இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?
வேறுபாடு இருந்தா என்ன, இல்லாட்டா என்ன? கேட்ட கடன் கிடைச்சா போதும். சரிதானே?
ஆனா, இந்தச் சொற்களுக்குள் ஒரு சின்ன வேறுபாடு இருக்கு. என்னன்னு பார்த்திடுவோம்.
கொடு, தா, ஈ எனும் கிட்டதட்ட ஒரே பொருள் கொடுக்கும் மூன்று சொற்களிடையே ஒரு மெல்லிய வேறுபாடு காட்டுகிறார் தொல்காப்பியர்.
மூன்றும் ஒரே செயலைக் குறிப்பதுதான் என்று முதலிலேயே(1) சொல்லிடறார்.
'ஆனா பாருங்க..' அப்படின்னு ஒரு * போட்டு அடுத்த மூன்று தனித்தனி வரிகளில்
வேறுபாட்டை
விளக்கறார். (2,3,4)
* ஈ என்னும் சொல்லை இழிந்த நிலையில் இருப்பவன் அவனுக்கும் உயர் நிலையில் இருப்பவனிடம் சொல்லிக் கேட்பது. (ஈ என இரத்தல் இழிந்தன்று
-
புறநானூறு)
* தா என்னும் சொல்லை சரிக்கு சரியாக இருப்பவரிடம் சொல்லிக் கேட்பது.
* கொடு என்ற சொல்லை உயர்ந்த நிலையில் இருக்கும் போது அவ்வளவு உயர் நிலையில் இல்லாதவரிடம் கேட்பது.
கொடு என்றாலே வளைதல் என்று முன்பு ஒரு முறை பார்த்தோம் (கொடுவாள், கொடுக்காப்புளி, கொடுக்கு என வளைந்ததற்கு எல்லாம் அதன் பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்தவையே). உயர்ந்த இடத்தில் இருந்து வழங்குபவரது கைகள் வளைந்து இருப்பதால் அது 'கொடு'ப்பது என்று சொல்வது உண்டு.
இப்போ, கடனுக்கு வருவோம்.
கடன் கேட்பதே கொஞ்சம் நெளிஞ்சுக்கிட்டு கேட்பதுதான். இருந்தாலும் நம்ம நண்பர்களிடம் ஒரு சிறு கை மாற்று, கேட்கிறோம் என்று வையுங்கள்.
"உன் கைபேசியைத் தா, வீட்டுக்கு ஒரு கால் பண்ணிட்டு தர்றேன், என்னுதுல பேட்டரி போய்டுச்சு" எனும் போது இருவரில் யாரும் உயர்/தாழ் நிலையில் இல்லை. எனவே, கொஞ்சம் உரிமையோடு தா என கேட்கிறோம்.
இதே, நீங்கள் ஒருவருக்கு பணம் கடன் கொடுத்திருக்கிறீர்கள் என வைப்போம். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது "ஏம்பா, அடுத்த வாரம் குடுத்திடறதா சொன்னியே,
ஞாயிற்றுக் கிழமை வீட்லதான் இருப்பேன், பணம் கொண்டு வந்து கொடு" என சற்றே உயர் நிலையில் இருந்து கேட்பது.
வேறுபாடு தெரியுதில்ல?
முதல் வகையான ஈ என்பது கெஞ்சிக் கேட்பது - இரப்பது.
நீதிபதியிடம் குற்றவாளி, "இனி திருட மாட்டேன், தயவு செஞ்சு மன்னிச்சு விட்டுடுங்க" எனக் கெஞ்சுதல் - ஈ என இரத்தல் வகை. இழிந்த நிலையில் இருப்போன் கெஞ்சுவது. அவனுக்குக் கருணையோடு கொடுப்பது - ஈவது.
எனவே,
தன் நிலையில் இருந்து இறங்கி, இரந்து கேட்பவருக்கு வழங்குவது - ஈவது.
சரி நிகராய் இருப்பவருக்கு வழங்குவது - தருவது
உயர் நிலையில் நாம் இருந்து வழங்குவது - கொடுப்பது.
பேச்சு வழக்கில் தா, கொடு என்பதற்குள் இருக்கும் வேறுபாட்டை நாம பெரிசா கண்டுக்கலைன்னாலும் இப்படி ஒன்னு இருக்குன்னு தெரிந்து வைத்துக்கொள்வதில் தப்பு இல்லைதானே.
இதுதான் அந்தத் தொல்காப்பிய வரிகள்:
ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய. 1
அவற்றுள்,
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 2
தா என் கிளவி ஒப்போன் கூற்றே. 3
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 4
இரவின் கிளவி ஆகு இடன் உடைய. 1
அவற்றுள்,
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 2
தா என் கிளவி ஒப்போன் கூற்றே. 3
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 4
இதே கட்டுரை கொஞ்சம் கிளுகிளு வடிவில் இங்கே: முத்தம் குடு Vs முத்தம் தா
---------------
#ஞாயிறு போற்றுதும்.