Tuesday, October 28, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 29

அமெரிக்க அதிபர் தேர்தல்.
ஒரு வழியாக தேர்தல் வந்தே விட்டது. வெற்றி பெறப்போவது நாங்கள்தான் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது என்பதாக ரிபப்ளிகன் கட்சியும், டெமாக்ரெட் கட்சியும் ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜமா என்று யாராவது விளக்கினால் நல்லது. நடுநிலையாக விளக்க யாரும் இல்லாவிட்டால் நான் விளக்கலாம் என்று இருந்தேன். “ஜொஞ்சம் வாய மூடிகிட்டு இருக்கியா” என்று என் நண்பர் ஒருவர் சொன்னதால் சரி நமக்கேன் வம்பு என்று விட்டு விடுகிறேன். முடிவு எப்படியும் நவம்பர் 5ம் தேதி தெரிந்து விடப் போகிறது அது வரை காத்திருக்க மாட்டோமா?

ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் நிர்வாக குழுவின் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் அதே நேரம் நிர்வாகக் குழுவின் தேர்தலையும் நடத்திவிடலாம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கும் பலரில் நானும் ஒருவன். அதோடு புதிய குழு வழக்கமான வருடத்திற்கு 3 கலை நிகழ்ச்சி, ஒரு பிக்னிக்கைத் தாண்டி வேறு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்தால் சூப்பராக இருக்கும்.

இலங்கையில் போர்
இது சற்று சென்சிடிவான விஷயம். இலங்கை ராணுவத்தின் இந்த போரில், பாதிக்கப் பட்டுள்ள தமிழர்களுக்கு ஆதரவாக இராமேஸ்வரத்தில் கூடிய சினிமா ப்ரபலங்களுக்கு நடுவே சற்று காரசாரமாக பேசிய இயக்குனர்கள் அமீர் (மெளனம் பேசியதே, பருத்தி வீரன்), சீமான் (தம்பி), பாரதிராஜா, ராமநாராயணன் நால்வரில் அமீர் மற்றும் சீமான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் சீமானின் பேச்சை அவரது இணைய தளத்தில் கேட்டேன். மிக வேகமான சொற்பொழிவு. பலருடைய உணர்வுகளை தூண்டி வெறியேற்றக் கூடிய பேச்சு. கைது செய்யாமல் விடப்பட்ட மற்ற இருவரோடு திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும் என்று பல கட்சிகள் கூறி வருகின்றன. இதே நேரம் வைகோ மற்றும் அவர் கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதில் யார் சொல்வது சரி யார் சொல்வது தவறு என்று பார்க்க வேண்டிய அதே நேரத்தில் அனைவரும் பல அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்குவது வன்மையாகக் கண்டிக்கதக்கது. இவ்வளவு நடக்கும் சமயம் தமிழக முதல்வர் தன் பங்கிற்கு தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமாவை வாங்கி வைத்திருக்கிறார். மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜிநாமா செய்வோம் என்று பத்திரிகைகளுக்கு செய்தி சொல்லியிருக்கிறார். இதில் இலங்கையில் அவதிப் படும் அப்பாவி பொதுமக்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை. இது ஒரு சினிமாவின் திரைக்கதை மாதிரிதான் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று ராஜிநாமா செய்வதாக இருந்தால் அதை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும் அல்லது பிரதமரிடம் தர வேண்டும் இரண்டும் இல்லாமல் தான் வாங்கி வைத்துக் கொண்டு, சும்மா பயம் காட்டுவது என்ன மனிதாபிமான நடவடிக்கை என்று தெரியவில்லை. இதில் அப்பாவி மக்களின் நிலையை நினைத்து தனக்கு தூக்கம் வரவில்லை என்று உருகி உருகி ஒரு டைலாக் வேறு.

இந்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட் மாட்ச்
இந்தியா இரெண்டாவது டெஸ்ட் மாட்சில் 320 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை போட்டு துவைத்து எடுத்து வெற்றி பெற்று இந்த 4 டெஸ்ட் போட்டியில் 1-0 என்று முன்னனியில் இருக்கிறது. இன்னும் இரண்டு டெஸ்ட் மாட்ச் இருக்கிறது. ஆஸ்திரேலியா இதை விட தீவிரமாக அடுத்த இரண்டு டெஸ்ட் மாட்ச்சுகளையும் எதிர் கொள்ளும். அப்போது அவர்களை சமாளிக்க சச்சினின் ஆட்டம் மிக மிக முக்கியம். என்ன செய்யப் போகிறார்கள் இந்திய அணியினர் என்று சற்று படபடப்பாகத்தான் இருக்கிறது.



ரிச்மண்டில் கிரிக்கெட்

ரிச்மண்டில் கிரிக்கெட் அமோகமாக நடப்பது சமீபத்தில் ஒரு நண்பர் மூலம் தெரியவந்தது. அவர் சொன்ன இந்த வெப்சைட்டில் விளையாடும் பலரை பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.
www.greaterrichmondcricketclub.com. இதைப் போல வேறு அணியின் வெப்சைட்டின் தகவல் தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஆமாம், RTS –ம் ஒரு அணியை தயார் செய்து கிரிக்கெட் விளையாடலாமே?

டிவிங்கிள் டிவிங்கிள் பாட்டு.
யூ டுயூப்பில் சுட்டு பதிவு நானும் போடுவேனே!
இந்த பாட்டைக் கேளுங்கள், சூப்பரா இருக்கு.



பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.

8 comments:

  1. உங்கள் நண்பருக்கு ஒரு பெரிய கும்பிடு எங்களை உங்கள் 'நடுநிலை' விளக்கத்திலிருந்தும் 'மனத்தெளிவிலிருந்தும்' காப்பாற்றியதற்கு. அவரை அனைத்து விஷயங்களிலும் கலந்தாலோசித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள் ;-)

    'மூன்று கலைநிகழ்ச்சி, ஒரு பிக்னிக் தாண்டி' நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் என்ன ரீ எலெக்ஷனுக்கா நிற்கிறேன் சாதனைப்பட்டியல் போட... கழகப்பாணியில் - எங்கள் சாதனைகளை ரிச்மண்ட் நகர மக்கள் அறிவார்கள்...
    (I am Nagu Parasu and I approve this message)

    ராஜினாமா கடித நாடகம் ஒரு அவலம். இவர்கள் ராஜினாமா என்று பயமுறுத்துவார்கள். முகர்ஜி வந்து பேசுவார். அரசுக்கு பாதிப்பு வராது என்று உறுதிமொழி வாங்குவார். நாங்கள் மட்டுமா எங்கள் நிலைப்பாட்டை மாற்றினோம் என்பார்கள் இவர்கள். அனைவருக்கும் கரகோஷம். ஈழத்தமிழன் நிலையில் ஒரு கிஞ்சித்தும் மாற்றம் இருக்காது :-(

    கிரிக்கெட் போட்டியில் ஆடியே தீருவேன் என்று கும்ப்ளே ஒற்றைக்காலில் நிற்கிறார். இதனால் பாண்டிங் நடுங்கும் பஜ்ஜி அல்லது கலக்கிய மிஷ்ராவுக்கு இடமில்லை. கேட்டால் நான் போன நூற்றாண்டில் நான் இங்கே பத்து விக்கெட் எடுத்தேன் என்று மார்தட்டல். இந்த நிலைப்பாட்டுக்கு என்ன விலை கொடுக்கப்போகிறோம் என்று கொஞ்சம் கவலையாக இருக்கிறது.



    ரிச்மண்ட் கிரிக்கெட் அமர்க்களமாக இருக்கிறது. விளையாடுபவர்களின் போட்டோ வரலாறு சாதனைகளுடன் கிரிக் இன்போ தளம் ரேஞ்சுக்கு கலக்குகிறார்கள். ஏன் RTS பேரில்? விளையாட ஆர்வமிருப்பவர்கள் அந்த கிளப்பில் சேர்ந்து ஆட வேண்டியதுதானே? :-)

    ReplyDelete
  2. Twinkle twinkle little star is superb,

    Nagu sir, I think the tamil sangam needs your support always!

    ReplyDelete
  3. நீர்வைமகளே வருக! நேரிய பதிவுகள் தருக!!

    நாகு சார்?ஆ. விட்டால் டிசம்பர் முடிந்தவுடன், முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவீர்கள் போலிருக்கிறதே...

    ReplyDelete
  4. நாகு,

    //உங்கள் நண்பருக்கு ஒரு பெரிய கும்பிடு எங்களை உங்கள் 'நடுநிலை' விளக்கத்திலிருந்தும் 'மனத்தெளிவிலிருந்தும்' காப்பாற்றியதற்கு. அவரை அனைத்து விஷயங்களிலும் கலந்தாலோசித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள் ;-)//

    எங்க ஊர் பக்கம் சொல்வார்கள் 'அமாவாசை சோறு தினம் தினம் கிடைக்காது' என்று, உங்களின் வேண்டுகோளுக்கும் எனது பதில் அதுதான்.

    ஆமாம் நான் மனத்தெளிவு பற்றி பேசவே இல்லையே! ஓ அந்தத் 'தெளிவா' புரியுது புரியுது. நான் காந்தி ஜெயந்தி அன்னிக்கு கண்டிப்பாக தெளிவாகத்தான் இருப்பேன். அப்ப பேசிக்கறேன்.

    நான் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி சொல்லததற்கு என் நண்பர் மட்டும் காரணம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் அதனால் அதைப் பற்றி அதிகம் பேசாமல் விட்டு விடுகிறேன்.

    அந்தக் கிரிக்கெட் க்ளபில் விளையாட எனது நண்பர் ஒருவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவர் பயிற்சிக்குகூட போகாமல் சும்மா அலுவலக வேலை, வீட்டு வேலை என ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறார்.

    நீர்வைமகள்: யூட்யூப் விபரம் எனது நண்பருக்குச் சொல்ல ஒருவர் சொல்ல அவர் எனக்கு சொல்ல நான் சொந்தமாகக் கண்டு பிடித்தது போல ஒரு இணைப்பு எழுதி விட்டேன்.

    நீங்கள் ஒரு முறை ஒரு தமிழ் படத்தை பார்த்து விட்டு விமர்சனம் எழுதச் சொன்னீர்களே ஞாபகம் இருக்கிறதா, அந்தப் படம் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் வாங்கிப் பார்த்து விட்டு ஒரு பதிவில் அதைப் பற்றி எழுதிவிடுகிறேன்.

    பித்தன்.

    ReplyDelete
  5. நாகு,
    போன பின்னூட்டத்தில் சொல்ல மறந்து விட்டது. அலுவலகத்தில் ஒரு நண்பர் "RTS என்ன பண்றாங்க 3 program 1 picnic தாண்டி" என்று கிண்டலடித்தார், சரி உங்க வாயைக் கிண்டினா நீங்க உங்க சாதனைப் பட்டியலை எழுதுவீர்கள் அவர் கிட்ட காட்டி "இத பாருப்பா RTS சாதனைகள்" னு சொல்லலாம் என்று இருந்தேன், கவுத்திட்டீங்க.

    பித்தன்.

    ReplyDelete
  6. Dear Piththan Peruman
    The movie I asked was "Illakkanam"
    I would also like you to write a criticism on "Thanam"
    Thanks

    ReplyDelete
  7. //கிண்டினா நீங்க உங்க சாதனைப் பட்டியலை எழுதுவீர்கள் //
    அவ்ள சுலபமா எங்க ரகசியத்தை எல்லாம் வெளியே விடுவோமா?

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!