Saturday, October 03, 2015

அசல்கள் ஜாக்கிரதை



சில நாட்களுக்கு முன் வந்த பத்திரிகைச் செய்தியைப் படித்து எனக்கு தூக்கிவாரிப் போட்டது. நீதிமன்றங்களில் செயல்படும் வக்கீல்களில் 20 சத்விகிதம் பேர் போலி வக்கீல்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
இந்த நாட்டில் போலிகளைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்படுவது யாருக்கும் புதியதல்ல. இப்பொழுது பல்வேறு வகையான போலிகளைப் பற்றிய செய்தியை மக்கள் மிகச் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.
வக்கீல்களில் எப்படி போலிகள் இருக்கமுடியும் என்பதுதான் கேள்வி. வக்கீல் படிப்புக்கான தேர்வை எழுதி முடிக்காமல் பலர் வக்கீல்களாகச் செயல்படுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? பார்கவுன்ஸில் எப்படி இவர்களை அனுமதித்தது? அந்த அமைப்பு என்ன செய்கிறது என்பதெல்லாம் குழப்பமாகவே இருக்கிறது.

 போலி டாக்டர்கள் பற்றி நிறைய செய்திகள் கேள்விப் பட்டிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசாங்கம் பல மருத்துவர்களைப் பற்றி விவரங்களைச் சேகரித்தது. அப்பொழுதுதான் பலர் எந்த மருத்துவப் படிப்பும் இல்லாமல் டாக்டர்களாகத் தொழில் செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. பல போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த சமயத்தில் தினசரிகளில் தினமும் போலி மருத்துவர்கள் கைது பற்றி செய்தி வந்துகொண்டிருந்தது. குறிப்பாக கிராமப் புறங்களில் நிறைய போலி மருத்துவர்கள் தொழில் செய்வது தெரியவந்தது.

 என்னுடைய கிராமத்துப் பக்கத்தில் ஒரு போலி மருத்துவர் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு அந்த மருத்துவரைத் தெரியும். ஊரில் அவருக்கு நல்ல பெயர். கைராசிக்காரர் என்று எல்லோரும் சொல்லுவார்கள். குறைந்த செலவில் மருத்துவம் செய்யும் அவர் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுவார். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து நோயாளியின் வீட்டுக்குப் போய் மருத்துவம் செய்வார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நான் ஊருக்குப் போன சமயத்தில் அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் போலி மருத்துவர் என்று அறிந்த பிறகும் மக்கள் அவரைப் பற்றி நல்ல முறையில்தான் பேசினார்கள். அவரைப் பாராட்டினார்கள். அந்த பகுதி கிராம மக்களுடைய வசதிக்கு தக்கபடி குறைந்த செலவில் மருத்துவம் செய்தார் என்பதுதான் முக்கிய காரணம். சில சமயம் நோயாளிகளின் உடல்நிலையைப் பார்த்து அவருக்கு சந்தேகம் வந்தால் தன்னுடைய மருத்துவத்தால் அவரை குணமாக்க முடியாது என்று அவருடைய மனதுக்குப் பட்டால் உடனடியாக திருச்சிக்குப் போய் பெரிய மருத்துவர்களைப் பார்க்கும்படி அறிவுரை கூறுவார். நான் விசாரித்த யாரிடமும் அவருக்கு கெட்ட பெயர் இல்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏறக் குறைய 20 ஆண்டுகள் அந்த பகுதியில் தொழில் செய்த அவரை போலி மருத்துவர் என்று மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் சட்டத்தின் பார்வையில் அவர் ஒரு குற்றவாளி.
 சில மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஊர் திரும்பிய அவர் தொழில் செய்வதை விட்டார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் வேறு ஊருக்குப் போய் விட்டதாகச் சொன்னார்கள். புதிய இடத்தில் பழைய தொழிலைத் தொடங்கியிருக்கலாம்.

மருத்துவப் படிப்பு படித்த அசல் டாக்டர்கள் அடிக்கும் கொள்ளை காரணமாகத்தான் இது போன்ற போலி மருத்துவர்கள் வளர்கிறார்கள் என்ற சாதாரண உண்மையை எப்பொழுது அரசாங்கம் உணருமோ தெரியவில்லை. பொய் கூட சில சமயங்களீல் நன்மை தருமோ என்று எண்ணத் தோன்றுகிறது
  
பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
 நன்மை பயக்குமெனின்
 என்று வள்ளுவர் இதைத்தான் குறிப்பிடுகிறாரோ?

சமீபத்தில் டெல்லி மாநில அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் ஒருவர் போலி பட்டதாரி என்ற செய்தி வந்தது. அடுத்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார். மந்திரியாகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பட்டம் பெற்றதாகச் சொல்லப்பட்ட பிஹார் பல்கலைக் கழகத்துக்கு கைதியாகவே அவரைக் கொண்டு போனார்கள். பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்தார். வழக்கு தொடர்கிறது செய்தி வெளியானவுடன் அவர் கைது செய்யப்பட்ட வேகம் எனக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. இவ்வளவு ஜரூரான நடவடிக்கை எல்லா இடத்திலும் இருக்குமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 மத்தி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக .ருக்கும் மாஜி நடிகை மீதும் இந்த வகை புகார் வந்தது. அவர் போட்டியிட்ட இரண்டு தேர்தல்களில் இருவேறு பல்கலைக் கழகங்களில் ஒரே காலத்தில் படித்து பட்டம் பெற்றதாக அவர் உறுதிமொழியில் தெரிவித்திருக்கிறார். இந்த இரண்டு பட்டத்தில் ஏதாவது ஒன்று போலிப் பட்டமாக இருக்க வேண்டும் என்பது தெரிகிறது. அல்லது இரண்டுமே போலியாக இருக்கலாம். வழக்கு தொடர்கிறது/. அவர்தான் இந்த நாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடனும், கல்வியாளர்களுடனும் கலந்து ஆலோசித்து கல்வி தொடர்பான கொள்கைகளை உருவாக்கவேண்டும். அவர் பற்றிய.புகார் தூங்கிக் கொண்டிருக்கிறது.
 எது எப்படியானாலும் இந்த அரசியல்வாதிகளும் அமைச்சர்களூம் ஏன் போலிப் பட்டத்தை சுமந்து கொண்டு திரிய வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.

 இந்திய அரசியல் சட்டம் அரசியல்வாதிகளுக்கு எந்த கல்வித் தகுதியையும் நிர்ண யிக்கவில்லை . வகுப்பில் பாடம் நடத்தத்தான் ஆசிரியருக்கு கல்வித் தகுதி வேண்டும் மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்காதவர் நாட்டில் கல்வி அமைச்சராக வர முடியும்.பெரிய அறிஞர்களையும் ..எஸ் அதிகாரிகளையும் ஆட்டிப் படைக்க முடியும். அரசியலில் கல்வியும் பட்டமும் பெரிதாக மதிக்கப்படுவதில்லை. பின் ஏன் இந்த போலி பட்டங்களின் மீது ஆசை வைத்து பிறகு மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டும்?

 சென்ற ஆண்டு மத்தி அமைச்சரவை பதவி ஏற்ற சமயத்தில் வந்த ஒரு பத்திரிகைச் செய்தி 25 சதவிகித அமைச்சர்களின் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பும் அதற்குக் கீழும்தான் என்று கூறுகிறது

அவர்கள் எல்லோரும் பதவிக்கு வந்தது அவர்களூடைய கல்வித் தகுதியால் அல்ல. அவர்களுடைய குரல் வளத்தால் என்பது டெல்லி அறிந்த உண்மை. முந்தைய பாராளூமன்றத்தில் கூச்சல் போட்டு கலகம் செய்து நடவடிக்கையை ஸ்தம்பிக்க வைப்பதில் அவர்களுடைய உரத்த குரலைக் கொண்டு பெரிய பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அதற்கான பரிசு இப்பொழுது கிடைத்திருக்கிறது. இப்பொழுதும் கூச்சல் தொடர்கிறது. ஆனால் கூச்சல் போடுபவர்கள் மாறிவிட்டார்கள்.

 மக்கள் வாக்கு அளித்தது அவர்களுடைய பெயருக்குப் பின்னால்  இருக்கும் 2 ஆங்கில எழுத்துக்களுக்காக அல்ல என்பது மட்டும் உறுதி அப்படி இருக்கும்போது இந்தியாவில் அரசியல்வாதிகள் போலிப் பட்டத்தைச் சுமந்து தஙகள் அரசியல் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று புத்திமதி சொல்லத் தோன்றுகிறது ஆனால் நம் பேச்சை யார் கேட்கப் போகிறார்கள்?

சில வருஷங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. என்னுடைய பாலிய நண்பன் ஒருவனை நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சந்தித்தேன்.என்னுடன் உயர்நிலைப்பள்ளியில் படித்தவன். பல ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு படிப்புக்கும் தனக்கும் ஒத்துவராது என்று தெரிந்து கொண்டான். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டான் ஒரு பிரஸ்ஸில் வேலைக்குச் சேர்ந்தான் . பிறகு புக் பைண்டிங் வேலை செய்தான். அதற்குப் பிறகு நான் அவனை சந்திக்கவில்லை.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவனை சந்தித்தபோது அவன் ஒரு கடை முதலாளி. ரியல் எஸ்டேட் வியாபாரி.பல கட்டங்களுக்குச் சொந்தக்காரன். எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி நீண்ட நேரம் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தோம். பாடம் படிக்காமல் வாத்தியாரிடம் அடி வாங்கியது பற்றி கூட சிரித்துக் கொண்டே பேசினான். மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்படும்போது உன்னுடைய போன் நம்பரைக் கொடு என்றேன் ஒரு விசிட்டிங் கார்டை கையில் கொடுத்தான். எனக்கு ஒரே ஆச்சரியம் அவனுடைய பெயருக்குப் பின்னால் M.A என்று போட்டிருந்தது. மகிழ்ச்சி பொங்க பரவாயில்லையே, படிக்கிற காலத்தில் படிக்காமல் போனாலும் போஸ்டலில் படித்து பட்டம் வாங்கினியா என்று கேட்டேன்.
 
யார் சொன்னது நான் படித்தேன் என்று? எதிர்க் கேள்வி கேட்டான்
விசிட்டிங் கார்டில் போட்டிருக்கியே என்றேன்.

அதற்கு Member of Association என்று விளக்கம் கொடுத்தான்.
என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை இதெல்லாம் போலி பந்தாதானே என்றேன்.

நான் கல்லூரி பேராசிரியர் வேலைக்கு மனு போட்டால்தான் அது போலித்தனம். இதனால் யாருக்கு நஷ்டம் என்று எதிர்க் கேள்வி கேட்டான்.
அதுவும் சரிதான் நல்லா பேசக் கற்றுக் கொண்டு விட்டாய் என்றபடி நகர்ந்தேன்.

 எல்லா நேரத்திலும் போலி டாக்டர்களாலும் கேடு இல்லை போலி பட்டதாரிகளாலும் கேடு இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் போலி டாக்டர்களையும் போலி இஞ்சினீயர்களையும் உருவாக்கும் அரசு நிறுவனங்களைப் பற்றி என்ன சொல்வது?
 சமீபத்தில் போபால் நரத்திலிருந்து வரும் அதிர்ச்சி தரும் செய்திகள் படிப்பவர்களை திகைப்பில் ஆழ்த்துகிறது

 போலி மாணவர்கள் கலந்து கொண்டு எழுதிய போலித் தேர்வுகள்,போலி விடைத்தாள்கள் போலி உத்திரவுகள் இப்படியெல்லாமே அடுக்கடுக்காக நடந்து அமர்க்களப்படுத்துகிறது.

பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த இந்த ஊழல்கள் பற்றி சட்ட சபையில் ஒரு சுயேச்சை உறுப்பினர் பல முறை பேசியும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் எந்த பயனும் இல்லை. அதனால் அவர் நீதிமன்றத்துக்கு போனார்.  அடுத்த தேர்தலில் அவர் சட்டசபையில் நுழைய முடியாமல் இருக்க ஆளூம் கட்சி தனி கவனம் செலுத்தி வெற்றி பெற்றது. பிரச்னை தீர்ந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் ஒரு அரசாங்க மருத்துவர் மேலிடத்துக்கு சில செய்திகளை பல ஆதாரங்களுடன் கொடுத்தார். அந்த மருத்துவருக்கு கடந்த இரண்டு ஆண்டுளில் ஏழு இடமாற்ற உத்திரவுகள். எட்டாவது இடமாற்றம் சமீபத்தில் உத்திரவாகி இருக்கிறது. இது தொடர்பாக எல்லா விவரங்களையும் எழுத ஒரு சில பக்கங்கள் போதாது

 இந்த வியாபம் ஊழல் தொடர்பாக இதுவரை 2000 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கில் தொடர்புடைய,கைது செய்யப்பட்டவர்களில் 50 பேர் இறந்து விட்டதாகச் செய்தி பலர் தற்கொலை சிலர் சாலை விபத்தில் இறந்து விட்டதாகச் செய்தி. கவர்னருடைய மகன் உள்பட பலருடைய தற்கொலை பற்றிய சந்தேகத்தை அரசாங்கத்தால் விளக்க முடியவில்லை. பலர் தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாதுகாப்பு கேட்டும் காவல்துறையினரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
 மருத்துவர்கள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,அரசியல்வாதிகள் சில ஏஜண்டுகள்,தேர்வு எழுதிய கேந்திரங்களில் பணி செய்த மூத்த அதிகாரிகள். சில அமைச்சர்கள், அமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர்கள் இப்படி பலர் கைதாகி விசாரனை தொடர்கிறது
 
 நடை பெற்ற பல சோதனைகளில் ஒரு அதிகாரியின் வீட்டிலிருந்து 85 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஒரு அதிகாரியிடமிருந்து 25 கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப் பட்டிருக்கிறது.  
இன்னும் பல வருடங்களூக்கு திகில் படங்களும் மசாலா படங்களூம் தயாரிக்க பாலிவுட் படத் தயாரிப்பாளர்களூக்கு நல்ல கதையும் களமும் கிடைத்திருக்கிறது.

 போலிச் சாமியார்கள்,போலிபத்திரங்கள், போலி பத்திரப்பதிவு என்று சமுகவாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் போலிகள் ஆதிக்கம் செய்தாலும் மக்கள் அதைப்பற்றி கவலைப் படாமல் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால் மனச்சாட்சி உள்ள சிலர் இது பற்றி வேதனையோடு கூறும் சொற்களின் பொருளை காலம் கடந்தாவது மக்கள் உணர்வார்கள்.
 சென்ற சில மாதங்களுக்கு முன் சென்னையில் மிக முக்கிய இடத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 60 ஏக்கர் பரப்பளவு உள்ள புறம்போக்கு நிலம் போலிப் பத்திரத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட வழக்கு விசாரனைக்கு வந்தது அது தொடர்பாக பத்திரப் பதிவுத் துறையின் மாநில உயர் அதிகாரிக்கு சம்மன் அனுப்ப உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அந்த உத்திரவில் நீதிபதி கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்

 நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஒரு நாள் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் நீதிமன்றக் கட்டிடமும் கூட விற்பனையானதாக பத்திரம் பதிவு செய்யப்படலாம் என்று எழுதியிருக்கிறார்

 இந்த போலிகளின் சாம்ராஜ்யத்தில் அசல்களே ஜாக்கிரதை என்று எச்சரிக்கை செய்ய வேண்டும் போல் தோன்றுகிறது
-    மு.கோபாலகிருஷ்ணன்.

3 comments:

  1. பல கல்லூரிகள் அல்லது பல்கலைக் கழகங்கள் உரிய அங்கீகாரம் பெறாது நடத்தப்படுகின்றன. இவைகளில் படிக்கும் மாணவர்கள் இந்த நிறுவனங்கள் தரும் உறுதியைப் பார்த்துவிட்டு அங்கே சேர்ந்து, ஒரு அல்லது இரண்டு ஆண்டுகளில் உண்மை தெரிய வரும்போது இவர்கள் தொடர்ந்து எங்கே படிப்பைத் தொடருவது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

    போலிகள் என்றால் யார் என்பதும் ஒரு வினா ஆகி இருக்கிறது. அங்கீகாரத்துக்கு மனுக் கொடுத்து விட்டு பள்ளி,,அல்லது கல்லூரி துவங்குவது சரியா ? அங்கீகாரம் வந்தபின்பு தான் பள்ளி துவங்கவேண்டும் என்று துவக்க நாள் முதல் சொள்ளத்தவறியது யார் ?

    மூன்றாவது மருத்துவர் படிப்புகள். எம்.டி. ஜெனரல் மெடிசின் படித்தவர் கையாளும் கேசுகளை எம்.டி. பேதாலஜி படித்தவர்கள் கையாள இயலாது. எனினும் இவர்களும் எம். டி. தான். தனது அனுபவத்தில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை தருகிறார்கள்.
    இவர்களை போலி என்று சொல்ல முடியுமா என்றும் தெரியவில்லை.

    நல்ல வேளை . விமான ஓட்டிகளில் இதுவரை போலிகள் இருப்பதாக செய்தி வரவில்லை.

    குஷ்வந்த் சிங் என்னும் பிரபல நகைச்சுவை ஆசிரியர் சொன்னாராம்.

    மருத்துவ வசதி, மருத்துவ அறிவு இத்துனை வளர்ந்ததில் ஒன்றும் புதுமை இல்லை.
    இத்தனை டாக்டர்கள் சிகிச்சை செய்தும் மனிதர்கள் தொடர்ந்து உயிருடன் இருக்கிறார்களே அதுதான் விந்தை .

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. போலிகள் செய்தி மக்களுக்கு சாதாரணமாக போய்விடுகிறது. நாட்டில் அந்த அளவு போலிகள் புழக்கம் அதிகமானாதலோ என்னவோ. அமெரிக்காவில் துப்பாக்கிசூடு செய்திகள் சாதாரணமாக போனது மாதிரி. மக்களும் சரி, மக்களின் பிரதிநிதிகளும் சரி - அதை ஒரு பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்வதில்லை. இதில் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் வேறு 'these things happen' என்று ஏதோ ஒரு பிக்பாக்கெட் அடித்த செய்தி போல சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. போலி பட்டம் என்றதும் நினைவுக்கு வந்தது சமீபத்தில் கேட்ட ஒரு வானொலிப் பேட்டி. ஒரு பெண் அரசியல்வாதி - ஏதோ ஊரில் கவுன்சிலராகவோ ஏதோ பதவியில் இருக்கிறார். அவர் போஸ்டரில் எல்லாம் அவர் பெயருக்கு பின்னால் B.A. M.A. என்று போட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தல் வேட்புமனுவில் ஏழாம் கிளாஸோ, எட்டாம் கிளாஸோதான். இவர்கள் கேட்டார்கள் ஏன் B.A. M.A. என்று போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று. உங்கள் நண்பன் சொன்னது மாதிரிதான் அம்மணியின் பதிலும். அது டிகிரி என்று யார் சொன்னது. எங்க அப்பா பினாங்கிலிருந்தார். அதனால் அவர் பெயர் பினாங் ஆறுமுகம். அப்பறம் அவர் மலேசியா ஆறுமுகம் ஆயிட்டார். அதனால் மலேசியா ஆறுமுகம். சேத்து பி.ஏ. எம்.ஏ என்று ஒரு போடு போட்டார்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!