சென்ற ஆண்டு வெளிவந்த தசாவதாரம் திரைப்படத்தில் கமலஹாசன் ஒரு வரலாற்று செய்தியை தன் கதைக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார். அதுதான் காலம் காலமாக தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சைவ வைணவ மோதல்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றவர்கள் அதே கோயிலுக்குள் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்குள் போயிருக்கலாம். தீவிர சைவர்கள் அந்த பக்கமே திரும்பி கூட பார்க்காமல் போவார்கள். அது வேறு விஷயம்.
தீவிர சைவனான சோழ மன்னன் அந்த பெருமாள் சிலையை பெயர்த்து எடுத்து கடலில் வீசி எறிந்து விட்டான் என்பது வரலாற்று செய்தி. 400 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சிலை கடலில் இருந்து மீட்டு அதே இடத்தில் மறுபடியும் நிறுவப்பட்டது.
அந்த பெருமாளை துதி செய்துதான் குலசேகராழ்வார் தன்னுடைய திருச்சிற்றகூடம் என்ற பகுதியில் வரும் பாசுரங்களை பாடியிருக்கிறார்.
இந்த சிலை உடைப்பு விஷயத்தில் வைணவர்களும் சளைத்தவர்கள் அல்ல. நாகப்பட்டினத்தில் இருந்த புத்தர் விஹாரத்தில் புகுந்து சூறையாடி அங்கு இருந்த பொன்னால் செய்யப்பட்ட புத்தர் சிலையை கொள்ளையடித்தார் ஒருவர். அந்த சிலையை உருக்கி, வந்த தங்கத்தை விற்று, அதில் வந்த பணத்தை கொண்டு பல வைணவ கோயில்களுக்கு திருப்பணிசெய்து வைகுண்டத்துக்கு வழி தேடியவர் வேறுயாருமில்லை- நாலாயிரதிவ்யப்பிரபந்தத்தில் ஆயிரம் பாசுரங்களை பாடிய திருமங்கை ஆழ்வார்தான் அவர்.
இப்படி ஒவ்வொரு சமயத்தாரும் மற்ற சமயத்து கோயில்களை இடிப்பதும் பெயர்ப்பதும் போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் சரித்திரத்தின் பல கட்டங்களில் நடந்ததுண்டு. அந்த நிலப்பகுதிகளில் ஆண்ட அரசர்களுடைய ஆதரவோடுதான் அந்த சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.
ஒட்டக்கூத்தர் தீவிர சைவசமயப்பற்று கொண்ட புலவர். வைனவ கோயில்களை இடித்து, அப்புறப்படுத்திவிட்டு, அங்கே சிவன்கோயில் கட்டிய மன்னனை புகழ்ந்து கவி பாடியிருக்கிறார் அவர். உலகத்தை காக்கும்தெய்வம் என்று துதிக்கப்படும் திருமாலை சிறுதெய்வம் என்று பாடி தன் வயிற்றெரிச்சலை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
இன்று தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்கள் முதலில் ஒரு சமயத்தாரால் கட்டப்பட்டு பிறகு மாற்று சமயத்தாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வேறு தெய்வ சிலைகள் நிறுவப்பட்டன பல ஆதாரங்கள் உண்டு.
கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் வழக்கழிந்து கொண்டிருந்த சமண பௌத்த சமயங்களுக்கு பிறகு வளர்ந்த சைவமும் வைணவமும் பிற்காலத்தில் தான் இப்படி குடுமிபிடி சண்டையில் இறங்கியதாக தெரிகிறது.
பல சமய தலைவர்களும் இந்த சண்டைகளால் பாதிக்கப்பட்டனர். பிற்காலத்தில் கோயில் இடிப்பும் ஆக்கிரமிப்பும் குறைந்து பாடல்கள் மூலம் ஒருவரை மற்றவர் பரிகாசம் செய்யும் நிலை வந்தது. காலப்போக்கில் வேகம் குறைந்தாலும் மாற்றம்பெரிய அளவில் இல்லை.
கல்கியின் பொன்னியின்செல்வன் என்ற நாவலை படித்தவர்களுக்கு ஆழ்வார்க்கடியான் என்ற கதாபாத்திரம் நிச்சயமாக நினைவுக்கு வரும் . வயிறு வலிக்க சிரிக்க வைக்கும்படி பேசும் அந்த வைணவர் வழியில் போகும் சைவர்களை எல்லாம் வம்புக்கு இழுத்து பேசி சைவ சமயத்தை கேலி செய்வார். கல்கி இந்த கதாபாத்திரத்தின் மூலம் சைவ வைணவ சண்டையை தனக்கே உரிய பாணியில் கேலி செய்திருக்கிறார்.
இப்படி நடந்த மதச்சண்டையில் பல தமிழ்நூல்கள் அழிந்தன. குறிப்பாக சமண பௌதசமயநூல்கள், மதம் சாராமல் சொல்லப்பட்ட பல நீதி நூல்கள் அழிந்து போய்விட்டன.
சைவமடங்களுக்குள் கம்பராமாயணம் உள்ளிட்ட வைணவ நூல்களும், சமணசமயநூலான சீவகசிந்தாமணி, பௌத்த மத நூலான மணிமேகலை போன்ற இலக்கியங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த காலத்தில் ஓலைச்சுவடியில்தான் நூல்கள் எழுதப்பட்டன. அவையெல்லாம் கவனிப்பார் இல்லாமல் கரையானுக்கு இரையாகி அழிந்துபோய்விட்டன.
கம்பராமாயணம் மட்டும் இந்த சோதனையிலிருந்து மீண்டது. காரணம் அந்த நூலின் இலக்கியச்சுவை. எல்லா சமயத்தாரும் கம்பராமாயணம் படிப்பதில் ஆர்வம் காட்டினார்கள்.
19ம் நூற்றாண்டில் ராமாயணம் ராஜகோபால பிள்ளை என்ற தமிழ் புலவர் ஒருவர் வாழ்ந்தார். தீவிர வைணவர் - கம்பராமயணத்தில் கரை கண்டவர். அவரிடம் கம்பராமாயணம் கற்ற மாணவர்கள் அநேகம். ஆனால் அவர் பள்ளியில் மற்ற சமயத்தாருக்கு அனுமதி இல்லை.
இந்த செய்தி தெரிந்தோ தெரியாமலோ ஷண்முகம் பிள்ளை என்ற இளைஞன் ராஜகோபால பிள்ளை வீட்டுக்கு வந்தான். வந்தவுடன் பிள்ளையின் காலில்விழுந்து எழுந்தான். "நான் தமிழ் ஓரளவு படித்தவன். தங்களிடம் கம்பராமாயணம் படிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆவல். அருள் செய்து கற்பிக்கவேண்டும்" என்று கெஞ்சி கேட்டான்.
காலில் விழுந்து எழுந்த இளைஞன் முகத்தை பார்த்தார் ராஜகோபலபிள்ளை. நெற்றியில் பட்டையாக விபுதி. கழுத்தில் ருத்ராட்ச மாலை. இப்படி சிவப்பழமாக காட்சி அளித்தான் பிள்ளைக்கோ ஒரே அருவருப்பு.
பெயர் என்ன என்று கேட்டார் பிள்ளை. ஷண்முகம் என்றான் அந்த இளைஞன்.
பிள்ளையின் முகத்தில் அருவருப்பு அதிகமானது. கோபத்தோடு "சைவனுக்கு எல்லாம் நான் பாடம் சொல்ல முடியாது போ" என்று விரட்டினார்.
இளைஞன் எவ்வளவு கெஞ்சியும் பயன் இல்லை வெளியேறினான். ஆனால் அவரிடம் எப்படியாவது ராமாயணம் பாடம் கேட்பதில் தீவிரமாக இருந்தான். எதையும் செய்து அந்த காரியத்தை முடிக்க முடிவு செய்தான்.
சில நாட்களுக்கு பிறகு அதே இளைஞன் ராஜகோபால் பிள்ளை வீட்டுக்கு போய் திண்ணையில் உட்கார்ந்திருந்த அவருடைய காலில் விழுந்து எழுந்தான்.
இப்பொழுது அவன் நெற்றி நிறைய திருமண் காப்பு. வைணவ கோலத்தில் பணிவாக நின்று சொன்னான் - "நான் இப்பொழுது வைணவனாக மாறி விட்டேன் . இனி திருமாலே என் தெய்வம். பெயரையும் ராமனுஜம் என்று மாற்றி கொண்டு விட்டேன் தாங்கள் அருள் செய்ய வேண்டும்" என்றான்.
ராஜகோபலபிள்ளைக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. அன்றே பாடத்தை தொடங்கினார்.
இரன்டு ஆண்டுகள் தொடர்ந்து பிள்ளையிடம் கம்பராமாயணம் பாடம் கேட்டான் ராமனுஜம். அவரிடம் உள்ள ராமணயம் மற்ற நூல்களில் உள்ள புலமையையும் அவருடைய விளக்கம் சொல்லும் ஆற்றலையும் கண்டு
வியந்தான். மிகுந்த விசுவாசத்தோடும் குருபக்தியுடனும் நடந்து கொண்டான்.
சில நாட்களாக ராமனுஜம் பிள்ளையிடம் பாடம் கேட்க வரவில்லை.
திடிரென்று ஒரு நாள் அந்த இளைஞன் பழையபடியே நெற்றி நிறைய விபுதி, கழுத்தில் ருட்ராக்ஷமாலை என்று சைவ திருக்கோலத்தில் வந்து ராஜகோபலபிள்ளை முன்நின்றான். பிள்ளை அதிர்ச்சியில் உறைந்து போனார். சமாளித்துக்கொண்டு கோபத்தில் வாயில் வந்தபடி வசைமாரி பொழிந்தார் .
அந்த இளைஞன் அமைதியாக சொன்னான் - "ஐயா தாங்கள் புலமையில் ஈடுபாடு கொண்டு எப்படியாவது தங்களிடம் ராமாயணம் கற்கவேண்டும் என்பதற்காக மதம் மாறினேன். என் காரியம் முடிந்துவிட்டது. திரும்பவும் சைவனாக மாறிவிட்டேன். தாங்கள் கொடுத்த கல்விக்கு என்றென்றும் நன்றி" என்று கூறிவிட்டு நடையை கட்டினான்.
மறுபடியும் சைவத்துக்கு மாறி பெயரையும் ஷண்முகம் என்று மாற்றிக்கொண்ட அந்த இளைஞன் பிற்காலத்தில் பல தமிழ் நூல்களுக்கு உரை எழுதும் அளவுக்கு வளர்ந்தார். தஞ்சை வாணன் கோவை என்ற நூலுக்கு ஷண்முகம் பிள்ளை உரைதான் சிறந்தது என்று பல அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது விஷயமாக ஷண்முகம் பிள்ளையின் நாடகம் சரியா தப்பா என்று ஆராய்ந்தால் ராஜகோபால் பிள்ளையின் குறுகிய நோக்கத்திற்கு இதுதான் மருந்து என்று நிச்சயமாக கூறலாம்.
விசாலமான பார்வையோடு சமயகாழ்ப்புணர்ச்சி இல்லாமல் வாழ்ந்த புலவர்களும் உண்டு.
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சடகோப ஐயங்கார் என்ற புலவரை உதராணமாக சொல்லலாம். வைணவரான அவர் எழுதிய சிவராத்ரிமகாத்மியம் என்ற நாடகம் அந்த காலத்தில் மிக பிரசித்தமானது. தமிழ்நாட்டில் பல இடங்களில் அரங்கேறியது. இந்த சடகோப ஐயங்கார்தான் தமிழ் தாத்தா உ.வே. சாமினதாய்யருக்கு ஆரம்ப கால தமிழ் ஆசிரியர்.
17ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த அப்பய்ய தீஷிதர் மிகச்சிறந்த வடமொழி அறிஞர். வேலூர் அருகே ஒரு ஜமிந்தார் ஆதரவில் வாழ்ந்த அப்பய்ய தீஷிதர் வடமொழியில் நூறு நூல்கள் எழுதியிருக்கிறார்.
ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை விளக்கி அவர் எழுதியுள்ள நூல்கள் பற்றி வடமொழி கற்றவர்கள் பெரிதும் உயர்வாக பேசுவார்கள். அத்வைதியான அப்பய்ய தீஷிதர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மேல்
நூறு பாடல்கள் கொண்ட ஸ்துதி பாடியிருக்கிறார்.
வைனவமததின் மேலோ மற்ற மதங்களின் மீதோ வெறுப்பு காட்டாமல் தன் சமயக்கொள்கைகளில் உறுதியாக நின்று பற்றற்ற வாழ்க்கை நடத்தினார்.
ஒரு சமயம் தீஷிதர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்ய சென்றார். அமைதியாக, தனியாக நெற்றி நிறைய விபூதி அணிந்து கை கூப்பி நின்றார்.
ஆராதனை செய்து பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கிய அர்ச்சகருக்கு முதிய வயதில் சைவகோலத்தில் நிற்கும் அவரை யாரென்று தெரிந்திருக்க நியாயமில்லை. விபூதியுடன் நிற்கும் சைவர்களை கண்டால் அந்த அர்ச்சகருக்கு எப்போதும் கொஞ்சம் கசப்புதான். முகத்தை சுளித்தபடி பிரசாதம் கொடுப்பார். கர்ப்ப க்ரஹத்துக்கு நெருக்கமாக சென்று ரெங்கநாதரை முழுமையாக தரிசனம் செய்யும் நோக்கத்துடன் சற்று முன்னே நகர்ந்த தீஷிதரை தனக்கு இடையூராக நினைத்து கோபமாக பேசி, அலட்சியமாக தள்ளினார் அர்ச்சகர்.
தன்னை தானே நிதானம் செய்துகொண்ட தீஷிதர் மறுமொழி எதுவும் பேசாமல் கையில் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு நகர்ந்தார். பிரகாரத்தை வளம் வர தொடங்கினார்.
பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்துவிட்டு கர்ப்ப க்ரஹத்துக்கு திரும்பிய அர்ச்சகருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ரெங்கநாதர் பள்ளி கொண்ட இடத்தில் இப்பொழுது ஒரு சிவலிங்கம் காட்சி அளித்தது. அர்ச்சகர் கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தார். சந்தேகமே இல்லை. நிச்சயமாக சிவலிங்கம்தான்.
அவருக்கு தூக்கிவாரி போட்டது. கையும் ஓடவில்லை காலும்ஓடவில்லை. ஏதோ தவறு நடந்துவிட்டது என்று அவருடைய உள்மனம் சொல்லியது. உடனடியாக அவருக்கு சிவப்பழமாக தோன்றிய ஒரு முதியவரை கோபத்துடன் தள்ளிய சம்பவம் நினைவுக்கு வந்தது.
உடனே அர்ச்சகர் அந்த பெரியவரை, அப்பையா தீஷிதரை, தேடி ஓடினார். பிரகாரத்தின் ஒரு பகுதியில் அமைதியாக வலம் வந்து கொண்டிருந்த தீஷிதரை தேடி கண்டுபிடித்து அவருடைய காலில் விழுந்தார்.
பெரியவரே தவறு நடந்து விட்டது. மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சி கேட்டு கொண்டு, தான் கண்ட காட்சியை அவரிடம் சொன்னார். திரும்பவும் காலில் விழுந்த அர்ச்சகரை சமாதானப்படுத்திய அப்பையதீஷிதர் "எல்லாம் ஒன்றுதான்" என்று கூறிவிட்டு அமைதியாக தன் வழியில் நடந்தார்.
மு.கோபாலகிருஷ்ணன்