Thursday, August 11, 2016

ஜயமோகன் கட்டுரையின் மீது எதிர்வினை




டி.எம். கிருஷ்னாவுக்கு மெகஸாசே விருது கொடுத்தது பற்றிய ஜயமோகனுடைய கட்டுரையைப் படித்தேன். அந்த கட்டுரையின் மூலம் அவர் பொதுவாக இன்றைய கர்நாடக சங்கீத உலகத்தில் இருக்கும் பலவீனங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இது தொடர்பாக என்னுடைய கருத்துக்களை பதிவு செய்கிறேன்.
அதற்கு முன் ஒரு சில வார்த்தைகள் விருது யாருக்குக் கொடுத்தாலும் அது பற்றி விமர்சனம் எழுவது இயல்பான விஷயம் உலக  சமாதானத்துக்கான நோபல் பரிசை ஹிட்லருக்குக் கொடுத்தாலும் ஆதரிப்பவர்கள் .இருப்பார்கள் அதே பரிசை காந்திக்குக் கொடுத்தாலும் விமர்சனம் செய்பவர்கள் இருப்பார்கள் நல்ல வேளையாக காந்திக்கு யாரும் எந்த பரிசையும் கொடுத்து விடவில்லை.
 
கிருஷ்னாவின் விருதுக்கான தகுதி பற்றிய விமர்சனம் சரியாக இருக்கலாம். அவர் தகுதியில்லாதவராகக் கூட இருக்கலாம். அது பற்றி அழுத்தமான அபிப்பிராயம் சொல்ல நான் கர்நாடக இசையின் மீது தீவிர ஆர்வம் கொண்டவன் அல்ல. பெரிய ரசிகனும் இல்லை. கேட்க இனிமையாக இருந்தால் கேட்பேன். மற்றபடி என்ன ராகம் என்று கூட தெரியாதவன். கர்நாடக சங்கீதம் மட்டுமல்ல ஹிந்துஸ்தானி சங்கீதம் பற்றியும் என்னுடைய நிலைபாடு இதுதான். .நான் கர்நாடக மாநிலத்தில் இருந்த பத்தாண்டுகளில் நல்ல பல ஹிந்துஸ்தானி சங்கீத நிகழ்ச்சிகளைக் கேட்டிருக்கிறேன்.
கிருஷ்னாவுக்குக் கொடுக்கப்பட்டது அவருடைய இசை ஞானத்துக்கு மட்டுமல்ல.அவர் புதிய முறையில் கர்நாடக இசையை பாமர மக்களுக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்.. அது வெற்றிகரமாக அமையாமல் போயிருக்கலாம் மூடிய கதவுகளால் சபாவுக்குள் முடங்கிக் கிடக்கும் கர்நாடக இசையை ஒரு கிருஷ்னா மட்டும் வெளிக் கொணர முடியாது. ஆனால் அது பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

அந்த முயற்சியை மோசமான வார்த்தைகளால் ஜயமோகன் கிண்டல் செய்திருக்கிறார் சில சாதனையாளர்களூடைய பலவீனம் இதுதான். தனக்கு விருப்பமோ உடன்பாடோ  இல்லாத ஒருவிஷயத்தை மற்றவர்கள் செய்யும்போது அதை தன்னுடைய துறையில் தனக்குள்ள  பிடிப்பாலும் திறமையினாலும் கடுமையான வார்த்தைகளால் கேலி செய்கிறார்கள். ஜயமோகன் இதைத்தான் செய்திருக்கிறார். ஜயமோகன் என்பவர் நல்ல எழுத்தாளர் என்பதனால் இலக்கியம் அல்லாத பிற துறைகளீலும்  அவர் கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அவருடைய கருத்துக்களை ஏற்க வேண்டியதும் இல்லை.அவர் என்ன கடுமையான விமர்சனம் செய்தாலும் இன்றைய கர்நாடக சங்கீ உலகம் சில குழுக்களின் கைக்குள் அடங்கிக் கிடக்கிறது. இந்த உண்மையை அவரும் சொல்லுகிறார். ஆனால் அது ஐயர்,ஐயங்கார் என்ற இரு குழுக்களிடம் இருப்பதாகக் கூறுவது சரியான வாதம் இல்லை.
இசை உலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குழுக்களிடையே ஐயர்-ஐயங்கார் மோதல் இல்லை. அங்கே இருக்கும் ஒவ்வொரு பிரபலத்தைச் சுற்றியும் ஐயரும் உண்டு ஐயங்காரும் உண்டு. அவர்களுக்குள்ளே மோதலும் சமரசமும் அடிக்கடி இருக்கும் எல்லாமே கவுரவப்,பிரச்ச்னைதான் தன்னுடைய பிடியை இறுக்கமாக வைத்திருக்கத்தான்.. சபாக்களின் பதவி. பொறுப்பு எல்லாம் சாதி அரசியல் சார்ந்துதான் இருக்கும் இதற்காக பிராமணர்களை மட்டும் குறை, கூறுவதில் அர்த்தம் இல்லை. எல்லா துறைகளிலும் ஏதாவது ஒரு சாதியின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது..சமீப கால மாக எனக்கு புத்தகப் பதிப்புத் துறையில் சில அனுபவம் கிடைத்தது.அங்கேயும் அழுத்தமான சாதிப் பிடிப்பு இருக்கத்தான் செய்கிறது. மற்ற சாதியினர் அவ்வளவு சுலபமாக பதிப்புத் துறையில் தடம் பதித்துவிட முடியாது பாவம் நல்ல பல எழுத்தாளர்கள் படும் அவதியைக் கேட்டால் ஒரு சோகக் கதை எழுதலாம்.
பழைய விஷயங்களை காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை விடாப்பிடியாக பேசிக் கொண்டிருப்பவர்களை கர்நாடகம் என்று குறிப்பிடுவது வழக்கம் அந்த சொல் கர்நாடக இசைத் துறைக்கு மிகப் பொறுத்தம் என்று தோன்றுகிறது. இன்று கூட குருகுல வாசத்தின் மிச்சசொச்சங்களை இசைத்துறையில் பார்க்க முடியும் குருகுல வாசத்தின் நல்லிணக்கமான அம்சங்களை இழந்து பல தலைமுறைகள் ஓடிவிட்டன..ஆனால் அதன் எதிர்மறையான அம்சங்கள் இசைத் துறையில் இன்றும் கோலோச்சுகின்றன.  மத்திய அரசாங்கம் இளம் இசைக்கலைஞர்களுக்குக் கொடுக்கும் மான்யத் தொகையில் பெரும் பகுதியை பிடுங்கிக் கொள்ளூம் மூத்த இசைக்கலைஞர்கள் வெறும் உதாரணம்தான். இன்னும் எத்தனையோ வழிமுறைகளில் இளம் கலைஞர்களை வளர விடாமல் பார்த்துக் கொள்ளும் மூத்த கலைஞர்கள் நிறையவே உண்டு.
 
எல்லா புதிய அம்சங்களுக்கும் எதிராக கொடி பிடிப்பது கர்நாடக இசைத் துறை.யின் வாடிக்கை. நேற்று வரை தமிழ்ப்பாடல்களை மேடையில் பாடுவது தன்னுடைய தகுதிக்கு இழுக்காக நினைத்தவர்கள்.உண்டு. கர்நாடக இசை உலகத்தில் உள்ள சில ஆஷாடபூதிகள் இளையராஜாவை இன்றுவரை இசைஞானம் உள்ளவராக ஏற்றுக் கொள்ளவில்லை. குன்னக்குடி வைத்தியனாதன் மேளத்தை பக்கவாத்தியமாக வைத்துக் கொண்டு இசைநிகழ்ச்சி நடத்தியதை ஏதோ பாவ காரியம் போல நினைத்து விமர்சனம் செய்தவர்கள் உண்டு. இவர்களை எல்லாம் மீறித்தான் இசை உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. தியாகையருடைய காலத்துடன் இசை உலக இயக்கம் நின்று போய்விட்டதாக நினைப்பவர்கள் செய்யும் அமர்க்களம் முடிவுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதாவது புதிய முயற்சியில் இறங்கி இசைத்துறையை காப்பாற்ற வேண்டியது அவசியம்தான். அந்த புதிய முயற்சியின் ஒரு பகுதிதான் கிருஷ்ணாவின் செயல்பாடுகள். அதற்கு மெகஸாசெ விருது கொடுக்கப்பட்டது என்றால் அவருடைய முயற்சிக்கு சர்வ தேசிய அங்கிகாரம் கிடத்திருக்கிறது என்றுதான் அர்த்தம். இதில் ஐயர்-ஐயங்கார் அரசியலைப் பார்ப்பது கோணல் பார்வையாகப்படுகிறது.

 மேலும் ஹிந்து பத்திரிகையை வம்புக்கு இழுப்பது போன்ற எழுத்து நோக்கம் வேறாக இருக்கும் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது ஜயமோகன் விரும்பினால் தன் கருத்துக்களை எழுதி ஹிந்து பத்திரிகைக்கு அனுப்பலாம்..முயற்சியில் இருக்கும் குறைபாடுகளை பெரிது படுத்தி பழைய நிலை தொடர மறைமுகமாக ஆதரவு கொடுப்பதாகவே நான் நினைக்கிறேன். ஜயமோகனுடைய கட்டுரையில் உள்ள கருத்துக்கள் சங்கீத உலகத்தை அதன் குறைபாடுகளுடன் மேட்டுக்குடி கலையாகவே காப்பாற்றி வைப்பதில்தான் போய் முடியும் என்பது என்னுடைய கருத்து .
                                           -மு.கோபாலகிருஷ்ணன்
 
(எழுத்தாளர் ஜயமோகன் தளத்தில் மற்ற பதிவுகளையும் அவருக்கு வந்த கடிதங்களையும் இங்கு படிக்கலாம்.)