எதைப்பற்றிடா சொல்கிறாய்?
'யூவால் ஆரரி' எழுதியிருக்கும் சேப்பியன்கள் என்ற புத்தகத்தைப் படித்தேன்; இயற்கை யார் பக்கமும் சாய்வதில்லை, வலிமை கொண்டவர்கள் வாழ்கிறார்கள் வலிமை குறைந்தால் எதிர்பாரா இடங்களில் இருந்து கூட ஆபத்துகள் வரும் - வரலாறு அப்படித்தான் சொல்கிறது என்கிறார்.
வரலாற்று ஆசிரியராக அவர் பல எடுத்துக்காட்டுகளையும் விரிவாக விளக்குகிறார்.
வரலாறு மாத்திரம் அல்ல, அறிவியல் அறிஞர் டார்வினின் படிமலர்ச்சி [Evolution] கோட்பாட்டில் இருந்து பிறந்த புகழ்பெற்ற "தக்கன பிழைக்கும்" [Survival of the fittest] என்ற தத்துவமும் அதைத்தானே வேறு மாதிரி சொல்கிறது.
வலிமை உள்ளவரை சிக்கலில்லை. ஏதோ காரணங்களால் உடல் நலமோ, பொருள், உறவு, அறிவுரை சொல்லும் சுற்றம் போன்றவை கெட்டுப்போய் குழப்பத்தில் சிக்கிக் கொண்டால் அது நாள் வரை மறைந்திருந்த சிறு எதிரிகள் கூட வெளிப்பட்டு கோரைப் பற்களைக் காட்டக்கூடும். உண்மையிலேயே நிலவரம் கலவரமாகப் போய் இருந்தால் உயிரையே கூட எடுத்துவிடக் கூடும்.
வரலாறும் அறிவியலும் பட்டறிவும் காட்டும் இக்கருத்தை ஐயன் வள்ளுவர் சொல்லாமலா இருப்பார்.
களம் பல கண்ட போர் யானையாகினும் எதிர்பாராச் சூழலால் சேற்றில் சிக்கிக் கொண்டால் சிறு நரி கூட அந்த வலிமை மிக்க யானையைக் கொன்றுவிடும் என்கிறார்.
கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆழ் முகத்த களிறு
கால் ஆழ் களரில் = கால் ஆழமான சேற்றில்
நரி அடும் = நரி கொல்லும்
கண் அஞ்சா = பயம் இல்லா (கண்ல பயம் தெரியாத)
வேல் ஆழ் முகத்த களிறு = முகத்தில் வேல் ஆழமாக பதிந்த யானை (களம் பல கண்டு விழுப்புண் கொண்ட போர் யானை)
களிறு = யானை
/* பயமறியாத, களம் பல கண்ட, ஆழமான விழுப்புண் கொண்ட வீரமான யானையாக இருந்தாலும் கால் அசைய முடியாத ஆழமான சேற்றில் சிக்கிக் கொண்டால் சிறு நரி கூட அம்மாம்பெரிய யானையைக் கொன்றுவிடும். */
அதனால, எப்பவும் நீ இருக்கும் இடம் பற்றி கவனமாக இரு என்கிறார். ஒன்றைச் சொல்லி இன்னொன்றைப் புரிய வைக்கிறார். ("பிறிது மொழிதல் அணி" - நினைவு இருக்கா?)
வேந்தனோ, படைத்தலைவனோ, ஏன் கொள்ளைக் கூட்டம் நடத்தும் நபராகக் கூட இருக்கலாம். அவரவர் தம் வலிமை குன்றாது இருக்கும் வரை சிக்கவில்லை. யாருக்கும் அஞ்சாத, களம் பல கண்டு விழுப்புண் கொண்ட வீரராக, எல்லோரும் பம்மி வணங்குபவராகக் கூட இருக்கலாம். ஆனால், காலச்சூழலில் தன்னைச் சுற்றி சரியான இடம் அமைத்துக் கொள்ளாமல், இயங்க முடியாத சேற்றில் சிக்கிய யானையாகிவிட்டால் காத்திருக்கும் நரிக்கூட்டம் கமுக்கமாக, என்றைக்குச் செத்தார் என்றுகூட அறிய முடியாதவாறு கொன்றே விடும். - அறிவியல், இலக்கியம், வரலாறு எல்லாம் சொல்லும் செய்தி இது.
திகில் செய்திகள் (facts) போதும். வலிமை குன்றா காபி ஒன்று போட்டுக் கொடேன் - அதான் Strong coffee என்றான் செல்வம் சிரித்தபடி.