Thursday, December 15, 2016

கல்யாணமாம் கல்யாணம்


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம் ஆனால் சொர்க்கத்திலேயே கல்யாணம் நடக்கும் என்று யாரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள்.ஆனால் செயற்கையாக மனிதன் தயார் செய்த சொர்க்கத்தில் ஒரு கல்யாணம் சென்ற நவம்பர் மாதம் 16 ம் தேதி  இனிதே நடந்தது அப்படி சொர்க்கத்தை உருவாக்கி தன் மகளூக்கு கல்யாணம் செய்தவர் பெல்லாரியைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி.இவர் மிகப் பெரிய சுரங்கத் தொழில் அதிபர் .எல்லாவற்றையும் விட இவர் ஒரு அரசியல்வாதி பி.ஜே. பி கட்சியைச் சேர்ந்தவர் இவருடைய சகோதரர்கள் இருவரும் அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் மூன்று பேரும் மாநில பி.ஜே.பி கட்சியின் முக்கியத் தலைவர்கள்.ஒருவர் பாராளூமன்ற உறுப்பினர். மற்றவர் முந்தைய எடியூரப்பா ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். இந்த ஜனார்த்தன ரெட்டியும் அமைச்சராக இருந்தவர்தான் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மந்திரியாக இருந்தால் அது எவ்வளவு பெரிய குடும்பமாக இருக்க வேண்டும்  அதற்கு தகுந்த முறையில் எவ்வளவு கௌரவமாக திருமணத்தை நடத்த வேண்டுமோ அவ்வளவு கௌரவத்தோடு நடத்தி முடித்திருக்கிறார் திருவாளர் ரெட்டி.
 
திருவாளர் ரெட்டிக்கு இன்னொரு முகமும் உண்டு இவர் சில ஆண்டுகளுக்கு முன் பல வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யபட்டு சிறைவாசம் செய்துவிட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளீயே வந்தவர்  இன்னும் விசாரனை தொடங்கப்படாத வழக்குகளூம் இவர் மீது உண்டு.கர்நாடக மாநிலத்தின் வனத்துறை .ஆந்திர மாநில வனத்துறை இந்திய அரசாங்கத்தின் வணிக வரித்துறை.சுரங்கத் துறை, வருமான வரித்துறை., மாநில காவல் துறை இப்படி அநேகமாக எல்லா துறைகளூம் இவர் மீது வழக்கு போட்டிருக்கின்றன. எல்லா வழக்குகளூம் இன்னும் நிலுவையில் இருகின்றன.இவருடைய எல்லா வங்கிக் கணக்குகளூம் முடக்கப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.இவருடைய தயவில் பல அரசியல்வாதிகள் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய வாய் வார்த்தையை சட்டமாகவும்,உத்தரவாகவும் ஏற்று மதித்து செயல்படும் பல தலைவர்கள் டெல்லியிலும் உண்டு.பெங்களூரிலும் உண்டு அப்படி இருக்கும் போது எத்தனை வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன என்று கேட்காமல் கேட்டிருக்கிறார் .ரெட்டி .முடக்கப்படாத வங்கிக் கணக்கிலிருந்து தன்னுடைய சொந்தப் பணத்தை எடுக்க கால் கடுக்க மணிக்கணக்காக ,அல்ல நாள் கணக்காகக் காத்திருக்கும் சாதாரண மனிதன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான் ரெட்டி 500 கோடி செலவு செய்து தன் மகள் திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தி முடித்திருக்கிறார்
திருமணத்துக்கான மொத்தச் செலவு 650 கோடி ருபாய் என்று கூறுகிறார்கள். சிலர் 500 கோடி என்கிறார்கள்.எப்படியும் ஒருராஜா வீட்டுத் திருமணம் எப்படி நடக்கும் என்று பெங்களுரு மக்களூக்கு நேரடியாகவே காட்டியிருக்கிறார். நவீன தொழில் நுணுக்கங்களை பயன்படுத்திய ரெட்டி பழங்கால முறைகளையும் கை விடவில்லை.

திருமண அழைப்பிதழ் மட்டுமே 6 கோடி ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டது என்றால் கேட்பவர்களுக்கு மூச்சு முட்டும்.அந்த  அழைப்பிதழை திறந்து நீங்கள் படிக்க வேண்டாம் அதுவே பேசும் பாடும் ஒரு பாட்டுடன் உங்களை திருமணத்துக்கு வரவேற்கிறது.
 பெங்களுரில் உள்ள மைசூர் மகாராஜாவின் அரண்மனையை ஒரு மாத காலத்துக்கு முன்பணம் கட்டி வாடகைக்கு எடுத்துக் கொண்டு அரங்க நிர்மாணம் தொடங்கியது ஹிந்தி சினிமா உலகத்தைச் சேர்ந்த கை தேர்ந்த கலைஞர்களின்,வழிகாட்டுதலில் 3000 தொழிலாளர்கள் ஒரு மாதம் வேலை செய்தார்களாம் 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்த அந்த திருமணப்பந்தல் ஹம்பியில் உள்ள புரந்தரா கோயில் மாதிரியில் வடிவமைக்கப்பட்டது சுற்று வட்டாரம் முழுவதும் விஜயநகர அரண்மனை மாதிரியில் அமைக்கப்பட்டது. ஒருபழங்கால கிராமமே வடிவமைக்கப்பட்டது நுழை வாயிலிலிருந்து விருந்தினர்களை அழைத்து வர 40 மாட்டுவண்டிகள் செயல்பட்டன. வண்டியில் குஷன் வைத்த இருக்கைகள் அமைக்கப்பட்டன.

50000 விருந்தினர்கள் வருகை தந்தார்களாம். உணவுக்காக 60 கோடி ருபாய் செலவு செய்யப்பட்டது.நகரமெங்குமுள்ள மிகப்பெரிய ஸ்டார ஹோட்டல்களீல் 1500 அறைகள் புக் செய்யப்பட்டது .மாநிலத்தின் பல நகரங்களீலிருந்து விருந்தினர்கள் வர சொகுசு பேருந்துகள் பல இயங்கின உணவுக்கு மட்டும் 60 கோடி ருபாய் செலவு செய்து வந்த விருந்தினர்கள் அனைவரையும் நன்றாகவே கவனித்திருக்கிறார் ரெட்டி. .விருந்து முடித்து வெளியே வருவோருக்கு பான்பீடா கொடுகக பல லட்சம் செலவு என்றால் நமக்கு மயக்கம் வரும் அதையெல்லாம் விட முக்கிய செய்தி அந்த பீடாவை விருந்தினர்களுக்குக் கொடுக்க பம்பாயிலிருந்து 50 மாடல் அழகிகள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்... முக்கிய விருந்தினர்கள் பயணத்துக்கு ஹெலிகாப்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கேள்வி
விருந்தினர்களும் திருமணத்தில் வேலை செய்ய வரும் நபர்களும் தங்குவதற்கு, பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் 1500 தனி அறைகள் ரிஸர்வ் செய்யப்பட்டன திருமணப் பெண்ணுக்கு 40 லட்ச ரூபாயில் கூரைப்புடவை.15 கோடி ருபாய்க்கு நகைகள் என்று சொல்லுகிறது பத்திரிகைச் செய்தி..  

இன்னும் நம்ப முடியாத விவரங்களூடன் வந்த பத்திரிகைச் செய்தி எல்லோரையும் அது பற்றிப் பேச வைத்திருக்கிறது டெல்லியில் பாராளுமன்றமே இந்த திருமணம் பற்றி பேசியாகிவிட்டது என்றால் வேறு விவரங்களுக்குப் போவானேன் ? மற்ற விவரங்களூக்குப் போகாமல் மக்கள் இந்த திருமணம் பற்றி என்ன பேசிக்கொண்டார்கள் என்பதைப் பார்க்கவும் கேட்கவும் வேடிக்கையாக இருந்தது 500 ரூபாய், மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அரசாங்கத்தின் ணை வந்த சமயத்தில் இந்த திருமணம் நடந்திருப்பதால் மக்கள் கருத்தைக் கேட்டறிய நல்ல வாய்ப்பாக இருந்தது வங்கியில் போட்ட தன் சொந்தப் பணத்தை எடுக்க கால் கடுக்க மணிக்கணக்காக காத்துக் கொண்டிருந்த மக்கள் பொழுதை கழிக்கவும் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கும் வகையிலும் இதைப் பற்றி பேசிக் கொண்டார்கள்.

பேசிய யாரும் ஒத்த கருத்தை தெரிவிக்காதது தான் வேடிக்கை.நாம் சற்று பொறுமையாக இருந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் காத்துக்கொண்டிருப்பது பற்றி கவலைப் படக்கூடாது என்றார். ஒருவர் வங்கி ஊழியர்கள் மீது வசை பாடியவர்களூம் உண்டு.நூறு ரூபாய்க்கு நாம் மணிக் கணக்காக காத்துக் கொண்டு அல்லல் படும்போது ரெட்டிக்கு மட்டும் கல்யாணம் செய்ய கோடிக்கணக்காக பணம் எப்படி வந்தது என்றார் இன்னொருவர்... .

இதையெல்லாம் நாம் கேட்க முடியுமா ஸார் அவரவர்கள் வந்த வழி.பணக்காரர்கள் தங்கள் அந்தஸ்துக்கு தக்கபடித்தான் செய்வார்கள் அப்படி செய்தால்தான் மற்றவர்கள் பிழைப்பு நடத்தமுடியும் என்றார் ஒரு முதியவர் .இன்னொரு முதியவர் தன் நலெண்ணண்ணத்தை வெளீயிடும் வகையில் சொன்னதுதான் வேடிக்கை .அந்த கல்யாணப்பெண் நல்லாயிருக்கணும் ஸார் இப்படியெல்லம் ஆடம்பரமாகக் கல்யாணம் செய்தால் திருஷ்டி படும் ஸார் ஏனோ தெரியவில்லை இந்த பெற்றோர் களூக்கு இதெல்லாம் தெரிய மாட்டேன் என்கிறது என்றார் அந்த முதியவர்.சிலர் அவருடைய பேச்சை கேட்டு சிரித்தாலும் அவருடைய பேச்சில் இருந்த நல்லெண்ணம் எனக்கு தெளிவாகப் புரிந்தது
ஆக மொத்தம் எல்லோரும் அவரவர்கள் வயதுக்குத் தக்கபடியும்  உணர்ச்சி பொங்கவும் வசை பாடியும் பேசினாலும் யாரும் ஒரே கருத்தை தெரிவிக்கவில்லை...கால் வலி தீர நின்றுவிட்டு வங்கி ஊழியர் இன்று பணம் தீர்ந்துவிட்டது என்று அறிவித்த பின் .நாளைக்காவது சீக்கிரம் வந்து வரிசையில் நின்று பார்க்க வேண்டும் என்று கூறியபடி கலைந்தார்கள்
எல்லா காரியங்களுக்கும் நியாயம் பேசவும் காரணம் கற்பிக்கவும் யாராவது இருக்கும் வரை இப்படித்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் யாரையும் குறை சொல்லிப் பயன் இல்லை இதுதான் இந்தியா என்று எண்ணிக் கொண்டே நானும் நகர்ந்தேன்
                                              - மு.கோபாலகிருஷ்ணன்
.

Sunday, October 09, 2016

மீனாவுடன் மிக்சர் 28 - சுடச்சுட சுண்டல்!

அமெரிக்காவில் நவராத்திரி கொண்டாடும்  பெண்கள் அனைவர் சார்பிலும் தான் இதை நான் சொல்லறேன்.  வீட்டுக்கு வீடு கணினியோட குடும்பம் நடத்துற கணவர்கள் இருந்து எங்களுக்கு  என்ன பிரயோஜனம்?  எத்தனை தரம் தும்மினோம் , எத்தனை தரம் ஏப்பம் விட்டோம்  அப்படீன்னு பார்க்கறதுக்கு எல்லாம் app வந்தாச்சு.  ஆனா பேக்கு மாதிரி  நவராத்திரி ஒவ்வொரு நாளும் ஐந்து மணி நேரம் Evite invitations ஐ தூக்கிண்டு ரோடு ரோடா அலையும் எங்களுக்கு உதவ ஒரு app ஐயும் இது வரை காணும். 

இந்த கணவர்கள் குழு எங்கயாவது கூட்டு சேர்ந்தா GOP கட்சி உறுப்பினர் Donald Trump ஒரு அக்மார்க் வில்லனா இல்லை அரை லூசா அப்படீன்னு தீவிரமா தர்க்கம்  பண்ணி நேரத்தை வீணாக்கறதை விட்டுட்டு கால் கடுக்க தெருத்தெருவா சுண்டல் வாங்க சுத்தற மனைவிகளுக்கு உதவ ஒரு app எழுதலாம்.  

எங்க ஊருல போன வருஷத்தை விட கூடுதலா ஒரு ஐம்பது வீடாவது இந்த வருஷம் கொலு வச்சு கூப்பிட்டு இருக்காங்க.  மின்னல் மீனா அப்படீன்னு பெயர் எடுக்கற அளவுக்கு சும்மா சுனாமி மாதிரி சுத்தி சுத்தி சுண்டல் பாக்கெட் வாங்கி, நவராத்திரி ஆரம்பிச்சு நாலே நாளுல சுரம் வந்து படுக்கற நிலையில் இருக்கிறேன்.  வாட்ஸாப்ப், Evite பத்திரிகைகளையே சமாளிக்க முடியாம முழி பிதுங்கற எங்களை போற வீட்டு கொலுவில் பார்க்கறவங்க வேற ஆசையா கூப்பிடராங்க.  இனி யார் கையிலாவது  குங்குமச்சிமிழ் பார்த்தா சட்டுன்னு தலை மேல் போட்டுக்க ஒரு முக்காடை இப்ப தான் கைப்பையில் எடுத்து வச்சிருக்கேன்.   வாழ்க்கையோட சவால்களை சமாளிக்க நாம் தயாரா இருக்கறது அவசியம் இல்லையா? 

இதெல்லாம் ஒரு சவாலான்னு எங்களை பார்த்து சிரிச்ச விதி இன்னிக்கு காலையில் 'இக்கட சூடு' ன்னு ஒரு பெரிய புயலை எங்க ஊர் பக்கமா தூக்கி போட்டு பார்த்தது.  ஹா!!! ஜுஜுபி!!! இதுக்கெல்லாம் அசர்றதுக்கு இந்திய பெண்கள் என்ன கை சூப்பும் வாண்டுகளா?  பட்டு புடவை, நகை நட்டு போட்டு அம்மன் ரோல் கே ஆர் விஜயா மாதிரி ஒரு இந்திய பெண்கள் அணி இன்று மாலை  சுமார் 3 மணி தருவாயில் வீட்டை விட்டு குடை சகிதம் கிளம்பி கொட்டும் மழைல முழ நீள லிஸ்டில் உள்ள அத்தனை கொலு வீட்டுக்கும் போனது என்னவோ மறுக்க முடியாத உண்மை.  எப்படி நிச்சயமா சொல்லறேன்னா அது எங்க அணி தான்.  என் தோழிகளும் நானும் அந்த அடாத மழையிலும் விடாது குடை பிடிச்சு கொலு வீடுகளுக்கு போனதை நினைச்சா எனக்கே புல்லரிச்சு உடம்பு சில்லிட்டு போறது.  இது மழைல நனைஞ்சதால வந்த சில்லுப்பு இல்லைன்னு சொன்னா வீட்டுல தான் யாரும் ஒத்துக்க மாட்டேங்கறாங்க. 

ரொம்ப சுவையான ஒரு சம்பவம் இன்னிக்கு நடந்தது.  வழக்கம் போல் ஒரு வீட்டுக்குள் நுழையும் போதே நாங்க சுருதி பெட்டி மேல பாய்ஞ்சு ஆன் செய்து பாட தயாரான அந்த நேரம் இன்னொரு நல்ல தோழி குடையோட நுழைந்தாள்.  அருமையான பாடகி.  எங்க எல்லோருக்கும் ஒன்னு ரெண்டு பாட்டு சில வருஷங்களுக்கு முன்னாடி சொல்லி கொடுத்திருக்கா. சரி அதுல ஒரு பாட்டை எல்லோருமே சேர்ந்து பாடறதுன்னு தீர்மானம் பண்ணி ஆரம்பித்தோம்.

முதல் சங்கதி முடிக்கறதுக்கு முன்னாடி வாசல் கதவு தட்டி குடையோடு நுழைந்தார் மற்றுமொரு தோழி.  பார்த்தா அவங்களுக்கும் அந்த பாட்டும் தெரியுமாம்.  நுழைந்த வேகத்தில் பாய்ந்து எங்களோட அவரும் பாட ஆரம்பித்தார்.  கூடிய சீக்கிரத்தில் பாதி கூடம் நிரம்பி வழிந்து எல்லோரும் எங்களோட சேர்ந்து அதே பாட்டை பாட ஆரம்பித்தார்கள்.  அப்ப தான் எனக்கு அந்த ஐடியா வந்தது.   சினிமாவுல வருமே குடும்பப்பாட்டுன்னு? அது மாதிரி இப்ப எங்களுக்கு ஊர் பாட்டுன்னு ஒண்ணு  இருக்கு.  எங்க ஊர்க்காரர் எங்கயாவது தொலைஞ்சு போய்ட்டா இந்த பாட்டு முதல் வரி பாடினா போதும்.  நாங்க யாரவது அடுத்த வரியை பாடிண்டே நடந்து போய் உடனே அவரை கண்டு பிடிச்சிடுவோம்.   ஊர் பாட்டு வைத்திருக்கும் ஒரே ஊர் எங்க ஊர் தான் அமெரிக்காவில் அப்படீன்னு  நினைச்சா பெருமைபடாம இருக்க முடியலை. 

எல்லோர் வீடுகளிலும் தரும் பல விதமான சுண்டல்களை நிச்சயமா நான் அனுபவிச்சு தான் சாப்பிடறேன்.    அதுல சந்தேகமே இல்லை. இருந்தாலும் யாராவது சுண்டலோட கொஞ்சம் பஜ்ஜி பக்கோடா தந்து ஒரு கப் காப்பி தந்தால் வேண்டாம்னு சொல்லிடப்போறேனா என்ன?  நாளைக்கு போக வேண்டிய வீடுகளில் வாழும் தோழிகள் யாராவது இந்த ப்ளோக் படிப்பார்கள்னு ஒரு நம்பிக்கையோட எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடைபெறுவது உங்கள் மீனா சங்கரன்.