சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
பளார்னு கன்னத்தில் அறைந்தது போலிருந்தது இவ்வரிகளைப் படித்தபோது !!! இன்றுவரை என்னத்த பண்ணிதான் கிழிச்சோம் நாமெல்லாம் !!! அரசியல்வாதியாகட்டும், திரைத்துறையினராகட்டும், எத்தொழில் செய்பவராகட்டும், அட சாதாரண சக மனிதனாகட்டும் ...
நல்வழி, மூதுரை, ராமாயணம், மகாபாரதம் இப்படி எண்ணற்ற இதிகாசங்களை வழிவழியாகப் படித்தோம், படித்துக் கொண்டு வருகிறோம். எல்லாம் படித்தும், இன்னும் சூதும் வாதும், ஏச்சும் பேச்சும் வளர்ந்து வந்திருக்கின்றனவே அன்றி குறைந்ததாய் தெரியவில்லை. இன்றைய கார்ப்பரேட் உலக வாழ்வு ஒன்றே இதற்குச் சிறந்த உதாரணம். அரசியல்வாதிங்க எல்லாம் இவங்க மேசையில தூசு. மேலதிகார வர்க்கத்தின் அரவணைப்பிருந்தால் டீ பாய் கூட குறுகிய காலத்தில் பீப்பாய் ஆகிடலாம். 'சர்வைவல் ஆஃப் தெ ஃபிட்டஸ்ட்'னு இதற்கு சால்ஜாப்பு வேறு. 'உண்மைகளைப் படித்து வாழமுடியுமா ? என்னங்க நீங்க இன்னும் அந்தக் காலத்து ஆளு மாதிரி இருந்துகிட்டு (அதற்குள் நமக்கு 50 - 60 அகவை தந்த தமிழ்சங்க பிரசிடென்ட் ஐயாவுக்கு நன்றிகள் :)) 'படிச்சோமா, முடிச்சோமா, அடுத்து எவனடா கவுக்கலாம்னு பாப்பீங்களா, அத விட்டுட்டு' என்று தான் இருக்கிறது இன்றைய உலகம். பட்டுக்கோட்டையார் அன்றைக்கு (அநேகமா 40 - 50 ஆண்டுகளுக்கு முன்) எழுதிய மேற்கண்ட பாடலில் உலகம் இன்றும் துளியும் மாறவில்லை என்பது எவ்வளவு நிதர்சனம்.
வளர்ந்த(தாக நினைக்கும்) ஜென்மங்களிடம் சொல்லி என்ன பிரயோஜனம்? 'ஐந்தில் வளையாதது ஐம்பதிலா வளையும்?!' நாளைய உலகம் யாருடைய கையில்? இன்றைய சிறுவர்கள் தானே நாளைய உலகினர். நாம் அடிப்பதும், திட்டுவதும், சாப்பிடாத பிள்ளையைப் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவதும் தானே செய்கிறோம். அல்லது இதற்கு நேர்மாறாக, எதுகேட்டாலும் வாங்கித் தந்து, செல்லம் கொடுத்து அவர்களைப் பிஞ்சிலேயே சிதைக்கிறோம். சிறுவர்களைப் பற்றி பட்டுக்கோட்டையாரின் சிந்தனையே வேறாக இருந்தது. எடுத்தார் பேனாவை, தெளித்தார் கனலை.
சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா!
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா!( சின்னப்பயலே)
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி! (2)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ
தரும் மகிழ்ச்சி! (2)
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி! --- (சின்னப்பயலே)
மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா - தம்பி
மனதில் வையடா!
வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ
வலது கையடா - நீ
வலது கையடா!
தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா! (தனிமையுடமை)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம்
பழைய பொய்யடா!
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு (வேப்பமர)
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க!
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை (வேலையற்ற)
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே! நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே! நீ
வெம்பி விடாதே!
(திரைப்படம் : அரசிளங்குமரி 1958)
ஒரே பாடலில், அறிவு, காலம், பொதுவுடைமை, மூட நம்பிக்கை என மிகத் தெளிவாகச் சிறுவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதி, 'மனிதனாக வாழ்' எனப் பிஞ்சிலேயே விதைத்தான் அன்றே.
பொதுவா ஒரு பாடல் பற்றி எழுத நினைத்தால், மிகச் சிறந்ததாக நாம் நினைக்கும் சில வரிகளை மட்டும் கோடிட்டு, போல்ட் ஃபான்ட் போட்டு காண்பிப்போம். மற்றொன்று படிக்கிறவருக்கு போரடிக்காம இருக்கணும் என்றும் எண்ணுவோம். அப்படி இப்பாடலில் சிலவரிகளை மட்டும் சிறப்பானது எனப் பிரித்து எடுக்க முடியவில்லை. மாறாக, இப்பாடல் வரிகள் முழுதுமே நம்மைச் சிந்திக்க வைக்கிறது, வைக்கும். ஒவ்வொரு வரியும் சாட்டையாடியாய் நம்மேல் விழும் வரிகள். இப்பாடலின் ஒருசில வரிகள் என் தனித் தளத்தில் (தாய்க் கட்சியில் இருந்து பிரிந்துவிடவில்லை என நாகுவுக்கு நினைவு'படுத்துகிறேன்') முதன்மை வாக்கியங்களாக போட்டுக் கொண்டதில் பெருமை கொள்கிறேன்.
'அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்' என்ற புகழ் பெற்ற நகைச்சுவைக் காட்சி நாமெல்லாம் திரைவழி அறிந்ததே. எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கின், எல்லாம் எங்கேயோ இருந்தே எடுக்கப்படுகிறது. கீதையின் சாராம்சம் போல, 'நேற்று உன்னுடையது இன்று என்னுடையது' என்று ஆகிவிட்டது. இதுவே, நாளை மற்றொருவருடையது ஆகலாம். பட்டுக்கோட்டையாரின் கீழ்வரும் பாடலில் இருந்து கூட மேற்சொன்ன நகைச்சுவை காட்சி பிறந்திருக்கலாம். திருடுவதும், திருடும் கூட்டமும், அதனைத் தடுக்கப் பாடுபடும் சட்டமும், முடிவில் திருடனாய் ஆகிவிடாதே, அதுவே திருட்டை ஒழிக்கும் நல்ல செயல் என்றும் சிறுபிள்ளைக்குப் புரியும் வண்ணம் எளிய தமிழில் நல்வழி தந்தமை பட்டுக்கோட்டையாரின் வல்லமை. அதனைப் புரிந்து அதன்வழி நடக்காதது இன்றைய மனித குலத்தின் பேராசை அன்றி வேறேது ?!
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது (2)
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது (2)
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (2)
திருடாதே ... பாப்பா திருடாதே ...
(திரைப்படம் : திருடாதே 1961)
ஐந்து பைசா திருடினாலும் திருட்டு தான் (உபயம்: அன்னியன் திரைப்படம்), பல்லாயிரம் கோடி திருடினாலும் திருட்டு தான் (உபயம்: 2ஜி ஸ்பெக்ட்ரம் குழுவினர்). முன்னதில் மாட்டுவோர் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு நாலைந்து மாதங்களுக்கு நடமாட முடியாமல் தவிப்பர். பின்னதில் மாட்டினோர் நாலைந்து மாதங்களில் பலத்த வரவேற்பிற்குப் பிறகு கட்சியில் முக்கிய அந்தஸ்த்தைப் பெறுவர். 'பட்டுக்கோட்டை பாப்பாவுக்குத் தான சொன்னாரு, நமக்கு எங்கே சொன்னாரு' என்றல்லவா இப்படிக் கூட்டங்கள் அலைகிறது.
எவ்வளவு சீக்கிரம் தூங்கினாலும் மறுநாள் காலையில் அடிக்கும் அலாரத்தையும் மீறி, தூக்கம் வரும் பாருங்க. அட அட ... அசத்தாலா அப்படியே அமுக்கிப் போடும் நம்மை. ஆனாலும் தொடர முடியாத நிலை. இன்றைய கார்ப்பரேட் உலகில் இதற்கும் நாம் பழகிக்கொண்டோம். சட்டுபுட்டுனு எழுந்தோமா, வண்டிய மிதிச்சு, அல்லது முன்னாடிப் போறவன மிதிச்சு, அடிச்சுப் பிடிச்சு அலுவலகம் ஓடறோமானு இருக்கிறோம். இந்த ஆழ்ந்த தூக்கத்தை அன்றி, அன்றைக்கு திண்ணை தூங்கிப் பசங்களுக்காகவே நிறைய பாடல் பாடியிருக்கிறார் பட்டுக்கோட்டையார். அவற்றை இனிவரும் பதிவுகளில் எழுத எண்ணம். அது சார்ந்த ஒரு பாடல், கீழ்வரும் வரிகளில் பார்ப்போம். இப்பாடலில் வரும் முதல் வரி பின்னாளின் மிகப் பிரபலம் அடைந்தவை. திரைப்படத்தின் பெயராகவும் வைக்கப்பட்டது. இது தம்பிக்கு பாடிய பாட்டு. என்னருமைத் தம்பி தூங்கிக் கிடந்து சோம்பேறி எனும் பட்டம் வாங்கிவிடாதே, விழித்தெழு என்று உசுப்பேற்றும் பாடல்.
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார் (2)
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன் போல்
குறட்டை விடடோரெல்லாம் கோட்டை விட்டார்
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(திரைப்படம் : நாடோடி மன்னன் 1958)எம்>
பாப்பாவிடம் ஆரம்பித்து, சின்ன பயலுக்கு சேதி சொல்லி, தம்பிக்கு அறிவுறைத்து என இவை எல்லாம் நாம் சிறுவர்களாய் இருந்த வயதில் கேட்டு வந்த பாடல்கள் தான். பட்டுக்கோட்டையாரின் வரிகளிலேயே, 'பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது' என்பது போல, வளர்ந்த பின் நம் குணம் முற்றிலும் மாறி, படிச்சதெல்லாம் மறந்து போச்சு. படிச்சு என்னத்த கிழிச்சோம். நாடும் நாமளும் மோசமா போய்கிட்டே தான் இருக்கோம் !!!
கனல் பறக்கும் ...