என்னுடன் கல்லூரியில் படித்த ராஜேஷைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அவனுக்கு எலும்பு மஞ்சை(bonemarrow) யாரால் கொடுக்கமுடியும் என்ற தேடல் மும்முரமாக நடந்து வருகிறது. உங்களால் முடிந்தால் எலும்பு மஞ்சை தானம் செய்ய பதிந்து கொள்ளுங்கள். ராஜேஷுக்கு உதவ நண்பர்கள் சேர்ந்து ஒரு தளம் அமைத்திருக்கிறோம். (http://www.helprajesh.com).
ராஜேஷ் ஒரு நல்ல நண்பன், பரோபகாரி. அவனுக்கு தெரிந்தவர்களாகட்டும் சரி, தெரியாதவர்களாகட்டும் சரி - உதவி தேவைப்பட்டால் முதலில் போய் நிற்பான். அவனுடன் பெங்களுரில் சாயந்திர வேலைகளில் நம் பசியைக்கூட கவனிக்காமல் அவன் பரோபகார அலுவல்களில் நிறைய சுற்றியிருக்கிறேன்(அவனைத் திட்டிக்கொண்டே). அப்படிப்பட்டவனுக்கு இன்று புற்றுநோய். புற்றுநோய் ஏதோ அபூர்வமான மக்களுக்குத்தான் வரும் என்று நினைக்கவேண்டாம். ராஜேஷ் உங்களை மாதிரி ஒரு சாதாரணன். நிறைய சினிமா பார்த்துக்கொண்டு, கிரிக்கெட் விளையாடிக்கொண்டு, வகுப்பில் மேஜையே ஆடும்வரை காலை ஆட்டிக்கொண்டு திரிந்த ஒருவன். சென்ற ஆண்டு கீமோவில் ஆளே அடையாளம் தெரியாமல் ஆகி மீண்டு வந்தவனுக்கு மீண்டும் வந்திருக்கிறது புற்றுநோய்.
அதுவும் அவன் இரண்டாவது மகன் பிறக்கும்வேளையில் இவன் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தான். என்ன கொடுமை!
ராஜேஷ் மாதிரி நிறைய இளைஞர்கள், குழந்தைகள் காத்திருக்கிறார்கள் எலும்பு மஞ்சை தானத்திற்காக. ஆகவே முதலில் பதிந்து கொள்ளுங்கள். ராஜேஷுக்கு பொருளுதவியும் நிறைய தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த நிதி உதவி செய்தால் நல்லது. பொருளுதவி செய்ய விவரத்துக்கு இங்கே செல்லுங்கள்.