Saturday, November 22, 2008

பித்தனின் கிறுக்கல்கள் – 31

நம்பியார்
உலகத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருந்த ‘வில்லன்களின் வில்லன்’ எம்.என்.நம்பியார் மறைந்து விட்டார். இவர் நடிக்காத 60, 70, 80 களில் வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நடிகர் திலகமும், மக்கள் திலகமும் நடித்த படங்களில் அவர்களைத் தாண்டி ஒரு நடிகர் ப்ரசித்தி பெறுவது என்பது கிஞ்சித்தும் யோசிக்கக்கூட முடியாத விஷயம். அதை சர்வ சாதாரணமாக செய்து காட்டியவர் இவர். தனக்கென ஒரு தனி பாணி அமைத்து, படத்தில் பல வில்லன்கள் இருந்தாலும், அவர்களிலிருந்து தன்னைத் தனித்து வெளிப் படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்தவர். எம்.ஜி.ஆருடன் இவர் செய்யும் சண்டைக்காட்சிகள் என்னைப் போன்ற பல ரசிகர்களை புலகாங்கிதமடையச் செய்துள்ளது. உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆருடன் இவர் செய்த சீன முறை சுமோ சண்டை இனி மீண்டும் ஒருவர் செய்ய முடியாது என்பது என் கருத்து. என் சிறு வயதில் நான் பார்த்த படத்தில் இவர் சாட்டையால் அடித்ததில் எம்.ஜி.ஆருக்கு வலித்ததோ இல்லையோ எனக்கு வலித்து நான் அழுதது நினைவிருக்கிறது. அசாத்திய வில்லன் நடிப்பு இடையே திடீரென நல்லவனாகவும் நடித்து (ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பின்பகுதி, தூறல் நின்னு போச்சு) நம்மை ஆச்சர்யப் பட வைத்தவர். எம்.ஜி.ஆர் தேர்தலுக்கு ப்ரசாரம் செய்யப் போகும் போது மக்கள் அவரை வழி “மறித்து நல்லா இரு ராசா” என்று வாழ்த்திய அதே நேரம் “இந்த நம்பியார் கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையா இரு ராசா, கெட்ட பய உன்னைய ஏதும் செய்துரப் போறான்” என்று வாஞ்சையோடு சொன்னது இவருடைய நடிப்புக் கிடைத்த மிகப் பெரிய பரிசு.

ஒரு நல்ல கலைஞன் எப்போது மற்ற கலைஞர்கள் போல நல்ல கதாபாத்திரங்கள் தனக்கு கிடைக்க வில்லையே என்று ஏங்குகிறானோ அப்போதுதான் முழுமையடைகிறான் என்பது என் கருத்து. ரஜனியின் தளபதி படத்தில் அம்ரிஷ் பூரியின் ‘கலிவர்தன்’ கதாபாத்திரம் தனக்கு கிடைக்கவில்லையே என்று சொல்லி அவர் அதன் முத்தாய்ப்பாக எனக்கு தலையில் இப்போது முடியே இல்லை மொட்டை போடும் செலவு கூட இல்லை இருந்தாலும் மணிரத்தினம் என்னை தேர்வு செய்ய வில்லையே என்று வருத்தப் பட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி என்ற இரு இமயங்களோடு நடித்தவருக்கு ரஜனி, மம்முட்டி இரு சிறு மடுக்களோடு நடிப்பதில் பெரிய சவால் இல்லை ஆயின் அந்த சிறிய பாத்திரம் இவரை பாதிக்கிறது என்று சொன்னால் இவருடைய கலையார்வத்தை கண்டு தலை வணங்கத்தான் வேண்டும்.

திரையில் இவர் ஒரு நயவஞ்சகன், பெண் பித்தன், திருடன், ஏமாற்றுப் பேர்வழி, கொள்ளைக்காரன், கொடுங்கோலன், ராஜத்துரோகி, பணத்தாசை பிடித்த பிசாசு, இரக்கமில்லாதவன். ஆனால் நிஜ வாழ்வில் இவர் ஒரு இனிமையான மனிதர், அல்லும் பகலும் ஐயப்பனின் நாமத்தை ஜெபித்த, 60-65 வருடங்களுக்கு மேலாக சபரிமலை (வருடத்திற்கு 4-5 முறை) சென்று வந்த பக்தர். புகை, மது, மாது என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தூய்மையானவர். நடிப்பது, எனது தவம், வாழ்க்கை, எனக்கு ஆண்டவன் இட்ட பிச்சை என்று வாழ்ந்த உத்தமர்.

1991-ல் நான் முதன் முதலாக சபரிமலைக்குச் சென்றபோது 18 படியை தழுவி, ஐய்யனை தரிசித்து விட்டு எங்கள் குடிலுக்கு சென்று ஓரிரு மணி நேரத்திற்குப் பிறகு வெளியில் ஒரே பரபரப்பு, என்ன என்று கேட்டதற்கு, குருசாமி வந்துவிட்டார் என்றார்கள். எனக்கு ஒரே திகைப்பு, எங்கள் குழுவின் குருசாமி எங்களோடுதான் மலையில் நடந்து வந்தார், எனக்கு ஒரு 100-200 பேர்களுக்கு முன்புதான் 18 படி கடந்து வந்தார், அப்படி இருக்க இவர்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே என்று எங்கள் குருசாமியின் மகனிடம் கேட்டதற்கு அவர் சொன்னார், என் தந்தை நம் குழுவிற்கு குருசாமி, ஆனால் நம்பியார் சாமிதான் நம் எல்லா ஐய்யப்பன்மார்களுக்கும் குருசாமி என்றார். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடுமபத்திற்கும், மற்றவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

எம்.என். நம்பியாரைப் போலவே தமிழ் சினிமாவில் ப்ரபலமான மற்றொரு நம்பியார் ஆர்.என். நம்பியார் இவர் ப்ரபல சண்டை பயிற்சியாளர், எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு இவர்தான் சண்டைப் பயிற்சி தந்தவர். இவர்தான் அண்மைக் காலத்தில் மறைந்த ப்ரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ‘விகரம்’ தர்மாவின் தந்தை என்பது மற்றொரு சிறப்பு.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!