உலகில் நாம் தோன்றிய நாள் முதலாக கலகக்காரர்கள் ஏமாற்றுவோரை நோக்கி சுடு
கேள்விகளையும் பகுத்தறிந்த ஆழ்ந்த சொற்களையும் வீசியபடியே தான்
இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.
பொதுவாக மக்கள் உணர்வு
மயமானவர்கள். எளிதில் ஏமாற்றி விட முடியும். அதிலும் அறிவை வேகமாக
மழுங்கடிக்கும் சமயம் எனும் கருவி ஏமாற்றுக்காரர்களுக்கு மிகப்
பிடித்தமானது. தகவல் பரிமாற்றம், தொழில்நுட்பம், போக்குவரத்து, பொது அறிவு
வளர்ந்திருக்கும் இன்றைய உலகிலேயே இன்னமும் ஏமாற்றவும் ஏமாறவும் ஆள்
இருக்கும் போது வள்ளுவர் காலத்தில் பாமர மக்கள் எவ்வளவு
ஏய்க்கப்பட்டிருப்பார்கள்?
மின்சார விளக்கு வந்த பின் பேய்கள்
ஒழிந்துவிட்டன என்பார்கள். பாதி ஏமாற்றுக்காரர்களும் கூடவே ஒழிந்து
போனார்கள். மீதிப் பாதியை ஒழிக்க ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வரும் வரை
கலக்காரர்களின் தேவை கண்டிப்பாகத் தேவை.
இப்போது நம் கலகக்காரர்
வள்ளுவரின் கலகக் குரலில் ஒன்றைப் பார்ப்போம். துறவற இயல் எனும் பிரிவில்
பதிமூன்று அதிகாரங்கள் எழுதுகிறார். துறவியாகும் எண்ணம் கொண்டோருக்கு
கைவிளக்காக செய்ய வேண்டியவற்றை, வேண்டாதவற்றைப் பட்டியலிடுகிறார்.
கள்ளாமை,
வாய்மை, வெகுளாமை (சினம் கொள்ளாத தன்மை), இன்னாசெய்யாமை என பட்டியல்
நீள்கிறது. மிகவும் யோசிக்கும்படியாக "புலால் மறுத்தல்" என்பதை துறவற
இயலில் வைத்திருக்கிறார்.
ஆம். இல்லறவாசிகளுக்கு சொல்லவில்லை - ஊண்
உண்பதும், மரக்கறி மட்டும் போதும் என்பது அவரவர் விருப்பம். எவரும்
"அறிவுரை" சொல்லக்கூடாது; ஆனால் துறவிக்கு புலால் மறுத்தல் கண்டிப்பான
ஒன்று என நினைத்திருப்பார் போல.
அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம் திருக்குறள்.
கூடா ஒழுக்கம் என்ற தலைப்பில் துறவியாக மாற எண்ணுபவரின் வேண்டாத ஒழுக்கம் பற்றி நக்கலும் நையாண்டியுமாக எழுதுகிறார்.
மனதில்
வஞ்சம் வைத்துக்கொண்டு, துறவி என்பாயானால் உன் உடம்பு கொண்டுள்ள
ஐம்பூதங்களே உன்னைப் பார்த்து சிரிக்கும்டா என்கிறார். மனதுக்குள் குற்றம்
வைத்துக்குக் கொண்டு வானுயர்ந்த தோற்றம் கொண்டவர் போல காட்டிக் கொண்டால்
அந்தத் தோற்றத்தால் ஒரு பயனும் இல்லை. உயர்ந்த தோற்றத்தில் மறைந்து கொண்டு
வேண்டாத வேலைகளைச் செய்வது, புதருக்குள் மறைந்து இருந்து அப்பாவிப் பறவைகளை
ஏமாற்றிப் பிடிக்கும் வேடனின் செயலைப் போன்றது.
என்றெல்லாம் துறவு பூண எண்ணுபவருக்குச் சொல்லிக் கொண்டே வந்தவர் குரல், மெதுவாக நம்மை நோக்கி பேசுவது போல மாறுகிறது அந்த அதிகாரம்.
மனதுக்குள்
அழுக்கை வைத்துக் கொண்டு எவ்வளவு குளித்தாலும் பயனில்லை, அழுக்கு மனதோடு
துறவி வேடத்தில் பலர் உள்ளனர். கவனம். என்கிறார். அடுத்ததாக, ஆளைப்
பார்த்து முடிவு செய்திடாதே - துறவி வேடம் போட்டு இருப்பவர் நல்லவராக
இருக்க வேண்டும் என்பது இல்லை. வளையாமல் நேராக இருக்கும் அம்புதான்
கொல்கிறது. வளைந்து இருக்கும் யாழ் நல்லிசை தருகிறது. செயலைக் கொண்டே அவர்
பண்பை உணர வேண்டும்; கவனம். என்கிறார்.
முத்தாய்ப்பாக,
மொட்டையடித்துக்
கொண்டு அல்லது நீண்ட முடி வளர்த்து இவனுக எதுக்கு இப்படித் திரியணும்?
உலகத்தார் முகம் சுழிக்கும்படி நடக்காது இருந்தாலே போதும், இந்த
பம்மாத்துகள் தேவையில்லை என்கிறார்.
முழு அதிகாரமுமே ஒரே எள்ளலும்
ஏச்சும்தான். கூடவே கலகக் குரல். அப்போது இருந்தே சமயம் எனும் மனம்
தடுமாறச் செய்யும் கருவியை எதிர்த்து, முழுதாக எதிர்க்க முடியாத போது
குறைந்தது கிண்டலடலடித்தாவது வந்திருக்கிறோம். இன்றைக்கும், "அவள்
என்றைக்கடா பேசினாள்" என கேட்பதாக அது நீள்கிறது. "சமயக்காரர்களிம்"
நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நமக்காக நாம் தான் கலகக் குரல் எழுப்ப
வேண்டும். அவள் என்றைக்கும் பேச மாட்டாள்.
மேலே சொன்ன குறள்:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
மழித்தல் = முகம் தலை சிரைத்தல்
நீட்டல் = முகம் தலை எங்கும் முடி நீட்டலாக வளர்த்தல்
அப்படியே புரியும் இன்னொரு அட்டகாசக் குறள்.
------------------------------------
கட்டுரையைத் தமிழாசிரியர்கள் தாண்டி மற்றவர்களும் படிக்கறமாதிரி கொஞ்சம்
மொழிநடையை மாற்றி எழுதித் தா என "அன்போடு" வந்த கட்டளையின் படி கொஞ்சம் மாற்றிய நடையில் இதே கட்டுரை இங்கே
~~~~~~~~~~~~~~~~~~~~~