கேஸ் போடக்கூடாது, அதனால ரொம்ப நல்ல ராஜா, சிதம்பரம் எல்லாம் பாதிக்கப்படராங்க, அன்னா ஹசாரே யாரையும் கேள்வி கேக்கக்கூடாது அதனால, உலக மகா உத்தம இந்திய அரசியல்வாதிங்க பாதிக்கப் படராங்க. சோ யாரையும் பத்தி எதுவும் சொல்லக்கூடாது, ஏன்னா அவர் சொல்றதுனால கருணாநிதிக்கு ப்ரச்சனை. என்ன பண்ணலாம், நாகு அடுத்த மாத தமிழ் சங்க கலந்துரையாடல்ல இதை ஒரு டாபிக்கா வெச்சுண்டு பேசலாமா?

    முரளி

    ReplyDelete
  9. சத்யா,
    சுடச் சுட துக்ளக்ளயிருந்து இந்தத் தலையங்கம்:

    *****************
    இரண்டு தீர்ப்புகள்
    சென்ற வார இறுதியில், 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, மத்திய அரசுக்கு மிகப் பெரிய தோல்வியைக் கொடுத்தது. ஸி.பி.ஐ. கோர்ட் பிறப்பித்த உத்திரவு, மத்திய உள்துறை மந்திரி சிதம்பரத்திற்கும், மத்திய அரசுக்கும் ஒரு தற்காலிக ஆறுதலைக் கொடுத்தது.

    2ஜி லைசென்ஸ்கள் வழங்கப்பட்ட விதத்தைக் கடுமையாகச் சாடிய சுப்ரீம் கோர்ட், ‘இது சட்ட விரோதமானது; தன்னிச்சையானது; முன்னாள் மத்திய மந்திரி ராசா, கடைசி நிமிடத்தில் கூட நடைமுறைகளைத் திடீரென மாற்றி, சில குறிப்பிட்ட கம்பெனிகளுக்கு நன்மை புரிந்தார்’ என்று கூறி, 122 லைசென்ஸ்களை ரத்து செய்தது. ‘ராசா மீது குற்றமே இல்லை’ என்று வாதிட்டுக் கொண்டிருந்த கபில் சிபல், இந்த உத்திரவிற்குப் பிறகு, ‘ராசாதான் தவறு புரிந்தாரே தவிர, பிரதமர் மீது எந்தத் தவறும் இல்லை’ என்று பேச ஆரம்பித்து விட்டார்.

    அதாவது, சிக்கிக் கொண்டது ராசா மட்டும்தான் என்ற நிலை வருமானால், மத்திய அரசு நிம்மதியுறும்.
    ‘ராசாவுக்கு மேல் இந்த விவகாரம் போனால், யார் யார் சிக்குவார்களோ’ என்ற பயம் மத்திய அரசை இன்னமும் வாட்டுகிறது. அதனால்தான், ‘சிதம்பரத்தையும் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என்ற சுப்ரமண்யம் ஸ்வாமியின் மனுவை ஸி.பி.ஐ. கோர்ட் தள்ளுபடி செய்ததை, இவ்விவகாரத்தில் வந்து விட்ட இறுதித் தீர்ப்புமாதிரி காங்கிரஸ் மந்திரிகள் சித்தரிக்கிறார்கள்.

    சுப்ரமண்யம் ஸ்வாமி, ஸி.பி.ஐ. கோர்ட்டின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார். அவர் எதையும் லேசில் விட்டு விடுகிற குணம் படைத்தவர் அல்ல. ஆகையால், அவருடைய யுத்தம் தொடர்கிறது.

    சொல்லப் போனால், அவர் நடத்துவது, அவருடைய யுத்தம் அல்ல. மக்களுக்கும், அரசுக்கும் இடையே நடக்கிற யுத்தத்தில், அவர் மக்கள் தரப்பில் நின்று போராடுகிறார்.

    ஸி.பி.ஐ. கோர்ட்டில் மக்கள் தரப்பு பின்னடைவைச் சந்தித்தாலும், சுப்ரீம் கோர்ட்டில் மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருக்கிறது. அரசுக்கு எதிராகவும், அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும், இந்த மாதிரி ஒரு தீர்ப்பு வந்ததில்லை என்று சொல்கிற அளவுக்கு, இவ்விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

    மிகப் பெரிய மோசடி நடந்திருக்கிறது என்றும், அதை ராசா முன்னின்று நடத்தியிருக்கிறார் என்றும் சுப்ரீம் கோர்ட்டே கூறிய பிறகும், ராசாவிற்கு இனி யாரும் – தி.மு.க.வைத் தவிர – பரிந்து பேசத் தயங்குவார்கள்.

    ஆனால், இது ராசாவுடன் நிற்க வேண்டிய விஷயம் அல்ல. மற்றவர்களும் சிக்கினால்தான், 2ஜி வழக்கில் மக்கள் தரப்பிற்கு முழு நியாயம் கிடைத்ததாகும்.

    அதற்குத்தான் ஸ்வாமி முயன்று கொண்டிருக்கிறார். மற்ற சிலரின் உண்ணாவிரதங்களை விட, அவருடைய ‘சலியா விரதம்’ சக்தி வாய்ந்தது. அவர் தன் முயற்சியில் வெற்றி பெற்றால், அது ஊழல் எதிர்ப்பிற்கு வலிமை சேர்க்கும்.

    ராசாவுடன் இந்த விவகாரம் முடிக்கப்பட்டால், அது மக்கள் தரப்பிற்கு வெற்றி அல்ல; ஆறுதல் – அவ்வளவுதான்.

    ராசாவைத் தாண்டி இந்த விவகாரம் செல்லாமல் இருப்பதற்கு, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புப் பயன்பட்டால், அது ‘நீதியின் வக்கிரம்’ ஆகிவிடும்.

    ****************
    முரளி.

    ReplyDelete
  10. முரளி - 2G விஷயத்தில் எனக்கு நுனிப்புல் மட்டுமே தெரியும், அதனால் இதில் சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் இவர்களின் பங்கை என்னால் எடை போட முடியவில்லை. என் ஊகத்தில், இவர்களது தவறு ராஜாவைக் கவனிக்காமல் விட்ட முட்டாள் தனமாக இருக்க மட்டுமே முடியும் என்பது. என்னுடைய கட்டுரையின் உட்கருத்து இவையே.

    1 . (IMO) சுப்பிரமணிய சாமி வாடகைக்கு ஏவப் படும் (வெல்டிங் குமார் போல) ஒரு லோக்கல் ரவுடியைப் போன்றவர். பணத்துக்காக செய்வார் என்று கூறவில்லை, புகழுக்காகவோ அல்லது ஒரு தற்காலிக ஆதாயதுக்காகவோ சிலருக்கு அடிமை வேலை பார்க்கும் ஒரு கதா பாத்திரம். ஏன் சிதம்பரம் மட்டும்? மன்மோஹனையும் இழுக்க வேண்டியதுதானே? ஊழலை வெளிப்படுத்துவது இல்லாத ஒரு தனிப்பட்ட குறிக்கோளையும் இதில் நான் காண்கிறேன்.
    2 . 2G ஊழலையும், அதில் ராஜாவின் பங்கையும், பல பேரின் தவறையும் நான் மறுக்கவோ, அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்கவோ இல்லை.
    3 . ஒவ்வொரு காபினட் அமைச்சரின் தவறுக்கும் நிதி அமைச்சரையும் பிரதமரையும் இழுக்க ஆரம்பித்தால், நம் ஆட்சி அமைப்பின் அடிப்படை அமைப்பே குலைந்து விடும். அவர்கள் முட்டாளாக இருந்தால் அவர்களை மக்கள் அடுத்த தேர்தலில் தண்டிக்க வேண்டும்.
    4 . சிதம்பரமும் மன்மோஹனும் கிரிமினல் குற்றம் பதிவு செய்யும் அளவுக்கு எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது என் கருத்து. ஊரை அடித்து உலையில் போட்ட ஈனப் பிறவிகள் பலரைப் பிரதமராக முயற்சி செய்யும் இந்த நாட்டில், இவர்களைப் போன்றவர்களாவது இது போலப் பதவிகளில் இருப்பது இன்னும் நம் பாக்கியம்.

    கிரிமினல் குற்றங்கள் செய்து அதில் இருந்து காசையும் சட்ட ஓட்டைகளையும் வைத்துத் தப்பித்து விட்டு இன்னும் முதலமைச்சர்களாக இருக்க முடியும் கேவல ஜனநாயகம். இதில் ஜேயும் உண்டு, KK -யும் உண்டு, விதி விலக்கு இல்லை.

    ReplyDelete
  11. சத்யா,
    இது பத்தி நாம கண்டிப்பா விவாதம் பண்ணுவோம். ஏன்னா உங்களோட இந்திய அரசியல் மற்றும் அரசாங்க பார்வை ஒரு மாதிரி தனியாத்தான் இருக்கு. மன்மோகன் சிங்குக்கு எந்த பவரும் இல்லைன்னு அவரோட வீட்டு வேலைக்காரனுக்குகூடத் தெரியும், அதனால அவரை இழுத்து ஒரு மண்ணும் நடக்கப் போறதில்லைன்னு சாமிக்குத் தெரியாமலா இருக்கும். நிதி அமைச்சர் அனுமதிக்காம இப்படி ஒரு விஷயம் நடந்திருக்க வாய்ப்பில்லைன்னு தெளிவா பல சமயங்கள்ள சொல்லியிருக்காங்க. சொன்னா உங்களுக்கு கோபம் வரும், ஆனாலும் சொல்றேன், கருணாநிதிக்கு விஞ்ஞான ரீதியா ஊழல் செஞ்சிருக்காருன்னு சர்காரியா கமிஷன்ல விலாவரியா சொல்லியிருந்தாலும், அவர் மேல கேஸ் போட ஆதாரம் இல்லைன்னு இன்னிவரைக்கும் அவர் வெளியில சுதந்திரமா இருக்கார் அதனால அவர் நீங்க சொல்ற மாதிரி 'குற்றமற்றவ்ர்' நு சொன்னா வடிவேலு ஒரு படத்தில சொல்ற மாதிரி 'இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டு இருக்கு' ந்னு சொல்லி சொல்லி சிரிப்பாரு.

    சாமிக்கு இப்படி பண்றதினால என்ன பலனிருக்கும்னு எனக்கு தெரியலை, அவர் ஆக்ஸ்ஃபோர்ட்ல பேராசிரியரா இருந்தவர், (இன்னமும் இருக்காரான்னு தெரியலை), நல்ல காசு உள்ள ஆளு, ரொம்ப படிச்சவர் (மன்மோகனும் படிச்சவர்தான்), புத்திசாலி, தைரியசாலி இப்படி பலது இருக்கு இவர்கிட்ட அதனால இவர் ஏதோ பர்சனல் ஆதாயத்துக்காக பண்றாருன்னு என்னால நம்ப முடியலை.

    சிதம்பரமும், மன்மோகனும் இதை தடுத்திருக்க முடியும், அப்படி பண்ணலைன்னு நல்லாத் தெரியுது அப்படியும் அவங்களை இழுக்கக் கூடாதுன்னா அப்படி அவங்களுக்கு வெட்டி முறிக்கர வேலை என்ன இருக்குன்னு எனக்கு தெரியலை. இது ஆட்சி அமைப்பு குலையும்னு நீங்க சொல்றது, 'சின்ன புள்ள தனமாத்தான்' இருக்கு.

    ஒரு திருக்குறள் -
    செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமையானும் கெடும். இதப் பத்தி தெளிவா புரிஞ்சுகிட்டீங்கன்னா, உங்க பல பாயிண்டுக்கு இது பதிலா இருக்கும்ன்னு நினைக்கரேன்.

    மஹாபாரதத்தில துரியோதனனோட அப்பா திருதராஷ்டிரன் இருக்கானே அவனோட அடுத்தப் பதிவு மன்மோகங்கரது என்னோட கருத்து. யார் எப்படி போனாலும் பரவாயில்லை, எனக்கு நாற்காலி வேணும்னு உக்கார்ந்தின்டிருக்காரு இவரை என்ன சொல்றது, அதுக்கு தடாலடியா ஒரு ஆள் வந்தாலும் தப்பே இல்லை. இதுல சிதம்ப்ரம், மன்மோகன் பதவில இருக்கரது பாக்கியம்ன்னா எங்க போய் அடிச்சுக்கரது சொல்லுங்க.

    கண்டிப்பா அடுத்த வாட்டி பாக்கரப்போ இதப் பத்தி பேசலாம்.

    முரளி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!