Thursday, October 08, 2009

மீனாவுடன் மிக்சர் - 12 {ஊத்தப்பமும் ஊத்தெடுக்கும் சமூக உணர்வும்}

ஒரு வழியா நவராத்திரி சுண்டல் சாப்பிட்ட அஜீரணம் போய் இப்ப தான் மிக்சர் பக்கம் வர முடிஞ்சது. நான் எட்டிப்பார்க்காத இந்த சில வாரங்களில் ஏதோதோ அருமையான பதிவுகளெல்லாம் வந்திருக்கு தமிழ் சங்கத்துல. அதெல்லாம் படிக்கறத்துக்கு முன்னாடி என்னை அதிசயத்தில் ஆழ்த்தும் எங்க ஊர் தமிழ் பெண்களின் சமூக உணர்வைப் பத்தி உங்க கிட்ட சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்.

சென்னையில் ஒரு பத்து பெண்கள் பொது இடத்தில் கூடும் போது இப்படி பேசித்தான் நீங்க கேட்டிருப்பீங்க - "போத்தீஸ்ல இப்போ ஆடி தள்ளுபடி நடக்குதாம். நீ போக போறியா?", "தங்க மாளிகையில் இந்த வாரம் ஆர்டர் குடுத்தால் கூலி சேதாரமே கிடையாதாம். டீவியில் ஒன்பது மணி செய்தி வாசிக்கற பத்மஜா போட்டுக்கற மாதிரி கழுத்தை ஒட்டி மாங்காய் மாலை இன்னிக்கு போய் ஆர்டர் பண்ண போறேன். நீயும் வரியா?" மற்றும் "நேத்தி கோலங்கள் சீரியல் பாத்தியா? இப்படி கூட ஒரு அநியாயம் நடக்குமா? பாவம் இந்த அபியும் தொல்காப்பியனும்". இதெல்லாம் சகஜமா கோவில், கல்யாணம் போன்ற பொது இடங்களில் நம்ம காதில் விழும் சுவாரசியமான பேச்சுகள்.

எங்க ஊர் ரிச்மணட் தமிழ் பெண்கள் எங்கேயாவது கூடினால் பேச்சு கொஞ்சம் வித்யாசமாக போகும். "புளியோதரை நாலு கப்பா அஞ்சு கப்பா?", "கேசரியா சர்க்கரை பொங்கலா?", "பத்து பவுண்ட் வெங்காயம் வெட்ட முடியுமா இல்லேன்னா ஆறு கட்டு கொத்தமல்லி நறுக்க முடியுமா?" இந்த ரேஞ்சுல தான் எல்லோரும் பேசுவாங்க. என்னடா எல்லாமே சாப்பாட்டு விஷயமா இருக்கேன்னு யோசனை பண்ணறீங்களா? சாப்பாடு தான் எங்களுக்கு ரெண்டாவது மதம். சர்டிபிகேட் இல்லாத சமையல் கலை வல்லுனர்களான எங்க ஊர் பெண்கள் சமூக உணர்வு அதிகம் உள்ளவங்க. வீட்டில் சமைப்பாங்களோ மாட்டாங்களோ, சமூக நிகழ்ச்சிகளுக்கு அசராமல் அண்டா அண்டாவா சமைப்பாங்க. கோவிலில் சஷ்டியா? பெருமாளுக்கு கல்யாணமா? தோழியின் பெண்ணோட அரங்கேற்றமா? எடு பேப்பரையும் பென்சிலையும். விறுவிறுன்னு மெனு போடுவதும், போன் மேல் போன் போட்டு ஆட்கள் திரட்டி இரு நூறு அல்லது முன்னூறு பேருக்கு சமைப்பதும் எங்க ஊர் பெண்களுக்கு காலை காப்பி கலப்பது போல அல்வா வேலை. இவர்களின் இந்த திறமையை எப்படி மிஞ்சுவதுன்னு அடுத்த ஊர்க்காரங்க ரூம் போட்டு யோசிப்பதா கேள்விப்பட்டேன்.

உதாரணத்துக்கு இந்த வாரக்கடைசியில் எங்க ஊரில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்து கோவிலுக்கு நிதி திரட்டும் ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்க இருக்கு. கல்யாண சத்திரம் போல் உள்ள பெரிய ஹாலில் பல குட்டி கடைகள் போட்டு இட்டிலியிலிருந்து கச்சோரி வரைக்கும் சுட சுட உணவு வகைகளை பரப்பி, ஜொள்ளு விட்டுக் கொண்டு வரும் அமெரிக்கர்களுக்கு விற்று (கோவிலுக்கு நிதி திரட்டி) இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் இது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு புகழ் பெற்ற நிகழ்ச்சி. இதில் நம்ம தமிழ் மக்கள் நடத்தப்போகும் கடை ஊத்தப்பம்/குழிப்பணியாரம்/இட்டிலி கடை. கடந்த பத்து நாட்களாகவே இதுக்கு ரெடியாக எங்கூர் பெண்கள் மும்முரமா வேலை செஞ்சுட்டு வராங்க. ரெண்டு நாள் முன்னாடி பால் வாங்க கடைக்கு போனேன். காய்கறி செக்ஷன் பக்கம் நாலு பெண்கள் நிற்பதும் அதில் ஒரு பெண் பேசுவதும் காதுல விழுந்தது. "நீ காரட், நான் குடைமிளகாய், ரமா வெங்காயம், உமா கொத்தமல்லி. எல்லோரும் ரெண்டு மூட்டை வாங்கிட்டு போய் வெட்ட ஆரம்பிக்கலாம். ஊத்தப்பம் பூத்துக்கு டான்னு பதினொரு மணிக்கெல்லாம் வந்திருங்க." மாங்கு மாங்குன்னு கை வலிக்க காய் வெட்டி, கால் கடுக்க ஊத்தப்பம் ஊத்திட்டு இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் Taco Bell லில் சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க. எப்பேர்ப்பட்ட ஒரு தியாகம்! என்ன ஒரு சமூக உணர்வு!

எங்க ஊருக்கு வர்றதா இருந்தீங்கன்னா இதெல்லாம் கேட்டு பயந்து போய் டிக்கெட்டை ரத்து செஞ்சுராதீங்க. சமூக சேவை மாதிரியே விருந்தோம்பலிலும் எங்க பெண்களை மிஞ்சவே ஆள் கிடையாது. உதாரணத்துக்கு புதுசா ஊருக்கு ஒரு தமிழ் குடும்பம் வந்திருப்பது தெரிஞ்சால் எங்க வரவேற்ப்பு குழு உடனே போய் அவங்களை பார்த்து பேசி வரவேற்று அப்படியே சில பல முக்கிய விஷயங்களை தெரிந்து கொண்டு வருவாங்க. அந்த வீட்டு பெண்ணிடம் எத்தனை பெரிய குக்கர் இருக்கு, மூணு தோசையாவது வார்க்க கூடிய மாதிரி பெரிய தோசைக்கல் இருக்கா, ஒரு எழுபத்தைந்து பேருக்காவது சாம்பார் வைக்க தோதான பாத்திரம் இருக்கா - இது போல அத்தியாவசியமான விஷயங்களை தெரிந்து கொண்டு, இதெல்லாம் இருந்தால் மிகப் பெரிய வரவேற்ப்பு கொடுத்து விட்டு வருவாங்க. இப்ப சொல்லுங்க. எப்ப வரீங்க எங்க ஊருக்கு?

நீங்க புதுசா கல்யாணம் ஆனவரா? உங்க மனைவி செய்யும் சமையல் அவங்க அளவுக்கு அம்சமா இல்லையா? வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் ரசவாங்கியும் கனவா போச்சேன்னு கவலைப்படரீங்களா? டேக் இட் ஈசி. எங்க ஊருக்கு டிக்கெட் வாங்கி அனுப்பி வையுங்க. ஒரே மாசம் தான். கல்யாண சமையலுக்கே கான்ட்ராக்ட் எடுக்க தயாராகிடுவாங்க உங்க மனைவி.

தூக்கத்தில் கூட இல்லாத கரண்டியை பிடித்து ஐந்நூறு மைசூர்பாக் கிண்டும் ரிச்மணட் தமிழ் பெண்களின் தன்னலமற்ற சமூக உணர்வு நாலு பேருக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம்னு நினைச்சு தான் உங்க கிட்ட சொன்னேன். சரி தானே?

17 comments:

  1. நம்ம ஊருக்கு வர்றவங்கள பயமுறுத்தற மாதிரி இருக்கறமாதிரி இருக்கு...

    அப்படியும் ரிச்மண்ட் மகாத்மியம் நல்லாவே சொல்லியிருக்கீங்க... விருந்தோம்பலிலும், சமூக ஒற்றுமையிலும் ரிச்மண்டுக்கு இணை ரிச்மண்ட்தான்.

    எல்லோரும் வந்து ஊத்தப்பம் சாப்பிட்டு போங்க. அப்படியே எலும்பு மஞ்சை தானம் செய்ய பதியவும் வேணும்.

    ReplyDelete
  2. I recommand Meena for Nobel prize for literature. ( Is there is a category like that).

    ReplyDelete
  3. மீனா,

    என்னது இந்தியா சந்தை (அதாங்க இந்தியா பஜார் (அ) பெஸ்டிவல் ஆஃப் இந்தியா) சில வருஷமா நடக்குதா, 27 வருஷமா நடக்குதுங்க. நடக்கும் நடன நிகழ்ச்சிகளில் எனக்கு ரொம்ப பிடிச்சது சீக்கிய மாணவர்கள் ஆடும் நடனம். அவர்களது துடிப்பு, வேகம், அப்பப்பா சூப்பர்.

    ஆமா அடுத்த தமிழ் சங்க விழாவில யாராவது ஒரு உள்ளூர்/வெளியூர் ப்ரபலத்தை பேட்டி காணும் யோசனை இருக்கா? காஃபி வித் அனு மாதிரி மீனாவுடன் மிக்சர்ன்னு சொன்னீங்களே அதுக்காக கேட்டேன்.

    அதுக்காக ரொம்ப சிரமப் படாதீங்க, முடிஞ்சா செய்ங்க, உங்களை நான் கட்டாயப் படுத்தலை, பண்ணினா நல்லா இருக்கும்னு நானாதான் சொல்றேன், அட பரவாயில்லைங்க அடுத்த தடவை செய்யுங்க, இட்ஸ் ஓகேங்க, தமிழ் சங்கம் எங்க போயிடப் போகுது, சங்க விழா எத்தனை இருக்கு, என்ன! இந்த தடவைதான் செய்யப் போறீங்களா, டைம் இருக்காவா, உங்களுக்கு இல்லாமையா, வாங்க வாங்க உங்க பதிவு மாதிரியே நல்லா அசத்திடுங்க.

    முரளி.

    ReplyDelete
  4. நாகு,

    நம்ப ஊர் விருந்தோம்பல் பத்தி இவ்வளவு நீட்டி முழக்கி சொல்லியிருக்கேனே, எப்படி இங்க வர மக்கள் பயப்படுவாங்க? அது மட்டுமா, ஊத்தப்பம், குழிப்பணியாரம், இட்லி அப்படீன்னு நம்ம குடுத்த பில்டப்புல புதிய சென்சஸ் கணக்கில் ரிச்மன்ட் குடியிருப்பு எண்ணிக்கை அதிகமாயிட்டதுன்னு அறிக்கை வெளிவரப்போகுது. நீங்க வேணா பாருங்களேன்.

    "எலும்பு மஞ்சை தானம் செய்ய பதியவும் வேணும்"

    நிறைய பேர் பதிவு செய்ய என் வாழ்த்துக்கள். ஆனா பெயரை கொஞ்சம் மாத்தி வைக்கலாம் நாகு. எலும்பு மஞ்சைன்னு பெயரை கேட்டா ஏதோ இஞ்சித்துண்டை முழிங்கின மாதிரி இருக்கு. Bone Marrow வுக்கு வேற ஏதாவது தமிழாக்கம் இருக்குமா?

    பி.கு.: இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ரிச்மன்ட் தமிழ் சங்கத்தினுடைய பொங்கல் விழாவுல தான் நான் எலும்பு மஞ்சை தானம் செய்ய பதிவு பண்ணினேன். பத்து நாட்களுக்கு முன் முகம் அறியாத ரத்த புற்றுநோய் உள்ள ஒருவருக்கு நான் மேட்சாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்கள். அடுத்த வாரம் மேலும் சில பரிட்சைகள் செய்ய என்னை ரத்தம் குடுக்க கூப்பிட்டிருக்கிறார்கள் என்பதை ரொம்ப சந்தோஷத்தோடு இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    இது வரைக்கும் நீங்க இதுக்கு எலும்பு மஞ்சை தானம் செய்ய பதிவு செய்யலைன்னா, தயவு செய்து உடனே செய்யுங்க. உயிருக்கு போராடும் ஒருவருக்கு உதவக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம். இதை விட பெரிய லாட்டிரி டிக்கெட் என்ன இருக்க முடியும்?

    ReplyDelete
  5. முரளி,

    ஹா ஹா ஹா....எவ்வளவு அருமையா என்னை மாட்டி விடறீங்க! பின்ன சும்மாவா உங்களை சங்க தலைவரா ஆக்கியிருக்காங்க. Kidding aside, உங்க அன்பான அழைப்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்க ஐடியா சூப்பரா இருக்கு. பண்ணிடுவேன். ஒரே பிரச்சனையை தான். மேடைக்கு கீழே நின்னு நிறைய பேர் போல நல்லா பேசுவேன். மேடைக்கு மேலே ஏறினா ஒரு 7.5 ரிக்டர் ஸ்கேல் கணக்குல தொடை நடுங்கும். அதான் பாக்கறேன்.

    ReplyDelete
  6. \\இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் Taco Bell லில் சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க. எப்பேர்ப்பட்ட ஒரு தியாகம்! என்ன ஒரு சமூக உணர்வு!\\

    கிடைக்கிறது Taco Bell-ல இருந்து சலுப்பாவோ மற்றதோ, ஏன் அவங்க கணவரே வாங்கிக்க மாட்டாங்களா? இதை கூட அவங்க செய்யமாட்டாங்களா என்ன? ரிச்மண்ட் ஆண்களை நினைத்தால் பாவமா தான் இருக்கு. Taco Bell அ தவிர வேறு ஏதும் கிடைக்காது போலிருக்கு.

    ReplyDelete
  7. //வீட்டில் சமைப்பாங்களோ மாட்டாங்களோ, சமூக நிகழ்ச்சிகளுக்கு அசராமல் அண்டா அண்டாவா சமைப்பாங்க.//

    //மாங்கு மாங்குன்னு கை வலிக்க காய் வெட்டி, கால் கடுக்க ஊத்தப்பம் ஊத்திட்டு இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் Taco Bell லில் சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க.//

    :)))

    //ரிச்மணட் தமிழ் பெண்களின் தன்னலமற்ற சமூக உணர்வு நாலு பேருக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம்னு நினைச்சு தான் உங்க கிட்ட சொன்னேன். சரி தானே?//

    ரொம்பவே சரிதான் மீனா! :)))

    ReplyDelete
  8. //நீ காரட், நான் குடைமிளகாய், ரமா வெங்காயம், உமா கொத்தமல்லி. எல்லோரும் ரெண்டு மூட்டை வாங்கிட்டு போய் வெட்ட ஆரம்பிக்கலாம். ஊத்தப்பம் பூத்துக்கு டான்னு பதினொரு மணிக்கெல்லாம் வந்திருங்க."//

    அப்படியே இங்க வந்து பாத்து நாங்க பேசினத கேட்டு எழுதின மாதிரி இருக்கு.

    ReplyDelete
  9. உங்க ரசிப்புக்கு நன்றி கவிநயா. :-)) மணிக்கணக்கா ஊத்தப்பம் வார்த்ததுல நேத்தி ராத்திரி கனவுல கலர் கலரா ஊத்தப்பம் ஊர்வலமே பார்த்தேன். உங்களுக்கு எப்படி?

    ReplyDelete
  10. ஊத்தப்பம் பின்னாடியே சமையல் புத்தக ஊர்வலமும்!!

    ReplyDelete
  11. மீனா,
    மிக அருமை.

    ==
    Location: FOI, Bone marrow registration booth:
    Saturday 11 am.

    சங்கரன்: அரவிந்த், ஊத்தப்பம் சாப்பிடறதா இருந்தா இன்னிக்கே சாப்பிடு!!

    அரவிந்த் : ஏன்? மீனா ஊத்தப்பம் பண்றாங்களா இன்னிக்கு ?

    சங்கரன்: இல்லை. நாளைக்கு.

    அரவிந்த்: ?????!!

    ReplyDelete
  12. பாராட்டுக்கு நன்றி அரவிந்த். என் கணவர் இப்ப தான் உங்களை தேடி கிளம்பியிருக்காரு.

    இந்த வார தமிழ் பத்திரிகை வீட்டில் இருந்தால் எடுத்து பாருங்களேன். எதுக்கா? ஜாதகப்பலன்ல இன்னிக்கு உங்க ராசிக்கு அநேகமா இப்படித்தான் போட்டிருப்பாங்க னு நினைக்கறேன்.

    "இது சற்று சுமாரான வாரம். கைகலப்புக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ராகு கேதுவை உக்கிரத்தோடு பார்ப்பதால் பகைவர்கள் உங்களை தேடி வர வாய்ப்புண்டு. வாசல் கதவை தாழ் போட்டுக்கொண்டு வீட்டுக்கு உள்ளேயே தலைமறைவாவது உசிதம்."

    ReplyDelete
  13. என் கிறுக்கல் இலக்கியத்துக்கு (????!!!) ஒரு நோபெல் பரிசா அனானிமஸ்?

    ஒரு ரெண்டு வாரம் முன்னாடி இதை குடுத்திருந்தீங்கன்னா திடுக்கிட்டு போய் 'இதெல்லாம் ரொம்ப ஓவர்' னு சொல்லியிருப்பேன். ஆனால் இப்போ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வுக்கு 'உலக சாந்தி'க்கு நோபெல் பரிசு கொடுத்திருக்காங்கன்னு கேள்விப்பட்டதிலேர்ந்து இது ஒண்ணும் அவ்வளவு தப்பா தெரியலைங்க. உங்க அன்புக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  14. குறும்பன்,

    வாங்க. எங்க சங்கத்துக்கு உங்க முதல் வருகை போல இருக்கு. பெயருக்கேத்த மாதிரி உங்களுக்கு குறும்பு கொஞ்சம் அதிகம் தாங்க. சலூப்பா எல்லாம் Taco Bell லில் சாப்பிடாம உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்களே அங்க தான் சாப்பிடும் போது எங்க ஊர் ஆண்களை பார்த்து பாவப்படறீங்களே?

    :-) உங்க முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. ஆஸ்த்ரெலியாவானாலும் அமெரிக்காவானாலும் கதை ஒண்ணு தான் போல இருக்கு. பின்னூட்டத்துக்கு நன்றி சின்ன அம்மிணி.

    ReplyDelete
  16. //சின்ன அம்மிணி//
    நானும் கோவை தான். எங்கே படிச்சிங்க?

    //முகம் அறியாத ரத்த புற்றுநோய் உள்ள ஒருவருக்கு நான் மேட்சாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்கள்//

    மீனா, உங்களோட பெரிய மனதிற்கு வாழ்த்துக்கள். FOI விழாவில் எனக்கு தெரிஞ்ச பல நண்பர்கள் "போன் மரொவ்" என்று சொன்னவுடன் எதோ கிட்னி எடுகரவங்கன்னு தெறிச்சு ஓடிட்டாங்க. அதையும் மீறி நாலு பேர் என்ன நம்பி பேர் கொடுத்தது கொஞ்சம் ஆறுதலா இருந்தது. சிலர் பேர் கொடுக்க ரெடியா இருந்தும் அவங்க நண்பர்கள் பயமுறுத்தி கூட்டிகிட்டு போயிடாங்க. இன்னும் மக்களுக்கு (படிச்சவங்களுக்கும் சேர்த்து) விழிப்புணர்வு வரலங்கறது பெரும் வருத்தம்.

    ReplyDelete
  17. ஆமாம் ஜெயகாந்தன். நிறைய பேர் Bone Marrow தானத்துக்கு பதிவு செய்ய பயப்பட்டு நழுவி போய்ட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். இது வருந்தத்தக்க ஒரு விஷயம். அடுத்த முறை பதிவு செய்ய கூப்பிடரத்துக்கு முன்னாடி எப்படியாவது மக்களிடம் இதுக்கு பதிவு செய்வது எத்தனை முக்கியம்னு ஒரு விழிப்புணர்ச்சியை முதலில் எழுப்பணும்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!