Wednesday, February 23, 2011

தமிழ் தாத்தா உ .வே. சா. - வறுமையிலும் செம்மை (பகுதி 2)

(உ.வே.சா. பகுதி 1 இங்கே... )

மகன் சாமிநாதய்யரின்  வற்புறுத்தல் காரணமாக தந்தையார் தன் மகனை தமிழ் படிக்க அனுமதித்தாரே  தவிர அவருக்கும் அதில் பூரண சம்மதம் இல்லை. ஆங்கில படிப்பு படிக்க வைத்து அரசாங்க உத்தியோகத்துக்கு மகனை அனுப்பினால் குடும்பம் வயிறாரச் சாப்பிடலாம் என்று எண்ணினார். அந்த நிலையில்தான் தன் மகனை அரை மனதோடு தமிழ் படிக்க அனுமதித்தார்.

ஐயரின் தந்தையார் வேங்கடசுப்பையர் பலருடைய உதவியில் வாழ்ந்து கொண்டிருந்தார். நிலையான வருமானம் இல்லை. குடும்பத்துக் கடனை அடைக்க என்றோ தானமாக வந்த நிலத்தை ஈடு வைத்துத்தான் அவருடைய சீமந்த கல்யாணம் நடந்தது. அந்த கடன் ரூபாய் 500 ரூபாயை வட்டியுடன் சேர்த்து 730 ரூபாயாக பல வருடங்களுக்கு பிறகு சாமிநாதய்யர்தான் அடைத்தார். அந்த அளவுக்கு கைக்கும் வாய்க்குமாகத்தான் அவருடைய பெற்றோர்கள் வாழ்ந்து  வந்தார்கள்.

ஆகையால் ஆர்வம் காரணமாக தமிழ்க்கல்வி தொடங்கினாலும் அதற்காக அதிக செலவு செய்ய வழியில்லை . ஐயருடைய தந்தையாருக்கு நன்கு தெரிந்த சடகோபய்யங்கார் தமிழ் கற்பிக்க முன்வந்தார். அரியலூர் சடகோபய்யங்கார் நல்ல தமிழறிஞர். பல நாடகங்களை எழுதியிருக்கிறார். அவருடைய குடும்பத்தில் பல முன்னோர்களும் தமிழையும் வடமொழியையும் நன்கு கற்றவர்கள். அவர் எழுதிய சிவராத்திரி மகாத்மியம் என்ற நாடகம் அந்த நாட்களில் பல முறை மேடை ஏற்றப்பட்டது. . வைணவரனாலும் சமய சமரச நோக்கம் கொண்டவர்.

சாமிநாதய்யர் சில வருடங்கள் சடகோப ஐயங்காரிடம் தமிழ் கற்றார். ஐயரின் ஆர்வத்தையும் எளிதில் படித்தறியும் ஞானத்தையும் கண்டு வியந்து அவரை மேலும் பெரிய தமிழறிஞர்களிடம் சென்று தமிழ் கற்க கூறினார். அவர்.  அவருடைய முயற்சியில் அன்று பிரபலமாக இருந்த தமிழ் அறிஞரான திரிசரபுர மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் அனுப்பி வைத்தார்.

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி கற்பது என்பது அன்றைய நிலையில் ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றதற்கு சமம் என்று கூறுவார்கள் அந்த பெருமை  சாமிநாதய்யருக்கு கிடைத்தது. ஐயர் பிள்ளையவர்களுடன்  தங்கி இருந்து பாடம் கற்க வேண்டும் என்று ஏற்பாடாகி இருந்தது.
    
பிள்ளையவர்கள் அடிக்கடி திருவாவடுதுறை ஆதினத்து மடங்களுக்கு செல்வார். சென்ற இடத்தில் பல நாள் தங்குவார் சாமிநாதய்யரும் அவருடன் சென்று தங்கி பாடம் கேட்பார்.

எல்லா பாடங்களும் சுவடிகளைக்கொண்டுதான். பிள்ளை அவர்களுக்கு பல புராணங்கள் மனப்பாடமாகத் தெரியும், அவரே இருபது தலபுராணங்களை இயற்றியிருக்கிறார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் வறுமையில் வாழ்ந்தவர்தான்.  சைவமடங்கள் கொடுத்த பொருளுதவியைக் கொண்டுதான் அவர் வாழ்ந்தார்.

பல மாதங்கள் பிள்ளை மாயவரத்தில் தங்கி இருந்தார். சாமிநாதய்யரும் அவரோடு தங்கி தமிழ் படித்து வந்தார். அன்றைய குல ஆச்சாரப்படிசாமிநாதய்யருக்கு பிராமணர் ஒருவர் வீட்டிலிருந்து உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பாத்துரை என்ற அந்த பிராமணருக்கு மடத்திலிருந்து அரிசி முதலிய பொருட்களை கொடுக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் என்ன காரணத்திலோ மடத்திலிருந்து அரிசி மற்ற மளிகைப் பொருட்கள் அப்பாத்துரை ஐயர் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. 

சில மாதங்களுக்குப் பிறகு ஐயர் பிள்ளையவர்களுடன் வேறு ஊருக்கு புறப்படவேன்டியதாயிற்று. தான் உணவு சாப்பிட்ட வீட்டிற்கு எந்த கைம்மாறும் செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு அவரை உறுத்தியது. அப்பாத்துரை ஐயரை நேரில் பார்த்து மடம் கொடுக்க ஒப்புக்கொண்ட அரிசி மற்ற மளிகைப்பொருளை பெற்றுத் தருவது பற்றி பேசினார். சாமிநாதய்யர்  தான் ஊருக்கு செல்வதற்கு முன் எதுவும் நடக்கப்போவதில்லை என்று உணர்ந்தார்.அந்த நாட்களில் உள்ளாடை அணிவதற்காக ஆண்கள் இடையைச் சுற்றி அணியும் ஒரு கயிறு.  பிராமணசிறுவர்களுக்கு உபநயன நாளில் வெள்ளியால் செய்த இந்த கயிற்றை மாமன் சீராகக் கொடுப்பது வழக்கம். தன் இடையில் கட்டியிருந்த வெள்ளி அரைஞான் கயிற்றை கழற்றி அப்பாத்துரை ஐயரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு தனக்கு சில மாதம் உணவு அளித்ததற்கு மாறாக அதை விற்று பணத்தை எடுத்தக் கொள்ளும்படி வேண்டினார்.

ஆனால் அப்பாத்துரை ஐயர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். "எனக்கு அந்த அளவுக்கு பணம் முக்கியம் இல்லை. நீ ஊருக்குப் போய் உன் தமிழ்ப் படிப்பை தொடர்ந்து படித்து முன்னேறினால் போதும்", என்று பெரிய மனதோடு வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். பிற்காலத்தில் அப்பாத்துரை ஐயர் குடும்பத்திற்கு ஐயர் சில உதவிகளை நன்றியுணர்வோடு செய்தார்.

கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் பொறுப்பை ஏற்ற பிறகு நேரம் கிடைத்தபோதெல்லாம் சுவடிகளை தேடி பல ஊர்களுக்கு போனார். சுவடி தேடி அவர் செய்த பயணத்தில் அவருடைய கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லலாம்.

பழங்காலத்தில்  புலவர்கள் வாழ்ந்த சிற்றூர்கள், ஜமீன்தார்கள் இல்லங்கள், இப்படியாக பல ஊர்களுக்கு போனார். மருத்துவம் செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள், புலவர்களின் சந்ததியினர், இப்படி பலதரப்பட்ட மக்களை சந்தித்தார். பலர் செய்த உதவியைக் கொண்டு பல ஆயிரக்கணக்கான சுவடிகளைச்  சேகரித்தார்.

மருத்துவம், சோதிடம் தொடர்பு உடைய நூல்கள் உள்ளிட்ட பல்துறை சார்ந்த சுவடிகள் அவருக்கு கிடைத்தன. தலபுராணம், சமயம் சார்ந்த பல நூல்கள், இலக்கியங்கள் ஆகியவை அதிகமாகக் கிடைத்தன. சீவகசிந்தாமணி என்ற சமண சமய இலக்கியத்தை இருபது இடங்களிலிருந்து கிடைத்த பல பிரதிகளை ஒப்பிட்டு அச்சில் ஏற்றி புத்தகமாக வெளியிட்டார்.

அந்த நாட்களில் பெரிய புத்தகத்தை அச்சிட்டு வெளியிட தகுந்த அச்சகங்கள் சென்னையில்தான் இருந்தன.ஆகையால் புத்தகம் அச்சாகும் வேலையை கவனிக்கவும் புருப்  படித்து திருத்தி கொடுக்கவும் ஐயர் அடிக்கடி கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வர வேண்டியதாயிற்று. சீவகசிந்தாமணி என்ற நூலை அச்சிட பல தமிழன்பர்களின் உதவியை நாடினார். சில பேரிடமிருந்து மட்டுமே உதவி கிடைத்தது. ஒரு கட்டத்தில் அச்சாகி பிரஸ்ஸில் இருந்த புத்தகத்தை எடுக்கவேண்டியிருந்தது. அச்சகத்துக்கு அச்சுக்கூலி கொடுக்க சாமிநாத அய்யரிடம் பணம் இல்லை. இதுபோன்ற நேரங்களில் அவர் கடன் வாங்கி சமாளிப்பது வழக்கம். ஏற்கனவே கடன் சுமை அதிகமாகிவிட்டது.. அச்சுக்கூலியைக்கொடுத்து புத்தகத்தை எடுத்து வெளியிட அவருக்கு வேறு வழி தெரியவில்லை. ஆழ்ந்த யோசனைக்கு பிறகு தனக்கு  பாண்டித்துரை தேவர் கௌரவிக்கும் வகையில் போர்த்திய பொன்னாடை பற்றிய நினைவு வந்தது.

விலை உயர்ந்த பொன்னாடை அது. அந்த பொன்னாடையை எடுத்துக்கொண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்த சுப்ரமணிய தேசிகரிடம் காட்டி இது என்ன விலைக்கு போகும் என்று கேட்டார். அதிர்ச்சி அடைந்த தேசிகர் ஏன் இதை விற்கப் போகிறீர்களா?இது தேவர் போர்த்திய பொன்னாடை அல்லவா என்று கேட்டார். எனக்கு வேறு வழி தெரியவில்லை அச்சகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து வெளியிட வேண்டும் என்று ஐயர் கூறினார். நீங்கள் இதை விற்ற செய்தி தேவருக்கு தெரிந்தால் அவர் மிகுந்த வேதனை படுவார்  என்று கூறினார் ஆதீனகர்த்தா. அந்த பொன்னாடையை விற்கவிடாமல் தடுத்து ஆதீனகர்த்தா தானே வாங்கி வைத்துக் கொண்டார். தற்காலிகமாக அய்யருக்கு பண உதவி செய்து நூல் வெளியிட ஏற்பாடு  செய்தார்.

இப்படி பல சோதனைகளுக்குமிடையே தான் அய்யர் தமிழ் நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்த பழந்தமிழ் நூல்களை அச்சில் ஏற்றி புத்தகமாக வெளிக்கொணர்ந்தார்,. .மிகப்பிற்காலத்தில்தான் சாமிநாதய்யருடைய பணிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம்.

வெளிநாட்டில் வாழ்ந்த சில தமிழறிஞர்கள் அய்யரின் அரிய பணியை பாராட்டினார்கள். ஜூலியஸ் வின்சோன் என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஐயர்  பதிப்பித்த நூல்களைப் படித்துவிட்டு அவருக்கு ஒரு நீண்ட பாராட்டு கடிதம் எழுதினார். திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ஜி..யு. போப் அவர்களும் அய்யரைத் தொடர்பு கொண்டு பாராட்டு கடிதம் எழுதினார்.

சாமிநாதய்யருடைய பணியின் சிறப்பையும் அந்த பணியை நிறைவேற்றுவதில் அவர் சந்தித்த சோதனைகளையும் பற்றி பாரதியார் நன்கு அறிந்திருந்தார். அய்யருடைய தமிழ்ப்பணியின் பெருமையை வெள்ளையர் அரசாங்கம் உணர்ந்து அவருக்கு டாக்டர் பட்டமும் மற்ற சில விருதுகளும் வழங்கியது. ஆனால் அவர் எப்பொழுதும் நிதி நெருக்கடியில் இருந்ததையும் பாரதியார் அறிந்திருந்தார். சாமிநாதய்யருடைய பெருமையை பாரதியார் இப்படி பாடினார்.

சாமிநாதய்யருடைய புகழ் வளர்ந்ததில் அதிசயம் ஏதும் இல்லை. சூரியனுக்கு ஒளிஇருப்பது அதன் இயற்கை. தேவர்கள் அமரத்வம் பெற்றது இயல்பானதுதான், இதில் அதிசயப்பட எதுவும்.இல்லை. அதுபோலவே சாமிநாதய்யருக்கு புகழ் வளர்வதும் இயல்பானதுதான் என்று பாரதியார் பாடினார். தமிழறியாத அன்னியரான வெள்ளையரே இப்படி ஐயரை புகழ்ந்தார்கள் என்றால் சங்கம் வைத்து தமிழ்  வளர்த்த பாண்டிய மன்னர் காலத்தில் ஐயர் வாழ்ந்திருந்தால் அவருடைய பெருமை எப்படி இருந்திருக்கும் என்று பாரதி கேட்கிறார்.

மேலும் ஐயருக்கு ஆறுதல் கூறுவதுபோல அடுத்த கவிதையில் கூறுகிறார். பணம் இல்லையே, பலவகை சுகங்களை அனுபவிக்கும் இனிய வாழ்க்கை அமையவில்லையே என்று கவலை வேண்டாம் ஐயரே. உங்களுக்கு ஒரு பெருமை உண்டு. பொதியமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் கொடுத்த தமிழ் மொழி உள்ளவரை புலவர்கள் வாய் உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும். உங்களுக்கு இறப்பு என்பதே இல்லை.என்று பாரதியார் பாடுகிறார். இப்பொழுது பாரதியார் பாட்டை பார்ப்போம்.

 நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம்  என்று மனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றி துலங்குவாயே.

                                                                            - மு.கோபாலகிருஷ்ணன்
(உ.வே.சா. பகுதி 1 இங்கே... )

6 comments:

  1. தமிழ்தாத்தாவைப்பற்றிய பதிவில் தலைப்பே பிழையாக எழுதப்பட்டிருக்கிற்து ரிச்மண்ட் தமிழ் சங்கம் என்று.

    ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம் என்றுதானே எழுதவேண்டும் ?

    ReplyDelete
  2. அருமையான பதிவு. உங்களால் எப்படி இவ்வளவு செய்திகளை திரட்டுவது மட்டும் இல்லாமல் அதை சுவையாகவும் தரமுடிகிறது என்பது எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யம்.

    முரளி.

    ReplyDelete
  3. உ.வே.சா.வின் வறுமையையும் அவர் ஆற்றிய அருந்தொண்டையும் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். அதுவும் பாரதி பாட்டில் முடித்தவிதமும் மிக அருமை. உ.வே.சா. தொடருக்கு பெரும் நன்றி.

    ReplyDelete
  4. கிளம்பிட்டாய்ங்கய்யா, கிளம்பிட்டாய்ங்க...

    வாங்க ஞங்கள் கேரளம், பிழைகள் எல்லாம் போகட்டும், கொஞ்சம் நிறைகளையும் பார்க்கலாமே.

    குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தால் முடியவே முடியாது. தமிழிலேயே பெயர் வைத்துக் கொள்ளாமல் (ஞங்கள்?) எங்களைக் குறை கூற வந்து விட்டீரோ? ;-)

    ReplyDelete
  5. //பொதியமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் கொடுத்த தமிழ் மொழி உள்ளவரை புலவர்கள் வாய் உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும். உங்களுக்கு இறப்பு என்பதே இல்லை.என்று பாரதியார் பாடுகிறார்.//

    எவ்வளவு உண்மை. அருமையாகத் தந்த பதிவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய மு. கோ ஐயா,

    மிகத்தாமதமாக வந்து பதிவிடுவதற்கு என்னை மன்னிக்கவும். அதிவேகமான சம்சார சுழலில் மாட்டிக்கொண்டதன் விளைவு. :-)

    வெகு அருமையான பதிவு. பாரதியின் பாடலை முத்தாய்ப்பாய் வைத்து நீங்கள் தமிழ் தாத்தா உ.வே.சா. பற்றி கூறிய எல்லா விஷயங்களையும் மிகவும் ரசித்து படித்தேன். உங்களது அனைத்து பதிவுகளுமே ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் ப்ளாக் தளத்திற்கு பெருமை சேர்க்கிறது. நீங்கள் மேலும் மேலும் நிறைய எழுதி இங்கு பதிவிட எனது வேண்டுகோள்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!