Monday, October 09, 2006

கம்பன் கவி இன்பம்

இந்த ப்ளாக்கில் நண்பர் (நடராஜமூர்த்தி) உயிருள்ள சொற்றொடர்கள் எழுதி இறை மாட்சியை விளக்குகிறார், மற்றொருவர் (பித்தன் - யாருப்பா இவரு?) கிறுக்கல்கள் மூலம் சமுதாயக் குறைபாடுகளைச் சாடுகிறார், அடுத்து (பரதேசி - என்னைப் போன்ற பலரும் அமெரிக்காவிற்குப் பரதேசிகள்தான்) வாழ்கையைச் சற்று கனவுகளோடு பார்கிறார். என் பங்கிற்கு, நடராஜமூர்த்தி எழுதுவதற்குள் கம்பனின் கவித்திறமை பற்றி எழுதிவிட்டால், நான்தான் இந்த முயற்சியில் முதல் என்று கொஞ்சம் 'படம்' காட்டலாம் என்கின்ற முயற்சியே இது. எனவே குறையிருப்பின் பொருத்தருள்க.
கம்பர் மிகச் சிறந்த படைப்பாளி என்பது உலகம் அறிந்த உண்மை. கம்பர் எழுதிய ராமாயணத்தை கம்ப சித்திரம் என்றும், கம்ப சூத்திரம் என்றும், கம்ப நாடகம் என்றும் பலவாறு போற்றுவர் தமிழ் இலக்கியதை நன்கு கற்றவர்.
கம்ப சித்திரம்
- ஒரு காட்சி எப்படி இருக்கிறது, அதில் கதாபாத்திரங்கள் எப்படி இருகின்றார்கள் என்பதை சொல்லால் புனைந்து நம் கண் முன் காட்சியாக வடித்து தருவதால் அது கம்ப சித்திரம்.
கம்ப சூத்திரம்
-
ஒரு உணர்வை அல்லது செயலை அல்லது குணத்தை ஆயிரம் பாடல்களில் விளக்கலாம், அதை ஒரே ஒரு வரியில் விளக்கலாம் என்று காட்டியவர் கம்பர். உதாரணத்திற்கு அரக்கர் என்பவர் யார் என்னும் கேள்விக்கு, அவர்கள் பற்கள் பெரிதாக இருக்கும், கைகள் முறங்கள் போல இருக்கும், நகங்கள் கூராகவும் அழுக்காகவும் இருக்கும், உடல் கரியதாகவும் பெரியதாகவும் இருக்கும், கண்கள் சிவப்பாக இருக்கும், நடந்தால் பூமி அதிரும், அனைவரும் அஞ்சும் தோற்றமும், செயலும் இருக்கும், என்றும் நாம் கூற முற்படுவோம். கம்பன் ஒரே வரியில் எவருக்கு இரக்கம் இல்லையோ அவர் அரக்கர் என்கிறார்.
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மைன் றோஇன்றுஇவ் வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல்பொருள் அமுதினைப் பருகுதின் றதுவே.
பொருள்
அரக்கர்கள் செய்த தீவினையும், தேவர்களும் முனிவர்களும் செய்த நல்வினையும், ஏவுதலால், இயற்கையாகத் தன்னிடம் இருக்கும் அருள் தன்மையை விட்டவளும் தூய்மையான நல்ல சொற்களைப் பேசும் மான்போன்ற கைகேயியின் இடத்து இரக்க உணர்வு நீங்கிய காரணத்தினால்தான் இன்றும் இந்த உலகத்தவர் இராமபிரானது பரவிய புகழாகிய அமிழ்தத்தினைப் பருக முடிகின்றது என உணர்த்துவதால் அது கம்ப சூத்திரம்.
கம்ப நாடகம்
-
ஒரு நாடகத்தை காணும் போது அதில் நடிப்பவர்கள், அவர்கள் பேச வேண்டிய வசனங்கள், அவர்கள் நிற்க/நடக்க வேண்டிய இடங்கள், அவர்களது நடை, உடை, பாவனைகளை எப்படி அந்த நாடகத்தின் சூத்திரதாரியான ஒரு இயக்குனர் வெளிப்படுத்துவாரோ அதை கம்பர் வெளிப்படுத்துவது தனிஅழகு.
கன்னி மாடத்தில் சீதா பிராட்டியாரை, விசுவாமித்ர முனிவர், இராமன் மற்றும் இளைய பெருமாள் மிதிலையில் முதன்முதல் காணும் காட்சியை கம்பர் இப் பாடல் மூலம் வருணிக்கிறார்.
பொன்னின் சோதி போதினில் நாற்றம் பொலிவேபோல்
தென்உண் தேனின் தீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே களிபேடோடு
அன்னம் மாடு முன்றுறை கண்டாங்கு அயல் நின்றார்
பொருள்
கன்னி மாடத்தின் மேல் பகுதியில் பொன்னின் ஒளியும், பூவின் நறுமணமும் ஒன்று சேர்ந்து பொலிவதைப் போன்றும், வண்டு விரும்பி உண்ணும் தேனின் சுவை போன்றும், செம்மை விளங்கும் சொற்களாலாகிய கவிதையின் இனிமை போன்றும், களிப்பு மிகுந்த பெண் அன்னம் போன்ற தோழியர்களோடு அரச அன்னம் வீற்றிருக்கும் எழிலைப் போன்று சீதாப் பிராட்டியார் அம் முற்றத்தில் (இதை இக்காலத்தில் பால்கனி என அழைப்பர்) வீற்றிருக்க இம்மூவரும் கண்டார்கள்.
இதைப் படிக்கின்றபோது நம் மனதில் ஒரு கேள்வி எழும். ஒரு கதையின் நாயகன், தன் நாயகியை முதன் முதல் காணும் போது, அவள் ஒர் உயர்ந்த இடத்தில் இருந்தும், தான் ஒரு தாழ்வான பகுதியில் இருந்தும் காண விரும்பமாட்டான், அதை கம்பரும் மாற்றிப் பாடியிருக்க முடியும், இப்படி அவர் பாடியதன் கருத்தை வள்ளுவர் 'வாழ்க்கைத் துணைநலம்' என்ற அதிகாரத்தில் இவ்வாறு விளக்குகிறார்.
புகழ் புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
எவன் ஒருவன் தன்னை இகழ்பவர்கள் முன் ஒரு எருதின் தன்மையதாய், தலை நிமிர்ந்து நடக்கும் தகுதியில்லாதவனோ அவனுக்கு வாய்த மனைவியின் குணம் சரியில்லை என்று இடித்து கூறுகிறார். இராமன் சீதையை மிதிலையில் காணும் பொழுது திருமணம் ஆகாத ஒரு இளைஞன் ஆகவே அவன் தலை குனிந்து நடக்க வேண்டியிராதவன். சீதை, கற்பின் மொத்த உருவம், அவள் தலை நிமிர்ந்து பிற ஆடவரை நோக்கும் தன்மையில்லாதவள், அவள் தலை கவிழ்ந்து இருந்தவாரே, கீழே தலை நிமிர்ந்து நடக்கும் இராமனைக் காண முடிந்தது, இராமனால் காணப்படவும் முடிந்தது. இதனால் கம்பராமாயணம் கம்ப நாடகம் எனவும் போற்றப்படுகிறது.
இவ்வாறு, தன் புலமையை கொண்டு கவிச்சக்ரவர்த்தி எனப் பெரும் பெயர் பெற்ற கம்பர், ஒரிடத்தில் சீதையின் அழகை வருணிக்க தன்னிடத்தில் வார்த்தைகள் இல்லை என இராமாயணத்திலேயே வாக்குமூலம் தருகிறார். இது நமக்கெல்லாம் வியப்பான ஒரு செய்தி. ஒரு கட்டுரையை வடிக்கும் ஆசிரியர், கட்டுரையின் முகப்பில், இந்த கட்டுரையை வடிக்கும் திறமை தன்னிடத்தில் இல்லை என்றால், அதை எவர் படிக்கக் கூடும். ஒரு சொற்பொழிவாளர், கொடுக்கப் பட்டத் தலைப்பில் பேச தனக்குத் திறமை இல்லை என்று கூறினால், அவருடைய சொற்பொழிவை யார் கேட்பர், ஆனால், ஒரு காவியத்தைப் பாடும் கம்பர், காவியத்தலைவின் அழகை வருணிக்க தன்னிடத்தில் வார்த்தைகள் இல்லை என்பதை அந்த காவியத்திலேயே சொன்ன பிறகும் நாம் அதைப் படித்து இன்புறுகிறோம் என்றால், அந்த கருத்தைச் சொன்ன கம்பனின் கவி அழகுதான்.
அந்தப் பாடல்:
செப்பும் காலைச் செங்கமலத்தோன் முதல்யாரும்
ஒப்பெண் பாலும் கொண்டு உவமிப்போரும் உவமிக்கும்
அப்பெண் தானே ஆயின போதுஇங்கு அயல் வேறோர்
ஒப்பு எங்கே கொண் டெவ்வகை நாடி உரை செய்வோம்?
பொருள்:
சிறந்த தாமரை மலரில் வாழும் பிரமதேவன் முதல், சாதாரண மனிதர் வரையில் எவரும், ஒப்பாக எண்ணத் தகுந்த பகுதிகளையெல்லம் ஆராய்ந்து உவமிப்பவர்கள் உவமையாகச் சொல்லும் திருமகள் தானே இங்கு வந்திருப்பதால், அத்திருமகளை விட வேறு ஒரு உவமைப் பொருளை நான் எவ்விடம் தேடி உரைக்க முடியும்? எனக் கேட்கின்றார்.
இதை சற்று ஆராய்ந்து பார்த்தால் நம் இன்றைய நடைமுறை வாழ்க்கை முறையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தன் மகனுக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேடும் எல்லா தாயும், தன் மகனுக்கு மஹாலட்சுமி போல ஒரு பெண் தேடுவதாகச் சொல்லுவாள், ஆனால் அவளுக்கு மஹாலட்சுமியே மருமகளாக வந்தால் அவள் என்ன சொல்ல முடியும், அது போல, வேறு ஒரு பெண்ணாக இருந்தாள், நான் இந்த சீதை அழகில் மஹாலட்சுமி போல எனக் கூறலாம், இவள்தான் உலகத்தோர் அனைவரும் ஒப்பு நோக்கும் மஹாலட்சுமி என்கிற போது, நான் எவ்விதம் இவளுக்கு ஒப்புமை கூற முடியும் என்ற கம்பரின் கவி மிக இனிது.
கடைசியாக இந்த பகுதியை நிறைவு செய்ய ஒரு மங்களகரமான பாடல்.
எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
பொருள்
பிறரால் எண்ணுவதற்கும் அரிய நலன்களைச் செய்பவளாகிய சீதாப் பிராட்டி கன்னிமாடத்தில் நின்று கொண்டு இருக்கையில் இருவர் கண்களும் ஒன்றையொன்று உணர்வினால் கவ்வி ஒருவரையொருவர் ஈர்க்க ஒருங்கிணைந்து விளங்க, அண்ணலாகிய இராமனும் நோக்கினான். சீதாப் பிராட்டியும் நோக்கினாள்.
இந்தப்பாடலை பல பேர் பல இடங்களில் விளக்கியுள்ளார்கள். 'பார்த்தல் வேறு, நோக்குதல் வேறு' என்பது பற்றியும், 'அண்ணலும்' என்று எழுதிப் பிறகு 'அவளும்' என்று எழுதியிருகிறார், அதன் காரணத்தை விளக்கியுள்ள பல கட்டுரைகளை நாம் படித்து இருப்போம். ஆயின், நான் வியந்து பார்க்கும் ஒரு பகுதி 'உணர்வும் ஒன்றிட'. தலைவன் தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் முதன் முதல் பார்கின்றபோது இருக்கும் எல்லா எண்ணங்களையும் விவரித்த கம்பர், உணர்வும் ஒன்றிட என்ற சொற்றொடர்மூலம் வாழ்வில் எது முக்கியம் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறார். இன்றைக்குத் திருமணமாகி 10, 15, 20 வருடங்கள் இல்வாழ்கை வாழ்ந்த பிறகும், அத்திருமணங்கள் முறிவதற்குக் காரணம் எது என ஆராய்ந்தால், நாம் கண்டு கொள்ளும் ஒர் உண்மை நம் மனங்கள் ஒன்றாததுதான். இராமனும், சீதாபிராட்டியும் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற அந்த கணத்திலேயே அவர்கள் இருவருடைய 'உணர்வும்' ஒன்றிவிட்டதாகச் சொன்ன் கம்பனின் கவி மிக மிக இனிது.
-முரளி

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!