Saturday, August 22, 2009

மீனாவுடன் மிக்சர் - 10 {வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை)

சமீபத்தில் நண்பர் நாகு "வார இறுதியில் மலை ஏற போகிறோம், வரீங்களா" ன்னு எங்களையும் சேர்த்து சில குடும்பங்களை கேட்டிருந்தார். இந்தியாவிலிருந்து திரும்பி வந்து ஜெட் லாக்ல களைப்பா இருக்குன்னு சாக்கு சொல்லி நான் ஜாலியா படுத்து தூங்கிட்டேன். மிச்ச குடும்பங்களும் வேறு சில காரணங்களால் போகவில்லை.

நாங்க எல்லோரும் இப்படி கழுத்தறுத்த பின்னும் கூட மனம் தளராமல் சென்று மலை ஏறி வெற்றி வாகை சூடி வந்தாங்க நண்பர் நாகுவின் குடும்பத்தார். இவர்கள் மலை மேல் ட்ரெக்கிங் செய்வதில் கால் தேர்ந்தவர்கள் (கை தேர்ந்தவர்கள்னு சொன்னா ஏதோ இலக்கண பிழை போல இடிக்கிறதே!). எங்க குடும்பத்தின் கோட்டாவையும் சேர்த்து இவங்க அவ்வப்போது ஏதாவது மலை அல்லது குன்றின் மேலே ஏறி கொடி நட்டு விட்டு வந்திடுவாங்க. (கொடி நடுவாங்கன்னு தான் நினைக்கிறேன். அவ்வளவு தூரம் கால் கடுக்க ஏறி கொடி நடாமல் திரும்பி வந்தால் என்ன பிரயோசனம்?) இந்த காலத்தில் நாற்காலி உருளைகிழன்காக(அதாங்க couch potato) உள்ள முக்கால்வாசி குடும்பங்களுக்கு நடுவில் இந்த குடும்பத்தின் 'outdoor activities' என்னை கவர்ந்த ஒன்று.

இதில் அதிசயம் என்னன்னா ஏற்கனவே ஒருதரம் எங்கள் குடும்பத்தோடு ட்ரெக்கிங் செய்த அனுபவம் இருந்தும் நாகு மறுபடி எங்களை கூப்பிட்டது தான். என்னை மலை ஏறக் கூப்பிடறதும் பூனையை மடியில் வைத்து கொண்டு சகுனம் பாக்கறதும் ஒண்ணு தான். ஏணியில் நாலு படி ஏறினாலே நான் அசந்து போய் ஸ்டூல் கொண்டு வரச்சொல்லி உட்கார்ந்து நீர்மோர் கேப்பேங்க. போன மாசம் சென்னை போயிறந்தப்போ கூட நல்லி கடைக்குள்ள போய் சில்க் காட்டன் செக்ஷன்லேந்து தஸ்ஸர் சில்க் செக்ஷன் போறதுக்குள்ள காத்து போன பலூன் போல தொஞ்சு போய் ஒரு பன்னீர் சோடா குடிச்சுட்டு அரைமணி உட்காராமல் இனியொரு புடவை பாக்க மாட்டேன்னு என் தங்கை கிட்ட கண்டிப்பா சொல்லிட்டேன். அவளும் உடனே என்கிட்டே கண்டிப்பா சொல்லிட்டா - இனி ஒருதரம் நான் அவளை கடைக்கு போகலாம் வான்னு கூப்பிட்டால் உடனே நாட்டு எல்லையை தவழ்ந்தாவது கடந்து பாகிஸ்தானுக்கு குடிபோயிடுவாள்னு. அவளை சொல்லி குத்துமில்லைங்க பாவம். அதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் பாண்டிபஜார்ல ஒரு சின்னக் கடைக்கு என் துணிகளுக்கு மாட்சிங்கா வளையல் வாங்க போயிருந்தோம். என்னை விட எனக்காக அதிக சிரத்தையோடு எல்லாக்கலர் வளையலையும் எடுத்து காமிக்க சொல்லி என் தங்கை கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் குறுக்கிட்டு ரொம்ப முக்கியமா உட்கார ஒரு பெஞ்சும் குடிக்க ரெண்டு சோடாவும் கொண்டு வர சொல்லி கேட்டேன். கோவம் வருமா வராதா சொல்லுங்க? ஒரு வழியா இனி எங்கே கிளம்பினாலும் நாலு சோடா பாட்டிலும் மடக்குற நாற்காலியும் மறக்காமல் கொண்டு வருவேன்னு சத்தியம் பண்ணினப்புறம் தான் என் தங்கை கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

இதுக்கு முன்னாடி ஒருதரம் நாங்களும் இன்னும் சில நண்பர்கள் குடும்பங்களும் நாகுவின் ஊக்குவித்தலில் ட்ரெக் செய்ய கிளம்பிச் சென்றோம். கையில் எலுமிச்சம்பழசாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், ஊறுகாய், சிப்ஸ், பழவகைகள், ஜூச்வகைகள், சோடாவகைகள் எல்லாத்தையும் பாத்து பாத்து பாக் பண்ணிண்டு கிளம்பிப்போனோம் (பின்ன மலை ஏறிட்டு வந்தா பசிக்காதா? கண்ணு போடாதீங்க). போய் மலை அடிவாரத்தில் ஒரு பிக்னிக் ஏரியாவில் சாப்பாட்டு மூட்டையை இறக்கி விட்டு ஒரு கும்பலாக ஏற ஆரம்பித்தோம். முதல் கொஞ்சம் நேரம் கேலியும் சிரிப்புமா ஜாலியாக தான் இருந்தது. அப்புறம் தான் ஆரம்பிச்சது அவஸ்தையே. முதலில் குதி கால் வலிக்கற மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்தில் பின்னங்காலும் பங்க்சர். அப்புறம் கீழ்கால் தசைகளில் தபலா அடிக்கும் எபெக்ட். குழந்தைகளால் புகழ்பெற்ற "Are we there yet?" கேள்வியை நான் திருடி கெஞ்ச ஆரம்பித்த போது எனக்கு கிடைத்த ஒரே பதில் "இதோ வந்துடும். ரொம்ப தூரம் இல்லை." மந்திரி குமாரி படத்தில் மாதுரி தேவிக்கு "வாராய் நீ வாராய்" பாட்டின் போது எப்படி இருந்திருக்கும்னு எனக்கு அப்போ நல்லா புரிஞ்சது. ஒரு பெரிய கதையை சுருக்கனும்னா கடைசி அரை மைல் இருக்கும் போது கடவுள் என் கதறலை கேட்டு தாங்க முடியாமல் ஒரு பெரிய பாறையை கண்ல காமிச்சார். அவ்வளவு தான். நானும் எங்கள் கும்பலில் இருந்த குழந்தைகளும் தாவி ஏறி அதில் உட்கார்ந்து இனி நடக்க மாட்டோம்னு மறியல் பண்ணினோம். வேறு வழியில்லாமல் மத்தவங்க எல்லோரும் மிச்ச தூரம் இறங்கி போய் காரை எடுத்துண்டு வந்து எங்களை கூட்டி கொண்டு போனாங்க.

இப்போ சொல்லுங்க. என்னை மலை ஏற நீங்க கூப்பிடுவீங்களா?


-மீனா சங்கரன்

13 comments:

  1. இன்பம் அடைந்தேன்
    இகம் மறந்தேன்
    வேறுலகம் கண்டேன்.

    மறக்க முடியாத பாட்டு.

    சகாதேவன்

    ReplyDelete
  2. மலை ஏறவும் கூப்பிட மாட்டேன், ஷாப்பிங்குக்கும் கூப்பிட மாட்டேன்! (ஏன்னா நானே அங்கெல்லாம் போக மாட்டேனே :)

    நாகுவின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்!

    பி.கு. நாற்காலில உருளை உட்கார்ந்தா உருண்டுவிழ வாய்ப்பிருக்கு :)

    ReplyDelete
  3. நீங்க சொல்லற மாதிரி மறக்க முடியாத பாட்டு தான் சகாதேவன். எத்தனை ஒளியும் ஒலியும்ல பார்த்திருப்போம்? வந்து பின்னூட்டமிட்டதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  4. "ஷாப்பிங்குக்கும் கூப்பிட மாட்டேன்!"

    அடடா! என்ன கவிநயா இப்படி சொல்லிட்டீங்க? உங்களோட இந்த ஊரு ஷாப்பிங் பண்ணலாம்னு இப்ப தான் சோடா பாட்டிலும் நாற்காலியும் பாக் பண்ணினேன். இப்ப போய் இப்படி ஒடறீங்களே.

    "பி.கு. நாற்காலில உருளை உட்கார்ந்தா உருண்டுவிழ வாய்ப்பிருக்கு :)"

    :))))

    ReplyDelete
  5. //போய் மலை அடிவாரத்தில் ஒரு பிக்னிக் ஏரியாவில் சாப்பாட்டு மூட்டையை இறக்கி விட்டு ஒரு கும்பலாக ஏற ஆரம்பித்தோம்//

    அது மலையா? :-) நாம போனது Bear Creek State Park. அங்க மலையே கிடையாது. ஆனால் in your defense, அது பூங்காவில் ஒரு நடை(ஆங்கிலத்தில் மொழி பெயருங்கள்)யை விட கொஞ்ச்ச்சசம் கூடுதல். கடைசி அரை மைலில் உட்கார்ந்து கொண்டு கார் கொண்டு வரசொல்லி சத்தியாக்கிரகம் பண்ணினது கூட பரவாயில்லை. உங்கள் தோழியருடன் சேர்ந்து அவ்வளவு தூரம் நடக்கவைத்ததற்காக எனக்கு ஒரு வாழ்த்து மடல் பாடினீர்களே அது இன்னும் என் காதில் ரீங்காரமிடுகிறது :-)

    அடுத்த வார கடைசியில் யார் தயார்? :-)

    ReplyDelete
  6. wow meena super.it reminded me our holidays in madurai. We dress up very properly taking a lot of time just because to go out and drink panner soda.amrithan dhan.

    ReplyDelete
  7. வழக்கம் போல மிக்ஸர் கலக்கல். நாகுவிற்கு நீங்க பாடிய வாழ்த்துப்பாவை இங்கும் பாடுமாறு வலைகூறு நல்லுலகம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் :))))

    //We dress up very properly taking a lot of time just because to go out and drink panner soda.amrithan dhan.//

    மதுரைக்கே அலப்பரையா :)))

    ReplyDelete
  8. "அது மலையா? :-)"

    ஹா ஹா ஹா...நாகு, என்னை பொறுத்த வரை நடக்கும் பாதையை பாக்க தலையை கொஞ்சம் தூக்கனும்னா கூட அது மலை தாங்க.

    "அடுத்த வார கடைசியில் யார் தயார்? :-)"

    1, 2, 3, ஜூட்.

    ReplyDelete
  9. வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி ஜெயஸ்ரீ. :-)

    ReplyDelete
  10. "நாகுவிற்கு நீங்க பாடிய வாழ்த்துப்பாவை இங்கும் பாடுமாறு வலைகூறு நல்லுலகம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் :))))"

    ஆனாலும் குசும்பு ஜாஸ்திங்க உங்களுக்கு சதங்கா. அதோட நாகுவுக்கு நாங்க பாடின வாழ்த்துப்பா கொஞ்சம் பெருசு. ஒரு பதிவு சைசுக்கு வந்திரும். :-)

    அது போகட்டும். என்ன கொஞ்சம் நாளா உங்க பதிவு எதையும் காணும் தமிழ் சங்கத்துல? சீக்கிரத்துல ஒரு அரை பக்கக் கதையாவது எடுத்து விடுங்க.

    ReplyDelete
  11. Comments sections padicha dhaan paadhi unami theriyudhu,neenga yerinadhu/sorry nadandhadhu malaiye illayamey? !!

    Nice write up,keep entertaining like this always :)

    I too hav a friend who packs bread sandwiches with loads of butter and green chutney and what ever possible snacks they can bring,they will pack up for cycling :P,after burning out some calories we will again increase it,enjoying those snacks!!

    ReplyDelete
  12. முதல் முறையா வந்து பின்னூட்டமிட்டு ஊக்குவிச்சதுக்கு நன்றி ராக்ஸ் கிச்சன்.

    ReplyDelete
  13. //ஆனாலும் குசும்பு ஜாஸ்திங்க உங்களுக்கு சதங்கா. அதோட நாகுவுக்கு நாங்க பாடின வாழ்த்துப்பா கொஞ்சம் பெருசு. ஒரு பதிவு சைசுக்கு வந்திரும். :-)//

    புரியுது புரியுது. நாகு சைலன்ட்டா இருக்கும்போதே வாழ்த்துப்பாவின் அழுத்தம் புரியுது :))

    //அது போகட்டும். என்ன கொஞ்சம் நாளா உங்க பதிவு எதையும் காணும் தமிழ் சங்கத்துல? சீக்கிரத்துல ஒரு அரை பக்கக் கதையாவது எடுத்து விடுங்க.//

    வேலைப் பளு அப்பிடி. சீக்கிரம் கதை ரெடி பண்றேன் :))

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!