காலையிலிருந்து ஒரே கேள்வி மண்டையை குடைந்து கொண்டிருக்கிறது. குளித்துக் கொண்டிருக்கும்போது இந்த வரி ஞாபகத்திற்கு வந்தது. 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'. நேற்று பேங்க் பேலன்ஸ் பார்த்ததாலா, இல்லை பசங்கள் கேட்ட விளையாட்டு சாதனத்தாலா என்று தெரியவில்லை. நீங்கள் நினைக்கிற மாதிரி 'ஒரு நகை நட்டு உண்டா' என்ற டயலாக்கிலிருந்து இல்லை.
மனம் அந்த வரிகளை அசை போட ஆரம்பித்தது. ஆஹா என்ன வரி? எப்படி ஒரு உதவாத பொருளை வைத்து எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறார். இதை புரியும்படி எப்படி மகன்களுக்கோ, காதற்ற ஊசி போல பல விஷயங்களை வாங்கப் பார்க்கும் நம்ம வீட்டு பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டுக்கோ சொல்வது?
இங்க பாரு மக்கா, இதுக்கெல்லாம் அடிச்சிக்கறீங்களே - கடைசீல இத எல்லாமா கொண்டு போகப்போறீங்கன்னு கேட்டிருக்காரு பாருங்க அப்படின்னு ஒரு பில்ட் அப் கொடுத்து ஒரு பெரிய லெக்சர் அடிக்கலாமே. சரி யாரு சொன்னது இதை.
இது நம்மளுக்கு ரொம்ப தெரிஞ்ச விஷயமாச்சே. அட சட்னு பேரு வரமாட்டெங்குது. அதாம்பா பெரிய பணக்காரரா இருப்பாரு. அழகா ஒரு பையன் பிறப்பான். இவர விட வியாபாரத்துல பெரிய ஆளா வருவான். பையன் பேர்கூட திருவெண்காடன். அது பையன் பேரா, அப்பா பேரா? பையன் வியாபாரத்துக்கு வெளிநாடு போயி ரொம்ப பொருளெல்லாம் வாங்கிட்டு வருவான். இவரு போயி திறந்து பாத்தா எல்லாம் வரட்டியா இருக்கும். கோபத்துல பையன அடிக்க தேடுவாரு. ஒரு துண்டுசீட்டுல 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே'ன்னு எழுதிட்டு பையன் எஸ்கேப். பையன் வேறுயாருமில்லை. இறைவந்தான். அப்பறம் இவருக்கு ஞானம் வந்து எல்லாத்தையும் துறந்துட்டு ஆண்டியாவாரு.
அட - இவரு பேரு இப்பகூட தெரியாட்டி கேவலம். பேரு தெரியறவரைக்கும் படுத்தப்போவுது. பல்லிடுக்குல மாட்டின மாம்பழ நாரு மாதிரி உறுத்திட்டே இருக்கும்.
டி.எம். சௌந்தரராஜன்கூட நடிச்சிருப்பாரு. படம்பேரு இவருபேருதான். பாட்டெல்லாம் பிரமாதமாயிருக்கும். இவரு நாயன்மாரா இல்லையா? சரியா தெரியலை. பெரிய சித்தரு. இவரு ஆண்டியா அலையறாரு குடும்ப மானம் போகுதுன்னு இவரு அக்கா ஆப்பத்துல விஷம் வெச்சு இவருக்கு பிச்சை போடுவாங்க. அதுல விஷம் இருக்கறது தெரிஞ்சு ஓட்டப்பம் வீட்டைச் சுடும்னு ஆப்பத்தை கூரை மேல போடுவாரு. வீடு எரிஞ்சி போயிடும். அட வீடு கிடக்கட்டும். அவரு பேரு என்னா. சட்.
அக்கா புருஷனா எம்.ஆர். ராதா கலக்கியிருப்பாரு. ஊர்ல யாரோ கெளப்பிவிட்டு ரெண்டாம் ஷோ போயி, நா ஒருத்தன் தான் தியேட்டர்லியே முழிச்சிருந்தேன். டி.எம்.எஸ். ரொம்ப சின்னவயசா இருப்பாரு. நல்ல கம்பீரம். அவருக்கே இந்த படம் ஞாபகம் இருக்கோ இல்லியோ. நம்மள இந்த ப்ரச்னை இப்படி வாட்டுதே?
அம்மா சாகறவரைக்கும் அந்த ஊர்லயே சுத்திக்கிட்டு இருப்பாரு - இல்லையே அது ஆதி சங்கரர் கதையோ? இல்ல இதுலயும்தானா?? என்னடா ஒரே குழப்பமாயிருக்கு. அம்மா செத்த உடனே கொள்ளி வைக்கும்போது, அம்மா உடலை விறகுக்கட்டையேல்லாம் வாட்டும்னு வாழத்தண்டுங்க மேல போட்டு கொள்ளி வச்சாரு. அப்ப அவர் பாடுன பாட்டுகூட ரொம்ப உருக்கமா இருக்கும்.
அம்மா செத்ததுக்கப்பறம் இவரு கெளம்பி ஊர் ஊரா சுத்துவாரு. ஒரு ஊர்ல திருடனுங்க அரண்மனைல நகைய திருடிட்டு ஓடும்போது இவர் மேல போட்டுட்டு போயிடுவானுங்க. இவர திருடன்னு நினைச்சு ராஜாகிட்ட கூட்டிட்டுபோயி ராஜா இவர கழுவேத்த உத்தரவு போடுவாரு. கழுவேத்தறதுன்னா உங்க எத்தன பேருக்கு தெரியும்? அப்பறம் சொல்றேன். இப்ப சித்தர கண்டுபிடிக்கனும். டி.எம்.எஸ்(இவரு, இவருன்னு சொன்னா சித்தரா, ராஜாவான்னு நீங்க குசும்பு பண்ணுவீங்கன்னு தெரியும்) உடனே ஒரு பாட்ட எடுத்து உட்ட உடனே கழுமரம் எரிஞ்சி போயிடும். அப்பறம் அந்த ராஜாவும் இவரு சிஷ்யனாயி இவரு பின்னாடியே வந்துருவாரு. அந்த சிஷ்யருக்கு ஒரு நாயி தோஸ்த் ஆயிடும். இவரு சிஷ்யரு பந்தபாசம் எல்லாம் உட்றனும்னு சொல்லி அந்த நாய் மண்டைலியே திருவோட்டால ஒரு போடு போட்டு தள்ளிடுவாரு. இவருடைய சிஷ்யகோடி இவருக்கு முன்னாலியே மோட்சம் வாய்க்குவாரு. அட இவ்ளோம் பெரிய மனுஷன். இன்னமும் பேர் ஞாபகம் வரமாட்டிங்குது. என்ன லொள்ளுய்யா இது...
அப்பறம் சோழராஜா வந்து இவரண்ட கண்டுக்குவாரு. சோழராஜா யாருன்ரீங்க. நம்ம மேஜர்னு நெனக்கிறேன். மேஜர் தமிழ்ல சொல்லி இங்கிலிஷ்ல சொல்லாத ஒரே படம் இதுதான்னு நெனக்கிறேன். அப்பறம் கரும்ப வெச்சு சித்தர் பிலாசபியெல்லாம் உடுவாரு. ஆரம்பத்துல இனிக்கும் முடிவுல கசக்குற வாழ்க்க மாதிரி (ஆரம்பம் கரும்போட அடியில இருந்து). அப்பறம் கொஞ்சம் சித்து விளையாட்டுல்லாம் விளையாடுவாரு. விளையாடற பசங்கள கூப்ட்டு மேல ஒரு கூடய கவுக்க சொல்லிட்டு மாயமா அவங்க பின்னாடி இருந்து வருவாரு. ரெண்டு, மூனுவாட்டி இது மாதிரி பண்ணிட்டு அப்பறம் கூடய கவுத்திட்டு தொறந்து பாத்தா - சிவலிங்கமாயிருப்பாரு. அதாம்பா மோட்சம் வாங்கி எஸ்கேப்.
இவ்ள விஷய்ம் ஞாபகம் வருது, பேரு மட்டும் தெரியலையே? அய்யோ, அய்யோ!!!
அப்பறம் எங்கியாவது குளிக்கும்போது ஞாபகம் வந்து யுரேகா, யுரேகான்னு ஓடப்போறேன். அதுசரி. அப்டி ஓட்னது யாரு? போச்சுறா. இன்னொரு பேரும் அவுட்டா? ஆமா நம்ப பட்டினத்தாரு பேரே மறந்து போ...
ஹையா!!!! பட்டினத்தார்!!!!! பட்டினத்தார்!!!!!!! ஆகா நம்ப ஞாபகசக்தியே ஞாபகசக்தி!
யுரேகா பார்ட்டிய அப்பறம் பாக்கலாம். பட்டினத்தார் பத்தி உடனே கூகுளாண்டவர் கிட்ட கேக்கனும். நமக்கு தெரிஞ்ச விஷயத்துல
எவ்ள நிஜம் எவ்ள உல்ட்டானு பாக்கறதுக்கு.