உலகில் நாம் காட்டுயிர்களாக அலைந்து திரிந்த போது இருந்து,
நாகரிகமடைந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடத் துவங்கி, இன்று வரை வெல்ல
முடியா சிக்கல் - பசி.
இன்றைக்கு அறிவியலின் துணை கொண்டு
பெரும்பாலும் பசித்தீயை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். இருப்பினும்
ஆதரவற்ற சிறுவர், முதியோர், உடல் நலிந்தோர் போன்ற சிலர் பசியில் வாடும்
சூழல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறது.
அரசுகளும்
தொண்டு நிறுவனங்களும் இயன்ற வழிகளில் எல்லாம் பசித்த மனிதன் எங்கும்
இருக்கக் கூடாது என பாடுபடுகிறார்கள். அவர்களைக் காட்டிலும் தனி மனிதர்கள்
சிலரின் அறமும் கொடையுள்ளமும் பல நேரங்களில் கண்கலங்க வைத்து விடுகிறது.
சமீபத்தில் நண்பன் ஒருவன் தன் கைப்பொருளோடு தனக்கு வழங்கப்பட்ட
அன்பளிப்புகளை காசாக்கி பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள
குழந்தைகளுக்கு நல்லுணவாகப் பரிசளித்தான். செய்தியைக் கேட்டவுடன் மனம் இளகி
கண்கள் பனித்தன. இருக்கட்டும். உலகம் இயங்குவது நல்லோர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழையாலேயே. வாழ்க ஈரமனம் கொண்ட நல்லோர்.
நம்
பெருங்கருணையாளரான ஐயன் வள்ளுவரும் பசி கொண்ட மனிதனைக் கண்டு கலங்கி பல
இடங்களில் எழுதுகிறார். அவன் துயர் நீக்க பொருள் கொண்டவரை உதவச்
சொல்கிறார். வெறுமனே, "காசு வெச்சிருக்க இல்ல, குடுடா அவனுக்கு" எனச்
சொல்லவில்லை. பொருள் கொண்டவனின் அற உள்ளத்தைத் தூண்டி, மகிழ்வோடு உதவிடும்
எண்ணத்தை விதைக்கிறார்.
பசி எனும் பெருந்தீயை எல்லாவற்றையும்
அழிக்கும் ஒன்றாக உருவகப்படுத்துகிறார். அந்த அழித்துவிடும் பசி கொண்ட
மனிதனின் பசி தீர்ந்த நிறைவே பொருள் கொண்டவன் அறத்தை சேர்த்து வைக்கும்
சேமிப்புக் கிடங்கு என்கிறார். எல்லாம் ஏழு சொற்களில்.
ஐயனே, உம்மைக் கண்டதில்லை; உம் பெயரை நாங்கள் அறிந்ததில்லை; உருவத்தில் உயரமானவரா குள்ளமானவரா தெரியாது;
ஆனால்
உம் அறிவின் உயரம் அறிவோம்; தமிழை அழகுற பயன்படுத்தும் ஆற்றல் அறிவோம்;
அடுத்த மனிதன் மீதான உம் கருணையுள்ளம் காண்கிறோம். வாழிய நின் புகழ்.
இல்லறத்தில் உள்ளோரிடம், இல்லார்க்கு உதவிடச் சொல்லி "ஈகை" எனும் தலைப்பில் 10 குறட்பாக்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று:
அற்றார் = இல்லாதவர்கள்
அழிபசி = அழிக்கும் பசி
பெற்றான் பொருள் = பொருள் பெற்றிருப்பவன் = வசதி இருக்கிறவன்
வைப்புழி = வைக்குமிடம்
பொருள் கொண்ட ஒருவன், இல்லாதவர்களின் அழித்து விடும் பசியை தீர்த்ததில் (கிடைக்கும் நிறைவே) (அறத்தை) சேர்த்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு.
"வைக்கும் இடம்" என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறார். அறத்துப்பாலில், ஈகை அதிகாரத்தில் இல்லறவாசிக்குச் சொல்லும் அறிவுரை வேறு என்னவாக இருக்க முடியும்? பசித்தவனின் இடர் நீங்கும் போது கிடைக்கும் நிறைவில் தங்கத்தையா சேமிக்க முடியும்? அறத்தைத்தான் சொல்லாது சொல்கிறார்.
நலிந்தோர்க்கு கொடுப்பதற்கே செல்வம். அதிலும், பசிப்பிணியைப் போக்க இயன்ற போதெல்லாம் உதவிடுவோம். தழைக்கட்டும் மானுடம்.
----------
குறிப்பு: