Sunday, October 08, 2006

55 வார்த்தையில் 2வது சிறுகதை

வரன்

"என்னது!, நம்ம ராஜி, அந்த ரகுவைக் காதலிக்கறாளா!"

"கத்தாதீங்க, யோசிச்சு நல்ல முடிவா எடுக்கலாம்."

"என்னடி நல்ல முடிவு, தூ... அவனா எனக்கு மாப்பிள்ளை?".

அப்பா முன் தினம் பெண் பார்க்க வந்தவர்கள் வீட்டிற்கு ·போன் போட்டு ,"நமஸ்காரம், எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல நாள்ல நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாம்" என்றார்.

"அம்மா என்னைப் பத்தி ஏன் தப்பா சொன்னே?"

"சும்மாயிரு ராஜி, இல்லைனா, இது அப்பா சாக்கு சொல்லி நிறுத்தற 10-வது வரனாயிடும்".

- முரளி
55 வார்த்தையில் முதல் சிறுகதை

'விபத்து'

நல்ல பிஸியான அந்த சாலையில் ஒரு தண்ணீர் லாரி வேகமாக வந்த போது ஒரு குழந்தை திடீரென சாலையை கடந்தது.

பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் "ஐயோ!" என்று அலறினர்.

அதை ஸ்ரீராம் மட்டும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சரியான சமயத்தில் ஒருவன் குழந்தையை காப்பாற்றி விட, அருகில் இருந்த எல்லோரும் உரக்க கை தட்டி பாராட்டும் போது ஸ்ரீராம் தன் மனைவியிடம் சொன்னான்,"இதே மசாலா ஸீன் இன்னும் எத்தனை தமிழ் படத்தில் வருமோ தெரியலை?"

- முரளி

Saturday, October 07, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 2

பித்தனின் கிறுக்கல்கள் - 2

மரண தண்டனை ஒழிப்பு:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் முகமது அப்சலின் தூக்கு தண்டனை தீர்ப்பு இன்று இந்தியாவில் மாநகரத்தின் முக்கிய பேச்சாக (அதாங்க talk of the town) இருக்கிறது. நம்ம ஊர் அரசியல்வாதி திருமாவளவன் இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் என்றும், உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள்' வெளிக்காட்டியுள்ளன என்றும், மக்கள் விரோதச் சட்டம் என்று பெருவாரியான அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு பின்னர் கைவிடப் பட்ட பொடோசட்டத்தின் கீழ் இந்த தண்டனை விதிக்கப் பட்டுள்ளது இதனால் இதை ரத்து செய்து மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடாக உலக அரங்கில் இந்தியா பெருமையுடன் விளங்க வேண்டும் என்று தன் 'திரு' வாய் மலர்ந்தருளியிருக்கிறார். என்ன ஒரு ஆய்வு, என்ன ஒரு கண்டு பிடிப்பு, என்ன ஒரு நாட்டுப் பற்று, என்ன ஒரு மனித நேயம் இவை எல்லாம் மெய் சிலிர்க வைக்கிறது. எப்படி இதுபோல சிந்திக்க கற்றுக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படி யோசிப்பதற்கு படிப்பு என்ற ஒன்று அவசியமே இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.

இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் - மிக ஞாயமான கோரிக்கை, அவர் என்ன ஆங்கிலத்தில் தமிழ்த் திரைப்படத்துக்கு பெயர் வைத்தாரா? தங்கர் பச்சானை திட்டினாரா? விரப்பனை கொடுங்கோலன் என்று சொன்னாரா? பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சொன்னாரா? இல்லையே சும்மா நமது மரியாதைக்குரிய பாரளுமன்றத்தை தாக்கி அவருடைய பல சகாக்களை அநியாயமாய் இழந்து, பல அப்பாவி மக்கள், தோட்டகாரர், பாதுகாப்புப் படையினர் என்று பலரையும் கொன்று, இன்று பிடிபட்டு, இந்திய நீதிமன்றம் அவரது வாதங்களை கேட்ட பிறகு இப்படி ஒரு தண்டனை பெற்று, அதற்காக கொஞ்சமும் வருத்தப்படாமல் இருப்பவருக்கு கண்டிப்பாக கருணை காட்டத்தான் வேண்டும்.

உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன':
என்ன ஒரு அபாரமான கண்டுபிடிப்பு. மரணதண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன என்றால், ஒரு நாட்டில் எதற்கு ராணுவம், எதற்கு போலீஸ், எதற்கு சட்டங்கள், எதற்கு தண்டனைகள் அட எதற்கு இவரைப் போல அரசியல்வாதிகள், எந்த சட்டத்தாலும், தண்டனையாலும் குற்றங்கள் குறையப் போவது இல்லையே, மக்களே அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டுமே. உலக அரங்கில் தீவிரவாதத்தை கட்டுப் படுத்த இன்று இருக்கின்ற சட்டங்கள், தண்டனைகள் போதவில்லை என்று எல்லா நாடுகளும் கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் போது, உலகில் தீவிரவாதத்தால் தினம்தோறும், அதிகம் பாதிக்கப்படும் இந்தியாவில் இவரைப் போன்றவர்கள் இப்படி பேசி வருவது நமக்கெல்லாம் ஒரு சாபம்.

மக்கள் விரோதச் சட்டம் என்று கைவிடப் பட்ட பொடோ சட்டம்
தீவிரவாதத்தை முழுவதும் ஒழிக்க முடியாவிட்டாலும், அதன் வளர்ச்சியை தடுக்க முயன்ற ஒரு சட்டமே பொடோ. அதையும் இவரைப் போன்ற கையாலாகாத அரசியல்வாதிகள் குழி தோண்டி புதைத்து விட்டனர். 1000 பொதுமக்கள் உயிர் இழக்கலாம், ஆனால், இவர்களுக்கு ஒரு தீவிரவாதி உயிர் இழக்கக் கூடாது, மனித உயிர்களை மதிக்க முடியாத தீவிரவாதிக்கு எப்படி மனித உரிமைக் கமிஷனும், இவரைப் போன்றவர்களும் வக்காலத்து வாங்குகின்றனரோ தெரியவில்லை.

ஒரு ஏழை பாடகன் முக்காலத்தையும் அறிந்து இந்திய விடுதலைக்கு முன்பே எழுதினான்:

நெஞ்சி லுரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடீ.

கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே நாளில் மறப்பாரடீ.

சொந்த அரசும்புவிச் சுகங்களு மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியே அலிகளுக் கின்பமுண்டோ?

சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை யிரங்காரடீ - கிளியே செம்மை மறன்தாரடீ.


மேல் குறிப்பிட்ட அரசியல் வாதியை நம்பும் நம் நாட்டு மக்களைப் பற்றி இந்த மகா கவி பாடுகிறார்:

நெஞ்சு பொறுக்குதிலையே - இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே

பட்டிமன்றம்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டிமன்றம் நடத்த இருக்கின்றோம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்திலிருந்து அறிவிப்பு வந்து இருக்கிறது. செவிக்கு நல்ல விருந்தாக இருக்கும். அரட்டை அரங்கம் போல ஒன்றுகூட செய்யலாம் நல்லா பொழுது போக கத்தி பேசலாம். நிறைய குழந்தைகள், பாட்டு, பரத நாட்டியம் பயில்கிறார்கள் அவர்களுக்கு பாட்டு போட்டி வைத்து 'சப்தஸ்வரங்கள்' போல ஒன்றும் செய்யலாம். கலந்து கொள்ளும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசு என்று வைத்துவிட்டால், போட்டி நல்ல களை கட்டும்.

இந்தப் பதிவை பித்தனின் ப்ளாக்கில் படிக்க இங்கே க்ளிக்கவும்:
http://pkirukkalgal.blogspot.com/2006/10/2.html
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ...

Wednesday, October 04, 2006

பித்தனின் கிறுக்கல்கள் ஒரு துவக்கம்.

'பித்தனின் கிறுக்கல்கள்' என்ற தலைப்பில் பல காரசாரமான விவாதங்களுக்கு அடித்தளமிடக்கூடிய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிவு செய்து இந்த பகுதியைத் துவக்குகிறேன். இதில் இந்திய அரசியல், சமூகம், விளையாட்டு, அறிவியல், இலக்கியம், புதுக் கவிதைகள் (மரபுக் கவிதை அதிகம் பரிச்சயமில்லை), கட்டுரைகள், புத்தகங்கள், நகைச்சுவை காட்சிகள், கதைகள், பத்திரிகைகளின் திரை விமர்சனம், தொலைக்காட்சி, திரைப்படம் பற்றிய பல வியங்களை (நாகு, மூர்த்தி, முரளி, பரதேசி, பட்டாம்பூச்சி, தருமி(எந்த ஊர்) - - வட மொழியாச்சே பரவாயில்லையா?) இங்கு அலச இருக்கிறேன்.

இந்த கருத்துக்கள் என் தனிப்பட்ட கருத்துக்கள், இதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமை. இந்த எழுத்துக்கள் மூலம் என்னை எடை போட முயல்வது ஒரு காலவிரயம். எனக்கு இந்தப் பகுதியை துவக்கி எழுதலாம் என்கிற துணிவைத் தந்தது பலருடைய எழுத்துக்கள். 'சோ' -வின் - நினைத்தேன் எழுதுகிறேன், சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் (கணையாழி இன்னும் வருதான்னு தெரியல), கண்ணதாசன் எழுதிய கடைசிப் பக்கங்கள், தி.ஜா வின் தெளிவான மற்றும் புதுமைப் பித்தனின் தைரியமான எழுத்துக்கள்.

பீடிகை போதும்னு நினைக்கிறேன். இனி......

தமிழ் நாட்டில் உள்ளாட்சி மற்றும் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல்.

இதனால் என்ன பயன்? எல்லா சுவர்களும் மேலும் கறைபடியும், சாராய விற்பனை வானைத்தொடும், முட்டை, கோழி வறுவல் வியாபாரம் தூள் பறக்கும், எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.50 க்கு விற்கும். ரேஷனில் எல்லா நாட்களும் எல்லா பொருட்களும் எல்லோருக்கும் கிடைக்கும். எல்லா கட்சிகாரர்களையும் (முதல்வரை கூட) சுலபமாக பார்க்கலாம். சன் டிவியில் தமிழ் நாடு எப்படி சுபிட்சமாக இருக்கிறது என்று காட்டுவார்கள். பஞ்சம், பட்டினி எல்லாம் தமிழ்நாட்டில் இல்லை என சத்தியம் செய்வார்கள். ஜே டிவியில் தமிழ்நாடு எப்படி குட்டிசுவராக இருக்கிறது என்று பட்டிமன்றமே போடுவார்கள். சோ துக்ளக்கில் கருணாநிதி எப்படி 2 ஏக்கர் கொடுக்காமல் இழுத்தடிப்பார் என்ற தன் சந்தேகத்தை எழுதுவார். விகடன்/ஜூ.விகடன் கருணாநிதியின் ராஜதந்திரம் பற்றி இரண்டு வாரம் எழுதுவார்கள். சென்னை தெருக்களுக்கு உடனடி மேக்கப் நடக்கும். கார்ப்பரேஷன் தண்ணீர் சென்னையில் நல்லா கிடைக்கும். மழை அதிகமானால் நிவாரணம் உடனே கிடைக்கும். அரசு ஊழியர்கள் சின்னதாக ஒரு அடையாள ஸ்ட்ரைக் செய்வார்கள், முதல்வர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிபந்தனையின்றி உடனே ஒப்புக் கொள்வார். ஸ்டாலினும் - அழகிரியும் சண்டை இல்லாமல் பத்திரிகைகளுக்கு சிரித்த படி போஸ் கொடுப்பார்கள். சுப்ரமணியஸ்வாமி பத்திரிகையாளர்களைக் கூட்டி கருணாநிதி, தயாநிதி மாறன், சோனியா மூவரும் சேர்ந்து செய்த ஊழலைப் பற்றிய ஒரு முக்கிய தடயம் தன்னிடம் இருக்கிறது, இன்னும் ஒரே வாரத்தில் இவர்கள் அனைவரையும் பதவியிறக்குவேன் என்று சவால் விடுவார். தமிழக காங்கிரஸில் எந்த சண்டையும் இல்லை என்று எல்லா தமிழக காங்கிரஸாரும் அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பார்கள். வைகோ தன் புலிப்பாசத்தை கொஞ்ச நாட்களுக்கு வெளிக் காட்டாமல் இருப்பார். தேர்தல் தினமும் மற்ற எல்லா தினங்களைப் போலவே சாதாரணமாக இருக்கும்.

சரி நமக்கு என்ன பயன்?

முகத்தை சோப்பு போட்டு அலம்பி நல்லா துடைத்து வைத்துக் கொண்டால் போதும், கழகங்கள், கட்சிகள் நல்லா, அழகா, பட்டையா ஒரு நாமத்தைப் போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. ஜாக்கிரதை.

சமீபத்தில் பார்த்த படம்

'நாளை' - மிகச் சாதாரணமான கதை, நடிக-நடிகைகள் 4 அல்லது 5 பேர்தான் பழைய ஆட்கள் மற்ற அனைவரும் புதுசு. நிறைவான நடிப்பு, நல்ல காட்சி அமைப்பு எல்லாம் இருந்தும் வழக்கம் போல் கமர்ஷியலுக்காக 2 குத்து பாட்டு புகுத்தப்பட்டு, கடைசி காட்சியில் எல்லோரும் செத்து போய்விட 'அட போங்கடா'-ன்னு திட்டத்தான் தோணுது. S.V.சேகர் ஒரு நாடகத்தில் ஒரு drawing கொண்டு வந்து காட்டி அதில் "நான் ஒரு ரெயில்வே ஸ்டேஷனை வரைந்சு இருக்கேன், அதுல ரெயில் வந்து நிக்குது, ஜனங்க இறங்கி போறாங்க இதை எல்லாம் நான் தத்ரூபமா வரைந்சு இருக்கேன்", என்பார்.

அவர் friend "ரெயில் எங்கடா?"
சேகர்: "ஜனங்களை எறக்கி விட்டுட்டு ரெயில் போயிடுத்து"
friend: "ஜனங்க எங்கடா?"
சேகர்: "அவங்க என்ன ஸ்டேஷன்லேயேவா இருப்பாங்க, வீட்டுக்கு போயிட்டாங்க"
friend: "ஸ்டேஷன் எங்கடா?"
சேகர்: "அது சமீபத்தில புயல் அடிச்சுது இல்லை அப்ப அதுவும் அடிச்சுட்டு போயிடுத்து" என்பார். அதுதான் ஞாபகம் வந்தது.

இந்தப் பதிவை பித்தனின் ப்ளாகில் படிக்க இங்கே க்ளிக்கவும்:
http://pkirukkalgal.blogspot.com/2006/10/blog-post.html

-கிறுக்கல்கள் தொடரும்.

கொலு பாக்க வாங்க - 2
இது எங்க வீட்டு கொலு.
கொலுவை அறிமுகப் படுத்தும் மஹிமாவிற்கு இந்த கொலுவில் ரொம்பப் பிடித்தது பாடுவதும், பார்கில் விளையாடுவதும்.
-முரளி.


கொலு பாக்க வாங்க - 1இது சந்திரிகா சத்யநாரயணன் வீட்டு கொலு. சிறிய, ஆனால் செழிப்பான கொலு. ஜன்னலில் இருக்கும் செட்டியார் குடும்பம் கொலுவை மேற்பார்வை செய்வது நல்ல அழகு.
-முரளி.

55 வார்த்தைகளில் ஒரு சிறு கதை எழுத முடியுமா?

முடியும். என்கிறார் நம்ம ஊர் சுஜாதா மாமா(தாத்தான்னே சொல்லலாம்). அவர் சொல்லும் சான்று Steve Moss தொகுத்துள்ள 'The World's Shortest Stories ' என்ற புத்தகம். நீங்களும் முயற்சி செய்து பாருங்க, அப்பரமா நான் எழுதிய ரெண்டு கதைகளை இங்கே publish பண்றேன்.

- முரளி.

Monday, October 02, 2006

காந்தி கோவில்

குஷ்பு கோவில் எங்குள்ளது என்று கேட்டால் "டக்" என்று பதில் வருகிறது. ஆனால் காந்தி கோவில் எங்குள்ளது என்று கேட்டால் "எந்த காந்தி?" என்று தான் பதில் வருகிறதே ஏன்? நேரம்யா நேரம்.ஆனால் இந்திய தேசப்பிதா காந்தியடிகளுக்கு கோவில் கட்டி கும்பிடுகிறார்கள். எங்கே என்று கேட்கிறீர்களா? இதோ இதைப்படியுங்கள்...

Sunday, October 01, 2006

அக்டோபர் மாத லொள்ளு மொழி(கள்)

ஆடத்தெரியாதவள் மேடை குறையென்றாள்
ஆடத்தெரிந்தவள் ஆடை(யை) குறையென்றாள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் அழகு மேக்கப்பில் தெரியும்