Sunday, November 16, 2014

நாட்டைக் குலுக்கிய தீர்ப்பு

சென்ற செப்டெம்பர் மாதக் கடைசியில் கர்நாடக நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பால் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் பதவி இழந்தார். அதையொட்டி நடந்த அரசியல் சம்பவங்கள் இதர கலவரங்கள் பற்றி வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அதிகம் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.தாங்கள் பிறந்த நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பொது வாழ்வு எப்படி சீரழிந்து இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த செய்திக் கட்டுரை அனுப்பப்டுகிறது.முடிந்தவரை சுருக்கமாக எழுதிய பிறகு சில தயக்கத்துடன் அனுப்புவதால் சற்று காலதாமதமாகிவிட்டது.தாமதம் செய்தியின் சுவையைக் குறைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
சமீபத்தில் தொலைக்காட்சிச் செய்தியில் தமிழ்நாட்டு மந்திரி.சபைக் கூட்டத்தைக் காண்பித்தார்கள். நான் வாய் விட்டுச் சிரித்தேன் காரணம் இதுதான். மந்திரிகளில் பாதிப்பேர் மொட்டை அடித்திருந்தார்கள் மற்ற பாதிப்பேர் முடி வளர்த்திருந்தார்கள். இதற்கான காரணம் சமீபத்திய அரசியல் நிலைதான்,
  தமிழக முன்னாள் முதல்வர்,தற்போதைய மக்கள் முதல்வர் சென்ற செப்டம்பர் மாதம் 27,ம்தேதி 4 ஆண்டு தண்டனை பெற்றவுடன் தமிழ்நாடே குதித்து (கொதித்து) எழுந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் பிரார்த்தனை. அந்த பிரார்த்தனை நிறைவேற பாதி மந்திரிகள் கோயிலுக்குப் போய் மொட்டையடித்து  முடி செலுத்திவிட்டார்கள். மீதமுள்ள பாதி பேர் வருகின்ற சில நாட்களில் நிறைவேற்றுவார்கள்.
  எப்படியோ எல்லாக் கடவுள்களையும் அழைத்து கூக்குரல் போட்டு அம்மாவுக்கு விடுதலை வாங்கியாகிவிட்டது. (ஜாமீனில்தான்)
மக்கள் கூட்டம் கூட்டமாக கால்நடையாக (காலால் நடந்து) சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குப் போய் அம்மன் சந்நிதானத்தில் உருண்டு மண்சோறு தின்று, அம்மாவின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்ததைப் பார்த்தால் யாரும் நெஞ்சு உருகாமல் இருக்க மாட்டார்கள். அப்படி இருக்க அம்மன் மனசு என்ன கல்லா? டெல்லி கோர்ட் வரை சென்று விடுதலை வாங்கிக் கொடுத்து விட்டாள் அம்மன். (திரும்பவும் ஜாமீனில்தான் என்று
எழுதித்தான் ஆகவேண்டும்)
பாமர மக்கள்,அடித்தட்டு மக்கள் பெண்கள் கூ.ட்டம் கூட்டமாக தெருவில் நின்று கதறி அழ,வேறு சில தொண்டர்கள் தெருவில் உள்ள கடைகளைச் சூறையாடி தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். வேறு சிலர் வழியில் வரும் லாரி, பேருந்து, கார்கள் இப்படி எல்லா வாகனங்களையும் அடித்து நொறுக்கி தங்கள் அம்மா விசுவாசத்தைக் காட்டினார்கள். சென்னை நகரத்தில் மட்டும் சிறியதும் பெரியதுமான 15 உடுப்பி ஹோட்டல்கள் சூறையாடபட்டன.
  கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரர்த்தனை.அன்னை மேரியும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவும் மனம் இறங்கி அம்மாவின் விடுதலைக்கு அருள் புரிய வேண்டி பாதிரிமார்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்கள்.
    அல்லாவையும் விட்டு வைக்கவில்லை. எல்லா மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை செய்து முல்லாக்கள் அம்மா விடுதலை கோரி  அல்லாவிடம் மனுப் போட்டார்கள்.
   ஸ்ரீரங்கத்தில் (அம்மா தொகுதியாயிற்றே) ஏகப்பட்ட அமர்க்களம். எல்லா சாஸ்திர விற்பன்னர்களூம் கூடி ஸத்ரு ஸம்ஹார ஹோமம் செய்தார்கள். லிட்டர் லிட்டராக பாலும் நெய்யும் தேனும் ஊற்றி ஹோமம் செய்ததாகச் சொல்கிறார்கள். இந்த ஹோமம் பலன் கொடுக்கத் தொடங்கினால் அம்மாவின் எல்லா எதிரிகளும் சாம்பலாகிப் போய்விடுவார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்
  இப்பொழுது அம்மாவின் விரோதிகள் சோனியா காந்தி, கர்நாடக        முதல் அமைச்சர் சித்தராமைய்யா, அம்மா வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா - இந்த மூன்று பேர்தான். இவர்களுடைய கூட்டுச் சதியால்தான் அம்மா உள்ளே போனார் என்று மக்கள் சொல்கிறார்கள். இந்த மூன்று பேர் ஆட்டமும் சீக்கிரமே குளோஸ்தான் என்கிறார் .தி.மு. தொண்டர் ஒருவர். சென்னை நகரத் தெருக்களில்  விதவிதமான வால்போஸ்டர்களைப் பார்க்கலாம். அம்மாவின் வழக்கில் தீர்ப்புக்குப் பின் பெரிய அரசியல் சதி.காவிரி பிரச்னையில் அம்மா உச்சநீதிமன்றம் வரை போய் விடாப் பிடியாகப் போராடி நியாயம் பெற்றார். அதனால் கர்நாடகா அரசியல் கட்சி (ஆளும் கட்சி) செய்த சதிதான் இந்த தீர்ப்பு என்ற பொருளில் பல போஸ்டர்கள் சென்னை நகரத் தெருக்களை அலங்காரம் செய்கின்/றன. இந்த போஸ்டர்களில் முக்கியமாக ஒரு போஸ்டரைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.
       ஒரு குழந்தை கதறி அழுவது போல சித்திரம். அம்மா வேணும் அம்மா வேணும்,காவிரியை நீயே எடுத்துக்கோ, அம்மாவை கொடு இதுதான் அந்த போஸ்டரில் உள்ள வாசகம்.
  இந்த போஸ்டருக்காகவே அம்மாவை விடுதலை செய்யலாம் என்கிறார்கள்.  இந்த போஸ்டரைத் தயாரித்தவரின் கற்பனையை நிச்சயமாகப் பாராட்டத்தான் வேண்டும். சென்னை நகர மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்த போஸ்டர் இதுதான். சில தினசரிகள் கூட இந்த  போஸ்டரைப் பற்றி குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தன.
   ஏறக்குறைய 220 .தி.மு. தொண்டர்கள் இறந்து விட்டதாகச் சொல்லப் படுகிறது. அந்த சில நாட்களில் மாரடைப்பால் இறந்தவர்கள், அதிக குடிபோதையில் இறந்தவர்கள், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் இப்படி பல பேர். இவர்களெல்லாம் அம்மாவுக்குக் கிடைத்த தண்டனை பற்றிய செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்தார்கள் என்று பேச்சு.
  இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் கொடுத்ததாக செய்தித்தாளில் செய்தி. தொலைக் காட்சியில் குமுறிக் குமுறி அழும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் காட்சியும் தொடர்ந்து ஒளி பரப்பப் படுகிறது.
  ஆனால் வேறொரு பணப்பட்டுவாடா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படவில்லை என்கிறார்கள் மற்ற கட்சிக்காரர்கள். அதாவது மொட்டை போட்டுக் கொண்டவர்களூக்கு தலா 500 ருபாய். பாதயாத்திரை போனவர்களுக்கு தலா 500 ரூபாய். உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு
தலா 1000 ரூபாய். ஹோமம் நடத்தியவர்களூக்கு 5000 ரூபாய் மற்றும் செலவுத் தொகை இப்படியாக அவரவர்கள் உழைப்புக்குத் தக்கபடி செய்யப்பட்ட பணப்பட்டுவாடா தொலைக்காட்சிச் செய்தியில் இடம் பெறவில்லையாம்.
  அந்த ஒரு மாதத்தில் காவல்துறையினர் படாதபாடு பட்டார்கள்  கல்லெறிந்து கண்டதையெல்லாம் உடைத்து, வாகனங்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் தொண்டர்களை, கையில் உள்ள தடியால் அடித்து விரட்ட முடியாமல் அண்ணே, கொஞசம் நகருங்க, அண்ணே, சும்மா போங்க, அண்ணே என்று காவல்துறையினர் கெஞ்சிய காட்சி பார்ப்பவர்களுக்கு  நல்ல வேடிக்கைதான். ஆளும் கட்சித் தொண்டர்கள், பல கவுன்சிலர்கள், வட்டங்கள், மாவட்டங்கள் மீது தடி பட்டுவிட்டால் ஒரு வாரத்தில் தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றல் கிடைக்குமே,  நாம ஏன் வம்பை விலைக்கு வாங்க வேண்டும்?
  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்பொழுது கர்நாடகா ஒரு எதிரி நாடு. 20 நாட்களுக்கு மேல் கர்நாடக அரசுப் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன. கர்நாடகா ரிஜிஸ்டிரேஷன் கொண்ட தனியார் கார்கள், டிரக்குகள் இதர மோட்டார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த வாகனங்களில் பயணம் செய்தவர்களூக்கு அடி, உதை, டிரக்குகளில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன
   அண்டை மாநிலங்களை எதிரி நாடாக சித்தரித்து அரசியல் நடத்துவது தமிழ்நாட்டில் ரொம்ப நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது அந்த அரசியலின் கோர வடிவத்தை இப்பொழுது பார்க்க முடிந்தது. டெல்லி உச்சநீதி மன்றம் இது குறித்து கவலை தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது
   இந்த வியாதி மற்ற மாநிலங்களூக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ போகட்டும்.இப்பொழுது அம்மா பற்றித்தான் தமிழ்நாட்டு மக்களுக்குக் கவலை….
    அம்மா வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு பற்றி அரசியல் பிரமுகர்கள் ,தலைவர்கள்,பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருக் கிறார்கள். 18 ஆண்டு காலம், 200க்கு மேற்பட்ட ஒத்திவைப்புகள் கணக்கில்லாத இழுத்தடிப்புகள், பல பயமுறுத்தல்கள், சாட்சிகள் மரணம் நீதிபதிகள் மாற்றம் இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த வழக்கு ஒரு வகையாக முடிவுக்கு வந்தது பற்றி திருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.
  புரட்சிக் கலஞர் விஜயகாந்த்கூட (தே.மு.தி..தலைவர்) இப்பொழுதெல்லாம் புத்திசாலித்தனமாகப் பேசத் தொடங்கிவிட்டார். அவர் சொன்ன ஒரே வாக்கியம் இதுதான், உப்பைத் தின்னவன் தண்ணீ குடித்துத்தான் ஆகவேண்டும்.   .
   எல்லா கேள்விகளுக்கும் நகைச்சுவையாக பதில் கொடுத்து சமாளிக்கும் சாமர்த்தியசாலியான சோ ராமசாமி (துக்ளக் ஆசிரியர்) பத்திரிகை நிருபர்களின் கேள்விக்கு சொன்ன பதிலில் நகைச்சுவையைத் தேடித்தான் பார்க்க வேண்டும்
  சோ சொன்ன பதில் இதுதான் “.ஆனால் அம்மாவுக்கு மக்கள் ஆதரவு நிறைய இருக்கிறதுஎன்பதுதான்.
  இந்த பதிலில் இருக்கும் நகைச்சுவை அவ்வளவு சுலபமாக எல்லோருக்கும் தெரியாது. அம்மாவோடு தண்டனை பெற்ற தோழி சசிகலாவின் 9 கமபெனிகளுக்கு சோ ராமசாமி டைரக்டராக இருக்கும் உண்மை தெரிந்தவர்கள் மட்டும் நமுட்டுச் சிரிப்பு சிரித்திருப்பார்கள்
   பாரதி கவிதைகளில் எத்தனையோ வரிகள் வைரம் போன்றவை மகாவாக்கியம் என்று சில சொல்லாடல்களைக் குறிப்பிடுவது உண்டு. அத்தகைய மணியான வரிகள் பாரதியார் பாடல்களில் நிறையவே உண்டு
  அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
  உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்  அச்சமில்லை
   அச்சமென்பதில்லையே என்று தொடரும் வரிகளை உதாரணமாகச் சொல்லலாம் நடைபெற்ற அமர்க்களத்தில் பாரதியார் பாடலில் ஒரு வரியை அதிகமாகவே பயன்படுத்தினார்கள். எனக்கு பாரதியார் மீது கோபம் கோபமாய் வந்தது.இந்த மனுஷன் இப்படியெல்லாம் பாடி வைத்து விட்டுப் போய்விட்டாரே என்று சில சமயம் சலித்துக் கொண்டேன்.அப்படி என்னை நினைக்கச் செய்த பாரதி பாடல் வரிகள் போஸ்டர்களில் அதிகமாகப் பயன்படுத்திய வரிகள் இதுதான்
தர்மத்தின் வாழ்வு தனைச் சூது கவ்வும்
.தர்மம் மறுபடியும் வெல்லும் என்பதுதான்.
சில நாட்களூக்குப் பிறகு என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். தர்மம் எது என்பதிலேயே குழம்பிப் போனவர்கள், தெளிவு இல்லாதவர்கள் தவறான காரியங்களுக்கு பாரதியார் பாடல்களைப் பயன்படுத்தினால் அவர் என்ன செய்வார் பாவம், என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். திரும்பவும் ஒரு பாரதியார் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. என்னை அறியாமல் முணுமுணுத்தேன்.
  நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
-    மு.கோபாலகிருஷ்ணன்

Sunday, November 09, 2014

அவையடக்கம்


நண்பர் ஒருவரிடம் சங்கீதம் கற்றுக் கொள்ள ஒரு சிறுவன் சேர்ந்தான். ஒரு வருடம் கழித்து அந்தச் சிறுவனின் தந்தையும் சங்கீதம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு நண்பரிடம் கேட்டிருக்கிறார். அந்த உரையாடலை கீழே தருகிறேன்.

நிஜமாவே உங்களுக்கு கத்துக்க ஆசையா?
ஆமாம்.

சரி வாங்க.  பேசிட்டு, நீங்க எப்படி பாடுறீங்கன்னு பாத்துட்டு டிசைட் பண்ணலாம்.

தந்தை வந்து பேசுகிறார். பாடிக் காட்டுகிறார். நண்பரும் தந்தைக்கு கற்றுத் தருவதாக சொல்லி விட்டபின் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்க இதுக்கு முன்னாடி  பாட்டு கத்துக்கிட்டிங்களா?

இல்லைங்க. நான் வெறும் பாத்ரூம் பாடகன் தான். இன்ட்ரெஸ்ட் இருக்கு, அவ்வளவுதான். கொஞ்சம் முறையா கத்துக்கலாமுன்னு ஆசை அதனால்தான்...

சந்தோஷம். எப்படி உங்களுக்கு பாட்டு கத்துக்கனும்னு ஆசை வந்தது? உங்க குடும்பத்துல யாராவது பாடுவாங்களா?

எங்க வீட்டுல யாரும் பாட மாட்டாங்க. ஆன எங்க தாத்தா ஒரு பாடகர். அவர் நிறைய சங்கீதம் பாடியிருக்கார்.  கச்சேரி எல்லாம் பண்ணியிருக்கிறார். சினிமாவுல கூட பாடியிருக்கார்.

அப்படின்னா  நான் கேள்விப் பட்டிருக்கலாம்.  உங்க தாத்தா பேரு?

டி. எம். சௌந்தர ராஜன்....

நண்பர் மயங்கி விழுகிறார்.

Monday, October 27, 2014

செந்தமிழ் நாடெனும் போதினிலே.....

செய்தி: நடிகருக்கு சிலை




(Image Courtesy: http://tamil.filmibeat.com/news/fans-unveil-vijay-statue-chrompet-031464.html) 

தமிழனுக்கு சிலை என்ற வார்த்தயை சொன்னாலோ கேட்டாலோ அஞ்சாறு சாமி, நாலஞ்சி பொண்ணுங்க, ரெண்டு மூணு உம்மணாம் மூஞ்சி, ஒண்ணு ரெண்டு நல்லவங்க, ஞாபகத்துக்கு வரணும், வரும். 

இருங்க இருங்க அது போனவாரம், இப்போ நல்லா சிரிப்பு வருது, சிரிச்சி முடிஞ்சதும் வயசானதால வயிறு எரியுது. 

இருவத்தி ஒண்ணாம் நூற்றாண்டில் தமிழகத்தில் கலை பண்பாடு மற்றும் பொதுஅறிவு சிகரம் தொட்டுள்ளது. முப்பது வருசம் முந்தி சினிமா போஸ்டரை உத்துப் பார்த்தாலே (நம்ம மொழி படம் தான்யா!) வீட்ல உரிச்சிருவாங்க எங்களை. 

நீங்கள்ளாம் எங்கப்பா வளந்தீங்க தமிழ்நாட்டிலேதான? இல்ல எங்க அப்பா மட்டும் தான் அப்புடியா? 

சே, விவரம் தெரியாமலே வளந்துருக்கேன், இது மட்டும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா இருவது வருசத்துக்கு முன்னாடியே தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு திருப்பி விட்டிருப்பேன், என்னோட எளமை தான் வீணாபோச்சு, நம்ம பயலுக வீணாயிறக்கூடாது. கைல கால விழுந்தாவது பயலுகளுக்கு நல்ல புத்தி சொல்லி, படம் பாக்க அனுப்பி வைக்கணும். 

நாட்டுக்கு இன்னும் நெறைய சிலைகள் தேவை, 
இனிமேலும் தாமதிச்சா இனத்துக்கே அவமானம்!


Tuesday, October 14, 2014

பாதயாத்திரைப் பயணம்

சனிக்கிழமை காலை ...

'எல்லாம் எடுத்திக்கிட்டாச்சா'னு ஒருமுறை பார்த்துக்கங்க என்ற அன்பான தங்கமணியின் அக்கறையில், தண்ணீர் குடுவை, சிலபல கொறிக்கும் பதார்த்தங்கள், குளிருக்கு ஒரு மென்கம்பளிச் சட்டை (fleece), ஐ.டி.கார்டு, பணப்பை (wallet), கைத் தொலைபேசி, எல்லாம் ரெடி.  கெளம்ப வேண்டியது தான்.  சரி, போய்ட்டு வருகிறேன் என்று, 'மேப் மை வாக்'ஐ கிளிக்கி ...

நான் ஒரு வழியாகப் போகலாம் என்றிருந்தால், 'அந்த வழிகள் பெரிய பெரிய சாலைகள், உயிருக்கு உத்திரவாதமில்லை.  அதனால், குறுக்கு சாலையிலயா (லிஸ்ட் அடுக்கப்படுகிறது) போயிட்டு மரியாதையா வாங்க.  எங்காவது மட்டையாயிட்டா உடனே கூப்பிடுங்க.  (மட்டையாயிட்டு எப்படிக் கூப்பிடமுடியும் ! :))  அப்பப்ப தண்ணி குடிச்சுங்கங்க, மறக்காம ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை கூப்பிட்டு எங்க இருக்கேனு இற்றைப்படுத்துங்க‌ (update).  எவ்வளவு நாள் வெயிலடிச்சுது அப்பலாம் கிளம்பாம, குளிர‌ ஆரம்பிக்கும் போது அப்படி என்ன நடைப் பயணம் வேண்டிக்கிடக்கு' என்று தங்கமணியின் குரல் மெல்லத் தேய்ந்து (fade) குறைய‌, வீட்டை விட்டு ஒருசில நூறு அடிகள் கடந்து அடியேனது பாதயாத்திரை துவங்கியது.  இலக்கு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடக்கலாம் என்று!

அதிகாலைக் குளிரில், கதிரவனின் ஒளியில் நடக்க ஆனந்தமாக இருந்தது.  சர்சர்னு சிற்றுந்தில் கடந்த சாலைகளில், ரொம்ப நேரமா நடக்கற மாதிரி தோன்றியது.  இவ்ளோ நேரம் ஆச்சு, இன்னும் இந்த சாலையிலேயேவா இருக்கிறோம் என்று தோன்றியது.  வழியில் ஆங்காங்கே நகர சபை(city council)க்கு என்னைத் தேர்ந்தெடுப்பீர் எனும் பதாகைகள் பல வீடுகளின் முன்பு அறிவித்திருந்த‌ன.  வருகிற நவம்பரில் தேர்தல்.  பெரிய சாலைகளில் நடப்பதற்கு தனிச் சாலையும், மறுபுறம் கடப்பதற்கு பொத்தானும்  இருந்தன.  சிறிய சாலைகள் தான் எதுவுமே இல்லாமல், கொஞ்சம் அச்சம் விளைவிப்பதாய் இருந்தன.  ஒரு குறுஞ்சாலையில், ஆளரவமின்றி இருக்க, திடீரென எதிரில் தூரத்தே இரு ஆண்கள்.  மனதில் கொஞ்சம் பீதி ஏற்படத்தான் செய்தது.  வெள்ளைக்காரர்களா இருந்தா (பொய் சொல்லமாட்டங்க எனும் நகைச்சுவை எண்ணம் மறந்து), பரவாயில்லை, வேறு எவராவதா இருந்து நம்ம ஏதாவது பண்ணிடுவாங்களோ என்று மனம் சிறிது யோசித்தது.  அந்த அளவிற்கு எல்லாம் போகவில்லை.  சற்றே நெருங்கி அவர்களைக் கடக்கையில், 'ஹவ் ஆர் யூ'  என்று அசோகன் பாணியில் அடிவயிற்றில் இருந்து கேட்டுவிட்டு கடந்து விட்டன‌ர்.  அப்பாடா என்றிருந்தது.


இந்த மாதிரி ஆட்கள் சிலநேரம் வழிமறிந்து கையில் எவ்ளோ வச்சிருக்கேனு கேட்டு, நம்மிடம் இருக்கத புடுங்கிட்டுப் பற‌ந்துடுவாங்கனு எல்லாம் கேள்விப்பட்டதினால, பையில் எப்பவும் ஒருசில பச்சை நோட்டுக‌ள் மேலாப்பல வைத்திருப்பேன்.  பின் பாக்கெட்ட்ல இருந்து எடுக்கக் கூடாதாம் .. ஏன்னா துப்பாக்கி தான் நாம் எடுக்கறோம்னு அவன் சுட்டுட்டு போய்டுவான் என்றெல்லாம் எனது நண்பர்கள் சொல்லியிருந்தார்கள்.

சிறிது தூரம் நடந்து சிலபல பொத்தான்கள் அமுக்கி சாலைகள் கடந்து நகரப் பூங்கா அருகில் இருந்தேன்.  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் வந்து செல்லும் இடம்.  (கோபால் பல்பொடி ஞாபகம் வருகிறதா?:))  சனிக்கிழமை ஆதலால், பல்வேறு விளையாட்டுக்கள், பிறந்த பிஞ்சுக்களில் இருந்து பதின்ம வயது இளைஞர்கள் வரை.  ஸாஃப்ட் பால், பேஸ் பால், ஸாக்கர், இன்னும் பல பெயர் தெரியாத விளையாட்டுப் போட்டிகள் பல வண்ணங்களில் ந‌டந்து கொண்டிருந்தன.  நடைமேடையில் பலரும் தங்கள் செல்லப் பிராணிகளான நாய்கள் இழுத்துச் செல்ல, அவைகளைத் தொடர்ந்திருந்தனர்.  எப்படித் தான் வளர்க்கிறார்களோ?  ஒரு நாய் கூட குரைக்கவில்லை, சண்டித்தனம் செய்யவில்லை, எப்படி என்ற ஆச்சரியம் தொடர்ந்து கொண்டிருந்தது என்னுள்.

போட்டி நடக்கும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் பலர்.  தங்கள் தாத்தா பாட்டி, சொந்தங்கள், என அனைவரையும் கூட்டி வருகிறது இளைய தலைமுறை.  பூங்காவே ஒரு திருவிழா போல திகழ்கிறது.  காணக் கண் கொள்ளா ஆனந்தம்.  நம்மூரில் இது சாத்தியமா ?  எளிதாகச் சொல்லிவிடுவோம், 'வயசான காலத்துல இதெல்லாம் தேவையா' என ...

பூங்காவை சுற்றி வருகையில், விளையாட்டுத் தவிர குடும்பங்களாகப் பலர் அன்றைய மதிய உணவை கரி அடுப்புகளில் சுட்டுக் கொண்டும், அத்தோடு பல கேளிக்கைகளில் திளைத்தும் இருந்தனர்.  பூங்காவினுள் பெரிய நீர்த் தேக்கம், அதன் நடுவில் மென் நீர்த்தூவல்.  பல வண்ணங்களில் படபடத்துச் செல்லும் மீன்குஞ்சுகள்.  நீரோரங்களில் ஒற்றைவால் தவளைக்குஞ்சுகள்.  ஒருசில வாத்துக்கள்.  இவை எல்லாவற்றையும் ஒரு எல்லைக்குள் வைக்கும் விதமாக ஒரு பெரிய பூந்தோட்டம்.  குளிர் ஆரம்பித்திருப்பதால், பூக்களின் விளைச்சல் குறைய ஆரம்பித்திருந்தது.

பூங்காவைக் கடந்து, மற்றொரு பெருஞ்சாலயில் நடையைக் கட்டிய போது தூரத்தே ஒருவர் ஓடி வருவது தெரிந்தது.  ஆணா?, பெண்ணா?, என்று அனுமானிக்கமுடியவில்லை.  சற்றே பெருஞ்சாலை ஆதலால் சர்சர் என்று சிற்றுந்துகளின் உறுமல்.  கிட்டே நெருங்க நெருங்க பதின்ம வயதுப் பெண் அவர்.  இழுத்துப் போர்த்திய மேலாடையும், அரை நிஜாரும், கையில் தண்ணீர் குடுவையும், காதுகளில் இசைக்குழாயும் சொருகி மெய்மறந்து, சற்றும் ஒரு ஜீவன் தன்னை எதிர்கொண்டு செல்கிறது என்ற எண்ணமில்லாமல் என்னை கடந்து விட்டிருந்தார்.

இதன் நடுவே அலைபேசி அழைப்பில் தங்கமணி.  சொல்றத கேளுங்க, அங்கே இருங்க, வண்டிய எடுத்துட்டு வர்றேன்.  எதுக்கு வீராப்பு என்று அடுக்க, வழக்கம் போல அவர்களது அன்பான எண்ணத்திற்கு வளையாமல், சிறிது இடைவெளி எடுத்து, நீர் அருந்தி, தின்பண்டங்கள் கொரித்து, வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்.  குளிரிலும் வந்த சூரியனின் கதிர்கள் கண்களைக் கூசின.  மதியம் ஆகி இருந்தது.  மேப் மை வாக்கை பார்த்தால், பன்னிரெண்டு மைல்கள் காட்டியது.  சந்தோஷத்தில் கை கால் புரியவில்லை.  துள்ளிக் குதிக்கலாம் என்றால் அப்போது தான் கால்களில் லேசாக வலி எடுக்க ஆரம்பித்திருந்தது.  இன்னும் ஒன்னரை மைல்கள் நடக்க வேண்டும் வீட்டிற்கு.  நடந்து, ஆண்டவன் புண்ணியத்தில் இந்த நாள் நடைபயணத்தை முடித்துக் கொண்டாயிற்று!

நடப்பது சுகம் ! தொடரும் ...