தமிழ்நாட்டுல ஆளுக்கொரு கதை, நாளுக்கொரு கதைன்னு சொல்லிட்டு இருக்கானுவ, சும்மா சின்னதா ஒரு பதிவு போட்ட ஒடனே ஆளாளுக்கு கம்பை எடுத்துகிட்டு அடிக்க வராங்க.
போன பதிவை போட்டதும் ஒரு நண்பர், "என்ன பித்தன் பிஸினஸ் ஆரம்பிச்சுட்டரா, சொல்லவே இல்லை, நீயும் ஏதோ பிஸினஸ் ஆரம்பிச்சுட்டியாமே, அவர் பிஸினஸ் என்ன, உன் பிஸினஸ் என்ன, அவர் பிஸினஸ்ல பிஸின்னா நீ பிஸியில்லையா? அதப் பத்தி அடுத்த பதிவுல எழுது. இவர் பேசின அதே நாள் சாயங்காலம் இன்னொரு ஃப்ரெண்ட், "ஏய் என்னா? தமிழ்நாட்டுல நல்லாட்சி நடக்குதுன்னு உனக்கு யார் சொன்னாங்க, உனக்கும் தாத்தாவை பிடிக்காதுன்னா அந்தம்மா ஆட்சி நல்லாயிருக்குதுன்னு உன் கிட்ட சர்டிஃபிகேட் யார் கேட்டாங்க, அப்பால அசிங்கமா திட்டிடுவேன்" னு சொன்னார். சரி இவருக்கு இன்னிக்கு வீட்டுல ஏதோ ப்ரச்சனைன்னு விடலாம்னா, அடுத்த நாள் இன்னொரு நண்பி, "உன்னை வீட்டுல கண்டிச்சு வெக்கரதில்லை, பொம்பளைங்க நாங்க எவ்வளவு வேலை செய்யறோம், அதை விட ஆம்பளைங்க நீங்க என்ன செஞ்சிடரீங்கன்னு உங்களுக்கு ஒரு தந்தையர் தின கொண்ட்டாட்டம்?" சரி இவங்களுக்கும் என் ஃப்ரெண்டுக்கு இருக்கர அதே ப்ரச்சனைதான்னு விட முடியலை. அதனால இந்த தன்னிலை விளக்கம்.
பிஸினஸ்:
பித்தன் பிஸினஸ் ஒன்னும் பெரிசில்லை, அவர் ஒரு கம்பெனியில காண்ட்ராக்டரா வேலைக்கு சேர்ந்துட்டதாகவும், அதனால அவருக்கு ஆணிபுடுங்கர வேலை அதிகமாயிட்டதாகவும் கேள்வி. என் பிஸினஸ்ங்கரது நானும் ஹரி வெங்கடேசனும் சேர்ந்து ஆரம்பிச்சிருக்கர ஒரு பிஸினஸ். ஃபோட்டோ மற்றும் வீடியோ கவரேஜ் செய்யர ஒரு சேவை (காசுக்குத்தான்). ரிச்மண்ட்ல நாங்க ரெண்டு பேரும் பல நிகழ்ச்சிகள்ல ஃபோட்டோ எடுக்கரதையும், நான் அதோட வீடியோவும் எடுக்கரதையும் பார்த்து இருப்பீங்க, அதை கொஞ்சம் கமர்ஷியலா செய்யலாம்ன்னு முடிவு பண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து நியூவேவ் விஷுவல்ஸ் ன்னு ஒரு கம்பெனியை ஆரம்பிச்சு செய்யரோம். பிஸினஸ் இன்னும் சூடு பிடிக்கலை அதனால நான் இன்னும் பிஸியாகலை.
தந்தையர் தினம்
ஒரு சின்ன கதை, என்னை மாதிரி ஒருத்தன் வீட்டுல மனைவிக்கிட்ட வாய்சவடால் அடிக்கும் போது, "என்ன சும்மா பேசிட்டே இருக்க, நீ என்னை மாதிரி ஒரு நாளைப் போல ஆஃபீஸுக்கு போய் அங்க அடி ஒதை வாங்கி வேலை செஞ்சு மத்யானம் சாப்பிடக் கூட நேரமில்லாம திண்டாடி தெருப் பெருக்கி சாயங்காலம் வீட்டுக்கு வந்தா அப்ப நான் உன்னை மாதிரி வெட்டியா ஒரு வேலையும் செய்யாம ஜாலியா ஏசி காத்து வாங்கிட்டு, உன்னை பார்த்ததும் அத வாங்கினியா, இத வாங்கினியான்னு நொய் நொய்ன்னு பிடுங்கினா உனக்கு எவ்வளவு கோபம் வரும்"னு சொல்ல, அவன் மனைவி, "அப்படியா, சரி நான் ஒத்துக்கரேன், நீங்கதான் நம்ம வீட்டுல அதிகமா வேலை செஞ்சு உழைக்கரீங்க"ன்னு சொல்ல அந்தப் பயலும் ஏதோ சாதிச்சுட்ட மாதிரி அடுத்த நாள் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தான்.
வீட்டுக்குள்ள வந்தா, வீடு கந்த கோளமாயிருந்தது. வீடு முழுசும் குழந்தைங்க விளையாட்டு சாமான்கள் கிடந்தது, கிட்சன் சிங்க்ல, டைனிங் டேபிள்ள எல்லாம் பாத்திரங்கள் எதுவும் தேய்க்காம அப்படியே இருந்தது, அங்கங்க குழந்தைங்க சாப்பிட்ட சாப்பாடு தரைல சிந்தியிருந்தது, ஒரு இடத்துல தண்ணி கொட்டி துடைக்காம அப்படியே இருந்தது, டாய்லட்ல ஃப்ளஷ் பண்ண முடியாம ஒரு டாய் உள்ள கிடந்தது, குழந்தைங்க செருப்பு, ஷு எல்லாம் அங்க இங்கன்னு இரை பட்டு கிடந்துச்சு. ஃப்ரிட்ஜ்ல பால் கொட்டி துடைக்காம இருந்துச்சு. சரி அவன் பெண்டாட்டிக்கு இன்னிக்கு மூடு சரியில்லைன்னு மாடிக்குப் போய் அவன் ரூம்ல டிரெஸ் சேன்ஜ் பண்ணலாம்னு போனா, அங்க பெட் கலைஞ்சு கிடந்துச்சு, தலைகாணிங்க எல்லாம், பெட் ரூம்ல மூலைக்கொன்னா கிடந்துச்சு. அழுக்குத் துணிமணிகள் தோய்க்காம அப்படியே காலைல அவன் போட்டுட்டு போனது போட்ட படியே கிடந்துச்சு. கோபமா கீழ வந்து "ஏய் என்ன அப்படி உனக்கு கோபம் வீடு இப்படி தாறுமாறா கிடக்கு, நமக்கு கல்யாணம் ஆகி இந்த 10 வருஷத்துல ஒரு நாள் கூட வீடு இப்படி இருந்ததில்ல அப்படி என்ன ஆச்சு இன்னிக்கு"ன்னு கேட்டான் அதுக்கு அந்த மனைவி கூலா, "ஒன்னும் இல்லை நான் நீங்க சொன்ன மாதிரி இன்னிக்கு ஒரு நாள் வீட்டுல ஒரு வேலையும் செய்யாம ஏசி காத்து வாங்கிட்டு சும்மா இருந்தேன் அதான் வீடு இப்படி இருக்கு"ன்னா. அப்பதான் அவனுக்கு புரிஞ்சுது அவன் வெளில வாசல்ல போய் எவ்வளவு வேலை செஞ்சாலும் அதுக்கு ஏத்த கூலி அவனுக்கு கிடைக்குது, ஆனா வீட்டுல நாள் முழுதும் வேலை செய்யர பெண்களுக்கு என்ன கூலி கொடுக்கரோம் சொல்லுங்க. அதனால நான் எழுதினதுல இருக்கர காமெடி நிறைய பேருக்கு போய் சேரலைன்னு நினைக்கரேன். நான் என்னை மாதிரி இருக்கர ஆம்பளைங்க வீட்டு வேலைன்னு சொல்ற அத்தனையும் லிஸ்ட் போட்டு காட்டிட்டேன் அதத் தாண்டி ஒரு லட்சம் வேலை நம்ம வீட்டு பெண்மணிகள் செய்யராங்கங்கரதையும் சொல்லியிருக்கனும்னு இப்போ தெரிஞ்சுண்டுட்டேன். கொஞ்ச நாள் முன்னாடி நான் கொலு பத்தி ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதுல இல்லாள் எப்படி இருக்க வேண்டும்னு ஒளவையார் எழுதியிருந்த ஒரு பாட்டை பத்தி சொல்லிருந்தேன் அந்தப் பாட்டு:
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.
அதாவது, இல்லாள் - மனைவி வீட்டிலிருந்தால் இல்லாதது எதுவும் இல்லை, அவளே இல்லாளாக இல்லாமல் இருந்தால் அந்த இல் (வீடு) புலி இருந்த குகை போல இருக்கும். இதுல ஒளவையார் சொல்ற இல்லாள் அதாவது இல்லத்தை - வீட்டை ஆள்பவள் ஒரு பெண் அதுவும் அவள் அகத்திருக்க, அதாவது இல்லம் - வீடு என்ற ஒன்றுக்கு கட்டுப் பட்டு இருப்பவள் என்றால் அந்த வீட்டில் இல்லாதது எதுவும் இல்லைன்னு சொல்றாங்க. நல்ல வேளை இந்தப் பாட்டைப் பாடினது ஒரு பெண் கவிஞர், ஒரு ஆண் பாடியிருந்தா அவ்வளவுதான் அந்த ஆள உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பாங்க.
ஜெயலலிதாவின் ஆட்சி.
எனக்கு இந்தம்மாவோட ஆட்சி தாத்தாவோட ஆட்சியை விட 100 மடங்கு பெட்டர்ங்கர அபிப்ராயம். தாத்தா நல்லா தமிழ் பேசராரு அதனால அவர் எனக்குப் பிடிக்கும்ன்னு சொல்ற சில பேர் ரிச்மண்ட்ல இருக்காங்க, அவங்களுக்கு அவரோட சுயநலம் தெரியலை, அவரோட ஊழல் தெரியலை, அவரோட பல கெட்ட குணாதிசயங்களைத் தெரியலன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்ன்னு தெரியலை. அதே சமயம், சமீபத்திய இடைத் தேர்தல்ல அந்தம்மாவோட கட்சியும் பணத்தை வாரி செலவு பண்ணியிருக்காங்கன்னு தெரியுது, ஆனாலும் இன்னமும் அந்தம்மா, பல விஷயங்கள்ள தொலை நோக்கோட செய்யராங்கன்னு என்னோட கருத்து. பித்தன் இதை பத்தி படிச்சுட்டு "கொஞ்சம் அரசியல் பத்தி எழுதாம வழக்கம் போல கதை, டிராமா, இலக்கியம்னு எழுத வேண்டியதுதானே ஏன் இதைப் பத்தி எழுதி கேவலப் படரே"ன்னு சொல்லிட்டதால் இனிமே 'நோ அரசியல்'.
முரளி இராமச்சந்திரன்.