போன முறை 'Breaking Bad'...இந்த முறை செல்வராகவன் பட தலைப்பு மாதிரியே ஒரு தலைப்பு. ஒரு வழியா முதல் post'க்கு 10 காமென்ட் கிடைச்சதால (உங்களில் சில பேர் 'அதுல 5 நீ போட்டதாச்சே'னு நக்கீரர் மாதிரி பொருள் குற்றம் கண்டுப்பிடிக்கறது காதுல விழுது...) ஆனால் அதை கண்டுகாமல் வெற்றி வெற்றி என்று சொல்லி....இரண்டாவது பதிவு எழுத முடிவு பண்ணிருக்கேன். இந்த முறை என்ன எழுத போறேன் தெரியுமா? நானும் என் நண்பரும் காய்கறி வாங்க போன அந்த சம்பவம்...’அந்த நாள் உன் calendar'ல குறிச்சு வச்சுகோ'னு சொல்ற அளவுக்கு ஒரு முக்யமான கதைய சொன்ன நாள்.
ஸ்ரீமன் நாராயணின் மனைவியின் பெயர் வைத்து ரிச்மன்ட்'ல் காய்கறி வியாபாரத்தில் monopoly செய்து வந்த அந்த கடையின் vote'களை இரண்டாக பிரித்த சிவனின் மனைவி பெயர் கொண்ட அந்த கடை இருக்கே....அங்க தான் நடந்தது அந்த சம்பவம்.
நானும் என் நண்பரும் சனிக்கிழமை காத்தால கறிகாய் வாங்க போனோம். அப்போ நான் வழக்கம் போல எல்லா காய்கறிகளையும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கினேன். ஆனா அந்த நண்பர் மட்டும் Indian eggplant, Thailand eggplant, Japanese eggplant, வெள்ளை eggplant, குண்டு eggplant அப்படினு ஒரே கத்திரிக்காயா மட்டுமா வாங்கி தள்ளினார். எனக்கு ஏன்னு கேக்கனம்'னு துரு துரு'னு இருந்தது...ஆனா கேக்ககல...பேசாம ரெண்டு பேரும் சாமான்களை வாங்கிட்டு வெளியில் வந்தோம்...
"ஏன் நான் வெரும் கத்திரிக்காய மட்டும் வாங்கினேன்'னு தானே யோசிக்கற...?" அப்படினு அவரே என்ன கேட்டார்.
"ஆமாம்...அதான் கேக்கனம்'னு நெனச்சேன்...ஏன் அப்படி?" - இது நான்.
கூக்கூ - கூக்கூ - முதல் மரியாதை - BGMமை play செய்து மேலே படிக்கவும்...
அது ஒரு அழகிய நிலா காலம்'னு நானும் எல்லா காய்கறிகளையும் சாபிட்டு தான் வளர்ந்திருக்கேன்...ஆனா என் மனைவி சமையல என்னிக்கி சாப்பிட ஆரம்பிச்சேனோ...அன்னிலேருந்து ஆரம்பிச்சுது என் கஷ்டம்...
'என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கல...மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல....' சிவாஜி acting'ஐ மனதில் நினைவுருத்தி மேல நண்பர் சொன்னதை மீண்டும் படிக்கவும்...
என் வீட்டு அம்மாவுக்கு....கத்திரிகாய் மட்டும் தான் செய்ய தெரியுமாம்....ஒரு நாள் கத்திரிகாய் வத்த குழம்பு...மறு நாள் கத்திரிகாய் கறி....அன்னிக்கி சாயங்காலமே...கத்திரிகாய் போட்ட வாங்கி பாத்...
இப்படி எல்லாம் கத்திரிகாய் மயம்...புவி மேல் இயற்கையினாலே விளையும் எழில் வண்ணம்...எல்லாம் கத்திரிகாய் மயம்.... அப்படி'னு என் நண்பர் சொன்னப்போ அவரோட நிலமைய நெனச்சு எனக்கு கண்ணுல ஒரு சொட்டு தண்ணியே வந்தாச்சு...
ஏன் யா அப்படி உனக்கு மட்டும்....ஒரு நாள் கூட வேற காய்கறி போட்டு எதுவும் பண்ணதில்லையா? 'I mean not even on a single day?' அப்படி'னு மேஜர் சுந்தரராஜன் பாணி'ல நான் கேட்டேன்.
அதுக்கு என் நண்பர்...
ஒரு நாள் வீட்டுக்குள்ள நுழையும் போது சுட சுட சப்பாத்தி செய்யும் மணம் மூக்கை துளைச்சுது...உடனே அடடா ஏதோ புது ஐடெம் கற்றுக்கொண்டாள் நம்மவள்'னு ஆசையா உள்ள நுழைஞ்சேன்... வாங்க சாப்பிடலாம்'னு கூப்டு தட்டை கையில கொடுத்தா...அதுல 4 சப்பாத்தியும் பக்கத்துல ஏதோ reddish brown கலர்'ல தொகையல் மாதிரி paste போல இருந்துது....தப்பிச்சோம் டா சாமி'னு ஒரு வாய் எடுத்து வாயில வச்சேன்...
"பைங்கன் கா பர்தா" எப்படிங்க இருக்கு'னு என் வீட்டு நளபாகம் கேட்க...
"என்னது பைங்கன் ஓட பர்தாவா... நான் உன்னோட பர்த்தாவாச்சே மா...யார கேக்கற.." அப்படினேன்...
"அட அது இல்லங்க சப்பாத்திக்கு தொட்டுக்க...பைங்கன் கா பர்த்தா... நீங்க வாங்கிட்டு வந்த பெரிய கத்திரிகாய தவா'ல போட்டு சுட்டு பண்ணினேன்..."
என்னவோ புதுசா இருக்குனு ஆசையா வந்த எனக்கு 'என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே...என் கதயை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடி கொள்ளும்..."னு பாடற நிலமைக்கு கொண்டு போய் சாப்பிட திறந்த வாய மூடி விட்டுட்டா... வாரத்துல 7 நாள் இருக்கு...இவங்களுக்கு தெரிஞ்ச கத்திரிகாய் ஐடெம் 4 தான் இருக்கு....எப்படி vgr என்னால முடியும்....? இதுக்கு ரெண்டே வழி தான் இருக்கு...ஒன்னு இந்த ரிச்மன்ட்'ல இருக்கற ரெண்டு இந்தியா பஜாருக்கும் whole sale கத்திரிகாய் supply வராம கட்டுப் படுத்தனம்...இல்லைன...
'எடுறா அரிவாள வெட்டுறா அந்த கத்திரிகாய் கொடிய...'னு வன்முறைய கைல எடுக்க வேண்டியது தான்..
என்று நண்பர் சொல்லி முடித்தார்...
இப்போ நம்ம பொறுப்புள்ள community'யா அவருக்கு செய்ய வேண்டியது என்னனா...உங்களோட நல் கருத்துக்களை இந்த பிரச்சனைக்கு முடிவா சொல்றது தான்....
சொன்னால் ஒரு உத்தமனின் வாழ்வில் விளக்கேற்றிய பெருமை உங்களை சாரும்.
கூடிய விரைவில் சந்திப்போம்
-vgr
Friday, May 30, 2014
Wednesday, May 28, 2014
ஒரு ஆலமரம் சாய்ந்தது
நீண்ட நாள் தமிழுக்குத் தொண்டு செய்த உ.வே சாமிநாதய்யர் தன்னுடைய 87 ம் வயதில் காலமானார் தமிழ்த்தாத்தாவின் மறைவுக்கு அஞசலி செலுத்தும் முறையில் கல்கி.கிருஷ்னமூர்த்தி ஒரு கட்டுரை எழுதினார்.. அந்த கட்டுரைக்கு அவர் கொடுத்த தலைப்பு ஒரு ஆலமரம் சாய்ந்தது என்பதாகும்
பலருக்கும் பயன் தரும் வகையில் வாழ்ந்து மறைந்தவர்களைப் பற்றி குறிப்பிடும்போது ஆலமரத்தோடு ஒப்பிடுவது ஒரு தமிழ்மரபு
நம் நாட்டில் அப்படி பல பெரிய ஆலமரங்களை நாம் பல இடங்களில் கண்டிருக்கலாம் சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆலமரம் இன்றும் நகர வாசிகளூக்கு ஒருகாட்சிப் பொருளாக இருக்கிறது. அந்த மரத்தினுடைய வயது 450 என்று சொல்கிறார்கள்
ஆலமரத்தின் வளர்ச்சியும் வாழ்வும் உண்மையிலேயே ஒரு அற்புதம்தான்.. சிறிய விதையிலிருந்து ,,கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறிய விதைலிருந்து வளர்ந்து நிற்கும் ஆலமரத்தின் பிரும்மாண்டம் எல்லோரையும் திகைக்க வைக்கும் வேர் விட்டு வளர்ந்து விழுது விட்டுப் படர்ந்து நிற்கும் ஒரு ஆலமரத்தின் நிழலில் ஒரு அரசனின் படை தங்கி இளைப்பாறலாம் என்று ஒரு தமிழ்ப்பாடல் சொல்லும்
நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் அப்படி ஒரு ஆலமரம் இருந்தது. தெருவிலிருந்து ஆற்றங்கரைக்குப் போகும் வழியில் திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் இருந்த அந்த ஆலமரம் இன்னும் என் கண் முன் நிற்கிறது .. .
கிராமத்துச் சிறுவர்களுக்கு பொழுது போக்கும் இடம் அந்த மரத்தடிதான் கோடைக்கால நண்பகல் வெய்யில் கூட தெரியாமல் மணிக் கணக்காக அந்த ஆலமரத்தடியில் விளையாடலாம்..திருச்சிக்கு போக பேருந்துக்காக பயணிகள் காத்துக் கொண்டிருக்கும்போது அந்த மரத்தடி நிழல்தான் அவர்களைக் களைப்பாறச் செய்யும் அந்த காலங்களீல் பஸ் போக்குவரத்து அதிகம் கிடையாது.சலிப்போடு காத்திருக்கும் பயணிகளுக்கு அந்த மரத்தடி நிழல் குடையாக இருந்து உதவியது
பம்பரம் ஆடவும் பாண்டி ஆடவும் கோலிக்குண்டு அடிக்கவும் கிராமத்துச் சிறுவர்களூக்கு விளையாட்டுத் திடலாகவும் இருந்தது. மரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி ஆடவும் வசதியான இடம் அந்த நாட்களில் நெடுஞ்சாலைகளில் பேருந்து போக்குவரத்து அதிகம் கிடையாது..ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போகும் திருச்சி-சேலம் பஸ். ,இது தவிர எப்போதாவது செல்லும் லாரிகள்தான் .மற்றபடி மாட்டு வண்டிகள்தான் போய்க் கொண்டிருக்கும்.. அறுவடை காலங்களீல் நெல் சுமையை ஏற்றிச் செல்லும் வண்டிகள் இவைதான் அந்த காலத்திய வாகனப் போக்குவரத்து..ஆகையால் நெடுஞசாலைகளுக்கு அருகில் விளையாடுவதை பெரிய ஆபத்தாக யாரும் எண்ணியதில்லை தார் ரோடு கூட அன்றைக்குக் கிடையாது..சரளைக் கற்கள் பதிக்கப்பட்ட மெட்டல் ரோடுதான் அன்று பல நெடுஞ்சாலைகளீல் இருந்தது. தார் ரோடு என்பதெல்லாம் நகரத்துத் தெருக்களுக்கே கிடைத்த ஆடம்பர அலங்காரம். . .
கிராமத்தில் வெட்டியாக நேரத்தைப் போக்குவோருக்கு அந்த ஆலமரத்தடிதான் வம்பர் மகாசபையாகவும் பயன்பட்டது. ஆகையால் அந்த மரத்தடியில் ஒருசில மணி நேரம் இருந்தால் யார் வீட்டில் கல்யாணம் யார் வீட்டில் சண்டை .யார் வீட்டில் பிள்ளை பிறக்கப் போகிறது இத்தியாதி விவரங்களை அறிய முடியும்.
மரத்தின் மேல் உட்கார்ந்திருக்கும் பறவைகளின் ஒலி ,பறந்து செல்லும் பல வகையான பறவைகளின் காட்சி இவையெலாம் அந்த இடத்துக்கே அமைந்த அற்புதமான இயற்கைக் காட்சிகள். .
எங்கள் தலைமுறையச் சேர்ந்தவர்களூக்கு ஊர் நினைவு வந்தால் உடனே கண் முன்னால் வருவது அந்த ஆலமரமாகத்தன் இருக்க முடியும் மொத்தத்தில் அந்த பெரிய ஆலமரம்தான் எஙகள் ஊர் அடையாளம்
அந்த ஆலமரம் இப்பொழுது இல்லை. சாலையை அகலப்படுத்த அந்த ஆலமரத்தை வெட்டி விட்டார்கள்.அதற்கு முன்பாகவே அந்த மரம் தன்னுடைய பொலிவை இழக்கத் தொடங்கிவிட்டது.
ஆனால் நான் பல ஆண்டுகளுக்குப் பிறகு என் ஊருக்குச் சென்ற போது
ஆலமரம் இல்லாத என் ஊர்ப் பாதையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.ஏதோ வேறு ஊருக்கு வந்துவிட்டது போன்ற ஒரு பிரமை.அந்த பிரமையிலிருந்து விடுபடவே சற்று தாமதமானது
என்னை நலம் விசாரிக்க வந்த எல்லோரிடத்திலும் நான் கேட்ட முதல் கேள்வி அந்த ஆலமரம் என்ன ஆனது என்பதுதான். பதில் அளித்தவர்கள் எல்லோருமே நிதானமாக சகஜமான முறையில் சொன்ன பதில் எனக்கு எரிச்சல் ஊட்டியது. மரம் போனது பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.அவர்களுடைய அலட்சியமும் பதிலும் விளங்காத புதிராக இருந்தது,.அந்த மரத்துக்கு ஏன் நீ இவ்வளவு அலட்டிக்கிறே என்ற பாணியில் பலருடைய எதிர்க்கேள்வி என்னை நோக்கி பாய்ந்தது அவர்களைப் பொறுத்த வரைமரம் வெட்டப்பட்டது பழைய செய்தி.
முதல் தடவையாக மரம் இல்லாமல் வெற்றிடத்தைப் பார்த்ததால் சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டு என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். நம்முடைய அடையாளங்களைக் காப்பதில் நாம் பல சமயங்களில் உணர்ச்சி வசப்படுகிறோம்.அதன் சமகாலப் பொருத்தப்பாட்டைப் பற்றி சரியாக கணிக்கத் தவறி விடுகிறோம்
நான் உத்தியோகம் கிடைத்து வெளியூருக்குச் சென்றுவிட்டேன் ஊருக்கு பல ஆண்டுகள் வரமுடியவில்லை. நான்கைந்து ஆண்டுகள் கழித்து என்னுடைய கிராமத்துக்கு வந்தேன்.வீட்டில் அம்மா, அப்பா, சகோதரர்கள் மற்ற நண்பர்களுடைய விசாரிப்பிலும் காட்டிய அன்பிலும் மகிழ்ந்து போய் சில நாட்கள் கிராமத்தில் வலம் வந்தேன்
ஒரு நாள் என் வீட்டு அடுக்களையில் இருந்த பெரிய மாராப்பை நோட்டம் விட்டேன் .அந்த மாராப்பில் சுண்ணாம்பு பானை இருக்கும்.அந்த பானையிலிருந்து தான் வெற்றிலை போட தேவையான சுண்ணாம்பை என் அப்பா எடுத்துக் கொள்வது வழக்கம் .அந்த பானை அப்படியே இருந்தது.அந்த பானையின் பக்கத்தில் இருந்த ஒரு பழைய அலுமினியம் தட்டு மீது என் கவனம் சென்றது
அம்மா அந்த தட்டு என்றேன் .என் கேள்வியைப் புரிந்து கொண்ட என் தாய் சொன்னாள். உன் சாப்பாட்டு தட்டு தான் .அங்கே போட்டு வைத்திருக்கிறேன் என்றாள் .உடனே அந்த தட்டை எடுத்தேன்.கேட்பாரற்று பல நாட்களாக மாராப்பில் இருப்பதால் அழுக்கு ஏறி மங்கலாக இருந்தது.அந்த அலுமினியத் தட்டு.
அந்த காலத்தில் எங்களூக்கு அலுமினியத் தட்டில்தான் சாப்பாடு போடுவார்கள் .எவர்சில்வர் பாத்திரம் பெரிய அளவில் புழக்கத்துக்கு வராத காலம். அது.
நான் தட்டை எடுத்ததும் அம்மா:அதை எதற்கு இப்பொழுது எடுக்கிறாய் என்று கேட்டாள். தூசி படர்ந்து கிடந்த அந்த தட்டைசற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் அந்த தட்டில் பல நசுங்கல்கள் ..தட்டை அம்மாவிடம் கொடுத்து புளி போட்டு தேய்த்துக் கொண்டு வா என்றேன்
அது எதற்காக இப்போ என்று திரும்பவும் கேட்டாள். நான் அந்த தட்டில்தான் சாப்பிடப் போகிறேன் என்றேன். உனக்கு பைத்தியமா ? நல்ல வாழை இலைஇருக்கிறது இப்பொழுதுதான் வாழைக் கொல்லையிலிருந்து உன் அப்பா கொண்டு வந்திருக்கிறார் அந்த இலையில் சாப்பிடு என்றாள் அம்மா.
முடியாது. ஊருக்குப் போகும் வரை இந்த தட்டில்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தேன்.நீண்ட நேரம் அம்மா சொன்ன புத்திமதி பலிக்காமல் போனதால் வேறு வழியில்லாமல் தட்டை சுத்தமாகத் தேய்த்துக் கொண்டு வந்தாள்.
தட்டு இப்பொழுது சற்று பளிச்சென்றிருந்தது .அதை அப்படியும் இப்படியுமாக திருப்பிப் பார்த்து விட்டு இப்பொழுது இந்த தட்டில் சாப்பாடு போடு என்றேன் ..
அம்மா சிரித்துக் கொண்டே உனக்கு பழசுகள் மேல் பைத்தியம் என்றாள்.அன்று அம்மா போட்ட சாப்பாடு சற்று கூடுதலான சுவையோடு இருந்தது. நான் ஊருக்கு திரும்பும் வரையில் அந்த தட்டில்தான் சாப்பிடுவேன் என்றேன் .அம்மா கேலியாகச் சிரித்தாள்...ஆனால் என்னைப் பொறுத்த வரை அந்த பழைய தட்டில் சாப்பிடும்போது என்னுடைய மகிழ்ச்சிகரமான சிறு வயது வாழ்க்கையை வாழ்ந்ததாகவே உணர்ந்தேன்
நெடுநாட்கள் நம்மோடு இருந்து நமக்கு பயன்பட்ட பொருட்களை
நீண்ட இடைவெளிக்குப்பிறகு பார்க்கும்போது அவை நமக்கு வெறும் சடப்பொருளாகத் தெரிவதில்லை.அதை ஒரு ஜீவனுள்ள பொருளாக நினைக்கத் தோன்றுகிறது. நம்முடைய பழைய வாழ்க்கை பற்றிய எண்ணங்களுக்கு இட்டுச் செல்கி/றது
சீப்பு கண்ணாடி பவுடர் இதர காஸ்மெடிக் பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு ரப்பர் பெட்டியை வாங்கினேன்.என்னுடைய நம்பிக்கைக்குரிய அந்த கடைக்காரர் பெட்டியை கொடுக்கும் போது சொன்னார்..இந்த பெட்டி நீண்ட நாள் உழைக்கும் என்று..அந்த வார்தை பொய்யாகவில்லை. 9 அஙுகுலம் நீளம் 6 அங்குலம் அகலம் கொண்ட அந்த ரப்பர் பெட்டி ஏறக்குறைய 20 வருடம் எனக்கு உழைத்தது.எந்த வகையிலும் சேதப்படாமல் நிறம் மட்டும் சற்று மங்கிய நிலையில் இருந்த அந்த பெட்டியின் மீது எனக்கு அலாதியான் ஒரு பிரியம் வளர்ந்தது .வெளியூருக்கு எடுத்துப் போனால் எங்காவது தொலைந்து போய்விடும் என்ற பயத்தில் பயணகாலத்தில் அந்த பெட்டியை எடுத்துப் போவதைத் தவிர்த்தேன் .
எனக்கு மறதி அதிகம். மழை பெய்யும்போது குடை எடுத்துப் போனால் திரும்பி வரும்போதும் மழை பெய்ய வேண்டும் இல்லையென்றால் குடை என்னுடையதல்ல. வாங்கிய மறுநாளே குடையைத் தொலைத்த பெருமை எனக்கு உண்டு குடையின் விலையில் கால்வாசி கூட இல்லாத அந்த பெட்டியை இழக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தேன்.. 20 ஆண்டுகள் எனக்கு சேவை செய்த அந்த பெட்டியை நானே வழியனுப்பி வைத்தேன். சிவப்பு நிறமூடியுடன் கூடிய அந்த வெள்ளை நிறப் பெட்டி இன்னும் என் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது
இந்த எண்ணமும் உணர்வும் அந்த பொருட்களின் மதிப்பில் இல்லை..அதன் பயன்பாட்டால் அந்த பொருளோடு நாம் மானசீகமாக வளர்த்துக் கொண்டிருக்கும் உறவுதான் காரணம் எத்தனையோ பொருட்களை நாம் வாங்கி பயன் படுத்திவிட்டு பயன்பாடு தீர்ந்த பின் அதை அப்புறப்படுத்தியிருந்தாலும் அவை எல்லாம் நம் நினைவில் நிற்பதில்லை.
மிகச்சில பொருட்களே நம், நினைவில் தொடரும் இது மனித மனத்தின் பலமா அல்லது பலவீனமா என்று நாம் ஒருபோதும் எண்ணிப்பார்ப்ப தில்லை உண்மையில் அந்த பொருளின் பயன்பாட்டில் நமக்கு ஏற்பட்ட
திருப்திதான் அதற்கான காரணம் அல்லது ஒரு வகையான குழந்தைப்
பருவக் கோளாறு என்று கூடக் கூறலாம்.
- மு..கோபாலகிருஷ்ணன்.
Subscribe to:
Posts (Atom)